ந‌ம்பினோர்…..

This entry is part [part not set] of 31 in the series 20080807_Issue

ஆதிபுரீஸ்வரன்


தெருவில் மிகவும் அழகாக படம் வரைவான் அவன்! அவன் வரைந்த ஒவ்வொரு தெய்வ உருவங்களும் தனித்தன்மையுடன் காட்சியளித்தன. என்னுடைய செல்ஃபோனில் அவனுடைய படங்களை எல்லாம் படம்பிடித்துக் கொள்வேன். அவ்வளவு உயிரோட்டமாக எனக்கு அவை தெரிந்தன.

என்னால் முடிந்த‌ பணத்தினை அந்த படங்களின் மீது விட்டெறியாமல் அவன் கைகளில் கொடுத்து விட்டு வருவேன். என்னைப் பார்க்கும் போதெல்லாம் அவன் கண்கள் கலங்கி இருக்கும். நான் கொடுக்கும் இரண்டு ரூபாய்க்கும், ஐந்து ரூபாய்க்கும் நிச்சயமாக அவன் கலங்கி இருக்க மாட்டான். அனைத்து உருவங்களுக்கும் உள்ளே இருக்கும் இறைவன் காட்டும் அன்பாகத்தான் அது எனக்குத் தோன்றும்.

வரைவது என்பது வெறும் கோடுகளையும், வடிவங்களையும், வண்ணங்களையும் சரியாக தருவது மாத்திரம் அல்ல என்பது என் தீர்மானம். ஓவியத்தில் உயிரோட்டம் என்பது அந்த படைப்பாளியின் அக்கறையிலிருந்து உருவாவது. ஓவியன் ஒரு தாய் போல தன் படைப்பிற்கு உயிர் தருகிறான்.

இந்த தெரு ஓவியன் அத்தகைய ஒரு தாய் என்று எனக்குத் தோன்றும். அவன் அந்த அம்மன் கோவில் அருகிலிருக்கும் நடைப்பாதைக்கு வந்து ஒரு மூன்று மாதம் தான் ஆகியிருக்கும். அதற்கு முன் எங்கிருந்தானோ! அவன் அதிகம் பேசி நான் கேட்டதில்லை. எனக்கும் அவ்வளவாக பேசும் பழக்கமில்லை. ஒரு இரசிகனுக்கும் ஒரு படைப்பாளிக்கும் இடையேயான ஒரு பந்தம்தான் எனக்கும் அவனுக்கும் நடுவில்!

அதனால் இன்று என் மனம் மிகவும் கனத்து போய்விட்டது. தன் படைப்பிற்கு உயிர் தந்துக் கொண்டிருந்த அந்த பிரம்மன் இன்று தன் உடலுக்கு உயிர் இல்லாமல் கிடக்கிறான்.

அருகிலிருந்த ரிக்ஷாக்கார தாத்தா என்னை பார்த்து,

“ஒரு அஞ்சு நிவிசம் முன்னால தான்.., சார், என்னமோ பண்ணுதுன்னு சொல்லிச்சு! சரின்னு சொல்லி டீ கொண்டாந்தேன். உசுரு பூடுச்சு! பாவம்! டீ கூட குடிக்கலை!”, என்றார்.

எதிரிலிருந்த பங்க் கடைக்காரர்,வேட்டியை மடித்து கட்டியவாறு,

” கார்ப்பொரேஷனுக்கு ஃபோன் பண்ணி சொல்லிடடுங்களா?”, என்றார்.

“வேணாங்க! நானே என் செலவிலே பண்ணிடறேன்”, என்றேன்.

ஒன்றும் பேசாமல் என்னை பார்த்த கடைக்காரர், ஏதோ சொல்ல வந்து, ஒன்றும் சொல்லாமல் தலையாட்டி விட்டு சென்றார். நான் செய்வது ஏதோ வேண்டாத வேலை போல் அவருக்கு தோன்றியிருக்கலாம்.

“ஏன் சார்? போலீசுக்கு சொல்லத் தாவலை?”, ரிக்ஷாக்காரர் கேட்டார்.

“எனக்கு தெரியலைப்பா! என் ஃப்ரெண்டை வரச் சொல்லியிருக்கேன்! அவன் வந்தப்புறந்தான் என்ன ஏதுன்னு பார்க்கணும்”, என்றேன்.

அதற்கு அவசியமேயில்லாமல் போய்விட்டது. படபட வென்ற சத்தத்துடன் அருகில் வந்து நின்ற மோட்டார் சைக்கிளிலிருந்து எங்கள் பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் இறங்கினார்.

“என்னங்க விஷயம்?”

விவரமாக சொன்னோம்.

“நீங்க உங்க கைக்காசைப் போட்டு காரியம் பண்ணப் போறீங்களா? எதுக்குங்க வீணாய்?”, உச்சு கொட்டியவாறு பேசினார், இன்ஸ்பெக்டர்.

“ஏதோ பண்ணனும்னு தோணிச்சு”,என்றேன்.

“புண்ணியம் சேக்கறீங்க போலிருக்கு! செய்யுங்க! என்னாலே முடிஞ்ச உதவி நான் பண்ணறேன்”, என்றார்.

ஒரு மீன் பாடி வண்டியை கூப்பிட்டு இன்ஸ்பெக்டர் உடலை அதில் ஏற்ற உதவினார். உடலை ஏற்றும் போது இடுப்பு பகுதியில் இருந்த சட்டை விலகியது. அப்போது தெரிந்த நாலைந்து தழும்புகளைப் பார்த்த இன்ஸ்பெக்டர்,

“ஒரு நிமிஷம் நில்லுப்பா!” என்றவர், ஓவியனின் முகத்தை புரட்டி உற்று பார்த்தார்.

“நீ ஸ்டேஷனுக்கு வண்டியை விடு!” என்று வண்டியோட்டிக்கு உத்தரவிட்டார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன விஷயம் இன்ஸ்பெக்டர்?”, என்றேன்.

“நீங்களும் கொஞ்சம் ஸ்டேஷனுக்கு வந்துட்டு போங்க”, என்றவர் மோட்டார் பைக்கை கிளப்பிக் கொண்டு போய்விட்டார்.

ஸ்டேஷனுக்கு நான் நடந்து செல்வதற்குள் கால் மணி நேரம் ஓடி விட்டது. இன்ஸ்பெக்டரின் முகம் இறுகி இருந்தது. என்னை பார்த்தவர், எதிரிலிருந்த நாற்காலியில் அமருமாறு பணித்தார்.

வினாக்குறியோடு அவர் முகத்தை பார்த்த என்னிடம்,

“தேவையில்லாமல் ஒரு வம்பில் மாட்டிக் கொள்ள இருந்தீங்க!”, என்றார்.

‘என்ன?’ என்பது போல் பார்த்தேன்.

வாசலில் மீன் பாடி வண்டியில் இருந்த உடலை சுட்டி காண்பித்த இன்ஸ்பெக்டர்,

“அவன் நீங்க நினைக்கறா மாதிரி தெருவிலே வரையறவன் இல்லை! தீவிரவாதின்ற பேர்லே அநியாயம் பண்ணினவன்! ஏகப்பட்ட கொலை, கொள்ளை, கற்பழிப்பு கேஸ் அவன் பேரிலே நிலுவையிலே இருக்கு! இருபது வருஷமா ஆள் சிக்கவே இல்லை! ஏதோ காரணத்தாலே கால் இரண்டும் செயல்பட முடியாம போனதாலே இப்படி ஒதுங்கி இருக்கான். இல்லை, வேற சதி திட்டத்துக்கோசரங் கூட இப்படி இருந்திருக்கலாம். இவனை மாதிரி ஆளு திருந்தவே வாய்ப்பில்லைங்கறேன்”, என்றார் கடுப்புடன்.

“திடீர்னு எப்படி கண்டுப்பிடிச்சீங்க?”, என்றேன் அதிர்ச்சியுடன்.

“மீன் பாடி வண்டியிலே ஏத்தும் போது சொக்காய் விலகிச்சில்லே…அப்போ இடுப்பிலே குண்டு காயம் நாலஞ்சு இருந்ததை பார்த்தேன். சந்தேகம் வந்திடுச்சு. ஸ்டேஷ்ன்லே வந்து
கம்ப்யூட்டர்லே பார்த்தப்புறம் தான் யார்னு விஷயம் தெளிவாச்சு!”

என்னை அருகில் அழைத்து கம்ப்யூட்டரில் அவனது உருவத்தை காண்பித்தார்.

“கீரை ராசுன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா? அந்த பொறம்போக்குதான் இது!”

“ஓ”, என்றேன் அதிர்ச்சி குறையாமல்.

“இவ‌னை பார்த்திருக்கீங்க‌ளா?”

“ம்! பேப்ப‌ர்லே இவ‌ன் ஃபோட்டோவை முன்னே பார்த்திருக்கேன். ஆனால் பார்த்த‌போது க‌ண்டுபிடிக்க‌ முடிய‌லை. மீசையும் தாடியுமா ரொம்ப‌ முக‌ம் மாறியிருக்கு”

“அதான். போலீஸ் எங்க‌ளுக்கே ச‌ட்டுனு க‌ண்டுப்பிடிக்க‌ முடியாது. உங்க‌ளாலே முடிய‌லைன்னா ஆச்ச‌ரிய‌மே இல்லை”

“மூணு மாச‌மா ப‌ழ‌கியிருக்கேன். எந்த‌ வித‌த்திலுமே க‌ண்டுப்பிடிக்க‌ முடிய‌லையே!”, என‌க்கு நானே சொல்லிக்கொண்டேன். மெய்யாக‌வே அதிர்ச்சியாக‌ இருந்த‌து.

“இதுக்குத்தான் விவரம் தெரியாமல் சமுதாய சேவை அது இதுன்னு மாட்டிக்க கூடாது! எனக்கு உங்களைப் பத்தி தெரியுங்கறதாலே விஷயம் இதோட போச்சு! வேற யார்க்கிட்டேயாவது மாட்டியிருந்தீங்கன்னா, உங்களையும் சந்தேகப்பட்டிருப்பாங்க! கோர்ட், கேஸ், விசாரணைன்னு வெந்து போயிருப்பீங்க!”

ஒன்றும் பேசாமல் அமைதியாயிருந்தேன்.

“என்ன ஒண்ணும் பேச மாட்டேங்கறீங்க?”. இன்ஸ்பெக்டருக்கு என்னை நன்றாக தெரியுமாதலால் என்னை சமாதானப்படுத்த பேச்சு கொடுத்தார்.

“இல்லை! அவன் வரைஞ்ச ஓவியங்களை மூணு மாசமா பார்த்துக்கிட்டிருக்கேன். மனம் கெட்டுப் போனவனால் அப்படி உயிரோட்டமாக ஓவியம் வரைய முடிந்திருக்குமா? கெட்டவர்கள் என்றுமே கெட்டவர்களாகவே இருக்க வேண்டுமா என்ன? திருந்தியிருக்கலாமே?”

“என்னங்க இப்படி பேசறீங்க? இவன் எப்பேர்ப்பட்டவன் தெரியுமா? வெறும் கொலை, கொள்ளை மாத்திரம் இல்லை. கற்பழிக்கவும் தயங்காதவன். பதிமூணு வயசு பொண்ணை நாசாமாக்கியிருக்கிறான் தெரியுமா? கால் ஒடிஞ்சு போனதாலே நல்லவன் வேஷம் போட்டிருக்கான். எல்லோரையும் நம்பறது நல்ல குணம்தான். ஆனால் நீங்க ரொம்ப ஓவர். உலகத்தை புரிஞ்சு நடந்துக்குங்க. நல்ல குணங்கறது ஒரு தாங்கு சக்திக்கு உட்பட்டதுதான். அளவு மீறி போய் நீங்க பாதிக்கப்பட்டீங்கன்னா உங்களோட இந்த நல்ல எண்ணம் பாதிக்கப்பட்டுடும். பார்த்து நடந்துகுங்க”, என்றார் இன்ஸ்பெக்டர். அவரது பேச்சில் உண்மையான அக்கறை இருந்தது.

“நான் இவனிடம் கடந்த மூணு மாசத்துலே பேசியது கம்மிதான். ஆனால் அவனோட பழகினதை வச்சு சொல்லணும்னா அவன் திருந்திட்டான்னு என்னாலே சொல்ல முடியும். அவன் மனம் தினம் தினம் கடந்த காலத்தை எண்ணி சித்திரவதை பட்டுக்கிட்டு இருந்தது. அது என்னன்னு இப்போ புரியுது.”, என்றேன். என் மனம் கனத்து இருந்தது.

“என்னமோ போங்க! உங்க பேச்சு எனக்கு என்னமோ மேம்போக்கா தோணுது.”

“தன்னெஞ்சறிய பொய்யற்க பொய்த்தப்பின் தன் நெஞ்சே தன்னைச் சுடும்’ அப்படீங்கற நிலையிலே அவன் இருந்திருக்கான்; வாழ்ந்திருக்கான். நான் பொய் சொல்லலை, இன்ஸ்பெக்டர்”

“நான் ஒண்ணு கேட்கறேன், நீங்க தப்பா நினைக்க கூடாது. உங்க மேலே மதிப்பு எனக்கு ரொம்ப இருக்கு! ஆனாலும் உங்களுக்கு புரிய வைக்கறதுக்குகோசரம் கேட்கப்போறேன். நீங்க வருத்தப்பட கூடாது”, என்றார் இன்ஸ்பெக்டர் கனிவுடன்.

“இல்லைங்க! தாரளமா கேளுங்க!”

“அவனாலே பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்துலே ஒருத்தரா உங்களை நினைச்சுப் பாருங்க! அவனாலே உங்களை சேர்ந்தவர் கொலை பண்ணப்பட்டிருந்தா இப்படி நினைச்சு பேசுவீங்களா?”

“ம்! ஆண்டவன் அருளால் பேசுவேங்க!”

பெருமூச்சு விட்ட இன்ஸ்பெக்டர்,
“சரிங்க! கிளம்புங்க! உடம்பை இனிமே நீங்க கேட்டாலும் தரமுடியாது. எங்களுக்கு நிறைய ஃபார்மாலிட்டீஸ் இருக்கு. உங்களுக்கு சன்மானம் ஏதாவது கிடைத்தாலும் கிடைக்கலாம்! ஐந்து லட்சம் வரை! அவன் தலைக்கு அவ்வளவு சன்மானம் அரசாங்கம் அறிவிச்சிருந்தது!” என்றார்.

நான் போலீஸ் ஸ்டேஷன் வாசலுக்கு வந்த போது உள்ளே இருந்த ஏட்டு இன்ஸ்பெக்டரிடம் பேசுவது என் காதில் விழுந்தது.

“சார்! அவர்க்கிட்டே போய் இப்படி கேட்டுட்டீங்களே! கீரை ராசு கற்பழிச்சு கொன்ன பதிமூணு வயசு பொண்ணு அவரோட தங்கைதாங்க! பத்மா பேரு! அப்போ இவரு மதுரை பேங்க்லே வேலை பார்த்திக்கிட்டிருந்தாரு! எல்லாம் பன்னெண்டு வருஷத்துக்கு முந்தி! பாவம்!”, ஏட்டு தொலைவிலிருந்து என்னைப் பார்த்து உச்சு கொட்டினார்.

கீரை ராசுவின் காலடியில் நின்று ஒரே ஒரு திருவாசகம் சொல்லிவிட்டு, பிரார்த்தனை செய்து விட்டு கிளம்பினேன்.


Series Navigation

ஆதிபுரீஸ்வரன்

ஆதிபுரீஸ்வரன்