சூரிய ராகம்

This entry is part [part not set] of 42 in the series 20090115_Issue

கமலாதேவி அரவிந்தன். சிங்கப்பூர்


சிங்கப்பூரிலிருந்து வந்திறங்கி மூன்றே நாட்கள்தான் ஆகிறது. அதற்குள் மூன்று யுகங்கள் வாழ்ந்து முடித்தாற்போல்,
அலுப்பும் சலிப்பும் சுதாவை ஆட்கொண்டது.சிங்கப்பூரிலேயே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தவளுக்கு, இந்த மூன்று நாட்கள், கேரள வாழ்க்கையே மலைப்பாக இருக்க , இங்கா என்னுடைய எதிகாலம்,என்ற நினைப்பே திகைக்க வைத்தது.
சுதாவுக்கு விருப்பமில்லையென்றால், நிச்சயமாக அவளை யாருமே வற்புறுத்தப் போவதில்லை.
“ஒருமுறை வந்து பார், உனக்கு அவனைப் பிடித்தால் மட்டுமே சம்பந்தம் பேசுவோம்.”, என்று அம்மா அம்மணி உறுதி கொடுத்த பிறகே சுதா கேரளம் வர சம்மதித்தாள்.
”பையன் படிப்பில் கோல்ட் மெடலிஸ்ட், ! டில்லி பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளன்,இதனால் கிராம வாழ்க்கை
என்ற பயமும் வேண்டாம்.எல்லாவற்றுக்கும் மேலாய், நம்முடைய ஜாதி, சிங்கப்பூரில் இவ்வளவு சுத்தமான, கலப்பிலாத, குடும்பத்தை, அலசி எடுக்கவும் முடியாது. இங்கு பெண்ணைப் பெற்றவர் போய் மாப்பிள்ளை கேட்கவும் முடியாது.,
எல்லாம் யோசித்துதான் நான் முடிவெடுத்திருக்கிறேன்.உன் பெண்ணிடம் சொல்லி வை,”! என்று அச்சா அச்சுதமேனன்,
சொல்லும்போது உள் அறையிலிருந்து சுதா கேட்டுக் கொண்டுதான் இருந்தாள்.
பிராயமான பிறகு, அவள் என்றுமே தந்தையிடம் நேரடியாக நின்று பேசியதில்லை.அச்சா சொன்னால்சொன்னதுதான்.
அச்சாவின் பேச்சுக்கு யாருமே மறுபேச்சு பேசுவதில்லை.அம்மா உள்பட. இதனாலேயே அவளுக்கு தந்தையை பிடிக்காமல் போய்விட்டது.
எந்தக் கட்டளை அந்த வீட்டில் அச்சா வாய்வழி பிறந்தாலும் மனம் முரண்டு பண்ணியது.
கரு கருவென்றிருந்த கூந்தலை ஒருமுறை தெற்றிப் பின்னலிட்டுக் கொண்டு, அம்மா வெளியில் புறப்பட வந்தபோது , பார்வையாலேயே சுட்டெரித்த அச்சாவின் உக்கிரத்தில், அம்மா சுருண்டு போனாள்.
அதற்குப் பின் எங்கு போனாலும், அமுக்கிப்போட்ட கொண்டைதான் அம்மாவுக்கு..அம்மாவின் சமையலை, வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் யாராவது புகழ்ந்து விட்டால்,, தவறியும் அந்தக் கூட்டோ, கறியோ, அவர் கையால் தொடப்படாது.
அச்சா வங்கிக் கொண்டு வந்து கொடுக்கும் புடவைதான், அச்சாவுக்குப் பிடித்த கலர்தான்.
ஏன்? தொலைக்காட்சியில்கூட, குத்துச்சண்டை, நடக்கும்போது, ஒன்றுமே புரியாவிட்டாலும் கூட, தேமே,
என்றுஅச்சாவோடு அமர்ந்து,அம்மாவும் கொட்டாவி விட்டுக் கொண்டே , உட்கார்ந்திருப்பதைப் பார்க்கும்போது,
சுதாவுக்குள் கோபம் கனன்றதுண்டு.
மூன்று பிள்ளைகளைப் பெற்றும், இன்றும் எங்குமே, தளர்ந்து சரியாத ,வாகான, இந்த உடல்கட்டோடு அம்மாவின் அழகை,
என்றேனும் அச்சா வாய்விட்டு ரசித்திருப்பாரா? அச்சா வீட்டுக்குள் நுழைந்தாலே, கனத்த மெளனத்தோடு,பிள்ளைகள் எல்லோரும் அவரவர் அறைக்குள் போய்விடுவது இயல்பாகவே நியதியாகி விட்டது.
அதற்குப் பின் நிழல்போலவே, அச்சாவுக்கு வேண்டியதை எல்லால் பார்த்துப் பார்த்து செய்து, செய்து, ,,—-
சுதாவுக்கு சில சமயங்களில் அம்மாவைக்கூட பிடிப்பதில்லை.
அச்சாவை இப்படி கொம்பேறி மூக்கனாக மாற்றியதே இந்த அம்மாவின் முட்டாள்தனம்தானோ என்று யோசிக்க வைக்கிறது. எப்படியோ அக்காவும், அண்ணனும், தெம்பனீசிலும், தோபாயோவிலும், திருமணமாகிப் போனபின்னர், சுதாவுக்கும் அதேபோல், அதேவயதில், வரன் கூடவில்லை.
இருபத்துனாலு வயது ஆனபிறகு, அச்சுத மேனன் சும்மா இருக்கவில்லை. இதற்குப் பின்னால் எல்லாமே, துரித கதியில்
நடந்தேறிவிட்டது.
கேரளத்தில் இருந்து வந்த மாப்பிள்ளைப் பையனின் போட்டோவை மட்டும், அவள் கையில் திணித்ததோடு சரி.
உனக்கு இவனைப் பிடித்திருக்கிறதா? என்று ஒரு குருவிகூட அவளைக் கேட்கவில்லை..துணிமணிகளை எடுத்து, பிரயாணப் பெட்டிகளில் நிரப்பி, அச்சா, அம்மா, சுதா, மூவரும் விமானம் ஏறி திருச்சூர், இரிஞ்ஞாலக்குடையில் வந்து சேர்ந்தும் விட்டார்கள்.
சுதாவுக்கு ஆச்சரியம். நாளைதான் மாப்பிள்ளை டில்லியிலிருந்து வரப்போகிறார்.[றார் என்ன அவனுக்கு –றான் என்றே சொல்லலாம்.] அதற்குள் எப்படி செய்தி காட்டுத்தீயாய்,பரவியதோ, தெரியவில்லை. வருவோர், போவோர், எல்லோருமே, முற்றம் கடந்து, முறிக்குள்ளிருந்து வெளிவரும் இவளையே கூர்ந்து, பார்ப்பதும், ஆவலோடு இவளை விரல் நீட்டி சுட்டி தங்களுக்குள்,
மெல்லிய குரலில், ஏதேதோ பேசுவதும், !—-
எரிச்சல் எரிச்சலாய் வந்தது சுதாவுக்கு. நீறு பூத்த நெருப்பாய் நடமாடினாள். ஆசையோடு யாராவது பேசவந்தாலும், சுதா அலட்டிக் கொள்ளவே இல்லை.
மாலையிலிருந்தே வீடு பரபரப்பானது. குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி, அம்மாவின் அக்கா, என எல்லோருமே,
மறு நாள் வைபவத்துக்குக் குழுமி இருந்தது சுதாவுக்கு பெரிய ஆச்சர்யமாகிவிட்டது..
இத்தனைக்கும் என்னவோ நிச்சயதார்த்தத்துக்கே கூடியதுபோல், அச்சா விழுந்து விழுந்து சிரிப்பதும் , அம்மா மாய்ந்து மாய்ந்து அவர்களை உபசரிப்பதும், நாளைய அதிர்ச்சியை இவர்களால் தாங்க முடியுமா? என்று கூட ,
ஒருகணம் சுதாவை அச்சுறுத்தியது.
ஆனாலும் சுதா முடிவெடுத்து விட்டாள். இது அவள் வாழ்க்கை. பிடிவாதமாய் அவளை இந்தக் கல்யாணத்துக்கு வற்புறுத்தினால், , ஈவிரக்கமே இன்றி, மாப்பிள்ளைப் பையனை, எல்லோர் முன்னிலையிலும் வைத்து , எனக்கு இவனைப் பிடிக்கவில்லை, என்று அவமானப் படுத்திவிடுவாள். அதற்கு மேல் அச்சா என்ன செய்வார்? வேண்டாம், அவளுக்கு யோசிக்கப் பிடிக்கவில்லை.
யார் வேண்டுமானாலும் ,என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்.
அவள் ஒருபோதும் இந்த ஊர்க்குருவி மாப்பிள்ளையை கட்டிக் கொள்ளப் போவதில்லை.
இந்த நூற்றாண்டில் இப்படி ஒரு தந்தையா? அதுவும் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த ஒருத்தி, வெறும் போட்டோவை மட்டுமே பார்த்து கல்யாணம் பண்ணுவதா?
தோழி ரேகா சிரித்தபோது, அப்படியே அவமானத்தில் குன்றிப்போனாள் சுதா.
”முன்னே பின்னே பார்க்காமல்,, பழகாமல்,பத்து நிமிஷம் மட்டுமே பெண் பார்த்துவிட்டு உடனே கல்யாணமா?
எப்படி உன் ரசனை, குணம் , இயல்பு,, எதுவுமே தெரியாத ஒருவனோடு வாழ்னாள் முழுவதும் குடும்பம் நடத்துவாய்?!”
அசல் சினிமா போலவே இல்லை? என்று ரேகா கேலி செய்தபோதே, சுதா முடிவெடுத்து விட்டாள்.

அச்சாவின் ஆதிக்கம், அச்சாவின் ஆசை, அச்சாவின் முடிவு, என இந்த சங்கிலித் தொடரை, ஞான் முறியடிக்கவில்லை
என்றால், என் பேர் சுதா இல்லை, .பொழுது விடிந்ததுமே வெள்ளையப்பம் பசியாறலில் தொடங்கினாள் தன் போராட்டத்தை.

”உண்ணிக்குட்டனுக்கு வெள்ளை அப்பம் என்றால் ஜீவன், இந்தா, இன்னும் ஒன்று போட்டுக் கொள்,! ?என்று செறியம்மா
நாணிக்குட்டி பரிமாற வந்தபோது, போதும், என்று ஒன்றோடே எழுந்து விட்டாள்.
உண்ணிக்குட்டனுக்குப் பிடிக்குமாம், அதனால் ஞானும் சாப்பிட வேண்டுமாம் .,! பற்றிக் கொண்டு வந்தது கோபம்.
அதைவிடக் கோபம், இது என்ன பட்டிக்காட்டு பெயர் ,—உண்ணிக்குட்டன்,
சுரேஷ், ரமேஷ் ,என்றெல்லாம் இல்லாமல் உண்ணிக் குட்டனாம், பெயரே சகிக்கவில்லையே?
ஆள் என்ன லக்‌ஷணத்தில், அந்தமான் கோலத்தில் இருப்பானோ? வரட்டும்.! இருக்கிறது?
ஏமாற்றம் என்றால் அப்படி ஒரு ஏமாற்றம் சுதா தன் வாழ்னாளில் சந்திததில்லை.
சுதா எதிர்பார்த்ததுபோல், பம்மென்று தலை முடியை வகிடெடுத்து, வழித்துச் சீவிய முகமல்ல.
வந்த உடனேயே, எங்கே பெண் என்று தவறிக்கூட அவன் விழிகள் அலை பாயவில்லை. வீட்டினரும் குழந்தைகளும் ,
பாசத்தோடு அவனைச் சூழ்ந்து கொண்டபோது ,பிரியத்தோடு அவன் பழகியதும், தேடிவந்த நண்பர்களிடம் அன்பைக் கொட்டி
அவன் பழகியதும், குறிப்பாக வீட்டுப் பெரியவர்களுக்கு முன்னால் அவன் காட்டிய மரியாதையும் ,
சுதாவால் நம்பவே முடியவில்லை.
பெண் பார்க்கும் சடங்கைக் கூட அவன் மறுத்துவிட்டான், என்பது இன்னொரு அதிர்ச்சி.என்னதான் இவன் உத்தேசமாம்?
அவன் இங்கிருக்கும் இந்த மூன்று நாட்களுக்குள் , அவன் நடமாட்டத்தைப் பார்த்தே இவள் சம்மதித்து விடுவாள்,
என்பது அவன் எண்ணமா? சுதாவால் எதையுமே யூகிக்க முடியவில்லை. வேடிக்கை என்னவென்றால், உண்ணிக்குட்டன் வந்த பிறகு யாருமே திருமணப் பேச்சை எடுத்ததாகவே தெரியவில்லை.
அடுத்த நாள்தான் இந்த சம்பவம் நடந்தது.வீட்டிலுல்லோர் அனைவருமே அருகிலுள்ள குடும்ப க்ஷேத்திரத்துக்குப்
போய்விட்டனர்.
மாதவிடாய்த் தொல்லையால், சுதா மட்டும் கோவிலுக்குப் போகமுடியவில்லை. திடீரென்று வீட்டின் அடுக்களைக்காரி
பாருக்குட்டியின் ஓலம், சுதாவை நடுங்க வைத்தது.
சென்று பார்த்தால், காலில் கொதிக்கும் ஜீரகத்தண்ணீரைக் கொட்டிக் கொண்டு, நீரும் ஆவியுமாய் , வலியில், உயிர் போகும்
உபாதையில் அனத்திக் கொண்டிருந்தாள் பாருக்குட்டி. சுதாவுக்குத் துணையாக வீட்டிலிருந்த பத்து வயசு ரேணுக்குட்டி,,
சுதாவைப்போல் திகைத்துப்போய் நிற்காமல், குடுகுடுவென்று வெளியே ஓடிப் போனாள்.
நாலு வீடு தள்ளி, காரணவர் வீட்டில் தங்கியிருந்த உண்ணியை, ரேணுக்குட்டி அழைத்து வந்தபோது,பாருக்குட்டியின் கிடப்பு கண்டு பதறிப் போனான் உண்ணிக் குட்டன்.
அலங்கோலமாய்க் கிடந்த பாருக்குட்டியை, , சுதா மடியில் கிடத்தி தட்டிக் கொடுக்க, ஏதோ மருந்தைக் கொண்டு வந்து பரிவாய்த் தடவிக் கொடுத்தான் உண்ணிக் குட்டன்.
திருச்சூர் மருத்துவமனையில் இஞ்செக்‌ஷனும், ஆக்சிஜனுக்கும் பிறகு, பாருக்குட்டியிக்கு நினைவு வந்த பிறகு, அவளுடைய கணவரிடம் ஒப்படைத்துவிட்டு,, வெளியே வந்த பிறகுதான் உண்னிக்குட்டனுக்கும் சுதாவுக்கும் தங்களைப் பற்றிய
பிரக்ஞையே வந்தது.
சுதா அரண்டு போயிருந்தாள். ஆனாலும் வியந்தும் கூட போயிருந்தாள். மருத்துவரிடம் கட கடவென்று அவன் பேசிய ஆங்கிலமும், வீட்டுப் பணிக்காரத்திப் பெண் தானே என்ற தாழ்வுகூட இன்றி, தாதியோடு சேர்ந்து,தானும் கூடத் தூக்கிப் பிடித்து பாருக்குட்டியை மருத்துவமனை கட்டிலில் கிடத்தியது, பிடிவாதமாய் பாருக்குட்டியின் கணவனின் கையில் செலவுக்கு இருக்கட்டும், என்று 200 ரூபாயைக் கொடுத்தது, இவை எல்லாம் வெறும் மனிதபிமானம் மட்டும் தானா?
“ஏதாவது சாப்பிடுவோமா? எனக்குப் பசிக்கிறது, ”என்றபோது மறுபேச்சில்லாமல் அவனுடன் நடந்தாள் சுதா,.அவளுக்கும் அப்படிப் பசித்தது.
”உனக்கென்ன வேண்டும்? சிங்கப்பூர் பெண் என்பதால் சைனீஸ் சூப், கொண்டினெண்டல் டிஷெஸ், என்று கேட்டு விடாதே!
இது திருச்சூர் கடை, நாம் கேரளத்தில் இருக்கிறோம், இங்கு என்ன கிடைக்கிறதோ, தெரியவில்லையே!
உண்ணிக் குட்டனின் அக்கறை அவளுக்குப் பிடித்திருந்தது. இருந்ததிலேயே, சப்பாத்தி, என்ற மெனு போதும், என சுதா சொல்ல, தனக்கும் சப்பாத்தியே ஆர்டர் செய்தான் உண்ணிக்குட்டன்..இப்பொழுதாவது திருமணம் பற்றிப் பேசுவானா, என்று எதிர்பார்த்த சுதாவுக்கு மீண்டும் ஏமாற்றமே.
”அடுத்து தயிர் போட்டுக் கொள்கிறாயா சுதா? ” என்று உண்ணி இயல்பாக கேட்டபோது சுதா மறுக்கவில்லை.
ருசி என்றால் அவ்வளவு ருசி, பசிவேகமா, அல்லது சுத்தமான பசும் பாலின் ருசியா, தெரியவில்லை, சுதா ரசித்து சாப்பிட்டாள். இப்பொழுது உண்ணிக்குட்டன் கூறினான்,
“நாளை நான் டில்லிக்குத் திரும்புகிறேன். நீ சிங்கப்பூருக்கேத் திரும்பிப்போய், அங்கு நீ நேசிக்கும் மாப்பிள்ளையையே கட்டிக் கொள்.! என்ன இப்பொழுது நிம்மதிதானே?!
விக்கித்துப்போனாள் சுதா. உண்ணியின் முகத்திலிருந்து அவளால் எதையுமே யூகிக்க முடியவில்லை. தான் இவரை மறுத்ததற்கான காரணம் சிங்கப்பூரில் எனக்கு எவனுடனோ நேசமா? அப்படியா என்னை கணித்தாய்? அதிலும் தான் இவரை வேண்டாம் என்று சொல்லும் முன்பே இவர் என்னை வேண்டாமென்பதா?
நான் சிங்கப்பூர் மாப்பிள்ளையைக் கட்டிக் கொள்ள இவர் என்ன அண்ணாவி?
“ ஏன் டில்லியில் உங்கள் காதலி உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாளா?”
கோபத்தோடு சுதாவிடமிருந்து வந்த சீறலில் உண்ணிக்குட்டன் சிரித்து விட்டான்.
”இதுவரை எனக்கொரு காதலியை நான் தேடிக் கொள்ளவில்லை.ஆனாலும் என்னைப் பிடிக்காத ஒருத்தியை மணக்க நான் தயாரும் இல்லை. உனக்கு என்மீது நாட்டம் இல்லை என்பதை ,வந்த முதல் நாளே நான் புரிந்து கொண்டேன்.ஆனாலும் உன் பெற்றோரிடம் எனக்கு இப்போது திருமணம் வேண்டாம், என்று பழியை என் மீது தான் போட்டுக் கொண்டேன்.. என் வீட்டாருக்க்குக் கூட என் மீது கோபம்தான்.”
உண்ணிக்குட்டன் வெகு இயல்பாக இதைக்கூறியபோது, ஏனோ ஆண்மை படிந்த அந்த முகத்தை நிமிர்ந்து பார்க்கத் தோன்றியது சுதாவுக்கு

கருணை, பரிவு, தியாகம்,என எல்லாமே நிரம்பி வழியும், இவரை விடவா, சிறப்பாக மற்றொருவனைத் தேடிக் கொள்ளப் போகிறேன்’;:
’ ”உண்ணி ஏட்டா’ என்று சுதா அழைத்தபோதே அவளுக்கு நெஞ்சை அடைத்தது.,, கண்கள் கலங்கி உதடு விம்ம ,
அவளால் மேலே பேசவே முடியவில்லை.
புரிந்து கொள்ள உண்ணிக்கு நேரமாகவில்லை.ஆதரவோடு சுதாவின் கரங்களைப் பற்றிக்கொண்டபோது,அந்தப்பரிவில்,
தக்‌ஷணமே அளப்பரிய காதல் உண்ணிக்குட்டனின் மேல் ஏற்பட்டு விட்டதை சுதாவால் உணர முடிந்தது.
ஆனால், இந்த முறையும் அச்சாவே வென்று விட்டாரே, என்பதை ஜீரணிக்கும் நிலையில் இல்லை அவள்.

[முற்றும்]

[மலையாளத்தில் புலரி சிறப்பிதழில் , தமிழில் சிங்கை தமிழ் முரசு விலும் வெளிவந்த சிறுகதை ]

Series Navigation

கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர்

கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர்