• Home »
  • கதைகள் »
  • தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 16(1)

தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 16(1)

This entry is part of 29 in the series 20080619_Issue

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்


ராமமூர்த்தி இன்னும் ஒரு வாரத்தில் கிளம்பிப் போய் விடுவான் என்ற போது திருச்சியிலிருந்து சாந்தாவும் ரோகிணியும் வந்தார்கள். ராமமூர்த்தி வந்ததிலிருந்து வசந்தி அவர்களுக்கு கடிதம் எழுதுவதை விட்டுவிட்டாள்.
வாரத்திற்கு ஒரு கடிதம் எழுதும் வசந்தியிடமிருந்து பதினைந்து இருபது நாடகள் கழிந்தும் கடிதம் வராமல் போனாதால் ரோகிணியும் சாந்தாவும் கவலைப்பட்டார்கள். மறுபடியும் டிப்ரெஷனில் விழுந்து விட்டாளோ என்று பயந்து நேரில் பார்ப்பதற்காக வந்தார்கள்.
சவிதா ஸ்டேஷனுக்கு சென்று அவர்களை அழைத்துக் கொண்டு வந்தாள்.
ரோகிணியைப் பார்த்ததுமே வசந்தி அவளை உடனே ராமமூர்த்தியிடம் அழைத்துச் சென்றாள்.
“நீ முதலில் பாரு இந்த ஆளை” என்று அவசரப்படுத்தினாள்.
ரோகிணி எல்லா ரிப்போர்டுகளையும், பயன்படுத்திய மருந்துகளையும் பார்த்துவிட்டு சிகிச்சை சரியானதுதான் என்ற பிறகுதான் திருப்தி அடைந்தாள்.
சாந்தா வசந்தியை வித்தியாசமாக பார்த்தாள். அன்று முழுவதும் அவளுடன் கழித்த பிறகு வசந்தியடம் ஏற்பட்ட மாறுதல் இருவருக்கும் புரிந்தது.
“நீ இந்த அளவுக்கு மாறுவாய் என்று நான் ஒரு நாளும் நினைக்கவில்லை. பரவாயில்லை. தேறிக் கொண்டு விடுவாள் என்று ரோகிணி சொன்னாலும் தற்கொலை செய்து கொண்டு விடுவாயோ என்று பயந்தேன்” என்றாள் சாந்தா.
“இதையெல்லாம் சவிதா சாதித்தாள்.” ரோகிணி சொன்னாள்.
“சவிதாவுக்கு இந்த அரசியல், இந்த சூழல் இருந்திருக்காவிட்டால் வசந்தி என்னவாகியிருப்பாள்?” சாந்தா கேட்டாள்.
“என்னவாகியிருப்பேனோ தெரியாது. ஆனால் எதுவும் ஆகக் கூடாது என்று மட்டும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். கணவன், குழந்தைகள் தவிர வேறு வாழ்க்கையும் இருக்கும். அந்த வாழ்க்கை நன்றாகவும் இருக்கும் என்று தெரிந்தால் யாரும் என்னைப் போல் குடும்பத்தில் புதைந்து போய்விட மாட்டார்கள். அந்த அளவுக்கு புதைந்து போகாமல் இருந்தால் அந்த குடித்தனத்திற்காக உயிரை விட்டு விட மாட்டார்கள். அரசியல் மட்டும்தானா? உங்க இருவருக்கும் உங்க ஸ்டூடென்ட்ஸ், உங்க நோயாளிகள்… அவர்களுக்கு உங்களுடைய இருப்பு எவ்வளவு முக்கியம்? நம்முடைய வாழ்க்கை வெறும் வீட்டு வேலைகளுடன் நின்று போய்விடாமல் சமுதாயதிற்கும் பயன்பட்டால் எவ்வளவு சந்தோஷமாக இருக்குமோ வார்த்தைகளில் சொல்ல முடியாது” என்றாள் வசந்தி.
“ஆனால் அரசியலில் எனக்கு பல சந்தேகங்கள் இருக்கு. நீ மறுபடியும் கஷ்டங்களில் விழுந்துவிடுவாயோ என்று பயமாக இருக்கு.” சாந்தா சொன்னாள்.
“கஷ்டங்கள்! நம் சுற்றிலும் இருக்கும் வாழ்க்கை நம்முடையதாக இருக்க வேண்டுமே ஒழிய கஷ்டங்களுக்கு என்ன வந்தது? முன்பு ஒரு தடவை பண்டிகைக்கு குழந்தைகளுக்கும் எனக்கும் புத்தாடைகள் இல்லை என்றால் அதுவே எனக்கு கஷ்டமாக இருந்தது. நல்ல நாளில் குழந்தைகளுக்கு கூட புத்தாடைகளை அணிவிக்க முடியாமல் போய்விட்டேனே என்று பலநாட்கள் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். இப்போ கஷ்டங்களுக்கும் சுகங்களுக்கும் புதிய அர்த்தங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்” என்றாள் வசந்தி.
“கஷ்டமோ சுகமோ ஏதோ ஒன்று வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கணும் சாந்தா! குட்டையில் தேங்கிவிட்ட நீரை போல் ஒரே இடத்தில் நின்று விடக் கூடாது. வாழ்க்கையை பலவிதமான அனுபவங்களுடன் விசாலமாக மாற்றிக் கொள்ளணும், பெண்களின் வாழ்க்கையில் வாய்ப்புகள் குறைவு. அரசியலை பற்றி எனக்கு முழுவதுமாக தெரியாது என்றாலும், வசந்தியை இந்த அளவுக்கு ஊக்கம் தந்தவை நல்லதாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது” என்றாள் தோகிணி.
சாந்தா தன்னுடைய கல்லூரி மாணவிகளில் சிலர் அரசியலில் ஈடுப்பட்டிருந்தாலும் எப்படி லட்சியத்துடன் இருக்கிறார்களோ, மற்றவர்கள் எப்படி தான்தோன்றித்தனமாக அலைந்துக் கொண்டிருக்கிறார்களோ விவரமாக சொன்னாள்.
வசந்தி ராஜலக்ஷ்மியின் விஷயத்தை அவர்கள் இருவரிடமும் சொன்னாள். பெண்கள் இவ்வளவு தைரியமாக, நேர்மையுடன், புத்திசாலித்தனத்துடன் இருப்பதை கேட்டு சந்தோஷப்பட்டார்கள். அவர்கள் இருந்த இரண்டு நாட்களும் சிரிப்பும் கும்மாளமுமாக கழிந்து விட்டன.
“உங்க சிநேகிதிகள் வந்த பிறகு என்னை மறந்தே போய் விட்டீங்க” என்றான் ராமமூர்த்தி சிரித்துக் கொண்டே.
“அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. உங்களுக்கு கொஞ்சம் தெம்பு வந்ததும் என்னை மறந்து விட்டீங்க. உங்க படிப்பு. எழுத்து என்று மூழ்கிவிட்டீங்க” என்றாள் வசந்தி தானும் சிரித்துக் கொண்டே.
“நாளை மறுநாள் நான் கிளம்புகிறேன்” என்றான் அவன்.
“எங்கே?” என்றாள் வசந்தி வியப்புடன்.
“ஏதாவது ஒரு இடத்திற்கு போய்த்தானே ஆகணும். உடல் நிலை சரியாகி விட்ட பிறகும் இங்கே தங்கியிருப்பது நியாயம் இல்லை.”
“இன்னும் பத்து நாளாவது ஓய்வு எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்.” கவலையுடன் சொன்னாள். ராமமூர்த்தி போய் விடுவான் என்ற நினைப்பே அவளுக்கு என்னவோ போல் இருந்தது.
“ஏற்கனவே ஓய்வு அதிகமாகிவிட்டது. செய்ய வேண்டிய வேலைகள் நின்றுவிட்டன. தொடர்ந்து வேலை செய்தால் தவிர முடியாது.”
“மறுபடியும் ஊண் உறக்கம் இல்லாமல் உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளப் போறீங்களா?”
“பணிவிடை செய்து தேற்றுவது நீங்கதான் இருக்கீங்களே? எதற்காக கவலைப்படணும்?”
இருவரும் சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்த போது சவிதா வந்தாள்.
“ராமமூர்த்தி நாளை மறுநாள் புறப்படுகிறாராம்.” எவ்வளவு அநியாயம் பார்த்தாயா என்பது போல் சொன்னாள் சவிதாவிடம்.
“அம்மா உங்களுக்காக கவலைப்படுகிறாள். உங்களுக்கு பணிவிடை செய்து ரொம்ப பழகிவிட்டாள். தூக்கத்திலும் அதே புலம்பல். ஒரு காரியம் செய்யுங்கள். உங்கள் ஏரியாவில் யாருக்காவது உடல்நலம் சரியாக இல்லை என்றால் அம்மாவிடம் அனுப்பிவிடுங்கள்” என்றாள் சிரித்துக் கொண்டே.
ஒருநாள் மாலையில் பீச்சுக்கு போகலாம் என்று சவிதாவும் வசந்தியும் கிளம்பினார்கள். வீட்டை பூட்டும் போது சந்திரசேகர் வந்தான். “எங்கே புறப்பட்டீங்க?”
“சும்மா பீச் வரைக்கும்” என்றாள் சவிதா.
வசந்திக்கு சந்திரசேகரைப் பார்த்ததும் ராஜலக்ஷ்மி அவனுக்குக் கடிதம் எழுதியிருக்கிறாள் என்று புரிந்துவிட்டது. என்ன பதில் சொல்லப் போகிறான் என்று பதற்றமும், ஆர்வமும் அவள் மனதில் பரவியிருந்தது.
“வாங்க. நானும் உங்களுடன் வருகிறேன்” என்றபடி கேட்டைத் திறந்தான்.
மூவரும் போய் பீச்சில் உட்கார்ந்து கொண்டார்கள். மாலை நேரத்து வெயில் கடல்நீரின் மீது பட்டு ஜொலித்துக் கொண்டிருந்தது. வசந்தியின் மனதிலும் கடல் அலைகளை போல் உத்வேகம் நிரம்பியிருந்தது.

சவிதா ஆர்வமும், பரபரப்பும் கலந்த பார்வையுடன் சந்திரசேகரைப் பார்த்துக் கொண்டே “சொல்லுங்கள்” என்றாள்.
“சற்று முன்னால்தான் ராஜலக்ஷ்மிக்கு கடிதம் எழுதி போஸ்ட் செய்தேன். உங்களிடமும் பேச வேண்டும் என்று நினைத்து இப்படி வந்தேன்” என்றான் கொஞ்சம் தயங்கிக் கொண்டே.
வசந்தி பொறுமையற்றவளாக நகர்ந்தாள்.
“ராஜலக்ஷ்மி எழுதிய கடிதத்தைப் பார்க்கிறீங்களா?” அவன் ஜேபியிலிருந்து கடிதத்தை எடுக்கப் போனான்.
“தேவையில்லை. அவள் என்ன எழுதியிருப்பாள் என்று எனக்குத் தெரியும். நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதைச் சொல்லுங்கள்” என்றாள் சவிதா.
“நான் என்ன சொல்லப் போகிறேன்? ராஜலக்ஷ்மி எவ்வளவு சீக்கிரமாய் என் காதலை ஏற்றுக்கொண்டால் அவ்வளவு நல்லது என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.”
மனதிலிருந்து பெரிய பாரம் நீங்கிவிட்டாற்போல் வசந்தி மூச்சை விட்டுக் கொண்டாள்.
“ராஜீ உங்கள் காதலை ஏற்றுக்கொள்வாள் என்று உங்களுக்கு புரியவில்லையா?” சவிதா கேட்டாள்.
சந்திரசேகர் புரியாதவன் போல் பார்த்தான்.
“உங்களுடைய பிரபோசலை ஏற்றுக் கொள்ளும் உத்தேசம் இல்லை என்றால் அந்த விஷயத்தை உங்களிடம் ஏன் சொல்லப் போகிறாள்?”
அதைக் கேட்டதும் சந்திரசேகரின் முகம் மலர்ந்துவிட்டது. அவன் கண்களில் தென்பட்ட மலர்ச்சியைப் பார்த்ததும் வசந்திக்கு ராஜலக்ஷ்மியைப் பற்றிய கவலை முழுவதுமாக நீங்கிவிட்டது.
“ராஜலக்ஷ்மி என்னிடம் அந்த விஷயத்தை ஒளிமறைவில்லாமல் சொன்னதற்கு எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கு. அவளுடைய நேர்மை, என் மீது அவள் வைத்திருக்கும் நம்பிக்கை இவை எல்லாம் புரிந்தது. ராஜலக்ஷ்மி போன்ற பெண் கிடைப்பது உண்மையிலேயே என்னுடைய அதிர்ஷ்டம்தான்” என்றான்.
“நீங்க ரொம்ப ஆவேசத்தில் இருக்கீங்க. இந்த ஆவேசம் வாழ்நாள் முழுவதும் இருக்குமா?” கிண்டலாக கேட்பது போல் கேட்டாள் சவிதா.
“அப்படி என்றால்?” அடியுண்டவன் போல் பார்த்தான் சந்திரசேகர்.
“நீங்க இப்போ ஏதோ தியாகம் செய்வது போல், தவறு செய்து விட்ட ஒரு பெண்ணை மன்னித்து ஏற்றுக் கொள்வது போல் திக்குமுக்காடுவீங்க. பின்னால் நீ தவறு செய்து விட்டாய், நீ அப்படிப் பட்டவள், ஒழுக்கம் இல்லாதவள் என்று வாழ்நாள் முழுவதும் குத்திக் காண்டே இருப்பீங்க. அப்படி செய்வதாக இருந்தால் நீங்க ராஜீயை பற்றி மறந்து போவது நல்லது.” கடினமான குரலில் சொன்னாள் சவிதா.
“என்ன பேச்சு இரு சவிதா? ஏன் இப்படிப் பேசுகிறாய்?” வசந்தி பதற்றமடைந்தாள்.
“பரவாயில்லைங்க. அந்த வார்த்தைகளை கேட்டுக் கொள்வதற்கு ஒரு ஆணாக எனக்கு தகுதி இருக்கிறது. ஆனால் ஒரு ஆண்மகனாக இருக்கக் கூடாது என்று தீவிரமாக முயற்சி செய்பவர்களில் நானும் ஒருவன். ராஜலக்ஷ்மி தவறு செய்து விட்டாள் என்றோ, களங்கமடைந்து விட்டாள் என்றோ நான் நினைக்கவில்லை.”
“பின்னே ராஜலக்ஷ்மி நேர்மையானவள் என்று எப்படி நினைக்கிறீங்க? தான் செய்த தவறை உங்களிடம் தெரிவித்தாள் என்றுதானே? அசல் அந்த விஷயத்தை உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியம்தான் என்ன? ஒருக்கால் ராஜீ ஏதாவது காரணத்தினால் உங்களிடம் அந்த விஷயத்தை சொல்லாமல் போனால் நேர்மையில்லாதவள் போலவும், ஏமாற்றியது போலவும் ஆகி விடுமா? அந்த விஷயத்திற்கு அவ்வளவு முக்கியத்தும் இருக்கு என்று நீங்க நினைக்கிறீங்களா? ஒரு மனுஷியை அந்த ஒரு விஷயத்தைக் கொண்டு மட்டுமே எடைபோடுவது, நல்லது கெட்டது முடிவு செய்து சரியாகுமா?”
சவிதாவின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த வசந்திக்கு வியப்பும், மகிழ்ச்சியும் ஏற்பட்டன. இந்தக் காலத்து பெண்கள் எவ்வளவு சுயகௌரவத்தோடு இருக்கிறார்கள்? எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள்? எவ்வளவு தைரியமாக மனதில் இருப்பதை எல்லாம் வெளியில் சொல்கிறார்கள்? பெண்கள் எல்லோரும் இப்படி இருக்க முடிந்தால் எத்தனை பிரச்னைகள் தீர்ந்துவிடும்? என்றெல்லாம் யோசித்தபடி சவிதாவை புதிதாக பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சந்திரசேகர் யோசனையில் ஆழ்ந்துவிட்டான். சற்று நேரம் கழித்து தனக்குத் தானே பேசிக் கொள்வது போல் சொன்னான்.
“நவீனுக்கும் ராஜலக்ஷ்மிக்கு நடுவில் நடந்த விஷயம் ரொம்ப முக்கியமானது என்றோ, அது தான் ராஜலக்ஷ்மியின் நல்லதை கெட்டதை முடிவு செய்யும் என்றோ நான் நினைக்கவில்லை. ஆனால் அந்த விஷயத்திற்கு சமுதாயத்தில் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. ராஜலக்ஷ்மி அல்லாமல் வேறு பெண்ணாக இருந்தால் அந்த விஷயத்திற்கு தற்கொலை செய்து கொண்டாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. அதே போல் சாதாரணமாக ஆண்கள் இந்த விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்வார்களோ உங்களுக்குத் தெரியும். ராஜலக்ஷ்மி இந்த விஷயத்தை எடுத்துக் கொண்ட விதம், நான் எப்படிப்பட்ட ஆண்மகனோ தெரிந்து கொண்ட பிறகுதான் என்னைப் பற்றி யோசிக்கணும் என்ற அவளுடைய அணுகுமுறையும் எனக்குப் பிடித்திருந்தன. இந்த காரணங்களுக்காகத்தான் நான் அவளை நேர்மையானவள் என்று சொன்னேனே தவிர வேறு எண்ணம் இல்லை. அவள் ஏதோ தவறு செய்துவிட்டாள் என்றோ, நான் அவள் வாழ்க்கையை சீர் திருத்துகிறேன் என்ற பிரமையோ எனக்கு இல்லை. என்னை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்” என்றான் சீரியஸாக.
சவிதா அவனுடைய பதிலைக் கேட்டு சமாதானமடைந்து விட்டவள் போல் மௌனமாகிவிட்டாள்.
“எப்போ திருமணம் செய்துக் கொள்வதாய் இருக்கீங்க?” வசந்தி உரிமை எடுத்துக் கொண்டு கேட்டாள்.
“அம்மா! உனக்கு எல்லாமே அவசரம் தான்” சவிதா சலித்துக் கொண்டாள்.
“ராஜலக்ஷ்மி எப்போ சொன்னால் அப்போ. எல்லாம் அவளுடைய விருப்பத்தை பொறுத்துதான் நடக்கும்” என்றான் சந்திரசேகர்.
“உங்களுடைய வேலை ஸ்திரமானதுதானா?” சவிதா கேட்டாள்.
“பேஷாக. பர்மண்ட் ஜாப். நிம்மதியாக உட்கார்ந்து பார்க்கும் வேலை” என்றான். அவன் ஒரு வங்கியில் குமாஸ்தாவாக வேலை பார்க்கிறான்.
பார்த்துக் கொண்டிருந்த போதே ஒரு வருடம் கழிந்துவிட்டது. சவிதாவுக்கு மூன்றாம் ஆண்டு பரீட்சைகள் முடிந்து விட்டன. விடுமுறையில் பதினைந்து நாட்கள் சென்னைக்குப் போய் அப்பாவுடன் இருந்துவிட்டு வந்தாள். வசந்தி மனதில் எந்த வருத்தமும் பட்டுக் கொள்ளாமல் சவிதாவை அனுப்பி வைத்தாள். வசந்திக்கு இப்போ கை நிறைய வேலை. வீட்டில் எப்போதும் யாராவது இருந்துகொண்டே இருப்பார்கள். சவிதாவின் சிநேகிதிகள், யூனியனில் வேலை பார்ப்பவர்கள், அவ்வப்பொழுது வரும் கட்சி தொண்டர்கள், அடுத்த ஊர்களிலிருந்து வரும் மாணவர் இயக்கத்தின் மெம்பர்கள். வீட்டில் எப்போதும் சலசலப்புதான்.
வசந்திக்கு இப்போ வெளியே போய் செய்ய வேண்டிய காரியங்கள் கூட இருந்தன. இதனால் அவளுக்கு தனிமை என்றால் என்னவென்று கூட மறந்து போய்விட்டது. அதனால்தான் சவிதா “இந்த பதினைந்து நாட்களும் ரோகிணி ஆன்டீயிடம் போய் இருந்து விட்டு வாயேன்” என்று சொன்ன போது ஒப்புக் கொள்ளவில்லை.
“வீட்டை பூட்டிக் கொண்டு போய் விட்டால் எப்படி? யாருக்கு என்ன தேவை ஏற்படுமோ? வேண்டுமானால் நீ சென்னையிலிருந்து வந்த பிறகு போய்க் கொள்கிறேன்” என்றாள்.
சவிதா நிம்மதியாக சென்னைக்கு போய்விட்டு வந்தாள். சென்னையில் என்ன விசேஷம் என்று வசந்தி தனியாக எதுவும் கேட்கவில்லை. சவிதா தானாகவே அப்பாவைப் பற்றி நான்கு வார்த்தைகள் சொன்னாள். “அம்மா! மாமா வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன். ரொம்ப போர் அடித்துவிட்டது. பாவம் சுமித்ரா! ரொம்ப மோசமாக இருக்கிறாள். அவளுக்கு மெடிகல் என்ட்ரன்ஸில் சீட் வராததால் மாமி தினமும் அவளை அர்ச்சனை செய்து கொண்டே இருக்கிறாளள். அதைக் கேட்டுக் கேட்டு அந்தப் பெண்ணுக்கு தான் எதற்கும் லாயக்கு இல்லாதளோ என்ற தாழ்வு மனப்பான்மை வந்து விட்டது. இருபத்தி நான்கு மணிநேரமும் படிப்புதான். மாமாவின் வீட்டில் பேப்பர் கூட வரவழைப்பதில்லை. ஒரு துண்டு காகிதம் தென்பட்டாலும் அது மெடிகல் என்ட்ரன்ஸ¤க்கு சம்பந்தப்பட்டதுதான். தமாஷ் என்ன தெரியுமா? இரவில் எட்டு மணி முதல் ஒன்பது மணி வரையில் மாமாவீட்டு ஏரியாவில் கரெண்டு போகும். அப்போ பஜ்ஜர் செஷன் தொடங்கும். மாமாவும் மாமியும் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் புத்தகத்தை பார்த்துக் கொண்டே கேள்விகளை கேட்பார்கள். சுமித்ராவும் டக் டக் என்று எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருப்பாள். சீட் ஏன் வரவில்லையோ அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம்.” அந்த காட்சி நினைவுக்கு வந்ததும் சவிதா விழுந்து விழுந்து சிரித்தாள்.
“போகட்டும் விடு. எப்படியாவது சுமித்ராவை டாக்டராக்க வேண்டும் என்பது லக்ஷ்மியின் தவிப்பு. படிக்க வைக்கவில்லை என்றால் எப்படி?”
“இப்படி படிக்க வைத்தால் ஒரு நாளும் சீட் வரப் போவதில்லை. ஒருக்கால் சுமித்ரா டாக்டர் ஆனாலும் பிராக்டீஸ் செய்யப் போவது அவளுடைய அப்பா அம்மாதான். யாருக்கு ஆபரேஷன் செய்யணும், யாருக்கு வைத்தியம் பார்க்கணும் என்று எல்லாம் அவர்களே முடிவு செய்வார்கள் என்று நினைக்கிறேன். இப்போ அவர்கள் எதை சாப்பிட சொன்னால் அதைத்தான் சாப்பிடுகிறாள். எந்த ஆடைகளை உடுத்தச் சொன்னால் அதைத்தான் போட்டுக் கொள்கிறாள். அதைப் பார்க்கும் போது எனக்கு பித்ரு பக்தி, மாத்ரு பக்தியை விட ஹீனமானது வேறு இல்லை என்று தோன்றியது.”
“அப்படி என்றால் உனக்கு என் மீது பக்தி இல்லை. அப்படித்தானே?” வசந்தி முறுவலுடன் கேட்டாள்.
“பக்தி இல்லவே இல்லை. அம்மாவிடம் எனக்கு அன்பு….. பிரியம்.” தாயைக் கட்டிக் கொண்டாள் சவிதா.
“சுமித்ராவும் அம்மாவிடம் அன்பு இருப்பதால்தான் அதையெல்லாம் செய்கிறாளோ என்னவோ?”
“அப்படி எதுவும் இல்லை. உள்ளூர திட்டிக் கொண்டே முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு செய்கிறாள். தன்னுடைய பேச்சு எடுபடாது என்று பயந்து கொண்டே செய்கிறாள். அப்படி செய்வதை விட அவங்கம்மா பேச்சை மறுத்துவிட்டு தன்னுடைய விருப்பம் போல் செயல்பட்டால்தான் அவளுக்கு அம்மாவிடம் அன்பு இருப்பதாக அர்த்தம்.”
“உன்னுடையது எல்லாமே தலைகீழ் விவகாரம்.”
“என்னுடையது மட்டுமே இல்லை. உலகமே இப்படித்தான் இருக்கு.” சவிதா சண்டைக்கு தயாரானாள்.
“சரிதான. ஒப்புக்கொள்கிறேன். அது போகட்டும். கடந்த பதினைந்து நாட்களாய் வீணா ஒரு தடவை கூட வரவில்லை. என்ன நடந்ததோ என்னவோ. இன்று மாலை போய்விட்டு வருவோம். நான் ஒண்டியாக போவானேன் என்று சும்மாயிருந்து விட்டேன்” என்றாள் வசந்தி.
“ஒரு தடவை கூட வரவில்லையா?” சவிதா யோசனையில் ஆழ்ந்தாள். “யாரெல்லாம் வந்தார்கள்? ரமணன் வந்தானா?”
“வந்தான். இரண்டு முறை. பத்து நிமிடங்கள் இருந்துவிட்டு போனான். அவ்வளவுதான்.”
அன்று மாலை வசந்தியை மறுத்துவிட்டு தனியாக கிளம்பிப் போன சவிதா இரவு முழுவதும் வீட்டுக்கு வரவில்லை. வசந்திக்கு பழக்கம்தான் என்றாலும் முன்கூட்டியே சொல்லாததால் பதற்றமாக இருந்தது.
நள்ளிரவு தாண்டிய பிறகு பார்ட்டீ மெம்பர் ஒருத்தன், ஏற்கனவே பலமுறை வந்திருப்பவன் வந்தான். வசந்தியிடம் இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தான். வசந்திக்கு அவன் சொன்னதில் பெரும்பாலான விஷயங்கள் புரியவில்லை. பார்ட்டீயில் நிறைய தவறுகள் நடந்து வருவதாக சொல்கிறான் என்று மட்டும் புரிந்தது.
“இந்த விஷயங்கள் எல்லாம் சவிதாவிடம் சொல்லுங்கள். இந்த பேப்பர்கள், கடிதங்கள் எல்லாம் அவளிடம் கொடுங்கள்” என்று சொல்லிவிட்டு விடியற்காலையில் அவன் கிளம்பிப் போனான்.

தொடரும் …..

தெலுங்கில் Volga {P.Lalithakumari}
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
email id tkgowri@gmail.com

Series Navigation