தைவான் நாடோடிக் கதைகள் – 10. மானின் கொம்புகளை நாய்மாமாவுக்குத் திருப்பிக்கொடு.

This entry is part [part not set] of 40 in the series 20080124_Issue

மதுமிதா


முன்பு நாய்கள் தலையில் கிளைகள் கொண்ட கொம்புகளைக் கொண்டிருந்தன. எப்படி நாய்களின் கொம்பு கலைமான்களுக்குச் சென்றது என்பதைப் பற்றிய கதை இது.
ஒரு ஆண்மான் தனது நண்பனுடைய திருமணத்திற்காக அழைக்கப்பட்டிருந்தது. இந்தமான் ஒரு பெண்மானை அதீதமாய் நேசித்தது. அந்தபெண்மானும் திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வை ஆண்மான் அப்பெண்மானை தன்வசம் ஆக்கிக்கொள்ளும் வாய்ப்பாகக் கருதியது. ஆனால், தான்அழகாயில்லையே என்ற வருத்தம் அதற்கு இருந்தது. அதனால், ஏதாவது புதியதாய் அணிந்து கொண்டு தன்னை அழகு செய்து கொள்ள விரும்பியது.
நாய்மாமா, கிளைகள் கொண்ட கொம்பைத்தலையில் அணிந்து வந்ததை ஆண்மான் பார்த்தது. என் தலையில் இந்தக் கொம்பு இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என நினைத்தது.
நாய்மாமாவை இந்த மானுக்கு இதற்கு முன்பே அறிமுகம் இல்லையாதலால், நேரடியாக அதனிடம் கொம்புகளைக் கேட்கத் தயங்கியது. அதனால், நேரடியாகச் சென்று கேட்காமல், நாய்மாமாவின் அருகில் வசிக்கும் திரு.சேவலாரைச் சந்தித்து தனக்காக நாய்மாமாவிடம், கொம்புகளைப் பெற அனுமதி வாங்கித் தருமாறு கேட்டது. சேவல் மிகவும் நல்லவரானதால், சிரமமேயில்லை; உதவிசெய்வதில் மகிழ்ச்சியே என்றார்.
சேவல் நாய்மாமாவின் வீட்டுக் கதவைத் தட்டி அழைத்தார். நாய்மாமாவின் கொம்புகளின் அழகைப் புகழ்ந்து, எப்படி கொம்புகளைப் பாதுகாக்க வேண்டுமெனக் கேட்டார். நாய்மாமாவோ “தனியாக எதுவும் செய்து பாதுகாக்க வேண்டிய தேவையெதுவும் இல்லை. தூங்கச் செல்வதற்கு முன்பு கொம்புகளைக் கழட்டி வைத்துவிட்டால் உடையாமல் பாதுகாத்துக்கொள்ளலாம்” என்றார்.
“இரவில் உங்களுக்கு கொம்புகள் தேவையில்லையென்றால் திரு. மான் அவர்களுக்கு இன்று மாலை மட்டும் இந்தக் கொம்புகளைக் கடனாகத் தரமுடியுமா” என சேவலார் கேட்டார்.
ஒரு நொடி யோசித்த நாய்மாமா,”நிச்சயமாக மான் திருப்பித் தருவேனென உறுதியளித்தால், வாங்கிக்கொள்ளட்டும். அவன் தரவில்லையென்றால்
நீங்கள் அதற்கு பொறுப்பேற்றுக்கொள்வீர்களா?” என்றார்.
மானை நம்பலாம் என நினைத்த சேவலார்,”கொம்புக்கு நான் கியாரண்டி. நாளை காலையில் கொம்புகளைத் திருப்பித் தந்துவிடுகிறேன்” என ஒப்புக்கொண்டார். இந்த உறுதிமொழி போதும் எனும் முடிவுக்கு வந்த நாய்மாமா, கொம்புகளை எடுத்துச் செல்ல சேவலை அனுமதித்தார்.
சேவலார் கொண்டுவந்து கொடுத்த கொம்புகளைப் பெற்றுக் கொண்டதும் மான் அதை அணிந்துகொண்டு கண்ணாடியில் பார்த்தது. ‘வாவ். என்ன ஒரு கம்பீரஅழகு. தனது அழகை கண்ணாடியில் பார்த்து ரசித்தது. தனது தலையை உயர்த்தி பெருமையுடன் திருமணத்திற்குச் சென்றது.
ஆண்மான் நேசிக்கும் அந்த பெண்மான் முதற்கொண்டு, அனைவரும் ஆண்மான் நடந்து வருவதையே பார்த்தனர். அதீத தன்னம்பிக்கையுடன் பெண்மானுக்கருகில் நடந்தது ஆண்மான். பெண்மான் ஒரு வார்த்தையும் பேசாமல் ஆண்மானுக்கு இணையாக நடந்தது.
திருமணத் தம்பதிகளைப் புகைப்படம் எடுக்க வந்த புகைப்படக்காரர்கள் அனைவரும் தங்களுடைய கேமராவை இருமான்களை நோக்கித் திருப்பினர். பெண்மான் தான் மிகவும் பிரபலமடைந்ததாய் உணர்ந்து, அனைவரின் கவனமும் தங்கள் மேல் இருப்பதை ரசித்தது. மான் ஜோடிகள், மணமக்களுக்கருகே அமர அழைக்கப்பட்டனர்.
கொம்புகள் நாய்மாமாவின் தலையில் இருப்பதைவிட தன் தலையில் இருப்பதே மிகப்பொருத்தம் என ஆண்மான் நினைத்தது.
இரவு விருந்து முடிந்ததும் ‘நாம் ஓடிப்போகலாமா’ என ஆண்மான் பெண்மானிடம் கேட்டது.
‘நிச்சயமாய். நாம் போகலாம்’ என பெண்மான் கூறியது. இரண்டும் மகிழ்வுடன் ஓடிப்போய் மலைகளில் மறைந்தனர்.
மறுநாள் சேவலார் மானின் வீட்டுக் கதவைத் தட்டினார். எந்த பதிலுமில்லை. பதறிப்போய் அருகிலிருந்தவர்களை விசாரித்ததில், யாருக்கும் மான் எங்கே சென்றதென்று தெரியவில்லை.
நாய்மாமா கண்விழித்தார். இன்னும் சேவலார் தனது கொம்புகளை எடுத்து வரவில்லை என்பதை அறிந்ததும் கடும் கோபமடைந்தார்.
இதனால்தான் நாய்மாமாவின் குழந்தைகள் இன்றும் சேவலாரின் குழந்தைகளைத் துரத்திக்கொண்டிருக்கின்றனர்.
கிளைக்கொம்புகள் ஆண்மானின் தலையில் வளர ஆரம்பித்தது. அதனால்தான் ஆண்மான்கள் கொம்புகளோடு இருக்கின்றன. பெண்மான்களுக்கு கொம்புகளில்லை.
தினமும் காலையில் சேவலார் அதிகாலையில் எழுந்து இதைத்தான் கூவுகிறார், “மானே! நாய்மாமாவுக்கு கொம்புகளைத் திருப்பிக்கொடு”


madhuramitha@gmail.com

Series Navigation

மதுமிதா

மதுமிதா