உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 4 (சுருக்கப் பட்டது)

This entry is part of 45 in the series 20080814_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


உயர்தரக் கல்வியும் ஆத்ம வளர்ச்சியும் பெற்ற மனிதன் நல்வினைக்கும் தீவினைக்கும் அப்பாற் பட்டவன். தன் குறிக்கோள் பணிகளுக்குத் தானே ஆட்சியாளனாக முன் நிற்பவன். நன்னெறிக்கும் மேலாக இருப்பது அச்சமின்மை. நன்னெறி என்பது என்ன ? உள்ளச் செம்மையும், உறுதியும் அடைவது நன்னெறி. மனிதனிடம் ஆத்மச் சக்தியை மிகைப்படுத்துவது, ஆற்றலைக் கைக்கொள்ள உறுதி பெறுவது, ஆற்றல் நெறி மட்டுமே உன்னத நிலைக்கு அவனை உந்த வைப்பது. பலவீனத்திலிருந்து வருபவை அனைத்தும்
தீவினைகள் !

உன்னத மனிதனின் ஒப்பிலாச் சின்னங்கள் எவை ? அபாய வாழ்வை எதிர்கொள்வது. அபார முயற்சியில் ஈடுபடுவது, ஆனால் ஒரு நற்பாதை தேடிச் செல்லும் குறிக்கோளில் முனைந்தால் மட்டுமே, அவை வரவேற்கத் தக்கவை. முதன்மையாக முயற்சியில் அவன் தனக்குப் பாதுக்காப்பு ஏற்பாடு செய்து கொள்வது ஏற்புடமையன்று. சுகபோக வாழ்வை உன்னத மனிதன் எந்த விதத்திலும் தவிர்க்க வேண்டும்.

நற்பாதை தேடலில் போர்களும், போராட்டங்களும் வரவேற்கப்பட வேண்டும். புரட்சியும் ஒரு வாய்ப்பாக எதிர்பார்க்கப்பட வேண்டும். ஏனெனில் அத்தகைய கொந்தளிப்பில்தான் உன்னத மனிதர் உண்டாக வழிபிறக்கும். உதாரணம் பிரெஞ்ச் புரட்சி நெப்போலியனை உருவாக்கியது ! அமெரிக்கப் போர் சுதந்திர வீரர் ஜார்ஜ் வாஷிங்டன் உருவாக வாய்ப்பளித்தது ! (ரஷ்யப் புரட்சி லெனினையும், பாரத விடுதலைப் போராட்டம் மகாத்மா காந்தியையும், தென்னாப்பிரிக்க சுதந்திரப் போர் நெல்ஸன் மாண்டெல்லாவையும் உருவாக்கின)

·பிரடெரிக் நியட்ஸே, ஜெர்மன் சித்தாந்த ஞானி (Friedrich Nietzsche) (1844-1900)

ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் வாழ்ந்தவர். அப்போது வாழ்ந்த இந்திய மக்கள் உயர்ந்த கல்வி கற்றவராக இருந்திருக்க வேண்டும். ஆழ்ந்த விடுதலை மனத்துடன் வாழ்ந்திருக்க வேண்டும். பெருவாரியான மக்கள் புத்தரைப் பின்பற்றினர். அரசர்கள் தமது அரச பீடத்தை விட்டகன்றனர் ! நாட்டு அரசிகள் தம் அரசாங்கத்தை விட்டுச் சென்றார். பல யுகங்களாக மதக் குருமார்கள் போதித்த நெறிமுறைகளுக்கு மாறாகப் புரட்சிகரமாக இருந்த புத்தர் உரைமொழிகளைப் பின்பற்றினர். ஆதலால் மக்களின் மனது அக்காலத்தில் சுதந்திரமாக விரிந்திருக்க வேண்டும்.

புத்தர் மானிட நன்னெறி படைப்புக்காகப் பிறந்தவர். எப்படி மக்களுக்கு உதவுவது என்பது மட்டுமே புத்தரின் சிந்தனையாக இருந்தது. வாழ்நாள் பூராவும் தனக்கென அவர் எதுவும் கருதியது கிடையாது. அவரது உன்னத மூளையைப் பற்றிச் சிந்திப்பீர். எதிலும் உணர்ச்சி வசப்படுவது அவரது வழிமுறையன்று. அவரது பூதகரமான மூளையில் மூட நம்பிக்கை, குருட்டுப் பழக்க வழக்கங்கள் எவையும் கிடையா.

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

+++++++++++++++++++

உன்னத மனிதன்

(பெர்னார்ட் ஷா)
அங்கம் : 4 பாகம் : 4

(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.
2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.
3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – 25 வயது வாலிபன்.
4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)
5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி
6. ஹெக்டர் மலோன் (Hector Malone) – ஓர் அமெரிக்கன்
7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ¦†க்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்
8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்
9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.
10. வயலொட் ராபின்ஸன் (Violet Robinson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)
11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 4 பாகம் : 4)

(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: வயலட் ராபின்ஸன், டிரைவர் ஹென்றி ஸ்டிராக்டர், ஹெக்டர் மலோன். ஹெக்டரின் தந்தை மிஸ்டர் மலோன்
காலம்: பகல் வேளை
இடம்: ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் தற்போது தங்குமிடம் தெற்கு மலைப் பகுதி : கிரனாடா, ஸ்பெயின்.. தங்கு மாளிகையின் பின்புறப் பூங்கா.

(காட்சி அமைப்பு: வயலட்டும், மிஸ்டர் மலோனும் வாதாடிக் கொண்டிருக்கிறார். ஜான் டான்னர், ரோபக் ராம்ஸ்டன் இருவரும் முன்னே வரப் பின்னால் ஆக்டேவியசும் ஆன்னியும் தொடர்கிறார்கள்)

வயோதிகர் மலோன்: (வயலட்டைக் கூர்ந்து நோக்கிக் கோபமாக) மிஸ் ராபின்ஸன் ! உனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதே ! நீ எப்படி என் மகனுக்கு வலை போடலாம் ? அவனுடைய உயர்குடி வாழ்க்கைமேல் உனக்கு அத்தனை மோகமா ? நீ எப்படி என் மகனுக்கு உரிமையாக அந்தக் காதல் கடிதத்தை எழுதலாம் ? நீ வேறொருவன் மனைவி ! அதை மறைத்துக் கொண்டு நீ எப்படி மற்ற ஆடவனைக் கவர நினைக்கலாம் ?

ஹெக்டர் மலோன்: இதுதான் ஒட்டக முதுகில் நீங்கள் ஏற்றும் கடைசி வைக்கோல் ! முறிந்து போவது என் முதுகு ! இனியும் தாங்க முடியாது நீங்கள் ஏவும் அம்புகளை ! என் மனைவியைப் பலர் முன் அவமானப் படுத்தி விட்டீர் !

வயோதிகர் மலோன்: (ஆவேசமாக) என்ன ? வயலட் ராபின்ஸன் உன் மனைவியா ? நீதான் அவளை மணந்து என்னை அவமானப் படுத்தி விட்டாய் ! உன்னையும் அவமானப் படுத்திக் கொண்டாய் ! நான் எப்படி அவளை ஓர் கண்ணியம் உள்ள மருமகளாய் ஏற்றுக் கொள்வேன் ?

ஜான் டான்னர்: (ஹெக்டரைப் பார்த்து) என்ன ? நீதான் வயலட்டின் கணவனா ? எங்களுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் காதலன் நீதானா ? (தளர்ந்து போய் நாற்காலியில் அமர்கிறார்)

வயோதிகர் மலோன்: எனக்குத் தெரிமால், அறிவிக்காமல் நீ அருகதையற்ற இந்த மாதை மணந்து கொண்டாய் ! ஏனப்படிச் செய்தாய் என்று சொல் ஹெக்டர் ?

ராம்ஸ்டன்: வேண்டுமென்றே எங்களையும் ஏமாற்றி விட்டாய் ஹெக்டர் ! வயலட்டை மணந்தவர் யாரென்று அறிய முடியாமல் நாங்களும் துடித்துக் கொண்டிருந்தோம்.

ஹெக்டர் மலோன்: என்மீது அம்புகளை ஏவியது போதும் நண்பர்களே ! வயலட்டும் நானும் திருமணம் செய்து கொண்டோம். அதுதான் நீண்ட கதையைச் சுருக்கிச் சொல்வது ! இப்போது எங்களை என்ன செய்து விடுவீர் நீவீர் ? எதைத் தடுத்து விடுவீர் உங்களில் எவராவது ஒருவர் !

வயோதிகர் மலோன்: நான் சொல்வதற்கு உள்ளது ! வயலட் ராபின்ஸன் ஒரு பிச்சைக்காரனை மணந்திருக்கிறாள் ! வயலட் மலோன் வயலட் ராபின்ஸனை விட வறியவள் ! ஹெக்டரும், வயலட்டும் மாநில பஞ்சப்படியில்தான் வாழ முடியும் !

ஹெக்டர் மலோன்: வயலட் ஓர் உழைப்பாளியை மணந்திருக்கிறாள். நாங்கள் அரசாங்கப் பஞ்சப்படியிலோ அல்லது என் பிதாவின் பணத்திலோ வாழப் போவதில்லை ! இன்று முதலே நான் ஊதியம் பெற ஊழியம் செய்யப் போகிறேன் !

வயோதிகர் மலோன்: நீ இப்போது அப்படித்தான் நினைப்பாய் ! நேற்று நான் கொடுத்த பணம் உன் கையில் உள்ளது. அது கரைந்து போன பிறகு உன் வயிறு காயும் ! உன் மனைவியின் உள்ளம் வெடிக்கும் உன்மீது ! வேடிக்கை பார்ப்பார் அண்டை வீட்டுக்காரர் !

ஹெக்டர்: [பையிலிருந்துநொரு தாளை எடுத்து] உங்கள் மாதக் கொடைப் பணம் ஈதோ ! எடுத்துக் கொள்வீர் ! நான் செலவழிக்க வில்லை ! பெற்றுக்கொள்வீர் ! நான் என் காலில் நிற்க முடியும் ! உங்கள் காலில் நான் நிற்க விரும்பவில்லை ! என் நிழலில் நான் நிற்க முயல்வேன் ! உங்கள் கைப்பணம் எனக்குத் தேவையில்லை !

வயோதிகர் மலோன்: ஹெக்டர் ! வறுமை வாழ்க்கையைப் பற்றி உனக்குத் தெரியாது !

ஹெக்டர் மலோன்: இனிமேல் நான் தெரிந்து கொள்கிறேன் ! நான் தனி மனிதனாக விரும்புகிறேன். வயலட் ! வா என்னுடன் உன் வீட்டுக்கு !

[அப்போது வயலட்டின் சகோதரன் அக்டேவியஸ் ஓடி வருகிறான்]

அக்டேவியஸ் ராபின்ஸன்: [கையை நீட்டிக் கொண்டு] ஹெக்டர் ! போவதற்கு முன் என் கையைக் குலுக்கு ! நான் வயலட்டின் சகோதரன் ! உன்னை நான் என் மைத்துனன் என்று ஏற்றுக் கொள்கிறேன் ! வயலட்டின் கணவன் யாரென்று தெரியாமல் நான் அலைமோதினேன் ! இப்போது யாரென்று தெரிந்தபின் மகிழ்ச்சி அடைகிறேன் (கண்களில் நீர் பொங்குகிறது) என் தங்கை காதலிக்கும் ஒருவரை நான் மதிக்கிறேன் ! உங்களுக்கு உதவி செய்ய நானிருக்கிறேன்.

(அக்டேவியசும், ஹெக்டரும் கை குலுக்கிக் கொள்கிறார்)

வயலட்: (கண்களில் நீர் வழிய) நீ ஏன் கண் கலங்குகிறாய் அக்டேவியஸ் ! என் கண் கலங்காமல் என்னைக் காப்பாற்றுவார் ஹெக்டர் ! அவருக்கு உன்னைப் போல் மெழுகு மனது ! என் கண்ணில் நீர் வடிந்தால் அவர் நெஞ்சில் குருதி கொதிக்கும் ! எனக்கு ஏற்றவர் ! உனக்குப் பிடித்தவர் ! வேறென்ன வேண்டும் நமக்கு ?

ஜான் டான்னர்: வீட்டுச் செலவுக்குப் பணம் வேண்டும் ! வாரா வாராம் வர வேண்டும் ! தானாக வர வேண்டும். அதற்கு ஒரு வழியைப் பார்க்க வேண்டும் ! முதலில் உங்களுக்குப் பண உதவி செய்ய நானிருக்கிறேன். கவலை கொள்ள வேண்டாம் வயலட் ! என்னை உங்கள் நண்பராக நினைத்துக் கொள்வீர். கடவுள் கைவிட்டாலும் நான் கைகொடுப்பேன் உங்களுக்கு ! (கையை நீட்டுகிறார்)

(டான்னரும், ஹெக்டரும், கை குலுக்கிக் கொள்கிறார்)

வயோதிகர் மலோன்: (பொறாமையோடு டான்னரைப் பார்த்து) யாருக்கு வேண்டும் உனது குப்பைப் பணம் ? தந்தை நானிருக்க அந்நியர் உமது பணம் எதற்கு ? ஹெக்டர் ! நான் தெரியாமல் கடிந்து பேசி விட்டேன் ! என்னை மன்னித்து விடு ! வயலட்டை அவமானம் செய்வது எனது நோக்க மில்லை ! நான் சிந்திக்காமல் பேசியவற்றை நினைத்து இப்போது மனம் வருந்துகிறேன். வயலட்தான் உன் மனைவி ! உனக்கேற்ற மனைவி ! நீ ஏற்றுக் கொண்டவளை நான் ஆசீர்வதிக்கிறேன் !

ஹெக்டட் மலோன்: [மனம் தாழ்ந்து] அப்படியானால் சரி தந்தையே ! வேறு ஒன்றும் சொல்ல வேண்டாம் ! எல்லாவற்றையும் மறந்து விடுவோம் ! நாமினி நண்பர்கள் மீண்டும் ! ஆனால் நான் யாருடைய பணத்தையும் கைநீட்டி வாங்கப் போவதில்லை !

(தொடரும்)

***************************
தகவல்

Based on The Play

“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)
2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)
3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973
4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)
5. Joyful Wisdom By : Friedrich Nietzsche (1971)
6. The Wisdom of India By : Emmons E. White (1968)
7. Friedrich Nietzsche – The Story of Philosophy By: Will Durant (1959)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (August 12, 2008)]

Series Navigation