உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 6 (சுருக்கப் பட்டது)

This entry is part of 31 in the series 20080828_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


காத்துக் கொண்டு உட்கார்ந் திருந்தேன்
காத்திராமல் நான் யாருக்கும்,
நல்லதுக்கும்
பொல்லாத தற்கும் அப்பால்
பூரித்துக் கொண்டு !
இப்போது வெளிச்சம் !
இப்போது நிழல் !
இங்கே பகல் பொழுது மட்டும்தான் !
நடுப்பகல் ! ஏரிக்கரை !
முடிவற்றுச் செல்லும் காலம் !
அடுத்து என் நண்பர்
திடீரென
ஒருவர் இருவர் ஆனார் !
ஸரதுஸ்டிரா (Zarathustra) என்
அருங்கில் சென்றார் !

(From Man Might Be Surpassed.)

·பிரடெரிக் நியட்ஸே, ஜெர்மன் சித்தாந்த ஞானி
(Friedrich Nietzsche) (1844-1900)

“ஆதரித்தாலும் சரி ஆதரிக்க விட்டாலும் சரி நான் இளைஞர்களைச் சீர்நெறிப் படுத்தப் பிறந்திருக்கிறேன். நூற்றுக்கணக்கில் வாலிபர் ஒவ்வொரு நகரிலிருந்தும் என்னுடன் இணையத் தயாராக இருக்கிறார். அவர்களை எல்லாம் இந்தியாவில் சுக வாழ்வு, நீதி நெறி, மத வாழ்வு பெறுக, எதிர்க்க முடியாத அலைகள் போல் சுருட்டி அனுப்பப் போகிறேன். குறுகிய சிந்தை உடையோருக்கும், தாழ்த்தப் பட்டோருக்கும் சிறந்த கல்வி முறை வசதிகள் அளிக்க நான் முயல்வேன். அவற்றை நிச்சயம் செய்து முடிப்பேன் அல்லது செத்து மடிவேன் !

இந்தியாவில் மூன்று பேர் ஒன்றாகச் சேர்ந்து ஓரிடத்தில் ஐந்து நிமிடங்கள் கூட இயங்க முடியாது ! அந்த மூவரில் ஒவ்வொருவனும் ஆதிக்கம் செய்யும் ஆற்றல் பெறப் போராடுகிறான் ! இறுதியில் (ஒற்றுமையின்மையால்) அந்த நிறுவனம் முழுவதும் துயரத்துள் வீழ்கிறது ! பிரபு, பிரபு ! பொறாமைப் படக்கூடாது என்று எப்போது நாம் கற்றுக் கொள்ளப் போகிறோம் ?

இந்தியாவைக் கைப்பற்ற ஆங்கிலேயருக்கு எப்படி எளிதாக முடிந்தது ? அதற்குக் காரணம் என்ன வென்றால், அவர்கள் தேசீய மனப்பான்மை கொண்டவர்; ஆனால் நாம் அப்படி அல்லர். நமது உன்னத மனிதர் ஒருவர் இறந்தால், அடுத்தவர் உருவாக நாம் பல நூற்றாண்டுகள் காத்திருக்கிறோம் ! ஆனால் உன்னத மனிதர் இறந்ததும் அவர்கள் அடுத்தொருவரை வெகு விரைவாக உருவாக்க முடிகிறது ! காரணம் நமக்கு உயர் மனிதர் மிகச் சொற்பம். ஏன் அப்படி ? அவர்கள் தேர்ந்தெடுக்க பரந்த தளத்தைக் கொண்டவர்கள். நமது தேர்ந்தெடுப்புக் களம் சிறியது. 30 கோடி இந்திய மக்கள் தொகையில் உன்னத மனிதரைத் தேர்ந்தெடுப்பதற்குச் சிறிதளவு களமே இருக்கிறது.

மேலும் அவரது தேசத்தில் கல்வி கற்ற ஆண், பெண் ஆகியோர் எண்ணிக்கை மிகையானது. போதிய கல்வியின்மையே இந்திய தேசத்தின் மாபெரும் குறைபாடு; அது அறவே நீக்கப்பட வேண்டியது. பொதுநபருக்குக் கல்விப் பயிற்சியை ஊட்டி, அவரது நிலையை உயர்த்துவது ஒன்றுதான் தேசீய உணர்வை நமக்குள் எழுப்ப வல்லது.”

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

+++++++++++++++++++

உன்னத மனிதன்

(பெர்னார்ட் ஷா)
அங்கம் : 4 பாகம் : 6

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.
2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.
3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – 25 வயது வாலிபன்.
4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)
5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி
6. ஹெக்டர் மலோன் (Hector Malone) – ஓர் அமெரிக்கன்
7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ¦†க்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்
8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்
9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.
10. வயலொட் ராபின்ஸன் (Violet Robinson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)
11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 4 பாகம் : 6)

(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: வயலட் ராபின்ஸன், டிரைவர் ஹென்றி ஸ்டிராக்டர், ஹெக்டர் மலோன். ஹெக்டரின் தந்தை மிஸ்டர் மலோன்

காலம்: பகல் வேளை

இடம்: ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் தற்போது தங்குமிடம் தெற்கு மலைப் பகுதி : கிரனாடா, ஸ்பெயின்.. தங்கு மாளிகையின் பின்புறப் பூங்கா.

(காட்சி அமைப்பு: ஜான் டான்னரும் ரோபக் ராம்ஸ்டனும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மிஸ்டர் மலோன் அவருடன் கலந்து கொள்கிறார். ஆக்டேவியசும் ஆன்னியும் தனியாகப் பிறகு உரையாடுகிறார்.)

ஜான் டான்னர்: (ராம்ஸ்டனைப் பார்த்து) அந்த மலோன் கிழவரை நம்பாதீர்கள் ! அந்த ஏழைக் கிழவர் ஒரு பில்லியனர் தெரியுமா ? பார்த்தால் எளியவராகக் காட்சி அளிக்கிறார். வயலட் ஒரு செல்வத் திமிங்கலத்தைத்தான் பிடித்திருக்கிறாள் !

ராம்ஸ்டன்: பெரிய திமிங்கலம் சிறிய மீனைப் பிடிப்பது நடப்பதுதானே ! ஆனால் இந்தத் திருமணத்தில் சிறிய மீன்தான் பெரிய மீனை விழுங்கப் போகுது ! வயலட் பார்த்தால் வயதில் சிறியவள்தான். ஆயினும் அறிவில் அவள் ஹெக்டர் மலோனை விடத் திறமைசாலி ! என் செவியில் பட்டது, ஹெக்டர் எந்தப் பணத்தையும் தந்தை யிடமிருந்து கையேந்தி வாங்குவதில்லை என்று உறுதி எடுத்துக் கொண்டிருக்கிறானே !

ஜான் டான்னர்: வயலட் ஹெக்டரை மாற்றி விடுவாள். பாருங்கள். தானாக மடியில் வந்து விழும் செல்வத்தை யார்தான் வேண்டாம் என்று தடுப்பார் ?

(அப்போது வயோதிகர் மலோன் அவருடன் உரையாட வருகிறார்)

வயோதிகர் மலோன்: (இருவரையும் பார்த்து) வயலட் உண்மையாகவே ஓர் அதிசயப் பெண் ! ஹெக்டருக்கு ஏற்ற பெண் ! பிடிவாத ஹெக்டரை மிதவாதியாக மாற்றி விடுவாள் இந்தப் பெண் ! பத்து பிரிட்டீஷ் சீமாட்டிகளைக் கொடுத்தாலும் நான் வயலட்டை மாற்றிக் கொள்ள இணங்க மாட்டேன் !

ஜான் டான்னர்: மிகவும் பெருமைப் படுகிறேன் மிஸ்டர் மலோன் ! உங்கள் பேச்சு எங்களைச் சிலிர்க்க வைக்கிறது !

வயோதிகர் மலோன்: (ராம்ஸ்டனைச் சுட்டிக் காட்டி) ஜான் ! இவரை முதலில் எனக்கு அறிமுகப் படுத்தி விடுங்கள் !

ஜான் டான்னர்: ஓ மறந்து விட்டேன். மன்னிக்க வேண்டும். இவர்தான் மிஸ்டர் ரோபக் ராம்ஸ்டன் ! உங்கள் அருமை மருமகளின் பல நாள் குடும்ப நண்பர்.

வயோதிகர் மலோன்: உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன், மிஸ்டர் ராம்ஸ்டன் ! அன்பு மருமகள் வயலட்டை உங்களுக்கு முன்பே தெரியுமா ? மிக்க மகிழ்ச்சி. உங்கள் இருவரையும் இன்று அறிந்து கொண்டதில் பெரு மகிழ்ச்சி. தொடர்பு வைத்துக் கொள்வோம். அவரச வேலை குறித்து நான் போக வேண்டியுள்ளது. போய் வருகிறேன் வணக்கம்.

(மிஸ்டர் மலோன் போகிறார். அவருக்கு வந்தனம் செலுத்தி டான்னரும், ராம்ஸ்டனும் எதிர்த்திசையில் செல்கிறார். பூங்காவிலிருந்து ஆன்னியும், அக்டேவியசும் வெளியே வருகிறார்கள்)

அக்டேவியஸ்: முடிவாகச் சொல் ஆன்னி ! இன்று நான் உன் விருப்பைத் தெரிந்து கொள்ள வேண்டும். நான் உன்னை நேசிக்கிறேன் ! உன்னை என் மனைவியாக ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன் ! உன் விருப்பம் என்ன ? தினமும் என்னை நீ கண்டு பேசினாலும் உன் மனது மர்மமாகவே உள்ளது. நீ ஒரு புதிர் ! யாரும் புரிய முடியாத விசித்திர மாது ! உண்மையைச் சொல் ! நீ என்னை நேசிக்கிறாயா ? அதை நான் முதலில் அறிய வேண்டும்.

ஆன்னி: ஏனிப்படி நான் பதில் சொல்ல முடியாத வினாக்களைக் கேட்கிறாய் ? நீ என்னை நேசிப்பது நன்றாகத் தெரிகிறது ! எனக்கு யார் மீது விருப்பம் என்று நானே என்னை அடிக்கடிக் கேட்கிறேன். எனக்குத் தெரியாத பதிலை எப்படி நான் சொல்ல முடியும் ?

அக்டேவியஸ்: என் உள்ளத்தைக் கீறுகிறாய் ஆன்னி ! நீ என்னை நேசிப்பதைச் சொல்ல ஏன் தயங்குகிறாய் ? என்னிடம் என்ன குறை உள்ளது ? இராப்பகலாக நீதான் என் மனத்திரையில் நடனம் ஆடுகிறாய் ! கனவுகளில் வந்து நீ என் தூக்கத்தைக் கலைக்கிறாய் ! நெஞ்சினில் நின்று கொண்டு நிலைபெயர மறுக்கிறாய் நீ !

ஆன்னி: அப்படி என் மனத்திரையில் நீ ஏன் ஆட வில்லை அக்டேவியஸ் ? இரவுக் கனவில் வந்து நீ ஏன் எனக்குத் தொல்லை அளிக்கவில்லை ? உன் ஆத்மா மெய்யாக என்னை நேசித்தால் அப்படி என்னை ஆட்டி அலைக்க வேண்டுமே ?

அக்டேவியஸ்: (அதிர்ச்சி அடைந்து) ஆன்னி ! என் காதலை நீ சந்தேகப் படுகிறாயா ? மெய்யாக நீதான் என்னை நேசிக்க வில்லை ! அப்படி உண்மையாக நீ என்னை நேசித்தால் நான் உனது கனவில் வருவேன் ! உன் ஆத்மா வேறு யாரையோ நேசிக்கிறது !

ஆன்னி: நான் யாரை நேசிப்பதாக நீ நினைக்கிறாய் ?

அக்டேவியஸ்: ஆன்னி ! ஏன் இப்படிக் கண்ணாம்பூச்சி விளையாடுகிறாய் ? நீ நேசிப்பது யாரென்று உனக்கே தெரியவில்லை என்று சொல்லி மூடி மறைக்கிறாய் ! எனக்குத் தெரியும் நீ நேசிப்பது ஜான் டான்னரை ! நீ மணக்கப் போவது ஜான் டான்னரை ! நீ ஏமாற்றப் போவது அப்பாவி அக்டேவியஸை ! எனக்கு எல்லாம் தெரியும் ஆன்னி !

ஆன்னி: இவற்றை யெல்லாம் சரியாகத் தெரிந்து கொண்டு ஏன் என்னிடம் பிறகு கேள்வி கேட்கிறீர் ?

அக்டேவியஸ்: என் யூகம் தப்பாக இருக்கலாம் இல்லையா ? மேலும் உன் வாயிலிருந்து அந்த உண்மைகள் வர வேண்டும் ! சொல் ஆன்னி ! என்னை விட டான்னர் அழகனா ? அறிவு உள்ளவனா ? செல்வந்தனா ?

ஆன்னி: உண்மை. அத்தனையும் டான்னரிடம் இல்லைதான் ! அத்தனையும் உன்னிடம் அதிகமாக உள்ளவைதான் !

அக்டேவியஸ்: பின் ஏன் டான்னர் பின்னால் விரட்டிக் கொண்டு போகிறாய் ? உனக்கு அழகு இருக்குது ! அறிவு இருக்குது ! அனுபவம் உள்ளது ! நம் இருவருக்கும் எல்லாப் பொருத்தமும் உள்ளது ! திருமணம் செய்தால் சொர்க்க வாழ்வு நிச்சயம் நமக்கு !

ஆன்னி: இப்படி எல்லாம் ஜான் டான்னர் பேச மாட்டார் ! பேசும் போது அவர் ஞானமாகப் பேசுகிறார் ! அவர் பேச ஆரம்பித்தால் என் மனம் ஏனோ அவற்றை நம்புகிறது ! அவருக்கு என் மீது காதல் இருப்பதாகத் தெரியவில்லை ! எனக்கும் அவர் மீது காதல் இருப்பதாக நான் உணரவில்லை ! ஆயினும் என் ஆத்மா அவரைத்தான் வேண்டுகிறது ! அவரைத்தான் மணந்து கொள்ள விழைகிறது ! ஆனால் இது காதல் கனவில்லை !

அக்டேவியஸ்: என்ன சொல்கிறாய் ஆன்னி ? நீ நேசிக்காத ஒருவரையா மணக்க விரும்புகிறாய் ? உன்னை மனதார விரும்பாத ஒருவரையா மணக்க விரும்புகிறாய் ? இல்வாழ்வுக்குக் காதல் ஓர் ஆதார சுருதி இல்லையா ? காதல் இல்லாத திருமண வாழ்வு பாழாவது உண்மை இல்லையா ?

ஆன்னி: உண்மைதான் ! அதே சமயத்தில் மணமுறிவு ஏற்படும் பெரும்பான்மைத் தம்பதிகள் காதல் பண்ணித்தானே திருமணம் புரிந்தவர் ! என் சிந்தனை இது : காதல் இல்வாழ்வுக்கு அவசியமில்லை ! வெறும் காதல் மட்டும் இருந்தால் இருவர் இல்வாழ்வு நிரந்தரம் ஆவதில்லை. காதல் ஒரு வினைவூக்கிதான் ! ஆனால் காதல் தேய்பிறை போல் கரைந்து போவது ! கரைந்து போன காதல் மீண்டும் முழுதாக ஏனோ வளர்வதில்லை ! உன்னத மனிதரை இல்லறத்தில் உருவாக்கக் காதல் ஒரு தடையாக இருக்கிறது. காதலுக்குக் கண்ணில்லை, காதில்லை, சிந்தனை இல்லை !

அக்டேவியஸ்: (கேலியாகச் சிரித்து) நீ ஜான் டான்னரை மணந்து உன்னத பிள்ளைகளைப் பெற்றெடுக்கப் போகிறாயா ? அதே சமயம் என்னை நீ மணந்தால் உன்னத சிசுக்கள் உதிக்கா என்றோர் எண்ணம் உண்டாகுதா உனக்கு !

ஆன்னி: தெளிந்த ஞானமும், உயர்ந்த நெறியும், உறுதி உள்ளமும் கொண்டவர் ஜான் டான்னர் ! அவரை நான் மணந்தால் எங்களுக்கு உன்னத குழந்தைகள் பிறக்கும் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது ! இது தேர்ந்தெடுப்புப் திருமணம் ! உயர்ந்த சிந்தனையை உடையவர், உறுதியான உள்ளங் கொண்டவர், ஒப்பிலா மனநோக்கு உடையவர் இல்வாழ்வில் உன்னத சிசுக்களைப் பெறுவர் என்பது என் அழுத்தமான எண்ணம்.

(தொடரும்)

***************************
தகவல்

Based on The Play

“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)
2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)
3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973
4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)
5. Joyful Wisdom By : Friedrich Nietzsche (1971)
6. The Wisdom of India By : Emmons E. White (1968)
7. Friedrich Nietzsche – The Story of Philosophy By: Will Durant (1959)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (August 27, 2008)]

Series Navigation