சம்பள நாள்

This entry is part [part not set] of 41 in the series 20080320_Issue

கே.பாலமுருகன்



“தற்பொழுதுள்ள விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கோரிக்கை மறுபரிசீலனைச் செய்யப்படும் என்று நம்பிக்கைத் தெரிவிக்கப்பட்டுள்ளது. . . . .
தொழிலாளர் தினத்தையொட்டி அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வை பிரதமர் வரும் மே 21ஆம் திகதி அறிவிக்கலாம் என நம்பப்படுகிறது. . . . “
வானொலியை அடைத்துவிட்டு அந்த நெகிழி பைகளில் நிறைந்துவிட்டிருந்த இரும்பு நட்டுகளைப் பலமாகக் குலுக்கிவிட்டு, அதைத் தூக்கி வாசல் கதவின் பின் புறத்தில் நேர்த்தியாக அடுக்கி வைத்தார் அப்பா. நட்டுகள் ஒழுங்கை விரும்பாத குழந்தைகள் போல அங்குமிங்கும் சிதறிக் கலைந்து போயிருந்தன. வேட்டியை முட்டிவரை இழுத்துவிட்டுக் கொண்டு கால்களை நீட்டமாக வசதிக்கிணங்கி வைத்துக் கொண்டார். தோல் சுருக்கங்களுடன் கால்களிரண்டும் மெலிந்து போய் கிடந்தன. இரண்டு மணி நேரத்துக்குக் கூடவே அப்பா அந்த இடத்திலேயே அமர்ந்து கொண்டு அந்த நட்டுகளின் தூவாரத்தில் வட்டமான பைப்பைத் திணித்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது கால்கள் மறுத்துப் போய் கொண்டேயிருக்கும்.இப்படித்தான் கால்களை நீட்டிக் கொள்வதும் உதறிக் கொள்வதுமாக உடலின் இயலாமையைச் சரிபடுத்திக் கொள்வார்.
அந்த இரும்பு நட்டுகளின் துவாரம் வலிந்து வந்து பிளாஸ்டிக் பைப்பை நுழைப்பதற்கு மெல்லிய சிரமத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். துவாரத்தின் இடுக்குகளில் கை விரலை அழுத்திக் கொண்டே பைப்பை 66 வயதான உடல் பலத்தைக் கொண்டு முக்கி முனகிக் கொண்டு எப்படியோ நுழைத்துவிடுவார். ஒரு நெகிழிப் பையில் குறைந்தது 100 இரும்பு நட்டுகள் இருக்கும். அந்த 100 நட்டுகளின் துவாரங்களிலும் கறுப்புப் பைப்புகள் ஏறி அமர்ந்து கொண்ட பிறகு, அப்பாவின் கைகள் வடுவுடன் இலேசான வலியால் மற்றொரு விரல்களுடன் சொகுசுக்காக உரசிக் கொண்டிருக்கும். பலமாகக் கை விரல்களைத் தேய்த்துக் கொள்வார்.
“யம்மா, சீதா! அந்த எச்சக் கொவளய அங்கயே வச்சிட்டு வந்துட்டன் பாரு, எடுத்து வந்துருமா’”
“நீங்க யேன் அத அங்க போய் வச்சிட்டு வந்து என்ன எடுத்து வரச் சொல்லி இம்ச பண்றீங்க? இந்த மனுசனோட. . .அதான் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தாலே கால் கைளாம் வலி எடுத்துகுதே பிறகு எதுக்கு இந்த வேண்டாத வேல, இவரு இத செஞ்சுதான் இந்தக் குடும்பமே ஓடுது பாரு”
எதையும் பொருட்படுத்தாமல் அப்பா தொடர்ந்து அந்த நட்டுகளில் பைப்பைச் சொருகிக் கொண்டே இருப்பார். அவருக்குக் கை வலிகளினாலோ கால் மறுத்துப் போவதினாலோ அதைத் தவிர்ப்பதற்காக ஒரே இடத்தில் சுருங்கியப் பிணம் போல அடைந்து கிடப்பதில் விருப்பமில்லைதான் போல. பக்கத்தில் வைத்திருந்த துண்டை உதறிவிட்டு, முகத்தை அதில் துடைத்துக் கொள்வார். கண்கள் உயிரிலிழந்த ஓரு சவத்தைப் போல வீடு முழுவதையும் சுற்றி பார்த்துவிட்டு, நட்டுகளின் தூவாரத்தில் வந்து குவிந்துக் கொள்ளும் அதையே வெறிக்கப் பார்க்கத் தொடங்கிடுவார்.

1
1960களில். . . .
“டேய், சங்கரு! ஆபிஸ்ல மணியடிச்சிட்டானுங்கடா, சம்பளம் தெரியும்தானே?”
“அதான் காலைல பெரட்டுக்குப் போகும் போதே மண்டரு சொல்லிட்டாருடா, என்னா கெடைக்க போது மிஞ்சி மிஞ்சி போனா, அதான் பிஞ்சாம்ல பாதிய வாங்கியாச்சே. . .”
“இந்தத் தடவதான் கொஞ்சம் சீக்கிரமே போட்டுடானுங்க. . . செக் ரோல் பல்ல இழிக்கும் போல, எங்க தேற போது”
“போன வாரமே செக் ரோல் முடிக்கலனு கிராணி சொல்லிகிட்டு இருந்தாரு, நம்ப ஆளுங்களுங்க்கு எங்க இந்தத் தடவ, 10-12 கெளன் பாலுக்குப் பதிலா 4 கெளன்தான் வருது”
“5ஆம் நம்பரு தீம்பார்ல பாதி மரம் கொள குத்துதான், எங்க பாலு இருக்கு, எல்லாம் கெழ மரம்டே, அடுத்த வாரம் அந்த மரத்துலாம் வெட்டி டவுன் பலக கேளாங்குக்கு அனுப்ப போறானுங்க போல, அதுக்கப்பறம்தான் கொஞ்சம் பாக்க முடியும்”
“அந்த அரை டிகிரி வாங்கன பையனுங்களுக்கலாம் சம்பளம் இருக்காது போல?”
“அதான் அல்லூர் தண்ணிய எடுத்து நைசா கலந்துகிட்டு போனா? என்னோட கொஞ்ச பால்லே எங்கேந்து தண்ணிய கலக்குறது, அதான் தண்ணீ மாதிரிதானே வருது, எல்லா தலையெழுத்துடா. . நடையா நடந்து போய் பால் கொட்டாயில பால நிறுத்துகிட்டுப் போய் மாசம் முடிஞ்சா என்னா கெடைக்குது? இதுல அப்பப்ப மழ வந்த திட்டி போட்டுகிட்டு வீட்ல தூங்கனா?”
அப்பாவும் அவருடைய நண்பரும் சம்பள சூட்சமங்களை விவாதித்துக் கொண்டே 3ஆம் நம்பர் லயத்திலிருந்து கிராணியின் பங்களாவின் எதிர்புறத்தில் இருக்கும் அலுவலகத்திற்கு நடந்தே போய்விட்டனர். அப்பொழுதெல்லாம் தொழிலாளர்களின் சம்பளப் பணமெல்லாம் எலிகப்டர் மூலம் திடலில் வந்து சாக்லேட் வர்ணப் பைகளில் கட்டி இறக்குவார்கள். பலத்த பாதுகாப்புடன்தான் அந்தப் பணங்கள் அலுவலகத்திற்குக் கொண்டு வரப்படும்.
அலுவலகத்தின் முன் வாசல் கதவோரத்தில் ஒரு மேசையைப் போட்டு மேனஜர் ராமதாஸ அமர்ந்திருப்பார், பக்கத்தில் செக் ரோல் புத்தகத்துடன் மண்டரு நின்று கொண்டு ஒவ்வொருவரின் பெயரையும் அழைத்துக் கொண்டிருக்க, சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் கையெழுத்துவிட்டுப் பணத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டியதுதான். 4 5 மண்டர்மார்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்குத் தகுந்த மாதிரி அங்கு வந்திருப்பார்கள்.
“மண்டரு, அந்த ஜி வொன் ஆளுங்க பேரலாம் கூப்டுயா, அப்பறம் சுத்து கோட்டு மரம் ஆளுங்களயும் கூப்டு” ஜி ஓன் தொழிலாளர்களின் பால் தயிர் மாதிரி திக்காக இருக்கும். சுத்து கோட்டு மரத்துக்காரர்களுக்குப் பால் அதிகமாக கிடைக்கும். இவர்களின் மரத்தில்தான் பால் அதிகமாக வரும், சம்பளமும் அதிகமாகவே அவர்களின் மடியைக் கனத்திருக்கும்.
“53 ஆம் நம்பரு ஆளுங்களாம் இப்ப கூப்டுவேன், சங்கரு. . 120. .” அப்பாவுடைய சம்பளம் 120 வெள்ளிதான். ஏற்கனவே 70 வெள்ளி பிஞ்சாம் பண்ணியிருப்பார், மற்றும் 4 வெள்ளி யூனியனுக்குச் சந்தாவாகப் போய்விடும். 53 ஆம் நம்பர் தீம்பாரில் பாலெல்லாம் தண்ணீர் மாதிரிதான் வரும் என்பார்கள். கிழட்டு மரங்களுடன் அப்பா எவ்வளவோ போராடிப் பார்த்துவிட்டார்.
“அல்லூர் வெட்டுப் போடரனுவுங்களுக்குலாம் இப்படிதாண்டா, மிஞ்சி போனா இவ்ளதான், நம்ப என்னா பாலுக்கு ஆசப்பட்டு பலக கத்தியயா போட்டு பால எடுக்கறம், எல்லாம் தல விதிடா” அப்பா பணத்தை வாங்கி கொண்டு வீடு திரும்பும்வரை அவருடைய குறைப்பட்டுக் கொள்ளும் சுபாவம் அடங்காமல் லயத்துப் பாதைதோறும் பின் தொடரும் நிழலைப் போல நடந்து கொண்டிருக்கும்.
வீட்டை அடைந்தவுடன், முன் வாசல் கதவில் காலி டின்னுடன் அம்மா நிற்பதைக் கண்டவுடன், அதை வாங்கிக் கொண்டு அப்படியே சீன அப்போய் கடைக்கு அரிசிக்காக நடக்கத் தொடங்கிடுவார், சற்றும் குறைய விரும்பாத புலம்பலுடன். பால் மாவு, காய்கறிகள், மண்ணெண்ணை, இறுதியாக 50 காசுக்கு ஒரு குவளைக் கல்லு. வீடு வந்து சேரும் போது முன் பாக்கேட்டில் 40 வெள்ளி மட்டும்தான் கசங்கி போய் கிடக்கும்.
“அத எடுத்துட்டு இங்க வாயேன்”
“எதுங்க?”
“வெளக்கெண்ணடி, இந்தா இந்த தோள்ல தடவு, வீங்கி போச்சு போல” காண்டாவில் பாலைச் சுமந்தே அப்பாவின் தோள் பட்டைகளில் தழும்புகள் சோகமாக அம்மாவைப் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும். பிராஞ்சாவில் அமர்ந்து கொண்ட அப்பாவின் தோள்களை விளக்கெண்ணையால் அம்மா தேய்த்துக் கொண்டிருப்பார். அசந்து அந்த வலியிலேயே அவர் தூங்கும் போது, மறுநாள் பெரட்டுக்குப் பேர் கொடுக்க போக இன்னும் 6 மணி நேரம்தான் எஞ்சியிருக்கும்.
என்றாவது மண்டரு அப்பாவை வேறு மரத்திற்கு அனுப்பாமலா போய்விடுவார் என்று அப்பா அதிகமாகவே நம்பிக்கையில் இருந்த காலக்கட்டத்திலெல்லாம் அப்பாவின் சம்பளம் 120 வெள்ளிதான்.
2
1980களில். . .
நாங்கள் இருந்த தோட்டத்திலிருந்து 4 மைல் தள்ளி 8ஆம் நம்பர் தீம்பாரையெல்லலம் அழித்துவிட்டு அங்கு ஒரு பலகை தொழிற்சாலை கட்டினார்கள். இரண்டே ஆண்டுகளில் அந்தத் தொழிற்சாலை கட்டுமானமும் உற்பத்தி வேலைகளும் தொடங்கிவிட்டன. நல்ல தரமான மனித வளத்திற்கு அந்தத் தொழிற்சாலை ஆட்களை வலைவிரித்து அலசிக் கொண்டிருக்கும் போதுதான், அதிகமான சம்பளத்திற்காக ஆசைப்பட்டுக் கொண்டு அப்பா அங்குப் போய் இணைந்து கொண்டார்.
காலை 8 முதல் 5 மணிவரை வேலை செய்ய வேண்டும். அமெரிக்காவிலும் உலகில் பிறப்பகுதியிலும் நடத்தப்பட்ட ரத்தம் சிந்திய போராட்டங்களின் விளைவாகத்தான் உலகெங்கும் 8 மணி நேர வேலை என்ற கோட்பாடு தொழிலாளிக்காக அமலுக்கு வந்தது. இருந்த போதும் அப்பா சம்பளம் அதிகம் கிடைத்தாக வேண்டும் என்ற பிடிவாதத்தில் கூடுதலாக வேலை செய்து கொடுத்துவிட்டுதான் வருவார்.
ரப்பர் மரத்தின் பாலை நம்பி வாழ்ந்த வாழ்க்கை மறைந்து பலகை தொழிற்சாலையின் பலகை அறைக்கும் இயந்திரத்தின் மீது ஏறிக்கொண்டு சம்பளச் சவாரியடிப்பது போல அப்பா தினமும் அதிலேயே குறிக்கோளாக இருந்தார். ஒவ்வொரு மாதமும் அவருடைய சம்பளம் பத்து பத்து வெள்ளியாக உயர்ந்து கொண்டே வந்தது.
“ பாஞ்சாக்கா, இன்னிக்கு லைன ஓட்டுவமா? வேல முடிஞ்சி ஒரு ஆறு மணிக்கு ஆரம்பிச்சி 10 மணிவரைக்கும் ஓட்டுவம்கா, 4 மணி நேரம் 12 வெள்ளி எக்ஸட்ரா கெடைக்கும்லே”
“எனக்கு வேற வெல இருக்குபா, வீட்டுக்குப் போகனும், நாளைக்குப் போடலாமே ஓட்டி?”
“அட நீங்க ஒன்னு, நாளைக்கும் கண்டிப்பா போடலாம், அது பெரச்சன இல்ல, இன்னிக்குக் கட்டைலாம் அள்ளி போட ஆள் கெடச்சுதுனா யேன் 12 வெள்ளிய வீண் பண்ணனும்னுதான் பார்க்கறன்”
“நம்ப கீதா அக்காவ கூப்ட்டுக்கேயேன்”
“அவங்கதான் கட்டைய எடுக்க அங்குட்டு லைனல இருப்பாங்க, கட்டைய அள்ளி போட ஆள் வேணும், ஆமாம் நம்ப சீயாம்காரணுங்க இருக்கானுங்கள, அவன எவனாச்சம் பிடிச்சி போட்ற வேண்டியதுதான்” அப்பா அன்றைய ஓட்டி வேலைக்கு எப்படியாவது ஆள் பிடித்துக் கொண்டு 12 வெள்ளியைத் தன் சம்பள இருப்பில் சேகரித்துவிட்டுதான் வீடு வந்து சேர்வார். கை விரல்களின் நகங்களில் கட்டையின் முனைகள் குத்திக் கொண்டு நகங்கள் சிவந்திருக்கும். அம்மாதான் பக்குவமாக அந்த முனைகளையெல்லாம் சுத்தப்படுத்திக் கொண்டிருப்பார்.
வீட்டில் பிள்ளைகளெல்லாம் இடைநிலைப்பள்ளிக்குச் சென்றவுடன்தான் குடும்பப் பட்டியலில் தேவைகள் நிரம்பி அப்பாவைத் தொழிற்சாலையின் இயந்திர கதறலுக்கு நடுவே சக்கரம் போல சுழற்றிக் கொண்டிருந்தது. மாடாய் தேந்து போவது என்பது உழைக்கும் மனிதனைக் குறித்த பழைய மரபியல் சாடலாக இருக்கலாம் ஆனால், அப்பா கட்டையாய்தான் தேய்ந்து கொண்டிருந்தார் என்பது சமக்கால தத்துவமாக எங்களுக்கு மத்தியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
அன்று 7ஆம் திகதி. அப்பாவிற்குச் சம்பளம் போட்ட நாள். தொழிற்சாலையிலிருந்து சீக்கிரமாகவே வீட்டிற்கு வந்திருந்தார். வீட்டிற்குத் தேவையான காய்கறிகள் மாவு சமையல் பொருள்கள், வீட்டின் அறை கதவுகளுக்குப் புதிய தாழ்ப்பாள் என்று கைகள் இரண்டிலும் தேவைகள் கனத்துக் கொண்டிருந்தன. எல்லாவற்றையும் அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டு வரவேற்பறையின் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு எதையோ சிந்தித்தப்படியே இருந்தார். ஒரு வெள்ளை கவரில் செலவுகள் போக மீதச் சம்பளப் பணம் 180 வெள்ளி தலையை இலேசாக வெளியே நீட்டிக் கொண்டிருந்தன.
“அப்பகூட பத்தலதான் பாரு, சகுந்தளாக்கு சுக்குல் பீசு எவ்வள கட்டணும்?” அப்படிக் கேட்டுவிட்டு பெரும் மூச்சிரைப்புக்கு நடுவே தலையை வாசல் பக்கம் சாய்த்துக் கொண்டிருந்த அப்பாவின் அந்த மாதத்துச் சம்பளம் 350 வெள்ளி. “இப்ப என்னா இன்னும் நாலு அஞ்சு ஓட்டி போட்டா ஓகேதான், அடுத்த வாரம்லாம் விடிய விடிய மிசுன ஓட்ட போறாங்களாம், ஓகே தான். .
3
நவீனக் காலம்
அந்தத் தோட்டத்திலிருந்து பட்டணத்திற்கு வந்த போது அப்பாவிற்கு வயது 60ஐ கடந்திருந்தது. வேறு வழியின்றிதான் எங்களுடன் இழுப்புக்கு வளைந்து கொடுக்கும் கோட்டு பாலைப் போல வாழ்க்கை அவரைப் பட்டணம் வரை இழுத்து வந்திருந்தது. நாங்கள் கிளம்பும் போது ஏற்கனவே 15 குடும்பங்கள் அந்தத் தோட்டத்திலிருந்து வேறு இடங்களுக்குக் கிளம்பியிருந்தார்கள்.
தோட்டத்து நிலத்தை வேறு முதலாளி வாங்கிய பிறகு எங்களுக்கு எந்த வசதிகளும் செய்து தரப்படவில்லைதான். பெரும்பாலான தொழிலாளிகள் பக்கத்து தொழிற்சாலைகளில்தான் வேலை பார்த்துக் கொண்டு வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். பிறகு அவர்களும் மனித நடமாட்டங்கள் குறைந்த இந்தச் செம்பனை தோட்டக் காடுகளுக்கு மத்தியில் வாழப் பிடிக்காமல் ஒவ்வொருவராக இடம் பெயர்ந்து போகத் தொடங்கிய காலக்கட்டத்தில்தான் நாங்களும் அப்பாவை அழைத்துக் கொண்டு பட்டணத்திற்கு வந்திருந்தோம். அம்மா இறந்து மூன்று வருடங்கள் ஆயிருந்தன.
“யப்பா தம்பி, அந்தச் சீனன் கிட்ட சொல்லி எனக்கும் கொஞ்சம் நட்டுளாம் தர சொல்லுப்பா, நீ செய்றத பாத்தா எனக்கும் அது செய்ய வரும், ஒரு பொட்டிக்கு எவ்ளப்பா?”
“ஒரு பிளாஸடிக்ல 100 நட்டு இருக்கும் தாத்தா, அத எடுத்து, தோ இப்படிதான் போடனும், அவ்ளதான். ஒரு பொட்டில 5 பிளாஸடிக் அடுக்கலாம். பொட்டி கணக்கு 5 வெள்ளி”
இரண்டு நாள்களுக்கு அந்தச் சீனன் காரில் பக்கத்து வீட்டிற்கு நட்டு பெட்டிகளைக் கொடுக்க வரும் போதெல்லாம், வாசல் கேட்டின் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு அந்தப் பையனின் சிபாரிசுக்காக காத்திருந்தார். ஒரு வாலிபன் போல தோற்றத்தைச் சிரமப்பட்டுக் காட்டிக் கொண்டு அந்தச் சீனனின் முன் நின்றிருந்தார் அப்பா. மறுவாரத்திலிருந்து அப்பாவிற்கும் சில பெட்டிகள் வந்து இறங்கும் அந்தச் சீனனின் காரிலிருந்து.
“இப்ப எதுக்குபா இந்த வேலைலாம்? நான் எடுக்கற சம்பளமே அதிகம், உங்களுக்கு யேன் இந்த நட்டு கிட்டுலாம்?” அப்பா தொடர்ந்து அந்த நட்டுகளைப் பெட்டியில் கொட்டிக் கொண்டிருப்பார்.வழக்கமாகி போன சொற்கள்தானே. உதறிவிட்டு நட்டுகளில் புதைந்து கொள்வார்.
அன்று அப்பாவிற்குச் சம்பள நாள். காலையிலேயே சீனன் வந்து சம்பளத்தைக் கொடுத்துவிட்டுப் போயிருந்தான். அப்பா வெளுத்த சாம்பல் கால் சட்டையை அணிந்து கொண்டு எங்கேயோ வெளியே கிளம்பி போயிருந்தார். சாலை ஓரமாக மெதுவாக நடந்துவிட்டு ஏதோ கடையிலிந்துதான் திரும்பி வந்திருந்தார். கையில் சின்னதாய் ஒரு குருவி கூண்டும் அதில் ஒரு சிட்டுக் குருவியும் இருக்க மெல்லிய புன்னகையுடன் வீட்டின் வாசலில் காலணிகளைக் கழற்றி அடுக்கிய பிறகு, மேசையில் அந்தக் கூண்டை வைத்தார். முன் பாக்கேட்டில் 50 வெள்ளி இருந்தது.
பக்கத்து வீட்டில் அந்தப் பையன் நட்டுகளின் பெட்டியை எடுத்துச் சுவர் ஓரமாக வைத்துக் கொண்டிருந்தான். அப்பா இரு வீட்டிற்கும் நடுவிலிருந்த சுவரிலிருந்து தலையை நீட்டி அந்தப் பையனைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்பாவின் அந்த மாதத்துச் சம்பளம் 80 வெள்ளி.
“ நாளைக்கு எத்தன பொட்டிப்பா வரும், கொஞ்சம் கூடவே கேட்கனும் போல. . . ”
“சமாளிக்கனும்னா இப்படித்தான்யா, என்னா பண்றது. நாளைக்குக் கேட்டுப் பாக்கறென். எனக்குக்கூடத்தான் பத்த மாட்டுது.”
“ நான் நெறைய சம்பள வாங்கன ஆளுயா. மரத்துலயும் கேளாங்குலயும் வேலை செஞ்சே வயசு போச்சு. இப்ப அது மாதிரிலாம் இல்ல. கெடைக்கறதெ வச்சிக்க வேண்டியதுதான். சும்மா இருக்கறது வேதனையா. முடிஞ்சா சாவற வரைக்கும் இப்படி ஏதாவது செஞ்சி பொழைச்சிக்கனும்யா. மனுசனா பொறந்துட்டா இப்படித்தான்”


கே.பாலமுருகன்
மலேசியா

bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்