உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 10 (சுருக்கப் பட்டது)

This entry is part of 39 in the series 20080605_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


“எல்லோரும் போவீர் ! எங்கெல்லாம் பஞ்சம் பரவுகிறதோ, கடும் தொத்துநோய் தாக்குகிறதோ, எங்கெல்லாம் குடிமக்கள் துயர்ப்படுகிறாரோ அங்கு செல்வீர் அவரது துன்பத்தைக் குறைப்பதற்கு ! அந்தப் பணியில் ஒரு வேளை உமது உயிருக்கே ஆபத்து நேரலாம் ! அதனால் என்ன ? உங்களைப் போன்று எத்தனை பேர் மண் புழுவைப் போல் பிறப்பதையும், மடிவதையும் ஒவ்வொரு நாளும் ஏற்றுக் கொள்கிறீர் ? உலகளாவிய முறையில் என்ன வேறுபாட்டை அது உண்டாக்கும் ? உயிரைக் கொடுக்க உமக்கு உன்னத பணிகள் அநேகம் வாழ்க்கையில் உள்ளன. நமது தேசத்தின் எதிர்கால நன்னம்பிக்கை உங்கள் கைவசம் உள்ளது. நீவீர் பங்கேற்காது ஒதுங்கி இருப்பது கண்டு நான் பெரு வேதனைப் படுகிறேன். ஆகவே பணிசெய்யப் புறப்படுவீர் ! ஆமாம் பணி புரிவதற்கு ! கால தாமதம் செய்யாதீர் ! மரண வேளை நாளுக்கு நாள் நெருங்கி வருகிறது ! எல்லாம் பின்னால் செய்யலாம் என்று எண்ணிக் கொண்டு சோம்பிச் சும்மா உட்கார்ந்து இருக்காதீர் ! ஒன்றும் முயலாமல் எதுவும் சாதிக்க முடியாது, கவனம் வைப்பீர். ஆயுள் சிறியது ! உலகப் பகட்டுகள் நிலையற்றவை ! ஆனால் பிறர்க்கென வாழ்பவர் மட்டுமே நீடித்து வாழ்வார்; மற்றவர் உயிரோடு இருப்பினும் செத்தவருக்கு ஒப்பானவரே !

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

“கலைஞன் பொதுவாகப் பார்த்தால் ஒரு காதல் மோகியே ! காதல் கனவுகளில் மூழ்கிப் பெண்ணை வழிபடுபவன் ! என் மதிக்கும், விதிக்கும் ஒருவகையில் ஏற்றவன் ! அவன் பையில் காதல் பாக்கள் ஒளிந்திருக்கும் ! இல்லச் சுவர்களில் அவரின் கண்கவர் ஓவியங்கள் கதை சொல்லும் ! பல்லாண்டுகள் என் இதயத்துக்குக் கலை விருந்தளித்தவன் கலைஞன். அவருடன் பழகிய நான் பூரிப்பில் திளைத்தேன். அந்த கூட்டுறவால் எனக்கு ஏராளமான நற்பலன்கள் விளைந்தன. அந்த நாட்கள் மறக்க முடியாதவை. பெற்ற நற்பலன்கள் பல. எனது ஐம்புலங்களின் உணர்ச்சிகள் கூர்மை ஆயின ! அவனது இனிய பாக்கள் என் நெஞ்சக் கனிகள் ஆயின ! செவிகள் செம்மையாயின ! ஓவியச் சிற்பங்கள் என் கண்களைக் கூர்மையாக்கின ! அவனது பாக்கள் பெண்களைத் தேவதைகளாய்க் காட்டின ! என்னையும் இப்போது பெண்ணை வழிபடும் பித்தனாய் ஆக்கிட்டான் கலைஞன்.”

பெர்னார்ட் ஷா (உன்னத மனிதன் நாடகம்)

. . . . பிட்டுவின் தரம் அதன் சுவையில் உள்ளது என்று சொல்கிறார். அவர் கூறுவது உண்மை. உன்னத மனிதன் இருந்ததற்கு நிரூபணம் அவன் வாழ்ந்த வாழ்வு மூலம்தான் நாம் சொல்ல முடியும். பழக்கமான பயிற்சி-பழுது முறை (Trial & Error) மூலமாக உன்னத மனிதனை எவ்விதம் உருவாக்குவது என்று நாம் அறிய வேண்டும். மாமனிதனை வடிவாக்கும் உபரிச் சாதனங்களை வைத்து உற்பத்தி செய்ய நாம் காத்திருக்கப் போவதில்லை !

. . . . நாம் பொதுவாக அனுமானித்து வெளிப்படையாகத் தெரியும் சில தவறுகளை ஆரம்பத்திலே விலக்கி விடுவோம். உதாரணமாக உன்னத மனிதனுக்கு உயர்ந்த உள்ளம் தேவை என்பதை ஒப்புக் கொள்வோம். அதே சமயத்தில் உன்னத உடம்பு தேவை என்னும் கால் பந்தாட்ட குழுவினரின் மூடக் கணிப்பை நிராகரிப்போம் ! உயர்ந்த உள்ளம் என்பதை ஒழுக்கவியல் பிரிப்புகளான “நேர்மை, தீயொழுக்கம்” (Virtue & Vice) என்ற வகுப்பில் “சம்பிரதாய நெறிப்பாடாக” (Conventional Morality) நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது ! நாம் தெளிவாகப் பந்தய உடற்பாடு தீரர்களுக்கும் (Race of Athletes) நல்ல மனிதர் இனத்துக்கும் (Race of Good Men) இடையே ஓரினத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் ஸாம்ஸனை (Biblical Hero Samson) பந்தய உடற்பாடு வலுவனாய் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஸாம்ஸன் உன்னத மனிதன் நிலையை அடைய மாட்டான் !

பெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்)

****************

உன்னத மனிதன்
(பெர்னார்ட் ஷா)

அங்கம் : 3 பாகம் : 10
(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.

2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.

3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.

4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)

5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி

6. ஹெக்டர் மலோன் (Hector Malone) –

7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்

8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்

9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.

10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)

11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 3 பாகம் : 10)
(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: காதல் மன்னன் தாஞ் சுவான் (Don Juan), ஒரு வாலிப மாது, ஸ்பானியர் மென்டோஸா, ஜான் டான்னர், சாத்தான் (பெர்னாட் ஷாவின் கற்பனை வில்லன்)
காலம்: காலை வேளை
இடம்: நரகம் (பெர்னாட் ஷாவின் கற்பனைத் தீய உலகம்)

(காட்சி அமைப்பு): காதல் மன்னன் தாஞ் சுவான் நரகத்தில் ஒரு வாலிப மங்கையைச் (ஆனி வொயிட்·பீல்டு) சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறான். புதல்வியைக் காண தந்தை மிஸ்டர் வொயிட்·பீல்டு சொர்க்கத்திலிருந்து வயோதிகராக வருகிறார். சாத்தான் மூவரையும் சந்திக்கிறான்.

தாஞ் சுவான்: கூரிய ஞானத்தை (Intellect) வரவேற்பவர் மிகச் சிலரே ! பொதுநபர் ஞானத்தைப் புறக்கணிப்பர். வாழ்க்கையில் மனிதர் முற்போக்கு அடைவதற்கு ஞான சிந்தனை முக்கியமாகிறது. அந்த ஞானவளம் இல்லாவிட்டால் மனித இனம் மடிந்து போவதற்குத் தவறிழைக்கிறது. ஞான சிந்தனையே மனித இனம் மண்ணில் தோன்றியதின் காரணத்தை அறிய வழி காட்டுகிறது. மனிதன் மாமனிதனாக மாற அந்த ஞான ஒளி தேவை.

சாத்தான்: ஞான ஒளியிருந்தாலும் பிறந்த அத்தனை மனிதரும் உன்னத மனிதராக ஆக முடியுமா ? எத்தனை பேர் ஞான ஒளிபட்டு மாமனிதராய் மாறுவார் என்று சொல்வீர் ?

தாஞ் சுவான்: பிறக்கும் போதே உன்னத மனிதன் பிறப்பதில்லை ! உன்னத மனிதன் உண்டாக்கப் படுகிறான் ! அவன் தானாக மேம்பட்டு அந்த நிலையை அடைய வேண்டும் ! அவரைத் தனியாக உற்பத்தி செய்யச் சமூகம் தக்க பக்குவச் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் ! நான் முன்பு கூறியபடி அத்தகைய மனிதனுக்குப் புறக்கண்ணுடன் அகக்கண்ணும் திறக்க வேண்டும்.

முதியவர்: கலைஞனைப் பற்றி உமது கருத்தென்ன ? கலைஞன் உன்னத மனிதனாக முடியுமா ?

தாஞ் சுவான்: கலைஞன் பொதுவாகப் பார்த்தால் ஒரு காதல் மோகியே ! காதல் கனவுகளில் மூழ்கிப் பெண்ணை வழிபடுபவன் ! என் மதிக்கும், விதிக்கும் ஒருவகையில் ஏற்றவன் ! அவன் பையில் காதல் பாக்கள் ஒளிந்திருக்கும் ! இல்லச் சுவர்களில் அவரின் கண்கவர் ஓவியங்கள் கதை சொல்லும் ! பல்லாண்டுகள் என் இதயத்துக்குக் கலை விருந்தளித்தவன் கலைஞன். அவருடன் பழகிய நான் பூரிப்பில் திளைத்தேன். அந்த கூட்டுறவால் எனக்கு ஏராளமான நற்பலன்கள் விளைந்தன. அந்த நாட்கள் மறக்க முடியாதவை. பெற்ற நற்பலன்கள் பல. எனது ஐம்புலங்களின் உணர்ச்சிகள் கூர்மை ஆயின ! அவனது இனிய பாக்கள் என் நெஞ்சக் கனிகள் ஆயின ! செவிகள் செம்மை யாயின ! ஓவியச் சிற்பங்கள் என் கண்களைக் கூர்மையாக்கின ! அவனது பாக்கள் பெண்களைத் தேவதைகளாய்க் காட்டின ! என்னையும் இப்போது பெண்ணை வழிபடும் பித்தனாய் ஆக்கிட்டான் கலைஞன் !

இளமாது: தாஞ் சுவான் ! ஆணை வழிபடும் பெண்டிரும் ஏன் ஆடவரும் இருக்கும் போது நீவீர் பெண்ணை வழிபடுவதாக ஏளனம் செய்வது ஆணையா இல்லை பெண்ணையா ?

தாஞ் சுவான்: இரக்கப்படுவது என்மீதுதான் ! பெண்ணுக்கு இரையாகி விட்ட அடுத்தோர் ஆண் பிறவி நான் ! ஆணாதிக்கம் வீட்டுக்கு வெளியே ! பெண்ணாதிக்கம் வீட்டுக் குள்ளே ! ஒரு பெண் இசைக்குரல் இனிமைக்கு நான் அடிமை ! அவளது மேனி அழகு ஓர் ஓவிய வடிப்பு ! அவளது ஆத்மாவுக்குள்ளே இனிய கவிதைகள் அடக்கம் !

இளமாது: இனிய குரல், மேனி எழில், கவிதை ஆத்மா இல்லாத பெண்கள் எல்லாம் எங்கே போவார் ? அந்தப் பெண்ணுக் கெல்லாம் உமது இதயத்தில் இடமில்லையா ? அல்லது அவள் மண்ணிலே பிறந்தது தப்பா ?

தாஞ் சுவான்: அப்படிச் சொல்லவில்லை நான் ! கலைஞர் என் கல்நெஞ்சைக் கனிய வைத்து விட்டார் என்றவரைச் சாடுகிறேன். பெண் ஊமையாக இருந்தாள், நானவளைப் போற்றிப் புகழ்ந்த போது என்னை அனுமதித்து ! அவள் தந்திரக்காரியாய் இருந்தாள், அவள் மீதிருந்த எனது உணர்ச்சிகள், எண்ணங்கள், கனவுக் காட்சிகள் யாவும் தவறாகப் போய்விடக் கூடா தென்று ! இப்போது என் கலை நண்பன் வறியவன் ! அழகிய பெண்ணைக் கண்டால், நாகரீகப் பெண்ணைப் பார்த்தால் கூச்சப் படுபவன், வெட்கப்பட்டு ஒதுங்குபவன் ! அவன் தன் கற்பனைக் கனவுகளை நம்பிக் கொண்டு கல்லறையில் அடக்கமாகி விட்டான் !

முதியவர்: பெண்ணைக் கண்டால் நீவீர் ஒதுங்குவதைப் பார்க்கிறேன் ! அது எதனால் ? நீவீர் கலைஞனின் நண்பன் அல்லவா !

தாஞ் சுவான்: இல்லை ! உமது கேள்விக்கு எனது விளக்கம் இது. ஒரு பெண்ணின் கற்பனைத் திறம் என் இதயத்தைத் தொட்டால் அவள் என்னைக் காதலிக்கிறாள் என்றென் மனதில் தூண்டி விடுகிறாள். நானவளை ஏற்றுக் கொண்டதும் தான் பூரிப்படைவதாக ஏனோ சொல்வதில்லை ! தன் காதல் பூரணமானது என்றும் கூறுவதில்லை ! என் குழப்பத்தைத் தூண்டி விடுவதில் அவள் பெருமைப்பட்டுக் கொள்கிறாள் !

இளமாது: ஆத்திரம் அடைபவர் ஆடவர் ! ஆவேசப்படுபவர் பெண்டிர் ! இரண்டும் கலக்கும் போது குழப்பம் விளையும் ! ஆண் காரண-காரிய இலக்குவாதி (Objective Person) ! பெண் நியாயம் பேசும் உணர்ச்சிவாதி (Subjective Person) ! இரண்டும் சேரும் போது ஒவ்வாத இணைப்பாக இடைவெளியுடன் சேர்த்துக் கொள்கிறது. எது வலுவுற்றதோ அது வலுவற்றதை அடிமைப் படுத்துகிறது. ஆண் பெண் இருவரும் உணர்ச்சிவாதியானால் அவர் ஒன்றாய் வாழ முடியாது ! அதே சமயத்தில் இருவரும் இலக்குவாதியானால் இல்லற நட்பு இறுகப் பிணைக்கிறது.

சாத்தான்: இளம் பெண் கூறுவதில் அர்த்தமும் ஆழ்ந்த சிந்தனையும் உள்ளது.

தாஞ் சுவான்: இளமாது சொல்வதை அப்படியே நீ ஏற்றுக் கொள்ளக் கூடாது. அவள் சொல்வதில் பாதி உண்மை பாதிப் பிழை உள்ளது. ஊமையாக நடிக்கும் ஒரு பெண்ணுக்கு என்னைப் போல் ஒருத்தன் அகப்பட்டால் விரட்டிப் பிடிக்க முனைகிறாள் ! கையில் மாட்டிக் கொண்டதும் என்னைத் தன்னுடமை ஆக்கிக் கூண்டுக்குள் இடுகிறாள். பிறகு என் சுதந்திரம் பறிபோகிறது ! ஆதலால் என்னை விரட்டும் மாதை விட்டுவிட்டு அப்பால் ஓடுகிறேன் !

இளமாது: காதல் மன்னரே ! கதையை நேர் எதிராகச் சொல்கிறீர் ! யார் யாரைக் கூண்டுக்குள் அடைப்பது ? விடுதலைப் பறவையைக் கூண்டுக்குள் இடுவது ஆடவர் அல்லவா ? கூண்டுக்குள் பூட்டியதும் பறவையின் இறக்கைளை வெட்டி விடுவது ஆடவர் அல்லவா ?

தாஞ் சுவான்: துல்லியமாகச் சொன்னால், திருமணத்துக்கு முன்பு நிகழ்வது ஆணாதிக்கம் ! பிறகு நடப்பது பெண்ணாதிக்கம் ! பெண்ணின் கை ஓங்கும் போது ஆணை விடக் கடுமையான அடக்கு முறையைக் கையாளுகிறாள் !

இளமாது : இந்தக் கூற்றை நான் ஏற்றுக் கொள்ள முடியாது ! திருமணத்துக்கு முன்னும், பின்னும் எப்போதும் ஆணாதிக்கம்தான் ! பெண்ணை அரசாளத்தான் ஆணாதிக்கர் விடுவதில்லையே ! பெண்ணை ஆளவிட்ட நாடுகள் ஒன்று அல்லது இரண்டுதான் ! முழுக்க முழுக்க ஆணாதிக்க உலகில் அல்லவா பெண்டிர் எல்லாம் நடமாடி வருகிறார் !

தாஞ் சுவான்: நானிதை ஏற்றுக் கொள்ள முடியாது ! உலகைப் பெண்டிர் ஆளா விட்டாலும், வீட்டை ஆள்பவர் பெண்டிர்தான் ! ஆணாதிக்க உலகம் கண்ணில் பளிச்செனத் தெரிகிறது. ஆனால் பெண்ணாதிக்க இல்லம் கண்ணுக்குத் தெரிவதில்லை !

(தொடரும்)

***************************

தகவல்

Based on The Play
“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)

2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)

3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973

4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (June 4, 2008)]

Series Navigation