• Home »
  • கதைகள் »
  • உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 15 (சுருக்கப் பட்டது)

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 15 (சுருக்கப் பட்டது)

This entry is part of 33 in the series 20080710_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


உன்னத ஆன்மீக உணர்வு

(புவியில்) இந்த மனிதன் உயர்கிறான் !
போற்றுவோம் நாம் அவனை !
உன்னத நிலையில் வைத்து நாம்
நேசிக்கும் மற்றவர்
நீடித்த காலம் உயர்ந்துள்ளார் !
சிகரத்தில் இருப்போரைச்
சீராக உயர்த்துவோம்
பாராட்டி இன்னும்
அந்த மாமனிதர் மேலிருந்து
வந்துளதால் !

·பிரடெரிக் நியட்ஸே, ஜெர்மன் சித்தாந்த ஞானி [Friedrich Nietzsche (1844-1900)]

நல்லோரைக் காண்பதுவும் நன்றே ! நலமிக்க
நல்லோர் சொல் கேட்பதுவும் நன்றே !
நல்லோர் நற்பண்பைச் சொல்வதும் நன்றே !
எல்லோ வற்றிலும் மகத்தானது
நல்லோர் அருகிலே வாழ்வது !

இந்திய ஞான மொழிகள் (The Wisdom of India From Tamil)

“இந்தியக் கலாச்சாரத்தின் மூலாதாரச் சிந்தனை, இந்தியச் சுமையின் நெடித்துவக் கீதங்கள் (Eternal Songs), இந்திய நெடுங்கால நிலைப்புக்கு முதுகெலும்பு, இந்திய வாழ்வுக்கு அடித்தளம் ஆகியவற்றுக்குக் காரணம், இந்தியா மனித இனத்துக்கு (இந்து மதம், புத்த மதம் மூலமாக) ஆன்மீக மார்க்கத்தை அளித்ததே (Spiritualization of the Human Race) !”

“எவருக்கும் நான் சவால் விடுக்கிறேன்: உலகத்துக்கு நல்வழி காட்டும் ஆன்மீக உன்னத மனிதர் (Spiritual Giant) எப்போதாவது இந்தியா வரலாற்றில் இல்லாமல் போனதுண்டா ? இந்திய ஒளி ஆன்மீக வழி ! இதுவரைக் கேள்விப்படாத அபூர்வமான இந்திய உந்து நிகழ்ச்சி (Influence) எப்போதுமே உலகத்தின் மீது மென்மைப் பனித்துளி போல் பொழிந்தது ! ஆயினும் அவையே உலக மண்ணில் உன்னத பூக்களை மலரச் செய்தன !”

“ஒளிமயமான வாழ்வு தெளிவாக என் கண்ணெதிரே தெரிகிறது ! பூர்வீக அன்னை புத்துயிர் பெற்றுத் தன் பீடத்தில் அமர்ந்து முன்னை விட உன்னத முற்று மீண்டும் விழித்துக் கொண்டு விட்டாள் ! அமைதியும் பேரின்பமும் பரவ அகிலமெங்கும் உரைமொழியைப் போற்றிப் பறைசாற்று !”

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

+++++++++++++++++++

உன்னதப் படுத்துவதில் மனிதரின் தனிப்பட்ட எதிர்ப்புகள் . . . .

மனிதன் தன்னிலைக்கு மேம்பட்டு உன்னதம் அடைய விரும்பினால் அத்தகைய ஓர் மாற்றம் மனித சமூகத்தில் வரவேற்கப்படுமா ? மனிதனுடைய இயற்கைத் தப்பெண்ணத்தால் அந்த மாற்றம் ஏற்றுக் கொள்ளப்படலாம் ! உடலூட்டம் (Nutrition) அளிக்கும் உணவைத் தவிர்க்கும் ஆற்றல் உள்ள, ஒவ்வொரு சமயத்திலும் காணப்படும் உயர்ந்த பிறவியைப் போல் பூரணமான ஓர் உன்னத மனிதனை (An Ideal Superman) சாதாரண மனிதன் விரும்புவதில்லை !

மனிதன் போற்றும் தளர்ச்சியற்ற போர்த் தளபதி (மகா) அலெக்ஸாண்டர் என்று ஒரு காலத்தில் உருவாக்கப் பட்டவர் ! மனிதனுக்கு அவனது நாட்டு வேந்தரே உலகில் முதன்மையான கோமகன் ! போப் மதக்குருவே அவனுக்கு ஒரு புனித மனிதர் ! போலி மாமனிதராக வழிபாட்டு மாந்தர் அநேகர் வரிசையில் இல்லாமல் ஒருபோதும் மனிதன் இருக்க வில்லை !

மெய்யான உன்னத மனிதன் மானிட உரிமை, கடமை, சுயமதிப்பு, நியாயம், மதம், நன்னெறியோடு மானிட நியாயக் கடமைகள் யாவற்றையும் தானே மேற்கொள்வான் என்பதைத் தற்போதைய மனிதன் முன்னோக்கி இருக்கவில்லை ! சாதாரண மாமனிதன் ஒருவன் சாதிப்பது வீதி மனிதன் கண்முன்னே தெரியாமல் போகிறது ! அவனே அனுதினமும் செய்யும் அரிய வினைகள் அவனுக்குத் தெரியாமல் இருக்கின்றன. ஆகவே மாமனிதன் அல்லது மாவீரன் என்று கருதப்படும் உன்னத மனித இனத்தை உருவாக்க மனிதர் எதிர்ப்புக் கூறுவதில்லை. ஏனெனில் அவரது காலத்தில் அவரை மாமனிதர் என்பதாக மானிடர் கருதுவதில்லை. அதற்குப் பதிலாக எல்லையற்ற ஞானமும், வரையிலா ஊக்கமும், ஏராள செல்வமும் கொண்ட மாமனிதனாக மானிடன் தன்னையே எண்ணிக் கொள்வான் !

பெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்)

வேதாந்தியாக வாழ்வதைவிட நானோர் உழவனாக வேலை செய்ய விரும்புகிறேன். இரவில் பயங்கரக் கனவுகள் காணும் வேதாந்திக்குத் தூக்கம் வராது ! வேதாந்தி இன விருத்தி உந்துவிசையில் (Life Force) சிக்கிக் கொண்டிருக்கிறான் ! ஆனால் நெற்றி வேர்வை நிலத்தில் பாய்ச்சும் உழவனுக்குக் கனவுகள் வாரா ! அதனால் அவன் ஆழ்ந்து உறங்குவான் !

பெர்னார்ட் ஷா (உன்னத மனிதன் நாடகம்)

****************

உன்னத மனிதன்
(பெர்னார்ட் ஷா)

அங்கம் : 3 பாகம் : 15
(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.

2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.

3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.

4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)

5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி

6. ஹெக்டர் மலோன் (Hector Malone) –

7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்

8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்

9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.

10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)

11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 3 பாகம் : 15)
(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: காதல் மன்னன் தாஞ் சுவான் (Don Juan), ஒரு வாலிப மாது, ஸ்பானியர் மென்டோஸா, ஜான் டான்னர், சாத்தான் (பெர்னாட் ஷாவின் கற்பனை வில்லன்)
காலம்: காலை வேளை
இடம்: நரகம் (பெர்னாட் ஷாவின் கற்பனைத் தீய உலகம்)

(காட்சி அமைப்பு): காதல் மன்னன் தாஞ் சுவான் நரகத்தில் ஒரு வாலிப மங்கையைச் (ஆன்னி வொயிட்·பீல்டு) சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறான். புதல்வியைக் காண தந்தை மிஸ்டர் வொயிட்·பீல்டு சொர்க்கத்திலிருந்து வயோதிகராக வருகிறார். சாத்தான் மூவரையும் சந்திக்கிறான்.

தாஞ் சுவான்: வேதாந்தியாக வாழ்வதைவிட நானோர் உழவனாக வேலை செய்ய விரும்புகிறேன். இரவில் பயங்கரக் கனவுகள் காணும் வேதாந்திக்குத் தூக்கம் வராது ! வேதாந்தி இன விருத்தி உந்துவிசையில் (Life Force) சிக்கிக் கொண்டிருக்கிறான் ! ஆனால் நெற்றி வேர்வை நிலத்தில் பாய்ச்சும் உழவனுக்குக் கனவுகள் வாரா ! அதனால் அவன் ஆழ்ந்து உறங்குவான் ! சந்ததி உந்துவிசை வேதாந்தி காதில் சொல்வதென்ன ? “என் வசம் ஆயிரக் கணக்கான அற்புதங்கள் மறைந்துள்ளன ! அவை உனக்குக் கிடைக்க வேண்டுமானால் தடையற்ற வழவழப்பான பாதையில் நடக்க நீ விரும்ப வேண்டும். இப்போது என் பாதை என்ன வென்று அறிய விருப்பம் எனக்கு ! நான் யாரென அறிந்து கொள்ள வேட்கை உண்டாகும் எனக்கு ! அதற்குச் சிறப்பான ஓர் மூளையை ஆக்கியுள்ளேன் நான் ! என்ன மூளை தெரியுமா ? ஒரு வேதாந்தியின் மூளை !

இளம்மாது: வேதாந்தியாக இருக்க விருப்ப மில்லை என்று சொல்லிக் கொண்டு அவன் மூளையை மட்டும் ஏன் விரும்ப வேண்டும் ? இரவில் மூளை குழம்பி உறக்கம் வரவில்லை என்றால் என்ன செய்வீர் ?

தாஞ் சுவான்: முறையான கேள்வி ! நான் உழவனாக உழைக்க விரும்பினாலும், வேதந்தியாகச் சிந்திக்க விழைகிறேன் ! வேளாளன் உடம்பும் வேதாந்தி மூளையும் எனக்குத் தேவை ! அதுதான் உன்னத மனிதனின் வடிவம் ! உடல் உழைப்பும் சிந்தனையும் ஒன்றாகச் சேர வேண்டும் !

சாத்தான்: அது எப்படி நேரும் என்று எண்ணிப் பாரும் மிஸ்டர் தாஞ் சுவான் ! நீவீர் சாக்ரெடீஸாக பிறரது மனத்தை உழுது பயிரிடலாம் ! நிலத்தை உழுது பயிரிடச் சாக்ரெடீஸால் முடியுமா ?

தாஞ் சுவான்: திருமண இல்வாழ்வு எளிய பாதையில் செல்வது ! எளிய பாதை எனக்கேற்ற பாதை ஆகாது ! அது எளிய மனிதன் மேற்கொள்வது ! உன்னத மனிதனுக்கு முள்ளும் கல்லும் நிறைந்த முரண் பாதை ! தடைகள் நிறைந்த தனிப்பாதை அது ! தனிப் பாதையே உன்னதப் பாதை ! கப்பல் திசை அறிந்து செல்லும் தகுதி உடையது ! ஆனால் வெறும் கட்டுமரம் அவ்விதம் செல்லாது ! வேதாந்தி பிறப்பது இயற்கையின் சதி ! மிஸ்டர் சாத்தான் ! உனக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு இப்போது தெரிகிறது ! நரகத்தில் இருந்தால் தாறுமாறாய்த் திரிந்து செல்லலாம் ! சொர்க்க லோகத்தில் இருந்தால் திசை திருப்பியுடன் பயணம் செய்யலாம் !

சாத்தான்: (எரிச்சலுடன்) யாரிந்த உன்னத மனிதன் ? எங்கிருக்கிறான் இந்த உன்னத மனிதன் ? எத்தனை பேரைச் சொல்லலாம் உன்னத மனிதராக ? சந்ததி உந்துசக்தி பித்தரின் வித்தையா (Life Force Fanatics) ? உன்னத மனிதனைக் கற்பனை செய்தவர் நான் சொர்க்கத்தில் சந்தித்த ஜெர்மன் பைத்தியகாரர் நியட்ஸியா ? (முதியவரைப் பார்த்து) உமக்குத் தெரியுமா அந்தப் பித்தரை ?

முதியவர்: எனக்குத் தெரியாது நியட்ஸியை. அந்தப் பெயரை நான் இதுவரைக் கேட்டதில்லை.

தாஞ் சுவான்: மிஸ்டர் சாத்தான் ! பித்தர் சொர்க்கத்தில் வாழமாட்டார் ! முதலில் நியட்ஸி பித்தரில்லை என்று சொல்லிக் கொள்கிறேன். அவர் புகழ்பெற்ற உலகச் சிந்தனையாளர். உன்னத மனிதனை உருவாக்கலாம் என்று சிந்தனையைத் தூண்டி விட்டவர் !

சாத்தான்: சிந்தனையாளர் என்பதை விடச் சந்ததி உந்துசக்தி வழிபடும் பித்தர் என்று சொல்வது பொருந்தும்.

முதியவர்: அந்த சிந்தனையாளரைச் சந்திக்க நான் விழைகிறேன். உன்னத மனிதர் நாட்டுக்குத் தேவை ! ஒப்புக் கொள்கிறேன் அதை மட்டும் ! அவரை எப்படி உருவாக்குவது என்னும் கோட்பாடில் எனக்குக் குழப்பமாக இருக்கிறது ! உன்னத மனிதர் தேவையை உணர்வது பாதி யுத்தம் ! அவரை உருவாக்க முயல்வது மீதி யுத்தம் !

இளமாது: நான் நியட்ஸியைச் சந்திக்க விரும்பவில்லை ! ஆனால் உன்னத மனிதனைச் சந்திக்க விழைகிறேன் ! எங்கிருக்கிறான் உன்னத மனிதன் ? எப்படி அவனைக் கண்டுபிடிப்பது ?

சாத்தான்: உன்னத மனிதன் இன்னும் உருவாக்கப் படவில்லை ! எப்படிப் படைக்கலாம் என்று தாஞ் சுவான் போன்ற வேலையற்றவர் மூளையைக் கலக்கிக் கொண்டிருக்கிறார் !

தாஞ் சுவான்: (சிரித்துக் கொண்டு) வேடிக்கையாகப் பேசுகிறீர் ! உமது செழிப்பான மூளையில் எவை முளைத்தாலும் அவை எல்லாம் விஷ வித்துக்கள் !

சாத்தான்: உன்னத மனிதனை உருவாக்க முடியாது ! அதுவும் தாஞ் சுவான் விதி முறையில் சாதாரண மனிதன்தான் உதிப்பான் ! உன்னத மனிதன் என்றும் உதிக்கப் போவதில்லை ! தாஞ் சுவான் கனவு காணும் உன்னத மனிதன் கற்பனையில் பிறந்து கற்பனையில் மரணம் ஆனவன் !

இளம்மாது: என்ன ? உன்னத மனிதனை உருவாக்க முடியாதா ? அப்படியானால் என் பணி முடியவில்லை இன்னும் ! அதற்குத் தேவை ஓரு தந்தை ! உன்னத மனிதனைப் படைக்க ஓர் உயர்ந்த ஆடவன் தேவை ! உயர்ந்த மனிதனை முதலில் எங்கே காண்பது ?

தாஞ் சுவான்: அது நானாக இருக்க முடியாது ! தேடிப் பிடி மாதே ! தேடிப் பிடி ! தேடினால் கிடைப்பான் ! இளம்மாதே ! உன் நெஞ்சில் கனலை எழுப்பி விட்டேன் ! என் பணி முடிந்தது !

(தொடரும்)

***************************

தகவல்

Based on The Play

“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)

2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)

3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973

4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)

5. Joyful Wisdom By : Friedrich Nietzsche (1971)

6. The Wisdom of India By : Emmons E. White (1968)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (July 8, 2008)]

Series Navigation