• Home »
  • கதைகள் »
  • உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 9 (சுருக்கப் பட்டது)

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 9 (சுருக்கப் பட்டது)

This entry is part of 46 in the series 20080529_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


என் அறிவுரையைக் கேட்பீர். கல்லூரியிலிருந்து வெளிவந்த பிறகு உங்களைப் பிறரது பணிக்கென முழுமையாகத் தயார் செய்ய வேண்டும். என்னை நம்புவீர். பெரும் நிதிக் களஞ்சியத்தைப் பெற்றவரை விடவும், விலை மதிப்பில்லாப் பொருட்கள் உமது கைவசம் உள்ளதை விடவும் பேரின்பம் உமக்குக் கிடைக்கும். வறுமை எண்ணங்களைப் புறக்கணித்து விலக்குவீர். எந்த விதத்தில் நீவீர் ஏழையர் என்று கருதுகிறீர் ? அழைத்ததும் ஓடிவரும் வேலை ஆட்கள் இல்லை என்றா, வாகனம் இல்லை என்றா, எதற்காக வருந்துகிறீர் ? அவை இல்லாவிட்டால் என்ன ? உமது இதயக் குருதியில் இரவும் பகலும் பிறருக்காகப் பணி செய்தால், உம் வாழ்க்கையில் சாதிக்காமல் போவது ஏதாவது இருக்க முடியுமா ?

இந்தியா முழுவதும் நான் பல்லாண்டுகளாகப் பயணம் செய்த போது, உன்னத ஆத்மா உடைய பலரைச் சந்தித்து உரையாடினேன். அவரில் பலர் அன்பும், பரிவும், அறிவும் மிக்கவர். அவரது பாதங்களின் அருகில் அமர்ந்து உரையாடிய போது வலுவோட்டம் மிகுந்த உறுதி இதயத்துள் பாயும் உணர்ச்சியை அனுபவித்தேன் ! இப்போது நான் உம்மிடம் பேசும் உரைகளும் அந்த வலுவோட்டத்தில் பலனடைந்த அருள் வாக்குகளே !

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

மெய்ஞானிகளும், விஞ்ஞானிகளும் தமது அகக்கண்ணால் கண்டுபிடித்தவை ஏராளம். நீயும் நானும் மரத்திலிருந்து ஆப்பிள் பழம் பூமியில் விழுவதை அனுதினமும் பார்த்துக் கொண்டு வருகிறோம் ! புறக்கண் பார்வையில் மட்டும் நோக்கும் நாம் அதை ஏனென்று ஆழ்ந்து சிந்திக்க வில்லை ! நியூட்டனின் புறக்கண் அதை நோக்கியதும் அவரது அகக்கண் விழித்துக் கொண்டு ஓளி பெற்றது ! ஆப்பிள் பழம் ஏன் பூமியில் விழுகிறது என்று சிந்தித்தார் ! ஓர் ஆப்பிளைக் கையில் எடுத்து மேல் நோக்கி எறிந்தார். அது மேலே சென்று மெதுவாகி நின்று கீழ் நோக்கித் திரும்பியது ! ஆகா ! மேல் நோக்கிப் போகும் ஆப்பிளைக் கீழ் நோக்கி இழுப்பது பூமி அல்லவா ! அவரது ஞானக்கண் கண்டுபிடித்தது நமக்குத் தெரியாத புவியீர்ப்பு !

பெர்னார்ட் ஷா (உன்னத மனிதன் நாடகம்)

உபரி மொழிகள் (Stray Sayings):

. . . . இயற்கைப் பண்பாட்டைத் தன்னிச்சைப்படிக் கீழாக்கி, உயிரனத்தை அவமதித்து அல்லது உன்னதப் படுத்தி மனிதன் தனது திட்டக் குறிக்கோளுக்காகக் கடவுளாக நடமாடினான் ! ஓநாயுடன் பழக்க வழக்கம் வைத்துக் கொள்வது போல் மனிதருடன் உலவி வருகிறான். உடன் பிறப்புகளான அத்தகைய அரக்கர்கள் (Monsters) மனிதரின் பேராசைத்தனத்தாலும் மூடத்தனத்தாலும் உருவான துணைப் பிறவிகளே !

. . . . நீ கொடுத்த உதைக்குத் திருப்பி உன்னை அடிக்காதவனிடம் கவனமாயிரு ! உன்னை அவன் மன்னிக்கவும் இல்லை ! உன்னை நீ மன்னிக்கவும் அவன் அனுமதிக்க வில்லை !

. . . . அண்டை வீட்டுக்காரனை நீ காயப்படுத்த முனைந்தால், பாதிக் காயப்படுத்தாதே !

. . . . இரப்பவனுக்குக் காசைக் கொடுக்கலாமா அல்லது கூடாதா என்று சிந்திக்கச் செய்யும் பசப்பு உணர்ச்சி (Sentimentality) நெறி முரண்பாட்டுத் தவறாகும் !

. . . . பசியுடைய இரண்டு நபர் ஒருத்தனைப் போல் இரட்டை மடங்கு பசியுடையர் அல்லர். ஆனால் அயோக்கியர் இருவர் ஒருத்தனைப் போல் பத்து மடங்கு தீயவராய் இருப்பார் !

. . . . சிலுவையை உனது ஊன்றுகோலாய் வேண்டுமானால் ஆக்கிக்கொள் ! ஆனால் அவ்விதம் அடுத்தொருவன் செய்வதைப் பார்க்கும் போது, நீ அவனிடம் கவனமாக இரு !

பெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்)

****************

உன்னத மனிதன்
(பெர்னார்ட் ஷா)

அங்கம் : 3 பாகம் : 9
(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.

2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.

3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.

4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)

5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி

6. ஹெக்டர் மலோன் (Hector Malone) –

7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்

8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்

9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.

10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)

11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 3 பாகம் : 9)
(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: காதல் மன்னன் தாஞ் சுவான் (Don Juan), ஒரு வாலிப மாது, ஸ்பானியர் மென்டோஸா, ஜான் டான்னர், சாத்தான் (பெர்னாட் ஷாவின் கற்பனை வில்லன்)
காலம்: காலை வேளை
இடம்: நரகம் (பெர்னாட் ஷாவின் கற்பனைத் தீய உலகம்)

(காட்சி அமைப்பு): காதல் மன்னன் தாஞ் சுவான் நரகத்தில் ஒரு வாலிப மங்கையைச் (ஆனி வொயிட்·பீல்டு) சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறான். புதல்வியைக் காண தந்தை மிஸ்டர் வொயிட்·பீல்டு சொர்க்கத்திலிருந்து வயோதிகராக வருகிறார். சாத்தான் மூவரையும் சந்திக்கிறான்.

தாஞ் சுவான்: வெற்றி பெறுவது மனிதன் ஆக்கும் அழகு மயத்திலும் உடலமைப்புப் பூரணத்திலும் உண்டாவதில்லை ! பறவை தனது நளின இறக்கை உதவியால் பறக்கும் ஆற்றல் மகிமை பெற்றுள்ளது. வெறும் அழகு மட்டும்தான் முக்கிய மென்றால் அவலட்சண மனிதக் குரங்கின் பேரப் பிள்ளைகளாக நாம் பிறந்திருக்க மாட்டோம்.

இளைய மாது: மிஸ்டர் தாஞ் சுவான் ! நீவீர் மனிதக் குரங்கை விடச் சற்று கவர்ச்சியாக இருக்கிறீர்.

சாத்தான்: தாஞ் சுவான் என்ன நிரூபிக்க வருகிறார் ? மனிதப் பிறப்பு உலகில் அவலட்சணத்தையும், அலங்கோலத்தையும் நோக்கிச் செல்கிறது என்றுதானே சொல்கிறார் ?

தாஞ் சுவான்: இல்லை ! இல்லை என்று ஆயிரம் தடவைச் மறுப்பேன் ! மனிதப் பிறப்பு மூளை விருத்தி நோக்கிச் செல்ல வேண்டும் என்று சொல்ல வருகிறேன் ! வெறும் மேனி அழகும், உடற் பூரணமும் பெறுவது மட்டுமல்ல மனிதனின் உன்னதக் குறிநோக்கு ! அந்த அரிய மூளைக் கருவியால் மனிதன் சுயத்தன்மை உணர்வும் (Self-Consciousness) சுயத்தன்மைப் புலப்பாடும் (Self-Understanding) அடைய வேண்டும் என்று சொல்ல வருகிறேன்..

வயோதிகர்: இது விஞ்ஞான மேற்போக்கு விளக்கம் (Metaphysics) மிஸ்டர் தாஞ் சுவான் ! நான் கேட்கிறேன். மூளையைப் பற்றி ஏன் மனிதப் பிறவி மண்டையைக் குழப்பிக் கொள்ள வேண்டும் ? கண், காது, வாய், மூக்கு போன்று மூளையும் ஓர் உறுப்புதான் ! பிறவி இன்பம் சுவைப்பதைத் தவிர்த்து ஏன் ஒருவன் தன்னைப் பற்றி உணர்ந்து கொள்ள வேண்டும் ?

தாஞ் சுவான்: இராணுவத் தளபதியாரே ! மூளை கண், காது, வாய், மூக்கு போன்ற ஓர் உறுப்பில்லை ! மூளை ஓர் ஆட்சி அரங்கம் ! அதற்கு மூளையே அரசன் ! கண், காது, வாய், மூக்கு, கை, கால் அனத்தையும் கட்டுப்படுத்தி ஆட்டி வைக்கும் ஓர் அதிபதி ! மூளை என்னும் ஒர் கருவியின்றி வாழ்வைச் சுவைக்க முடியாது ! மனித இன்பம், துன்பம், ஏமாற்றம் அனைத்தும் உணருவது மூளை ஒன்றுதான்.

வயோதிகர்: நான் யார் ? நீ யார் ? அவன் யாரென்று நான் தெரிந்து கொள்ள விரும்ப வில்லை ! உயிரோடிருப்பவர் ஆசா பாசங்களை அப்படியே நான் ஏற்றுக் கொள்கிறேன். படைப்புப் பண்பாடுகள் மாறிவிடுகின்றன. காலம் மாறுகிறது. நாகரீகம் மாறுகிறது. கலாச்சாரம் மாறுகிறது. மனித மூளை நாளுக்கு நாள் விரியாமல் குறுகிப் போகிறது. விஞ்ஞானம் வளர்ச்சி பெற்றாலும், இன்னும் அஞ்ஞானம் அடிப்படையிலே உள்ளது ! என்னை நானே ஆராய விரும்பவில்லை. உன்னை ஆராயவும் எனக்கு ஆர்வமில்லை. மூளைக்கு வேலைப் பளுவைக் குறைக்க விழைகிறேன் !

தாஞ் சுவான்: மூளையால்தான் மூளையை உளவ முடிகிறது. மூளையின் நீட்சி எல்லையற்றது. அண்டக்கோளையும், அதற்கு அப்பாலும் நீண்டு அது ஆராயும். மனிதன் சிந்தனை ஆழத்தை நோக்கும். அதன் திறமைக்கு அளவில்லை. படைப்பிலே மனிதனின் மூளைக்கு இணையான ஓர் உயிர்ச் சாதனம் எதுவுமிருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் உலகில் சிந்தனை ஞானத்துக்கு மதிப்பில்லை. சீரான வாழ்வுக்குச் செழிப்புள்ள மூளை தேவை. தெளிந்த மூளையுடைய ஒருவன் வாழ்வில் பிழைகளைக் குறைப்பவன். மூளைக்கு அடுத்ததாக உள்ள உன்னத உறுப்பு விழிகள். காந்தக் கருவிபோல் கண்கள் திசை காட்டுபவை. அந்த மகத்தான சாதனம் நாம் எங்கே இருக்கிறோம், எங்கே போகிறோம், எங்கே போக வேண்டும் என்று நமக்கு இடமும் திசையும் காட்டுகிறது. ஆனால் மெய்யாக மூளைக்கும் ஓர் கண்ணுண்டு ! அதுதான் அகக்கண் அல்லது ஞானக்கண் (Mind’s Eye or Inward Eye) என்று அழைக்கப்படுவது ! புறக்கண் நோக்குவது இயற்கையான வெளியுலகை மட்டுமே ! ஆனால் அகக்கண் காண்பது : புவியில் மனிதப் பிறப்பின் நோக்கம் என்ன ? மனிதப் பிறப்பின் உன்னதம் என்ன ? மனிதப் பிறப்பின் மகத்துவம் என்ன ? கற்கால மனிதனைத் தற்கால நாகரீக முன்னேற்றத்துக்கு இழுத்து வந்தது எப்படி ? இவற்றை எல்லாம் சிந்திப்பது. மூளையின் உன்னதம் அதன் ஞானக்கண் மூலமாகப் புலப்படுகிறது.

சாத்தான்: புறக்கண் என்றால் எனக்குப் புரிகிறது ! ஆனால் நீங்கள் சொல்லும் அகக்கண் எனக்குத் தெரியவில்லை ! அகக்கண் மூளைக்குள் இருக்கிறதா ? என் மூளை குழம்புகிறதே !

தாஞ் சுவான்: உமக்குப் புறக்கண் மட்டுமே உள்ளது ! அகக்கண் உமக்கு இல்லாததால் அதன் இருக்கையை நீவீர் உணர முடியவில்லை ! அல்லது உமது மூளைக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் அகக்கண்ணைத் தட்டி நீவீர் எழுப்ப வில்லை !

வயோதிகர்: தாஞ் சுவான் சொல்வது எனக்குப் புரிகிறது. நீவீர் குறிப்பிடும் அகக்கண் பற்றி நானும் சிறிது அறிந்திருக்கிறேன். மனித மூளையில் ஞானக்கண் உள்ளதற்கு ஓர் உதாரணம் சொல்ல முடியுமா ?

தாஞ் சுவான்: மெய்ஞானிகளும், விஞ்ஞானிகளும் தமது அகக்கண்ணால் கண்டுபிடித்தவை ஏராளம். நீயும் நானும் மரத்திலிருந்து ஆப்பிள் பழம் பூமியில் விழுவதை அனுதினமும் பார்த்துக் கொண்டு வருகிறோம் ! புறக்கண் பார்வையில் மட்டும் நோக்கும் நாம் அதை ஏனென்று ஆழ்ந்து சிந்திக்க வில்லை ! நியூட்டனின் புறக்கண் அதை நோக்கியதும் அவரது அகக்கண் விழித்துக் கொண்டு ஓளி பெற்றது ! ஆப்பிள் பழம் ஏன் பூமியில் விழுகிறது என்று சிந்தித்தார் ! ஓர் ஆப்பிளைக் கையில் எடுத்து மேல் நோக்கி எறிந்தார். அது மேலே சென்று மெதுவாக நின்று கீழ் நோக்கித் திரும்பியது ! ஆகா ! மேல் நோக்கிப் போகும் ஆப்பிளைக் கீழ் நோக்கி இழுப்பது பூமி அல்லவா ! அவரது ஞானக்கண் கண்டுபிடித்தது நமது புறக்கண்களுக்குத் தெரியாமல் போன புவியீர்ப்பு ! நியூட்டன் மேலும் எழுதினார். ஆப்பிளைப் பேரளவு ஆற்றலில் மேல் நோக்கி எறிந்தால் அது புவியீர்ப்பை மீறி அப்பால் விண்வெளியில் போய்விடும் என்று !

வயோதிகர்: அற்புதமான உதாரணம் தாஞ் சுவான் ! மனித மூளையின் உன்னதத்தை ஞானக்கண் படைப்புகள் மூலம் நாம் காண முடிகிறது ! உண்மைதான்.

சாத்தான்: நியூட்டனின் புவியீர்ப்பு சக்தி எனக்குப் புரிகிறது ! ஆனால் அந்தக் கண்டுபிடிப்பு மூளையின் அகக்கண்ணில் தோன்றியது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

(தொடரும்)

***************************

தகவல்

Based on The Play
“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)

2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)

3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973

4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (May 27, 2008)]

Series Navigation