புவியீர்ப்பு கட்டணம்

This entry is part [part not set] of 44 in the series 20080410_Issue

அ.முத்துலிங்கம்


கடிதத்தை உடைக்கும்போதே அவனுக்கு கை நடுங்கியது. அது எங்கேயிருந்து வந்திருக்கிறது என்பது தெரியும். இது மூன்றாவது நினைவூட்டல். மூன்று மாதங்களாக அவன் புவியீர்ப்பு கட்டணம் கட்டவில்லை. இப்போது உடனே கட்டவேண்டும் என்று இறுதிக் கடிதம் வந்திருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாகத்தான் இந்த தொல்லை. அதற்கு முன் இப்படி விபரீதமான ஒரு துறை – புவியீர்ப்பு துறை – உண்டாகியிருக்கவில்லை.

‘அம்மையே!’
‘சொல்லுங்கள், நான் உங்களுக்கு இன்று எப்படி உதவலாம்?’
‘புவியீர்ப்பு கட்டணத்தை கட்டும்படி மீண்டும் நினைவூட்டல் கடிதம் வந்திருக்கிறது.’
‘நீங்கள் யார் பேசுவது?’
‘நான் 14 லோரன்ஸ் வீதியிலிருந்து பேசுகிறேன்.’
‘சரி, உங்களுக்கு என்ன பிரச்சினை?’
‘இந்தக் கட்டணம் அதிகமாக இருக்கிறது. இன்னொருமுறை பரிசீலிக்கமுடியுமா?’
‘இதோ கணினியில் உங்கள் கணக்கை திறந்திருக்கிறேன். சென்றமாதமும் உங்களோடு பேசியிருக்கிறேனே. அதற்கு முதல் மாதமும் இதே கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். ஆரம்பத்தில் இருந்து ஒழுங்காக பணம் கட்டி வந்த உங்களுக்கு திடீரென்று என்ன நடந்தது?’
‘என்னுடைய நிதிநிலைமை மோசமாகிவிட்டது.’
‘அதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும்? எங்கள் துறையின் விதிமுறைகள் அடங்கிய கையேட்டை உங்களுக்கு அனுப்பியிருந்தோமே. அதன் பிரகாரம்தான் கட்டணம் அமைத்திருக்கிறோம்.’
‘அம்மையே, உங்கள் கையேடு மிகவும் பாரமாக உள்ளது. எழுத்துக்கள் எறும்புருவில் படித்து முடிப்பதற்கிடையில் ஓடிவிடுகின்றன. உங்கள் கட்டண அமைப்பும் ஒன்றுமே புரியவில்லை. மிக அநியாயமாக இருக்கிறது.’
‘புரியாதது எப்படி அநியாயமாகும்? நீங்கள் தண்ணீருக்கு கட்டணம் செலுத்துகிறீர்கள். மின்சாரக் கட்டணம், சமையல்வாயு கட்டணம், சூரியஒளி வரி, காற்றுத்தூய்மை வரி என்று சகலதும் கட்டுகிறீர்கள். தொலைக்காட்சி, தொலைபேசி, செல்பேசி எல்லாம் பட்டுபட்டென்று தீர்த்துவிடுகிறீர்கள். இதிலே மாத்திரம் என்ன குறை கண்டீர்கள்?’
‘அம்மையே, புவியீர்ப்புக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். ஆதியிலிருந்து அது இருந்துகொண்டுதானே இருக்கிறது. நியூட்டன் அதைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர்கூட இருந்திருக்கிறது. இவ்வளவு நாளும் அதற்கு வரி விதிக்கவில்லை. இப்பொழுது இரண்டு வருடங்களாக அதற்கும் வரி கட்டவேண்டுமென்றால், எப்படி?’
‘ஐயா, நீங்கள் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. இந்தக் கேள்வியை இரண்டு வருடத்திற்கு முன்னரே கேட்க உங்களுக்கு தோன்றவில்லை? தண்ணீரை உங்கள் வீட்டுக்கு கொண்டுவருகிறோம். காற்றை தூய்மையாக்கி சுவாசிக்க வழங்குகிறோம். கூரையிலே விழும் சூரிய ஒளியில் உங்கள் சாதனங்கள் இயங்குவதற்கு அனுமதிக்கிறோம். சமையலுக்கு வாயு தருகிறோம், மின்சாரம் தருகிறோம். எல்லாவித கட்டணமும் கட்டிவிடுகிறீர்கள். ஆனால் புவியீர்ப்புக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள். யோசித்து பாருங்கள், புவியீர்ப்பு இல்லாமல் உங்களால் ஒரு நிமிடம்கூட வாழ முடியுமா? கார் ஓட்ட முடியுமா? நடக்க முடியுமா? உங்கள் பிள்ளைகள் ஓடியாடி விளையாடமுடியுமா? ஒன்றுக்குப் போவதுபோல ஒரு சின்னக் காரியம்கூட உங்களால் செய்யமுடியாதே?’
‘அம்மையே, என்னுடைய சுண்டெலி மூளையில் இவையெல்லாம் புரிய தாமதமாகிறது. ஆனால் உங்கள் துறை என்ன செய்கிறது? புவியீர்ப்பை சுத்தம் செய்கிறதா அல்லது வீடு வீடாய் கொண்டுபோய் அதை இறக்குகிறதா? இது மிகப் பெரிய அநியாயமாகப் படவில்லையா?’
‘அமெரிக்காவில் உள்ள அத்தனை பேரும் புவியீர்ப்பு கட்டணம் கட்டுகிறார்கள். ஐரோப்பா கட்டுகிறது. சில ஆப்பிரிக்க நாடுகளும் கட்டத் தொடங்கிவிட்டன. உலகம் படுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஒரு தேசப்பற்றாளராக நடக்கவில்லை. புவியீர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தும், அதனை முற்றிலும் பயன்படுத்தியும், அதற்கான கட்டணத்தை நீங்கள் கட்டத் தயங்குவது விசனத்துக்குரியது. இதைப் பற்றி நான் மேலிடத்துக்கு முறைப்பாடு செய்யவேண்டியிருக்கும்.’
‘அம்மையே, உங்கள் இனிமையான குரலும் ‘முறைப்பாடு’ என்ற வார்த்தையும் ஒரே வாசகத்தில் வரலாமா? இந்த துறை துவங்கிய காலத்திலிருந்து நான் கட்டணத்தை சரியாகக் கட்டி வந்தேன். எனக்கு தேசப்பற்றும், பூமிப்பற்றும், புவியீர்ப்பு பற்றும் அதிகம் உண்டு. புவியீர்ப்பு கவிதை ஒன்றாவது படிக்காமல் நான் தூங்கப் போவதில்லை. அம்மையே, எப்படியும் கட்டிவிடுகிறேன். சிரமத்துக்கு மன்னிக்கவும். வணக்கம்.’
‘வணக்கம்.’

‘ஹலோ.’
‘ஹலோ.’
‘அது யார்? 14 லோரன்ஸ் வீதிதானே? வீட்டுச் சொந்தக்காரரா பேசுவது?’
‘நான்தான், சொல்லுங்கள்?’
‘ஐயா, நான் புவியீர்ப்பு துறையிலிருந்து பேசுகிறேன். நீங்கள் கடந்த நாலு மாதம் கட்டணம் கட்டாமல் எங்கள் சேவையை பயன்படுத்தி வருகிறீர்கள். உங்கள் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டம் நெருங்கி வருகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.’
‘அம்மையே, இது என்ன அநியாயம். நான் பணக் கஷ்டத்திலிருக்கிறேன், கொஞ்சம் கருணை காட்டுங்கள். நான் கட்டமுடியாது என்று சொல்லவில்லையே, எனக்கு சிறிது அவகாசம் கொடுங்கள். புவியீர்ப்பு முடிவதற்கிடையில் எப்படியும் கட்டிவிடுவேன்.’
‘நீங்கள் இடக்காகப் பேசுவதாக நினைக்கிறீர்கள். உங்களுக்கு இத்துடன் எட்டு அவகாசம் கொடுத்தாகிவிட்டது. எங்கள் தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் நீங்கள் ஏமாற்றும் பேர்வழி என்று தெரிகிறது. நீங்கள் உடனடியாக முழுப்பணத்தையும் கட்டாவிட்டால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.’
‘அம்மையே, பெரிய வார்த்தை சொல்லலாமா? ஏமாற்றுவது என்ற வார்த்தையை எழுத்துக்கூட்டக்கூட எனக்கு வல்லமை போதாது. நான் அப்படியான ஆளும் அல்ல. சின்ன வயதில் அம்மாவின் கோழிக்குஞ்சு ஒன்றை அவருக்கு தெரியாமல் திருடி விற்றது பற்றி யாரோ சொல்லியிருக்கிறார்கள். தேவ சங்கீதம் போல ஒலிக்கும் உங்கள் குரலில் இந்த வார்த்தைகள் வரலாமா? நான் இந்த மாதம் முழுக்காசையும் கட்டிவிடுகிறேன்.’
சரி, அப்படியே செய்யுங்கள். அடுத்த மாதம் எங்கள் துறையிலிருந்து ஒருவர் உங்களை அழைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
‘மெத்தச் சரி. அம்மையே, ஒரு விளக்கம் கூறவேண்டும்.’
‘சொல்லுங்கள்.’
‘ஒவ்வொரு மாதமும் இந்தக் கட்டணம் ஏறிக்கொண்டே வருகிறதே, அது ஏன்?’
‘நாங்கள் அனுப்பிய சுற்றறிக்கை 148.8 ஐ நீங்கள் படிக்கவில்லையா?’
‘இல்லை, அம்மையே.’
‘அதில் 48வது பக்கத்தை படிக்கவேண்டும். புவியீர்ப்பை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் மனைவி பயன்படுத்துகிறார். உங்கள் இரண்டு பிள்ளைகளும் பயன்படுத்துகிறார்கள். உங்கள் எடை மாதாமாதம் கூடுகிறதல்லவா, அதுதான் காரணம். உங்கள் எட்டு வயது மகனைக் கேட்டிருந்தால் அவன் பதில் சொல்லியிருப்பானே.’
‘உங்களுக்கு எப்படி என் மகனின் வயது எட்டு என்று தெரியும், இது பெரிய அநியாயமாக இருக்கிறதே.’
‘ஐயா, எங்களுக்கு எல்லாம் தெரியும். உங்கள் மகன் பிறந்தது அல்பெர்ட் மார்ட்டின் மருத்துவமனையில், அவனுடைய எடை பிறக்கும்போது 7 றாத்தல் 8 அவுன்ஸ் என்பதும் பதிவாகியிருக்கிறது. உங்கள் மனைவியின் சுற்றளவு அதிகமாகி வருகிறதே, அதைக் கவனித்தீர்களா?’
‘நீங்கள் எல்லைமீறிப் பேசுகிறீர்கள்?’
‘ஏன் கட்டணம் கூடுகிறது என்று கேட்டீர்கள், அதற்கு காரணம் கூறினேன். இந்த திட்டத்தால் பயன் பெற்றவர்கள் அதிகம். சிலர் தங்கள் எடையை கணிசமாகக் குறைத்துவிட்டார்களே.’
‘அம்மையே, எங்கள் எடை எப்படி உங்களுக்கு தெரியும்?’
‘நீங்கள் சுற்றறிக்கை 133.6 ஐ படித்திருக்கவேண்டும். உங்களுடைய இன்றைய எடை 174, கடந்த மாதம் அது 172 ஆக இருந்தது. உங்கள் வீட்டு மூலைகளில் பொருத்தியிருக்கும் மந்திரக் கண்கள் இந்த தகவல்களை எமக்கு அனுப்புகின்றன.’
‘அம்மையே, நாங்கள் இரண்டு வாரகாலம் இந்த நாட்டில் இல்லை. வெளிநாட்டுக்கு பயணம் போயிருந்தோம். அதற்கு கழிவு ஒன்றும் இல்லையா? நாங்கள் இந்த நாட்டு புவியீர்ப்பை பயன்படுத்தவில்லையே?’
‘ஐயா, இதையெல்லாம் எங்கள் துறை முன்கூட்டியே ஆழமாக சிந்தித்திருக்கிறது. உங்கள் சட்டத்தரணிமூலம் ஒரு சத்தியக்கடதாசி தயாரித்து அனுப்பிவிடுங்கள். இந்தத் தேதியிலிருந்து இந்த தேதிவரை நாங்கள் இந்த நாட்டு புவியீர்ப்பை பாவிக்கவில்லை. நாங்கள் பயணம் சென்ற தேசத்தில் அவர்களுக்கு சேரவேண்டிய புவியீர்ப்பு கட்டணத்தை செலுத்திவிட்டோம். இப்படி எழுதி அனுப்புங்கள். நாங்கள் அதற்கான கழிவை உங்கள் கணக்கில் சேர்த்துவிடுவோம்.’
‘நன்றி அம்மையே, நன்றி. உங்கள் அறிவுக்கூர்மை என் நெஞ்சைத் துளைத்தாலும் உங்கள் குரல் இனிமை என்னை திக்குமுக்காடவைக்கிறது. இன்னும் ஒரேயொரு கேள்வி கேட்க அனுமதிப்பீர்களா?’
‘சரி, கேளுங்கள்.’
‘என்னுடைய மாமியார் படுத்த படுக்கையாக இருக்கிறார். அவர் ஒரு கட்டிலில் தூங்குகிறார். அவருக்கு பக்கத்தில் ஒரு கிளாசில் அவர் பல் தூங்குகிறது. அவர் புவியீர்ப்பை பாவிப்பதே இல்லை. அதற்கு ஏதாவது சலுகை உண்டா?’
‘இப்படி ஒரு கேள்வி கேட்கிறீர்களே. நான் வெட்கப்படுகிறேன். உங்கள் மாமிக்கு புவியீர்ப்பு இல்லையென்று வையுங்கள். அவரால் கட்டிலில் படுத்திருக்கமுடியுமா? இப்பொழுது செவ்வாய் கிரகத்தை தாண்டியல்லவோ பறந்து போய்க்கொண்டிருப்பார்.’
‘மன்னியுங்கள். என்னுடைய மூளையை பிரகாசிக்க வைத்துவிட்டீர்கள். இன்றே புவியீர்ப்பு கட்டணத்தை கட்டிவிடுவதாக வாக்குறுதியளிக்கிறேன்.’
‘முதலில் செய்யுங்கள்.’

‘ஹலோ’
‘ஹலோ’
‘ஐயா, உங்கள் வாக்குறுதியும் செவ்வாய் கிரகத்தை தாண்டி பறந்து கொண்டிருக்கிறது. இறுதி எச்சரிக்கை தருவதற்காக வருந்துகிறேன். இன்னும் ஒரு வாரத்திற்குள் நீங்கள் நிலுவைக் கட்டணம் முழுவதையும் கட்டிவிடவேண்டும்.’
‘அம்மையே, இது என்ன இப்படி வெருட்டுகிறீர்கள். நான் என்ன வைத்துக்கொண்டு இல்லையென்கிறேனா? காற்று வரி கட்டினேன், வாயு கட்டணம் கட்டினேன், தண்ணீர் கட்டணம் கட்டினேன், மின்சாரக் கட்டணம் கட்டினேன்.’
‘அதைத்தான் நானும் கேட்கிறேன். எல்லாத் துறைகளுக்கும் கட்டுகிறீர்கள், புவியீர்ப்புக் கட்டணத்தை கட்டுவதற்கு மட்டும் தயக்கம் காட்டுகிறீர்கள்.’
‘அதன் காரணம் உங்களுக்கு தெரியும்தானே.’
‘இல்லை, தெரியாது. தயவுசெய்து என் அறிவைக் கூட்டுங்கள்.’
‘மின்சாரக் கட்டணம் கட்டாவிட்டால் இணைப்பை துண்டித்துவிடுவார்கள். தண்ணீர் கட்டணம் கட்டாவிட்டால் தண்ணீரை வெட்டிவிடுவார்கள். காற்று, தொலைபேசி, வாயு எல்லாத்தையும் வெட்டிவிடுவார்கள். புவியீர்ப்பு கட்டணம் கட்டாவிட்டால் அதை துண்டிப்பீர்களா? நியூட்டன் திரும்ப பிறந்து வந்தால்கூட அதைச் செய்யமுடியாதே.’
‘ஐயா, சுற்றறிக்கை வாசிக்கத் தெரியாத நீங்கள் இவ்வளவு சிந்திப்பீர்கள் என்றால் இந்த துறையை நடத்தும் விஞ்ஞானிகள் எவ்வளவு சிந்திப்பார்கள். சென்றவாரம் செய்தித்தாள் படித்தீர்களா?’
‘நீங்கள் உபாத்தினி பெண்போல கேள்விக்கு மேல் கேள்வி கேட்கிறீர்கள்.’
‘ஐயா, நீங்கள் சுற்றறிக்கைதான் படிப்பதில்லை, பேப்பர் என்ன பாவம் செய்தது, அதைப் படிக்கலாம் அல்லவா?’
‘அம்மையே, என் கனவில் துர்தேவதைகள் வந்து ஆட்டிப்படைக்கின்றன. நான் என்ன செய்ய?’
‘சரி, துர்தேவதைகள் போனபிறகு பேப்பரை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.’
‘அம்மையே, என் ஆவலைப் பெருக்கவேண்டாம். தாங்கமுடியவில்லை. பேப்பரில் என்ன செய்தி வந்தது, தயைகூர்ந்து செப்புங்கள்.’
‘செப்புகிறேன். ஒருவர் எட்டுமாதத்துக்கு புவியீர்ப்பு கட்டணம் கட்டாமல் உங்களைப்போல ஏமாற்றிக்கொண்டே வந்தார்.’
‘அப்படியா?’
‘அவருக்கு தண்டம் விதித்தோம், அவர் அதையும் கட்டவில்லை. ஆகவே புவியீர்ப்பை அவர் இனிமேல் பாவிக்கக்கூடாது என்று தீர்மானித்தோம்.
‘பிறகு என்ன நடந்தது?’
‘அவரை விண்வெளிக்கலத்தில் ஏற்றிச்சென்று புவியீர்ப்பு இல்லாத இடத்தில் இறக்கிவிட்டோம். அவர் ஒரு தடவை பூமியை சுற்றி வந்தார். அதற்கிடையில் மனது மாறி சம்மதித்துவிட்டார். திரும்பவும் அவரை பூமியில் கொண்டுவந்து இறக்கிவிட நேர்ந்தது.’
‘உண்மையாகவா!’
‘மனிதர் முழுக்காசையும் கட்டினார்; தண்டத்தையும் கட்டினார்; வட்டியையும் கட்டினார். ஆனால் ஒரு பிரச்சினை?’
‘அது என்ன?’
‘விண்வெளிக்கலத்தில் ஏற்றிச்சென்ற பயணச் செலவு, விண்வெளி உடையின் விலை இன்ன பிற செலவுகளை மாதாமாதம் கட்டுகிறார். 2196 மாதங்களில் கட்டிமுடித்துவிடுவார்.’
‘2196 மாதங்களா?’
‘ஓமோம், கட்டிமுடிக்க 183 வருடங்கள் ஆகும்.’
‘அவ்வளவு வருடம் வாழ்வாரா?’
‘அது தெரியாது. அவருடைய பிள்ளைகள் நிலுவைக் கணக்குக்கு உத்திரவாதம் கொடுத்திருக்கிறார்கள்.’
‘அம்மையே, நான் இன்றே உங்கள் கட்டணத்தை ஒருசதம் மிச்சம் வைக்காமல் கட்டிவிடுகிறேன்.’

‘ஹலோ.’
‘ஹலோ.’
‘உங்களைப் பற்றி புவியீர்ப்புத்துறையினர் சிலாகித்து சொன்னார்கள். நீங்கள் கட்டணத்தை உடனுக்குடன் கட்டிவிடுவதாக புகழ்கிறார்கள்.’
‘நன்றி. நீங்கள் யார் பேசுவது? தொண்டை அடைத்த வாத்தின் குரல்போல இருக்கிறதே!’
‘நான்தான் பூமிப்பயணத்துறையில் இருந்து பேசுகிறேன்.’
‘இது என்ன புதுத்துறையா?’
‘என்ன ஐயா எங்களுடைய கடிதம், சுற்றறிக்கை ஒன்றும் கிடைக்கவில்லையா? மூன்று மாதக் கட்டணம் நிலுவையில் இருக்கிறதே.’
‘என்ன கட்டணம்?’
‘பூமிப் பயணக் கட்டணம். அதாவது பூமி சூரியனைச் சுற்றி வருவது உங்களுக்கு தெரியும். ஒரு முறை பூமி சூரியனைச் சுற்றும்போது நீங்கள் 149,600,000 மைல்களைக் கடக்கிறீர்கள். நினைத்துப் பாருங்கள், இத்தனை மைல்கள் நீங்கள் இலவசமாகப் பயணம் செய்கிறீர்கள். ஒரு சதம் செலவு இல்லாமல். இனிமேல் இது இலவசம் கிடையாது. பயணத்துக்கு கட்டணம் கட்டவேண்டும்.’
‘அப்படியா. அருமையான விசயம். இனிமேல் நாள் நாளாக எண்ணாமல் மைல் மைலாக எண்ணலாம். நினைத்துப் பார்க்கும்போதே புல்லரிக்கிறது.’
‘முதலில் மூன்று மாதக் கட்டணத்தை அனுப்பிவிடுங்கள். பிறகு புல்லரியுங்கள். நீங்கள் பயணம் செய்த தூரம் 37,400,000 மைல்கள்.’
‘அதற்கென்ன. பாட்டுப் பாடிக்கொண்டு ஒரு காசோலை எழுதி ஒப்பம் வைத்து அனுப்பிவிடுகிறேன். ஒரு கேள்வி அம்மையே. இதிலே, விமானத்தில் இருப்பதுபோல முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு என்று இருக்கிறதா?’
‘இல்லை. இல்லவே இல்லை. எல்லோரும் சரிசமம்தான்.’
‘மிச்சம் நல்லது. சமத்துவம் என்றால் எனக்கு பிடிக்கும். என்னுடைய அம்மாவுக்கும் பிடிக்கும்.’
‘உங்களுக்கு ஒரு சலுகையும் இருக்கிறது.’
‘அப்படியா, சொல்லுங்கள்.’
‘லீப் வருடத்தில் ஒரு நாள் அதிகம் அல்லவா? ஆனால் நாங்கள் கட்டணத்தை கூட்டப்போவதில்லை. லீப் வருடத்திலும் அதே கட்டணம்தான்.’
‘நம்பவே முடியவில்லை. இந்த நற்செய்தி கொடுத்த உங்களுக்கு ஒரு முத்துமாலை பரிசளித்தாலும் தகும். அல்லாவிடில் புள்ளி விழாத சிவந்த அப்பிள் கொடுத்தாலும் தகும். கேட்கும்போதே மனம் புளகிக்கிறது. அம்மையே, பணக்காரர்களுக்கு நல்ல வசதியிருக்கிறது. அவர்கள் அதிக கட்டணம் கட்டலாம் அல்லவா?’
‘பாருங்கள், உங்கள் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்கிறது. உங்களைப்போல ஆட்கள்தான் பூமிக்கு தேவை. நீங்கள் விமானத்தில் போகும்போது அளவுக்கு அதிகமான பொதி கொண்டுபோனால் மிகை கட்டணம் கட்டவேண்டும். அப்படித்தான் இங்கேயும்.’
‘உதாரணமாக?’
‘ஒரு பணக்காரரிடம் நாலு வீடுகள், ஐந்து கார்கள், அப்படி ஏராளமான பொருள்கள் இருந்தால் அவர் மிகை கட்டணம் கட்டவேண்டும். சாதாரண குடும்பத்தவர்கள் மிகை கட்டணம் கட்டத் தேவையில்லை. உங்களுக்கு அந்த அபாயம் கிடையாது.’
‘அம்மையே, உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. இன்றே என் பயணக் கட்டணத்தை அனுப்பிவிடுவேன்.’
‘நல்லது. அது என்ன சத்தம்?’
‘ஒன்றுமில்லை. பூமி பிரண்டு மறுபக்கம் திரும்பும் சத்தம்.’
‘சரி, நீங்கள் என்னிடம் பத்து நிமிடம் பேசியபோது 11000 மைல்கள் பிரயாணம் செய்துவிட்டீர்கள். அதற்கும் சேர்த்து பணத்தை கட்டிவிடுங்கள்.’
‘உடனே, உடனே செய்வேன். இதனிலும் பார்க்க மகிழ்ச்சி தரும் விசயம் எனக்கு வேறு என்ன இருக்கிறது? இன்னொன்று.’
‘என்ன?’
‘நான் ஒரு சுற்றுலா போவதற்கு திட்டமிட்டிருந்தேன். இந்தப் பெரிய பிரபஞ்ச பயணம் போகும்போது சின்னஞ்சிறு சுற்றுலா என்ன கேடு என்று அதை நிறுத்திவிட்டேன். அந்தக் காசை மிச்சம் பிடித்து பூமிப் பயணக் கட்டணத்தை உடனேயே கட்டிவிடுகிறேன்.’
‘பூமிப் பற்றாளர் என்றால் நீங்கள்தான்.’
‘அம்மையே, ஓர் ஆலோசனை. நட்சத்திரங்கள் சும்மா சும்மா மினுங்கிக்கொண்டு கிடக்கின்றன. அதற்கு ஒருவரும் வரி கட்டுவதில்லை. சந்திரன் வளர்வதும் தேய்வதுமாய் இருக்கிறான். அவனையும் வளைத்துப் போடவேண்டும். ஒருவருமே கவனிப்பதில்லை.’
‘அருமையான யோசனை. கவனிக்கிறோம். கவனிக்கிறோம்.’

END

Series Navigation

அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்