சுய அபிமானம்

This entry is part [part not set] of 24 in the series 20081211_Issue

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்


என் கணவரை குணக்குன்று என்றும், என்னை மனைவி போல் அல்லாமல் சிநேகிதியாக பார்த்துக் கொள்வார் என்றும், எல்லா விதத்திலேயும் எனக்கு உறுதுணையாக இருப்பார் என்றும், எனக்காகவே கலியுகத்தில் அவதாரம் எடுத்து வந்த கடவுள் என்றும் என்னுடைய சகஊழியர்கள் மட்டுமே அல்லாமல் உற்றார் உறவினர் எல்லோரும் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
அவர்கள் அப்படி சொல்லும் போது உண்மையிலேயே எனக்கு பெருமையாக இருக்கும். ஏன் என்றால் கிருஷ்ணமூர்த்தி உண்மையிலேயே ரொம்ப நல்லவர்.
பெரும்பாலான ஆண்களுக்கு இருப்பது போல் அவருக்கு குடிப் பழக்கம் இல்லை. சிகரெட் கூட பிடிக்க மாட்டார். ஆபீஸிலிருந்து வரும் போது காய்கறி, மளிகை எல்லாம் வாங்கி வருவார். பேபிக்கு வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுப்பார். என்றைக்காவது சோம்பல் பட்டுக் கொண்டு நான் ஒழுங்காக சமைக்கவில்லை என்றால் ஊறுகாய், தயிருடன் அட்ஜெஸ்ட் செய்து கொள்வார். முக்கியமாக என்னை “டீ” போட்டு கூப்பிட மாட்டார். நான் அவரை பெயர் சொல்லி அழைத்தாலும் சும்மா இருப்பார்.
அவருடைய எண்ணங்கள், திட்டங்கள் எல்லாம் எனக்கு ரொம்பவே பிடிக்கும். நான் ஆபீஸில் எப்படி வேலை பார்க்கணுமோ அவர்தான் எனக்கு சொல்லித் தருவார். யாரிடம் எப்படி பேசணுமோ, எப்படி நடந்து கொள்ளணுமோ அவர்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தார். அதெல்லாம் கற்றுத் தரவில்லை என்றால் நான் அப்பாவியாக ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொள்வேன் என்பது அவருடைய கவலை. “சுமதீ! நீ வெறும் அப்பாவி. உனக்கு ஒன்றும் தெரியாது” என்று அவர் சொல்லும் போது உண்மையிலேயே என்னுடைய பாரத்தை முழுவதுமாக அவர் மீது போட்டு விட்டு நிம்மதியாக, யோசிக்க வேண்டிய தேவையே இல்லாமல் வாழ்ந்துகொண்டிருப்பதை நினைத்து சந்தோஷமாக இருந்தேன்.
உண்மையிலேயே எனக்கு யோசிக்க வேண்டிய அவசியம் இருக்காது. எனக்காகவும் அவரே யோசிப்பார்.
இதுபோல் எங்களுடைய வாழ்க்கை சந்தோஷமாக போய்க் கொண்டிருந்த தருணத்தில், ஒரு நாள் மாலை வேளையில் திடீரென்று ரிக்ஷாவிலிருந்து பெரிய சூட்கேஸ¤டன் இறங்கி உள்ளே வந்தாள் வசந்தா. அவளை அடையாளம் கண்டுகொள்வது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. அன்று மலர்ந்த பூவைப் போல் தளதளவென்று இருப்பவள் காய்ந்த சரகு போல் வாடியிருந்தாள். ரொம்ப வருடங்களுக்கு பிறகு சந்தித்துக் கொண்டதில் மகிழ்ச்சியடைந்தவளாய் அவளை கிருஷ்ணமூர்த்திக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன்.
இரண்டு பேரும் திருச்சி பெண்கள் மாநிலப் பள்ளியிலும், பிறகு பெண்கள் கல்லூரியிலும் ஒன்றாக சேர்ந்து படித்த விவரத்தைத் தெரிவித்தேன். ஒருக்கால் பிறந்த வீட்டிலிருந்து தன் வீட்டுக்கோ, தன் விட்டிலிருந்து பிறந்த வீட்டுக்கோ போகும் போது வழியில் இறங்கியிருப்பாள் போலும். எது எப்படி இருந்தாலும் அவள் இப்படி வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நாங்கள் சென்னைக்கு வந்து குடித்தனம் தொடங்கிய பிறகு என் சிநேகிதியென்று சொல்லிக் கொண்டு யாரும் இரண்டு நாட்கள் கூட தங்கியதில்லை, அதுதான்.
இரண்டு பேரும் காபி குடித்துவிட்டு பழைய கதைகளை பேசிக் கொண்டிருந்த போது கேட்டேன். “எங்கேயிருந்து எங்கே போகும் போது இங்கே இறங்கினாய்?” என்று.
“அப்பா வீட்டிலிருந்து கிளம்பி வருகிறேன். நேராக இங்கேதான் வந்தேன். ஏன்? இத்தனை பெரிய சூட்கேஸ¤டன் வந்துவிட்டேன் என்றா?” என்றாள்.
சாதாரணமாக எல்லோரும் பிறந்த வீடு என்றோ அம்மா வீடு என்றோ சொல்லுவார்கள். இப்படி அப்பா வீடு என்று சொல்ல மாட்டார்கள்.
“நீ பத்து நாட்கள் இருந்தால் நான் சந்தோஷப்பட மாட்டேனா? அப்படிப் பேசாதே” என்றேன். வசந்தாவுடன் இருக்கணும் என்று நான்கு நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டேன். அவள் வந்தது உண்மையிலேயே எனக்கு சந்தோஷமாக இருந்தது.
கடந்த காலத்து நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் எல்லாம் நினைவுக்கு வந்து மறுபடியும் பத்து வயது குறைந்துவிட்டாற்போல் உணர்ந்தேன். அவ்வப்பொழுது இது போல் சிநேகிதிகளை சந்திக்கவில்லை என்றால் சம்சார சாகரத்தில் மூழ்கி, இயந்திரகதியில் வாழ்ந்து, சீக்கிரமாகவே முதுமையை அடைந்து விடுவோம் என்று நினைத்தேன். ஆனால் வசந்தாவைப் பார்த்தால் சந்தோஷமாக இருப்பதுபோல் தென்படவில்லை. சீரியஸாக இருந்தாள். சிரிக்காமல் பேசவே தெரியாது அவளுக்கு. இன்று சிரிப்பையே மறந்துவிட்டவள் போல் காட்சியளித்தாள்.
அன்று இரவு என் கணவர் கேட்டார். “உன் பிரண்ட் இங்கே இன்னும் எத்தனை நாட்கள் இருப்பாளாம்? பெரிய சூட்கேஸ¤டன் வந்து இறங்கியிருக்கிறாளே?”
அவர் அப்படி கேட்டது எனக்கு வருத்தமாக இருந்தது. பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தேன். அன்று மாலையே எங்க அம்மாவும் வந்திருந்தாள். அம்மாவுக்கு உடல்நலம் சரியாக இல்லை. அடிக்கடி காய்ச்சல் வந்து கொண்டிருந்தது.
அம்மா ஊரில் தனியாகத்தான் இருந்து வந்தாள். வீட்டை இரண்டு போர்ஷனாக தடுத்து வாடகைக்கு விட்டிருந்தாள். அந்த வாடகை பணத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாள். அப்பாவின் பிராவிடெண்ட் பணத்தை வங்கியில் போட்டிருந்தாள். அதன் மீதும் வட்டீ கிடைக்கும். பொருளாதாரரீதியாக அம்மாவுக்கு எந்த குறையும் இல்லை. ஆனால் தனியாகத்தான் இருந்து வந்தாள்.
“உங்க அம்மா உங்க அண்ணாவுடன் இருக்காமல் இப்படி தனியாக இருப்பானேன்?” அடிக்கடி என் கணவர் சொல்லிக் கொண்டே இருப்பார். எனக்கும் அவர் சொல்வதுதான் சரி என்று படும். அம்மா எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவாள். வரும் போதெல்லாம் எனக்காக ஊறுகாய், பட்சணம், இனிப்புகள் என்று ஏதாவது கொண்டு வருவாள். பேத்தியைப் பார்க்காமல் அம்மாவால் இருக்க முடியாது. பேத்திக்கும் பாட்டியிடம் நெருக்கம் அதிகம். அம்மா பத்து நாட்களுக்கு மேல் தங்கியிருந்தால் இவருக்கு பிடிக்காது. அதனால் அம்மா கிளம்பிப் போவதாக சொன்னால் நான் தடுக்க மாட்டேன். அவருடன் சண்டை போடுவது, எதிர்த்துப் பேசுவது இதெல்லாம் எனக்கு பிடிக்காது.
எந்த தாய்தான் மகள் வீட்டில் இருப்பாள்? பெற்றோர்கள் இருக்க வேண்டியது மகன்களிடம்தான் என்ற கருத்தை நானும் நம்பினேன்.
“நீ ஆபீஸ¤க்கு போ சுமதீ! எனக்கு துணையாக அம்மாதான் இருக்கிறாளே? அம்மாவுக்கு நான் துணை. இருவரும் பேசிக் கொண்டிருப்போம்” என்றாள் வசந்தா.
அவள் அப்படிச் சொன்னது எனக்கும் பிடித்திருந்தது.
மாலையில் நான் ஆபீஸிலிருந்து வரும் போது வீட்டை சுத்தப்படுத்தி, ஒழுங்குப் படுத்தியிருந்தாள். பேபியை குளிப்பாட்டி புது டிரெஸ் மாற்றியிருந்தாள். எனக்கும் சூடாக டிபன் பரிமாறினாள். இரவுக்கான சமையலையும் முடித்துவிட்டிருந்தாள்.
“இதெல்லாம் எதற்காக செய்தாய்? நான் வந்து பார்த்துக் கொள்ள மாட்டேனா?” என்றேன் நொந்துகொண்டே.
“இந்த வேலைகள் எல்லாம் எனக்கு பழக்கப்பட்டதுதான். அங்கே இதைவிட அதிகமாக வேலை செய்வேன்” என்றாள்.
“அங்கே” என்றால் தன்னுடைய வீட்டில்! வசந்தா தவறிப் போய் கூட என்னுடைய வீடு என்று சொல்ல மாட்டாள். அங்கே என்றுதான் குறிப்பிடுவாள்.
சாப்பாடு முடிந்ததும் எல்லோரும் படுத்துக் கொண்ட பிறகு நானும் வசந்தாவும் வராண்டாவில் நாற்காலிகளைப் போட்டுக் கொண்டு அமர்ந்துகொண்டோம். அவள் என்னிடம் ஏதோ சொல்ல முயற்சிக்கிறாள் என்று புரிந்துகொண்டு அதற்குத் தயாராக இருந்தேன்.
வசந்தா சொல்லத் தொடங்கினாள். ரொம்ப கம்பீரமாக, ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தாமல், திடமான குரலில் தன் கதையைச் சொன்னாள். நான் குறுக்கே பேசாமல் கேட்டுக் கொண்டேன். கேட்டுக் கொண்டிருந்த நேரம் முழுவதும் புடவைத் தலைப்பால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே இருந்தேன்.
வசந்தா, தான் பட்ட துன்பங்களை சொல்லிக்கொண்டே முதுகில் வாங்கிய அடிகளை, கன்றி விட்ட அடையாளங்களை, தூக்கமில்லாத இரவுகளால் கண்களுக்குக் கீழே ஏற்பட்டிருந்த கருவளையங்களை காண்பித்தாள். அழுது அழுது உலர்ந்து விட்ட கண்களே அதற்கு சாட்சியம். இந்த இம்சை எல்லாம் வரதட்சணைக்காக இல்லை.
மனைவியைக் கொஞ்சமாவது துன்புறுத்தவில்லை என்றால் எப்படி என்று இரத்ததோடு கலந்து விட்ட குணம் ஒரு பக்கம் என்றால் அவள் மீது சந்தேகம் இன்னொரு பக்கம். மனைவியிடம் கொஞ்சம் கூட அன்பு இல்லை. கருணை இல்லை. நட்புணர்வு அசலுக்கே இல்லை. அப்படி இருக்கும் போது அவளுடைய உடலை மட்டும் எதற்காக உபயோகப் படுத்திக் கொள்ளணும்? ஆனால் அவள் மீது தனக்கு இருக்கும் அதிகாரத்தைக் காட்டிக் கொள்வதற்காக அவளுடைய உடலும் அவனுக்கு பயன்பட்டது. அப்படிப் பட்ட அவமானங்களிலிருந்தும், அருவருப்பான சூழ்நிலையிலும் இரண்டு குழந்தைகள் இந்த உலகத்திற்கு வந்தார்கள். அந்தக் குழந்தைகளிடம் அவள் பாசத்துடன் நடந்து கொண்டாலும் கணவன் அவர்களை தாயிடம் நெருங்க விட மாட்டான். அவள் மீது வெறுப்பு ஏற்படும்படி குழந்தைகளை தூண்டிவிட்டான். தினமும் ஒரு பிரச்னை! தினமும் ஒரு சண்டை! வாழ்க்கை நரகமாகிவிட்டது அவளுக்கு. அங்கே தன்னால் இருக்கு முடியவில்லை என்று அம்மாவிடம் முறையிட்டுக் கொண்டாள். அம்மா அப்பாவிடம் சொன்னாள். பிறந்த வீட்டுக்கு போன போது அவளை யாரும் வா என்று அழைக்கவில்லை. அம்மா, அப்பா, அண்ணன் மூவருமே வசந்தாவுக்கு சாமர்த்தியம் போறவில்லை என்று சொன்னார்கள். அடக்க ஒடுக்கமாக இருந்து கொண்டு, நன்றாக சமைத்து, மனம் நோகாமல் பணிவிடை செய்து, படுக்கையிலும் அனுசரணையாக இருந்துகொண்டு கணவரை தன் பக்கம் ஈர்த்துக் கொள்ளத் தெரியாத முட்டாள் என்றார்கள்.
கணவர் சொல்லுக்கு அடிபணிந்து, வாயே திறக்காமல் இத்தனை வருடங்களும் அப்பாவுடன் குடித்தனம் நடத்தியதால்தான் தானும், தன் குழந்தைகளும் சுகமாக, சந்தோஷமாக இருப்பதாகவும், பிரிந்து போவது, விவாகரத்து பெறுவது போன்ற பிரஸ்தாபனையே தங்கள் வம்சத்தில் இல்லை என்றும் அம்மா திரும்பத் திரும்ப சொன்னாள். கடவுளை நம்பிக்கையுடன் வழிபட்டு கணவனை தன் பக்கம் ஈர்த்துக் கொள்ளச் சொன்னாள்.
ஷீரடி சாயிபாபாவின் வீபூதியை தினமும் படுக்கும் போது நெற்றியில் இட்டுக் கொள்ளச் சொன்னார்கள். பொறுமையைக் கடைபிடிக்கச் சொன்னார்கள். மதுரை மீனாக்ஷ்யின் குங்குமத்தை வாங்கித் தந்தார்கள். ஆசாரிமாமாவிடம் அழைத்துச் சென்று தாயத்தைக் கட்டிவிட்டார்கள். அம்மா எனக்காக சனிக்கிழமை ஒரு பொழுது இருக்கப் போவதாகவும், என் குடித்தனம் நல்ல படியாக இருந்தால் திருப்பதி வெங்கடாசலபதிக்கு கல்யாண உற்சவம் செய்விக்கப் போவதாகவும் வேண்டிக் கொண்டாள். அப்பா அறுநூறு ரூபாய் விலையில் சில்க் புடவை வாங்கி வந்தார். அண்ணன் சினிமாவுக்கு அழைத்துப் போனான். அம்மா மைசூர்பாக்கும் தேங்குழலும் தயாரித்தாள். அண்ணன் கூட வந்து கணவன் வீட்டில் இறக்கி விட்டு விட்டுப் போனான். அம்மா சொல்லிக் கொடுத்த பணிவு, பண்பு, அடக்க ஒடுக்கம் எல்லாம் அவள் நிலையை மேலும் தாழ்த்திவிட்டன. துன்புறுத்தல் மேலும் அதிகரித்தது. சந்தேகம் அவனைப் பேயாக மாற்றியது. மறுபடியும் போனாள். இந்தத் தடவை பிறந்த வீட்டுக்கு இல்லை, அப்பாவின் வீட்டுக்கு. மறுபடியும் அதே நீதி போதனைகளை, சொற்பொழிவுகள். இந்த முறை அப்பா கொண்டு விடுவதாக சொன்னார். தேவையில்லை, தனியாகவே போய்க் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி இங்கே வந்துவிட்டாள். இதுதான் அவளுடைய கதை.
“சுமதீ! கழுதைக்கு பொறுமை அதிகம் என்று சொல்வார்கள். கழுதையை விட அதிகமாக பொறுமையைக் கடைபிடித்தேன். கழுதையை விட கேவலமாக நடத்தப் பட்டேன். இனி என்னால் முடியாது. நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கு இந்த தண்டனை? செத்தால் தவிர எனக்கு இதிலிருந்து மீட்சி இல்லை. ஆனால் செத்துப் போவதில் எனக்கு விருப்பம் இல்லை. எதாவது ஒரு வேலையைத் தேடிக் கொண்டு, என் குழந்தைகளையும் அழைத்து வந்து வாழணும் என்று தோன்றுகிறது. இந்த விஷயத்தில் நீ எனக்கு உதவி செய்வாய் என்ற எதிர்பார்ப்புடன் இங்கே வந்தேன்” என்றாள்.
” உனக்கு உதவி செய்வது என்னுடைய கடமை வசந்தா! கேட்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கு. நீ எப்படி சகித்துக் கொண்டாயோ என்னவோ” என்று அவளுக்கு ஆறுதல் சொன்னேன்.
“நம் சிநேகிதிகளில் எல்லோரையும் விட நீ நல்ல நிலைமையில் இருக்கிறாய். உன் கணவருக்கு சமமாக சம்பாதிக்கிறாய். அவரும் உன்னை நன்றாக நடத்துகிறார். நீ தான் ஒரு வழியைக் காட்டி என்னை கரை சேர்ப்பாய் என்ற நம்பிக்கையுடன் வந்தேன். எனக்கு ஏதாவது வேலை பார்த்துக் கொடு. குழந்தைகளை அழைத்து வந்து எப்படியாவது வாழ்ந்துக் காட்டுகிறேன்” என்றாள்.
“கட்டாயம் செய்வோம். நாளைக்கு எல்லா விஷயங்களையும் என் கணவரிடம் சொல்கிறேன். அவரே ஒரு வழியைக் காட்டுவார். நீ நிம்மதியாக இரு. வேலை கிடைக்கும் வரையில் இதை உன் வீடாக நினைத்துக் கொள்” என்றேன்.
மறுநாள் காலையில் அவள் முகம் கொஞ்சம் தெளிவு பெற்றிருந்தது. வீட்டு வேலைகளை எல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாள். நான் தடுக்கப் போனால் “அங்கே இதை விட பத்து மடங்கு வேலை செய்தேன். ஆனால் கடுகளவு கூட பரிவு இல்லை. நீ எனக்கு மறுபடியும் புதிதாக உயிரைத் தருகிறாய். உன் நன்றிக் கடனை எப்படி தீர்த்துக் கொள்ளப் போகிறேன்? இந்த வேலைகளை செய்வதில் எனக்குக் கஷ்டமே இல்லை. உனக்குத் தெரியாது சுமதீ! அங்கே நான் எப்படிப்பட்ட அடிமை வாழ்க்கை வாழ்ந்து வந்தேனோ உனக்குத் தெரியாது. ஏதாவது சின்ன குறை வந்தால் வேலையை விட்டு நீக்கி விடுவார்களோ? அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று நாதியற்றவர்கள் பயந்து கொண்டே ஊழியம் செய்வது போல் நான் அங்கே நாள் முழுவதும் உழைத்துக் கொண்டிருந்தேன். இங்கே என் பிரியமான சிநேகிதிக்கு கொஞ்சம் உதவி செய்கிறேன். மறுக்காதே” என்றாள்.
அன்று மாலை வசந்தியின் கதையை என் கணவரிடம் தெரிவித்தேன். அவள் என்னிடம் எப்படிச் சொன்னாளோ அதே போல் சொன்னேன். ஆனால் என்னைப் போல் கண்களைத் துடைத்துக் கொள்ளவும் இல்லை. இளகிப் போகவும் இல்லை.
“அதுதானா உன் சிநேகிதி வருகையின் காரணம்? நன்றாகத்தான் இருக்கு. வேலியில் போகிற ஓணானை எடுத்து காதில் விட்டுக் கொண்ட கதையாக நீ இதில் தலையிடாதே. நம்மை சுற்றிலும் இது போல் எத்தனையோ விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். இது ஒன்றும் புதுசு இல்லை. இருந்தாலும் பெற்றவர்களுக்கு இல்லாத அக்கறை உனக்கு எதுக்கு? அதனால்தான் நீ வெறும் அப்பாவி என்று சொன்னேன். அவள் சொன்னதை எல்லாம் அப்படியே நம்பிவிட்டாய். இரண்டு கைகளும் சேர்ந்தால்தான் சத்தம். இவள் என்ன செய்தாளோ அவன் அப்படி கொடூரமாக நடந்துகொள்வதற்கு? என் பேச்சை கேள். நாலு நல்ல வார்த்தைகளை சொல்லி உங்க அம்மாவுடன் ஊருக்கு அனுப்பி வை. அவளுடைய அம்மா அப்பா பார்த்துக் கொள்வார்கள்” என்றார்.
நான் திகைத்துப் போய்விட்டேன். கவிழ்ந்து வந்த மழைமேகம் வேகமாக வீசிய காற்றுக்கு கலைந்து போனது போல் அவருடைய வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். முதல் முறையாக அவருடைய சொற்கள் எனக்கு கசப்பாக இருந்தன. இது நாள் வரையில் நான் அவரை எதிர்த்து பதில் சொன்னதே இல்லை. எது சொன்னாலும் சரி என்று தலையை அசைப்பது மட்டும்தான் தெரியும். அவரிடம் மேற்கொண்டு என்ன பேசுவது என்று எனக்குத் தெரியவில்லை. வசந்தா சொன்னது முற்றிலும் உண்மை. பொய் இல்லை. அது அவருக்கும் தெரியும் என்று எனக்குத் தோன்றியது. தெரிந்தும் அவர் இப்படி பேசியது எனக்கு அவமானமாக இருந்தது. அம்மா ஜுரத்தோடு வந்திருக்கிறாள். அவளையும் அனுப்பி வைக்கச் சொன்னது என் மனதில் ஈட்டியை பாய்ச்சியது.
என் வக்கீல் சிநேகிதி ராஜேஸ்வரியிடம் வசந்தாவைப் பற்றிச் சொன்னேன். அவள் வசந்தாவுக்கு ஏதாவது வேலை பார்த்துத் தருவதாக வாக்குக் கொடுத்தாள். வழக்கம் போல் நான் ஆபீஸிற்கு போய்க் கொண்டிருந்தேன். வசந்தா அம்மாவுடன் பொழுதை போக்கிக் கொண்டிருந்தாள். சொல்லச் சொல்ல கேட்காமல் வீட்டு வேலைகளை தானே செய்து கொண்டிருந்தாள்.
வசந்தா வந்து பத்து நாட்களாகி விட்டன. என் கணவரின் நடவடிக்கைகளில் மாறுதல் ஏற்பட்டதை என்னால் தெளிவாக உணரமுடிந்தது. அடிக்கடி என் மீதும், பேபியின் மீதும் எரிந்து விழத் தொடங்கினார். வசந்தாவை அனுப்பி வைக்கவில்லை என்று அவர் இப்படி நடந்து கொள்வது எனக்குப் புரிந்தது. என்னால் வசந்தாவை அனுப்பி வைக்க முடியாது.
அன்று இரவு எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது “என்னுடைய சமையல் எப்படி இருக்கு சொல்லுங்க? கத்தரிக்காய் கறி உங்களுக்கு பிடிக்குமாமே?” வசந்தா என் கணவரிடம் கேட்டாள்.
“நன்றாக இருக்கு.” உணர்ச்சியற்ற முகத்துடன் சொன்னார்.
“உங்கள் வீட்டில் என்னை சமையல் வேலைக்கு வைத்துக் கொள்ளுங்களேன். சம்பளம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. சாப்பாடு போட்டு தங்க இடம் கொடுத்தால் போதும்.” பரிகாசமாக சொன்னாள்.
“அதென்ன பேச்சும்மா?” என்று அம்மா சொல்லிக் கொண்டிருந்த போதே “சமையலுக்கு ஆளை வைத்துக் கொள்ளும் அளவுக்கு எங்களுக்கு வசதியில்லை. இரண்டு பேரும் சம்பாதிக்கிறோம் என்று பெயர்தானே ஒழிய எல்லாமே கடன்தான்,” முகத்தில் அடித்தாற்போல் சொன்னார்.
என்னால் வசந்தாவின் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. ஆமாம். எங்களுக்கு எல்லாமே கடன்தான். சேர்ந்திருக்கும் சீட்டுகள், வாங்கியிருக்கும் கம்பெனி ஷேர்கள், ரிகரிங் டிபாஜிட்டுகள், இன்சூரென்ஸ் …. இவையெல்லாம் அவருடைய கண்ணோட்டத்தில் கடன்தான் போலும். சிநேகிதி ஒருத்தி சிக்கலில் மாட்டிக் கொண்டு என்னிடம் வந்து பத்து நாட்கள் தங்கினால் அவருக்கு எல்லாமே கடனாக மாறி விடும். இவர்தானா என்னுடைய கண்கண்ட தெய்வம்! என் கூட வேலை பார்க்கிறவர்களுக்கும், என் உறவினர்களுக்கும் என் மீது பொறாமை ஏற்படுத்தியவர், என் இதயத்தில் உயர்ந்த இடத்தில் அமர்ந்து கொண்டு ஹீரோ வர்ஷிப் பெற்றுக்கொண்டவர் இன்று இப்படி பேசுகிறாரே ஏன்? நாம் இருவர் ஒன்றுதான் என்று சொல்லி வந்தவர், என்னுடைய சந்தோஷத்தை, என்னுடைய முன்னேற்றத்தை, என்னுடைய நலனை விரும்புகிறவர்களில் முதல் இடத்தில் இருப்பவர், கிளிப் பிள்ளை போல் எனக்கு பேச கற்றுக் கொடுத்தவர், நடக்க கற்றுத் தந்தவர் …. எல்லாமே இவர்தான். சந்தேகமே இல்லை. என் மனம் முழுவதும் கரு மேகங்கள் சூழ்ந்து கொண்டன. மனம் விட்டு அழவில்லை என்றால் அந்த பாரத்தை என்னால் சுமக்க முடியாது போல் தோன்றியது. சாப்பிட்ட பிறகு அவர் மறுபடியும் சொன்னார்.
“வசந்தாவை அனுப்பி விடு. அவள் இங்கெ இருப்பது நல்லது இல்லை. நாளைக்கு லீவ் போட்டு சினிமாவுக்கு அழைத்துப் போ. புடவை ஒன்று வைத்துக் கொடுத்து, உங்க அம்மாவின் துணையோடு அனுப்பி வைத்து விடு.”
“அம்மாவுக்கு ஜுரமாக இருக்கு. இங்கே நான்கு நாட்கள் தங்கிக் கொள்ளணும் என்றுதான் வந்திருக்கிறாள்.” எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சொல்லி விட்டேன்.
“உங்க அம்மா மகனிடம் போய் இருக்கலாம் இல்லையா? தனியாக இருப்பானேன் ஊரில்?” என்று சலித்துக் கொண்டார்.
நான் பதில் சொல்லவில்லை. காலையில் காபி போட்டுக் கொண்டே யோசித்துக் கொண்டிருந்தேன். வசந்தாவை என்னால் அனுப்ப முடியாது. அம்மாவையும் அனுப்ப முடியாது. அவருடைய கோபத்தையும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. இதுநாள் வரையில் அவருக்குக் கோபம் வந்து நான் பார்த்ததே இல்லை. கோபம் எதற்காக வரப் போகிறது? இதுநாள் வரையில் அவருடைய இஷ்டத்தை அனுசரித்துதான் நடந்து வந்திருக்கிறேன்.
நான் யோசனையில் ஆழ்ந்திருக்கிருக்கும் போதே வராண்டாவிலிருந்து அன்றைய நாளேடு வந்து என் முகத்தை வேகமாக தாக்கியது. அவ்வளவு வேகமாக வீசப்பட்டது என்றால் அதில் ஏதோ சென்சேஷனல் செய்தி இருந்திருக்க வேண்டும்.
ஆம், இருந்தது.
“வசந்தா என்ற பெயர் கொண்ட முப்பது வயது பெண்மணி, திருமணமானவள், மனநிலை சரியில்லாமல் வீட்டை விட்டு போய் விட்டாள். ஒல்லியான தேகம், சாதாரண உயரம். தமிழும், ஆங்கிலமும் பேசத் தெரியும். விவரம் தெரிந்தவர்கள் கீழ் கண்ட முகவரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பரிசு எதுவும் தரப்பட மாட்டாது.”
வசந்தாவின் போட்டோ, கல்யாணத்தின் போது மாலையும் கழுத்துமாக எடுத்துக் கொண்டதில், அவள் இருந்த பாதி மட்டும்.
“உனக்கு மனநிலை சரியாக இல்லையாமே?” என்று சொல்லிக் கொண்டே பேப்பரை வசந்தாவிடம் நீட்டினேன்.
“ஆமாம். திருமணம் ஆனது முதல் மனநிலை சரியாகத்தான் இல்லை. அந்த ஒரு விஷயத்தில் மட்டும் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார்” என்றவள் ஒரு நிமிடம் தாமதித்து, “நான் இங்கே இருப்பதாக கடிதம் எழுத வேண்டாம் என்று உன் கணவரிடம் சொல்லு. அவர் வந்து ரகளை செய்வார். அவருடைய பேச்சை, நடத்தையை உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது.” வேண்டுகோள் விடுப்பது போல் சொன்னாள்.
என் மனதில் சுருக்கென்று தைத்தது. வசந்தா இங்கே இருப்பதால் பிரச்னைகள் வரக் கூடும் என்று நினைக்கிறாரே ஒழிய, அவளை கணவனிடம் அனுப்பி வைக்கச் சொல்லும் அளவுக்கு என் கணவர் ராட்சனாக இருக்க மாட்டார். அவ்வளவு கொடூரமாக யோசிக்கவோ, நடந்து கொள்ளவோ அவருக்குத் தெரியாது என்றுதான் நினைத்தேன். நான்கு நாட்கள் போனால், ராஜேஸ்வரி மூலமாக வசந்தாவுக்கு ஏதாவது வேலை கிடைத்து விட்டால் இந்த பிரச்னை தானாகவே சரியாகிவிடும். என் கணவரை வசந்தா தவறாக புரிந்து கொண்டிருக்கிறாள் என்று நினைத்தேன். அவர் அப்படி எழுதக் கூடியவர் இல்லை.
ஆனால் பேப்பரில் விளம்பரம் வந்த பிறகு அவர் என்னுடன் பேசுவதையே விட்டு விட்டார். வீட்டில் அவருக்கு எதுவுமே பிடிக்கவில்லை. சமையல் பிடிக்கவில்லை. குழந்தையின் சிரிப்பும், விளையாட்டும் பிடிக்கவில்லை. வீட்டில் பிரைவெஸி குறைந்துவிட்டது அசலுக்கே பிடிக்கவில்லை. தன் பேச்சை யாரும் லட்சியப்படுத்துவதில்லை என்றும், ஆளாளுக்கு இஷ்டம் வந்தது போல் நடந்து கொள்கிறோம் என்றும் குற்றம் சாட்டினார். இத்தனை நாளும் வெறும் அப்பாவி என்றுதான் என்னை நினைத்திருந்தார். நான் பிடிவாதக்காரியாகவும், முட்டாளாகவும் இருப்பது புரிந்துவிட்டது. அதுதான் விஷயம்.
திருமணமானது முதல் என் சம்பளத்தை அவரிடமே கொடுத்து வந்தேன். அவருடைய அனுமதியுடன்தான் புடைவையோ, நகையோ வாங்கிக் கொண்டேன். வீட்டிற்கு எது வேண்டுமென்றாலும் அவர் வாங்கிப் போட்டுக் கொண்டிருந்தார். எனக்கு எந்த குறையும் எல்லை என்று நினைத்திருந்தேன்.
போகட்டும். வசந்தாவை ஏதாவது பெண்கள் விடுதியில் ஒரு மாதத்திற்கு தங்க வைக்கலாம் என்றாலும் என் கையில் காசு இல்லை. இரண்டு பேரும் சம்பாதித்து வந்தாலும் ஒரு சம்பளம் அப்படியே சீட்டு கட்டுவதற்கும், மற்ற சேபிப்புகளுக்கும் போய்விடும். ஒரு சம்பளத்தில்தான் வீட்டுச் செலவுகளை சமாளிக்க வேண்டும். அதனால் என் கையில் பஸ்ஸ¤க்கும், சில்லரை செலவுகளுக்கும் மட்டுமே பணம் இருக்கும். சமீபத்தில் நாங்கள் இடம் வாங்கிய போது பற்றாக்குறை ஏற்பட்டதால் என் நகைகளை வங்கியில் அடகு வைத்து கடன் வாங்கி சமாளித்தேன். இப்போ நகைகளும் என் கைவசம் இல்லை. செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு எழுத வேண்டும் என்று அவர் சொல்லுவார். என் கையில் நூறு ரூபாய்தான் இருந்தது. மூன்று நாட்கள் மூன்று யுகங்கள் போல் கழிந்தன.
அன்று காலையில் ஒரு பக்கம் விடியும் போதே வாசலில் ஆட்டோ ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய நபர் சாட்சாத் வசந்தாவின் கணவனேதான்! வசந்தாவின் முகத்தைப் பார்க்க முடியாமல் தலையைக் குனிந்து கொண்டேன்.
‘அடி பைத்தியக்காரி! உன் திருமண வாழ்க்கை உனக்கு எதுவும் கற்றுத் தரவில்லை. என் தாம்பத்திய வாழ்க்கை எனக்கு மனிதர்களைப் புரிந்து கொள்ளவும், சந்தேகப்படுவதையும் கற்றுத் தந்திருக்கிறது’ என்பது போல் பார்வையாலேயே என்னை தேற்றினாள் வசந்தா.
வரச் சொல்லி அவனும், மாட்டேன் என்று வசந்தா.
அனுப்பிவிடு என்று இவர், அனுப்ப முடியாது என்று நான்.
சண்டை, கூச்சல், ரகளை, வாயிலிருந்து வரக் கூடாத வார்த்தைகள், கேட்கக் கூடாத வசவுகள்.
“நான்தான் சொன்னேனே? அவன் வெறும் சேரி ஆசாமி” என்றாள் வசந்தா.
வசந்தாவை தன்னுடன் அழைத்துப் போவது சாத்தியம் இல்லை என்று தெரிந்ததும் “ஏன்? உன் சிநேகிதியின் கணவன் உன்னையும் வைத்துக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறானா?” என்றான் விஷம் தோய்ந்த குரலில்.
“முதலில் இந்த இடத்தை விட்டுப் போய் விடு. இல்லாவிட்டால் போலீஸை கூப்பிடுவேன் ஜாக்கிரதை!” அவனை விரட்டினார் என் கணவர். அதைப் பார்த்து நான் சந்தோஷப் படுவதற்குள் என்னை வசை பாட ஆரம்பித்தார். என் பிடிவாதத்தினால் அவருடைய மரியாதைக்கு இழுக்கு வந்து விட்டதாகவும், என்னுடைய முட்டாள்தனத்தினால் அவமானம் நேர்ந்து விட்டதாகவும், இனி மேலாவது தான் சொன்னபடி நடந்து கொள்ள வில்லை என்றால் என்னையும் வீட்டை விட்டு போய்விடச் சொல்லியும் கத்தி கூச்சல் போட்டு விட்டு களைத்துப் போய் நாற்காலியில் சரிந்தார்.
அதற்குள் வசந்தா துணிமணிகளை எடுத்து கூட்கேஸில் வைத்துக் கொள்ளத் தொடங்கினாள். “நீ வேலைக்குப் போய் சுந்திரமாக இருக்கிறாய் என்றும், நிம்மதியாக வாழ்கிறாய் என்றும், எனக்கு உதவி செய்யக் கூடியவள் நீ ஒருத்திதான் என்று நினைத்தேன். இப்படி ஆகிவிட்டதே? என் காரணமாக நீங்கள் இருவரும் சண்டை போட்டுக் கொள்ளாதீங்க” என்றாள்.
வசந்தா என் வேலையை, என் வருமானத்தை மட்டுமே அல்லாமல், என்னையும், என் தனித்தன்மையையும் சவால் செய்துவிட்டாள்.
இப்போ எனக்கு என் கணவரின் மீது கோபம் வரவில்லை. என் இயலாமையை நினைத்து அழுகை வரவில்லை. இத்தனை நாளும் எனக்கு என்ன வேண்டுமோ தெரிந்து கொள்ளாமல் போனதற்கும், கண்களைத் திறந்து உலகத்தைப் பார்க்க முடியாமல் போனதற்கும் வருத்தம் ஏற்படவில்லை. எனக்கு என் கடமை ஒன்றுதான் நினைவுக்கு வந்தது.
வசந்தாவின் கையைப் பிடித்துக் கொண்டேன். “ரொம்ப அழகுதான்! நீ எங்கேயும் போக வேண்டியதில்லை. நானும் எங்கேயும் போக மாட்டேன். நேரமாகிவிட்டது. சீக்கிரமாக குளித்துவிட்டு ராஜேஸ்வரியிடம் போகலாம். உன்னை வரச் சொல்லியிருக்கிறாள்” என்றேன்.

முற்றும்

தெலுங்கில் P.Sathyavathi
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
emaild id : tkgowri@gmail.com

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்