காமெடி சிறுகதைப் போட்டி

This entry is part [part not set] of 24 in the series 20081211_Issue

கே.பாலமுருகன்



ஆர்பாட்டம் சங்கம் முதன் முதலாக சிறுகதைப் போட்டி நடத்தவிருப்பதாக உறுப்பினர்களுக்குள் கலந்துபேசி முடிவெடுக்கப்பட்டது. ஆர்பாட்டம் சங்கமும் இலக்கிய வளர்ச்சியில் ஈடுபட எடுத்துக் கொண்ட தீர்மானத்தின் முதல் கட்ட நடவடிக்கைதான் இது. சங்கத்தின் தலைவர் புல்புல் தாரா மிகவும் ஆவேசத்துடன் சங்கத்தின் தீவிர ஈடுபாட்டை பகிங்கரமாகத் தெரியப்படுத்தி மூன்று நாளிதழுக்குப் பேட்டியும் கொடுத்து வைத்தார்.
புல்புல்தாரா: “இது எங்களோட முதல் கட்டம்தான். . இன்னும் படிபடியா இலக்கியத்தெ வளர்க்க நாங்க முடிவு பண்ணிட்டோம்”
நிருபர்: நீங்க எத்தனை வருசமா இலக்கியத்துலெ ஈடுபாடா இருக்கீங்க?”
பு.பு.தாரா: நான் கடந்த நூற்றாண்டுலேந்து இலக்கியம் மேல ஆர்வமா இருக்கேன். . சின்ன வயசுலே தேவாரம் படிப்பேன். . திர்நீறு பூசிகிட்டு வேட்டி கட்டிக்கிட்டு. . தோடுடையெ . . அப்படினு ஆரம்பிச்சனா நிறுத்தவே மாட்டேனா பாத்துக்குங்களேன். .”
நிருபர்: சார். . நான் சமய ஈடுபாட்டைப் பத்தி கேக்கலே. . இலக்கியம் இலக்கியம்”
பு.பு.தாரா: இலக்கியமா. . அது வந்து. . சின்ன வயசுலெ தெனாலி ராமன் நீதி கதைகள், மகாபாரதம் சிறுவர்களுக்கு, பஞ்ச தந்திர கதைகள் என்று பல புத்தகங்கள் படிக்கலாம்னு நெனைச்சென் ஆனா அப்பெ எங்க கம்பத்துல கரண்டு இல்லாமே போச்சிப்பா. . அதனாலே படிக்க முடிலெ.”
நிருபர்: சரி. நல்லது. இந்தச் சிறுகதைப் போட்டிய பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்”
பு.பு.தாரா: ஆஹா! ஓஹோ! இதுவரைக்கும் இந்தப் பிரபஞ்சத்துலேயே நடக்காத ஒரு சிறுகதை போட்டி இது தம்பி. யாருலாம் தமிழ்லே தலைப்பு வைக்கறாங்களோ அவுங்களுகெல்லாம் விழா அன்னிக்கு ஐஸ்கிரீம் இலவசமா தந்துக்கிட்டே இருப்போம். பரிசளிப்பு விழா முடியறவரைக்கும் நல்லா சாப்ட்டுக்கிட்டே இருக்கலாம். அப்பறம் முதல் பரிசு பெறும் சிறுகதை எழுத்தாளருக்கு அவரு சைஸ்க்கு ஒரு ஜட்டி இலவசம். . அங்கயே கொடுத்து. . மேடையிலே போட சொல்லி கௌரவிப்போம். . எட்டாவது அதிசயம் தம்பி. . அதான்”
நிருபர்: இரண்டாவது பரிசு பெறும் எழுத்தாளருக்கு என்ன கிடைக்கும் சார்?
பு.பு.தாரா: அவருக்கு விஷேசமான பரிசுதான் போங்க. . . நல்ல 3 தேங்காயா பார்த்து, அவரு கைலெ கொடுத்து, சூடம் ஏத்தி மூனு சுத்து சுத்தி, இலக்கியம்னு பேசிகிட்டு ஊரெ ஏமாத்தறவன் தலையிலெ போட்டு ஒடைக்க வாய்ப்பு தரோம். . உலகத்துலே நடக்காத அதிசயம் இது.. நாளைக்குப் பேப்பர்லெ தலைப்பு செய்தியா வரனும். . என்னா?”
நிருபர்: கண்டிப்பா சார். . போட்டறலாம். பாவம் சார் நீங்க
பு.பு.தாரா: ஏன்பா?
நிருபர்: இவ்வளவு செய்றீங்களே. . நீங்க ரொம்ப நல்லவரு சார். அப்படியே சமூக சீர்திருத்த, சமூகக் காப்பாளரை பாக்கறெ மாதிரியே இருக்கு சார். நீங்கத்தான் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களோட நம்பிக்கை சார்”
பு.பு.தாரா: என்னை ரொம்ப புகழாதீங்க, அப்பறம் நான் புல்லுலெ உருண்டு பெரண்டிருவேன். யாராவது என்னைப் புகழ்ந்தா அப்படித்தான் செய்வேன். அதான் என்னை எல்லாரும் புல் புல் தாரானு செல்லமா கூப்டுறாங்க”
அத்துடன் அன்றைய பேட்டி முடிவடைந்தது. மறுநாள் பத்திரிக்கையில் தலைப்பு செய்தியாகச் சிறுகதை போட்டியைப் பற்றிதான் வெளிவந்தது.

ஆர்பாட்டம் சங்கம் நடத்தும் அதிரடி சராவெடி மாபெறும்
சிறுகதை போட்டி
தலைப்பு: பொது ( நீதி கதையாக இருத்தல் வேண்டும்)
கதையின் இறுதியில் ஒரு நன்னெறி பண்பை கண்டிப்பாக வலியுறுத்த வேண்டும்
பங்கேற்பாளர்கள் : நாட்டிலுள்ள அனைத்து புத்திசுவாதினம் உள்ளவர்கள்
பரிசுகள் : முதல் பரிசு
கோக்கா கோலா பானமும் லாலி போப் மிட்டாயும்
இரண்டாவது பரிசு
3 நல்ல தேங்காயும் ஒரு இழிச்சவாய் மண்டையும்
மூன்றாவது பரிசு
ஆர்பாட்ட சங்க செயலாளர் காரில் 3 கிலோ மீட்டர் பயணம் (வேண்டுமென்றால் அவர் காரை 2 முறை உதைத்துக் கொள்ள விஷேச அனுமதி)

அறிவிப்பிற்குப் பிறகு 800 தலைப்பில் 982 கதைகள் போட்டிக்கு வந்து சேர்ந்ததில் ஆர்பாட்ட சங்கத் தலைவருக்கு 4 நாட்களாக பேதி போனது. அதைக் கட்டுப்படுத்திக் கொள்ள அவர் பயன்படுத்திய மருத்துவம் பாட்டி வைத்தியம். அடுத்தப்படியாக நீதிபதி தேர்வு நடைப்பெற்றது. ஆர்பாட்ட சங்கத் தலைவரின் உறவினர் ஒருவருக்குத்தான் அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று தலைவர் விடாபிடியாக இருந்ததில் உறுப்பினர்களுக்கும் அவருக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டு 3 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இறுதியாக தலைவரின் உறவினரே நீதிபதியாகத் தேர்வுப் பெற்றார்.
நீதிபதியின் தகுதி சான்றிதழ்:
1. கல்வி: 5 ஆம் வகுப்புவரை படித்துள்ளார்
2. 4 முறை பள்ளிக்கு மட்டம் போட்டு தலைமை ஆசிரியரிடம் உதை வாங்கியுள்ளார்
3. அடிக்கடி போதையில் தவழும் பழக்கமுண்டு என்பதால் இரண்டு பீர் போத்தலுக்காக யாருக்கு வேண்டுமென்றாலும் அடிமையாகிவிடுவார்
4. போதையில் இருக்கும்போது உண்மையை மட்டுமே பேசக்கூடியவர்
5. இதுவரை ஒரே ஒரு சிறுகதையை மட்டும் படித்துள்ளார், அது சிறுவர் பூங்கா இதழில் பிரசுரமான சிறுவர்களுக்கான தெனாலி இராமன் கதை ஆகும்
6. ஒரே ஒரு கவிதை படைத்துள்ளார், அதுவும் அவரது 18 ஆவது வயதில். கவிதை: “அங்கே பார் தெரியுது நிலவு. . உன் கன்னங்கல் ரெண்டும் படுகுழி. . அதுல விழுந்து எழுந்தேன் நான். . மூனு நாளா தூக்கம் இல்ல பிள்ளெ. . உன் நெனப்பெ நெஞ்சில சுமந்து அலையுது மனசு. . ஆகா ஆகா ஓகோ ஓகோ”
நீதிபதியும் 2 நாட்கள் படாத பாடுபட்டு பரிசுக்குரிய மூன்று கதைகளைத் தேர்ந்தெடுத்து சங்கத்திடம் ஒப்படைத்தார்.
முதல் கதை பாஸ்கர் என்ற மாணவர் எழுதிய “அழுத பிள்ளை பால் குடிக்கும்” என்ற கதைக்குக் கிடைத்தது. இரண்டாவது பரிசு முத்துசாமி எழுதிய “ சிறு துளி பெரு வெள்ளம்” என்ற கதைக்கும், மூன்றாவது பரிசு அன்னாசிபிள்ளை எழுதிய “ நான் உன்னைக் காதலிக்கிறேன், நீ?” என்ற கதைக்கும் கிடைத்தது. பரிசளிப்பு விழாவும் ஆர்பாட்ட சங்கத் தலைவரின் ஏற்பாட்டில் அதிகாரத்தில் சிறப்பாகவே நடைபெற்றது. முதல் பரிசு பெற்ற மாணவர் தலைவரின் உறவினருடைய மகன் என்கிற இரகசியத்தைக் கடைசிவரை சங்க உறுப்பினர்கள் நேர்மையான முறையில் கட்டிக் காப்பாற்றினார்கள்.
கடைசியாக விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகைப்புரிந்த இலக்கிய செம்மல் உரையாற்றினார். அவர் கூறிய கருத்துகள் பின்வருமாறு:
கருத்து 1: இனிமேலும் தொடர்ந்து இந்த மாதிரியான விவேகமான போட்டிகள் நடந்தால்தான் நாட்டின் இலக்கியத்தைக் காப்பாற்ற முடியும்
கருத்து 2: இளைய தலைமுறைகள் இலக்கியத்திற்குள் நுழைய எல்லோரும் வாய்ப்பளிக்க வேண்டும்
கருத்து 3: அன்றாடம் எல்லோரும் நாளிதழ் படிக்க வேண்டும்
கருத்து 4: நீதி கதைகளைப் படித்துவிட்டு அதை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்
அத்துடன் அவர் தனது உரையை முடித்துக் கொண்டு பொன்னாடையுடன் கழன்று கொண்டார். இரண்டாம் பரிசு பெற்ற முத்துசாமி அவருக்குக் கிடைத்த தேங்காயை சங்கத் தலைவரின் தலையில் உடைக்க, இரத்தம் சொட்ட சொட்ட தலைவர் வெளியேற, பரிசளிப்பு விழா இனிதே ஒரு முடிவை நாடியது.

ஆக்கம்
கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்