“ பழைய பட்டணத்தின் மனிதக் குறிப்புகள்”

This entry is part [part not set] of 29 in the series 20080619_Issue

கே.பாலமுருகன்



சுங்கைப்பட்டாணி பட்டணம் அவ்வளவு பெரியதாக இல்லையென்றாலும் மனிதச் சலனங்களால் நிரம்பி வழியும் தன்மையுடையது எனலாம். சாலையோரங்களில் பகல் பொழுதின் வெயிலையும் கடந்து மனிதர்கள் ஒழுகிக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொருவரின் முகத்திலும் அந்தப் பட்டணம் வாழ்ந்து கொண்டிருப்பதையும் பார்க்கலாம்.
ஆள் கூட்டமே இல்லாத அம்மோய் அக்கா செலவுக் கடை, எப்பொழுதும் துணிகளை மடித்துக் கொண்டிருக்கும் சுக்கா ராமாய் துணிக் கடை பெண்மணிகள், சீன மருந்து கடைகள், ஆச்சோங் மோட்டார் பட்டறையின் மோட்டார்கள், சியோங் மருந்தகம், கரும்பு தண்ணீர் விற்றுக் கொண்டிருக்கும் வயிறு உப்பிய கிழவி, சுப்ரமணிய ஆலயத்தை ஒட்டிப் பூக்களுக்கு மத்தியில் அமர்ந்திருக்கும் பூக்கடை மல்லிகா அக்கா என்று எல்லாரும் சாலையோரங்களை நிரப்பியிருக்கிறார்கள்.
நேற்றைய பொழுதில் பார்த்த மனிதர்கள் இன்றும் அங்கேதான் உழன்றுக் கொண்டிருக்கிறார்கள். பார்க்க மறந்திருந்தாலும் மறுநாள் சிறிய இடைவெளியில் கண்டுபிடித்து விடலாம்தான். கறுத்த மேனியுடன் கையில் வெள்ளைச் சாக்குகளைப் பிடித்துக் கொண்டு, மதிய பொழுதில் சட்டையில்லாமல் சாலையின் நடுவே நடந்து கொண்டிருக்கும் கிறுக்குத் தேவனைப் பார்க்கத் தவறிவிட்டால் அடுத்த ஒரு மணி நேரத்திலேயே அவனைச் சரவணாஸ் சாப்பாட்டுக் கடையோரமாக பார்த்து விடலாம்தான்.
இரவு நேரத்தில் நம்பர் தாள் நொண்டிச்சியைத்தான் எல்லாரும் கடந்து போக வேண்டும். 8மணியிலிருந்து 10 மணிவரை அவளைப் பார்ப்பதற்கு யாரும் தவறிவிட மாட்டார்கள். அந்த இரண்டு மணி நேரத்திற்கு மட்டும் முச்சந்தியைக் காக்கும் தேவதை அவள்.
அடுத்தப்படியாக ஜக்கோய் கடையோரமாக மாலை 7மணிக்கு மேல் தனது பெரிய சைக்கிளுடன் நின்று கொண்டிருக்கும் அழகு சுந்தரம் இளைஞனையும் யாரும் மறந்துவிட முடியாதுதான். வெளுத்த முகமும் உதிர்ந்த மலர்ச்சியுடனும் யாருக்காகவோ காத்துக் கொண்டிருந்துவிட்டு எதுவுமே நடக்காததைப் போல போய்விடுவான். அவனை யாரும் பொருட்படுத்தியது இல்லை ஆனாலும் அவனை எதிர்கொள்ளாமல் இருந்துவிடுவது கடினம்தான்..
சம்சூ கடையின் வெளிவரந்தாவில் உலகத்தை மறந்து போதையில் பறந்து கொண்டிருக்கும் எத்தனையோ அழுக்கு தாத்தாக்களையும் 7மணிக்கு மேல் பார்த்துவிடலாம். பக்கத்தில் இருக்கும் மெக்னம் நம்பர் கடைக்கு எப்பொழுது வந்தாலும், சம்சூ கடையின் கதவு குறுகிய இடைவெளியுடன் திறந்திருப்பதையும் அழுக்குத் தாத்தாக்கள் போதையில் வெளி வரந்தாவில் கிடப்பதையும் பார்த்துவிடலாம்தான்.
பார்ப்பது எவ்வளவு பெரிய வரம். அதிலும் மனிதர்களைப் பார்ப்பது சுவாரியஸ்மானது என்றுகூட சொல்லலாம். பார்த்துப் பழகிப் போன மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அதைவிட இரசனைமிக்கது எனக்கூட அர்த்தப்படுத்திக் கொள்ளலாம் போலும். ஒவ்வொருமுறையும் பார்க்கும் பொழுது அவர்கள் வேறு வேறாகத் தெரிகிறார்கள்.
நான் அவர்களைக் கடந்து கொண்டிருக்கிறேன். மிகவும் சாதரணமாகத்தான். எல்லாரையும் போல. வீட்டைவிட்டு வெளியேறும் பொழுதே பார்த்துப் பழகிப் போன பட்டணத்து மனிதர்கள் வந்து மனதில் குவிந்து கொள்கிறார்கள். பட்டணமே காலியாகிவிடுகிறது, அவர்களைத் தவிர. எல்லாரும் மாயமாகிவிட்டார்கள். அவர்கள் மட்டும் வேறு வேறாக உருமாறிக் கொள்கிறார்கள்.

கிறுக்குத் தேவனைப் பற்றிய குறிப்புகள்
அவனுக்கு யார் கிறுக்குத் தேவன் என்று பெயர் வைத்திருப்பார்கள் என்பதில் எனக்கு இன்றுவரை குழப்பம்தான். எப்பொழுதோ நண்பருடன் சமிக்ஜை விளக்கோரம் மோட்டாருடன் பச்சை விளக்கிற்காகக் காத்துக் கொண்டிருக்கும் போது அவன்தான் கிறுக்குத் தேவன் என்று நண்பர் அறிமுகப்படுத்தி வைத்தார். வெறும் பெயருடன் அவனைப் பற்றிய அறிமுகம் முடிவடைந்தது.
அதன் பிறகுதான் அவனை நான் அடிக்கடி கவனிக்க ஆரம்பித்தேன். அவன் எங்கிருந்து வந்து இந்தப் பட்டணத்தில் சேர்ந்திருப்பான் என்பதில்கூட குழப்பம்தான். எப்பொழுதோ பட்டணமே இருளில் புதைந்து கிடந்த நேரத்தில்தான் எங்கிருந்தோ வந்து சேர்ந்திருக்க வேண்டும். நேரமும் காலமும் அவனுக்கு அப்பால்தான் இயங்கிக் கொண்டிருந்தன.
“டேய் கிறுக்குப் பையலெ, எங்கடா இப்படி ஊர் திரியறே?”
“சங்கரு அண்ணன், அவன் கிறுக்குத் தேவன், நீங்க வேற அப்படிக் கூப்டு அவன்கிட்ட அடி கிடி வாங்கிக்காதிங்க, முரட்டுப் பையன் மாதிரி இருக்கான்”
“இருப்பாண்டா இருப்பான். எங்கிருந்து வந்துச்சுனு தெரிலெ, நம்பகிட்டெ வச்சுக்க முடியுமா? டேய் என் கண்ணு முன்னுக்கெ நிக்காதெ. மூஞ்சையும் ஆளையும் பாரு, ச்சே”
கிறுக்குத் தேவனை அங்குள்ளவர்கள் அடிக்கடி சீண்டிப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். உண்மையில் அவன் பெயர் தேவனோ? அவன்தான் யாரிடமும் பேச விரும்பாதவனாயிற்றே. ஒரு வேளை சரவணாஸ் சாப்பாட்டுக் கடையின் வேலையாள் எவரிடமாவது தேவன் என்று பெயரை அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பானோ? அவனுக்கு மிச்சம் மீதி அங்குதானே கிடைக்கிறது.
“டேய் கிறுக்குத் தேவன் வந்துட்டான், அந்தப் பொட்டலத்தெ எடுத்துப் போடு”
ஒவ்வொருமுறையும் மதிய நேரத்தில் அந்தச் சப்பாட்டுக் கடை ஓரமாக மிகப் பவ்வியமாக அமர்ந்து கொண்டு அந்தப் பொட்டலத்தின் கட்டை அவிழ்த்து, கடந்து செல்கிறவர்களைப் ஒருவித பாதுகாப்புணர்வுடன் பார்த்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருப்பான். பிறகு பொட்டலத்தை மடித்து வீசிவிட்டு, பாக்கெட்டில் சொருகியிருக்கும் தண்ணீர் புட்டியலை எடுப்பான். ஆகக் கடைசியாக அந்தச் சப்பாட்டுக் கடை வேலையாட்களிடம் நன்றியுணர்வோடு சலாம் வைத்துவிட்டு, பக்கத்தில் வைத்திருந்த ஏதோ ஒரு வெள்ளை மூட்டையைத் தூக்கிக் கொண்டு எங்கேயோ கிளம்பிவிடுவான்.
அவன் எங்கு செல்கிறான் என்பதைக் கவனிக்க யாராலும் முடியாதுதான். எல்லாரும் அவனைச் சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடியவர்கள்தான். நானும்கூட. எனக்கு என்னமோ எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கப் பிடித்திருந்தது. மனிதன் விசித்திரம் நிறைந்தவன். அதிலும் இந்த மாதிரி மனிதர்கள் மகத்தானவர்கள் என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.
“ஓரமா போடா வெளக்கெண்ணெ. . போறான் பாரு, அவன் அப்பன் வீட்டு ரோடு மாதிரி. டேய் வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா?”
“அவனுக்கு எங்கடா வீடு. நீ ஒண்ணு. அதெ ஒரு லூசு”
“என்னிக்காது அடிப்பட்டெ சாவப் போறான் பாரு, இப்படித் திரியறதுக்கு”
எவ்வளவு சாதரணமாகக் கிறுக்குத் தேவனைக் கடந்துவிடுகிறார்கள். யாராவது எதையாவது உதிர்த்துவிடும் போதெல்லாம், ஒருவகையான நமட்டுச் சிரிப்பு அவனுக்குள்ளிருந்து எங்கிருந்துதான் கிளம்பி வருகிறதோ? யாரையும் சட்டை செய்துக் கொள்ளாமல் இடுப்பை வளைத்து வளைத்து நடந்து போய்விடுவான். அந்த நடையையும் கேலிச் செய்யும் மனிதர்கள் இருக்கத்தான் செய்தார்கள்.
முடி திருத்தம் கடைக்கு வெளியில் அமர்ந்திருப்பவர்கள், கிறுக்குத் தேவனுடைய நடையைப் பெண்களின் நடையை ஒத்திருக்கிறது என்று மிக மோசமான தொனியில் செய்துக் காட்டிக் கிண்டல் அடிப்பதையும் எவ்வளவு சாதரணமாக நமட்டுச் சிரிப்புடன் கடந்து விடுகிறான். கடந்து செல்லுதல் என்பது எவ்வளவு பெரிய விஷயம்? இவன் கிறுக்குத் ‘தேவனாகத்தான்’ இருக்க முடியும். கிறுக்கனாக இருந்தால்தான் இவர்களைக் கடக்க முடியும் என்று இந்தப் பட்டணத்தின் ஏதோ ஒரு வெயில் பொழுதில் முதுகில் மூட்டைகளுடன் நின்று கொண்டு முடிவுச் செய்திருக்க வேண்டும்.
என்றாவது கிறுக்குத் தேவனின் கைகளிலும் முதுகிலும் கிடக்கும் அந்த மூட்டை கீழே விழுந்து அதன் உள்ளடக்கத்தைக் காண முடியாதா என்று தினமும் அவனைப் பார்க்கும் போதெல்லாம் மனம் ஏங்குகிறது.
அன்று மதிய நேரத்தையும் கடந்து வெயில் அனலாக கொதித்துக் கொண்டிருந்தது. கிறுக்குத் தேவன் பழைய கட்டிடங்களை நோக்கி கையில் மூட்டையுடன் நடந்து கொண்டிருந்தான். அங்கு போய் அவன் செய்யக்கூடிய விஷயங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்தான்.
அந்த வழியாக வந்த 4-5 சிறுவர்கள் அவனை வளைத்துக் கொண்டு கேலிச் செய்வது தூரத்தில் சிறு புள்ளியாகத் தெரிந்தது. அருகில் சென்று அந்தச் சிறுவர்களை மிதிக்க வேண்டும் போல இருந்தது. அன்றுதான் கிறுக்குத் தேவன் ஓடுவதைப் பார்க்க முடிந்தது.
“சின்ன பையனுங்களா இவனுங்க? இப்படி நடந்துக்குறானுங்க” வாய்விட்டுக் கதற வேண்டும் எனத் தோன்றியது. கிறுக்குத் தேவன் எங்கேயோ ஓடி போய்விட்டான். அதன் பிறகு சில நாட்கள் அவனைப் பட்டணத்தின் ஆற்றுப் பக்கமாகவோ அல்லது சீனக் கோவில் பாலத்து ஓரமாகப் பார்ப்பதுண்டு. கிறுக்குத் தேவன் என்றுமே அழுது நான் பார்த்ததில்லை.
அன்றும் வெயில் அதிகமாகத்தான் பட்டணத்தில் கொதித்துக் கொண்டிருந்தது. வேலை முடிந்து வரும் வழக்கமான பாதையில் வந்து கொண்டிருந்த போது, ஆற்றையொட்டிய இடத்தில் பயங்கரக் கூட்டம். தூரத்திலேயே நின்று கொண்டிருந்த ஒருவரிடம் கேட்டுப் பார்த்தேன்.
“அவந்தான் கிறுக்குத் தேவனா? அவந்தான்பா இங்க சுத்திக்கிட்டு இருப்பானே கறுப்பா. ஆத்துலெ உழுந்து செத்துப் போய்ட்டான். ஒடம்பு மெதந்துகிட்டு இருக்கு”
நான் கிறுக்குத் தேவனைப் போய் பார்க்கவில்லை. அங்கிருந்து சென்றுவிட்டேன். அல்லது கிறுக்குத் தேவனை மிகச் சாதரணமாகக் கடந்து விட்டேன் என்றுகூட சொல்லலாம். இலேசாக அழ மட்டும் தெரிந்திருந்தது. அதன் பிறகு கண்கள் அடிக்கடி கிறுக்குத் தேவனை சாலையோரங்களில் அசட்டுத்தனமாகத் தேடிக் கொள்கிறது.

நம்பர் தாள் நொண்டிச்சியைப் பற்றிய குறிப்புகள்
நம்பர் தாள் நொண்டிச்சி என்றாலே இரவு நேர கலர் தேவதையாகத்தான் ஞாபகத்திற்குள் நுழைந்து கொள்கிறாள். கலர் தேவதையை வேறு எங்கும் பார்த்துவிட்டு இவளோடு ஒப்பிடவில்லை. நானாகத்தான் அப்படி உருவகப்படுத்திக் கொண்டேன். மெக்னம் கூடா நம்பர் முடிவுகளைத் தேடி இவளிடமும் போய்த்தான் ஆக வேண்டும். அந்தப் பட்டணத்தின் நீண்ட சாலையில் மொத்தம் 5 பேர் இப்படி நம்பர் முடிவுகளை இரவு நேரங்களில் விற்றுக் கொண்டிருப்பார்கள். அவற்றுள் இந்த நொண்டிச்சியும் ஒருவள்.
இவளைப் பற்றி முதலில் உடல் ரீதியில்தான் அவதாணிக்க முடிகிறது. வாய் கோணிக் கொண்டு உடலின் நேர் கோட்டிலிருந்து வேறு திசையை நோக்கி போய் கொண்டிருக்கும். அவள் பேசி நான் கேட்டதில்லை. வெறும் ஓசை மட்டும்தான் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்.
“அவ்வ்வ்வ்வ்வ். . கிகுகுகுகுகு. . திஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். . . அவ்வ்வ்வ்வ்வ்வ்”
அவளுடைய கோணிய வாயிலிருந்து வேறு எங்கேயோ போய் விழும் ஓசைகள் இவைதான். நம்பர் தாளைப் பெற்றுக் கொண்ட பிறகு, “அவ்வ்வ்வ்வ்வ்வ்” என்ற ஓசையுடன் வெட்கப்படுவது போல் நின்று கொண்டிருப்பாள். ஒரு வேளை நன்றியைத்தான் அப்படிச் சொல்கிறாளோ? அவளுக்குக்கூட நன்றியைத் தெரியப்படுத்த ஏதாவது ஒரு செய்கையோ மொழியோ தேவைபடுகிறதுதான்.
“அப்பா மச்சாம் அம்மோய். . பகி சத்து கெர்தாஸ்” ஏதாவது பேச வேண்டும் என்று தோன்றியப் போதெல்லாம் இப்படித்தான் கேட்டு வைப்பேன். “நலமா? தாள் கொடு, இந்தா காசு” அவளுக்கும் எனக்குமான வார்த்தைகள் அவ்வளவுதான். “அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்” என்று நிற்பாள். பரிதாபமாகக்கூட இருந்திருக்கிறது.
அடுத்தப்படியாக எல்லாரையும் கவனிக்க வைப்பது அவளுடைய கால்கள்தான். இரண்டும் வெவ்வேறு திசையை நோக்கி நகரும் தன்மையுடையது. பொதுவாகக் குறிப்பிட்டால் கால்கள் ஊனமாக இருக்கிறது என்றே சொல்லலாம். இரண்டையும் அகலப் பரப்பிக் கொண்டு சாலையோரமாக “அவ்வ்வ்வ்வ்” என்று எப்பொழுதுமான ஓசையுடன் நகர்ந்து கொண்டே இருப்பாள்.
இவளும் எங்கிருந்து வந்திருப்பாள் என்பதில் ஆச்சரியம்தான். திடிரென்று ஒரு மழை பொழுதில்தான் இவள் நம்பர் தாள்களை விற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். முதலில் ஏதோ பைத்தியம் போலத்தான் காட்சியளித்தாள். பிறகு அவளுடைய கைகளில் நம்பர் தாள்களையும் அவளிடம் சிலர் அதை வாங்கிக் கொண்டிருப்பதையும் பார்த்தப் பிறகுதான் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டேன்.
“அம்மோய் கீலா” என்றுகூட அவளுக்கு மற்றுமொரு பெயர் இருந்தது. யாரோ வேடிக்கையாக அழைத்ததுப் பிறகு புழக்கத்தில் வந்திருக்கலாம்.
“யேண்டா பூக்கடை பக்கமாதானே போவ? அங்குட்டு நம்பர் தாளு நொண்டிச்சி இருப்பா பாரு, அவக் கிட்டயெ நம்பர் தாளு வாங்கிட்டு வந்துரு”
அப்பாத்தான் முதலில் அவளுடைய சுட்டுப் பெயரை அறிமுகப்படுத்தி வைத்தார். அவள் நொண்டி நொண்டி நடப்பதால்தான் நொண்டிச்சி என்ற பெயர் போலும். அப்படியென்றால் அது காரணப் பெயராகத்தான் இருக்க முடியும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு காரணப் பெயர் அமைந்துவிட்டால் பிறகு அவனுக்கென்று தனிப் பெயர் தேவையில்லாமல் போய்விடும் போல. மிகவும் வேடிக்கையாக இருக்கும். அப்பாவைத் தொப்பை கேசவன் என்றோ தடுப்பு மீசைக்காரன் என்றோதான் அழைக்க முடியும் போலும்.
வெளுத்த முகமாக அந்த இருளில் அவளை ஒரு தேவதையாகத்தான் பார்த்துப் பழகியிருந்தேன். எப்பொழுதாவது நம்பர் தாள் வாங்க நேரிட்டால், எங்கிருந்தாலும் அவளைத் தேடித்தான் மோட்டாரின் சக்கரங்கள் சுழலும். அவளுடைய சிரிப்போ அல்லது “அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்” என்ற ஓசையோ அவளை வேறுப்படுத்திதான் காட்டுகிறது.
அன்றும் மழைதான் பெய்துக் கொண்டிருந்தது. நம்பர் தாள் வாங்குவதற்காக மழை கோட்டை சாத்திக் கொண்டு பட்டணத்திற்குள் நுழைந்துவிட்டேன். வழக்கமான இடத்தில் நொண்டிச்சி இல்லாதது திடீர் ஏமாற்றமாக இருந்தது. சுற்றிலும் தேடிப் பார்த்துக் கொண்டேன். வெறும் மழையின் ஓசையும் மனிதச் சலனங்களின் ஓசைகளும்தான்.
அந்தச் சாலைக்கு வலதுபுறத்தில் 50 மீட்டர் தூரம் இறங்கி ஒரு சாக்கடை இருளில் ஓடிக் கொண்டிருந்தது. யாரோ ஒரு சீனக் கிழவன் அந்தச் சாக்கடையைக் கடப்பதற்காகச் சைக்கிளை உயரமாகத் தூக்கிக் கொண்டு வருகிறான். மழை தொடர்ந்து பெய்துக் கொண்டிருந்தது.
சிறிது நேரம் இருந்துவிட்டு, மீண்டும் சாலையின் மருந்தகத்திற்குப் பக்கத்திலிருக்கும் மற்றுமொரு நம்பர்தாள் விற்பவனிடம் தாளை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தும் நொண்டிச்சி மனதிலிருந்து இறங்கவில்லைதான். அன்றுதான் அவளுடைய வாழ்க்கையில் பட்டணத்தில் கடைசியாக மழை பெய்ததைப் பார்த்திருக்கு வேண்டும் போல. அதன் பிறகு அந்த இடம் நொண்டிச்சி இல்லாமல் எப்பொழுதும் காலியாகத்தான் இருந்தது.
மழை பெய்யும் இரவு நேரங்களைக் கடக்கும் போதெல்லாம் மனம் கணத்துக் கொள்கிறது. அவள் எங்கு போய்விட்டாள் என்றெல்லாம் கண்டறிய முடியவில்லை. எல்லாரையும் போல நானும் அவளை மிகச் சாதரணமாகத்தான் கடந்து விட்டிருக்கிறேன். இன்றும்கூட மழை பெய்துக் கொண்டிருக்கிறது நம்பர் தாள் நொண்டிச்சி இல்லாத ஒர் இரவுப் பொழுதில்.

அழகு சுந்தரம் இளைஞனை பற்றிய குறிப்புகள்
மஞ்சள் வெளியில் எல்லாமும் ஒரு சீரான இயக்கத்திலிருந்து விடுப்பட்டு களைய தொடங்கும் நேரம் பார்த்து, சீனக் கம்பத்திலிருந்து கிளம்பிப் பெரிய சைக்கிளுடன் ஒருவன் பட்டணத்திற்குள் நுழைந்து கொண்டிருப்பான். உதடுகள் எப்பொழுதும் சிவந்து போயிருக்கும். முகம் சூழ்நிலையிலிருந்து விலகி ஏதோ ஒரு மாயையில் தொங்கிக் கொண்டிருப்பது போல தோற்றமேறியிருக்கும்.
சீனக் கம்பத்துப் பாதையிலிருந்து 20 நிமிடம் நடந்தால் ஒரு குறுகிய மண் சாலையைக் கடந்து பெரிய சாலைக்கு வந்து விடலாம். அழகு சுந்தரம் இளைஞனும் அப்படித்தான் ஒவ்வொரு நாளும் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறான். யாருக்காக அவன் வருகிறான் எதற்காக அவன் வந்து காத்துக் கிடக்கிறான் என்பதெல்லாம் ஏதோ வரலாற்றுப் பிரதியாக அவனுக்குள்ளே புதைந்து கிடக்கிறது.
ஜக்கோய் கடையின் ஓரமாக வந்து சைக்கிளை நிறுத்திவிட்டு எதிர்புறத்தில் ஓடிக் கொண்டிருக்கும் பெரிய ஆற்றையே வெறித்துக் கொண்டிருப்பான். எப்பொழுதாவது அவனது பார்வை அந்த ஜக்கோய் கடையில் வேலை செய்யும் வயதான பெண்மணியின் மீது வீழ்ந்து மறுகணமே போய் அந்த ஆற்றையே மீண்டும் சுற்றிக் கொள்ளும்.
‘பார்த்தல்’ அவனுக்கும் ஆறுதலாக இருப்பதைப் பிந்தைய நாட்களில்தான் உணர்ந்து கொண்டேன். மாலை நேரத்தில் எப்பொழுதாவது ஜக்கோய் கடை பக்கமாகச் செல்லும் போது முதலில் யாருக்காகவோ காத்திருக்கிறான் என்றுதான் நினைத்துக் கொள்ள முடிந்தது ஆனால் வெறுமனே காத்திருந்துவிட்டுப் போகும் அவனுடைய யதார்த்தமான சுபாவத்தைப் பிந்தைய நாட்களில்தான் தெளிவுப்படுத்திக் கொள்ள முடிந்தது.
“இவன் யேண்டா கிறுக்கன் மாதிரி அடிக்கடி இங்க வந்து நிண்டுகிட்டே இருக்கான்?”
“அவன் நிண்டா என்னா? ஒனக்கு யேன்?”
“யேண்டா மனுசாளுங்க மேல ஒரு அக்கறை வந்தா தப்பா?”
“ நீ? அக்கறையா? அவன நக்கலாதானே பேசறெ, இதுல என்னா திடீர் கருணை.”
“டே, யாருடா வேணும் உனக்கு? எதுக்கு நிக்கறெ?”
“இ இ இ இ இ இ” பல்லிழித்துக் கொண்டு நின்றிருந்த அவனை இவர்கள்தான் “பெரிய அழகு சுந்தரம்னு நெனைப்பு, மூஞ்ச பாரு” என்று நகைத்து,அழகு சுந்தரமாக மாற்றிவிட்டிருந்தனர்.
அவன் பேசி கேட்டது அந்தச் சிரிப்பொலிகள் மட்டும்தான். ஜக்கோய் கடையில் நின்றிருந்த யாரோ இரு இளைஞர்கள் அவனைச் சீண்டிப் பார்த்தப் போது, அவனிடமிருந்து வெளிப்பட்ட பதில் அவ்வளவுதான். அன்றிலிருந்துதான் நான் அவனையும் மிக சாதரணமாகக் கடந்து செல்லத் தொடங்கினேன். அழகு சுந்தரம் என்பது வேறு ஏதாவது அர்த்தம் தருவதாகக்கூட இருக்கலாம் ஆனால் எனக்கென்னமோ அதற்கு அர்த்தம் காத்திருப்பு என்றுதான் தோன்றுகிறது.
“இ இ இ இ இ இ இ ”
அவனுடைய காத்திருப்பை இந்தப் பட்டணம்கூட பழகிக் கொண்டது ஆனால் இன்னமும் சில மனிதர்கள் அவனைப் பார்த்து விட்டு எவ்வளவு முரட்டுத்தனமாக விலகிக் கொள்கிறார்கள். ஜக்கோய் கடை பெண்மணி எப்பொழுதாவது அவனைக் கரிசனம் நிறைந்த பார்வையுடன் பார்த்துக் கொள்வாள். பேசவும் செய்திருக்கிறாள். அவனுடைய காத்திருப்பு அவனைப் புற உலகத்துடன் எப்பொழுதுமே தொடர்புக் கொள்ள அனுமதித்தது கிடையாதுதான் போல.
“வூலியோ கஞ்சாய் சவ் யா மா”
ஜக்கோய் கடை கிழவி சீனத்திலேயே எப்பொழுதாவது அவனிடம் ஒரிரு வார்த்தைகள் பேசி வைப்பாள். அவனும் அன்னாந்து பார்த்துக் கொள்வான், மீண்டும் ஆற்றைப் பார்த்துவிட்டு அவளைப் பார்த்துக் கொள்வான். இலேசாகச் சிரித்துக் கொள்ளவும் செய்வான். அவனுக்கு அவளுடைய மொழி புரியாமல் இருந்திருக்கலாம் அல்லது சிரிப்பு மட்டும்தான் அவனுடைய மொழி போல.
அவன் எப்பொழுது கடைசியாகச் சாப்பிட்டிருப்பான்? அழகு சுந்தரம் எப்பொழுது இறுதியாக உறங்கியிருப்பான்? அவன் வீடு எப்படி இருக்கும்? அவன் வீட்டில் யாரெல்லாம் இருப்பார்கள்? பல சந்தேகங்கள் என்னை அவனிடத்தில் நெருங்கிக் கொள்ள செய்தன.
அன்று மாலை நேரம் சூழல் ஒருவித இருளுக்குள் அமிழ்ந்து கொண்டிருந்தது. இலேசாக மழையும் தூரல் போடத் தொடங்கியது. வழக்கம் போல பட்டணத்து வழியாக வந்த போது, ஜக்கோய் கடையிலிருந்து பெரிய சைக்கிளை எடுத்துக் கொண்டு அழகு சுந்தரம் எங்கேயோ இருக்கும் அவன் வீட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். காத்திருப்பிற்கான காலம் முடிவடைந்துவிட்டது போலும். இன்று எப்படியாவது அவனுடைய பின்புலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற சபலம் ஏற்பட்டு சிறிது நேரம் அவனுக்காகக் காத்திருந்துவிட்டு பிறகு அவனையே பின் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தேன்.
பட்டணத்தைவிட்டுச் செல்லும் ஒரு மண் சாலையில் சென்று கொண்டிருந்தான். அந்த மண் பாதையை ஒட்டிய கம்பத்து வீடுகளும் ஒரு சீனப் புத்தர் கோவிலும் நெருக்கிக் கொண்டு இருந்தன. அந்தப் பாதையிலிருந்து பிரிந்து ஒரு குறுகிய தார் பாதை நீண்ட பாலத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. அழகு சுந்தரம் பழகியவன் போல மிகவும் நேர்த்தியாகச் சைக்கிளை இயக்கிக் கொண்டிருந்தான். வழியில் பலர் அவனைக் கடந்து கொண்டிருப்பினும் யாரும் அவனைக் கண்டு கொள்ளாதது ஆச்சர்யமாக இருந்தது. ஒரு வேளை அழகு சுந்தரம் என் கண்களுக்கு மட்டும் தெரியும் ஆவியா என்ற சந்தேகம்கூட கிளர்ந்தெழுந்தது.
அந்தக் குறுகிய தார் சாலை போய் முடிவடையும் ஒரு முச்சந்தியில் அழகு சுந்தரம் நின்றுவிட்டுத் திரும்பிப் பார்த்தான். நான் வேறு திசையைப் பார்ப்பது போல சமாளித்துக் கொண்டேன். பிறகு அந்த முச்சந்தியிலிருந்து வலதுபுறமாக திரும்பி சைக்கிளை வேகமாக மிதித்தான். மீண்டும் ஒரு மண் பாதையில் இறங்கிப் போய் கொண்டிருந்தான். அங்கிருந்து ஒரு 5 நிமிடத்தில் ஏதோ ஒரு வீட்டின் முன் பக்கமாகப் போய் சைக்கிளை ஓரமாக நிறுத்திய போதே அது அவன் வீடுதான் என்பதை யூகிக்க முடிந்தது.
வீட்டின் முன் ஒரு மஞ்சள் பல்ப் சிறிய இடைவேளியிலான ஒளியைப் பரப்பிக் கொண்டு நின்றிருந்தது. வீட்டினுள்ளேயிருந்து எந்தச் சலனமும் வெளிப்படவில்லைதான். அழகு சுந்தரம் வீட்டின் கதவோரம் நின்றிருந்தான். இப்பொழுது ஒரு வயதான உருவம் ஊன்றுகோளுடன் வந்து நின்று அவனிடம் ஏதோ இரகசியமாகப் பேசிவிட்டு அவன் கையைப் பிடித்துக் கொண்டே உள்ளே செல்கிறது. அதிசியமாகத்தான் இருந்தது அழகு சுந்தரம் அந்தக் கிழவியிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் வீட்டினுள்ளேயிருந்து வெளியே வந்த அந்தக் கிழவி என்னைப் பார்த்துவிட்டாள். மிகவும் மோசமான ஏதோ ஒரு மொழியில் என்னைத் திட்ட ஆரம்பித்துவிட்டாள். அவளுடைய வார்த்தைகள் எவ்வளவு தூரமாக நின்றிருந்தாலும் விரிந்து வந்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தன்மையில் ஆக்ரோஷமாக ஒலித்துக் கொண்டிருந்தன.
மோட்டாரைத் திருப்பிக் கொண்டு அங்கிருந்து வேகமாகக் கிளம்பிச் செல்ல மட்டுமே என்னால் முடிந்தது. அழகு சுந்தரம் இளைஞனை எல்லாரையும் போல நானும் சாதரணமாகக் கடந்து விட்டேன். அவன் உலகத்தில் வேறு யாரோ எதற்காகவோ சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்கள் போல மனதில் பட்டது. அன்று தொடங்கி அழகு சுந்தரத்தைப் பார்ப்பதற்கே கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அவனுடைய பின்புறத்தில் அந்தப் பயங்கரமான ஒலிகளுடன் அந்தக் கிழவியும் நின்று கொண்டிருப்பது போலவே பிரமையாக இருந்தது.
சில நாட்களுக்குப் பிறகு அழகு சுந்தரம் அந்தப் பட்டனத்தில் எங்கு தேடியும் இல்லாமல் போய்விட்டான். ஜக்கோய் கடையின் ஓரமாக எப்பொழுதும் கண்கள் அவனைத் தேடுகிறது. பட்டணத்திலிருந்து பிரிந்து செல்லும் மண் பாதைகளிலும் அவனைத் தேடிப் பார்த்து விட்டேன். அடுத்தக் காத்திருப்புக்காக அவன் எங்கு சென்று விட்டானோ?
மனிதக் குறிப்புகள்
அன்று என்னமோ சிறிது நேரம் பட்டணத்தில் உழாவிவிட்டு வரவேண்டும் என்பது போல் இருந்தது. மழை பெய்து கொண்டிருந்தது. நன்றாக நனைந்து விட்டேன். உடலில் குளிர் ஏறி நடுக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. கடை தெருக்களுக்குப் பின்புறத்திலிருந்த மரங்கள் சோர்ந்து போய் குறுகிய நிலையில் காற்றுக்கு மெல்லிய அசைவைக் கொடுத்துக் கொண்டிருந்தது.
வீட்டில் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் பலத்த சண்டை நிகழ்ந்து அம்மா பாட்டி வீட்டிற்குப் போய்விட்டிருந்தார். அப்பா யாரோ சில நண்பர்களுடன் எங்கேயோ கிளம்பிச் சென்றவர்தான். வீட்டில் தனிமையில் உறைந்து கிடப்பதில் விருப்பமில்லாமல், பட்டணத்திற்குள் நுழைந்து கொண்டேன். மணி 11க்கு மேல் கடந்து விரைந்து கொண்டிருந்தது. தெரு விளக்குகள் குனிந்து கொண்டு மழை தூரல்களை வெறித்துக் கொண்டிருந்தன.
வெகு நேரம் ஆற்றோரமாக அமர்ந்திருந்தேன். ஆறு இருளில் அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது. கால ஓட்டமும் தோன்றி மறையும் மனிதக் கூட்டமும் இந்த ஆறும் எல்லாமும் ஒன்றுதான் போலும். வானம் தலைக்கு மேல் நன்றாக விரிந்து அகலமாகப் படுத்துக் கிடந்தது. பட்டணச் சலனங்களைக் கடந்து அந்த ஆற்றோரம் அமர்ந்திருப்பது நான் மட்டுமே என்ற பிரக்ஞை உருவாகிக் கொண்டிருந்தது.
ஆற்றுக்கு வெகு சமீபத்தில் அல்லது ஆற்றுக்கு மேல் பரப்பிலேயே யாரோ மூவர் சாவகாசமாக நடந்து கொண்டிருந்தார்கள். அவர்களை எங்கேயோ பார்த்துப் பழக்கப்பட்டதாக தோன்றுகிறது. திடீரென்று பட்டணம் காலியாகிறது. யாருமே அற்ற ஒரு சூன்யம் எங்கும் நடமாடிக் கொள்கிறது. அந்த மூவரும் ஆற்றிலிருந்து இறங்கி பட்டணத்தில் மிதந்து கொள்கிறார்கள்.
கிறுக்குத் தேவன், அழகு சுந்தரம் இளைஞன் மேலும் நம்பர் தாள் நொண்டிச்சி இப்படி எத்தனை எத்தனையோ மனிதக் கூட்டம் திடிரென்று அந்த ஆற்றிலிருந்து கிளம்பி பட்டணத்திற்குள் ஓடிக் கொள்ள தொடங்குகிறார்கள். காலப் பிரமையின் வலுவான பிடியில் சிக்குண்டு வெறுமனே பார்த்து கொண்டிருப்பது மட்டுமே என்னால் முடிகிறது. இவர்களைக் கடப்பது என்பது அவ்வளவு சுலபமாகத் தெரியவில்லை.
முடிவு
கே.பாலமுருகன்
மலேசியா


bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்