• Home »
  • கதைகள் »
  • தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 16(2)

தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 16(2)

This entry is part of 29 in the series 20080619_Issue

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்


மறுநாள் மாலையில் சவிதா திரும்பி வந்தாள். சவிதாவின் முகத்தைப் பார்த்ததுமே ஏதோ பெரிய ஆபத்து வந்து விட்டது இன்று வசந்திக்கு புரிந்துவிட்டது. என்னவென்று கேட்டாள்.
“ஏதோ கட்சி தகராறு” என்றாள் சவிதா.
முதல்நாள் இரவு மதுசூதன் வந்தான் என்று சொல்லிவிட்டு அவன் கொடுத்துவிட்டு போன காகிதங்களை கொடுத்தாள் வசந்தி.
சவிதா பொறுமையாக அந்த காகிதங்களை எல்லாம் படித்தாள். அவள் வீட்டை விட்டு நகரவில்லை. யாரும் வரவும் இல்லை. வசந்திக்கு மூச்சு திணருவது போல் இருந்தது.
“என்ன நடந்தது? ஏன் இப்படி இருக்கிறாய்?” என்று கேட்ட போது சவிதா ரொம்ப நேரம் பேசவில்லை. கடைசியில் “கட்சியில் பிரிவு வந்து விட்டதும்மா” என்றாள்.
“பிரிவு வந்ததா? எதனால்?”
“என்ன சொல்லுவது எப்படி சொல்லுவது என்று எனக்கும் புரியவில்லை. நான்கு நாட்கள் போகட்டும். பார்க்கலாம்” என்றாள்.
நான்கு நாட்கள் கழிந்தன. வசந்திக்கு பைத்தியம் பிடித்துவிடும் போல் இருந்தது. சவிதா சரியாக சாப்பிடவில்லை. வாய் விட்டு பேசவில்லை.
என்ன விஷயம் என்று கேட்டால் ஒன்றும் இல்லை என்பாள். வசந்திக்கு பயமாக இருந்தது. ராஜலக்ஷ்மிக்கு தந்தி கொடுத்தாள்.
மூன்றாவது நாள் ராஜலக்ஷ்மி வந்த போது சவிதா கொஞ்சம் தேறிக் கொண்டு விட்டாள். அதற்கு முதல்நாள்தான் மாதவி என்ற பெண்ணும், கோபி, ஸ்ரீனிவாஸ¤ம் வந்தார்கள். அவர்களுடன் பேசிய பிறகு சவிதாவிடம் கொஞ்சம் கலகலப்பு தென்பட்டது.
ராஜலக்ஷ்மி வந்த பிறகு என்ன சமாசாரம் என்று கேட்டாள்.
“என்ன இருக்கு? பழைய கதைதான். கட்சிப் பிரிவு.” முறுவலுடன் சொன்னாள் சவிதா.
“இந்த முறை காரணம் என்னவாம்? எதற்காக கட்சிப் பிரிவு?” ராஜலக்ஷ்மி கேட்டாள்.
“அதுவும் பழசுதான். மூன்று உலகங்களின் கொள்க்கை.”
“மைகாட்! மூன்று உலகங்களின் கொள்க்கையா? அப்படி என்றால்?” ராஜலக்ஷ்மி வியப்புடன் கேட்டாள்.
“அதுதான் எனக்கும் புரியவில்லை. பிரிவு வந்த ஒவ்வொரு முறையும் மூன்று உலகங்களின் கொள்கை என்பார்கள். அதற்குப் பிறகு வழக்கமான சண்டைகள். தம்மை மைனாரிட்டியாக்கி தம்முடைய அப்பிப்பிராயங்களை எல்லாம் அடக்கி வைத்தார்கள் என்று ஒரு கும்பல் குற்றம் சாட்டினால், தம் பக்கம் மக்களை ஈரப்பதற்கு சதிதிட்டம் போட்டதாக மற்றொரு கும்பல். நடந்த தவறுகளுக்கு நீங்கதான் பொறுப்பு என்று பரஸ்பரம் குற்றம் சாட்டுவது, கடைசியில் மூன்று உலகங்களின் கொள்க்கையை கொண்டு வந்து குறுக்கே போடுவது.”
“மூன்று உலகங்களில் கொள்க்கை என்றால் என்ன?” வசந்தி கேட்டாள்.
“உலகத்தில் இருக்கும் நாடுகளை எல்லாம் மூன்று வகையாக பிரித்து விடலாம் அம்மா. பணக்கார நாடுகள், சுமாரான நாடுகள், ஏழைநாடுகள். ஒவ்வொரு நாடும் ஒரு உலகம். பணக்காரநாடுகள் ஏழை நாடுகளை அடக்கி ஆள முயன்று கொண்டிருக்கும்.”
“அதனால் கட்சிக்கு வந்த பிரச்னை என்ன? பிரிவு ஏற்படுவானேன்? இதைப் பற்றி எல்லாம் எனக்குத் தெரியவே தெரியாது. வீணா நம் வீட்டுக்கு வராமல் இருப்பானேன்?”
“அதுதானே எனக்கும் புரியவில்லை. நேற்று வீணாவைக் கடைத்தெருவில் பார்த்தேன். அருகில் சென்று பேச முயன்றால் விருப்பமில்லாதவள் போல் நான்கு வார்த்தைகள் சுருக்கமாக பேசினாள். கட்சியில் ஏற்பட்ட பிரிவைப் பற்றி இரண்டு பேருக்கும் ஒரே சமயத்தில் தெரிய வந்திருக்கு. அவள் ஒரு பக்கம் சேர்ந்து விட்டாள். நான் அந்த பக்கம் வரமாட்டேன் என்று மேலிடத்தில் யாரோ அவளுக்கு சொல்லியிருக்கிறார்கள். என்னிடம் பேசக் கூடாது என்று தடை போட்டார்களோ என்னவோ. என்னிடம் முகம் கொடுத்து பேசவில்லை. நாங்கள் இணைந்து செய்த காரியங்களுக்கு, சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கைக்கு இப்போ வந்த பிரிவனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. குறைந்தபட்சம் நட்புடனாவது இருப்போம் என்ற எண்ணம் இல்லை. ஏன் இப்படி நடக்கிறது என்று புரியவில்லை.” சவிதா தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
ராஜலக்ஷ்மி தன்னால் முடிந்த வரையில் சவிதாவை உற்சாகப் படுத்த முயன்றாள். ராஜலக்ஷ்மியுடன் சந்திரசேகரும் அங்கேயே தங்கிவிட்டான். அவனுடைய தங்கை சரளா ராஜலக்ஷ்மியைப் பார்ப்பதற்காக வந்திருந்தாள்.
எல்லோரும் சேர்ந்துக் கொண்டதால் வீட்டில் மறுபடியும் கலகலப்பு ஏற்பட்டது. சவிதாவும், ராஜலக்ஷ்மியும் ஏதாவது ஒரு காரணத்தை காட்டி சந்திரசேகரை ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தார்கள்.
வசந்தியும், சரளாவும் சந்திரசேகரின் பக்கம் சேர்ந்து கொண்டு அவர்களின் வாயை மூட வைப்பார்கள்.
நான்கு பெண்களும் தனக்காக சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது சந்திரசேகர் முறுவலுடன் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பான். அதைக் கவனித்த சவிதா நமக்குள் நாமே சண்டை போட்டுக் கொள்வதால் ஆண்கள் சுகமாக இருக்கிறார்கள். முதலில் நாம்தான் ஒன்றாக இணைய வேண்டும் என்பாள்.
“சந்திரன் எல்லா ஆண்களைப் போல் இல்லை” என்பாள் வசந்தி, அவன் பக்கத்திலிருந்து ஒரு அங்குலம் கூட நகராமல்.
சரளா கொஞ்ச நேரம் ஊசலாடி விட்டு மறுபடியும் வசந்தியின் பக்கம் வந்து விடுவாள்.
பத்து நாட்கள் கழித்த ராஜலக்ஷ்மி கிளம்பி விட்டாள். நான்கு மாதங்களில் டிரைனிங்கை முடித்துக் கொண்டு வந்துவிடுவதாக சொல்லிவிட்டுப் போனாள்.
வீட்டிற்கு தேவையான சாமானகளை வாங்கி வருவதற்காக வசந்தி கடைத்தெருவுக்கு போனாள். சவிதா பரீட்சைகளுக்காக படித்துக் கொண்டிருந்தாள். வருடம் முழுவதும் அங்கே இங்கே என்று வேலையாய் சுற்றிக் கொண்டிருந்த சவிதாவின் சிநேகிதிகள் கூட நூலகத்திலேயோ, வீட்டிலேயோ உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தார்கள். சவிதாவும் பகல் முழுவதும் நூலகத்தில் படித்து விட்டு மாலையில் வீட்டுக்கு வருவாள். பகல் முழுவதும் ஓய்வாக இருப்பதால் வசந்தி சவிதாவிடம் புத்தகங்களை கேட்டு வாங்கி படித்துக் கொண்டிருந்தாள்.
சவிதா வீட்டுக்கு வந்ததுமே தாய் எது வரையிலும் புத்தகத்தை படித்தாள் என்று கேட்டுக் கொண்டு அதைப் பற்றி பேசுவாள். பிடித்திருக்கிறது என்று வசந்தி சொன்னால் எதற்காக பிடித்திருக்கிறது என்றும், பிடிக்கவில்லை என்றால் காரணம் சொல்லு என்றும் கேட்பாள். புரியவில்லை என்று சொன்னால், சேர்ந்து படிப்போம் வா என்று கூப்பிடுவாள். வசந்திக்கு முதலில் தான் படித்தவற்றைப் பற்றிப் பேசுவதில் அதிகம் ஆர்வம் இருக்கவில்லை. சில சமயம் புரியவும் இல்லை. சவிதா விடாமல் தொணதொணத்தால் சலித்துக் கொள்வாள். சவிதாவும் தன் பிடிவாதத்தை விட மாட்டாள்.
“நானும் ஏதாவது வேலைக்கு போகிறேன்” என்றாள் வசந்தி. அவளுக்கு சுலபமாக கிடைக்கக் கூடியது டீச்சர் வேலைதான். ஆனால் வசந்திக்கு அந்த வேலை செய்வதில் விருப்பம் இல்லை. “என்னால் பாடம் சொல்லித் தர முடியாது. சின்னக் குழந்தைகளுக்கு புரிவது போல் சொல்லித் தருவது சாதாரண விஷயம் இல்லை” என்றாள்.
ரோகிணி கடிதம் எழுதினாள்.
“நீ சவிதாவுக்காக அங்கே இருக்கப் போகும் இந்த இரண்டு வருடங்களில் நர்ஸ் டிரைனிங் எடுத்துக் கொண்டாயானால் பிறகு என்னிடமே வந்து விடலாம். என்னிடம் வந்த பிறகும் நீ கற்றுக் கொள்ள முடியும். ஆனால் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்ற எண்ணத்துடன் சொல்கிறேன். வைசாக்கில் பிராக்டீஸ் செய்து கொண்டிருக்கும் டாக்டர் பதஞ்சலி என்னுடைய கிளாஸ் மேட். ரொம்ப நல்லவன். அவனிடம் போனால் தினமும் கொஞ்ச நேரம் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். உனக்கு இருக்கும் ஆர்வத்தை பொறுத்து நிறைய விஷயங்களை கற்றுக் கெள்ளலாம். சவிதாவின் படிப்பு முடிந்த பிறகு நீ என்னிடம் வந்தாயானால் எனக்கும் நிம்மதியாக இருக்கும். சிரத்தையாக நோயாளிகளை கவனிக்கவும், உதவி செய்யவும் சரியான ஆள் இல்லாததால் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. நீ இங்கே வந்தால் என்னுடைய பிரச்னைகள் தீர்ந்துவிடும். என் சுயநலத்தின் காரணமாகத்தான் இந்த கடிதம் எழுதுகிறேன்” என்று எழுதியிருந்தாள்.
சவிதாவும் இந்த யோசனை நன்றாக இருப்பதாக ஒப்புக் கொண்டாள். “எங்க கும்பலில் யாருக்காவது உடல்நலம் சரியாக இல்லை என்றால் உன்னிடம் அனுப்பி வைத்து விடலாம்” என்றாள் உற்சாகத்துடன்.
சவிதாவின் பரீட்சைகள் முடிந்ததுமே டாக்டர் பதஞ்சலியிடம் போகணும் என்று நினைத்துக் கொண்டாள் வசந்தி.
ரோகிணியிடம் போனால் தனக்கும் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே சாலையைத் தாண்ட போன வசந்தி சட்டென்று நின்றுவிட்டாள். வீணா சாலையைத் தாண்டி இந்தப் பக்கம் வந்து கொண்டிருந்தாள். வசந்தி இருந்த இடத்திலேயே நின்று கொண்டு வீணாவைப் பார்த்து முறுவலித்தாள். வீணா சங்கடத்துடன் நின்று விட்டாள்.
“வீணா! கண்ணில் படவே இல்லையே? சௌக்கியமாக இருக்கிறாயா?” குசலம் விசாரித்தாள் வசந்தி.
“நன்றாகத்தான் இருக்கிறேன்” என்றாள் வீணா.
“வீட்டு பக்கம் வரவே இல்லையே? இப்போ போகலாம் வா” என்றாள் வசந்தி.
“வேண்டாம்மா” என்றாள் வீணா.
“ஏன்? எதற்காக வர மாட்டாய்? சவிதாவுக்காக இல்லாவிட்டாலும் எனக்காகவாவது வரலாம் இல்லையா?”
வீணா பதில் பேசவில்லை.
“சவிதாவுக்கும் உனக்கும் நடுவில் என்ன பிரச்னை? நீங்கள் இருவரும் எவ்வளவு சிநேகமாய் இருந்தீங்க? கட்சியில் ஏதோ பிரிவு வந்தால் நீங்கள் இருவரும் பேசிக் கொள்ளவும் முடியாத அளவுக்கு விலகிப் போகணுமா?”
“எங்கள் இருவரின் கொள்க்கைகளும் வேறு வேறு அம்மா!”
“என்ன கொள்க்கைகளோ எனக்குத் தெரியாது. சவிதாவும், நீயும் சொல்வது போல் யஜமானியாக இருப்பவர்கள் ஒன்றாக சேர்ந்துவிட்டார்கள் என்று என்னால் நம்ப முடியாது. நாளைக்கு மாணவர்களுக்கு ஏதாவது பிரச்னை வந்தால் என்ன செய்யப் போறீங்க? சவிதா போராட்டம் நடத்தினால் நீ குறுக்கே விழுந்து தடுக்கப் போகிறாயா? போராட்டத்தை யார் நடத்துவார்கள்?”
“யாருக்கு பலம் இருந்தால் அவர்கள் போராட்டத்தை நடத்துவார்கள்.” பிடிவாதமாக சொன்னாள் வீணா.
“நீங்க இருவரும் சேர்ந்து கொண்டால் போராட்டம் பலப்படும் இல்லையா?”
“தேவைப்பட்டால் இணைந்து கொள்வோம்.”
“அப்படி இருக்கும் போது ஒருவரை ஒருவர் எதிரிகளாக பார்ப்பானேன்? கட்சியில் பிரிவு வரவேண்டிய தேவையில்லை என்று நினைக்கும் போது அதற்காக உங்களுடைய நட்பை புறக்கணிப்பானேன்? கொள்க்கையை விட முடியாது என்றால் நட்பை மட்டும் தொடருங்கள். வாதம் புரிந்து எது நல்லது என்று முடிவு செய்யுங்கள். உன்னுடைய கருத்துக்களை பற்றி சவிதாவிடம் சொன்னாயா? யாரோ சொன்னதைக் கேட்டு விட்டு பேசாமல் இருந்து விட்டாய். அது சரிதானா என்று விசாரிக்கவும் முயற்சி செய்யவில்லை.” வசந்தி மூச்சு வாங்கிக் கொள்வதற்காக நிறுத்தினாள்.
“நான் ஒரு விஷயத்தைக் கேட்கிறேன். வருத்தப்படாமல் உங்களால் பதில் சொல்ல முடியுமா?” வீணா கடினமான குரலில் கேட்டாள்.
“சொல்ல முடிந்தால் சொல்கிறேன்.”
“சவிதாவின் அப்பாவும், நீங்களும் பிரிந்து போய் விட்டீங்க. மறுபடியும் உங்களால் அவரைப் பார்க்க முடியுமா? சவிதாவின் கல்யாணத்திலேயோ, வேறு ஏதாவது சந்தர்ப்பத்திலேயோ அவருடன் சேர்ந்து உங்களால் வேலை செய்ய முடியுமா? ஒன்றாக உட்கார்ந்து பேச முடியுமா? இன்னொருத்தருக்கு சொல்வது சுலபம். எதுவும் தன் வரையில் வந்தால்தான் புரியும்.”
திகைத்துப் போய் நின்று விட்ட வசந்தியைப் பார்த்ததும் இரக்கம் பிறந்ததோ என்னவோ “அம்மா! உங்களிடம் எனக்கு மதிப்பு அதிகம். சவிதா என்றால் எனக்கும் பிடிக்கும். ஆனால் எங்க இருவரின் எண்ணங்கள் வேறு வேறு. ஒரு விஷயத்தை சவிதா எப்படி யோசிப்பாள் என்று எனக்குத் தெரியும். சவிதாவுக்கு கொள்க்கையிடம் பிடிமானம் இல்லை. வேலை நடப்பது அவளுக்கு முக்கியம். எனக்கு கொள்க்கைதான் முக்கியம். எப்போதாவது சந்தித்தால் பேசுகிறேன்.”
வசந்தி கொஞ்சம் தேறிக் கொண்டாள். “உங்களுக்கு எடுத்துச் சொல்லக் கூடியவள் இல்லை. ஆனால் நீங்கள் எல்லோரும் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இந்த விருப்பம் கூட உங்கள் கொள்க்கைக்கு மாறுபட்டதோ என்னவோ எனக்கு தெரியாது.”
வீணாவுக்கும் வசந்திக்கும் வார்த்தைகள் முடிந்து விட்டாற்போல் தோன்றியது. என்ன பேசுவது என்று தெரியவில்லை.
“எங்கே போகிறாய்?” வசந்தி கேட்டாள்.
“வீட்டுக்குத்தான்.”
“கொஞ்ச நேரம் எங்க வீட்டுக்கு வரக் கூடாதா?”
“நீங்களே எங்கள் வீட்டுக்கு வரலாம் இல்லையா?”
“எல்லாவற்றுக்கும் போட்டீயா? சரி வா. உங்கள் வீட்டுக்கு போகலாம்” என்றாள் வசந்தி.
வசந்தி இப்படி சொல்லுவாள் என்று எதிர்பார்க்காத வீணா சங்கடத்தில் ஆழ்ந்தாள். “பஸ்ஸில் போகலாமா?”
“வேண்டாம். ரிக்ஷ¡வில் போகலாம்” என்றபடி ரிக்ஷ¡வுக்காக குரல் கொடுத்தாள் வசந்தி.
“நன்றாக படிக்கிறாயா? சவிதா பகல் முழுவதும் லைப்ரரியில் உட்கார்ந்திருக்கிறாள். உங்க பரீட்சைகளின் பரபரப்பை பார்த்தால் எனக்கும் ஏதாவது பரீட்சை எழுதினால் தேவலை போலிருக்கிறது.” வசந்தி சிரித்துக் கொண்டே சொன்னாள்.
“எழுதுங்களேன்.” வீணாவும் சேர்ந்து சிரித்தாள்.
“வாழ்க்கை எனக்கு வைத்த பரீட்சையுடனே எனக்கு சரியாக இருக்கு. இனி யூனிவர்சிட்டீ பரீட்சைகளை எங்கிருந்து எழுதுவது? அந்த பரீட்சையில் பாஸ் ஆகி விட்டேன் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது குழந்தைகள் எல்லோரும் சேர்ந்து இன்னொரு பரீட்சை வைத்து விட்டார்கள். இதில் தேர்ச்சி பெறுவேன் என்ற நம்பிக்கை இல்லை.”
“நீங்க இந்த விஷயத்தை இவ்வளவு சென்சிடிவ் ஆக எடுத்துக் கொள்ளக் கூடாதும்மா. நட்பை விட முக்கியமான கொள்க்கைக்காக எங்களுடைய நட்பு முறிந்துவிட்டது.”
“அப்படி முறிந்து போக வேண்டிய தேவையில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. சென்சிடிவ்வோ, அஞ்ஞானமோ உங்கள் பரிபாஷையில் வேறு ஏதோ எனக்குத் தெரியாது. மூன்று உலகங்களின் கொள்க்கைக்காக உங்களுடைய நட்பை இழப்பானேன்? நம் நாட்டில் அவசரமாக செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றியோ, உங்களுடைய வழிமுறைகளைப் பற்றியோ உங்களுக்குள் கருத்து வேற்றுமை இருந்தால் என்னால் புரிந்துகொள்ள முடியும். அப்படி எதுவும் இல்லை இல்லையா? ஒருவரிடம் ஒருவருக்கு இருக்கும் பிரியத்தை குழி தோண்டி புதைப்பானேன்?”
“உங்களுக்கு இதெல்லாம் புரியாதும்மா.”
“வீணா! எனக்கு கோபம்தான் வருகிறது. எனக்கு புரியாமல் இருப்பதற்கு இதில் என்ன இருக்கிறது? எனக்கும், மக்களுக்கும், யாருக்கும் புரியாத விஷயங்களை, யாருக்கும் தெரியாத விஷயங்களை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போறீங்க? உங்க கட்சியில் பிரிவு வந்தால் அதை புரிய வைக்க வேண்டியது உங்களுடைய கடமை. அர்த்தமே இல்லாத காரணங்களை சொல்லி நாங்கள் பிரிந்து போய் விட்டோம் என்று சொன்னால் நாங்கள் வாயை மூடிக் கொண்டு உட்கார்ந்திருக்கணுமா? நண்பர்களாக ஒன்றாக சேர்ந்து வேலை செய்தவர்கள் பிரிந்து போய் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைப்பதுதான் உங்களுடைய வேலையா? நேற்று சவிதா சொல்லிக் கொண்டிருந்தாள், ராமமூர்த்தி பத்து வருடங்களாக தவறு செய்து கொண்டிருக்கிறார் என்று. பத்து வருடங்களாக தவறு செய்து கொண்டிருந்தால் ஏன் யாரும் எதுவும் சொல்லவில்லை? இப்போ திடீரென்று அவரை விலக்குவது, அவர் தனியாக வேறு கட்சியை தொடங்குவது, இதெல்லாம் என்ன?”
வீணா வசந்தியை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அதற்குள் வீடு நெருங்கிவிட்டது. “நான் இந்த வார்த்தைகளை சொன்னதற்காகவே உனக்கு எதிரியாகி விடுவேனா? இந்த வார்த்தைகளை நான் பிரியத்தால் சொல்கிறேனோ, கோபத்தால் சொல்கிறோனோ உங்களுக்கு புரியவில்லை என்றால் என்னால் எதுவும் செய்ய முடியாது. மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என்ற அகம்பாவத்தில் இருக்காதீங்க. உங்களுக்கு தெரியாததும் சிலது இருக்கும். உங்களுக்கு தெரிந்தவற்றை மற்றவர்களுக்கு புரியும் விதமாக செய்யுங்கள்.”
வீணா மௌனமாக வீட்டுக்குள் நடந்தாள்.
வீணாவின் தாய் வங்கியில் பணி புரிந்து கொண்டிருந்தாள். வசந்தியைப் பார்த்ததும் “நானே உங்க விட்டுக்கு வரணும்னு நினைத்திருந்தேன். நீங்க இங்கே வந்து ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. இது வரையில் உங்களை சந்திக்காமல் போனது என்னுடைய தவறுதான். மன்னித்து விடுங்கள்” என்றாள்.
வசந்தியும் முறுவலித்து விட்டு “வேலைக்குப் போவதால் உங்களால் முடிந்திருக்காது. நானே வந்திருக்க வேண்டும். தவறு என்னுடையதுதான்” என்றாள்.
“என்ன? முதல் சந்திப்பிலேயே தவறுகளை ஒப்பிக்கிறீங்க?” என்றாள் வீணா குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொண்டே.
“எங்களுக்கு சுய விமரிசனம் செய்து கொள்ளத் தெரியும்” என்றாள் வசந்தி கிண்டலாக.
“அம்மாடியோவ்! உங்களுக்கு இப்படி எல்லாம் பேசத் தெரியும் என்று தெரியாமல் போய்விட்டதே.” வீணா சொன்னாள்.
வசுந்தராவும், வசந்தியும் கொஞ்ச நேரம் பொதுவாக பேசிக் கொண்டார்கள். வசந்தி விடை பெற்றுக் கொண்டாள்.
“சவிதாவை வரச் சொல்லுங்கள்” என்றாள் வசுந்தரா.
“நீங்களும் வீணாவும் எங்கள் வீட்டுக்கு வாங்க” என்றாள் வசந்தி.
வீட்டுக்கு போன பிறகு சவிதாவிடம் நடந்ததை எல்லாம் சொன்னாள் வசந்தி.
சவிதா வியப்புடன் தாயைப் பார்த்தாள். “நீ ரொம்ப மாறி விட்டாய் அம்மா! இப்படி எல்லாம் பேசத் தெரியும் என்று நான் நினைக்கவில்லை.”
“தேவை வந்தால் எல்லாம் தானாகவே வரும். கம்பச்சித்திரமா என்ன?” வசந்தி மகளுக்கு முன்னால் வெட்கப் படுவதற்கு என்னவோ போல் இருந்தது.

தொடரும் …..

தெலுங்கில் Volga {P.Lalithakumari}
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
email id tkgowri@gmail.com

Series Navigation