நகரத்தின் ஆன்மாக்கள்

This entry is part [part not set] of 52 in the series 20081120_Issue

கே.பாலமுருகன்


நகரத்தின் பல இடங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு விபத்தைப் பார்க்க நேரிடும். எல்லாம் சாலை திருப்பங்களிலும் ஏதாவது ஒரு நாளில் அங்கு விபத்து நடந்திருக்கலாம். நகரம் எப்பொழுதும் ஒரு விபத்தின் கொடூரத்தைச் சுமந்திருக்கிறது. சாலையோரமாக நடந்து செல்பவர்கள், காரில் அமர்ந்துகொண்டு பச்சை விளக்குக்காகக் காத்திருப்பவர்கள், தள்ளு வண்டியுடன் வியாபாரத்தை முடித்துவிட்டுக் கிளம்புபவர்கள், கடைத் தெருக்களில் துணி கடைகளின் ஓரமாக அமர்ந்திருக்கும் சீனப் பெண்மணிகள் என்று எல்லோரின் வாழ்விலும் ஏதோ ஒரு தருணத்தில் நகரத்தில் நிகழ்ந்த பயங்கரமான விபத்தைப் பார்த்துப் பிரமித்துப் போயிருக்கக்கூடும். அவர்களின் கண்களில் அந்த விபத்தும் விபத்தில் சிக்கிய மனிதர்களின் நினைவும் துன்பக் கதறலுடன் பிரமிப்பு தளராமல் இன்றளவும் உயிர்ப்புடன் இருக்கின்றன.
ஒரு கடை வியாபாரியிடம் நகரத்து விபத்துக்களைப் பற்றி கேட்டிருந்தேன். 5 நிமிடத்திற்குப் பிறகு முதலில் ஒரு மோட்டாரோட்டியின் மரணத்தைப் பற்றி கண்கள் விரிய விவரிக்கத் தொடங்கினார். நல்ல மழைப் பொழுதுகளில்தான் நகரத்தில் விபத்துகள் வெகு இயல்பாக நடந்துவிடும் போல. அதுவும் இரவு நேரமென்றால் நகரம் அபாயகரமானதாக தெரியும் என்று அவர் சொல்லும்போதே நகரம் இலேசாக இருட்டத் துவங்கியிருந்தது.
அவருடைய கடைக்கு எதிராக மற்றுமொரு செலவு பொருள் கடை இருப்பதால் அந்தச் சாலை எப்பொழுதும் பரபரப்பாகவும் நெரிசலாகவும்தான் இருக்கும். கடையிலிருந்து நேர்த்தியில்லாமல் சடாரென்று வெளியேறும் லோரிகளோ கார்களோதான் மோட்டாரோட்டிகளுக்குச் சவாலாக இருந்துவிடுகின்றன. அவற்றிலிருந்து தப்பித்து அகன்றுவிடுவதுதான் மோட்டாரோட்டியின் நகரத்து சாகசம் என்றுகூட சொல்லலாம்.
“தம்பி! அந்த மோட்டார்காரன் எவ்வளவோ முயற்சி செஞ்சி பார்த்தான், முடிலெ. கரண்டு கம்பத்தை மோதி சர்ர்ர்ருனு தரையிலே தேச்சிகிட்டே போய் ஒரு காடியோட சக்கரத்துலெ சிக்கிக்கிட்டான். அது பெரும் கொடூரம் தம்பி! இன்னும் அந்தச் சமபவத்திலிருந்து விடுபடவே முடிலே”
அவர் அந்தச் சம்பவத்தை விவரித்த பிறகு கடைக்கு எதிர்புறமிருந்த சாலையை எக்கிப் பார்த்தேன். அதே பரபரப்புடன் கார்களும் மோட்டார்களும் ஒன்றையொன்று மோதிக் கொள்வது போலவும் மோட்டாரோட்டிகள் கார்களின் உடலை உரசிவிடுவது போன்ற நெருக்கத்திலும் ஓடிக் கொண்டிருந்தன. அந்த இடத்தில் இடைவெளி குறைந்திருந்தது.
“தம்பி! அவன் என் கண்ணு முன்னாலே செத்து போனான். 10 நிமிசத்துக்கு பிறகு அம்புலன்ஸ் வந்துச்சி. அது வரைக்கும் அந்த பொணத்தே பாத்துகிட்டு இருந்தோம். இன்னிக்கும் மழைக் காலத்துலே யாராவது மோட்டாரோட்டி வேகமாகவோ அரக்கபறக்கவோ ஓடினா, எனக்குப் பயங்கரமான அதிர்ச்சி ஏற்படுது. அதுலேந்து என்னால மீள முடியல”
அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு மோட்டாரில் நகரத்தைக் கடக்கும்போது என்னையும் அறியாமல் பாதுகாப்பு உணர்வும் பய உணர்வும் வந்துவிட்டிருந்தது. எல்லாம் நேரங்களிலும் யாராவது மரணத்தைக் கொண்டு வந்து பூச்சாண்டி காட்டுவது போலவே தோன்றுகிறது. நாளிதழ் விற்பனைச் செய்யும் அக்கா ஒருவர் நகரத்திற்குள் நுழையும் பெரிய சாலையோரமாகத்தான் கடை போட்டிருக்கிறார். அடுத்தபடியாக அவரைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கு செல்லும்போது அவர் கடையை அடைத்துக் கொண்டிருந்தார். ஒரே ஒரு மெழுகுவர்த்தி மட்டும் கடைசி வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டு எரிந்து கொண்டிருந்தது.
விற்கப்படாத நாளிதழ்களையும் புத்தகங்களையும் ஏற்கனவே உள்ளே கட்டி வைத்திருந்தார். பல நாள் பழக்கம் என்பதால் கொஞ்சம் தைரியமாகவே உள்ளே நுழைந்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டேன்.
“க்கா. . இங்க எத்தன வருசமா கடை போட்டு வியாபாரம் செய்யுறீங்க?”
“8 வருசம் பாலா”
“இந்த இடத்துலே நீங்க பார்த்த பயங்கரமான விபத்து பத்தி ஞாபகம் இருக்கா? சொல்லுங்களேன்”
அக்கா மெழுகுவர்த்தியின் குறைந்த வெளிச்சத்தில் நின்றிருந்தார். உடலின் நிழல் தரையில் சரிந்து நெளிந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு அவரின் குரல் தொனி மெல்ல உயர்ந்ததில் ஏதோ ஒரு நகரத்தின் விபத்து பற்றி நினைவுக்கு வந்துவிட்டதென புரிந்து கொண்டேன்.
“லோரி ஒன்னு. . அந்தா அங்க காலியா இருக்கே அந்தக் கடைக்குள்ளே அடிச்சி புகுந்துருச்சி. 3 வருசத்துக்கு முன்னால. இன்னிக்கும் கண்ணு முன்னாலே இருக்கு அந்தச் சமபவம். இப்பே நடந்தது மாதிரியே இருக்கு பாலா! டமார்னு பெரிய சத்தம். அலறி போய்ட்டோம். என்னா ஞாபகத்துலே வந்தானு தெரியலே. அப்படியே லோரியெ உள்ளுக்கு விட்டுட்டான், பின்னாலே கடைக்காரனோட மாமியார்காரி மட்டும் இருந்துருக்கா, காலு உடைஞ்சிறுச்சி. மத்தப்படி ஒன்னும் இல்ல. அப்பறம் ஒரு காரும் லோரியும் இங்கத்தான் 5 அடி தள்ளி மோதிக்கிட்டு, கார்காரனோட மூஞ்சி கண்ணாடிலே மோதி கிழிஞ்சிருச்சி, கண்ணாலே பாத்தேன். ஐயோ பயங்கரம்ப்பா”
இருளில் அக்காவின் முகத்தில் அந்த விபத்துகளின் பயங்கரம் தெரிந்தது. அவள் இன்றும் அந்த விபத்துடன் நெருங்கியபடியே அங்கே இருக்கிறாள். யாராலும் அவளையும் சரி அங்குள்ள கடை வியாரிபரிகளையும் சரி பெரும் நகரத்தில் தினமும் நடக்கும் சாலை விபத்துகளின் அதிர்ச்சியிலிருந்து மீட்டுக் கொண்டு வரமுடிவதில்லை. நகரம் அவர்களை அந்த அதிர்ச்சியைப் பழக்கியபடி ஒருவித நெரிசலுடன் விபத்திற்கான மிக அன்மைய அறிகுறிகளுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது.
“தம்பி! இங்க எல்லாமே அவரசத்துக்கு வாழ்றவனுங்க. நம்ப பாத்துதான் இருக்கனும்ப்பா. அன்றாடம் சம்பவம் மாதிரி விபத்தெ பத்தி கேள்விப்படறோம், கண்ணாலே பாக்கறோம்….. ஆனா, அது நமக்கு நடக்கும்போதுதான் தெரியும்ப்பா”
அவர் பேசிக் கொண்டிருந்தபோதே சாலையின் இருளுக்குள்ளிருந்து யார் யாரோ எழுந்து பார்ப்பது போல தோன்றியது. எப்பொழுதோ நகரத்தின் அவசரத்தனத்தில் உயிர்களைத் தொலைத்த ஆன்மாக்கள் நமக்காக ஏதோ ஒரு செய்தியைச் சொல்வது போலவே இருக்கிறது.

ஆக்கம் : கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்