விஸ்வரூபம் – அத்தியாயம் ஏழு

This entry is part of 34 in the series 20080911_Issue

இரா.முருகன்இருட்டில் ஊர்ந்து வந்த காளை வண்டி நடேசன் மணல் குவித்துச் சாய்ந்து கிடந்த இடத்துக்கு பத்தடி முன்னால் நின்றது. ஓட்டி வந்தவன் குதித்து இறங்கினான். அழுது வீர்த்த முகத்தோடு கூடிய பூஞ்சையான உடல்வாகு படைத்தவன். கண்ணில் மிரட்சியும் பிராண பயமும் தெரிய அவன் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன.

வண்டி மாடுகள் அப்படியும் இப்படியும் திமிறி நுகத்தை விட்டு வெளியே ஓட முயற்சி செய்ய, வண்டிக்கு உள்ளே இருந்து ஒரு பெண் கயிற்றைக் கையால் இறுக்க வலித்து இழுத்து, தெய்வத்தை உரத்த குரலில் விளித்து அலறினாள்.

ஸ்வாமி, ஸ்வாமி என்னைக் காப்பாற்றும்.

அந்த மனிதன் நடேசனின் காலில் தடாலென்று விழுந்து பாதத்தைப் பற்றிக் கொண்டான். நடுநடுங்கிப் போய் நடேசன் எழுந்து நின்றார். பின்னால் சாய்மான இருக்கையில் இருந்து டாக்கி பார்க்கிறவர்கள் எந்த நிமிடமும் கத்திக் கூப்பாடு போட்டு அவரை உட்காரச் சொல்வார்கள் என்று நினைப்பு அழுத்தமாக வந்தது. ஆனால் அப்படி யாரும் எதுவும் செய்யவில்லை. ஏதேதோ வாத்தியங்கள் தாறுமாறாக ஒலித்துக் கொண்டிருக்க, முன்னால் நிற்கிறவன் குரல் தீனமாக ஒலித்தது. பேசி முடித்ததும் அவன் ராகம் இழுத்துப் பாடுவான் என்று நடேசனுக்கு ஏனோ தோன்றியது.

பிராமணரே, நில்லும். நீர் யாரையா? என்னை டாக்கி பார்க்க முடியாமல் உபத்திரவம் செய்து கொண்டு முன்னால் வந்து நிற்கிறீர். கொட்டகைக்குள் காளை வண்டியை எல்லாம் என்னத்துக்கு ஓட்டிக் கொண்டு வந்திருக்க வேணும்? செட்டியார் பார்த்தால் உங்கள் மேல் கோபப்படுவார் என்று உமக்குத் தெரியாதா?

இது நடேசன் பேசுகிறதில்லை. அவருக்கு தமிழ் இப்படி இலக்கண சுத்தமாக பேச வராது. யாரோ எழுதி எடுத்து வந்து அவர் வாயில் வார்த்தையைத் திணித்துப் பேச வைக்கிறார்கள். அவர் பேசும் போதும் வாத்திய சங்கீதம் பின்னால் சன்னமாக ஒலித்தபடியே இருக்கிறது.

ஸ்வாமி, நான் உம் காலத்து மனுஷ்யனில்லை. கொல்லம் ஆயிரத்து எழுபத்து நாலாம் வருஷம் விஷுவுக்கு மங்கலாபுரம் யாத்திரை புறப்பட்டவன். இன்னும் அங்கே போய்ச் சேரவில்லை. பசியும் தாகமுமாய் கூறு மாறிப்போய் வேறு ஏதோ லோகத்தில் குடும்பத்தோடு அலைந்து திரிந்து கொண்டிருக்கேன். அம்மா வேறே குடத்தோடு காணாமல் போய்விட்டாள். பசிக்கிறது. தாகம் தொண்டை வரண்டு கிடக்கிறது. ஸ்வாமி, தயவு செய்து கிருபை செய்யுங்கள். மங்கலாபுரம் வேணாம். காசர்கோடுக்கே நான் திரும்ப வழி சொல்லுங்கள் புண்ணியமாகப் போகும்.

இவன் அம்பலப்புழை தேகண்ட பிராமணன் தான். நடேசனுக்கு மனதில் பட்டது. நாற்பது வருடம் முன்னால் பூர்வீக சொத்தைப் பாகப் பிரிவினை செய்ய தஸ்தாவேஜு எழுதி எடுத்துக் கொண்டு வந்தவன். குப்புசாமி அய்யன் மகன் மகாதேவ அய்யன். வேதத்தில் ஏறிய பந்துவான ஒரு கிறிஸ்தியானி அய்யனுக்கு எழுதிக் கொடுத்த டோக்குமெண்ட் இல்லையா அது?

மகாதேவ ஐயரே, நாளை உச்சி வேளைக்கு நீர் எழுதிக் கொடுத்த பத்திரத்தை படியெடுத்துக் கொடுத்து விடுகிறேன். இப்போது சமாதானமாகப் போய்வாரும். நான் டாக்கி பார்க்கிற நேரம் இது. ராத்திரியில் தொழில் பார்க்கிறவனில்லை நான்.

உமக்கு சகலமும் தெரிந்திருக்கிறதே. நான் சரியான இடத்துக்குத் தான் வந்திருக்கிறேன். கொஞ்சம் தயவு செய்து என்னை ரட்சியும்.

நடேசன் முடிப்பதற்கு முன் திரும்ப கை குவித்து சேவித்தான் வந்தவன்.

எனக்கு ஏதோ கொஞ்சம்போல் தான் தெரியும் சுவாமிகளே. நீர் அந்தப் பத்திரத்தை கையொப்பு போட்டு உம் உறவுக்காரனான வேதக்கார அய்யருக்குக் கொடுத்தீர்கள் இல்லையா?

யாரோ குரலில் புகுந்து நடேசனை இயக்குகிற மாதிரி அவர் தெளிவாக, சத்தம் கூட்டி, அதிகமான உணர்ச்சிகளைக் குரலில் காட்டிக் கொண்டு கேட்டார்.

அது நடந்திருந்தால் நான் இன்னேரம் மங்கலாபுரம் போய்ச் சேர்ந்து கொல்லூரிலும் தரிசனம் கழிந்து காசர்கோடு திரும்பப் போயிருப்பேன். புத்திர பாக்கியம் கிடைத்திருக்கும். இந்தப் பெண் குழந்தையை வளர்த்து கன்யகாதானம் செய்து கொடுத்துவிட்டு, வயோதிகனாகி உயிரையும் விட்டிருப்பேன். என் சகதர்மிணியும் அதேபடி எனக்கு முன்னாலோ அப்புறமோ போய்ச் சேர்ந்து புத்திரன் இறைக்கிற எள்ளுக்கும் தண்ணீருக்கும் உருட்டி விடும் பிண்டச் சோற்றுக்கும் என்னோடு கூட இறங்கிக் கொண்டிருப்பாள். வேதையனும், சரி விடும். பழங்கதை என்னத்துக்கு பிரயோஜனம்? பசிக்கு அது சோறு போடுமா?

பிராமணன் அலுத்தபடி சொல்லிக் கொண்டு மேல் துண்டால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டான். நடுராத்திரிக்குக் கொஞ்சமும் பொருந்தாமல் உச்சிவெய்யில் சூரியன் வெட்டவெளி முழுக்க சுட்டு எரித்தது.

நடேசன் புரியாமல் பார்த்தார். ஏகாம்பர ஐயருக்காக அவர் காப்பி எடுத்துக் கொடுக்கும் டோக்குமெண்ட் பின்னே சட்டப்படி சரியில்லாத ஒன்றா? அதை வைத்து ஓட்டல்கார ஐயர் ஏதாவது வழக்கு வம்பு பிராது என்று போய், போலி தஸ்தாவேஜு என்று நிரூபணமான பட்சத்தில் அவரோடு கூட நடேசனையும் இல்லையா கொச்சி ஜெயிலில் அடைப்பார்கள்? மாகாண காங்கிரஸ் காரர்களும் மூட்டைப் பூச்சிகளும் பிடித்துக் கொண்டது போக மீதி இடத்தில் அங்கே நிற்கத்தான் முடியுமா? கிடப்பதைப் பற்றி யோசிக்கவே வேண்டாம்.

அந்தப் பத்திரம் நிஜம்தான் ஸ்வாமிகளே. அதையும் எடுத்துக் கொண்டுதான் குடும்பத்தோடு கொல்லூர் புறப்பட்டது. என் சிற்றப்பன் ஜான் கிட்டாவய்யர் மகன் வேதையன் கைச்சாத்து போட்டு அதை வாங்கிக் கொண்டு க்ஷேமலாபம் விசாரித்துவிட்டுப் போக உத்தேசித்துத்தான் கிளம்பினான். ஆனால் அவன் மங்கலாபுரம் வருவதற்குள் நான் காணாமல் போய்விட்டேன்.

மகாதேவ அய்யன் நடேசன் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னான். நடேசனிடம் சகலமான தகவலையும் சொல்லி சகாயம் தேடிக் கொள்வதில் மும்முரமாக இருந்தான் அவன். அதெல்லாம் புரிந்தாலும் புரியாவிட்டாலும் சரி. நடேசன் ஒரு வேளை சோறு, ஒரு குடம் நிறைய குடிக்க நீர் இது மட்டும் கொடுத்தாலே போதும். மகாதேவய்யன் ஆயுசுக்கும் நன்றி மறக்க மாட்டான். இன்னும் எத்தனை காலம் இப்படி அலைய வேண்டிய ஆயுசோ அது?

இது எந்த ஊர்? நேரம் இப்போது என்ன ஆச்சு? பசிக்கிறதே. தாகம் உசிர் போகிறதே. ஒரு சிராங்காய் வெள்ளம் கொடுக்க இங்கே யாருமே இல்லையா?

வண்டிக்குள் இருந்து எட்டிப் பார்த்து அந்த ஸ்திரி பிரலாபித்தாள். நடேசனுக்குப் பின்னால் யாரோ விசித்து விசித்து அழும் சத்தம்.

டாக்கி பார்க்க காசு கொடுத்திட்டு கரையவும் வேறே செய்யணுமா? கண்ணைத் தொடச்சுக்கோ. காமெடியன் வரப் போறான் பாரு இப்போ.

யாரோ யாருக்கோ நம்பிக்கை சொல்லிக் கொண்டிருக்க, நடேசன் முன்னால் நின்ற பிராமணன் திரும்ப ஒருதடவை அவரை சோறு கொடுக்கச் சொல்லி யாசித்தான். நைந்து போன முண்டும் முகம் முழுக்க அடர்ந்து படர்ந்த தாடி மீசையும் அவனுடைய பராரி கோலத்தை அழுத்தக் கோடு போட்டுக் காட்டியது.

சும்மா பேசிக் கொண்டே நின்றால் பொழுது நீண்டு கொண்டுதான் போகும் என்று நடேசனுக்குப் பட்டது. கடைத் தெருவில் ஏகாம்பர ஐயர் சாப்பாட்டுக் கடைக்கு இந்த பட்டனையும் அவன் குடும்பத்தையும் கூட்டிப் போகலாம். பட்டாபி கடைக்கு உள்ளே தான் படுத்துக் கிடப்பான். எழுப்பி விஷயத்தைச் சொன்னால் மனசு இரங்க மாட்டானா என்ன? சம்பா கோதுமையை சூடு வெள்ளத்தில் பொங்க வைத்து உப்புமாவாவது செய்து கொடுப்பான் அவன். பெண்பிள்ளையும் குழந்தையுமாகக் கூட்டி வந்து தொல்லை கொடுக்கிற இந்த பிராமணன் வயிறு குளிர்ந்ததும் வண்டி ஏறட்டும். அப்புறம் அவன் பாடு. வண்டிமாடுகள் நடக்கும் வழியின் பாடு. நடேசன் தன் ஒற்றை முறிவீட்டுக்குத் திரும்பி, விடிந்ததும் அம்பலக் குளத்தில் குளித்துத் தொழப் போக வேண்டும். இதுதான் காரியங்கள் நடக்க வேண்டிய நியதி.

நீரும் வண்டியில் ஏறிக் கொள்ளும். சித்தே நகர்ந்து உட்காரம்மா. இந்த மனுஷ்யரும் நம்மோடு வரட்டும். தெய்வம் தான் இவரைக் கைகாட்டி அனுப்பியிருக்கிறது.

அந்த மனிதன் திரும்ப வண்டித் தட்டில் ஏறி அமர்ந்தன. நடேசன் அவன் பக்கத்தில் உட்கார்ந்தபோது அவன் இந்துஸ்தானி சங்கீத மெட்டில் ஏதோ பாட ஆரம்பித்திருந்தான். தான் சும்மா கூட உட்கார்ந்திருக்காமல் கையால் தாளம் தட்டலாம் என்று நடேசனுக்குத் தோன்றியது. முன்னே அங்கங்கே இருக்கைகளில் ஒன்றும் இரண்டுமாக உட்கார்ந்து டாக்கியில் மூழ்கியிருந்தவர்கள் அரையிருட்டில் கண்ணில் பட்டார்கள். சமுத்திர மணல் குவித்த தரையில் யாருமே தென்படாமல் இடமே வெறிச்சோடிப் போயிருந்தது. இருட்டு வாடையும் மூத்திர வாடையுமாக சூழ்ந்து கவிய வண்டி நகர்ந்தது.

பாட்டுப் படிக்கிற ஆளு கூட உட்கார்ந்து கையைத் தட்டிக்கிட்டுப் போறது யாருன்னு தெரியுதா? நம்ம நீலகண்டன் பிள்ளை வக்கீலோட குமஸ்தன். நடேசன்.

வக்கீல் எல்லாம் மாகாண காங்கிரஸ், அம்பல பிரவேசம், கயறுத் தொழிலாளி சமரம்னு கொடி பிடிச்சுக்கிட்டு அலையறாங்க. வருமானம் இல்லாம கும்பி வாடின குமஸ்தன் டாக்கியிலே தான் ஆக்ட் கொடுக்கப் போகணும். அங்கேயாவது காசைக் கண்ணுலே காட்டுவானுங்களா இல்லே அதுவும் பித்தலாட்டமா?

முன்னால் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த ஒருத்தன் சத்தமாகச் சொன்னபடி திரும்ப மண் சுவர் பக்கம் நடந்தான். மணிக்கு எத்தனை தடவை மூத்திரம் ஒழிப்பான் இவன்? நடேசன் அவனை பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு வண்டித் தட்டில் கூட உட்கார்ந்து ஓட்டி வந்தவனின் குரலை சிலாகித்துத் தலையாட்டியபடி இருந்தார்.

பாட்டு நின்றபோது வண்டிக்கு உள்ளே இருந்து பெண்குழந்தை குரல் திரும்பக் கேட்டது.

அம்மா, இன்னம் ரொம்ப தூரம் போகணுமா மங்கலாபுரத்துக்கு? எவ்வளவு தூங்கி எழுந்தாலும் ஊர் வரமாட்டேங்குதே? பசிச்சு பசிச்சு பழகிடுத்து. தாகம் தான் தாங்க முடியலை அம்மா. ஒரு வாய் ஜலம் கொடேன். அம்மா, கொஞ்சம் தாகஜலம்.

குழந்தை அழறது பார்க்கப் பொறுக்கலை அய்யரே. இப்படியே நிறுத்தும். பஞ்சாயத்து கிணத்துலே தண்ணி இருக்கான்னு பார்க்கறேன்.

நடேசன் வண்டித் தட்டிலிருந்து கீழே குதித்தார். அவர் இன்னும் தமிழில் தான் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அது யாரோ எழுதிக் கொடுத்து வாயில் திணித்ததாக இல்லாமல் சுபாவமாக வந்து விழுந்தது இப்போது.

குழந்தையா, யார் குழந்தை?

உள்ளே இருந்து பெண் குழந்தை மூக்கை உறிஞ்சிக்கொண்டே சொன்னது.

சித்தே சும்மா இருடி. பெரியவா பேசறபோது குறுக்கே பேசாதே.

அம்மா சொல்வதை லட்சியம் செய்யாமல் அவள் தொடர்ந்தாள்.

எனக்கும் மத்திய வயசுதான். வருஷக் கணக்கா குழந்தையாவே இருக்கேன். கொல்லூருக்கு போற வழியிலே காளை வண்டி கவிழாம இருந்தா இதெல்லாம் நடந்திருக்காதோ என்னமோ?

வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கி கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தார் நடேசன். ஆழத்தில் சந்திர பிம்பத்தோடு தண்ணீர் பதிலுக்கு சிரித்தது. ஒரு கடைகால் இருந்தால் போதும். இல்லை. கூடவே கயறும் வேணும்.

கயற்றுத் தொழிலாளி சங்கம் என்று பலகை வைத்த ஓலைக் குடிசை கண்ணில் பட்டது. இது எப்போது இங்கே முளைத்தது? எப்போது வேணுமானாலும் இருக்கட்டும். அதுவா முக்கியம். வாளியும் கயறும் தேவை. குழந்தை நாக்கை நனைக்கக் கொஞ்சம் தண்ணீர். அது இருந்தால் போதும்.

கதவைத் தட்டினார் நடேசன். திறந்து கொண்டபோது உள்ளே வெறுமையாகக் கிடந்தது அந்த இடம். கரண்ட் இழுத்துப் போட்ட குழல் விளக்கு பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. இதையும் பார்த்த ஓர்மை அவருக்கு இல்லை.

இன்னும் இதெல்லாம் வராத காலம். நாம் கொஞ்சம் முன்னாலேயே இங்கே வந்துட்டோம்.

மகாதேவ அய்யன் விரக்தியோடு சிரித்தான். இந்த முன்னே பின்னே சமாச்சாரம் நடேசனுக்கு சுத்தமாகப் புரியவில்லை.

அம்மா, அங்கே பாரு, இலையிலே வச்சு ரத்த வர்ணத்திலே சாதம் கிடக்கு. எடுத்து சாப்பிடட்டுமா?

குழந்தை தெருவில் கையைக் காட்டியபடி கேட்டது.

வேணாம் என்றார் நடேசன் அவசரமாக. டாக்கி கொட்டகைக்காரன் பாதி சாப்பிட்டுவிட்டுத் தெருவில் எறிந்தது அது. கறியும் எலும்புமாக எச்சில் சோறு.

ஆபத்துக்கு தோஷமில்லை. நன்னா இருந்தா சாப்பிடறதுலே என்ன தப்பு?

வண்டி ஓட்டி வந்த அய்யனின் பெண்டாட்டி கேட்டாள்.

அய்யன் ஏதோ சொல்ல வாயைத் திறந்துவிட்டு வேண்டாம் என்று தீர்மானித்து வண்டி ஓட்டுவதில் திரும்ப கவனமானான். அவன் இன்னொரு பாட்டு பாடினால் நன்றாக இருக்கும் என்று நடேசன் நினைத்தார்.

கடைத் தெரு முக்கில் வண்டி திரும்பியபோது ஏகாம்பர ஐயர் ஓட்டல் மூணு மாடிக் கட்டிடமாக வளர்ந்து நின்றது தெரிந்தது. இது என்ன கூத்து?

பஞ்சாமி, ஏ பஞ்சாமி, இருக்கியா, ஒழிஞ்சு மாறிட்டியா?

கடைப் படியேறி கம்பி அழிக்குப் பின்னால் பார்த்து சத்தம் போட்டார் நடேசன்.

உள்ளே இருந்து தள்ளாடியபடி வந்து கண்ணை இடுக்கிப் பார்த்த வயசன் அடையாளம் கண்டு கொண்டு சிரித்தார்.

யாரு நடேசனா? எண்பது தொண்ணூறு வயசு இருக்குமா உமக்கு? அன்னிக்குப் பார்த்தபடி அழியாத மேனிக்கு இருக்கீரே. எப்படி அய்யா திரும்பி வந்தீர்? எங்கே போயிருந்தீர்? இவாள்ளாம் யாரு?

அதெல்லாம் மெதுவாச் சொல்றேன். ரவை இருந்தா கொஞ்சம் உப்புமா கிண்டும்.

நடேசன் முறையிட்டார். சன் மைகா பதித்த மேசைக்கு முன்னால் அலங்கார நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டு மகாதேவ ஐயரின் குடும்பம் ஒரு பிடி சோற்றுக்காக, ஒரு குவளை குளிர்ந்த நீருக்காகக் காத்துக் கொண்டிருந்தது.

நடேசனுக்கு ஒரு வினாடி கண் இருண்டு வந்தது.

மணிக்கூண்டில் மணி முழக்கும் சத்தம். அவர் எண்ண ஆரம்பித்தார். வேண்டாம். இதை எண்ணி முடித்து என்ன ஆகப் போகிறது? எத்தனை தடவை வேண்டுமானாலும் அடிக்கட்டும். சொக்கநாதன் செட்டியாரோ, இறைச்சி சாப்பிட்ட பாண்டிப் பையனோ அதையெல்லாம் காசோடு எண்ணி கணக்கு வைத்துக் கொள்ளட்டும். மறக்காமல் பதினைந்து நிமிடத்தைக் கூட்டினால் தான் கணக்கு நேராகும்.

படத்தைப் போடாமக் கழுத்தறுக்கறானுங்க சவத்துப் பயக்க.

இனிமேக்கொண்டு ஆரம்பிச்சு எப்போ முடிஞ்சு எப்போ வீட்டுக்குப் போறது?

பின்னால் சாய்மான வசதி கொண்ட பெஞ்சில் குந்தியிருந்த யாரோ பரஸ்பரம் ஆவலாதி வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

(தொடரும்)


eramurukan@gmail.com

Series Navigation