விஸ்வரூபம் – அத்தியாயம் பதினான்கு

This entry is part [part not set] of 24 in the series 20081113_Issue

இரா.முருகன்


சீரான வேகத்தோடு ஓடிக் கொண்டிருந்த ரெட்டைக் குதிரை சாரட் சட்டென்று நின்றது. லகான் இழுபட, குதிரையொன்று பலமாகக் கனைத்தது. வண்டியின் கதவுகள் அதிர்ந்து குலுங்கித் திறந்திட, தெரிசா எதிர்ப் பக்கம் உட்கார்ந்திருந்த தாமஸின் மடியில் போய் விழுந்தாள்.

ஐயாம் சாரி, தாமஸ். இந்தக் கேடுகெட்ட வண்டி இப்படி சட்டென்று நின்றுபோய்.

தாமஸ் தெரிசாவின் பின் கழுத்தில் வெப்பமான மூச்சுப்பட, அவளுடைய புஜங்களை அழுத்தப் பிடித்துத் தூக்கி நிறுத்தினான்.

இட்ஸ் ஆல் ரைட்.

ஜன்னல் திரையை விலக்கி வெளியே பார்த்தாள் தெரிசா. பனியும் மேகமூட்டமாகவும் இருந்த லண்டன். அங்கங்கே சின்னதும் பெரிசுமான தொழிற்சாலை எல்லாமும் சேர்ந்து வெளியேற்றுகிற புகையும் சேர்ந்து தேவனுக்கு உரிய முற்பகல் நேரத்தை சாத்தானின் இருண்ட பொழுதாக்கி இருந்தது.

தேவனுக்கு ஸ்தோத்ரம்.

தெரிசா கழுத்துச் சங்கிலியில் கோர்த்த சிலுவையை முத்தமிட்டபடி சொன்னாள். தாமஸ் ஆமோதித்தபடி வண்டியில் இருந்து குதித்து இறங்கினான். மேலே நகராமல் சாரட் நின்று போக என்ன காரணமாக இருக்கும்? தெரிசா யோசித்தாள்.

இது என்ன இடம்?

அவள் பனி மூட்டத்துக்கு இடையே கண்ணைக் கவிந்துகொண்டு பார்த்தாள். கண் பார்வை மங்கி வருகிறதா என்ன? தாமஸிடம் சொல்லிப் பரிசோதனை செய்து மூக்குக் கண்ணாடி மாட்டிக் கொள்ளலாமா என்று யோசனை பலமாக வந்தது.

இப்போது வேணாம். அவன் வேறு எதையாவது பரிசோதிக்க அச்சாரம் போடுவான்.

இந்தக் கட்டிடம்? க்ரீன் பார்க் பாதாள ரயில் நிலையம் இல்லையோ? எதிரே கொஞ்சம் தொலைவில் வலப்புறமாக பக்கிங்ஹாம் அரண்மனை எங்கேயோ பனியில் மறைந்து கொண்டு நிற்கிறது. மகாராணி என்ன செய்து கொண்டிருப்பாள்? தெரிசாவை வரவேற்க கையில் ஆரத்தித் தட்டோடு அரண்மனை வாசலில் நின்று கொண்டிருப்பாள் விக்டோரியா அம்மாள்.

தெரிசாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது. போலியாக இருமி, கைக்குட்டையால் வாயைத் துடைத்து அதை அழிக்கப் பார்க்க, தாமஸ் திரும்பி நோக்கினான்.

ஆர் யூ ஆல்ரைட் தெரீ?

ஒரு குழப்பமும் இல்ல. அது என்ன தெரீ? ரொம்ப நெருங்கறியா கசின் பையா?

தாமஸ் அவளை இன்னொரு முறை தீர்க்கமாகப் பார்த்தபடி வண்டிக்காரனை விசாரித்தான்.

ஜான், என்ன ஆச்சு?

காக்னி இங்கிலீஷில் வரும் பதில். தெரிசா எத்தனை கவனமாகக் கேட்டும் அது முழுக்க அர்த்தமாகவில்லை. லண்டன் வந்து இத்தனை நாள் போனாலும் புரிபடாத விஷயங்களில் இந்த உள்ளூர் மொழியும் ஒன்று.

ஓல்’டாம்டெவ்ல்’த்தாட். ஏட்’ரிங் டூ மெனி’ந்த மார்ன். ஜம்’ஸ் ‘க்ராஸ் ரோட், டெவ்ல்.

என்னவாக இருக்கும் என்று யோசிப்பதற்குள் வெள்ளைக்கார வயசன் ஒருத்தனை போலீஸ்காரன் தரதரவென்று இழுத்துப் போனது தெரிசா கண்ணில் பட்டது.

சிரித்தபடி சாரட்டில் திரும்ப ஏறி உட்கார்ந்தான் தாமஸ்.

விடிகாலையிலேயே மனுஷன் மூக்கு முட்டக் குடித்துட்டு பிக்கடலியிலே உருண்டுக்கிட்டு கிடக்கார். ஆள் யாரு தெரியுமில்லே?

யார் என்று கூர்ந்து பார்த்தாள் தெரிசா. தெரியவில்லை. அவளுக்குத் தெரிந்து ஒன்றும் ஆகப் போவதில்லை.

சாட்சாத் ஹாட்லி பிரபுதான். ஸ்கொயர் ஆஃப் நாஷ்வில். பதினாறாம் தலைமுறை.

தெரிசாவுக்குத் தெரிந்ததெல்லாம் பீட்டரை, தாமஸை. கொஞ்சம் எட்டிப் போனால் அம்பலப்புழை கிராம மகா ஜனங்களை. மதராஸ் பாடசாலையில் பாடம் எடுத்த பாதிரிகளை. சுவிசேஷ கூட்டத்துக்கு வந்த வேதத்தில் ஏறிய தெலுங்கு செட்டியார்களை. அவர்கள் வீட்டுப் பெண்களை. அவளுக்கு மொத்தமாகப் பரிச்சயமான முகங்களில் வெளுத்தது கொஞ்சம்தான்.

போலீஸ் இழுத்த இழுப்புக்கு வழங்கி வந்து அசட்டுத்தனமாகச் சிரித்துக்கொண்டு நடந்த வயசன் சாரட் பக்கம் வந்ததும் தலை தூக்கிப் பார்த்தான். தன் ஓட்டை விழுந்த தொப்பியைக் கையில் எடுத்துக் கொண்டு தெரிசாவுக்கு முன் மரியாதையோடு குனிந்தான்.

உன் ராத்திரி நல்லதாக அமைதியான உறக்கத்தோடு கூடியதாக அமையட்டும் சீமாட்டியே.

பிரபுவே தான். சீமாட்டியை வாழ்த்திய அவருடைய ஆங்கில உச்சரிப்பு அற்புதமாக இருந்தது.

நடுப்பகல் நேரத்தில் குட்நைட் சொல்லும் இந்த வயசனுக்கு முத்தச்சன் சாயல் இருக்கோ? தெரிசா பதில் வணக்கம் சொல்லிக் கொண்டு யோசித்தாள்.

ஆலப்பாட்டு முத்தச்சன். பகவதி சித்தி கல்யாணம் நிச்சயம் ஆனபோது காற்றில் மிதந்துபோய் அம்பல நடையை நனைத்தவன். முத்தச்சன் வறுத்த கப்பலண்டியும், கடலாசுத் துணுக்கில் பொதிந்த மிட்டாயுமாக ஊட்டி விட்டது தேசலாக நினைவு வந்தது. அவன் எண்பதோ தொண்ணூறோ திகைந்து காலமானபோது அம்மா சிநேகாம்பாள் மட்டும் ஆலப்பாடு போய்வந்தாள்.

முத்தச்சனின் ஆத்மா மறு உயிர்ப்பு நேரம் வரை ஆலப்பாட்டிலோ அம்பலப்புழையிலோ சமாதானமாக உறங்கிக் கிடக்கட்டும். எங்கேயும் பறந்து ஈரமாக்கிப் போடவேணாம். கிருஷ்ணா, கவனித்துக் கொள். இது உன் இலாகா.

ஹாட்லி பிரபுவைப் பார்த்து அப்படியே யோசனையிலே ஆழ்ந்திட்டியே.

தாமஸ் அவள் மடியில் தட்டிச் சிரித்தான்.

தெரிசா மடியைக் குறுக்கிக் கொண்டு உட்கார்ந்தாள். இடுப்பில் இத்தனை இறுக்கமாகப் பாவாடை அணிந்து வந்திருக்க வேண்டாமோ? மார்பை முன்னா; தள்ள வைத்துவிட்டது இது. இல்லாவிட்டாலும் அங்கே சௌந்தர்யத்துக்கு இயற்கை எந்தக் குறையும் வைக்கவில்லை. மத்திய வயசில் அடியெடுத்து வைக்கும்போதும் அதைத் திரும்பப் பறிமுதல் செய்யவில்லை.

குனிந்து பார்க்கப் பரபரத்தது மனசு. மாரைக் குனிந்து பார்க்காதே. நீ இல்லை, எந்தப் பெண்ணும் அப்படிச் செய்தால் பக்கத்தில் இருக்கும் ஆண் உடம்பில் சூடேற்றி விடும். மோஸ்ட் எரோட்டிக் ஜெஸ்சர் ஆன் தி பார்ட் ஆஃப் லேடீஸ்.

பீட்டர் கல்யாணமான புதிதில் லண்டனுக்கு வரும்போது கப்பலில் வைத்து அவளிடம் சொன்னபோது தெரிசா கேட்டாள்.

வாழ்க்கையில் எத்தனை தடவை நீ அப்படி சூடாகி இருப்பே பீட்டர் இதுவரை? ஐயாயிரம்? பத்தாயிரம்? ஏழாயிரத்து எழுநூத்து எண்பது?

ஏழாயிரத்து எழுநூத்து எண்பத்தொண்ணு. இதோ நீ கேட்கறபோதே ஜிவ்வுனு பறக்க ஆரம்பிச்சுட்டேன். பறந்து பறந்து இந்தக் குருவி இறங்கறது இங்கேதான்.

யாரும் இல்லாத கப்பல் மேல்தளத்து இருட்டில், கருப்புக் கடல் சாட்சியாக சுற்றும் ஆர்பரிக்க, பீட்டர் அவள் மேல் மறுபடியும் படிந்த கணங்களின் நினைவை பிடிவாதமாக விலக்கினாள் தெரிசா,

இந்த நிமிஷத்துக்கு திரும்பணும். பக்கத்திலே இருக்கற கசின் தாமஸோடு ஒரு வார்த்தையாவது பிரியமாகப் பேசணும்.

ஹாட்லி பிரபு யார்னு சொல்லும் தாமஸ் நாஷ் பிரபு அவர்களே.

சகஜமாகச் சிரித்தபடி தாமஸைப் பார்க்க அவன் பனித்துளியாக உருகிப் போனான். நாற்பது வயதுக் கறுப்பியைக் காமுறும் முப்பத்தைந்துக் காரன். கப்பலில் வந்து சேர்ந்த, கல்யாணமான கருப்பி இவள். அவனுடைய ஒன்றுவிட்ட சேட்டனுக்குப் பெண்டாட்டி. சேட்டத்தி.

சேட்டத்தியும் ஒண்ணு விட்ட ரெண்டு விட்ட உறவுகளும் இருக்கட்டும். கசின்கள் விஷயத்தில் ஜாக்கிரதையாக இரு பெண்ணே.

பீட்டர் ஆரஞ்ச் எஸ்டேட்டில் துப்பாக்கியைத் துடைத்துக்கொண்டு கிசுகிசுத்தான்.

ஹாட்லி பிரபு எங்க குடும்பத்துக்கு தூரத்து உறவுதான்.

தாமஸ் சொல்ல ஆரம்பிக்க, கசினா என்று விசாரித்தாள் தெரிசா.

பாப்ஸ் யுவர் அங்கிள். ஹாட்லி டூ. எவ்வரிபடீஸ் அங்கிள்.

முழுக் குடும்பத்துக்கும் மாமாவான பிரபு. ஏன் இப்படி கந்தல் கம்பளி கோட்டும், ஓட்டை விழுந்த தொப்பியுமாக தரிசனம் தர வேணும்? அதுவும் நெரிசல் ஏறிக் கொண்டிருக்கும் பகல் நேர பிக்கடலி கடைவீதியில் குடிகாரனாக விழுந்து புரண்டு கொண்டு?

ஏழு தலைமுறை சொத்தை எல்லாம் ரயில்வே கம்பெனிகளில் கொண்டுபோய் கண்ணை மூடியபடி கொட்டி முதலீடு செய்தால் என்ன ஆகும்? இதான் நடக்கும்.

தாமஸ் தொப்பி ஓரமாக விரலால் தட்டிக்கொண்டு சொன்னான்.

புரியலே தாமஸ்.

நண்டு சிண்டாக ரயில்வே பாதை அமைத்து புகைவண்டி விடும் கம்பெனிகள் மும்முரமாகி இருந்த காலம் ஒன்று இருந்ததாம். கிட்டத்தட்ட ஐம்பது வருடம் முன்னால் அது ஏற்பட்டபோது அம்பலப்புழையில் தெரிசா பிறந்திருக்கவில்லை.

இங்கிலாந்து முழுக்க குறுக்கும் நெடுக்குமாக ரயில் பாதை போடவும், லண்டனில், மான்செஸ்டரில், நியூகேசிலில், இன்னும் பெரிய நகரம் ஒன்று விடாமல் பெரிய தோதில் ஊருக்கு நடுவே ரயில்வே ஸ்டேஷன் அமைத்து போக்குவரத்தைத் தொடங்கவும் ஏகப்பட்ட ரயில் கம்பெனிகள் போட்டி போட்ட காலம் அது.

கதை கேட்கிற சுவாரசியத்தோடு தெரிசா தாமஸை நிமிர்ந்து பார்த்தாள்.

இதிலே பலதும் எந்த கணக்கு வழக்கும் தெரியாமல் உத்தேசமாக செலவினத்தை யோசித்து ஊரிலிருக்கிறவங்க கிட்டே முதலீடு வாங்கி செயல்பட்டவை. ரயில் பாதை போட்டு முடிச்சு ரயில் விட்டு அது காசு வசூலிக்கற சாதனமாச்சு என்றால் முதல் போட்டவங்க காட்டில் மழை. ஒரு பவுண்ட் போட்டா, நூறு பவுண்ட் லாபம். ராஜாங்கத்துக்கு வரி ஏதும் தரவேண்டியதில்லை. ஆனால் பலதும் தோற்றுப் போன கம்பெனி. பாதி வரைக்கும் இழுத்த தடம் அப்படியே நின்னுபோக, எஸ்டிமேட் தப்பாப் போச்சு. இன்னும் நூறாயிரம் பவுண்ட் தேவைன்னு அறிவிப்பு செய்வாங்க. ஏற்கனவே பணம் கட்டினவங்க, இன்னும் கொஞ்சம் கட்டணும், இல்லாட்ட முதலுக்கே மோசம். கட்டினாலும் முடியறது நிச்சயமில்லை.

ஹாட்லி பிரபு முதலீடு செய்த கம்பெனி எல்லாம் திவால் ஆச்சா?

தெரிசா கேட்டாள். முத்தச்சன் போல் அந்த வயசன் பிக்கடலிக்கு மேல் மிதந்தபடி மூத்திரம் போகிறான். பக்கிங்ஹாம் அரண்மனை வாசலில் ஆரத்தித் தட்டோடு நிற்கும் மகாராணியம்மா அசங்கியம் என்று அலுத்தபடி உள்ளே விரைகிறாள்.

இன்னொரு தடவை அவள் சிரிப்பை அடக்கியபடி தாமஸைப் பார்க்க அவன் கொஞ்சம் துணிச்சலோடு தெரிசாவின் பக்கமாகக் குனிந்தான். கசின் முத்தமிட்டால் தப்பில்லை என்று அறிவித்துவிட்டு செய்யப் போகிறானோ?

தெரிசா பின்னால் நகர்ந்தாள்.

ஹாட்லி பிரபு மட்டுமில்லே. பீட்டரோட அப்பாவும் ரயில் கம்பெனியிலே காசைப் போட்டு நிறைய இழந்துட்டார். நீ இருக்கறியே கென்சிங்க்டன் மாளிகை அதுகூட அப்போ பேங்குலே அடமானம் வச்சதுதான். பீட்டர் சொல்லியிருப்பானே.

தெரிசா கொஞ்சம் அதிர்ந்து போனாள். கடனுக்குப் பிணையாக வைத்த வீட்டிலா அவள் குடியிருக்கிறாள்? பீட்டரின் அப்பா, பீட்டர் இன்னும் மொத்த குடும்பமும் அடைக்க வேண்டிய தொகை எவ்வளவு? ஏன் பீட்டர் இதைத் தெரிசாவிடம் சொல்லவில்லை?

உளறாதே தாமஸ். கென்சிங்க்டன் வீட்டு மேலே வேறே யாருக்கும் உரிமை கிடையாது. இருந்தா பீட்டர் சொல்லியிருப்பானே.

தெரிசாவின் குரல் அவளுக்கே நம்பிக்கை இல்லாமல் ஒலித்தது.

ஐயாம் சாரி தெரிசா. பீட்டர் உன் கிட்டே சொல்லியிருப்பான்னு முட்டாள்தனமா நம்பி உளறிட்டேன். மன்சிலேருந்து அதை உடனடியா நீக்கிடு.

தாமஸ் தெரிசாவின் கைகளை ஆதரவாகப் பிடித்துக் கொண்டான். ஏனோ தெரிசாவுக்கு அது தேவையாக இருந்தது.

எங்க வீட்டு மேலே எவ்வளவு கடன் இருக்கு தாமஸ்?

அவள் கையை விடுவித்துக் கொள்ளாமல் கேட்டாள்.

அது எதுக்கு உனக்கு? போயர் யுத்தத்துக்கு பீட்டர் போக இன்னும் கொஞ்சம் காசு சம்பாதிச்சு கடனை அடைக்க நினைச்சதும் காரணம்.

நோ, இருக்காது.

சரி நம்ப வேணாம் தெரிசா. பீட்டரோட அப்பா மூணு தடவை விவாகரத்து செஞ்சு அலிமனி கொடுக்கறதிலேயே குடும்பச் சொத்தைப் பாதி கரைச்சதாவது சொல்லியிருக்கானா? அதைச் சொன்னாலும் இதைச் சொல்லியிருக்க மாட்டான். கென்சிங்க்டன்லே அந்தக் கிழம் இருந்தபோது வீட்டுக்குப் பால் கொண்டு வர்ற பொண்ணு, வேலைக்காரி, பூ விற்க வருகிறவ இப்படி ஒருத்தியையும் விட்டு வைக்காமல் ஆட்டம் போட்டது தெரியுமா? துணி துவைக்க வந்தவளை துவைச்சு எடுத்து தினசரி சொட்டச் சொட்ட ஈரத்தோடு அனுப்பின புண்ணியவான் அவர். ஹாட்லி பிரபு இந்த விஷயத்திலே நிஜமாகவே மேட்டுக்குடிதான். அவர் தகுதிக்கு சரியான பையன்களைத் தான் பார்ப்பார். என்ன சொன்னேன்? பையன்களை.

தாமஸ் தெரிசாவைக் கூர்ந்து பார்த்தான். மேலும் மேலும் அதிர்ச்சியான தகவல்களைக் கொடுத்து அவளைத் திக்குமுக்காட வைத்து நெருங்கி வந்து இழைய அவன் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருப்பான். தெரிசாவுக்கு அப்படித்தான் பட்டது.

கையை விலக்கிக் கொண்டு ஜன்னல் திரையை நீக்கினாள். வெளியே பளிச்சென்று சூரிய வெளிச்சம். பிக்கடலி சர்க்கஸ். ஏதோ பூதாகாரமாகக் கடந்து போக வழிவிட்டு சாரட் நிற்கிறது.

இது என்ன? குதிரை இழுக்காமல் தானே அசைந்து உருளும் ராட்சச சாரட்?

தெரிசா ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும்போதே திரும்ப பனி மூடத் தொடங்கியது. கிரகணம் பிடித்தது போல் அரையிருட்டில் அந்த ராட்சச வாகனம் முன்னால் ஊர்ந்து கொண்டிருந்தது. வரிசை வரிசையாக அதற்குள் மனுஷ்யர்கள். எங்கிருந்தோ எங்கேயோ பிரயாணம் போகிறவர்கள் அவர்கள் எல்லோரும்.

சேச்சி. ரக்ஷிக்கு சேச்சி. ஈ அனியனெ, என்னெக் கட்டியோளெ, எண்டெ பெண்குஞ்ஞெ.

கடைசி வரிசையில் இருந்தவன் தெரிசாவைப் பார்த்து கை கூப்பினான். அவன் குரல் காற்றில் கரைய, பொறுமையிழந்த சாரட் குதிரைகள் ஒருசேரக் கனைத்தன.

இப்பத்தான் முதல் தடவையா மோட்டார் வாகனத்தைப் பார்க்கறியா தெரிசா? இது ஒரு மாசமா இங்கே ஓடிட்டு இருக்கு. இனிமே கொஞ்சம் கொஞ்சமா சாரட் எல்லாம் ரிடையர் ஆயிடும். பாம்பாம்னு முழங்கிக்கிட்டு நாடு நகரம் உலகம் பூரா மோட்டார் காலம் தான் இனி. இன்னும் இருபது வருஷத்துலே நான் இருப்பேனோ என்னமோ இந்த சாரட் நிச்சயம் இருக்காது.

தாமஸ் தெரிசா தோளில் கைவைத்தபடி அவள் பக்கத்தில் அமர்ந்தான்.

(தொடரும்)

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்