• Home »
  • கதைகள் »
  • உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 9(சுருக்கப் பட்டது)

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 9(சுருக்கப் பட்டது)

This entry is part of 28 in the series 20080918_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாநான் தீவிர வெறுப்பாளிகளை (Despisers) நேசிக்கிறேன் ! ஏனெனில் அவரே மாபெரும் பாராட்டியாகவும் (Adorers) இருக்கிறார் ! அவரே எதிர்த்த கரைக்குத் துணிந்து செல்ல ஆர்வம் மிக்க ஏவுகணையாகவும் உள்ளார் !

மரணமடையும் ஒரு குறிப்பணிக்கு விண்மீன்களைத் தாண்டிச் சென்று மடிந்து போகும் தீவிரவாதிகளை நான் நேசிக்கிறேன் ! அதே சமயம் பூமி ஒருநாள் ஓர் உன்னத மனிதனின் அரங்கமாகும் என்று மண்ணில் தம்மைத் தியாகம் செய்வோரையும் நான் நேசிக்கிறேன் !

மனிதன் தன் குறிக்கோளை வர்ணமிட்டுக் காட்டும் தருணம் வந்து விட்டது ! மனிதன் தனது உயர்ந்த நம்பிக்கையின் ஜீவராசிகளை (Germ) நிலைநாட்டும் காலமும் வந்து விட்டது ! சொல்லுங்கள் சகோதரரே ! மனித இனத்துக்குக் குறிக்கோள் குன்றித் தளர்ச்சியாகி விட்டால், மனித இனத்துக்கு வளர்ச்சி குறைந்து போய்விடும் அல்லவா ? வெகு தூரத்துக்கு அப்பால் வசிக்கும் மனிதனை நேசிப்பது, அண்டையில் வாழ்வோனை நேசிப்பதை விட உயர்ந்தது அல்லவா ?

(உன்னத மனிதர் சிலர் : சாக்ரெடிஸ், கௌதம புத்தர், ஏசு நாதர், நபி நாயகம், ஜியார்ஜ் வாஷிங்டன், ஆப்ரஹாம் லிங்கன், லெனின், லியோ டால்ஸ்டாய், விவேகானந்தர், மகாத்மா காந்தி, மாசேத்துங், மார்டின் லூதர் கிங், நெல்ஸன் மாண்டேலா, ஆல்பர்ட் ஸ்வைஸர், அன்னை தெராஸா போன்றோர்)

·பிரடெரிக் நியட்ஸே, ஜெர்மன் சித்தாந்த ஞானி
(Friedrich Nietzsche) (1844-1900)

ஆயிரக் கணக்கான தடுமாற்ற வீழ்ச்சிகள் மீது ஒருவரது பண்பாடு நிலைநாட்டப்பட்டு உருவாக வேண்டும். சமூக நாகரீகத்தின் வரலாறு ஆன்மீகத் துறை பொருளாயுதத்தில் (Materialism) நுழைந்து மேன்மையாகப் பயிலப் படுவதால் உருவானது.

அதிகமாக உணர்ச்சி வசப்படுவது செய்யும் பணியைப் பெரிதளவு பாதிக்கிறது. “எ·கைப் போன்ற வலிமை, மலரைப் போன்ற மென்மை” என்பதே நமது திருவாசகம் (Motto).

பயிற்சியில்லாது போயின் உடற் தகுதி முடங்கித் தணிகிறது. பேச்சு, பேச்சு, எந்த நேரமும் பேசிக் கொண்டிருப்பது உடலில் நோயை உண்டாக்கும் ! இது மெய்யென்று உணர்வாய் ! வினை புரிவது, ஓய்வெடுப்பது இரண்டும் மாறி மாறி மேற்கொள்ளும் போது மாபெரும் சாதனைகள் சாதிக்க முடிகிறது.

நமது இந்தியர் ஒரு பெருங் குறைபாட்டில் பாதிக்கப் படுகிறார். நம்மால் நிலையான ஒரு நிறுவனத்தை (Organization) நீடித்த காலம் அமைத்து வைக்க முடியாது ! காரணம், நாம் பிறருடன் நமது அதிகார ஆற்றலைப் பங்கிட்டுக் கொள்ள விரும்புவ தில்லை ! மேலும் நாமிந்த உலகை விட்டு நீங்கிய பின் என்ன நிகழுமென்று நாம் சிந்திப்ப தில்லை !

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

+++++++++++++++++++

உன்னத மனிதன்

(பெர்னார்ட் ஷா)
அங்கம் : 4 பாகம் : 9
(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.
2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.
3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – 25 வயது வாலிபன்.
4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)
5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி
6. ஹெக்டர் மலோன் (Hector Malone) – ஓர் அமெரிக்கன்
7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ¦†க்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்
8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்
9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.
10. வயலெட் ராபின்ஸன் (Violet Robinson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)
11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 4 பாகம் : 9)

(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: அக்டேவியஸ், மிஸிஸ் வொயிட்·பீல்டு, ஜான் டான்னர்.

காலம்: பகல் வேளை

இடம்: ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் தற்போது தங்குமிடம் தெற்கு மலைப் பகுதி : கிரனாடா, ஸ்பெயின்.. தங்கு மாளிகையின் பின்புறப் பூங்கா.

(காட்சி அமைப்பு: பூங்காவில் ஆன்னியின் அன்னை மிஸிஸ் வொயிட்·பீல்டும் ஜான் டான்னரும் ஆன்னியின் திருமணம் பற்றி உரையாடுகிறார்.)

ஜான் டான்னர்: என்ன ? புதிர் போடுவது போல் தெரியுது ! எனக்கொன்றும் விளங்க வில்லை ! ஆன்னியின் திருமணப் பேச்சு ஏன் இப்போது வந்தது ? உங்கள் விருப்பம் என்ன ? சொல்லுங்கள் ! உங்கள் விருப்பம் நிறைவேறும்.

(இருவரும் நாற்காலியில் உட்காருகிறார்கள்)

மிஸிஸ் வொயிட்·பீல்டு: நீ எல்லாம் என் சொற்படி நடக்கச் சித்தமாக உள்ளபோது, என்னருமைப் புதல்வி ஆன்னி மட்டும் நான் சொல்வதைச் செய்ய மாட்டாள் ! வாழ்க்கை சிக்கலானது ! அதிலும் ஒரு பெண்ணின் திருமணம் பிரச்சனைகள் நிரம்பியது ! மேல்நாடு, கீழ்நாடு என்று அதில் வேறுபாடு கிடையாது ! ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தைச் செய் என்பது ஆசியப் பழமொழி ! ஆசிய நாடுகளில் திருமணப் பெண் அடுத்த நாள் குடும்பத்தின் அடிமைப் பெண் ! ஐரோப்பிய நாடுகளில் திருமண ஆடவனே அதிகாரி ! ஒரு குதிரையில் இருவர் செல்ல வேண்டுமானால் ஒருவர் அவசியம் பின்னால் அமரத்தான் வேண்டும் ! யார் முன்னமர்ந்து குதிரை ஓட்டுவது என்பதுதான் இங்கே பிரச்சனை ! ஆனால் ஆசிய வீடுகளில் பெண் தானாவே பின்னே அமர்ந்து கொள்கிறாள் ! இங்கே யார் குதிரையில் முன்னமர்வது என்று போர் துவங்கி இருக்கிறது !

ஜான் டான்னர்: புதிர் சிறிது புரிகிறது ! அதாவது ஆன்னி குதிரை முன்னால் அமரப் போவதாய் விதிமுறை விடுக்கிறாளா ?

மிஸிஸ் வொயிட்·பீல்டு: சரியாகச் சொன்னாய் ஜான் ! ஆமாம் ஆன்னி முன்னேதான் குதிரையில் அமர்வதாக முந்திக் கொள்கிறாள்.

ஜான் டான்னர்: அதை முற்றிலும் வரவேற்கிறேன் மிஸிஸ் வொயிட்·பீல்டு ! அவள் ஜோன் ஆ·ப் ஆர்க் பரம்பரையில் உதித்தவள் ! குதிரை மீதமர்ந்து போரில் முன்வழி நடத்தி பிரெஞ்ச் படையினர் வெற்றி பெறச் செய்த ஜோன் வீராங்கனை போன்றவள் !

மிஸிஸ் வொயிட்·பீல்டு: ஜான் ! இங்குதான் பிரச்சனை ! குதிரையில் தான் முன்னுள்ள போது உன்னைப் பின்னால் அமரச் சொல்கிறாள் ஆன்னி !

ஜான் டான்னர்: நான் ஆன்னியைத் திருமணம் செய்து கொண்டால் தானே ! அது நடக்காது ! நடக்கவே நடக்காது ! நான் ஆன்னி ஏறும் குதிரையில் ஏறி அமர மாட்டேன் ! அப்படி ஏறினாலும் அவள் முன்னால்தால் அமர்வேன் !

மிஸிஸ் வொயிட்·பீல்டு: உனக்கு முன்னிடம் கொடுத்தால் அவளை நீ மணப்பாய் என்று சொல்கிறாயா ? நீ மணந்து கொண்டால், அவளுக்குப் பின்னால் நீ அமர்ந்து கொள்ள மாட்டாய் என்பதை அவள் நன்றாக அறிவாள் ! அவள் உன்னைத்தான் மணக்கப் போவதாக எல்லோரிடமும் முழக்கி வருகிறாள் ! (பரிவுடன்) மேலும் என் விருப்பமும் அதுதான் ஜான் !

ஜான் டான்னர்: மிஸிஸ் வொயிட்·பீல்டு ! இப்படி என்னை முடக்கிப் போட முயல வேண்டாம் ! ஆன்னியை நான் நேசிக்க வில்லை ! அவளை மனதார நேசிப்பவன் அக்டேவியஸ் !

மிஸிஸ் வொயிட்·பீல்டு: ஆன்னி அக்டேவியஸை நேசிக்க வில்லை ! அது உனக்குத் தெரியாது ! அவள் நேசிப்பது உன்னை ! உன்னை ! உன்னை ! அக்டேவியஸ் திருமணம் புரியும் வாலிபனில்லை ! அவன் ஒரு கற்பனைக் கவிஞன் ! கற்பனையில் வாழ்ந்து மடிபவன் !

ஜான் டான்னர்: அப்படி அழுத்திச் சொல்லாதீர் மேடம் ! அக்டேவியஸ் அல்லும் பகலும் ஆன்னியை இதயத்தில் பூஜிப்பவன் ! ஆன்னியும் அக்டேவியஸை நேசிப்பவள். அதை நான் நேராகக் கண்டிருக்கிறேன் ! பலமுறைப் பார்த்திருக்கிறேன் !

மிஸிஸ் வொயிட்·பீல்டு: நீ ஒரு முட்டாள் ! உனக்கு மாதரைப் பற்றிச் சரிவரத் தெரியாது என்பது பளிச்செனத் தெரிகிறது ! பெண்கள் பொய் பேசுபவர் ! ஆடவர் முன்பு நடிப்பவர் ! அந்த நடிப்பில் பொய் எது, மெய் எது என்பதை அறிவது கடினம் ! உன் முன்னால் ஆன்னி அக்டேவியஸை நேசிப்பது போல் நடிப்பது உன் ஆவலைக் கிளப்ப ! அவள் கண்கள் அக்டேவியஸை நோக்கினாலும் விழி ஓரத்தில் உன்னைத்தான் அளக்கின்றன ! உன்மேல்தான் அவளுக்குக் குறி ! நினைத்ததைச் சாதிப்பவள் ஆன்னி ! அவளிடமிருந்து யாரும் தப்ப முடியாது ஜான் ! உன்னை மடக்கி, மயக்கித் தன்வசப் படுத்துவாள் பார் !

ஜான் டான்னர்: மேடம் ! பயமாக இருக்கிறதே அவள் விளையாட்டு ! எப்படி தப்புவது என்று நான் சிந்திக்க வேண்டும் ! அவளை அறவே வெறுக்கச் செய்கிறது உங்கள் பேச்சு ! அவளை விட்டு ஓடிவிடு என்று எச்சரிக்கை விடுக்கிறது என் ஆத்மா !

மிஸிஸ் வொயிட்·பீல்டு: அவளுக்குப் பொருத்தமானன் நீதான் ஜான் ! அக்டேவியஸை விட நீதான் ஆன்னிக்கு ஏற்றவன் ! உனக்குகந்த ஜோடிப் புறா அவள்தான் ! அவளுக்கு இணையான ஆண்மகன் நீதான் ! உன்னையே நீ ஏன் ஒளித்து வைக்கிறாய் ?

ஜான் டான்னர்: அவள் சொல்வ தெல்லாம் உண்மை அல்ல ! அக்டேவியஸ் போல நான்அவளைத் தேவதையாகக் கருதவில்லை ! விரட்டிச் செல்லும் ஒரு சிறுத்தை என்று ஆன்னியைச் சொல்வேன் நான் !

மிஸிஸ் வொயிட்·பீல்டு: மகிழ்ச்சி அடைகிறேன் ஜான், ஆன்னியைத் தேவதையாகக் கருதாத ஓர் ஆண்மகனும் இருக்கிறான் என்று !

ஜான் டான்னர்: ஆன்னி ஓர் பொய்யனி ! அக்டேவியசுக்கு ஆசை மூட்டி மோசம் செய்தவள் ! ஆசை காட்டாது மோசம் செய்கிறாள் எனக்கு ! யார் மீது நாட்டம் என்று கேட்டால் என்னைச் சுட்டிக் காட்ட என்ன தைரியம் அவளுக்கு ? அவள் ஒரு பசப்பி ! அக்டேவியசைத் தூண்டிற் புழுவாக்கி என்னைப் பிடிக்கப் பார்க்கிறாள் ! பசப்புக்காரி ! அவள் ஒரு வன்முறை வனிதா (Bully Woman) ! தன் கவர்ச்சியால் மயக்கி ஆடவனைத் தன்வசப் படுத்த முனைகிறாள் ! அவளுக்குத் தொழில் அதுதான் ! ஆண்களைக் குழப்பி வைக்கும் அழகி ! ஆடவரை மூடராக்கும் அரக்கி !

மிஸிஸ் வொயிட்·பீல்டு: அவை மட்டுமல்ல ! என் மகள் ஒரு வஞ்சகி !

ஜான் டான்னர்: அப்படியானல் அந்த வஞ்சகியை நான் ஏன் மணந்து கொள்ள வேண்டும் ?

மிஸிஸ் வொயிட்·பீல்டு: ஆன்னி ஒரு காட்டுக் குதிரை ! அதை உன்னால்தான் அடக்க முடியும் ! பாவம் அக்டேவியஸ் ! அவன் ஒரு கவிஞன் ! பஞ்சு போன்ற அவன் பாறையுடன் வாழ முடியாது என்பது என் கருத்து ! நீயே ஆன்னிக்கு நிகரானவன் ! அதில் சிறிதும் சந்தேகமில்லை !

ஜான் டான்னர்: வெறுப்பது போல் வெளியே காட்டினாலும் உங்களுக்கு மகள் மீது தீராத பாசம் உள்ளது ! அவளை மணந்து நான் துன்புற வேண்டும் என்ற விருப்பமும் உங்களுக்கு நிரம்ப உள்ளது ! என்மேல் உங்களுக்கு ஏன் அப்படி ஒரு வேண்டா விருப்பு ?

மிஸிஸ் வொயிட்·பீல்டு: ஜான் ! ஆன்னியும் நீயும் ஆனந்தமாக வாழ்வீர் என்பது என் அசையாத எண்ணம் ! நீ துன்பப் பட்டால் அவள் எப்படி இன்பமாய் வாழ்வாள் ? நீதான் அவளை மணக்க வேண்டும் ! இன்பம் அடைபவன் நீ ! துன்பம் அடைபவள் அவள் !

ஜான் டான்னர்: (அழுத்தமாக) முடியாது ! முடியாது ! ஒருபோதும் நான் ஆன்னியை மணக்கப் போவதில்லை மேடம் !

மிஸிஸ் வொயிட்·பீல்டு: வேண்டுமானால் பார் ! நினைத்ததைச் சாதிப்பவள் என் மகள் ! நீ வெல்கிறாயா அல்லது ஆன்னி வெல்கிறாளா என்று பார்ப்போம் ! நீதான் அவளை ஜோன் ஆ·ப் ஆர்க் வீராங்கனை என்று பட்டம் அளித்திருக்கிறாய் ! அதை மறந்து விட்டாயா ?

(தொடரும்)

***************************
தகவல்

Based on The Play

“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)
2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)
3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy – A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973
4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)
5. Joyful Wisdom By : Friedrich Nietzsche (1971)
6. The Wisdom of India By : Emmons E. White (1968)
7. Friedrich Nietzsche – The Story of Philosophy By: Will Durant (1959)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (September 16, 2008)]

Series Navigation