அடகுக் கடை

This entry is part [part not set] of 36 in the series 20080327_Issue

கே.பாலமுருகன்


1
மதியப் பொழுதில்- அடகுக் கடை
கொஞ்சம் அவமானம், கொஞ்சம் கவலைகள், எதிலுமே நிரப்ப இயலாத மனித முகங்கள். . இப்படிப் பல மாதிரியான உணர்வுகள் உதிர்ந்து கிடக்கின்றன அந்தக் கடையில்.
கொஞ்சம் எக்கிதான் அதைக் கொடுக்க வேண்டும். உயரத்தில் அமர்ந்து கொண்டு அதை வாங்கி நிறுத்துப் பார்ப்பது ஒரு சீனன். பழக்கமாகிப் போனவன்தான். அம்மாவை அழைத்துக் கொண்டு போயிருந்த போது அடகுக் கடையில் கூட்டம் அதிகமாகத்தான் இருந்தன. தீபாவளியோ அல்லது முக்கியமான திருவிழா காலங்களோ நெருங்கிவிட்டால் அதிகமான தமிழர்களை இந்த அடகுக் கடையில் வாடிக்கையாகப் பார்க்கலாம். அடகு வைப்பது பலருக்கு வழக்கமாகி போயிருந்ததில் ஆச்சரியமில்லை.
அடகுக் கடை வாசலில் ஒரு வயதான பாட்டி, கொண்டு வந்திருந்த ஒரு துணிப்பையில் கையை விட்டு துழாவிக் கொண்டே இருந்தார். பாட்டியின் நெத்தியில் அகலமான குங்குமப் பொட்டு. வெயில் எங்கும் பரவி மனித முகங்களில் இறங்கித் திரிந்து கொண்டிருந்தது. அந்தப் பாட்டியின் நெத்தியிலிருந்து வழிந்த வியர்வை நெஞ்சுவரை நனைத்திருந்தது.
அம்மா மோட்டாரிலிருந்து இறங்கி சோகத்துடன் அடகுக் கடையின் வாயிலை நோக்கி நடந்து கொண்டிருந்தார். உள்ளே நுழைந்தவுடன் பச்சை வர்ணம் பூசப்பட்ட பலகையில் சாய்ந்து கொண்டு அதைக் கொடுத்து கொண்டிருக்கும் அம்மாவின் சுபாவத்தில் வழக்கமாகிப் போன ஒரு முதிர்ச்சி. அந்தச் சீனனும் பல நாள் பழகிய நண்பனைப் போல உபசரிக்கிறான். என்ன பேசியிருப்பான்? அம்மா என்ன கேட்டிருப்பார்?
“இனி தவுக்கே. . அனாக் புன்யா சின்சின். லு பகி 200 ரிங்கிட் சுக்கோப்லா”
(இந்தாங்க. . மகளுடைய மோதிரம். . ஒரு 200 வெள்ளி கொடுத்தா போதும்)
தங்கை மணிமேகலையின் மோதிரத்தை நீட்டிக் கொண்டுதான் அம்மா அங்கே நின்றிருந்தார். 200 வெள்ளி போதும் என்று விலை பேசிக் கொண்டிருந்தார் போலும். வாசலில் நின்று கொண்டிருந்த அந்தப் பாட்டி இன்னமும் கைகளை அந்தப் பையிலிருந்து எடுக்கவில்லை. முகத்தில் ஒருவகையான சுழிப்பு. கறுத்துப் போன முகம். முனகியவாறு தொடர்ந்து எதையோ தேடிக் கொண்டே வெயிலில் நின்று கொண்டிருந்தார்.
அம்மா இதே மோதிரத்தை இதற்கு முன் இரண்டு தடவை அடகு வைத்திருந்தார். அப்பாவின் சம்பளம் கிடைத்ததும் அதை மீட்டுக் கொள்வதுண்டு. மிகவும் பழக்கமாகி போன ஒரு வியாபாரம்தான் அல்லது ஒப்பந்தமாக கூட இருக்கலாம். போன வருடம் தீபாவளியின் போது துணி எடுப்பதற்காக அம்மா சங்கிலியை அடகு வைக்க இங்கு வந்ததுதான் கடைசி. அதன் பிறகு இப்பொழுதுதான் வந்திருக்கிறார்.

2
இரண்டு நாட்களுக்கு முன்
“மா. . எனக்கு ஒடனே காசு வேணும், 150 வெள்ளியாது பாத்து கொடு. சும்மா சும்மாவா கேட்டுகிட்டு இருக்கேன். . . ”
“அவசரமானா எப்படிடா? என்னாத்துக்கு ஒனக்கு காசு? அதும் 150 வெள்ளி”
“ கேளாங்குல எல்லாம் சுத்தி பாக்க போறாங்க. எங்க லைன்ல எல்லாரும் போறாங்க. ஒரு 150 வெள்ளியாது செலவுக்குத் தேவப்படும். . எப்படியாது பாத்து கொடுமா”
“இப்பனா எங்கடா போறது அவ்ள காசுக்கு? மரத்துலயா மொழைக்குது?”
“மா. . என்னாமா.. கத சொல்லிகிட்டு இருக்க. மாசம் முடிஞ்சி சம்பளம் போட்டோன கொடுத்துறேன்”
“இப்படிதான்டா சொல்லுவ, வீட்டு செலவுக்கே காசு தர மாட்டற. . நீ எங்க. .” முதலில் அம்மா அப்படித்தான் சலனப்பட்டுக் கொண்டார். பிறகு, தங்கையிடமிருந்து மோதிரத்தை இரண்டாவது முறையாக பறித்துக் கொள்ள தீர்மானித்துவிடார். அவளுக்குப் பல காரணங்களும் சமாதானங்களும் சொல்லித்தான் ஆக வேண்டும்.
“மா. . யேன்மா இப்பிடி மோதரம் மோதரம்னு எங்கிட்ட இருந்து புடுங்கிகிட்டே இருக்க? கொடுக்க முடியாது போ. . இது அக்கா போட்டது”
“நல்ல புள்ள இல்ல, என் செல்லம்தானே. . ஒர் அங்கிள் மோதரம் வேணும்னு கேட்டாரு. . பாவமா அவரு. . கொஞ்ச நாள்ளே கொடுத்துருவாரு. அவரோட மகளுக்குப் பொறந்த நாளாம், அதான் கேட்கறாருமா”
“பொறந்த நாளா? அப்பனா இந்த வருசமாது எனக்குப் பொறந்த நாளு செஞ்சி கேக் வெட்டுவனு சொல்லு அப்பத்தான் கொடுப்பேன்”
“சரிமா, அண்ணன் கிட்ட சொல்லி இந்தத் தடவ ஒனக்கு ஐஸ்கிரிம் கேக்கு வாங்கியாற சொல்லுறேன். . ஒகேவா? நல்ல புள்ள”
அவளிடமிருந்து இந்த மாதிரி பொய்களைச் சொல்லி சூழ்நிலையைச் சரிகட்ட பறித்துக் கொள்வதற்கு அம்மாவிடம் கொஞ்சம் வார்த்தைகள் எஞ்சியிருக்கத்தான் செய்தது. ஒரு வெள்ளைக் காகிதத்தில் சுற்றி அந்த மோதிரத்தை அம்மா எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
“எதுமே தங்க மாட்டுது. . . தர்த்திரியம் பிடிச்ச மாதிரி இந்தப் பாசா கட பக்கம்தான் போய் தொலையுறோம்” மோட்டாரின் பின் இருக்கையில் அமர்ந்து கொண்ட அம்மாவின் புலம்பல் அடங்கவில்லைதான்.
3
மதியப் பொழுதில்- அடகுக் கடை
அவசரமாக சில முகங்கள். கையில் பணங்களை வைத்து மிகவும் பாதுகாப்புடன் எண்ணிக் கொண்டே நகர்ந்து கொண்டிருக்கும் சிலர். நகை அடகு பத்திரங்களைச் சுருட்டிக் கொண்டு நிற்கும் சிலர். எல்லாம் பரபரப்புக்கு மத்தியில் துணிப்பையிலிருந்து அந்தப் பாட்டி ஒரு கைக்குட்டையை வெளியே எடுக்கிறார். சுற்றிலும் பார்த்துக் கொண்டார். அந்தக் கைக்குட்டையிலிருந்து ஒரு தங்கச் சங்கிலி, இப்பொழுது பாட்டியின் கறுத்த கைகளில் அதை இறுக்கமாக மூடிக் கொள்கிறார்.
காற்று கொஞ்சம் பலமாக வீசத் தொடங்கியது. பாட்டியின் சேலை காற்றில் அசைந்து கொண்டிருந்தது. ஆள் கூட்டமாக இருந்ததால், அந்தப் பாட்டி பயந்து கொண்டு அடகுக் கடையின் வாசலிலேயே அப்பாவி போன்ற முகப் பாவத்துடன் நின்றிருந்தார். ஏதோ முணுமுணுத்துக் கொண்டுதான் இருந்தார். வெகுளித்தனமான பார்வை.
அடகுக் கடையின் கண்ணாடி கதவுகளைத் திறந்து கொண்டு அம்மா வெளியே வந்தார். கையில் 150 வெள்ளியோ அல்லது 200 வெள்ளியோ கண்டிப்பாக கிடைத்திருக்கும்.
தங்கையின் உடலில் மீதம் இருந்த அந்த மோதிரமும் இப்பொழுது அடகுக் கடையின் வயிற்றில். எந்த உறுத்தலும் இல்லாமல்தான் மோட்டாரில் அமர்ந்திருந்தேன். வீட்டிற்கும் வேலைக்கும் ஒர் இயந்திரத்தைப் போல திரிந்து கொண்டிருக்கும் எனக்கு இந்த மாதிரி சுற்றுலா கூட மகத்தான ஆறுதல்தான். அதற்காக எதையும் செய்துவிடலாம் என்று ஓர் உணர்வுதான் போல.
“ நகலாம் ஒடம்புக்கு முக்கியமா? சும்மா. . நக நகனு போட்டுகிட்டு. . தேவப்படறப்ப அத போய் வச்சு காசு பண்ணிக்கனும். . அதுக்குதான் நக” என்னுடைய தேவைகளுக்குச் சில தத்துவங்களும் கைவசம் இருந்ததுதான். தங்கையை அம்மா சமாதானப்படுத்திவிடுவார், அம்மாவைச் சமாதானப்படுத்துவது அவ்வளவு எளிமையான காரியமல்ல. ஆத்திரமாக பேசி அலட்டிக் கொள்வேன். அம்மாவும் எல்லா நெருக்கடிகளையும் சகித்துக் கொள்வார் அடகுக் கடையின் வாசலுக்குள் நகர்வதும் உள்ளேயிருந்து வெளியேறும் போது, கையில் சுழ்நிலையின் வாயில் திணித்துவிட்ட நகைக்கான பணங்களுடன் அம்மா தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறார்.
இந்த அடகுக் கடையின் கண்ணாடி கதவு முதல் பலகைச்சுவர், அந்தச் சீனனின் சிரிப்பு, அங்குள்ள இருக்கை வரை அனைத்துமே எங்களைப் போன்றவர்களுக்கு நெருக்கமான பரிச்சயம்தானே. அம்மா என் மோட்டாருக்கு அருகில் வந்து நின்றார். தலைக்கவசத்தை எடுத்து நீட்டினேன். அதைக் கையில் வாங்கி கொண்டப் பின், 150 வெள்ளியை என் முன் பாக்கேட்டில் திணித்துவிட்டு ஏறி அமர்ந்து கொண்டார்.
“ நேரா முத்தையா கடைக்கு போ.. வீட்டுக்கு கொஞ்சம் ஜாமான்லாம் வாங்கனும்டா”
அம்மா இடுப்பிலிருந்த ஒரு சின்ன பணப்பையில் 50 வெள்ளியைப் பத்திரப்படுத்திக் கொண்டிருந்தார். அந்தப் பாட்டி இன்னமும் வாசலில்தான் நின்று கொண்டிருந்தார். பாட்டியின் அருகில் இப்பொழுது கருப்பு சட்டை அணிந்திருந்த ஆடவன் ஒருவன் வந்து நின்றான். நான் மோட்டாரை நிறுத்தி வைத்திருந்த இடத்திலிருந்து வலது பக்கத்தில் சாலையைப் பார்த்தவாரு இன்னொரு மோட்டார், அதில் மற்றுமொரு ஆடவன் தயார் நிலையில் காத்துக் கொண்டிருந்தான். தற்செயலாகத்தான் இதைக் கவனித்தேன்.
சடாரென்று பாட்டியின் கையிலிருந்த அந்தத் தங்கச் சங்கிலியைப் பிடுங்கி கொண்டு அவன் ஓடிக் கொண்டிருக்கிறான். பாட்டி தள்ளாடிக் கொண்டே அடகுக் கடையின் வாசலில் சரிந்து விழுந்து கொண்டிருக்கிறார். சுழ்நிலையைச் சுதாரித்துக் கொள்வதற்குள் அந்த மோட்டார் பரபரப்பான சாலையில் மறைந்து கொண்டிருக்கிறது.
“அட சண்டாள பாவிங்களா. . . நாசமா போவ.. மாரியாத்தா கொண்டு போயிடுவாடா உங்கள. . யேன் பேர பையன சுக்குல்ல சேக்கறதுக்கு இந்தச் சங்கிலிய வச்சாதான்டா காசு.. பாவிங்களா. … நான் என்னா பண்ணுவேன்.. . ஐயோ! ஐயோ!”
சிறுத்துப் போன மார்பகத்தைக் கையால் ஓங்கி அடித்துக் கொண்டார். வாயெல்லாம் வானீர் ஒழுகி, வார்த்தைகள் தடுமாறின. பாட்டியின் ஜப்பான் சிலிப்பர் களைந்து கிடக்க, சீலை விலகி, முட்டிக்கால் தெரிந்தது. பல தடவை இந்தச் சங்கிலிக்காகப் பாட்டி அடகுக் கடைக்கும் வீட்டிற்கும் நடந்தே தேய்ந்து போயிருக்க வேண்டும்.
இப்பொழுது அம்மா, இடுப்பிலிருந்த அந்த 50 வெள்ளியைத் தடவிப் பார்த்துக் கொண்டார். யாரோ ஒரு கிழவன், கையில் ஒரு மஞ்சள் பையுடன் அடகுக் கடையின் வாசலில் வந்து நின்று கொண்டிருந்தார். பாட்டி சாலையிலிருந்து எழுந்து அழுந்து கொண்டே உட்காருகிறார்.
“வயித்துல அடிச்சிட்டு போயிட்டிங்களடா. . பாவிங்களா. . மாரியாத்தா கூலி கொடுப்பாடா”
அம்மாவைப் பார்க்க முடியவில்லை. ஏதும் பேசக்கூட முடியவில்லை. பயத்தில் என் முதுகில் கையை வைத்து அழுத்திக் கொண்டிருந்த அம்மாவை என்னால் உண்மையிலேயே பார்க்க முடியவில்லை. அங்கிருந்து அவசரமாக எல்லலவற்றையும் கடந்துவிட வேண்டும் என்பது போல இருந்தது. அந்தப் பாட்டியின் அழுகை சத்தம் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது. 150 வெள்ளியின் பாரம் தாளாமல் மனம் கனத்தது. இப்பொழுது அந்த மஞ்சள் பையைப் பிடித்திருந்த கிழவன் பாட்டியைத் தூக்கி நிறுத்துகிறார். அடகுக் கடையில் நம்மவர்களின் கூட்டம்தான் அதிகமாகத் தெரிந்தது.
“சீக்கிரம் போடா. . ஜாமான் வாங்கனும்”
அம்மா என் தோளைத் தட்டினாள். நிமிர்ந்து உட்கார மனமில்லாமல் வெறுமனே மோட்டாரில் அமர்ந்து கொண்டு அடகுக் கடையைக் கடந்து கொண்டிருந்தேன்.


கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்