“காட்சிகள் மாறுகின்றன…!”

This entry is part [part not set] of 46 in the series 20090108_Issue

உஷா தீபன்


அந்த இடத்திற்கு வந்து வண்டியை நிறுத்திவிட்டுத் திரும்பியபோதுதான் எனக்கே உறைத்தது. அங்கே அந்தப் பழக் கடை இல்லையென்று!
வெட்டிப் போட்ட இளநீர் மட்டைகள் அம்பாரமாய்க் குவிந்து கிடந்தன. அட! அருகேயிருக்கும் அந்த வண்;டியையும் காணவில்லையே? நினைத்துக்கொண்டே தலையை நன்றாக நிமிர்த்திப் பார்வையை நீளச் ;செலுத்தினேன்.
அந்த இடப்புறச் சாலை ஓர நீண்ட வெளிகளில் எங்குமே கடைகளைக் காணவில்லை. தூரத்தில் அந்தக் காலனி திரும்பும் இடம்வரை சும்மாவே கிடந்தது.
‘என்னவாயிற்று? இன்று ஏதேனும் பந்த்தா? அல்லது வியாபாரிகள் கடை அடைப்பா? செய்தி அறிய விட்டுப்போயிற்றா? அப்படியானாலும் இத் தெருவோரச் சிறு வியாபாரிகளுக்கு விலக்கு உண்டே? இவர்களையுமா தடை செய்து விட்டார்கள்?
நேர் பின்புறம் திரும்பி நோக்கினேன். வழக்கம்போல் உழவர் சந்தை இயங்கிக்கொண்டிருந்தது. நேரம் கடந்துவிட்டது என்பதற்கடையாளமாய் வாயிலில் சில பைக்குகளும, ஒன்றிரண்டு சைக்கிள்களும் மட்டும் நின்று கொண்டிருந்தன.
உள்ளே கடைகளை எடுத்து வைக்கும் வேலை நடந்துகொண்டிருந்தது. மிஞ்சிய காய்கறிகளை எடுத்துச் செல்லுதலும், அங்கேயே மூட்டை கட்டி வைத்தலுமான பணிகள் மும்முரமாய் இருந்தன.
முழுவதும் மூடுவதற்குள் உள்ளே போய் வாங்கி வந்து விடுவோம் என்று அங்கேயே வண்டியைப் ப+ட்டிவிட்டு நடந்தேன். வண்டி தனியாய் நிற்கிறதே என்று மனதுக்குள் ஒரு சம்சயம். .பயம்தான் வேறென்ன?
உள்ளே நுழைந்து வரிசை வரிசையாக நோக்கினால் ஒரு பழக்கடை கூடக் கண்ணில் தென்படவில்லை. என்னவாயிற்று? எல்லாப் பழங்களுக்கும் சீசன் முடிந்து விட்டதா? ஒவ்வொன்றுக்கும் மாறி மாறித்தானே காய்ப்பு என்பது தொடங்கும்?
மாதுளம் பழத்திற்கு இப்பொழுது மவுசு என்றார்களே? சாத்துக்குடி சீசன் முடிந்து போயிற்று. ஆனாலும் ஒரு கடைகூடவா இருக்காது? சுற்றிச் சுற்றி வந்தேன்.
தக்காளிப் பழக் கடைதான் இருந்தது. “கிலோ அஞ்சு ரூபா சார்…வாங்க…நாட்டுத் தக்காளி..” முடியப் போகும் நேரத்தில்கூடக் கூவிக்கொண்டிருந்தார்கள். அவரவர் பாடு அவரவர்க்கு. விற்று முடித்து, காசு பார்த்து, வயிறு நிறைக்க வேண்டுமே?
எந்தப் பழக்கடையும் இல்லாததால் ஏதோவோர் மகி ழ்ச்சிதான் மனதில். இருந்திருந்தாலும், விருப்பமின்றித்தான் வாங்கியிருப்பேன். என் முழு விருப்பமான பர்சேஸ் என்பது வெளியே கடை வைத்திருக்கும் அந்தப் பழக்கடையில் வாங்குவதுதான்.
நேராக அங்கே கொண்டு என் வண்டியை நிறுத்துவேன். நான் தொலைவில் வருவது கண்டே அவன் பழங்களைத் தேர்வு செய்ய ஆரம்பித்துவிடுவான். அப்போதைய சீசனுக்கு என்ன பழங்களோ அதைத் தேர்வு செய்து தருவான். நிறுவை சற்றுக் கூடத்தான். விலையோ மற்றவரைக் காட்டிலும் அஞ்சு ரூபாய் கம்மிதான் எனக்கு. அவனது தொடர்ந்த வாடிக்கையாளன் ஆயிற்றே நான்!
சொல்லப்போனால் முதலிலே அவனது சம்சாரம்தான் எனக்கு அறிமுகம். அருகிலிருக்கும் இளநீ;ர்க் கடைக்கு இளநீர் குடிக்கப்போன எனக்கு “பழம் வாங்கிட்டுப் போங்கண்ணே…” என்ற அந்தப் பெண்ணின் உபசரிப்பு, என்னை அங்கே ஈர்த்தது, இழுத்தது.
உண்மையைச் சொல்வதானால் முதலில் அவளது அழகை ரசிப்பதற்காகத்தான் அங்கே பழம் வாங்கினேன் நான். நின்று இளநீ;ர் குடிக்கும்போது மெட்டியும் கொலுசுமிட்ட அவளது அழகான பாதங்கள் என் கண்ணில் பட்டன. சிறு பழ வியாபாரியாய் இருந்தால் என்ன? அவள் கால்கள் அழகாய் இருக்கக்கூடாதா? வெள்ளிக் கொலுசு பளபளக்க அந்தப் பாதங்கள் சுடு மணலில் நின்றன. ………….2………………….. -2- காலையிலிருந்து மாலைவரை எவ்வளவு நேரம் அப்படி நிற்பாள் அவள்?
அவளுக்கே ஒரு யோசனையின்றி இருக்கலாமல்லவா? எனவே சொன்னேன்.
“பழம் பேக் பண்ணி வருதுல்ல, அட்டைப் பெட்டி…!.அதுல ஒண்ணை எடுத்து, தரைல விரிச்சுப்போட்டு , அது மேல நில்லுங்க…இல்லன்னா ஒரு செருப்புப் போட்டுக்குங்க…எவ்வளவு நேரம் இப்படி சூட்டுல நிப்பீங்க?”
“செருப்புப் போட்டா அந்தச் சூட்டுக்கு பித்த வெடிப்பு வருது சார்…”- அண்ணே, சார் ஆகியிருந்தது இப்போது.
“வெறுந்தரைல நிக்குறது அதைவிடச் சூடாச்சே…”
“சரிங் சார்…” -எதற்குச் சரி என்றாள்? புரியவில்லை. ஆனாலும் யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டதுபோல தோன்றியது. மறுநாளிலிருந்து அது அங்கே அரங்கேறிற்று.
அந்தப் ப+ப்பாதங்களுக்கு ப+மிச் சூட்டிலிருந்து விடுதலை.
“ஏன் சார்…சாத்துக்குடி மட்டும் போதுமா? மாம்பழம் வாங்கிட்டுப் போங்க…ஆப்பிள் வாங்கிக்குங்க…பார்த்துப் போட்டுத் தரேன் சார்…” மெல்லிய புன்னகையோடு அவளின் அத்யந்த உபசரிப்பு என்னைச் சிலிர்க்கத்தான் வைத்தது. “சாருக்கு நல்லதா பார்த்துக் குடு பாப்பா…”- இளநீர்க் கடைக்காரனின் சிபாரிசு வேறு. பளபளக்கும் கூரிய அரிவாளோடு அருகில் இருக்கும் அவன், அவளுக்குப் பாதுகாப்போ…?”
வீ;ட்டிலே நானும் என் மனைவியும்தான். எங்களுக்கு அவ்வளவு பழம் தேவையில்லைதான். சாத்துக்குடி தவிர வேறு எது வாங்கினாலும் என் மனையாள் தொடப்போவதில்லை. உடல்நலம் நிமித்தம் அவள் ருசிக்கும் ஒரே பழம் அது ஒன்றுதான்.
;அப்படியிருகக இத்தனை எதற்கு? கேள்விக்கு மனதில் பதில் விழும் முன்னேயே நிறுத்து முடித்து கைக்கு வந்து விட்டது சரக்கு.
“இந்தாங்க சார்…கொண்டு போங்க…ராஜபாளையம் சப்பட்டை…ஆஸ்திரேலியா ஆப்பிள்; சார்…மாவாக் கரையும் வாயில…”
அது ஆஸ்திரேலியாவிலிருந்து வந்ததா? அல்லது அருகிலுள்ள ஊட்டியிலிருந்தா, தெரியாது வழக்கமாய்ச் சொல்வது அப்படி…
சத்தியமாய்ச் சொல்கிறேன். அந்தப் பெண்ணுக்;காகத்தான் வாங்கினேன் அவைகளை.;வெறும் இருபத்தஞ்சு ரூபாயில் முடிவது நூற்றைம்பதில் சென்று நின்றது. ஆனாலும் அந்தக் கொஞ்ச நேரத்தில், அங்கு நிற்கும் பொழுதுகளில் அவளின் அழகு என்னைக் கொள்ளை கொண்டு போனது என்றுதான் சொல்ல வேண்டும். தப்பாய் மனதில் எதுவும் இல்லைதான். பார்க்காவிட்டால்; பெருத்த நட்டமாய் நினைத்து மனது ஏக்கம் கொள்கிறதே? அது ஏன்? இன்னும் கொஞ்சம் வசதி வாய்ப்பு செழுமையோடிருப்பின் அவளைப் பிடிக்க முடியாது. முழு வட்ட நிலா ஒன்று தினமும் வெயிலில் வாடுகிறது!
எனக்குத்தான் இப்படியெல்லாம் தோன்றுகிறது. கிறுக்கு! என்பாள் என் மனைவிக்குத் தெரிந்தால்…!
அவள் நிறைவோடுதான் இருந்தாள். தன் புருஷனை அவள் கவனித்த விதமே அதற்குச் சான்று…! ………..3………………… – 3 –
பின்புறம் அந்தக் காம்பவுண்ட் சுவரைப் பார்த்துத் திரும்பிக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தான் அவன். சாலையில் போவோர் வருவோருக்குத் தெரியக் கூடாது என்று! என்ன ஒரு இங்கிதம் பாருங்கள்? வியாபாரத்துக்கு இடையே சென்று அவள் அவனைக் கவனித்தாள்.
“வெஞ்சனம் போட்டுக்குங்க…ஒண்ணுமேயில்லாமச் சாப்பிடுறீங்க? – அவனை அவள் உபசரித்த விதம், ஊடே வந்து வியாபாரத்தைக் கவனித்துக்கொண்ட பாங்கு…- எனக்கு ரொம்பவும் மனதுக்கு ஏக்கத்தைத்தான் ஏற்படுத்தியது.
ஒருநாள் விடாமல் கடுமையான உழைப்பும், அன்றாட வாழ்வின் ஜீவிதத்திற்கான இடைவிடாத போராட்டமும், அமிழ்ந்து கிடக்கும் அவர்கள் வாழ்வில்தான் எத்தனை பொறுப்புணர்ச்சியும் பெருந்தன்மையும், அன்பும் அக்கறையும், நிறைவும் தாண்டவமாடுகிறது?
கை நிறைய வந்து கொட்டும் எத்தனை இடங்களில் மனம் நிறைந்து கிடக்கிறது? இந்த மேன்மை எங்கே தவழுகிறது?
இப்படியாகத்தான் அந்த இடத்திற்குப் பழகிப் போனேன் நான். சொல்லப் போனால் பழங்கள் பயன்படுத்தும் நல்ல பழக்கமே அந்தப் பெண்ணால்தான் ஏற்பட்டுப் போனது எனக்கு.
உழவர் சந்தையை விட்டு வெளியே வந்தேன். பழங்கள் எதுவும் வாங்குவதுபோல் இல்லை. அதுதான் கடையே இல்லையே? இருந்திருந்தாலும் வாங்கியிருப்பேனோ என்னவோ? எனக்கு மனப்ப+ர்வமான விருப்பம் அந்தப் பெண்ணிடம் வாங்குவதுதான்.
என் வண்டி வெயிலில் அம்போவென்று நின்றது. யோசித்தபோது கடந்த நான்கைந்து நாட்களாகவே அந்தப் பழக்கடையில் அந்தப் பெண் இல்லையென்று தோன்றியது. இன்றோ கடையே இல்லை. எந்தக் கடையும் இல்லையே?
“என்னங்க நீங்க இருக்கீங்க? உங்க சம்சாரம் என்னாச்சு? “ என்றேன். அன்று அவனிடம். கேட்டது ஞாபகம் வந்தது.
“அவுளுக்கு முடியல சார்…டாக்டர் ரெஸ்ட் எடுக்கணும்னு சொல்லிட்டடாரு…” என்றான்.
அந்த இடத்திற்குப் பொருத்தமில்லாது அவன் இருப்பதுபோல் தோன்றியது எனக்கு. அவனும் இருப்புக் கொள்ளாதவன் போல்தான் நின்றான்.
“ஆமா, நீங்க எங்க வேலை பார்க்குறீங்க…?” – இவ்வளவு நாள் கழித்து என்னின் சாவகாசமான கேள்வி!!
“நா கூலி வேலை பார்க்குறேன் சார்…நெல்லு மண்டில மூட்டை தூக்குறேன்…”
கொஞ்ச நேரம் உறைந்து போனேன் நான். பிறகு கேட்டேன்.
“அப்போ இன்னைக்கெல்லாம் உங்க வருமானம் போச்சு…இல்லையா?”
“ஆமா சார்.!..என்ன சார் பண்றது? சில சமயம் அப்படித்தான். அதுவா அப்படி அமைஞ்சு போகுது…ஏத்துக்க வேண்டிதான்…”
“அது சரிதான்….”- ஆமோதித்தேன். மாறுதல்கள் ஏற்படும்போது அதை அதன் போக்கில் ஏற்றுக்கொள்ளும் பக்குவ மனநிலை. எதிர்கொள்ளத் தயார் படுத்திக்கொள்ளும் நிதர்சனம். போராட்டம் நிறைந்த வாழ்க்கை!!
“போனவாரம் ப+ராவும் பாருங்க சார்…போலீஸ் டார்ச்சர் அதிகமாடிச்சு. டிராஃபிக் சரிபண்றோம்னுட்டு விரட்டிட்டே இருந்தாங்க…ஒரு ஓரமா அப்டி சைடுல இருந்திக்கிடுறோம்னு சொல்லிப் பார்த்தோம். கேட்கல…இடை இடைல அப்படி வர்றதுதான், போறதுதான்…ஆனா நம்ம இளநிக் கடைக்கார அண்ணாச்சி இருக்காரு பாருங்க…”இனி இங்க இருக்க முடியாதுப்பா…”ன்னு முடிவே பண்ணிட்டாரு…போனவர் போனவர்தான்…நாலு ரோடுல எங்கிட்டோ கடை போட்டிருக்கிறதா சொன்னாக. அதுக்கப்புறம் யாருமே சரியாக் கடை போடலைங்கிறதுதான் துயரம்.. …………. 4……… – 4 – அன்று அவர் ஒத்தை மரத்துக் குரங்குபோல் இருக்கவும் முடியாமல், போகவும் முடியாமல் தவித்துக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது எனக்கு. நான் வாங்கிய பழங்களுக்கான காசுதான் அன்று அவரது முதல் போணிபோல் இருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் பொழுது இருட்டிப் போகும். பிறகு கடையை உருட்டிக்கொண்டு போக வேண்டியதுதான்.
இது கடந்த வாரம் கண்ட காட்சி என்றால் இன்று என்ன வந்தது.? இன்றுதான் இல்லையா? அல்லது அன்றிலிருந்து தொடர்ச்சியாகவே இல்லையா? ஏனிப்படி ஆயிற்று? சுரத்தில்லாமல் போனதே அப்பகுதி?
என் நீண்ட வரிசைப் பார்வைக்கு எதிர் வரிசையில் ஒரே ஒரு கருவாட்டுக் கடை தெரிந்தது. மரத்துக்கு அந்தப் பக்கம் நிழலுக்கு ஒதுங்கி ஒடுங்கியிருந்தார் அவர். அதுவும் அப்பொழுதுதான் என் கண்ணில் பட்டது. அவரிடம் சென்று கேட்டேன்.
“அதுவா? அந்தம்மாவுக்குப் பேறுகாலம்ல சார்…”
‘என்ன சொல்கிறார் இவர்?’ – புரியாமல் பார்த்தேன்.
“அது வராது சார்…பிரசவத்துக்குப் பெறவுதான் பார்க்க முடியும்…அவரும் கூலி வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டாரு…”
அந்தப் பெண்ணின் அழகு முகம் என் மனதில் தோன்றியது.
தாய்மையின் செழுமையா அது? அட! இந்த மடையனுக்கு இதைக் கூடப் புரிந்து கொள்ளத் தெரியவில்லையே? ;ஆஉறா! என்ன ஒரு தெய்வீகம்? கையெடுத்துக் கும்பிடலாம்போல் இருந்ததே? அடடா! இன்னொரு முறை தரிசிக்கவே முடியாதோ? – மனசு வருந்த ஆரம்பித்தது.
அன்று ஞாயிற்றுக் கிழமை. கையில் பையோடு காய்கறி வாங்கக் கிளம்பினேன் நான்.
வழக்கம்போல் வாராந்திரக் காய்கறிகள் வாங்கும்போது இனி உழவர் சந்தையிலேயே பழங்களையும் வாங்கிவிட வேண்டியதுதான். முடிவு செய்து கொண்டேன்.
“என்னப்பா, இந்த விலை சொல்றே?” – ஒரு பழக் கடையில் அவன் சொன்ன விலையைக் கேட்டு அதிர்ந்து போனேன் நான். வாங்குவதா, வேண்டாமா? – சட்டென்று யோசனை வந்து விட்டது.
“அங்கெல்லாம் பழக் கடைகளைக் காணலை. அதுனால இப்படியா?” -கேட்டிருக்க வேண்டாம்தான். வாயில் வந்து விட்டது. நாக்கைக் கடித்துக் கொண்டேன் அவனறியாமல்.
பிடித்தானே ஒரு பிடி….!! “நாங்களெல்லாம் வெலை சொன்னா இப்டித்தான் சார் கேட்பீங்க…ஏ.சி. ரூம்ல, ஷோ கேஸ்ல பளபளன்னு வெறுமே துடைச்சு அடுக்கி, வெலையை எழுதி நட்டு வச்சிட்டுப் பேசாம உட்கார்ந்தி-ட்டா கம்முன்னு வாயைப் பொத்திட்டு வாங்கிட்டுப் போவீங்க…வெளில போய் பெருமையா வேறே சொல்லிக்குவீங்க…அதானே சார்…”
-இப்பொழுது நான் அடக்கி வாசித்தேன். “அதுக்கில்லேப்பா…விலை ரொம்ப அதிகமாத் தெரியுதேன்னுதான்…அங்கெல்லாம் கடை எடுத்தாச்சு…அதான் விலை ஜாஸ்தியாயிடுச்சோன்னுதான்… -இப்பொழுதும் நான் சரியாகப் பேசவில்லைதான். எனக்கே நன்றாகத்; தெரிந்தது. ஏதாவது பேசியாக வேண்டுமே என்று ஆரம்பித்தால் பொருத்தம் இல்லாமல்தான் வருகிறது வார்த்தைகள். பேசாமல் இருப்பதே எவ்வளவோ மேல்!
அவன் அமைதியாக இருந்தான். அந்த அமைதி சரியானதாய்த் தோன்றவில்லை எனக்கு. உள்ளுக்குள்ளே கோபமடைந்துவிட்டானோ?
காலைப் பொழுது சரியில்லை. அவனுக்கா அல்லது எனக்கா? ………………..5……….. – 5 – “பழம் இல்ல சார்…போயிட்டு வாங்க….” – பட்டென்று முறித்துக்கொண்டான் அவன்.
என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றிருந்தேன். பக்கத்துக் கடையில் வாங்குவோர் சிலரின் பார்வை இங்கே. கூச்சமாக இருந்தது எனக்கு.
எதற்குக் காலையில் இவனோடு பிரச்னை? சாதாரணமாய், யதார்த்தமாயப் பேசுவதுகூடத் தவறா? வாடிக்கையாளர் என்றால் பலவிதமாகவும்தானே இருப்பர்? ஏன் இவனால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை?
‘வாங்கினால் வாங்கு, இல்லாவிட்டால் போ…’ என்கிறானே? மேற்கொண்டு எதுவும் பேசுவது சரியாக அமையாது. முடிவு செய்து கொண்டேன். மெல்ல அங்கிருந்து நழுவினேன். நழுவினேன் என்றுதான் சொல்ல வேண்டும். தலையைக் குனிந்து கொண்டிருந்தவன் பட்டென்று நிமிர்ந்தான்.
“போங்க சார்…போங்க…இந்த ரோட்டுக் கடைசீல புதுசாக் கடை திறந்திருக்கானே…அங்கதான நோங்கியிருக்கு எல்லாருக்கும்…எங்களுக்கென்ன தெரியாதா? நல்லா போங்க…வாயே பேச மாட்டான் அங்க.!இங்க மாதிரி சுதந்திரமாப் பேரம் பேச முடியாது அங்க……கையும் காசும்தான் நீளும்…எல்லாத்துக்கும்..!.அதானே இன்னைக்கு நாகரீகம்….நல்லாப் போயிட்டு வாங்க…” -ஏதோ வயிற்றெரிச்சலில் புலம்புவதுபோல் இருந்தது. அது ஏன் அப்படிச் சொல்கிறான்? தன் ஒரு பழக்கடைதான் மீதி என்பது போலல்லவா பேசுகிறான்?
அன்று பழங்கள் வாங்காமல் வந்தது வீட்டில் சண்டையை உண்டாக்கும் என்றுதான் நினைத்தேன்.
‘நின்னு நிதானமா இன்னும் ரெண்டு கடை இருக்கான்னு பார்த்து, வாங்கிட்டு ;வர வேண்டிதானே? அதுக்குள்ள என்ன அவசரம் உங்களுக்கு? எனக்குப் பழம் சாப்டாத்தான் சரியாயிருக்கு, வயிற்றுத் தொந்தரவு இல்லாம இருக்குன்னு உங்களுக்குத் தெரியுமில்ல?’
கேட்பாள் என்றுதான் எதிர்பார்த்தேன். வாயே திறக்கவில்லையே? இவளுக்கும்தான் என்னவாயிற்று?
“வாங்கலேல்ல…;நல்லதாப்போச்சு.!..கிளம்புறபோதேசொல்லிவிடணும்னு நினைச்சேன்…அந்தப் புதுக்கடைல போய் வாங்கிக்கிடலாம்..
.எல்லாம் “ஃபிரஷ்ஷா” இருக்கும்…!
என்ன சொல்கிறாள் இவள்? புதுசா ஏதோ உளர்கிறாளே? லீவுநாளும் அதுவுமாக சண்டைக்கு இழுக்கிறாளோ?
“ஃபிரஷ்ஷா இருக்குமா? என்ன கிண்டலா? அப்படீன்னா இத்தனை நாள் நான் அழுகினதையும், புழுத்ததையுமா வாங்கிட்டு வந்திட்டிருக்கேன்…?” – நானும் கேட்டேன் ரோஷமாக.
“போச்சு ஆரம்பிச்சிட்டீங்களா? சுத்தமா இருக்கும்னு சொல்ல வந்தேன்…”
“அதைத்தாண்டீ கேட்குறேன்…அப்போ இத்தனை நாள் தின்னு தீர்த்தது? சுத்தமில்லாததையா? புதசா சொல்ற?”
“அதெல்லாம் கெடக்கட்டும்…இனிமே வாங்கிறதை ‘ஃப்ரெஷ்ஷா’ வாங்குங்க…அவ்வளவுதான்”
“பார்ரா! திரும்பத் திரும்ப ஃப்ரெஷ்ஷா…ஃப்ரெஷ்ஷாங்கிறதை? அங்க ஒரு கடை கூட இல்லாம அல்லாடிப் போய் வர்றேன் நான்…பாவமா இருக்கு நினைச்சா…! போக்குவரத்து இடைஞ்சல்ன்னுட்டு விரட்டிட்டாங்களோன்னு பார்த்தா, இப்போ வேறல்ல வெரட்டியிருக்கு அவங்களை…? என்னடா தொடர்ந்து காணலையே? என்னாச்சுன்னு யோசிச்சா இதுதானா சமாச்சாரம்? அட. ஆண்டவனே?”
அதிர்ச்சியில் உறைந்து போனேன் நான். மனசு அந்த நீண்டு வெறுமையாய்க் கிடந்த சாலை ஓரப் பகுதியில் போய் உட்கார்ந்து கொண்டது. சில்லரைக்கு வாங்கி விற்கும் சின்னச் சின்னப் பழக் கடைகள்!! ஒன்றுகூட இல்லையே இன்று?
“உங்களுக்குத் தெரியாதா? தெனம் அந்த வழியாத்தானே போவீங்க ஆபீசுக்கு? கவனிச்சதே இல்லையா?எவ்வளவு பெரிய கடை?அடேங்கப்பா?” ……….6………………. – 6 –
“கவனிக்காம இருப்பாங்களா…ஏதோ புதுசாக் கடை திறந்திருக்கான்னு நினைச்சேன்…நமக்குப் பொருந்தாத எடம் மாதிரித் தெரிஞ்சுது…விட்டுட்டேன்.!..மேற்கொண்டு அதைப்பத்தி யோசிக்கலை…”
“போனவாட்டி நீங்க மெட்ராஸ் போனீங்களே…அப்போ உங்ககூட ஜங்ஷன் வர்றப்பவே நான் கவனிச்சிட்டேன்…அப்பவே தீர்மானிச்சிட்டேன்…”
“பெரிய காம்ப்ளெக்ஸ் ஒண்ணு ஓப்பன் பண்ணியிருக்கானே, அதைத்தானே நீ சொல்றே? – திரும்பவும் கேட்டு உறுதி செய்துகொள்ள யத்தனித்தேன்..
“அதேதான்…அதேதான்…நல்லா ஞாபகத்துல வச்சிக்குங்க….”
அவள் உற்சாகம் அவளுக்கு. ஆனால் அதே உணர்ச்சி எனக்கும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லையல்லவா? மனிதருக்கு மனிதர் சிந்தனைகள், எண்ணங்கள், தீர்மானங்கள், செயல்கள் எல்லாமும் வேறுபடுமல்லவா?
என் சிந்தனை வேறு எங்கோ போயிற்று. மனசு எதையோ நினைத்து துக்கித்துப் போனது.
இனிமேல் உழவர் சந்தைக்கு நான் காய்கறி வாங்கப் போகையிலோ அல்லது அபீஸ் முடிந்து வீடு திரும்புகையிலோ அந்தச் சாலை வரிசையிலே அந்தப் பெண்ணின் கடையோ, வேறு கடைகளோ எதுவுமே இருக்காதோ?
தன் மனைவியின் குழந்தைப்பேறு முடித்து அடுத்தாற்போல் அவன் எங்கு கடை போடுவான்? கடை போடுவானா?அல்லது வழக்கமான கூலி வேலையைத் தொடருவானா? அப்படித் தொடர்ந்தால் அந்த வருவாய் அவனுக்குப் போதுமானதாக இருக்குமா? கைக் குழந்தை பராமரிப்பு என்று ஒன்று உள்ளதே? வேறு எங்;;காவது கடை போடுவதானாலும், அந்தப் பெண்ணை அமர்த்துவது சாத்தியமாகுமா? அந்த இளநீர்க் கடைக்காரன் முன்னதாகவே உணர்ந்து தன் தடத்தை மாற்றிக் கொண்டதுபோல் இவர்களும் எங்காவது போய்விடுவார்களோ? இனி அங்கே எவருமே வர வாய்ப்பில்லையோ? அந்த எல்லோரின் ஜீவிதம் இனி எங்கு தொடரும்?
இப்பொழுதெல்லாம் அலுவலகம் செல்லும்பொழுது தினமும் அந்த இடத்தைப் பார்க்கத் தவறுவதில்லை நான்.
வெறுமை சூழ்ந்த அந்த நீண்ட வெட்டவெளி, வெயி;ல் காய்ந்த தனிமையில், தன் உறவுகளையெல்லாம் இழந்த துக்கத்தில், வெப்;பம் தகிக்கும் தன் பெருமூச்சை பெருத்த ஏக்கத்தோடு ;வெளிப்படுத்திக் கொண்டே விரிந்து நீண்டு கேட்பாரின்றிக் கிடக்கிறது!!


Series Navigation

உஷாதீபன்

உஷாதீபன்