• Home »
  • கதைகள் »
  • தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 14

தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 14

This entry is part of 39 in the series 20080605_Issue

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்


வசந்திக்கு இதை எல்லாம் புரிய வைப்பதற்கு சவிதாவும், ராஜலக்ஷ்மியும் கஷ்டப்பட வேண்டியிருந்தது. ராஜலக்ஷ்மி தன்னுடைய உணர்வுகளை, மனதை எல்லாம் வசந்தியுடன் பகிர்ந்துகொண்டாள். சவிதா கல்லூரிக்கு போன பிறகு வசந்தியிடம் வந்து எதையாவது பேசிக் கொண்டிருப்பாள்.
ராஜலக்ஷ்மி தங்கியிருந்த போது வசந்தி அவளை அன்புடன் பார்த்துக் கொண்டாள். அந்தப் பெண்ணுக்கு சந்தோஷம் தரக் கூடிய வேலைகள், அவை எவ்வளவு சின்னதாக இருந்தாலும் சரி சிரத்தையாக செய்துவந்தாள்.
தினமும் மாலையில் ராஜலக்ஷ்மின் கூந்தலை சிடுக்கு எடுத்து தலைவாரிப் பின்னிவிட்டாள். “தினமும் தேங்காய் எண்ணெய் தடவினால் கூந்தல் நன்றாக வளரும்” என்று அறிவுரை வழங்கினாள்.
ராஜலக்ஷ்மி தைரியமாக இருப்பது, சிரித்த முகத்துடன் வளையம் வருவது, சிநேகிதிகளுடன் சாதாரணமாக இருப்பது இவை எல்லாம் வசந்திக்கு ரொம்பவும் பிடித்திருந்தன. இதற்கு முன்பாக இருந்தால் ராஜலக்ஷ்மியின் நிலைமையில் இருக்கும் ஒரு பெண்ணை இந்த அளவுக்கு நேசித்திருப்பேனா என்று நினைத்துக் கொண்டாள் வசந்தி.
லாவண்யாவின் சிநேகிதிகள், சவிதாவின் சிநேகிதிகள் வீட்டுக்கு வருவதுண்டு. ஆனால் அவர்களுடன் தனக்கு ரொம்ப பழக்கம் இருந்தது இல்லை. ரொம்பவும் சின்ன வயதில் இருக்கும் போது சிநேகிதிகளை வாசலுடனே அனுப்பிவிடும் படி எச்சரித்ததுண்டு. உள்ளே வந்தால் ரகளை செய்வார்கள் என்று சலித்துக் கொள்வாள். அந்தக் குழந்தைகள் போன பிறகுதான் தன் குழந்தைகளுக்கு சிற்றுண்டியை வழங்குவாள். சுரேஷ் ஒரு நாள் “அவர்களுக்கும் கொடுத்திருக்கக் கூடாதா?” என்று சொன்ன போது “அப்படிச் செய்தால் இனி குடித்தனம் உருப்பட்டாற்போல்தான். இனி தெருக் குழந்தைகள் எல்லோரும் வீட்டு வாசலில் வந்து நிற்பார்கள்” என்று எரிந்து விழுந்தாள்.
கொஞ்சம் பெரியவர்கள் ஆன பிறகு குழந்தைகள் தங்களுடைய நெருங்கிய சிநேகிதிகளை வீட்டுக்கு அழைத்து வந்தால், காபி தயாரித்து குரல் கொடுப்பாள். அவர்களே வந்து வாங்கிக் கொண்டு போய் விடுவார்கள். அந்த சிநேகிதிகளைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது. குழந்தைகள் எப்போதாவது தன்னுடைய சிநேகிதிகளை பற்றி சொல்ல வந்தால் மூட் நன்றாக இருந்தால் கொஞ்சம் காது கொடுத்து கேட்பாள். இல்லையா போதும் நிறுத்துங்க என்று சலித்துக் கொள்வாள்.
இங்கே சவிதாவின் சிநேகிதிகள் எல்லோரும் அவளுடன் நட்புடன் பழகுகிறார்கள். எப்போதாவது தவிர அவர்கள் தனியாக பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள். அவர்கள் வந்தால் வசந்திக்கு சந்தோஷமாக இருக்கும். ராஜலக்ஷ்மி விஷயம் அவளை ரொம்ப பாதித்தது. லாவண்யாவுக்கோ, சவிதாவுக்கோ நேர்ந்து விட்டது போல் அவ்வளவு கவலையை அனுபவித்தாள்.
அந்தப் பெண்ணுக்கு ஏதாவது செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும். தன் குடும்பத்தைச் சேராத நபரை பற்றி இவ்வளவு தூரத்திற்கு யோசிப்பது, அன்பு செலுத்துவது இதுதான் முதல் தடவை. ஆனால் மனதிற்கு பிடித்திருந்தது.
ராஜலக்ஷ்மிக்கு உதவி செய்ய வேண்டும் என்ற விருப்பத்துடன், தேவை ஏற்பட்டால் தனக்கு ராஜலக்ஷ்மி உதவி செய்வாள் என்றும், தன்னை நேசிப்பாள் என்றும் பலமான நம்பிக்கை கூட ஏற்பட்டது. பரஸ்பரம் அந்த நம்பிக்கை இருப்பதால்தானோ என்னவோ இந்த உறவு இவ்வளவு சந்தோஷத்தைத் தருகிறது என்று நினைத்துக் கொண்டாள் வசந்தி.
பதினைந்து நாடகள் கழிந்துவிட்டன. “இனியும் லீவ் போட்டால் மரியாதை இல்லை. கிளம்புகிறேன்” என்றாள் ராஜலக்ஷ்மி.
அன்று இரவு கிளம்புவதற்காக டிக்கெட் வாங்கி வந்தாள். மாலையில் சவிதா யூனியன் மீட்டிங் இருக்கு என்று போய்விட்டாள். “உன்னுடைய ரயில் எட்டுமணிக்குதானே. ஏழறை மணிக்கெல்லாம் ஆட்டோ எடுத்து வருகிறேன். தயாராக இரு” என்றாள்.
ராஜலக்ஷ்மி பெட்டியை பேக் செய்தாள். “நீங்களும் சவிதாவும் சென்னைக்கு வாங்கம்மா” என்று அழைத்தாள்.
“நீ இன்னும் நான்கு நாட்கள் தங்கினால் என்னவாம்? இதோ மாங்காய் தொக்கு. இதை ஒரு பிளாஸ்டிக் கவரில் தனியாக சுற்றி பேக்கில் வைத்துக் கொள்” என்றாள் பாட்டிலை நீட்டிக் கொண்டே.
“எதுக்காக சிரமப்பட்டீங்க? கடையில் நான் வாங்கிக் கொள்ள மாட்டேனா?”
“உன்னால் கடையில் வாங்கிக் கொள்ள முடியாது என்பதற்காகவா? உனக்கு பிடிக்குமே என்று கிளறினேன்.” உரிமையுடன் கடிந்துகொண்டாள் வசந்தி.
“எங்க அம்மாவை விட நீங்க நெருக்கமாகி விட்டீங்கம்மா” என்றாள் ராஜலக்ஷ்மி.
“அதென்ன பேச்சு ராஜீ! உங்க அம்மாவை விட நான் எப்படி நெருக்கமானவளாக ஆக முடியும்? நமக்குள் அறிமுகமாக இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை.”
“அது உண்மைதான். ஆனால் நான் இந்த ஜென்மத்தில் எங்க அம்மாவிடம் சொல்லிக் கொள்ள முடியாத விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன். இன்னும் சொல்லப் போனால் என்னுடைய வேதனையை பகிர்ந்துக் கொள்ளும் அளவுக்கு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேன். இது எங்கம்மாவிடம் சாத்தியப்படாது.”
“எதனால்?” யோசித்துக் கொண்டே கேட்பது போல் கேட்டாள் வசந்தி.
“ஏன்னு கேட்டால் காரணம் எனக்கும் தெரியவில்லை. தவறு என்னுடையதுதான் என்று நினைக்கிறேன். வேளைக்கு சாப்பாடு போட்டு பசியை ஆற்றும் தாயாகத்தான் பார்த்தேனே ஒழிய சிநேகிதியாக பார்க்கவில்லை. அம்மாவுக்கு இதெல்லாம் புரியாது. என்னாலும் சொல்ல முடியாது. இரண்டு பேரும் ரொம்ப விலகியிருப்பது போல் இருப்போம். மனம் விட்டு பேசிக் கொள்ளும் நெருக்கம் இல்லை எங்களுக்குள். அம்மா என்னிடம் ரொம்ப அன்பாக இருப்பாள். எங்கம்மாவுக்கு நான்கு குழந்தைகள். எங்கள் நான்கு பேரை வளர்ப்பது தான் தன்னுடைய வாழ்க்கையின் நோக்கமாக அம்மா இருந்து வந்தாள். இருந்தாலும் அம்மாவால் என்னை புரிந்துகொள்ள முடியாது. என்னைப் புரிந்து கொள்ள முடியாத அம்மாவிடம் எல்லாவற்றையும் என்னால் பகிர்ந்து கொள்ள முடியாது.”
தானே ராஜலக்ஷ்மின் தாயாகிவிட்டது போல் வசந்தி கண்கலங்கினாள். ராஜலக்ஷ்மியை அருகில் இழுத்துக் கொண்டாள்.
அப்பொழுதுதான் கதவைத் தள்ளிக் கொண்டு சந்திரசேகர் உள்ளே வந்தான், “இன்றுதானா உங்கள் பயணம்?” என்றபடி.
சவிதாவுக்காக இரன்டு மூன்று முறை வந்திருந்த சந்திரசேகரை வசந்தி வெறுமே பார்த்திருக்கிறாளே தவிர பழக்கம் இல்லை.
“உட்காரு தம்பீ!” என்றாள் தான் அங்கிருந்து போகணுமா என்று யோசித்துக் கொண்டே.
“நீங்க இன்றைக்கு பயணத்தை நிறுத்திக் கொள்ளக் கூடாதா?” என்றான் சந்திரசேகர்.
“ஏன்? நாளைக்கு ஏதாவது மீட்டிங் இருக்கா?” வியப்புடன் கேட்டாள்.
“மீட்டிங்காவது மண்ணாவது? உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசணும். இரண்டு நாட்களாக மூளையைக் கசக்கிக் கொண்டு இன்றைக்கு ஒரு முடிவுக்கு வந்தேன். நாளை இரவு போய்க் கொள்ளலாம். இன்றைக்கு போகாதீங்க.”
“என்ன விஷயம்? போகட்டும், அடுத்த முறை வந்த போது சொல்லுங்கள்” என்றாள் ராஜலக்ஷ்மி.
“ப்ளீஸ்! நான் ரொம்ப சீரியஸாக சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்க நாளைக்கு போய்க் கொள்ளலாம். ஆண்டீ! நீங்களாவது சொல்லுங்கள். நான் இந்த அளவுக்கு சொல்லும் போது மறுக்க வேண்டாம் என்று.”
“என்ன பேசப் போறீங்க?” ராஜலக்ஷ்மி தயங்கிக் கொண்டே கேட்டாள்.
“முதலில் நீங்க பயணத்தை கைவிடுங்கள். பிறகு சொல்கிறேன்.”
இனியும் தான் அங்கே இருப்பது சரியில்லை என்று வசந்தி உள்ளே போனாள்.
இரண்டு நிமிடங்கள் கழித்து ராஜலக்ஷ்மி உள்ளே வந்து “அம்மா! சவிதா வந்தால் இந்த டிக்கெட்டை கான்சல் செய்துவிட்டு, நாளைக்காக வாங்கிக் கொள்ளச் சொல்லுங்கள். நானும் சந்திராவும் கொஞ்சம் பீச் வரையிலும் போய் வருகிறோம்” என்று சொல்லிவிட்டு போய்விட்டாள்.
சவிதா வரும் வரையில் வசந்திக்கு இருப்பு கொள்ளவில்லை. ‘சந்திரசேகர் என்ன பேசப் போகிறான்? எதற்காக பயணத்தை நிறுத்தச் சொன்னான்’ என்று.
தாய் சொன்னதைக் கேட்டதும் சவிதாவின் முகம் மலர்ந்துவிட்டது. “அப்பாடா! அந்த தூங்குமூஞ்சிக்கு இப்பொழுதுதான் விழிப்பு வந்ததா? அவன் ராஜீயை காதலிக்கிறான் என்று எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம். எங்கே டிக்கெட்?” என்று அவசரப்பட்டாள்.
“எதற்காக இந்த பதற்றம்? அவனுடைய உத்தேசம்தான் என்ன? ஏன் அவளை பயணத்தை கான்சல் செய்யச் சொன்னான்?” ஆர்வத்தை அடக்க முடியாமல் கேட்டாள் வசந்தி.
“ஒருக்கால் உன்னைக் காதலிக்கிறேன். கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொல்வதற்காக இருக்கும்” என்றாள் சவிதா சந்தோஷமாக சிரித்துக் கொண்டே.
“ராஜீ சம்மதிப்பாளா?”
“வரட்டும். அவளே சொல்லுவாள் இல்லையா?”
சவிதா ஸ்டேஷனுக்கு கிளம்பிப் போனாள். ராஜலக்ஷ்மியும், சவிதாவும் ஒரே நேரத்தில் திரும்பி வந்தார்கள்.
“என்னவாம்? எதற்காக உன்னைப் போக வேண்டாம் என்று தடுத்தான்?” சவிதா கேட்டாள்.
“ஊகித்து சொல்லு பார்ப்போம்” என்றாள் ராஜலக்ஷ்மி.
“காதலிக்கிறேன் என்று சொன்னானா இல்லையா?”
“சொன்னான்” என்றாள் ராஜலக்ஷ்மி முறுவலுடன்.
“நீ என்ன சொன்னாய்?” சவிதா பதற்றத்துடன் கேட்டாள்.
“யோசித்துச் சொல்லுகிறேன் என்றேன்.”
“இந்த இரண்டு வார்த்தைகள்தானா நீங்க பேசிக் கொண்டது? முழுவதையும் சொல்லு. இல்லாவிட்டால் கொன்றே போட்டுவிடுவேன்.” சவிதா மிரட்டினாள்.
“சொல்லத்தான் போகிறேன். முதலில் சாப்பிடலாம். அம்மா! ரொம்ப பசிக்கிறது.” செல்லம் கொஞ்சுவது வசந்தியிடம் சொன்னாள்.
வசந்திக்கு சந்திரசேகர் சொன்ன பேச்சுக்கு சந்தோஷமாக இருந்தாலும் உள்ளூர எங்கேயோ சின்ன சந்தேகம், தப்பிப் தவறி இந்தப் பெண் அவனிடம் அந்த விஷயத்தை சொல்லிவிட்டாளோ என்று. சாப்பாடு போடும் போது கேட்கவும் செய்தாள்.
சவிதாவும் கவலையுடன் பார்த்தாள்.
“எப்படி சொல்லுவதென்று புரியவில்லை. அவன்தான் அதிகம் பேசினான். அவனைத் தடுத்து நிறுத்தி என் வாழ்க்கையில் ஒரு விஷயம் நடந்தது. நான் அதை இப்படி உணருகிறேன். இந்த விஷயத்தை பற்றி உங்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருக்குமோ என்னவோ என்று என்னால் சொல்ல முடியவில்லை. அதான் என் அபிப்பிராயத்தை கடிதத்தில் எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன்” என்றாள் ராஜலக்ஷ்மி.
“இதை எல்லாம் அவனுக்கு கடிதத்தில் எழுதப் போகிறாயா? எதற்காக எழுதணும்?” வசந்தி கோபமாக கேட்டாள்.
“எதற்காக என்றால்? சொல்லணும் இல்லையா?”
“சொல்லாமல் இருந்தால் என்னவாகும்? அது அவ்வளவு முக்கியமான விஷயம் இல்லை என்று நீயே நினைக்கும் போது.”
“வேண்டுமென்றே மறைப்பானேன்? சொன்னால் என்னவாகும்?”
“உங்களுக்கு ஒன்றும் தெரியாது. சொன்னாலும் கேட்க மாட்டீங்க. நடந்ததேதோ நடந்துவிட்டது. எல்லாம் மறந்து போய் விடவேண்டும் என்று நினைக்கிறீங்க. மறுபடியும் எதற்காக இந்த வேணடாத வேலைகளை செய்து பிரச்னைகளை வரவழைப்பானேன்?” வசந்திக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. “எனக்கு என்ன வந்தது? உங்கள் விருப்பம். சொன்னால் கேட்டுக் கொள்ளப்போறீங்களா என்ன?” என்றபடி விருட்டென்று எழுந்துகொண்டு அங்கிருந்து போய்விட்டாள்.
சமையலறையை ஒழித்துக் கொண்டே ராஜலக்ஷ்மியும் சவிதாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த உரையாடல் சரியாக காதில் விழவில்லை என்றாலும் “இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை. நீ சொல்வதுதான் சரி என்று ஒருவருக்ககொருவர் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.” வசந்தி நினைத்துக் கொண்டாள் கோபமாக.
சவிதா சமையலறையில் விளக்கை அணைத்துவிட்டு முன்னறைக்கு போனாள். ராஜலக்ஷ்மி வந்து வசந்தியின் பக்கம் வந்து படுத்துக் கொண்டாள்.
“அம்மா! இந்த விஷயத்தை மறைப்பானேன்? நான் என் உயிர் சிநேகிதி என்று நினைத்த சவிதாவிடம் சொல்லியிருக்கிறேன். வீணாவுக்கும், ரமணனுக்கும் தெரியும். சந்திரசேகரிடமிருந்து மறைப்பது என்றால் அவனிடம் நம்பிக்கை இல்லை என்று அர்த்தமாகிவிட்டாதா? நம்பிக்கை இல்லாமல் காதலை தொடங்குவானேன்? அவனும் அந்த விஷயத்தை எங்களைப் போலவே எடுத்துக் கொண்டால் பிரச்னையை இல்லை. ஆட்சேபணை இருந்தாலும் பிரச்னை இல்லை. தானே என்னை விட்டு விலகிப் போய் விடுவான். இது நான் அவனுக்கு வைக்கும் ஒரு பரீட்சை என்று நினைத்துக் கொள்ளுங்கள் அம்மா. பின்னால் வேண்டாத பிரச்னைகளுக்கு இடம் கொடுப்பதை விட இது நல்லது இல்லையா?” கெஞ்சுவது போல் சொன்னாள் ராஜலக்ஷ்மி.
“ஆகட்டும். உங்க இஷ்டம்” என்றாள் வசந்தி கொஞ்சம் வழிக்கு வந்தவள் போல்.
“உங்க இஷ்டம் என்று சொன்னால் சரியில்லை. இது தான் சரியான வழி. ஆமாவா இல்லையா சொல்லுங்கள்?”
“ஆமாமாம். போய் படுத்துக் கொள்” என்றாள் வசந்தி. ராஜலக்ஷ்மி எழுந்துக் கொண்டு முன் அறைக்குப் போனாள்.
மறுநாள் கிளம்பி சென்னைக்கு போய்விட்டாள்.
வசந்தி வைசாக்கிற்கு வந்து ஆறுமாதங்களாகிவிட்டன. இந்த ஆறு மாதங்களில் லாவண்யா ஒரு முறை வந்தாள். தங்கியிருந்த இரண்டு நாட்களும் சவிதாவை வசைபாடிக் கொண்டே இருந்தாள்.
“நீதான் இப்படிச் செய்தாய். குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிட்டாய். புகுந்தவீட்டார் முன்னால் என்னை நிமிர்ந்து நிற்க முடியாமல் செய்துவிட்டாய்” என்று ஏசினாள்.
“நான் என்ன செய்துவிட்டேன்?” சவிதா கேட்டாள்.
“அம்மாவை அங்கிருந்து எதற்காக அழைத்து வந்தாய்? அம்மா அங்கே இருந்தால்தான் மதிப்பும் கௌரவமும். அப்பா இப்போ பப்ளிக்காக அவளுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார். அம்மா அங்கே இருந்தால் இப்படி நடந்திருக்காது இல்லையா? கொஞ்சமாவது ஒளிவு மறைவு இருந்திருக்கும்.”
“அப்போ அம்மாவின் நிலைமை எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்குமோ யோசித்துப் பார்த்தாயா? தினமும் அப்பாவின் முன்னால் சோகத்துடன் வளையம் வருவது, குற்றம் செய்துவிட்டாற் போல் அப்பா தலைமறைவாக இருப்பது. வாய் விட்டு பேசுவதற்கு கூட மனிதர்கள் இல்லாத வீட்டில் அம்மாவுக்கு எவ்வளவு நரகமாக இருக்கும்? என்னிடம் இருந்தால் நிம்மதியாக இருப்பாள். நீ அனாவசியமாக கவலைப்பட வேண்டாம்” என்றாள் சவிதா.
“அப்பா அப்படி ஏன் நடந்துகொள்ளணும்?” என்றாள் லாவண்யா.
“போய் அப்பாவிடம் கேள். என்னைக் கேட்பானேன்?” சவிதா சொன்னாள்.
“தவறு அம்மாவுடையதுதான். அப்பாவை கட்டிப் போட தெரியவில்லை. ஆண்கள் அப்படியும் இப்படியும் இருப்பது சகஜம்தான் என்று கண்டுகொள்ளாமல் சும்மா இருந்திருக்கணும். இப்போ எல்லோரும் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?”
“என்ன சொல்கிறார்கள்?” சவிதா சீரியஸாக கேட்டாள்.”
“உங்க அம்மாவை அப்பா விட்டுவிட்டார்களாமே என்று கேட்கிறார்கள். என்ன பதில் சொல்வது? தலை நிமிர்ந்து நடக்க முடியவில்லை.”
மௌனமாக இந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த வசந்திக்கு திடீரென்று ஆவேசம் பொங்கிக் கொண்டு வந்தது.
“எல்லோரிமும் போய் சொல்லு. எங்க அம்மாவை அப்பா தள்ளி வைத்துவிட்டார் என்று சொல்லு. எனக்கு இல்லாத மானக்கேடு உனக்கு என்ன வந்தது?” என்று சொல்லிக் கொண்டே கதறினாள்.
“அக்கா! நீ எதற்காக வந்தாய்? அம்மாவை அழ வைப்பதற்காகவா?” சவிதா கடிந்துகொணடாள்.
இருந்த நான்கு நாட்களும் லாவண்யா அழுது ஆர்பாட்டம் செய்து வீட்டின் அமைதியைக் கெடுத்து விட்டு போய்ச் சேர்ந்தாள்.
லாவண்யாவுடன் தனக்கு இருந்த பந்தம் ஏதோ அறுந்துவிட்டது போல் இருந்தது வசந்திக்கு. லாவண்யாவுக்கு தன்னுடைய குடும்பகௌரவப் பிரச்னையைத் தவிர வேறு எதுவும் இல்லை.
எல்லாம் சரியாக இருந்தால் தன்னிடமிருந்து வேலையை வாங்கிக் கொள்வாள். தன் குழந்தைகளின் பொறுப்பையும் தன்னிடம் ஒப்படைத்து மேலும் தன்னிடமிருந்து உழைப்பை உரிஞ்சு கொள்வாள். இப்போ அதெல்லாம் சாத்தியம் இல்லை என்று தெரிந்த பிறகு தன்னை ஒரு மனுஷியாக பார்க்காமல் பிரச்னையாக பார்க்கிறாள். இந்த யோசனை வந்த பிறகு சவிதாவின் சிநேகிதிகளிடம், முக்கியமாக வீணா, ராஜலக்ஷ்மி, சுந்தரி இவர்களிடம் அன்பு அதிகமாயிற்று.
“அவர்களைப் பொறுத்தவரையில் நான் உழைக்கும் இயந்திரம் இல்லை. சொத்து சுகம் தருபவள் இல்லை. என்னை ஒரு பிரச்னையாக அவர்கள் நினைக்கவும் இல்லை. மனிதனுக்கு சகமனிதனிடம் இருக்க வேண்டிய மனிதநேயம்தான் எங்களுக்கு இடையே இருக்கிறது. லாவண்யாவுக்கும் எனக்கும், சுரேஷ¤க்கும் எனக்கும் இடையே அந்த உறவு இல்லாமல் போய்விட்டது.”
இந்த எண்ணம் வந்ததும் வசந்திக்கு புதிதாக ஞானம் பிறந்துவிட்டது போல் தெம்பு பிறந்துவிட்டது.
சுரேஷ் அவ்வப்பொழுது இந்த ஊருக்கு வந்து சவிதாவைச் சந்தித்து விட்டுப் போவது வசந்திக்குத் தெரியும். ஒருநாள் சவிதா கல்லூரியிலிருந்து வரும்போது ஒரு பாக்கெட் கொண்டுவந்தாள்.
“என்ன இது?” என்றபடி திறந்து பார்த்தாள் வசந்தி.
புத்தாடைகள்.
“புது டிரெஸ்ஸா? எப்போ வாங்கினாய்?” பிரித்துப் பார்த்துக் கொண்டே கேட்டாள்.
“அப்பா வாங்கி வந்தார். மதியம் கல்லூரியில் கொண்டு வந்து கொடுத்தார்.”
வசந்தி சட்டென்று பாக்கெட்டை கீழே வைத்தாள். சவிதா பாக்கெட்டை எடுத்து மேஜை மீது வைத்துக் கொண்டே “அப்பா ஹோட்டலில் தங்கியிருக்கிறார் அம்மா. மாலையில் வந்து சந்திப்பதாக சொல்லியிருக்கிறேன். காத்துக் கொண்டிருப்பார். போய் வருகிறேன். நான் வருவதற்கு தாமதமாகுமோ என்னவோ. நீ சாப்பிட்டு விடு” என்று சொன்னாள்.
வசந்தி பதில் பேசவில்லை. சவிதா குளித்துவிட்டு உடைகளை மாற்றிக் கொண்டு போய்விட்டாள். சுரேஷை இங்கே வரச் சொல்லவில்லை என்று சவிதா நினைத்துக் கொண்டிருக்கிறாளா? சவிதா ஏன் தந்தையை அழைக்கவில்லை? தாய் வருத்தப் படுவாளோ என்றா? சுரேஷ் எப்படி இருக்கிறான்? வசந்திக்கு சுரேஷை பார்க்க வேண்டும் போல் இருந்தது. வாசலிலேயே காத்திருந்தாள்.
இரவு ஒன்பது ஆனபிறகு வீட்டின் முன்னால் ஆட்டோ வந்து நின்றது. ஆட்டோவிலிருந்து இருவரும் இங்கினார்கள்.
வசந்தி கண்களை அகல விரித்துக் கொண்டு பார்த்தாள்.
சுரேஷ் சிரித்துக் கொண்டு சவிதாவின் தோளில் தட்டியபடி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான்.
சுரேஷ் நன்றாகத்தான் இருக்கிறான். சந்தோஷமாக, உற்சாகமாக இருந்தான். தான் இல்லாமல் போனது ஒரு குறையாகவே இல்லை. அவனுக்கு தன்னைப் பற்றிய யோசனையே இருப்பது போல் தென்படவில்லை. ஆட்டோ கிளம்பிப் போகும் வரையில் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தாள் வசந்தி. அதற்கு பிறகு ஒரு நாளும் வசந்தி சுரேஷின் நினைவுகளில் கண்கலங்கவில்லை. அது தேவையில்லாத விஷயம் என்ற எண்ணம் அவள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது.
இருபது வருட தாம்பத்திய வாழ்க்கையில் கடைசியில் எதுவும் எஞ்சியிருக்கவில்லை.
“இன்னும் இதே போல் இருபது வருடங்கள் கழித்துவிட்டு செத்துப் போகவில்லையே என்பற்காகவா அழுது தீர்கக்கணும்” என்று நினைத்துக் கொண்டாள் வசந்தி.
சவிதாவின் நண்பர்கள், அவர்களுடைய அரசியல்கள், போராட்டங்கள், இயக்கங்கள் இதெல்லாம் அவளையும் அறியாமலேயே அவளுக்குள் இடம் பிடித்துக் கொண்டன.

தொடரும் …..

email id tkgowri@gmail.com

Series Navigation