• Home »
  • கதைகள் »
  • உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 7

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 7

This entry is part of 30 in the series 20080214_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


“எந்த ஒரு மனிதப் பிறவியும் முழுதாகவோ அல்லது நிரந்தரமாகவோ வேறொரு மானிடனுக்கு அன்னியன் அல்லன் ! மனிதன் மனிதனுக்குச் சொந்தமானவன் ! மனிதனுக்கு மனிதன் உரிமை அளிப்பவன் ! பெரிய அல்லது சிறிய சந்தர்ப்பங்கள் மூலமாக மனிதனுக்கு அருகில் மனிதன் நெருங்கி வர அன்றாட வாழ்க்கையில் நம்மை நாமே தள்ளிக் கொண்டு செல்கிறோம் !

ஆல்பெர்ட் சுவைஸர், மருத்துவ மேதை [Albert Schweitzer in Reverence for Life (1875-1965)]

—- எவனொருவன் அரசியல் சுதந்திரத்தைப் பூரண விடுதலையுடனும் அல்லது அரசியல் சமத்துவத்தை சமூகச் சமப்பாடுடனும் குழப்பிக் கொள்கிறானோ, அவன் ஐந்து நிமிடங்கள் சிந்தித்து எதனையும் சரியாகப் புரிந்து கொள்ள வில்லை என்றாகும் !

—- சுதந்திரம், சமத்துவம் இரண்டுமே எந்த ஒரு நிபந்தனையும் இல்லாதது அல்ல ! அதாவது எதுவுமே பூரணத் தன்மை அடைவதில்லை !

—- சுதந்திரம் என்பதில் நமக்குப் பொறுப்பு உள்ளது. அதனாலே பெரும்பான்மையான மானிடர் அதற்கு அஞ்சி நடுங்குகிறார் !

—– பிரிட்டீஷ் கோமகனார் ஒருவர் தன் குதிரைக் கண்காணிப்பாளன் ராயல் வானோக்காளிக்குச் சமமானவனா என்று வெறுப்புடன் வெகுண்டு கேட்பார். ஆனால் அவர்கள் தன்னைக் கொலை செய்தால் இருவரும் ஒரே மாதிரிதான் தூக்கிலிடப்பட வேண்டும் என்று வற்புறுத்துவார் !

—- ஓர் இராணுவக் கர்னல் தனி மனிதனை விட உயர்ந்தவனாக இருக்க வேண்டும் என்னும் கருத்து கட்டுமனை வளைவில் நடுக்கல் (Keystone) மற்ற கற்களை விட வலுவுள்ளதாக இருக்க வேண்டும் என்பதைப் போல் குழப்பம் விளைவிப்பது.

—- சமத்துவம் வரவேற்கப்படும் ஓரிடத்தில் கீழ்ப்படிதலும் (Subordination) ஏற்றுக் கொள்ளப்படுகிறது !

—- ஒவ்வொரு சமூக அமைப்புப் பொதுத்துறையிலும் சமத்துவம் அடிப்படையாக வேண்டப்படும்.

—- கோமானுக்கும் வேலையாளிக்கும் உள்ள உறவுப்பாடில் நன்னடைத்தையை எதிர்பார்க்கக் கூடாது.

பெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்: “சுதந்திரம், சமத்துவம்”)

****************

உன்னத மனிதன்
(பெர்னார்ட் ஷா)

அங்கம் : 1 பாகம் : 6

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.

2. மிஸ் ராம்ஸ்டன் (Miss Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.

3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.

4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)

5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker)

6. ஹெக்டர் மலோன் (Hector Malone)

7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை

8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்

9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.

10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)

11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 1 பாகம் : 6)

கதா பாத்திரங்கள்: ரோபக் ராம்ஸ்டன், அக்டேவியஸ் ராபின்ஸன்.
காலம்: காலை வேளை
இடம்: மேயர் ரோபக் ராம்ஸ்டன் மாளிகை.

(காட்சி அமைப்பு : கோட்டு, சூட்டு அணிந்து ரோபக் ராம்ஸ்டன் தனது நூலக அறையில் படித்துக் கொண்டிருக்கிறார். நகரில் பேரும் புகழும் பெற்ற செல்வந்தர் அவர். மாளிகையில் மூன்று வேலைக்காரிகள் உள்ளார். அறையின் சுவர்களில் அழகிய ஓவியங்கள் தொங்குகின்றன. அறை பளிச்செனத் தூய்மையாக உள்ளது. நூல்கள் நேராகச் சீராக அடுக்கப்பட்டு நூலகம் காட்சி தருகிறது. நூலகத்தில் ராம்ஸ்டனும், அக்டேவியசும் உரையாடி வரும்போது, வேலைக்காரி மேரி ஜான் டான்னர், ஆன்னி வொயிட்·பீல்டு ஆகியோர் வந்திருப்பதை அறிவிக்கும் போது ராம்ஸ்டன் கோபப்பட்டு வரவேற்க மறுக்கிறார். இறுதில் ராம்ஸ்டன் டான்னருடன் வேண்டா விருப்புடன் உரையாடுகிறார். உரையாடலில் ஆன்னியும் அவளது அன்னையும் கலந்து கொள்கிறார்கள். ஆன்னியின் திருமணப் பேச்சில் அனைவரும் ஈடுபடுகிறார். அப்போது ராம்ஸ்டன் அக்டேவியஸ் தங்கை வயலட்டைப் பற்றி ஓர் அந்தரங்கச் செய்தியை வெளியிட்டு அதிர்ச்சி தருகிறார். வயலட் ஒருவனுடன் தொடர்பு கொண்டு கர்ப்பவதியானது தெரிந்து போய்விட்டது.

ரோபக் ராம்ஸ்டன்: வயலட்டை ஏமாற்றியவன் நம்மிடையே இருக்கிறான். அவனைத் தெரிந்து கொள்வது நமது முதற்கடன். அப்படிப்பட்ட வஞ்சகன் யாராக இருக்க முடியும் ? வயலட்டுடன் உரையாடும் முன்பு என்ன வாதடப் போகிறோம் என்று பேசிக் கொள்வோமா ? நமக்குத் தெரிந்த நபர்களில் அத்தகைய நயவஞ்சகன் இருக்கலாம் ! அதனால்தான் வயலட் இங்கு வந்திருக்கிறாள். என்னிடம் அவனைப் புகார் சொல்ல வந்திருக்கிறாளா ? சொல் அக்டேவியஸ் ! யார் மீதாவது உனக்குச் சந்தேகம் உண்டாகுதா ?

அக்டேவியஸ்: எனக்கு யார் மீதும் சந்தேகமில்லை ! வயலட் மீதுதான் சந்தேகம் உள்ளது ! இவள் ஏன் நெருப்புக்கு அருகில் போனாள் ? சுடாத கனல் உள்ளதா ?

ஜான் டான்னர்: கட்டவிழ்த் தோடிய அந்தக் காளை இங்குதான் இருக்கிறானா ? உமது வாயிலிருந்து அப்படி வரும் என்று நான் எதிர்பார்க்க வில்லை.

ரோபக் ராம்ஸ்டன்: மிஸ்டர் டான்னர் ! நான் அப்படித் தீங்கிழைப்பவன் என்று நம்புகிறீரா ?

ஜான் டான்னர்: என்னருமை ராம்ஸ்டன் ! இந்தத் துணிவுச் செயலை எவனும் பண்ணிவிட முடியும் ! நீவீர் என்னைச் சந்தேகப்படுகிறீர் ! நான் உம்மைச் சந்தேகப் படுகிறேன் ! அக்டேவியஸ் வயலட்டைச் சந்தேகப்படுகிறான் ! வயலட் அவனை ஏற்றுக் கொண்ட பிறகு நாமவனை வரவேற்பதை விட்டுவிட்டு விரட்டி ஓட்ட வேண்டுமா ? குற்றவாளி நானாக இருந்தால் என்ன ? மிஸ்டர் ராம்ஸ்டனாக இருந்தால் என்ன ? அல்லது அன்னியன் ஒருவனாக இருந்தால் என்ன ? தலைக்குமேல் தடி நிற்கும் போது நாமெல்லாம் பொய் சொல்லுவோம் ! தவறே செய்ய வில்லை என்று பைபிள் மீது சத்தியம் செய்வோம் ! ராம்ஸ்டன் அப்படித்தான் எதிர்க்கத் முனைவார் !

ரோபக் ராம்ஸ்டன்: (தொண்டை அடைத்து) நான் . . . நான் . . . நானா ?

ஜான் டான்னர்: குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும் ! மிஸ்டர் ராம்ஸ்டனுக்குத் தொண்டை அடைக்கிறது ! நாக்கு தடுமாறுகிறது ! ஆயினும் அவரை நம்புகிறேன் நான். அக்டேவியஸ் ! ராம்ஸ்டன் இதைச் செய்திருக்க முடியாது. அவர் நிரபராதி !

ரோபக் ராம்ஸ்டன்: நன்றி மிஸ்டர் டான்னர் ! நான் நிரபராதி என்று உம் வாயால் சொல்வதே போதும் ! ஆனால் உமது கொடூர மனதுக்குள் நான்தான் தவறிழைத்தவன் என்று தெரிகிறது. அக்டேவியஸ் ! உன் மனதில் அப்படி இல்லை அல்லவா ?

அக்டேவியஸ்: உங்கள் மீது எனக்குச் சிறிதும் ஐயமில்லை மிஸ்டர் ராம்ஸ்டன் !

ஜான் டான்னர்: என் மீது அக்டேவியசுக்குச் சிறிது சந்தேகம் உள்ளது !

அக்டேவியஸ்: ஜான் ! நீ . . . நீயா ? நிச்சயம் இருக்க முடியாது !

ஜான் டான்னர்: நானாக ஏனிருக்க முடியாது ?

அக்டேவியஸ்: ஆமாம் ! ஏனிருக்க முடியாது ?

ஜான் டான்னர்: நானிருக்க முடியாது அக்டேவியஸ் ! காரணம் சொல்கிறேன், கேள் ! முதலில் நீ என்னிடம் சண்டைக்கு வரும் ஒரு கட்டாயம் ஏற்படும் ! இரண்டாவது: வயலட் என்னை வெறுப்பவள் ! மூன்றாவது: வயலட் வயிற்றில் சுமப்பது என் பிள்ளையானால் நான் பீற்றிக் கொண்டு பெருமைப்படுவேன் ! மறைத்துக் கொண்டு மறுக்க மாட்டேன் ! ஆகவே அக்டேவியஸ் ! ஐயம் அகற்று ! நமது நட்பில் களங்கமில்லை !

அக்டேவியஸ்: (சோகமுடன்) ஜான் ! வேதனைப்படும் என்னிடம் எப்படி உன்னால் இப்படி வேடிக்கையாகப் பேச முடிகிறது ? என் நெஞ்சம் பற்றி எரியும் போது நீ வீணை வாசிக்கிறாய் !

ஜான் டான்ன்னர்: இல்லை அக்டேவியஸ் ! உன் கல்நெஞ்சைப் மெல்நெஞ்சாய் மாற்ற முயல்கிறேன். இங்கே அமர்த்து தெளிவாகச் சிந்திப்போம். வயலட் உனக்குக் கெட்ட பெயரைத் தந்து விட்டாள் என்று நீ எண்ணினால் ஒன்று செய் ! அவளைக் குற்றவாளி யாகக் கருதி வெளிநாட்டுக்குச் சில காலம் அனுப்பி விடு ! தூசிகள் படிந்த பிறகு அழைத்து வா ! என்ன நடக்கிறது மேல்மாடியில் ? என்ன செய்கிறாள் வயலட் ? யாருடன் இருக்கிறாள் இப்போது ?

ஆன்னி: வயலட் தனியாக வீட்டுக்காரி அறையில் இருக்கிறாள்.

ஜான் டான்னர்: ஏன் முன்னறையில் இல்லாமால் மூலையில் கிடக்கிறாள் ?

ஆன்னி: உளறாதே ஜான் ! வயலட் சகோதரனைக் காணக் கூசுகிறாள். நம்முடன் பேச நாணுகிறாள் ! மிஸ். ராம்ஸ்டன் என் அன்னையுடன் முன்னறையில் உரையாடிக் கொண்டிருக்கிறார், என்ன செய்வதென்று அறியாமல் !

ஜான் டான்னர்: மிஸ்டர் ராம்ஸ்டன் ! உமது சகோதரிக்கு எல்லாம் தெர்ந்திருக்கிறதே ! உமது காதில் மட்டும் விழாமல் இருந்திருக்கிறதே ? ஆச்சரியமாக உள்ளது. ஆன்னி ! நீ போய் வயலட்டுடன் பேசு.

ஆன்னி: நான் பேசிப் பார்த்தேன், பலனில்லை. அவள் இந்த நிலையில் அன்னிய நாட்டுக்குப் போக மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பாள். சகோதரன் அக்டேவியஸ்தான் பேசிச் செய்ய வேண்டும்.

அக்டேவியஸ்: நான் எப்படிச் சொல்வேன் ? அவளைத் தனியாக அன்னிய நாட்டுக்கு எப்படிக் கடத்துவேன் ?

ஜான் டான்னர்: அக்டேவியஸ் ! வாழ்க்கை ஒரு கவிதை யில்லை ! ஒரு கலைப் படைப்பில்லை ! அது ஒரு நாடகம் ! அதில் மனிதர் தம் பாகத்தை நடிக்கத்தான் வேண்டும் ! ஒவ்வொரு மாதரும் ஒரு புதுப் பிறவியை உருவாக்கத் தம் உடலுடனும், உயிருடனும் போராட்டம் புரிய வாய்ப்புள்ளது ! அஞ்சாதே அக்டேவியஸ் ! சுயநலம் பேணாது சகோதரி நலம் நாடு ! மேல்மாடிக்குப் போய் வயலட்டைக் கீழே அழைத்து வா. அவளுடன் அனைவரும் உரையாடுவோம். நாமெல்லாம் அவளுக்குத் துணை என்று ஊக்கம் அளிப்பாய் !

ரோபக் ராம்ஸ்டன்: இல்லை ! இல்லை ! அப்படி நான் சொல்ல வில்லை !

ஜான் டான்னர்: ஓ ! ஆமாம், உமது தங்க மனது ஒப்புக் கொள்ளாது ! அவளைத் தண்டிக்க வேண்டும் அல்லவா ? அக்டேவியஸ் ! நீ தான் போக வேண்டும் ! துணைக்கு ஆன்னியை அழைத்துச் செல் !

ஆன்னி: என் முன்னால் வயலட் வாயைத் திறப்பதில்லை ! மிஸ். ராம்ஸ்டன் முகத்தைத் திருப்பிக் கொள்வாள் ! இருவருக்கும் நான் எதிரி ! நான் போவதில் பலனில்லை !

ரோபக் ராம்ஸ்டன்: அப்படியானால் நான் உன்னுடன் வருகிறேன் அக்டேவியஸ் ! இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு காண வேண்டும் !

(அக்டேவியஸ், ராம்ஸ்டன் இருவரும் மேல்மாடிக்குச் செல்கிறார்கள்)

ஜான் டான்னர்: என் வேலை முடிந்தது. நான் வெளியேறுகிறேன்.

ஆன்னி: ஜான் நில் ! நான் உன்னிடம் நிரம்ப உரையாட வேண்டும். என்னிடமிருந்து ஏன் ஓடி ஒளிகிறாய் இப்படி ? உட்கார்.

(ஜான் டான்னர் வேண்டா வெறுப்பாக நாற்காலியில் அமர்கிறார்)

***************************

(தொடரும்)

*********
தகவல்

Based on The Play
“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan February 13, 2008)]

Series Navigation