குஸ்தி

This entry is part [part not set] of 31 in the series 20080807_Issue

தமிழில்: மு.குருமூர்த்தி



“எதிர்பாருங்கள்…விரைவில் எதிர்பாருங்கள்…காணக்கிடைக்காத குஸ்திப்போராட்டம்…”

பப்புபிள்ளையின் டீக்கடையில் உட்கார்ந்துகொண்டு ஒரு வாலிபன் குஸ்தி நோட்டீஸ்
வாசித்துக்கொண்டிருந்தான்.

அடுப்பிற்கு பக்கத்தில் உட்கார்ந்து தோசை சுட்டுக்கொணடிருந்தான் பப்புபிள்ளை.
அவனுடைய குரல் ஓங்கி ஒலித்தது.
“கொஞ்சம் சத்தமா படிங்க சார்…நானும் கேக்கறேன்.”

வாலிபனின் குரல் உயர்ந்தது.
“விளையாட்டுக்கலை ரசிகர்களுக்கு……….கண்ணையும் கருத்தையும் தட்டிப்பறிக்கும்
ஒரு போட்டி..நழுவவிடாதீர்.”

டீக்கடையை ஒட்டியிருந்த பெட்டிக்கடையில் குனிந்தவாறு பீடியிலை வெட்டிக்
கொண்டிருந்த அத்துருமான் தலைநிமிர்ந்து பார்த்தான்.
“குஸ்தியா சார்?… எங்கே?”

அதைக்காதில் வாங்காத பாவனையில் வாலிபன் தொடர்ந்து வாசித்தான்.
“காணக்கிடைக்காத ஒரு மல்யுத்தப்போட்டி… வெற்றிதோல்வியை தீர்மானிக்க
முடியாத ஒருஆக்ரோஷமான மல்யுத்தம்… இதுவரை கண்டதில்லை…
இனியும் காணப்போவதில்லை…”

அத்துருமான் கையில் கத்தரிக்கோலுடன் எழுந்து வந்தான்.
“அப்படின்னா … நானும் பாக்கணும். எங்கே சார்…எங்கே சார் நடக்கப்போவுது?”

ஒருகரண்டி தோசைமாவை கல்லில் ஊற்றிப் பரப்பிவிட்டு பப்புபிள்ளை வாலிபனின்
பக்கத்தில் வந்து நின்று கொண்டான்.
“ஆக்ரோஷமான குஸ்தியா…அப்படின்னா…நானும் பாக்கணும். பயில்வானுக யாராரு?”

“படிங்க சார்…படிங்க…”அத்துருமானும் பக்கத்தில் வந்து நின்று கொண்டான்.

வாலிபன் தொடர்ந்து வாசித்தான்.
“மையநாட்டு ஹனுமான் விலாஸம் ஸ்டேடியத்தில் தனுமாதம் ஒண்ணாம் தேதி
ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு….ஆக்ரோஷமான மல்யுத்தம்…
கூட்டத்தை அடக்கிவைக்க போலீஸ்காரர்கள் வருவார்கள்.”

அத்துருமானுக்கு பொறுமையில்லை.
“பயில்வான்களோட பேரு வாசியுங்க சார்…”

“இனிமேல் அதைத்தான் வாசிக்கப்போறேன்.”
வாலிபன் சிரித்துக்கொண்டே வாசிப்பைத் தொடர்ந்தான்.
“பயில்வான்கள்…ம்ம்….ம்ம்…..”

“கொஞ்சம் இருங்க…”
பப்புபிள்ளை ஓடிப்போய் கல்லில் கிடந்த தோசையை திருப்பிபோட்டுவிட்டு வந்தான்.

“ம்ம்…படியுங்க சார்…”
வாலிபன் சிரிப்பை அடக்கிக்கொண்டு வாசித்தான்.
“அகில கேரளத்திலும் புகழ்க்கொடிநாட்டி அகில இந்தியாவிலும் பெயர்பெற்ற
மலையாளிகளுடைய மனம் கவர்ந்த காமா பயில்வான் மேக்காட்டு நாணுப்பிள்ளை…”

பப்புப்பிள்ளை துள்ளிக்குதித்தான். அவனுக்கு சந்தோஷத்தில் மூச்சு முட்டியது.
“பேஷ்..பேஷ்…நாணுப்பிள்ள சேட்டன்னு சொல்லிட்டா கேக்கவே வேண்டாம்…ஜெயிக்க்ப்
போவது யாருங்கிறது தெரிஞ்சுபோன விஷயம். மேக்காடன் யானைய தூக்கி அடிக்கிறவன்.”

அத்துருமான் கிண்டலாக சிரித்தான்.
” பிள்ளே…கொஞ்சம் அடக்கி வாசிடா..எதிர்க்குற பயில்வான் யாருன்னு கேட்றலாம்.”

பெட்டிக்கடைக்காரன் குஞ்சுமொய்தீன் காசு எண்ணிக்கொண்டிருந்தான்.
எண்ணிய காசை பெட்டியில் வைத்துவிட்டு நிமிர்ந்தான்.
“என்னடா அத்துருமான் அங்கே…?”

அத்துருமான் வாய்விட்டுச்சிரித்தான்.
“கேட்டியாண்ணே…ஒரு வேடிக்கை. மேக்காடன் யானையைத்தூக்கி பந்தாடுவானாம்.”

“ஏன்…பந்து கெடைக்கலேண்ணு யானையைத்தூக்கி விளையாடுவானாக்கும்?
அது இருக்கட்டும்… சேதியெச்சொல்லுடா.”
குஞ்சு மொய்தீனும் நோட்டீஸ் வாசித்துக்கொண்டிருந்தவனுடைய பக்கத்தில் வந்து
நின்றுகொண்டான்.

வாலிபன் தொடர்ந்து வாசித்தான்.
“பஞ்சாப் சிங்கம் என்ற புகழ்பெற்ற பயில்வான் முகம்மது ஹுசைன்…”

“அடடா…நம்ம முகம்மது ஹுசைனா! “குஞ்சு மொய்தீன் ஹா ஹா என்று சிரித்தான்.
“மேக்காடனை தூக்கி அடிக்கிறவனாச்சே”

ஆமோதிக்கிற பாவனையில் அத்துருமான் தலையாட்டினான்.
“பத்து மேடக்கானை சுருட்டி கக்கத்திலெ வச்சிகிட்டுப் போறவன் ஹுசைன்… தெரியுமா?”

பப்புபிள்ளையின் முகம் சுருங்கிப்போயிற்று.
மறுக்கிற பாவனை அந்த முகத்தில் தெரிந்தது.
“மேடக்கானெ சுருட்டி கக்கத்திலெ வைக்கிறதுக்கு பிரம்மா வந்தாலும் முடியாது
தெரிஞ்சுக்கடா.”

குஞ்சுமொய்தீனுடைய புருவங்கள் நெளிந்தன.
“ஒங்க பிரம்மாவாலெ முடியாதது எங்களோட ஹுசைனாலெ முடியும்…தெரியுமாடா?”

“அப்படிச்சொல்லுண்ணே. அதுதான்சரி” அத்துருமானின் குரலில் வீரம் கொப்புளித்தது.

பப்புபிள்ளையின் உடம்பு குலுங்கியது.
“ஒங்களோட ஹுசைனும் அல்லாவும் சேந்து வந்தாக்கூட எங்களோட மேடக்கானோட
பெருவிரலெ மடக்கமுடியாதுடா…”

அத்துருமான் மொய்தீனை தள்ளிக்கொண்டு முன்னால் பாய்ந்தான்.

“டேய் பொறுடா அத்துருமானே.” மொய்தீன் அவனை அடக்கினான்.

அத்துருமான் துள்ளிக்குதித்தான்.

“இல்லேண்ணே, இந்த காபரு சொன்னதெக்கேட்டியா அல்லா வந்தாலும் மேடக்கானோட
பெருவிரலெ மடக்கமுடியாதுன்னு சொன்னதெ…”
பப்புபிள்ளை இன்னும் வேகமாக தாண்டிக்குதித்தான்.
“மடக்கமுடியாதுன்னு சொல்லலே… பெருவிரலுக்கு சமமில்லேன்னு சொன்னேன்…”

அத்துருமான் இன்னும் முன்னோக்கிப்பாய்ந்தான்.
“இன்னொரு தடவை சொல்லுடா பாப்போம்…”

குஞ்சுமொய்தீன் மறுபடியும் அத்துருமானை அடக்கினான்.
“டேய் நீ பேசாம இருடா…சொல்றேன்லே…”

“இல்லேண்ணே. அந்த நோட்டீசப்பாரு. மேடக்கானெ காமா ன்னு போட்டிருக்கு.
காமாங்கறது இஸ்லாமில்லயா. இஸ்லாம் பேரு காபருக்கு எப்படி வைக்கலாம்?”

“டேய் மனுசனோட பெயரெ நாய்க்கு வெக்கிறதில்லையா?”என்றான் குஞ்சு மொய்தீன்.

பப்புபிள்ளைக்கு இதற்குமேல் அடங்கியிருக்கமுடியவில்லை.

“ஏய்…பன்னி..” என்றபடி குஞ்சுமொய்தீன்மேல் பாய்ந்தான்.

நோட்டீஸை வாசித்துக்கொண்டிருந்த வாலிபன் துள்ளிஎழுந்து பப்புபிள்ளையை
சமாதானப்படுத்தினான்.

“ஏய்..என்னடா பைத்தியக்காரத்தனம்?… யாரோ எங்கேயோ குஸ்திபோட்டா உங்களுக்கு
என்னடா?’

“எங்களுக்கு என்னவா…அந்தப்பன்னி சொன்னதெக்கேட்டியா”

குஞ்சுமொய்தீன் முன்னோக்கிப்பாய்ந்தான். பப்புபிள்ளையின் கன்னத்தில் ஒரு குத்து
விழுந்தது.

இரண்டு மூன்று நிமிஷங்களில்…
பப்புபிள்ளையின் கையில் இருந்த தோசை திருப்பி உயரே ஏறியது. அதே வேகத்தோடு
குஞ்சுமொய்தீனின் தலையில் இறங்கி நின்றது.

“அல்லா…”
குஞ்சுமொய்தீனின் தலை பிளந்தது. ரத்தம் சிதறித்தெறித்தது.

அவன் மல்லாந்து விழுந்தான்.

“கொல்லுடா…அந்தப்பன்னியெ கொல்லுடா…” குஞ்சுமொய்தீன் கூவினான்.

அத்துருமானின் கை உயர்ந்து தாழ்ந்தது. பீடியிலை வெட்டுகிற கத்தரிக்கோல்
பப்புபிள்ளையுடைய வயிற்றில் பாய்ந்து இறங்கியது.

பப்புபிள்ளை மல்லாந்து விழுந்தான். உக்கிரமாக அலறியபடி அத்துருமான்
பப்புபிள்ளையுடைய நெஞ்சில் ஏறி உட்கார்ந்து கத்திரிக்கோலால் ஓங்கி
குத்தினான்.

டீக்கடை ரத்தக்களமாகிப்போனது
பொது இடங்கள் கொலைக்களமாகிப்போயின.
கோவில்கள் கசாப்புக்காரர்கள் சந்திக்கும் இடமாகிப்போனது
ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டனர்.
அடுத்தவீட்டுக்காரர்கள் ஒருவரை ஒருவர் குத்திக்கொண்டனர்.

அன்று மாலையில் இந்தக்கலவரம் பட்டணத்தைக்கடந்து கிராமங்களுக்கும்
பரவியது.
கோவில்கள் பற்றியெரிந்தன.
அலறல்கள், ஆவேசக்கூச்சல்கள், அபயக்குரல்…ஓலங்கள்.
நாட்டில் மனிதர்கள் இல்லாமற்போனார்கள்.
ஒருவர் கழுத்தை மற்றவர் அறுக்கும் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் மட்டுமே
அங்கே இருந்தனர்.

தங்களுடைய எஜமானர்களுக்கு பைத்தியம்பிடித்ததைப்பார்த்த நாய்கள் கூட
ஓலமிட்டு அழுதன.
.
மனிதர்கள் பிசாசுகளாக மாறிப்போன அவலத்தை யாரும் பார்க்கக்கூடாதென்று
நித்திரை தேவியின் இருள் கரங்கள் மறைத்துக்கொண்டன.

அடுத்தநாள்…கலவரச்செய்தி பத்திரிக்கைகளில் வெளியாகின.

“பயங்கரமான ஹிந்து-முஸ்லிம் கலவரம்…”
“கிராமங்களுக்கும் கலவரம் பரவுகிறது…”
“மூன்று இடங்களில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியது…”
“.பதினான்கு நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு…”
“இறந்தவர்களின் எண்ணிக்கையும், காயமடைந்தவர்களின்
எண்ணிக்கையும் தெரியவில்லை…”
“நிலைமை இன்னும் கட்டுக்குள் வரவில்லை…”

செய்திப் பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்திகள் இப்படிப்போயின.

கலவரத்திற்குக் காரணம் யாருக்கும் தெரியவில்லை.
யாரும் அதைப்பற்றி கேட்கவுமில்லை.
கேட்டவர்கள் கேட்டவர்களைக்கொன்றனர்… கொல்லப்பட்டனர். அவ்வளவுதான்.

காதரும் கோவிந்தனும் மரச்சீனி வியாபாரத்தை முடித்துக்கொண்டு திரும்பி
வந்துகொண்டிருந்தார்கள்.
இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கலவரம் ஆரம்பித்துவிட்டது.
கோவிந்தன் இந்துக்களின் பக்கம் சேர்ந்துகொண்டான். காதர் முஸ்லிம்களின் பக்கத்தில்.

குத்துப்பட்டு இருவரும் இறந்து போனார்கள்.

சீட்டு விளையாடிக்கொண்டிருந்த மூன்று இந்துக்களும் ஒரு முஸ்லிமும்
கலவரச்செய்தி கேட்டனர்.
வாக்குவாதம் முற்றியது.

கடைசியில் சீட்டு விளையாடிய இடத்தில் இரத்தவெள்ளத்தில் குளித்த
இரண்டு சடலங்கள் மட்டும் கிடந்தன.

மதமாச்சரியம் அணு அணுவாக ஒவ்வொரு நிமிடமும் பரவிக்கொண்டிருந்தது.

குஸ்தி நோட்டீசு வாசித்த வாலிபன் ரொம்பவும் கவலையோடு சாலையோரமாக நின்று
கொண்டிருந்தான். கொஞ்சதூரத்தில் ஆரவாரம் கேட்டது.

ஆயுதம் தூக்கிய மனிதப்பிசாசுகள் கூடப்பிறந்தவர்களின் குரல்வளையை அறுப்பதற்காக
கூட்டமாக வருவதற்கான அறிகுறி அது.

அலறல்களும், வெறிக்கூச்சல்களும்…
அப்பப்பா…
எல்லோருக்கும் நோய்முற்றிப்போயிருந்தது.

அந்த வாலிபன் ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்துகொள்ள முற்பட்டான்.
கூட்டம் அவனைக் கண்டுபிடித்துவிட்டது.

“பிடிங்கடா அவனை..” ஒரு வெறிக்கூச்சல்.
“விடாதே…அவனை” ஒரு கர்ஜனை.

கொஞ்சம்பேர் வாலிபனை வளைத்தனர்.
ஒரு கட்டாரி அவனுடைய நெஞ்சிற்கு மேலே உயர்ந்து தாழ்ந்தது.

சட்டென்று ஒருவன் அந்த கட்டாரியைத் தட்டிவிட்டான்.
“வேண்டாம்டா…வேண்டாம்…அவன் ஹிந்துடா…”

“அப்படீன்னா அவன் கையிலும் கொடு ஒரு கட்டாரியெ.” வேறொரு ஆள் சொன்னான்.

வாலிபன் முகத்தில் சோகமான புன்னகை.
“எனக்கு கட்டாரி, பிச்சுவா எல்லாம் வேண்டாம்.”
அவனுடைய குரலில் உறுதி தெரிந்தது.

“வாங்குடா கட்டாரியெ” ஒரு கர்ஜனை கேட்டது.

“எனக்கு கட்டாரியெல்லாம் வேண்டாம்.” வாலிபனின் குரல் உயர்ந்தது.
“ஆயுதங்களைப்போட்டுவிட்டு எல்லோரும் வீட்டிற்குப்போங்கள்.”

“ச்சீ…நீ யாரடா அதைச்சொல்ல…”

“நான் உங்களில் ஒருவன். உங்களின் சகோதரன்.”

“அப்படியானால் கட்டாரியெ வாங்கிக்கொண்டு நட. பைத்தியங்களைக் கொல்லணும்.}

“அவர்களும் என்னுடைய சகோதரர்கள்தான்.”

“அப்படின்னா நீயும் சாவணும்…குத்துங்கடா அவனை.”

வாலிபனின் மார்பில் ஒரு பிச்சுவா ஓங்கி இறங்கியது.

“அய்யோ” வாலிபன் அலறினான்.

மல்லாந்து வீழ்ந்த வாலிபன் இரத்தவெள்ளத்தில் கிடந்து நெளிந்தான்.

“கூடப்பிறந்தவங்களெக் கொல்லாதீங்கடா.”

பேயைப்போல் சிரித்துக்கொண்டு கலகக்காரர்கள் ஓடிப்போனார்கள்.

கொஞ்சதூரத்தில் இன்னொரு கூக்குரல் கேட்டது.”அல்லாஹூ …அக்பர்…”

“பைத்தியங்கள்…பைத்தியங்கள்…”
வாலிபனின் கண்கள் மூடின. குரல் அடங்கியது.

பைத்தியம் தெளிந்தது.
அமைதி திரும்பியது.
அது மயானத்தை நினைவு படுத்தியது
ஓடிய இரத்தம் மண்ணில் கலந்து மண்ணாகிப்போனது.
இனிமேலும் வடிப்பதற்கு கண்ணீர் இல்லாமல் போனது.
பிசாசுகள் ஓடித்திரிந்த இடங்களில் மனிதர்கள் நடந்துபோகத் தொடங்கியிருந்தனர்.

பப்புபிள்ளையும், குஞ்சுமொய்தீனும் வைத்திருந்த கடைகளில் கரிக்கட்டைகளும்,
சாம்பலும், அஸ்தியின் மிச்சமீதங்கள் மட்டுமே கிடந்தன.
கடைகளும், அவைகளோடு கடைக்கார்களின் சடலங்களும் எரிந்துகிடந்தன.

சற்றுத்தொலைவில் தீச்சுவாலையில் பற்றியெரிந்து இலைகருகிப்போன ஒரு
மாமரத்தினடியில் கொஞ்சம் மூங்கிலும், கீற்றுகளும் கிடந்தன.

முகம்மது ரோட்டில் நடந்து வந்துகொண்டிருந்தான். குஞ்சுமொய்தீனின் மகன் அவன்.
பதினேழாம் வயதில் விதவையாகிப்போன தாயையும் மூன்று தம்பிகளையும்
கட்டிக்காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவன் தலையில் விழுந்திருந்தது.

கடை இருந்த இடத்திற்கு வந்த முகம்மது சுற்றுமுற்றும் பார்த்தான். அவனுடைய
கண்களில் கண்ணீர் பெருகியது. தந்தையின் சிதைச்சாம்பலில் தனயனின் கண்ணீர்த்
துளிகள் விழுந்து அஞ்சலி செலுத்தியது.

கோபாலன் கீற்றையும் மூங்கிலையும் தூக்கிகொண்டு வந்ததை முகம்மது பார்க்கவில்லை.

“என்னடா முகம்மது…ஏண்டா அழுகிறெ…?” கோபாலன் ஆறுதலாகக்கேட்டான்.

“இதப்பாரு பிள்ளை. அழாம எப்படி இருக்கமுடியும் பிள்ளை” கண்ணீரைத்துடைத்துக்
கொண்டே கோபாலன் சொன்னான்.

“இனிமே அழுது என்னாகப்போகிறது?… சாகவேண்டியவரெல்லாம் செத்துப்போனார்கள்.
நாம நமக்குள்ள வேலையைப்பார்ப்போம்.”

அவன் தலைமீதிருந்த கீற்றுக்கட்டையும், மூங்கிலையும் மாமரத்தடியில் போட்டு
விட்டு வந்தான்.

முகம்மதுவிற்கு ஆறுதலாக கோபாலன் சொன்னான்.
“அழாதேடா முகம்மது…அழாதே…”

“எப்படி அழாமல் இருக்கமுடியும் பிள்ளை… அம்மாவும், மூணு சின்னஞ்சிறுசுகளும்…
எப்படி எல்லாரேயும் காப்பாத்தப் போகிறேன்னு தெரியல்லே.”

“”முகம்மது…எனக்கும் அம்மா இருக்காங்க. ஒரு தங்கச்சி இருக்கா. அண்ணங்க
ரெண்டுபேரும் செத்துப்போய்ட்டாங்க.”

“இனிமே என்ன செய்யப்போறோம் பிள்ளை?”

“அண்ணனோட தொழிலைத்தான் நான் செய்யப்போறேன்.”

“கீத்தும் மூங்கிலும் அதுக்குத்தானா?”

“கடைக்காக ஒரு கொட்டகை போடணும்.”

“பிள்ளை. எனக்கு அதுக்குக்கூட வழியில்லை. கீத்துமில்லை…மூங்கிலுமில்லை.”

கோபாலன் முகம்மதுவின் கையை ஆதரவோடு பற்றிக்கொண்டான்.
“கவலைப்படாதே முகம்மது…நமக்கு ஒரு கடை போதும். பாதி எனக்கும்
மறுபாதி உனக்கும்… சரிதானே?”

நிறைந்த கண்களோடு முகம்மது கோபாலனின் முகத்தைப்பார்த்தான்.
“பிள்ளை…உனக்கு சம்மதமென்றால்…..”

“எனக்குசம்மதம் முகம்மது. ஒன்னோட வாப்பாவும், என்னோட அண்ணனும் ஒருதாயோட
பிள்ளைகள் மாதிரியில்லையா பழகினாங்க.”

“பழகி என்ன செய்யறது பிள்ளை. கிறுக்குபிடிச்சிபோயி ஒருத்தரை
ஒருத்தரில்லே குத்திக்கொண்டாங்க கடைசியிலே.”

“அது சரிதான் முகம்மது. எங்கோ யாரோ குஸ்திபோட்டுக்கப்போய் முகம்மதுவின்
வாப்பவும் என்னோட அண்ணனும் குத்திக்கொண்டது கிறுக்குத்தனமில்லையா?”

“அதைவிட கிறுக்குத்தனம் அது ஊரு முழுக்கப்பரவிப்போனது.”

“இது வரக்கூடாத கிறுக்கத்தனம் முகம்மது….மனிதர்கள் மனிதர்களையே கொல்லும்
கிறுக்குத்தனம்.”

“வடக்கே இதுபோல ஒருதடவை கிறுக்குபிடித்தது என்று கேள்விப்பட்டிருக்கோமில்லையா?”

“ஆமாம்…வங்காளியும்…பீகாரியும்.”

பப்புபிள்ளையின் தம்பியும், குஞ்சுமொய்தீனின் மகனும் ஒருத்தரை ஒருத்தர் கழுத்தறுக்கும்
பைத்தியக்காரத்தனத்தைப்பற்றி புலம்பித்தீர்த்தனர்.

பழைய கடை இருந்த இடத்தில் கிடந்த சாம்பலையும், கரிக்கட்டைகளையும், அஸ்தி துண்டுகளையும்
வாரி அள்ளி எறிந்தன்ர். இரண்டு பேரும் சேர்ந்து புதிய கடைக்கு தூண்களை நட்டனர்.
அன்று சாயுங்காலம் அங்கே ஒரு புதிய கடை உருவாகி இருந்தது.

அடுத்தநாள் காலையில் கோபாலனின் டீ வியாபாரமும், முகம்மதுவின் வெற்றிலை பாக்குக்கடையும்
வியாபாரத்தை ஆரம்பித்தன.

கடையின் முன்புறம் தொங்கிக்கொண்டிருந்த ஒரு காகிதத்தில் இப்படி எழுதியிருந்தது.
“பைத்தியங்களுக்கு அனுமதி இல்லை.”


cauverynagarwest@gmail.com

Series Navigation

தமிழில்: மு.குருமூர்த்தி

தமிழில்: மு.குருமூர்த்தி