• Home »
  • கதைகள் »
  • உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 2 (சுருக்கப் பட்டது)

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 2 (சுருக்கப் பட்டது)

This entry is part of 35 in the series 20080731_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


மங்கலம் என்ப மனைமாட்சி, மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

பெறுமவற்றுள் யாமறிந்த தில்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை, மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

திருவள்ளுவர் (மனைமாட்சி & மக்கட் பேறு)

நீ வாலிப வயதில் திருமணம் புரியவும், குழந்தை பெற்றுக் கொள்ளவும் தயாராக உள்ளாய். நான் கேட்கிறேன் : ”குழந்தை வைத்துக் கொள்ள விரும்பும் மனிதனா நீ ? நீ வெற்றி அடைபவனா ? எதையும் நீ தன் வயப்படுத்தும் பண்பாளியா ? ஐம்புலனை நீ கட்டுப் படுத்துபவனா ? நீ உன் நெறிப்பாடுகளின் அதிபதியா (Master of Thy Virtues) ? அல்லது எதையும் எளிதில் விட்டுவிட்டு நீ விலகிச் செல்பவனா ? நீ தனிமை தேடும் ஏகாந்தவாதியா ? குழந்தை பெற்றுக் கொள்ள ஓர் வெற்றி எண்ணமும், விடுதலை உணர்வும் தேவை. நீ உருவாக்குவது உன்னை விட உயர்ந்ததாக இருக்க வேண்டும் ! ஆனால் அதற்கு முதலில் நீ உன் உடலையும், ஆத்மாவையும் சீராகப் பண்படுத்த வேண்டும் ! உன்னையே
மீண்டும் உருவாக்காமல், நீ உன்னை விட உயர்ந்தவற்றை ஆக்க வேண்டும் ! திருமண வாழ்க்கை என்பது தம்மைவிட உயர்ந்த பிள்ளைகளை உண்டாக்க விரும்பும் தாம்பத்திய உறவை மேற்கொள்வது ! அத்தகைய உடன்பாடு கொண்ட தம்பதிகள்தான் உண்மையாகத் திருமணத்தை மதிப்பவராக நான் கருதுவேன்.

·பிரடெரிக் நியட்ஸே, ஜெர்மன் சித்தாந்த ஞானி [Friedrich Nietzsche (1844-1900)]

உண்பது, உடுத்துவது, வசிப்பது, பொழுது போக்கில் ஈடுபடுவது, விளையாடுவது, பாடுவது, நோய்வாய்ப் பட்டோரைக் கண்காணிப்பது அனைத்திலும் உன்னத நெறிப்பாடைப் பின்பற்று.

எந்த ஒரு வேலையும் நீ சிரமமாக நினைத்தால் நீ இங்கு வராதே ! கடவுள் அருளால் எல்லாப் பாதைகளும் நமக்கு எளிதாக அமையும். ஜாதி, நிற வேறுபாடு இல்லாமல் நீ ஏழைகட்கும், இன்னல் படுவோருக்கும் பணி புரிய வா ! முடிவுகளைப் பற்றிக் கவலைப் படத் தேவையில்லை. உன் கடமை தொடர்ந்து பணி புரிவது. அதன் விளைவுகள் தானாகப் பின் தொடரும். என்னுடைய பணி நெறி ஆக்க வினைகள் புரிவது; எவற்றையும் சிதைத்து அழிப்பதன்று ! கடவுள் எல்லா உயிர்ப் பிறவிலும் உள்ளது. அதைத் தவிர வேறு கடவுள் எதுவுமில்லை. ஆகவே ஒருவர் மனிதப் பிறவிகளுக்குப் பணி புரிவது மெய்யாகக் கடவுளுக்குப் பணி புரிவதாகும் !

சுமுக வாழ்வு (Comfort) சத்திய சோதனைக்கு ஏற்புடையதில்லை. மாறாகச் சத்திய நெறியைக் கடைப்பிடிப்பது கடின வாழ்வை எதிர்ப்பார்த்து மேற்கொள்வது. யார் மீதும் பரிதாபம் கொள்ளாதே. எல்லோரையும் சமமாக நடத்து. பாபத்தில் முதலிடம் பெறுவது சமத்துவம் பேணாமை. நீ அதைத் தவிர்த்திடு. நாம் எல்லோரும் சமம். எண்ணமே ஒருவருக்கு முக்கியமானது. எதை நாம் உள்ளத்தில் நினைக்கிறோமோ அதுவாகவே நாம் மாறுகிறோம்.

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

+++++++++++++++++++

உன்னத மனிதன்

(பெர்னார்ட் ஷா)
அங்கம் : 4 பாகம் : 2

(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.
2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.
3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – 25 வயது வாலிபன்.
4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)
5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி
6. ஹெக்டர் மலோன் (Hector Malone) – ஓர் அமெரிக்கன்
7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ¦†க்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்
8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்
9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.
10. வயலொட் ராபின்ஸன் (Violet Robinson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)
11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 4 பாகம் : 2)

(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: வயலட் ராபின்ஸன், டிரைவர் ஹென்றி ஸ்டிராக்டர், ஹெக்டர் மலோன். ஹெக்டரின் தந்தை மிஸ்டர் மலோன்
காலம்: பகல் வேளை
இடம்: ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் தற்போது தங்குமிடம் தெற்கு மலைப் பகுதி : கிரனாடா, ஸ்பெயின்.. தங்கு மாளிகையின் பின்புறப் பூங்கா.

(காட்சி அமைப்பு: வயலட்டும், மிஸ்டர் மலோனும் வாதாடிக் கொண்டிருக்கிறார்.)

வயலட்: (பொங்கி வரும் கோபத்தை அடைக்கிக் கொண்டு) மிஸ்டர் மலோன் ! ஹெக்டர் நிலைக்கு என் நிலை எந்த விதத்தில் குறைந்தது ? ஹெக்டர் உம்மைப் போல் ஒருவர் பீடத்தின் உயரத்தை அளந்து நேசிப்பவர் அல்லர். நீவீர் எந்த தராசைக் கொண்டு மனிதரை எடை போடுகிறீர் ? உயர்வும், தாழ்வும் ஏறி இறங்கும் தட்டுகள் ! நேற்று சிகரத்தில் இருந்தவர் இன்று பாதாளத்தில் கிடக்கிறார் ! நேற்று பள்ளத்தில் உழன்றவர் இன்று பல்லக்கில் போகிறார் !

வயோதிகர் மலோன்: இங்கிலாந்தில் ஹெக்டரின் சமூக உயர்ச்சியைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது என்பது நன்றாகத் தெரிகிறது மிஸ். ராபின்ஸன் ! அந்த மேல்நிலை உன்னை மணந்தால் கீழ்நிலை அடைந்து விடும் ! அதை மீண்டும் உயர்நிலைக்கு ஏற்ற இயலாது ! நிரந்தரக் கீழ்நிலை ஆகிவிடும் ! நான் அந்த மாறுபாட்டை நிறுத்த எச்சரிக்கை விடுக்கிறேன், உனக்கும் என் மகனுக்கும் !

வயலட்: உங்கள் எச்சரிக்கையை உங்கள் மகன் மீறினால் என்ன செய்வீர் ? நான் மீறினால் என்ன செய்வீர் ? எனக்கு எச்சரிக்கை விட உரிமை இல்லை உமக்கு !

வயோதிகர் மலோன்: உண்மை மிஸ். ராபின்ஸன் ! உன்னை நான் தடுக்க முடியாது ! ஆனால் என் மகனை நான் தடுக்க முயல்வேன், முனைவேன், முன்னால் நின்று வழி மறைப்பேன் ! ஒருவர் உயர்குடிப் பிறப்பை அடுத்தவர் திருமணத்தால் வாங்க முடியாது ! அந்த நிலை வாழையடி வாழையாய் பல்லாண்டுகள் ஓரினத்தில் வளர்ந்தோங்கியது ! ஹெக்டர் தனக்குகந்த உயர்குடிப் பழக்க வழக்கங்களைப் பெற்ற ஓர் குடும்பப் பெண்ணை மணக்க வேண்டும். ஆனால் ஒருசில விநாடிகளில் அந்தப் பொன் சங்கிலியை ஒருவர் அற்று விடலாம் ! அப்படி ஆகும் போது என்னைப் போல் பலரது அடிமனம் வேதனையில் அதிர்கிறது !

வயலட்: தனக்குகந்த பெண்ணென்றால் என்ன அர்த்தம் ? நல்ல குடும்பப் பெண்ணொருத்தி அந்த உயர்ந்த பழக்கங்களை ஏன் கற்றுக் கொள்ள முடியாது ?

வயோதிகர் மலோன்: உயர்ந்த பழக்கங்களைக் கற்றுக் கொள்ளலாம் ! ஆனால் உயர்ந்த குடிப் பிறப்பைப் பெற்றுக் கொள்ள முடியாது ! அத்தகைய மாது ஒருத்தி அதில் பிறக்க வேண்டும் ! அவளது பெற்றோரும், பெற்றோரின் முற்சந்ததியும் உயர்குடியில் பிறந்து மரணம் அடைந்திருக்க வேண்டும் !

வயலட்: ஹெக்டர் எத்தகைய உயர்குடியில் உதித்தவர் ? நான் அறிந்து கொள்ள விழைகிறேன்.

வயோதிகர் மலோன்: ஹெக்டரின் பாட்டி அயர்லாந்தில் பிறந்தவள் ! வெறுங்காலில் நடந்தவள் ! அந்தக் காலத்து உருளைக் கிழங்குப் பஞ்சத்தில் (Potato Famine) உயிர் பிழைத்து மீண்டவள் ! பஞ்சத்திலும் சாகாத பணக்காரி ! என் மகன் செல்வந்த மாதை மணந்து சீரும் சிறப்பாக வாழ என் சொத்து பயன்பட வேண்டும். யாரை மணந்தால் அவன் செல்வாக்கு உயருமோ, அவள்தான் அவனுக்கு ஏற்ற இல்லத்தரசி ! உன்னைத் திருமணம் புரிவதில் என்ன பயன் அவனுக்கு விளையப் போகிறது ?

வயலட்: என் உறவினரும் என்னை ஏசுவார் பஞ்சத்தில் அடிபட்ட பாட்டியின் பேரனை மணக்கப் போகிறேன் என்று ! செல்வம் வழிகின்ற குடி, மேல்குடி என்பது உமது வாய்மொழி ! என்ன அபத்தமான வாசகம் இது ? என்னை ஒதுக்க நீங்கள் கூறும் காரணம் வேடிக்கையாக இருக்குது ! நான் படித்தவள் ! வேலை செய்ய வலுவான உடலும், தெளிவான அறிவும் உள்ளன ! என்னைத் திருமணம் புரிவதால் ஹெக்டரின் வருமானம் கூடும் !

வயோதிகர் மலோன்: வருமானம் இனிமேல்தான் வரும் ! இப்போது என்ன கொண்டு வருகிறாய் என் மகனுக்கு வெறுங்கையைத் தவிர ?

வயலட்: மிஸ்டர் மலோன் ! நீங்கள் தண்டிப்பது என்னை மட்டும் அல்ல ! உமது வாலிப மகனின் காதல் மண வாழ்வையும் சிதைக்கிறீர் !

வயோதிகர் மலோன்: அவன் ஆண்பிள்ளை ! காதல் தோல்வியில் அவன் காயப்பட மாட்டான் ! காயப் பட்டாலும் காலம் அந்தப் புண்ணை ஆற்றி விடும் ! அயர்லாந்தில் பட்டினியில் மாண்டார் என் தந்தை ! அந்தப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாயா ?

வயலட்: எதைப் பற்றி ? அயர்லாந்து பஞ்சத்தைப் பற்றியா ?

வயோதிகர் மலோன்: இல்லை ! பட்டினியைப் பற்றி ! ஒரு நாடு உணவுப் பண்டங்கள் நிரம்பி வழிய ஏற்றுமதி செய்யும் போது பஞ்சம் ஏன் உண்டாகுது ? பட்டினியால் செத்தார் என் தந்தை ! பட்டினியுடன் நான் அமெரிக்காவுக்குத் தாயின் கைப்பிள்ளையாய் வந்து சேர்ந்தேன் ! ஆங்கில ஆட்சி அயர்லாந்தை விட்டுத் துரத்தியது எங்களை ! நானும் என்னைப் போன்றவரும் இங்கிலாந்தை வாங்க மீண்டும் வருகிறோம் ! எல்லாவற்றையும் விட மிக்க உயர்ந்ததை வாங்குவோம் ! நடுத்தர வகுப்பு எமக்கு வேண்டாம் ! நடுத்தர வகுப்பு மாது ஹெக்டருக்கு வேண்டாம், உன்னைப் போல் ! அதுதான் எனது நேரடிப் பேச்சு !

வயலட்: (சீற்றம் அடைந்து) இத்தனைக் கடுமையாக ஒரு வயதான உயர்குடிச் செல்வந்தர் பேசுவது எனக்குப் பேராச்சரியம் அளிக்குது ! ஆங்கிலப் பிரபுக்கள் உமக்குத் தமது மாளிகைகளை விற்பார் என்று கருதுவீரா ?

(அப்போது வாசல் இரும்புக் கதவைத் திறந்து கொண்டு ஹெக்டர் மலோன், வயலட் இருக்கும் இடத்திற்கு வருகிறார். வயலட்டைக் கட்டி அணைத்து வாயில் முத்தம் கொடுத்துத் தந்தையாரைக் கூர்ந்து நோக்குகிறார்.)

வயலட்: ஹெக்டர் ! ஒன்றும் சொல்லாதே ! தயவு செய்து ஒதுங்கி நில் நான் உன் தந்தையோடு தர்க்கம் செய்வது வரை ! நம் திருமணத்தை அவர் நிறுத்த முற்படுகிறார் ! இது என் போராட்டம் ! இதற்கொரு முடிவு காண வேண்டும் நான் !

ஹெக்டர் மலோன்: வயலட் ! இது உனது போராட்டம் மட்டுமில்லை ! எனது போராட்டமும் இணைந்தது ! என் தந்தை பேசிய தகாத வார்த்தைகள் சில என் காதில் விழுந்தன ! இந்தத் தடையை நான் இப்போதே உடைக்க வேண்டும் ! நீ எனக்கு எழுதிய கடிதத்தை வழிப்பறி செய்து கொண்டு திருமணத்தை நிறுத்த வருகிறார் என்னருமைப் பிதா ! என்ன மன அழுத்தம் இருந்தால் இப்படி ஒரு கல்லில் இருவரை வீழ்த்தப் பார்க்கிறார் ? நமது முடிவை யாரும் மாற்ற முடியாது ! வயலட்டே எனக்கு மனைவியாக வரப் போகிறவள் தந்தையே !

(தொடரும்)

***************************
தகவல்

Based on The Play

“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)
2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)
3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973
4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)
5. Joyful Wisdom By : Friedrich Nietzsche (1971)
6. The Wisdom of India By : Emmons E. White (1968)
7. Friedrich Nietzsche – The Story of Philosophy By: Will Durant (1959)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (July 30, 2008)]

Series Navigation