• Home »
  • கதைகள் »
  • உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 12 (சுருக்கப் பட்டது)

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 12 (சுருக்கப் பட்டது)

This entry is part of 29 in the series 20080619_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


“நெஞ்சிலே தீயை மூட்டிப் பிறருக்கும் ஏற்றி வை ! பணியை மேற்கொள், பணியை மேற்கொள் ! ஊழியனாகப் பணிசெய் ! சுயநலம் பேணாய் ! பிறரைக் குறைகூறும் தோழனுக்குச் செவி சாய்க்காதே ! வெற்றி உனக்குக் கிடைக்கும் வரைப் பொறுமையோடு இரு. யாரையும் அதிகாரம் செய்யாதே. பணியை மேற்கொள், பணியை மேற்கொள் ! பிறரது நலத்துக்கெனப் பணிசெய்வதே மனித வாழ்வு.”

“உடம்பைக் கவனித்துக்கொள்வீர். பொய்களுக்கு இடம் கொடாதீர். சத்தியத்துக்குக் (Truth) கடமைப் பட்டால் மெதுவாக ஆனால் நிச்சயமாக வெற்றி பெறுவோம். ஒவ்வொருவர் தோள் மீதும் முழுப் பொறுப்பு உள்ளதாக எண்ணிக் கொண்டு நீவீர் பணி புரிய வேண்டும் ! கடந்த ஐம்பது நூற்றாண்டுகள் உம்மை நோக்கி இருந்தன. இந்தியாவின் எதிர்காலம் உம்மைச் சார்ந்துள்ளது. பணிபுரிந்தால் உமக்கு ஆசீர்வாதம் கிடைக்கும்.”

“கடந்த காலத்தில் நாம் செய்தவை கீழானவை அல்ல என்று உறுதியாகச் சொல்கிறேன். நமது சமூகம் கேடானதில்லை. நல்ல சமூகம்தான். ஆயினும் இன்னும் மேன்மை அடைய வேண்டும் என்று விழைகிறேன். தவறு செய்வதைத் தவிர்த்துச் சத்திய மார்க்கம் தேடிப் போவதல்ல. தீய முறை விட்டு நல் வழிகள் நாடுவதல்ல. நான் விரும்புவது சத்தியத்திலிருந்து உன்னத சத்தியத்துக்கு உயர்வது, நல்லதிலிருந்து வல்லதிற்கும், வல்லதிலிருந்து உன்னதத்துக்கும் (From Good to Better from Better to the Best) மேம்படுவது ! என் தேச மாந்தருக்கு நான் சொல்வது இதுதான் : இதுவரை நாம் செய்தவை சிறந்தவை. இப்போது வேளை வந்து விட்டது, இந்தியர் உன்னத வினைகள் புரிவதற்கு !”

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

“என் அகராதியில் நேர்மை என்பதின் அர்த்தம் வேறு. திருமணம் செய்து கொள்பவரின் “ஐக்கிய வணிகம்” (Trade Unionism) என்பதைத் தவிர நேர்மை என்பதின் பொருள் வேறு என்னவாக இருக்கும் ? “இனப்பெருக்கு உந்துசக்தி” (Life Force) மாந்தர் திருமணத்தை வரவேற்பதின் முக்கிய நோக்கம் என்ன ? இல்லற முறை ஒன்றில்தான் உச்ச எண்ணிக்கை கொண்ட குழந்தைகளை நெருங்கிய பாதுகாப்பில் கண்காணிக்க முடிகிறது. நீ குறிப்பிடும் மானம், மதிப்பு, கற்பு போன்றவை எல்லாம் அங்கே கவனிப்பில் இருப்பதில்லை ! மனித இனத்தின் மிகப்பெரும் அனுமதியைப் பெறும் ஓர் சமூகத் துறைதான் இந்த இல் வாழ்க்கை !”

பெர்னார்ட் ஷா (உன்னத மனிதன் நாடகம்)

உன்னத மனிதரை உருவாக்க . . . .

. . . . எதிர்காலத்துப் பெற்றோராக உம்மை எண்ணிக் கொண்டு, (உன்னத மனிதர் உருவாக) மனிதர் ஒவ்வொருவரும் ஊக்கப்பட்டுப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். செல்வக் கோமகளுக்குப் பதிலாக ஓர் இராணுவப் படையாளியோ அல்லது உயர்நிலை மாந்தருக்குப் பதிலாக ஓர் விறகுக்கடைப் பெண்ணோ புறக்கணிக்கப்படாமல் தடுப்பில்லாத “நேர்மைத் தேர்வுமுறை” கையாளப்பட வேண்டும் ! சமத்துவ நியதி உன்னத மனிதர் சீரிய பெருக்கத்துக்கு (Good Breeding of Supermen) மிகவும் அவசியம். ஆனால் சொத்துரிமை என்பது சமத்துவத்துக்கு முரணான தகுதிப்பாட்டில் பேணப் படுகிறது.

. . . . அதே சமயத்தில் சமத்துவ நோக்கம் சீரழிவுப் பெருக்கத்துக்கும் (Bad Breeding) ஓர் முக்கிய காரணமாக உள்ளது ! மனித இனத்தில் களையெடுத்து வடிக்கட்டச் சமத்துவப் போக்கு தடை செய்யும் வினையாகும் ! கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திமக் காலத்தில் சந்ததி விதிமுறை (Conception of Heredity) விஞ்ஞானச் சிந்தனைகளை அமுக்கிக் கொண்டிருந்த போது, அதன் சீடர்கள் “பைத்தியகாரன் பைத்தியத்தை மணந்து கொள்வது குற்றம் என்று அறிவித்தார். ஆனால் நாம் நோய் பீடித்த மந்தையைத் திருத்த ஆரோக்கிய மந்தையை அதனுடன் கூட்டிச் சீரழிக்க முயல்கிறோமா என்று சிந்திக்க வேண்டும். இரண்டு ஆரோக்கிய மற்ற ஆண்பெண் மணந்து கொண்டால் அவருக்குப் பிறக்கும் அநேகப் பிள்ளைகள் முதிர்ச்சி அடைவதற்குள் மடிந்து போய்விடும். ஓர் ஆரோக்கிய நபரும் ஆரோக்கிய மற்ற ஒரு நபரும் ஐக்கியமாகி அடையும் துயரை விட முன்கூறிய ஏற்பாடு திருப்பி உண்டாக்கக் கூடியது !

பெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்)

****************

உன்னத மனிதன்
(பெர்னார்ட் ஷா)

அங்கம் : 3 பாகம் : 12
(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.

2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.

3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.

4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)

5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி

6. ஹெக்டர் மலோன் (Hector Malone) –

7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்

8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்

9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.

10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)

11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 3 பாகம் : 12)
(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: காதல் மன்னன் தாஞ் சுவான் (Don Juan), ஒரு வாலிப மாது, ஸ்பானியர் மென்டோஸா, ஜான் டான்னர், சாத்தான் (பெர்னாட் ஷாவின் கற்பனை வில்லன்)
காலம்: காலை வேளை
இடம்: நரகம் (பெர்னாட் ஷாவின் கற்பனைத் தீய உலகம்)

(காட்சி அமைப்பு): காதல் மன்னன் தாஞ் சுவான் நரகத்தில் ஒரு வாலிப மங்கையைச் (ஆனி வொயிட்·பீல்டு) சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறான். புதல்வியைக் காண தந்தை மிஸ்டர் வொயிட்·பீல்டு சொர்க்கத்திலிருந்து வயோதிகராக வருகிறார். சாத்தான் மூவரையும் சந்திக்கிறான்.

இளம்மாது : சமூகத்தில் பெண்ணுக்கு உரிமை வேண்டும் ! ஆனால் விருப்பு வெறுப்புகளில் தனக்குத் தோன்றுவதைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பில்லாத இல்லாத சுதந்திரம் அவளுக்குத் தேவையில்லை ! தேர்தெடுக்க வாய்ப்பில்லாச் சுதந்திரம் (Freedom without A Choice] பாதிச் சுதந்திரம்தான் ! அது முழுச் சுதந்திர மில்லை ! ஆணுக்கும் பெண்ணுக்கும் நேர்மை (Virtue) அவசியம் என்பது எனக்குப் பிடித்தது.

தாஞ் சுவான்: என் அகராதியில் நேர்மை என்பதின் அர்த்தம் வேறு. திருமணம் செய்து கொள்பவரின் “ஐக்கிய வணிகம்” (Trade Unionism) என்பதைத் தவிர நேர்மை என்பதின் பொருள் வேறு என்னவாக இருக்கும் ? “இனப்பெருக்கு உந்துசக்தி” (Life Force) மாந்தர் திருமணத்தை வரவேற்பதின் முக்கிய நோக்கம் என்ன ? இல்லற முறை ஒன்றில்தான் உச்ச எண்ணிக்கை கொண்ட குழந்தைகளை நெருங்கிய பாதுகாப்பில் கண்காணிக்க முடிகிறது. நீ குறிப்பிடும் மானம், மதிப்பு, கற்பு போன்றவை எல்லாம் அங்கே கவனிப்பில் இருப்பதில்லை ! மனித இனத்தின் மிகப்பெரும் அனுமதியைப் பெறும் ஓர் சமூகத் துறைதான் இந்த இல் வாழ்க்கை !

இளம்மாது: பெண்ணுக்குப் பாதுகாப்பு அளிக்கும் ஓர் உன்னத சமூகத் துறை இல்லம் என்று நான் சொல்வேன். பிறக்கும் பிள்ளைகளுக்குக் கண்காணிப்பு அளிப்பதும் இல்வாழ்வுதான்.

தாஞ் சுவான்: ஆடவனைக் கட்டிப் போடும் ஓர் சிறையாக நான் இல்லத்தைக் கருதுகிறேன். சிறைக்குள் இருந்த பெண்ணுக்கு இல்லத்தில் சுதந்திரம் கிடைக்கிறது. ஆணுக்குச் சுதந்திரம் பறிபோகிறது ! ஒரு கணவனைத் தேடிப் பிடிக்கும் மாதைப் போல் பழி பாவத்துக்கு அஞ்சாத மனிதப் பிராணி வேறு எதுவும் இருக்கக் கூடுமா ? மண வாழ்க்கையுடன் ஒழுக்க நெறியைக் குழப்பிக் கொள்வது மனித உள்ளுணர்வை அழிப்பதற்குச் சமமாகும் ! பார் இளம்மாதே ! ஏனிப்படி முகம் சுழிக்கிறாய் ? உனக்குத் தெரியும் நன்றாகவே ! திருமணம் என்பது ஆடவனைப் பிடித்துப் போடும் வலைப்பொறி (Man-Trap) ! அதற்குத் தூண்டில் புழுவாக வைக்கப்படுபவை : விலை மதிப்புச் சாதனங்கள் ! மயக்கும் மனக்கனவு நோக்குகள் (Delusive Idealizations) !

இளம்மாது: பெண்ணின் வனப்பல்லவா ஆணைப் பற்றும் வலைப்பொறி ? அவளது மேனிக் கவர்ச்சி அல்லவா ஆடவனைக் கட்டி இழுக்குகிறது ?

தாஞ் சுவான்: இல்லை இல்லை ! சிலந்தி வலை பின்னுவது எதற்காக ? வலை நூலில் பசையைத் தடவி வைப்பது எதற்காக ? புனித மாதான உன் தாய் உனக்கு ஒப்பனை செய்து புகட்டி யிருப்பது என்ன ? நீ ஒரு அழகு தேவதை ! நீ ஒருத்தனைக் கட்டி ஆள வேண்டும். உன் கணவன் உண்ட பிறகு கண்துஞ்ச இசைபாடும் ஒரு தேவதையாக நீ ஆட வேண்டும் என்பது அவள் கண்ட கனவு ! அதை நிறைவேற்றி வைக்கிறாய் நீ !

இளம்மாது: தாஞ் சுவான் ! நீ ஒரு முட்டாள் ! காலை எழுந்தவுடன் கனிவுப் பாட்டு ! பகல் முழுவதும் எதிர்பார்ப்பு ! இரவு பூராவும் கணவனுக்கு இன்னிசை வெள்ளம் ! எந்த மனைவியும் இவ்விதம் வீட்டில் இருப்பதில்லை ! பூமியில் இத்தகையச் சொர்க்கம் கிடையாது ! கணவனுக்குத் தாலாட்டுப் பாட்டு பாடுவதைத் தவிர மாதருக்கு வேறு வேலைகள்ளில்லையா ? இப்படி எதிர்பார்க்கும் கணவன் இல்வாழ்வில் பெருத்த ஏமாற்றம் அடைவான் ! பெண்ணுக்குக் குறிக்கோள் உண்டு ! தனித்துவம் உண்டு ! கொள்கை உண்டு ! கோபம் உண்டு ! விருப்புண்டு ! வெறுப்புண்டு ! சுயத்தனம் மிக்க கணவன் அவற்றை எழவிடாமல் அமுக்கி வைக்கிறான் !

தாஞ் சுவான்: எல்லாம் எனக்குத் தெரியும் ! இன்னிசை மீது பெண்ணுக்கு இச்சை இருந்தால் நான் சொன்னபடி நடக்கும். பறவையைக் கூண்டில் அடைத்த பிறகு பெண் தூண்டிலை விட்டெறிகிறாள் !

இளம்மாது: (வெறுப்புடன்) ஆமாம் ! ஆடவர் தமது பறவையைக் கூண்டில் அடைத்த பிறகு அவரது முகமூடியை எப்போதும் நீக்குவதுண்டா ? கணவன் வீட்டில் சுயநல மிருகமாய்த் திரிவதில்லையா ? மூர்க்கத்தனமாய் மனைவியிடம் நடந்து கொள்வதில்லையா ? மனைவி வீட்டில் இருப்பதைக் கண்டுகொள்ளாமல் கணவன் கண்மூடிப் புறக்கணிப்ப தில்லையா ?

தாஞ் சுவான்: குற்றவாளி எதிர்த்துக் கூறும் இவையெல்லாம் எதை நிரூபிக்கின்றன ? கதா நாயக னும் கதா நாயகியைப் போல நடிக்கிறான் என்று சொல்கிறாய் !

இளம் மாது: இந்தத் தர்க்கத்தில் எந்த அர்த்தமும் இல்லை ! பெரும்பான்மையான திருமண வாழ்க்கைகள் பூரண சுகநலம் கொண்டதாகவே காணப்படுகின்றன. ஆனால் நான் சொன்னவை யெல்லாம் விதி விலக்கல்ல ! விதி விலக்காய் இருக்க வேண்டியவை விதி முதன்மையாய் இருக்கின்றன !

தாஞ் சுவான்: பூரணம் என்பது பொருத்த மற்ற சொல் ! குறையுடைய மனிதர் இல்வாழ்வில் கூடும் போது எப்படிப் பூரண நிலை அடைவார் ? நீ சொல்ல வந்தது என்ன ? அறிவுள்ள இருவர் ஒருவர் மூலமாக ஒருவர் ஆக்க உயர்வைப் பெற்று உன்னத நிலை அடைய முடியும் என்பதுதான். இல்வாழ்வின் உன்னதத்தைப் பற்றியும், இல்லப் பிணைப்பு உறுதி பற்றியும் பேசுவோர்தான், சங்கிலி அறுபட்டுக் கைதிக்கு உரிமை அளித்தால், சமூகப் பின்னலே சிதைந்து போகும் என்று அலறுபவர் ! இருபுறத்திலும் பேசிக் கொண்டு தர்க்கம் புரிவது தவறு ! கைதி பூரிப்படைந்தால் சிறையில் ஏன் அவனைப் பூட்ட வேண்டும் ? அப்படியில்லா விட்டால் அவன் பூரிப்பதாக ஏன் நடிக்க வேண்டும் ?

இளம்மாது: நானொரு மூதாட்டி போல் சொல்கிறேன். மணவாழ்க்கைகள் உலகத்தின் இனத்தொகையைப் பெருக்குகின்றன ! உடலின்ப இச்சைகள் அப்படிச் செய்ய முடியா ! இனப்பெருக்கு உந்துசக்தி என்று கதைக்கும் நீவீர் இல்லத்தின் மூலம்தான் அதை இயங்க வைக்க முடியும் என்று தெரியாமல் பேசுகிறீர் !

(தொடரும்)

***************************

தகவல்

Based on The Play

“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)

2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)

3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973

4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (June 17, 2008)]

Series Navigation