விஸ்வரூபம் – அத்தியாயம் மூன்று

This entry is part of 45 in the series 20080814_Issue

இரா.முருகன்


விஸ்வரூபம் – அத்தியாயம் மூன்று இரா.முருகன்

வேதய்யன் ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்துக்குக் கிளம்பியபோது நல்ல மழை. வீட்டு வாசல் பக்கத்து மச்சில் தான் ஓலைக்குடை, சீலைக்குடை எல்லாம் வைத்திருப்பது. ஒரு குடையும் சூடி கோவிலுக்குப் போய் மாரில் குரிசு போட்டுக்கொண்டு விரசாகத் திரும்ப உத்தேசித்திருந்தான் வேதையன். வேலை தலைக்கு மேல் பாக்கி இருக்கிறது. காலம் தப்பிய மழையோ வெய்யிலோ எது வந்தாலும் போனாலும் இருக்கப்பட்ட வேலை எல்லாம் கிரமமாக முடித்தாக வேண்டும். அடுத்த மாதம் கலாசாலை திறந்தானதும் எதையும் கவனிக்க நேரம் கிடைக்காது புத்தகமும் கையுமாக சதா ஓட வேண்டியிருக்கும்.

வேதையா, ஜாக்ரதை. தரை வழுக்கறதாக்கும். குடை சாஞ்சா சந்தியிலே நோவு உண்டாகும். எழுந்திருக்க ஒட்டாது பின்னே.

மச்சுப் பக்கம் ஏணிப்படியை நிறுத்தி ஏறும்போது திண்ணையில் இருந்து ஜான் கிட்டாவய்யன் குரல் கேட்டது. அவன் ஏதோ மூளிப்பாட்டு பாடியபடிக்கு ஒரு நாலு தந்தி வயலினைக் கையில் பிடித்து ஸ்வரம் வாசிக்க காலையில் இருந்து பிரயத்னப்பட்டுக் கொண்டிருக்கிற சத்தத்தோடு தான் பொழுது விடிந்திருந்தது. சினையான பூனை முதுகில் அரிப்புக்கு முள்செடியில் சொரிந்து கொண்டதுபோல் வாதனையான இரைச்சல் அது.

அப்பன், கூப்பிட்டீரா?

வேதய்யன் ஏணியில் ஒரு காலும், தரையில் ஒருகாலுமாக எதிர்க் குரல் கொடுத்தான். தரையில் வைத்த கால் கொஞ்சம் வழுக்குகிற மாதிரித்தான் பட்டது. பெண்பிள்ளை இல்லாத வீடு. வேதையனைக் கட்டிய பரிபூரணம் தலைப் பிரசவத்துக்காக வைக்கத்துக்கு தாய்வீட்டுக்குப் போயிருக்கிறாள். அவள் இருந்தால் குடை, உடை என்று எது பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. ஜான் கிட்டாவய்யன் கூட இந்நேரம் பகல் சாப்பாடு முடித்து நித்திரை போயிருப்பான். சாப்பாட்டுக் கடையில் இருந்து சோறும் கூட்டானும் வந்து சேரக் காத்துக்கொண்டு இப்படி சங்கீதத்தில் பொழுதைக் கழித்திருக்க மாட்டான்.

அப்பன், கூப்பிட்டீரா? சீலைக் குடை எடுக்க மச்சுக்கு ஏறிண்டிருந்தேன்.

வேதையன் வயலின் இரைச்சலையும் மழைச் சத்தத்தையும் மீறிக் குரல் ஒலிக்கத் திரும்பவும் சொன்னான்.

அதேயடா மோனே. இந்த அகால வர்ஷப் பொழுதில் வெளியே அலையறதைக் குறைச்சுக்கலாமில்லியோ? பனி பிடிச்சா யாத்திரை பின்னே குழப்பத்திலாயிடும்.

ஜான் கிட்டாவய்யனுக்கு எப்போதுமே பிள்ளையுடைய ஆரோக்கியம் குறித்து கவலை. தோளுக்கு மேல் உயர்ந்து தோழனாகி, வைக்கத்தில் பெண் எடுத்துக் கல்யாணமும் நடந்திருந்தாலும் அதே படிக்குத்தான்.

வேதையன் வாசலுக்கு வந்தான். கிட்டாவய்யன் வயலினை மாரில் சார்த்திக் கொண்டு விசித்ரமான சத்தம் ஏதேதோ எழுப்பிக் கொண்டிருந்தான். அம்மா இறந்து போன துக்கம் இன்னும் அவனுக்குத் தீரவே இல்லையோ.

வேதையனின் அம்மா சிநேகாம்பாள் இறந்து போய் பத்து வருஷம் கழித்தும் பிள்ளையைப் பற்றிய கரிசனத்தோடு ஜான் கிட்டாவய்யன் அவள் நினைவிலும் உருகிக் கொண்டே தான் இருந்தான். இதுபோல துரைத்தனத்து வாத்தியமும் கையுமாக அவன் இருந்தாலே விஷயம் இன்னதென்று தெரிந்துவிடும். அப்படியும் இப்படியும் வில்லை இழுத்து கிட்டாவய்யன் வாசிக்கிற வாத்திய சங்கீதம் ஆரோகணத்தில் சஞ்சரிப்பதல்லாமல் ஏனோ அவரோகணத்துக்கு இறங்குவதே இல்லை.

இது என்ன செய்து கொண்டிருக்கிறீர் அப்பன்? பொழுது விடிந்த முதல் கொண்டு வாத்தியத்தோடு கூட விடாமல் மல்லுக் கட்டி விநோதமான பரிசோதனையில் இறங்கிவிட்டீரோ? என்னவென்று புரிபடாத ரீதியில் முக்கலும் முனகலுமாக பாட்டு மாதிரி வேறே ஏதோ அவஸ்தையும் கூடவே வருது.

அதொண்ணும் இல்லையடா. அடாணாவில் பால கனகமய உண்டல்லவா? அதே தோதில் கிறிஸ்து பகவான் விஷயமாக ஒரு கீர்த்தனம் சித்தப் படுத்தியாறது. முடிந்த பிற்பாடு உன் அம்மாள் விஷயமாக இன்னொரு கீர்த்தனம் சித்தப் படுத்தவும் நினைச்சிருக்கேன்.

இது விஷயமாக நீர் படுத்துகிறது கொஞ்ச நஞ்சமும் பொறுக்கவொண்ணாமல் போச்சு. நவீனமான கீர்த்தனம் என்கிறீர். வாயை விட்டுப் பாடவோ அதோ ஒரு காகிதத்தில் எழுதவோ செய்தால் விஷயம் சுலபமாக முடிந்திருக்குமே.

எடோ எனக்குத் தமிழ்பாஷை எழுத வராது என்கிறதை மறந்து போனியோ?

அப்பன், வாயை விட்டுப் பாட லிபி எல்லாம் எதுக்குத் தெரிஞ்சிருக்கணும்?

வேதய்யன் விடாமல் பிடித்தாலும் அவன் முகத்தில் அனுசரணையான சிரிப்பும் குரலில் வாத்சல்யமும் நிரம்பி வழிந்தபடி இருந்தது.

எழுபது திகைய இன்னும் நாலு மாசம் இருக்கப்பட்ட கிட்டாவய்யன் இனியும் சாப்பாட்டுக் கடையைப் பார்த்துக் கொள்ள வேணும் என்று வேதையனோ அவனைக் கட்டியோளான பரிபூரணமோ ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனாலும் வீட்டில் இருப்பதைக் காட்டிலும் கடையில் ஏறியானதும் கிட்டாவய்யன் அலாதி நிம்மதியோடும் சுறுசுறுப்போடும் இருப்பதால் காளை வண்டியில் ஏற்றிவிட்டாவது தினசரி ஒரு மணிக்கூறோ ரெண்டோ கடைத்தெருவில் சாப்பாட்டுக் கடை வாசலில் அவனைச் சேர்த்து விடுவதை வேதையன் நித்திய கடமையாக்கி வைத்திருக்கிறான்.

கிட்டாவய்யனுக்கு ஆதி நாள்தொட்டு சங்கீதத்தில் அவ்வளவு ஒண்ணும் ஈடுபாடு கிடையாது. ஆனாலும் கையில் நாலு காசும், காதோரம் நரையும், அரையில் துணிக்குக் கீழே சரிகிற குடவண்டி வயிறுமாக ஆனபோது, சங்கீதத்திலிருந்து சம்போகம் வரை கரதலப்பாடமாகத் தெரிந்திருக்க வேணும் என்று எதிர்பார்க்கப் படுகிறதே. அதுபடிக்கு அவனுக்கும் இம்மாதிரி ரசனைகள் ஏற்பட்டன.

இதிலே சங்கீதத்தோடு கூடச் சொல்லப்பட்ட விஷயம் ஜான் கிட்டாவய்யன் பெண்டாட்டி சிநேகாம்பாள் ஆயுசோடு இருந்து ரெண்டு பெண்பிள்ளையும் ஒரு ஆண்குட்டியும் ஈன்று பிற்பாடு மாசாந்திரம் தூரம் குளித்த வரைக்கும் எந்தக் குறைச்சலும் இல்லாமல் நடந்தேறிய ஒண்ணு. அவள் மரித்த பிறகு அதெல்லாம் தகிடம் மாறிப் போனது. வயதும் ஏறே ஆனதால் இது பெரிய விஷயமாக மனதில் படாது எப்போதாவது எங்கேயாவது யார் ஸ்தனத்தையாவது பார்த்து ஒரு நிமிஷம் மோகத்தில் ஆழ்கிற சங்கதியாகவே இருந்தது கிட்டாவய்யனுக்கு. கச்சுக்குள் அந்த முலைகளைத் தடவ வேண்டும் என்றும் அப்படியே தொடைகளை இறுக்கிக் கொள்ள வேண்டும் என்றும் தோன்றும் போது தோசைக்கல்லில் தோசை தீய்கிற வாடை யதார்த்த உலகத்துக்கு கிட்டாவய்யனை இழுத்துக்கொண்டு வரும்.

‘கல்லைக் காயப்போட்டபடிக்கு பரஸ்த்ரியின் ஸ்தனத்தையும் யோனியையும் குறிச்சு அப்படி என்ன லகரி? ஸ்கலித சௌந்தர்யம் கூடின ஸ்திரியான்னு பார்த்தா அதுவும் இல்லே. தோசைக்கு அரைச்சுக் கொடுக்க வந்த மெலிஞ்சு கருத்த பட்டத்திப் பொண்ணு. அவ பக்கத்துலே போய்ப் பாரும். வாய் எட்டு ஊருக்கு நாறும். சந்தியை சரியா அலம்பாமலேயே ஸ்நானம் பண்றேன் பேர்வழின்னு ஒப்பேத்திட்டு புடவையைச் சுத்திண்டு வந்துட்டா. போய் இடுப்புக்குக் கீழே வாடை பிடிச்சு லகரி ஏத்திக்கும்.

சிநேகாம்பாள் கீச்சுக் கீச்சென்று கிட்டாவய்யன் மனதில் இரைந்து அது தரிகெட்டுப் போகாமல் பாதுகாப்பாள். ஆனாலும் சில ராத்திரி அதும் இதும் மனசில் குடியேறி அரையை நனைக்கும். இப்போது அது கூடக் குறைந்து போனது. ஆனாலும் சங்கீதத்தில் வந்த பிரேமை என்னமோ நாளுக்கு நாள் கூடிக் கொண்டே தான் போனது.

அம்பலப்புழையில் குடியேறிய தெலுங்கனுடைய ஷட்டகன் திருவனந்தபுரத்தில் சங்கீத சிட்சை தொடங்கியபோது கிட்டாவய்யன் கடைக்கு காப்பி, இட்லி சாப்பிட தினசரி வந்துபோய்க் கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு ஏதோ காரணத்தால் லிங்கத்தில் எரிச்சல் ஏற்பட்டு அவதிப்பட்ட நேரம். எரியாத பொழுதுகளில் அவன் தம்பூரா மீட்டிப் பாடி கிட்டாவய்யனுக்கு நாலைந்து ராகங்களுக்கான லட்சணம் கண்டுபிடிக்கும் ஞானத்தை ஏற்படுத்தினான்.

வற்றல் மிளகைத் தவிர்த்து, வைத்தியர் சொன்னபடிக்கு நெய் சாப்பிட்டு வந்தால் எரிச்சல் தீரும் என்று கிட்டாவய்யன் சொன்னதோடு தெலுங்கன் வேதத்தில் ஏறி ஏசு பகவானை அவனுடைய தாய்மொழியான தெலுங்கில் தியானம் செய்தால் எவ்வித சுகக்கேடும் இல்லாமல் போகும் என்றும் வற்புறுத்தினான். அதற்குத் தெலுங்கன் வழங்கவில்லை என்பதோடு ஊரை விட்டே வேறே போய்விட்டான். அவன் போன வழியும் தெரியவில்லை கிட்டாவய்யனுக்கு. தெலுங்கன் குறி எரிந்தால் என்ன, அறுந்தே தான் விழுந்தால் என்ன என்று எப்போதாவது அவன் சொல்லிக் கொடுத்த அடாணாவையும், ஆபோகியையும், கேதாரத்தையும் வாத்தியத்தில் பிடிக்க மதறாஸ் பட்டணத்து துரைத்தன கம்பேனியில் இருந்து வயலினை அவன் வரவழைத்தான். சிநேகாம்பாள் சுவாசம் நிலைக்க ஒரு மாசம் முன்புதான் அது நடந்தது.

அடணாவும் அம்மாளும் கர்த்தரும் சுகமாக இருக்கட்டும் வேதையா. நீ இந்த மழையிலே வேதக்கோவில் போகல்லேன்னா பாதிரி வந்து கழுத்தில் நேரியலை முறுக்கிப் போட்டு இழுக்க மாட்டார் கேட்டியோ.

ஜான் கிட்டாவய்யன் தேவாலயத்துக்குப் போவதை நிறுத்திவிட்டான். தெருவில் இறங்கி நாலெட்டு நடந்தே வெகு நாளாகி விட்டது. தினசரி சாப்பாட்டுக் கடைக்கு வண்டியில் போயிறங்கி கொஞ்ச நேரம் அங்கே போக்கிவிட்டு நேராக அதேபடிக்கு வீடு திரும்புவது மட்டும் வாடிக்கையாக இருந்தது. அவ்வப்போது மதராசிலும் தெலுங்கு தேசத்திலும் சுவிசேஷ சம்மேளனம் என்று அவன் போவது கூட அடியோடு நின்று போயிருந்தது. அங்கமாலியில் ஒரு தடவை புது தேவாலயம் எழுந்தபோது மாத்திரம் – அதுவும் அவன் பணம் கொடுத்து ஏற்படுத்தி வைத்ததுதான் – உடம்பு அவஸ்தையைப் பார்க்காமல் ஒரு நடை போய்விட்டு வந்தான் அவன்.

வேதத்தில் ஏறினதும் உறவு விட்டுப் போனதால் மற்ற சொந்த பந்தமும் ஏறக்குறைய இல்லாமல் போயிருந்தது ஜான் கிட்டாவய்யனுக்கு. அவனுடைய ரெண்டு புத்ரிகளும் இங்கிலீஷும் தத்துவ சாஸ்திரமும் கிரமமாகப் படித்து முடித்து தேவ ஊழியத்தில் இருக்கும்போது, சர்க்கார் உத்தியோகத்துக்கு வந்த துரைகளைக் கல்யாணம் கழித்து கப்பலில் சீமைக்குப் பயணமானதும் அவர்கள் குடும்பத் தொடர்பும் அநேகமாக விட்டுப் போனது. சீமையில் இருந்து எப்போதாவது கடிதம் வந்து போய்க் கொண்டிருந்ததுதான்.

ஆக, கிட்டாவய்யனைக் கட்டிய சிநேகாம்பாள் ஐந்து கொல்லம் முன்பாக மலைப்பனி கண்டு மரித்தபொழுது சொந்த பந்தம் என்று யாரும் வரவில்லை. தமையன் குப்புசாமி அய்யனின் சீமந்த புத்ரன் மகாதேவய்யன் இங்கே தான் எங்கேயோ இருப்பதாக யார் யாரோ சொல்ல உத்தேமாக விலாசம் எழுதி அவன் அனுப்பிய லிகிதம் எல்லாம் ‘இப்படியான விலாசதார் யாரும் இவிடம் இல்லை’ என்று முத்திரை குத்தி திரும்பி வந்துவிட்டன. இப்போது மகாதேவ அய்யனே தன்னை இனம் காட்டிக் கொண்டிருக்கிறான்.

கிட்டாவய்யன் வேதையனைக் கொண்டு அவனுக்கு எழுதுவித்த லிகிதம் இந்தவிதமாக இருந்தது –

பிரியமான மகாதேவா, கடிதாசு கண்டு ரொம்ப சந்தோஷம். தேகம் தளர்ந்து கிடக்கிறபடியால் எனக்கு வர முடியாமல் போய்விட்டது. ஆனாலும் கூட என் ஆசிர்வாதம் முழுக்க உனக்கும் உன் சகுடும்பத்துக்கும் எப்போதும் உண்டு. உன் பிதாவும் என் உசிர் போன்ற மூத்த தமையனாருமான குப்புசாமி ஐயர்வாள் பற்றியும் உன் தாயாரும் எனக்கு மாதா துல்யமானவளுமான விசாலாட்சி மன்னியைப் பற்றியும் நான் நினைக்காத நாள் இல்லை. உன் சித்தியும் என் மனையாளுமான சிநேகாம்பாள் அம்மாள் காலமான சமாசாரத்தை உனக்குத் தெரிவிக்க எத்தனை பிரயத்தனப்பட்டும் நிறைவேறாமல் போனது இன்னொரு பெருந் துக்கம். பழசில் சங்கிலிக் கண்ணியாக இருந்த எல்லோரும் சுவர்க்கம் போய்ச் சேர நான் மாத்திரம் இன்னும் உசிரைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கிறிஸ்து நாதர் பாதகமலத்தை அடைய பிரார்த்தனையும் ஜபமுமாக இருக்கிறேன். உன் ஷேமத்துக்கும் கூடி இன்றைக்குப் பிரார்த்தனை செய்கிறேன். இது இப்படி இருக்க, என் புத்திரனும் உன் தமையனும் கலாசாலை மலையாள வித்வானுமான வேதையன் உன்னை மங்கலாபுரத்திலோ கொல்லூரிலோ சந்தித்து ஷேமலாபம் விசாரித்துத் திரும்பி வருவதாக எனக்கு வாக்குத் தத்தம் செய்திருக்கிறான். வருகிற ஞாயிற்றுக்கிழமை பகலுக்கு அவன் மேல் யாத்திரை கிளம்பி’.

‘எடோ வேதையா, நீ உச்சைக்கு ஊண் கழிந்து நீ இறங்க வேணும் இல்லியோ? நேரமும் தூரமும் ஏகத்துக்கு இருக்கப்பட்ட பிரயாணம். அதை வைத்துக்கொண்டு இப்போது எதுக்கு மழையில் பிரார்த்தனைக்குப் புறப்பட்டது? கொஞ்சம் விச்ராந்தியாக கிடந்து எழுந்திருக்கலாமே.

கிட்டாவய்யன் தணுத்துக் கிடந்த சுவரில் சாய்ந்தபடிக்கு வேதய்யனைப் பார்த்து விசாரித்தான். வேதையன் அவன் கால் மாட்டில் உட்கார்ந்தான். அங்கே கிடந்த வயலினை அந்தப்படிக்கே நரம்பை மீட்டியபடி ‘அதென்ன கீர்த்தனம் அம்மாள் விஷயமாக? பல்லவி அனுபல்லவி மாத்திரமாவது சொல்லுமே’ என்று சிரிப்பு மாறாமல் கேட்டான்.

பரிபூரணம் ஊரில் இருந்தால் அவன் கூட ஒத்தாசையாக உடனே எட்டுக்கட்டி நாலலந்து வரி பாடிக் கேள்பித்திருப்பாள். மாமனார் எதிரில் வர சங்கோஜம் என்றாலும் திண்ணைக்கு உள்புறமாக நின்றபடிக்கே அவள் பிரியமாக இவர்களின் வர்த்தமானத்தில் கலந்து கொள்வது வழக்கம்.

எடோ, கொல்லூர்லேருந்து திரும்பறச்சே வைக்கம் போய் ஒரு விசை பரிபூரணத்தையும் பார்த்துட்டு வந்துடேன். நிறைசூலி. ஆம்படையான் வந்தால் சந்துஷ்டியோடு என் பேரனையோ பேத்தியையோ பெற்றுக் கையில் கொடுப்பாள்.

கிட்டாவய்யன் வேதையனின் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னான். அந்தக் கையில் இருந்த ஆறாவது விரல் அவன் சொன்னது சரிதான் என்பது போல் தன்பாட்டுக்கு ஆடியது.

‘பரிபூரணம் உம் பேரனோடு மட்டும் வரமாட்டாளே. பூண்டு, வெங்காய வாடையையும் திரும்ப இங்கே கொண்டு வந்து சேர்த்து விடுவாளே, சரிதானா சொல்லும்’. வேதையன் கேட்டான். இந்த மழையில் எங்கேயும் போகாமல் இந்தப்படிக்கே உட்கார்ந்து வார்த்தை சொல்லிக் கொண்டு ஓய்ச்சலாக இருக்க மனசு ஆசை காட்டியது.

‘பூண்டு இருந்தா ஒதுக்கிட்டு மத்ததைச் சாப்பிட்டா போச்சு. அது சாப்பிடாமலேயே கிறிஸ்தியானியா இருக்க முடியாதா என்ன?

ஜான் கிட்டாவய்யன் வயலினை திரும்ப எடுத்தான். அவனுக்குள் இன்னும் அம்பலப்புழை தேகண்ட பிராமணன் கிட்டாவய்யன் பூணூலோடு சிரித்தான்.

(தொடரும்)


Series Navigation