விஸ்வரூபம் – அத்தியாயம் எட்டு

This entry is part of 28 in the series 20080918_Issue

இரா.முருகன்


விஸ்வரூபம் – அத்தியாயம்

மங்கலாபுரத்திலிருந்து திரும்பி வந்ததுமே வேதையன் காய்ச்சலில் விழுந்துவிட்டான். அஷ்ட வைத்யன் எடத்வா கேசவன் மூஸ் மூலிகைப் பெட்டியோடு வந்து நாடி பிடித்துப் பார்த்துவிட்டு விஷக் காய்ச்சல் என்று திடமாக அறிவித்தார். ராவிலே நாலும் ராத்திரியிலே நாலும் வீதம் எட்டு குளிகை தேனில் குழைத்து நாக்கில் பரத்தி விழுங்க, தொட்டடுத்தாற்போல், தசமூலாரிஷ்டம். சியவனப்ராசம். இளஞ்சூடாகத் தேய்த்து உள்ளங்காலில் புரட்டி நாலு மணி நேரம் கழித்து மிதமாகத் திளைப்பித்த நீரால் கழுவித் துடைக்க ஒரு மூலிகைத் தைலம். இப்படி ஒரு மரப்பெட்டி நிறைய மருந்து நிரப்பி விட்டுக் கிளம்பி விட்டார்.

கிளம்பும்போது நினைவு வந்தவராக வாசல் திண்ணையில் ஒரு நொடி நின்றார்.

ஜான் கிட்டாவய்யரே, உம் புத்ரன் இந்த மருந்தும் மற்றதும் கழிக்கிறபோது வீட்டுப் பெண்பிள்ளையோடு தேக சம்பந்தம் இல்லாமல் இருக்கறதும் அவசியம்.

அவள் பிரசவத்துக்கு தாய்வீடு வைக்கம் போயிருக்காள், மூஸே.

அதுவும் சரிதான். ராத்திரி ரொம்ப நேரம் வைகிவிடாமல் குளிகை கொடுக்கணும். தேன் இருக்கா இல்லே அனுப்பி வைக்கட்டா? போன ஆழ்ச்சை தான் மலைப் பளிங்கன் பாட்டத்து மூலையில் நின்னு கூப்பாடு போட்டு வச்சுப் போனான். அரைப் படி நெல்லும் நாலு சிரட்டை வெளிச்செண்ணெயும் கொடுத்து வாங்கினது.

அது எதுக்கு ஸ்வாமி? இவிடத்திலேயும் அதுக்கெல்லாம் குறைச்சல் இல்லியே.

கிட்டாவய்யன் வீட்டு உள்ளறையில் ஒரு சீன பரணி முழுக்க தேன் வாங்கி நிரப்பி நாலு வருடம் ஆகிறது. அதை இத்தனை நாள் உபயோகப்படுத்த வாய்ப்பு இல்லாமல் இப்போது தான் பரணியின் வாயைக் கட்டிய மெழுகு சீலைத் துணியைத் திறக்க வேண்டி வந்திருக்கிறது. ஒரு துள்ளி, ரெண்டு துள்ளி எடுக்க வேண்டிய இடத்தில் தாராளமாகவே பஞ்ச பாத்திரத்தில் ஒழித்து வைக்கிறான் கிட்டாவய்யன். வேதையனுக்குக் குளிகை அரைத்துக் குழைத்தது போக மீந்ததை கிரமமாகக் குடிக்க, தலை கொள்ளாத உற்சாகம் வயசுக்குப் பொருந்தாமல் எட்டிப் பார்க்கிறது. அதுவும் பிள்ளை காய்ச்சலில் படுத்துக் கிடக்கும்போது.

அப்பன், நேரம் என்ன இருக்கும் இப்போ?

உள்ளே இருந்து வேதையன் கூப்பிட்டான். அவனுக்கு முழு ரோகமும் இல்லாமல் முழு சுவஸ்தமும் ஏற்படாமல் சள்ளைக்கடுப்பாக புரள வேண்டிய அவஸ்தை குரலில் தெரிகிறது. எப்பாடு பட்டாவது தூங்கக் கூடாது என்பதில் சிரத்தையாக இருக்கிறது போல், பகல் நேரம் முழுக்க கிட்டாவய்யனிடம் ஏதாவது பேச்சுக் கொடுத்தபடி இருக்கிறான்.

நேரம் உச்சை கழிந்து ஒரு மணிக்கூராவது ஆகியிருக்குமடா. நீ புனர்பாகமாக வடித்த அன்னம் கொஞ்சம் போல் கழிக்கிறியா? கோழி முட்டை போல் திடமான பெலத்தைத் தரும் வஸ்து வேணுமென்றாலும் ஆக்கித்தர காளன் வந்து பரம்பிலே காத்திருக்கான். தாரா முட்டையும் கொண்டு வரச் சொல்லியிருக்கேன்.

கிட்டாவய்யன் வாசலிலிருந்து உள்ளே நடந்தபடி பதில் சொன்னான். மழை கொஞ்சம் தணிந்து வெய்யில் இன்னொரு தடவை மிதமாக அடிக்க ஆரம்பித்திருந்தது. நனைந்த சிறகை உலர்த்திக் கொண்டு முற்றத்து பலாவின் கொம்பில் கூவிக் கொண்டிருந்த பலிக்காக்கையை கையை உயர்த்தி அசைத்து விரட்டினான் கிட்டாவய்யன். இதென்னத்துக்கு அச்சானியமாக இங்கே?

ஏனோ இந்தக் கொல்ல வருஷம் முழுக்க காலாவஸ்தை கூறுமாறி வந்து கொண்டிருக்கிறது. மீன மாதத்தில் சுக்கு மாதிரி சகல மண்ணையும் பொடிபொடிக்க உலர்த்திவிட்டு மாசக் கடைசியில் காலம் தவறிக் கொட்டு கொட்டென்று மழை கொட்ட ஆரம்பித்தது. மேடம் நாலு தேதி ஆகியும் அதென்னமோ ஓயவில்லை. கர்க்கடகத்துக்கும் சேர்த்து இப்போதே பெய்கிற ஆவேசத்தோடு இடி நாதமும் மின்னல் வெட்டுமாக மழை தொடர்ந்தபடி இருந்தது.

அப்பன், மழையில் நனையாமல் இருந்தால் படுத்துக் கிடக்க வேண்டியிருக்காதோ.

வேதையன் படுத்தபடிக்கே குழந்தை போல் சந்தேகத்தைக் கிளப்பினான். கலாசாலையில் உபாத்தியாயன். கோடை முழுக்க அடைத்துப் பூட்டி இப்போது திறக்க ஆயத்தமாக இருக்கிற நேரத்தில் இப்படி உடம்பைப் படுத்துவானேன்?

சகல வர்ணத்துப் பிள்ளைகளும் படிக்கிற பள்ளிக்கூடம். கொட்டாரத்து இளைய தம்புரான் சேர்ந்தபோது மட்டும் தீட்டுக் கற்பித்து ஈழவப் பிள்ளைகளை உள்ளே வரவிடாமல் விரட்டி அடித்தார்கள். வேதையனுக்கு அது வருத்தம்தான். ஆனால் அவன் சொல்லி எது நடக்காமல் போகிறது? எது நடக்கிறது?

மழையில் குளிரக் குளிர நனைந்தாலும், சீலைக்குடை பிடித்து தேகத்தில் ஜலம் படாமல் போனாலும் ரோகம் வரணும் என்று கர்த்தர் விதித்தால் வராமல் போகுமோடா? மங்கலாபுரம் நீ போன நேரம் சரியில்லை. சகுனம் பார்க்காமல் கிளம்பிவிட்டிருப்பாய். கைம்பெண்ணோ பூனைக்குட்டியோ பாதிரி வீட்டு சேவகனோ குறுக்கே கடந்து போனானோ என்னமோ. அந்த இழவெடுத்த பள்ளியில் அச்சன் கறுத்த கத்தனாராகக் கூட இருக்கலாமடா மோனே.

கிட்டாவய்யன் சந்தேகத்தைக் கிளப்பியபடி வேதையன் பக்கத்தில் உட்கார்ந்தான். அவனுக்கு கிறிஸ்து நாதரைப் பிடிக்கும். உள்ளூர் கோவிலில் பூசை வைக்கும் கறுத்துத் தடித்த பாதிரியைத்தான் பிடிக்காது. கப்பலில் வந்த காப்பிரி அவன்.

புதைப்பை முழுக்க இழுத்து விடட்டுமா? குளிரும் ஈரமும் ரோகத்தை விருத்தியாக்குமே தவிர குறைக்காது. நல்லபடி நாலெழுத்து படித்தவன். உனக்கு நான் சொல்ல வேணுமா என்ன?

வேதையன் பதில் சொல்லாமல் உத்திரத்தை வெறித்துக் கொண்டிருந்தான். நாலெழுத்து தெரிந்து என்ன பிரயோஜனம்? போன ஆழ்ச்சை நடந்தது என்ன என்றே இன்னும் புத்தியில் தெளிவு வராமல் மயக்கமாக இல்லையா இருக்கிறது? வந்ததும் காய்ச்சலில் விழுந்ததற்கு மழையும் தணுப்பும் ஈரமும் இல்லை காரணம். அந்த மங்கலாபுரம் பிரயாணம் தானே? துளுவன் ஒருத்தன் கூடவே வந்தானே? அவன் எங்கே? ஸ்தாலிச் செம்பு தரையில் உருள நக்ர்ந்த வண்டி யாருடையது?

வௌவால் சிறகடிப்பது போல் வேதையன் கண்ணில் பயம் ஒரு வினாடி கவிந்து முகத்தை வெளிற வைத்து விலகியது. யோசித்தபடி தனியாக, அப்பனிடம் இதுவும் அதுவும் கேட்டு வர்த்தமானம் சொல்லாமல் இருந்தால் அவன் தூங்கி விடுவான். தூங்கினால் நேரம் கெட்ட நேரத்தில் சொப்பனம் வருகிறது. அதிலும் இருட்டில் நகரும் காளை வண்டி. ரட்சிக்கணும் தெய்வமே. வேதையா, ஓடி வா. ரட்சிக்கணும்.

குடுமி வைத்த பிராமணப் பிள்ளை சொல்கிறான். கூடவே வண்டிக்குள் இருந்து எட்டிப் பார்த்து ஒரு இளைய வயது ஸ்திரி கூப்பாடு போடுகிறாள்.

மூத்தாரே, தயவு செஞ்சு எங்களைக் காப்பாத்தும். புண்ணியமாப் போகும். புடவையை வழிச்சுண்டு எவளோ குதிக்கறதை எல்லாம் பாக்கணுமா என்ன? உசிரு போயிண்டு இருக்கு இங்கே. வாரும் தயவு செய்து.

வேதையனுக்கு மங்கலாபுரத்தில் ஆரம்பித்த அவஸ்தை அது.

படகும் காளை வண்டியுமாக காசர்கோடும், அங்கே இருந்து மங்கலாபுரம் வரும் வரைக்கும் யாத்திரை எந்த தடசமும் இன்றி சுகமாகக் கடந்து போனது.

மங்கலாபுரத்தில் வேதையன் போய்ச் சேர்ந்தபோது பொலபொலவென்று விடிந்திருந்தது. அந்த விடிகாலை நேரத்திலும் காளை வண்டிகளும் குதிரை பூட்டிய சாரட்டுகளும் ஒன்றிரண்டாக அங்கேயிங்கே ஊர்ந்து கொண்டிந்தன.

சுவாமி தரிசனத்துக்கு வந்திருக்கிறீரோ அண்ணா?

துளு தேசத்தான் ஒருத்தன் ஊத்தைப் பல் தெரிய இளித்தபடி கேட்டான். முதுகை சரிபாதியாக அறுத்துக் கூறு போடுகிறது போல தோளில் மாட்டியிருந்த பூணூலை மேலும் கீழுமாக இழுத்துக் கரகரவென்று சொறிந்தபடி இருந்தான் அவன்.

இதென்னய்யா வீட்டில் அசுப காரியம் ஏதாவது நடக்கிற நேரமா?

வேதையன் அவன் பூணூலைக் காட்டி உள்ளபடிக்கே அக்கறையோடு விசாரித்தான். மாரின் குறுக்கே இடவலமாக இல்லாமல் மாற்றிப் போட்டிருந்தான் அந்த மாத்வன்.

அதெல்லாம் ஒண்ணும் இல்லை. முதுகின் வலப் பக்கமாக உசிர் போகிற மாதிரி கிரந்தி கிளம்பி பத்து திவசமாக ரண வேதனை. அது கிடக்கட்டும் அண்ணா, குளியும், காயத்ரியும் கழிந்து நாலு இட்டலியை விண்டுபோட்டுக் கொண்டு மங்கலாதேவி கோவிலுக்குப் போக வசதியாக ஜாகை ஏற்பாடு செய்து தரட்டுமா? பித்ரு தர்ப்பணம் செய்யணும் என்றாலும் சடுதியில் ஏற்பாடு செய்து விடலாம்.

வேதையன் அவனை ஏற இறங்கப் பார்த்தான். வருகிறவன் போகிறவன் தலை சாய்க்க, இட்லி தின்ன, எள் வாங்கித்தர, கூடவே மூட்டையைத் தலையில் சுமந்து கொண்டு ஓடிவர, கூப்பிட்ட குரலுக்கு அதையும் இதையும் செய்துதர என்று ஒரு வேலை. ரெண்டு காசு அதற்குக் கூலியாகத் தந்தால் போதும். விடுதி வைத்திருக்கிறவனும் ஒண்ணும் ரெண்டுமாய் சல்லி விட்டெறிய எல்லாவற்றையும் பொறுக்கி இடுப்பு சஞ்சியில் முடிந்தபடி இவன் ஜீவிதம் மேற்கொண்டு நடக்கும்.

துளு பிராமணர்கள் வேதம் படித்து பரசுராம பூமி முழுக்க மேல்சாந்தியாகவும், தந்திரியாகவும் அம்பலம் ஒன்று விடாமல் போய்க் கேரி சுகமாக இருக்க, இவன் என்ன காரணம் கொண்டு இப்படி ஒரு ஜீவனோபாயத்தைத் தேர்ந்தெடுத்தான்?

அந்த மாத்வ பிராமணன் இன்னும் நெருக்கமாக வந்தான். வாயில் இருந்து புகையிலைக் கட்டையும் தந்தசுத்தி செய்யாத அசுத்த மூச்சுமாக வாடை குடலைப் பிரட்டியது.

ராத்திரி ரதி மாதிரி ஸ்திரி வேணுமென்றாலும் ஏற்பாடு செய்யலாம் அண்ணா.

போடா பட்டி, அந்தாண்டை.

அவனை நெட்டித் தள்ளிவிட்டு வேதையன் தோள் சஞ்சியோடும் மடியில் கட்டிய தோல் சஞ்சியோடும் நடந்து படி ஏறின இடம் விசாலமான ஒரு விடுதியாக இருந்தது.

ஒரு பகலும் ராத்திரியும் தங்கியிருந்து போஜனம் கழித்து உறங்கி காலையில் விழித்து மேலே யாத்திரை செய்யலாம். எட்டணா மாத்திரம் கொடுத்தால் போதும்.

விடுதிக்காரன் சொன்னான். கிணற்றடியில் நாலைந்து பேர் கௌபீனத்தோடு தைலம் புரட்டி இரும்பு வாளியில் தண்ணீர் சேந்தித் தலையில் கவிழ்த்துக் கொண்டிருந்தார்கள்.

வேதையன் மடியில் இறுக்கிக் கட்டியிருந்த தோல் சஞ்சியில் இருந்து ஏழெட்டு சக்கரம் பணத்தை எடுத்தான்.

திருமேனி க்ஷமிக்க வேணும். திருவிதாங்கூர் காசு பணம் இவிடத்தே வாங்குகிற வழக்கமில்லை. இது துரைத்தனத்து பூமியாச்சுதே. மகாராணி தலைபோட்ட காசு தேவை. தெருக்கோடியில் சுப்பன் செட்டி லேவாதேவி கடையில் பத்மனாப சுவாமி சக்கரத்துக்கு ராணி தலை பவுன் காசு கிட்டும். கம்மியாகவே மாற்றுக் கூலி எடுத்துப்பான் செட்டி. நான் வேணுமானால் சீட்டெழுதித் தரேன். தயவு செய்து ஒடு நடை அங்கே போய் மாற்றி வந்து விடுமே. இங்கே என்றில்லாமல் கொல்லூர், உடுப்பி, போலூர் என்று நீர் போகும் இடத்திலெல்லாம் உள்ளூர் பணம் வெகுவாக பிரயோஜனப்படும்.

விடுதிக்காரன் நீளமாகச் சொல்லி முடிப்பதற்குள் வேதையன் சஞ்சியின் இன்னொரு பக்கத்து முடிச்சைத் திறந்து அதிலிருந்து துரைத்தனத்துக் காசை எடுத்து நீட்டினான்.

தயாராக வந்திருக்கிறீரே. பல தேசம் கிறங்கித் திரிஞ்சவரா இருக்கும். சரியோ?

ஓய் நான் அனந்தையிலே கலாசாலை உபாத்தியாயன். இந்த அல்ப விஷயம் கூடத் தெரியாமல் தூர தேசத்துக்கும் அண்டை தேசத்துக்கும் பரஸ்தானம் வச்சு பயணம் கிளம்பினால் நாசமாகப் போவேன் போம்.

வேதையன் பெரிதாகச் சிரித்தபடி குப்பாயத்தை அவிழ்த்து சுவரில் முளையடித்திருந்த இரும்பு ஆணியில் தொடுக்கினாற்போல் மாட்டினான். சஞ்சியை விடுதிக் காரனிடம் ஒப்படைத்து காசு எண்ணிப் பதிந்து காகிதச் சீட்டு வாங்கிக் கொண்டான். இனி காசையும் சஞ்சியையும் பாதுகாப்பாக வைத்திருப்பது அவன் பொறுப்பு.

உபாத்தியாயரே, எல்லாம் சரிதான். பிரயாணம் கிளம்புகிற அவசரத்தில் பூணூல் தரித்துக் கொள்ளாமல் வந்துவிட்டீர் போலிருக்கே. ஏற்பாடு செய்து தரட்டா?

விடுதிக்காரன் விசாரித்தான். வேதையனுக்கு துளு பிராமணன் உடனடியாக ஞாபகம் வந்தான். அவன் வேறே பலதும் ஏற்பாடு செய்து கொடுத்திருப்பான்.

பூணூல் எல்லாம் போடுகிற வழக்கம் இல்லை ஐயா. வேதத்தில் ஏறின பிராமணனுக்கு என்னத்துக்குங்காணும் நூலும் மற்றதும்?

விடுதிக்காரன் கொடுத்த ஈரிழைத் துண்டை இடுப்பில் தரித்துக் கொண்டு, ரெட்டை முண்டு நெகிழ்ந்து விழ அவிழ்த்தபடி வேதையன் குளிக்கக் கிளம்பினான்.

அப்படியா சங்கதி? நல்லதாப் போச்சு. குளி கழிஞ்சு வாரும். நூதனமாக இங்கே எழும்பிக் கொண்டிருக்கிற சர்வேஸ்வரி மாதா கோவிலுக்கு உம்மைக் கூட்டிப் போய் விநோதம் எல்லாம் காட்டித்தர ஏற்பாடு செய்து தருகிறேன்.

விடுதிக்காரன் சிநேகிதமாகச் சொன்னான். வேதையன் வேதக்காரன் என்பதில் அவனுக்கு என்ன சந்தோஷமோ தெரியவில்லை. சஞ்சியில் காசைப் பார்த்த சந்தோஷமாக இருக்கும் அது.

அண்ணா, வாளி இங்கே இருக்கு. தலையில் புரட்ட மூலிகைத் தைலமும் உண்டு.

கிணற்றங்கரையில் உச்ச ஸ்தாயியில் குரல். இழவெடுத்த துளுவன் தான்.

எடோ உன்னை அப்போதே ஒழிஞ்சு போகச் சொன்னேனே. இன்னும் என்னத்துக்காக என் காலைச் சுற்றின சனியனாகக் கூடவே வருகிறே? எனக்குக் கள்ளும் வேணாம். பெண்குட்டி சிநேகிதமும் வேணாம். இம்சைப்படுத்தாமல் போறியா இப்போ? இல்லே சவட்டிப் படி எறக்கட்டுமா?

அவன் இரைந்தபோது வாளியோடு நின்றவன் மரியாதையாகச் சிரித்தான். ஊத்தைப் பல்லன் இல்லை. வேறு துளுவன் இவன். குளித்துக் கொண்டிருந்தவர்கள் ஈரம் சொட்டச் சொட்ட அர்த்த நக்னராக இந்த சம்பாஷணையை சுவாரசியமாகக் கவனித்துக் கொண்டிருந்ததை வேதையன் ஓரக் கண்ணால் பார்த்தான்.

அவமானம் பிடுங்கித் தின்றது. நாக்கிலே சாத்தான் உட்கார்ந்து ஆக்ஞாபித்து வரவழைத்துக் கொடுத்த அவமானம் அது.

மன்னிக்க வேணுமய்யா. நான் வேறே யாரோவென்று.

அவன் முடிக்கும் முன்னால் கடைகாலில் கயிற்றுப் பிரியை இறுக்க முடிச்சு போட்டு துளு பிராமணன் கிணற்றின் கைப்பிடிச் சுவர் மேல் வைத்தான்.

சித்தே அந்த கிணற்றடிக் கல்லில் உட்காரும்.

அவன் இளஞ்சூடாக தைலத்தை உள்ளங்கையில் வார்த்து, வேதையன் தலையில் பரபரவென்று புரட்டினான். முதுகிலும் முகத்திலும் கையிலும் கையை உயர்த்தச் சொல்லி அக்குளிலும் சீராக தைலம் புரட்டி விட்டான். பிரயாண க்ஷீணம் எல்லாம் காணாமல் போன சுகம் வேதையனுக்கு.

அப்புறம் வாளி வாளியாக இரைத்து வேதையன் தலையில் கவிழ்த்தான் துளுவன்.

போதும், போதும் நானே இரைத்துக் குளித்து முடிக்கிறேன்.

வேதையன் சொன்னதை லட்சியமே செய்யாமல் அவன் கருமமே கண்ணாக தண்ணீர் சேந்தினான். விடுதிக்காரன் ஒரு தட்டில் அரப்பும், வாசனாதிப் பொடியும் மற்றதில் வேப்பங்குச்சியுமாக வந்து உபசாரமாக நீட்டினான்.

துளு பிராமணனை நிறுத்தச் சொல்லிக் கைகாட்டி விட்டு வேதையன் பல் துலக்க ஆரம்பித்தான். பிராமணன் அவன் விழுத்து போட்டிருந்த இடுப்பு வஸ்திரத்தை நீலம் முக்கிய இன்னொரு வாளித் தண்ணீரில் அலக்கி தபதபவென்று கிணற்றடிக் கல்லில் அடித்துத் துவைக்கத் தொடங்கினான். குளிக்கத் தண்ணீர் சேந்திய இரும்பு வாளி நிறைந்து துளும்பும் நீரோடு கிணற்றடியில் காத்திருந்தது.

பல் துலக்கியபடி வேதையன் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தான். ஆழத்தில் அவன் நிழல் அசைந்தது. கூடவே அபசகுனம் போல் ஒரு வௌவால் பறக்க ஆரம்பித்தது.

குழந்தே. சீக்கிரம் தந்தசுத்தி செய்து ஆகாரம் முடிச்சு கிளம்பு. கிரமப்படி எல்லாம் நடக்கட்டும். விரசா நடக்கட்டும் அதெல்லாம். நீதான் பகவதி. நீதான் கிறிஸ்து பகவான். எல்லோரையும் தெய்வம் உன் மூலம்தான் ரட்சிக்கணும் குழந்தே. அரப்புத் தூள் கண்ணுலே படாமல் தேய்ச்ச்சுக் குளிச்சுட்டுக் கிளம்பு. வௌவால் எல்லாம் பிரமை. அதைப் பார்த்து ஒண்ணும் பயப்படாதே, கேட்டியா.

மனதுக்கு இதமாக ஒரு குரல் அந்தக் கிணற்றுக்குள் இருந்து வந்தமாதிரி இருந்தது. இதுவரை கேட்டிருக்காத குரல் அது. அம்மா வயதில் அவளுக்கும் மூத்தவளாக ஒரு அன்பான தள்ளை தலையை ஆதரவாக வருடிப் பேசுகிறது போல் இதமாக மனதை வருடும் குரல் அது. கூடவே அவசரமும் தெரிந்தது.

உட்காருங்கோ சுவாமி. நானே முதுகு தேச்சு விடறேன். கண்ணை மூடிக்குங்கோ. அரப்புத் தூள் விழுந்தா பரபரன்னு எரியும்.

உடம்பு முழுக்க அரப்புப் பொடியையும் வாசனைப் பொடியையும் உருவித் தேய்ந்துவிட்டு துளுவன் இன்னொரு வாளி தண்ணீரை வேதையன் தலையில் கவிழ்த்தான்.

(தொடரும்)

Series Navigation