தரிசு நிலத்தில் பட்டாம்பூச்சி

This entry is part [part not set] of 40 in the series 20080103_Issue

எஸ். ஷங்கரநாராயணன்



கோழிக்கூடை போல பூமியைத் தொப்பிபோட்டுக் கவிழ்த்தியிருக்கிறது ஆகாயம். அதோ து¡ரத்தில் அதன் சுவர் என்றாலும் எத்தனை உயரம் இருக்கும் இந்த ஆகாயம் தெரியவில்லை. உலகத்தில் தெரிந்து கொள்ளவும் ஆச்சரியப்படவும் ஒரு ஆயுள் போதாதுதான். கமலாவுக்கு வீடு பிடிக்கவேயில்லை. மனிதன் தனக்குத் தானே கட்டிக்கொண்ட சிறை. இலட்சுமண வட்டம். குறுக்குக்கம்பி மறைப்புகொண்ட ஜன்னலில் இருந்து வெளியே வானம். நட்சத்திரங்கள் தாயக்கட்டத்தில் இறக்கி விடப்பட்ட சோழிகளாய்த் தெரிகின்றன. சிரிக்கும் நிலா. நிலா வராத நாட்கள்… ஓரஞ்சு ஈராறு மூணுக்கு நிலா வெட்டுப் பட்டிருக்கலாம்.
அம்மா கவனமாய் உள்ளே பூட்டிவிட்டுப் படுத்திருக்கிறாள். பொங்கும் பாலாய் நிலா காய்கிறது வெளியே. இலைக்கூட்டத்தின் தலைவிரி கோலத்தில் நடுவே நிலா முகம். பேய்ப்பாட்டு சினிமாவில் காட்டினாற் போல. கொழுக்கட்டை வெண்மைக்குள் பூரணம் போல் பூமி. பாரிஜாதம் காற்றோடு மிதந்து வந்து வாசனை து¡க்கியடிக்கிறது. யானையசைவாய் புஷ்பங்கள் மானுடத்தை அழைத்துக் காத்திருக்கிறது. கமலா சட்டென்று எழுந்து கொள்கிறாள். நிலாக்காலங்களில் அவளால் து¡ங்க முடியவில்லை… இப்படி ஒரு நிலா வேளையில்தான்… மாந்தோப்பில் என்று ஞாபகம்… நினைக்க அவளுள் புன்னகை, நிறைந்த குளமாய் வெளித் தளும்புகிறது.
சட்டென உள்ளுக்குள் அசைவு. இந்த சில மாதங்களில் அவளில் எத்தனை மாற்றங்கள். எதையிட்டும் உள்ளே சிரிப்பு பொங்கிப் பொங்கி வருகிறது. அடிவயிற்றைத் தடவுகிறாள். பொளக். வயிறு உள்வாங்கிப் பின் மீள்கிறது. குழந்தை… என் குழந்தை. உள்ளே நீச்சலடிக்கும் குழந்தை. வலி ஒரு கணம் துவட்டி யெடுக்கிறது. ஸ் என உதடு கடித்த கடியில் ரத்தம் கட்டியிருக்கும். எழுந்து ஜன்னலை இறுகப் பற்றிய அழுத்தம், கைவிரல்களில் கோடுகள்போல பள்ளம் பதிவு செய்திருக்கின்றன. வலி என்றால் இன்ன அளவு என்றில்லை. அசுர வலி. ரெண்டு நிமிஷம்போல ஆளைப் பிசைகிற வலி. சட்டென்று எல்லாம் விட்டு, மழையடங்கினாப் போல, எதுவுமே நடவாதது போல ஆகிவிடுகிறது. குழந்தை முட்டி வெளிவரப் பார்த்து விட்டு, ஏனோ மனம் மாறித் து¡ங்க ஆரம்பித்திருக்கலாம்…
நாளாக ஆக இப்படி வலி விட்டுவிட்டு வருகிறது. எதிர்பாராத நேரம் நாமே குழந்தையை அசைத்திருக்கலாம். அதுவே முழித்துக் கொண்டிருக்கலாம். வெளியே வருவதில் அத்தனை தீவிரப்பட்டு இடுப்பை முட்டி யிருக்கலாம். எதையாவது யோசித்துக் கொண்டிருக்கும்போதே குபீரென்று தண்ணீருக்குள்ளிருந்து சுறா துள்ளி யெழுந்தாப் போல அப்படியொரு வலி.
இந்த மொட்டுவிரித்த நிலாவேளையில் வீட்டுக்குள் அவளுக்குத் தவிப்பாய் இருந்தது. உள்ளறையில் அம்மா படுத்திருந்தாள். கொட கொடவென்று மின்விசிறிச் சத்தம். இந்தச் சத்தத்தில் எப்படித் து¡ங்குகிறாள் தெரியவில்லை. பழகியிருக்கலாம். சத்தம் பழகிப் போய் ஒருவேளை சத்தம் இல்லையென்றால் து¡ங்க முடியாது எனவும் ஆகியிருக்கலாம். து¡ங்கட்டும். தலையை வரட் வரட்டென்று சொறிந்து கொண்டாள் கமலா. மெல்ல அம்மாவின் தலையணை யடியில் இருந்து சாவியை எடுத்தாள். அம்மா து¡க்கச் சுணக்கத்தில் தானறியாமல் சற்று திரும்பிப் படுத்திருந்தாள். வசதியாய் இருந்தது. குனிந்து சாவியை எடுக் –
வெடுக்கென உள்ளே வலி ஆளை அப்படியே சுருட்டியது. தலை சுற்றி அப்படியே அம்மாமேல் விழ இருந்தாள். சமாளித்து பக்கத்தில் பொத்தென்று மூட்டையாய் உட்கார்ந்தாள். காலிடுக்கில் நசநசவென்றிருந்தது. ஒண்ணுக்குப் போயிட்டமா என்றிருந்தது. தொட்டுப் பார்த்தாள். சற்று கெட்டியாய் திரவம். ஒருவித நாற்றம் வந்தது. என்ன தெரியவில்லை. இருட்டில் கண் தெரியவும் இல்லை. சரி என்று தள்ளாடி எழுந்து வெளியே வந்தாள். ஆகா குழந்தை காலிடுக்கில் வெளியேற முன்னேறிக் கொண்டிருக்கிறாப் போல திடீரென்று அவளுக்குத் தோணியது. கால்கள் விலகியிருந்தன. பனிக்குடம் உடைந்திருக்குமா தெரியவில்லை. அவளுக்கு எதுவும் புரிபடவில்லை. எதோ நடக்கப் போகிறது…
இப்ப என்ன செய்யணும் நான்? நிலா? நான் இப்ப என்ன செய்யணும்?
பேச்செல்லாம் தீர்ந்து போய் ரொம்ப காலம் ஆச்சு. அந்தக் கண்… அதன்வழியே காட்டும் ஜாடைகள். அவையே பேச்சு. சிரிக்கும். சிணுங்கும். அழும். அழுகை முட்ட முட்ட உதடு நடுங்கும். சில சமயம் தலையை ஆட்டுவாள். பசி சொல்லத் தெரியாது. கேட்கத் தெரியாது. பசி முற்ற தள்ளாடி வந்து நிற்பாள். அம்மா அவள் முகம் பார்த்துச் சோறு போட வேண்டும். வீட்டுக்குள் அடங்காத எருமைமாடு. சட்டுச் சட்டென்று கட்டுத் தறித்துக் கொண்டு வெளியே பாயும் மாடு. அப்படி எங்கே போகிறது? எங்கே போக முடியும்? வெளியே அப்படி என்ன சுவாரஸ்யத்தைக் கண்டாள் அவள்? யார் அறிவார்? அவள் பேச்சு எப்போதோ நின்று விட்டது… எப்போதிருந்து என்றே தெரியவில்லை.
ரெண்டு வருஷம் முன்பு… கல்யாணம் என்று கேட்டுவந்து வேணாம் என்று விட்டார்கள். மாப்பிள்ளை வாட்டசாட்டமாய் இருந்தான். இழுத்துச் சுருட்டிய மீசையும் கர்லிங் முடியும். எப்படியும் திகைந்துவிடும் என இவள்வீட்டில் எல்லாரும் நம்பினார்கள்…
வேணாம் என்று கடிதம். முதலில் பெருகியோடிய அழுகை. அது அடங்கி யாரோடும் பேசாமல் படுத்துக் கிடந்தாள். அப்பறம் தானாகவே எழுந்து கொண்டாப் போலிருந்தது. வெளியே போகிறாப் போலக் காணாமல் போனாள். வரவேயில்லை. பேச்சே அத்தோடு நின்று போனது. தோப்புத் துரவுகளில், சோளக்காட்டு பொம்மையைப் பார்த்தபடி தலையை வரட் வரட்டென்று சொறிந்தபடி நின்று கொண்டிருப்பாள். வயற்காட்டுக் கிணற்று மேட்டில் ஒருநாள் படுத்துக் கிடந்தாள். வீடு மாத்திரம் பிடிக்காமலாச்சு…
மனுசாளையே பிடிக்காமலாச்சு என்றுதான் தோணுகிறது. குருவிகளிடம் அத்தனை சிநேகிதம் கிளைத்து விட்டது. அதிகாலை அம்மா எழுப்ப எழுப்ப எழுந்துகொள்ளாதவள் கீச் கீச்சென்று உத்திரத்தில் அலைபாயும் குருவிச்சத்தத்தில் கண் விழித்தாள். வாசலில் வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்திருந்தவள் வண்ணத்துப்பூச்சி ஒன்றைப் பார்த்துவிட்டு அதனுடனேயே நடந்து போக ஆரம்பித்தாள். மனிதர்கள் இல்லாத உலகத்தில் அவள் வாழ ஆரம்பித்து விட்டாப் போலிருந்தது.
இந்த உயரத்தில் எத்தனை ஜோராய் நீந்துகிறது நிலா. புகைபோலும் மேகங்கள், கூட அணிவகுத்து வருகின்றன. கன காரியமாய் அவை எங்கோ கிளம்பி விட்டன. மழைக்கான புகையிருட்டு அற்ற மேகங்கள். இது சும்மா ஒரு வாக்கிங். குறியற்ற உல்லாசப் பயணம்தான். இரவு அழகு. பகலும்தான்.. ஏன் இல்லாமல்?
சின்னக் காற்றுக்கு வயல் வெளியில் புல்லோ, அறுவடை சமயமானால் பொன்னிற நெல்தட்டையோ ஸ் என தலை சாய்த்து அசையும் சத்தம். எல்லாம் சாய தலையை வருடிக் கொண்டே தாண்டிச் செல்லும் காற்று. குபீரென்று அவள் எதிர்பாராமல் அந்தச் செடிக்கொத்துக்குள் இருந்து வெளிக் கிளம்பும் சிறு பறவைகள். கல்லோடு மூக்கை உரசிக் கூர் பார்த்துக் கொள்ளும் மரங்கொத்தி. அதன் வண்ண அடுக்குகளான இறகுகள்…
வீட்டுக்குள் நாலு சுவர்களுக்குள் என்ன இருக்கிறது? ஒரு ஆளுயரக் கண்ணாடி. திரும்பத் திரும்ப நம் முகம் காட்டுகிறது அது. அதற்காகவே விருப்பமாய் வாங்கி வைத்திருக்கும் மனிதர்கள். தன் முகம் பார்த்துக் கோபப்பட்டு கண்ணாடியைக் கொத்தும் குருவிகள்…


நெருக்கமான தோப்பு. மரங்கள் கிளைகளை யானைத் துதிக்கையாய் நீட்டி, வளைத்து முறுக்கிக் கொண்டு மற்ற மரத்தோடு சிநேகங் காட்டி நிற்கின்றன. மரத்தில் இருந்து மரத்துக்குத் தாவித் தாவி தோப்பையே தரைதொடாமல் வளையவர முடியும். குரங்குகள் அதை அறிந்தவை. இடுப்புயரத்தில் படர்ந்தாற்போல மரம் ஒன்று. அவள் சாய்ந்து படுத்துக் கொள்ள லேசாய்த் தாலாட்டும் மரம். கண்மூடிக் கிடந்தாள். தானறியாமல் து¡ங்கி யிருக்கக் கூடும். பாம்பு ஒன்று மேலே ஊர்ந்தாற் போலிருந்தது. கலவரமாகவெல்லாம் இல்லை. கண்ணைத் திறந்தால் அவள் தோள்களை அழுந்தப் பற்றி ஒரு மனிதன். ஆண்பிள்ளை. லேசான இருட்டு. இருட்டுதான் அழகு. ஒளி கசியும் தோப்புதான் அழகு. பளீரென்று எல்லாம் தெரிந்த அப்பட்ட நிலை கூசச் செய்கிறது. அப்போது நாம் இயல்பாக இருக்கவே வாய்ப்பதில்லை…
மரம் வேக வேகமாக ஆட ஆரம்பித்தாற் போலிருந்தது.
தள்ளாடி தலை கலைய உடை நெகிழ வந்தாள் வீட்டுக்கு. மனம் உம்மென்றிருந்தது. சிரிப்பு காணாமல் போயிருந்தது. பக் பக்கென்று உள்ளே திகைப்பு. ராத்திரி நேரம். தெருவில் யாருமே கிடையாது. முதன் முதலாய் பயமாய் இருந்தது. அவள் பயத்தை மறந்து காலங்கள் ஆகியிருந்தன. ஆ அவளைப் பயப்படுத்தி யிருந்தான் மனிதன் ஒருவன். நெஞ்சில் ரயில். மேலேறி ஓடுவதுபோல் தடதட தடதட. இது சரியில்லை என்பது புரிந்தது. அழவேண்டும் போலக் கூட இருந்தது… அவள் அழுகையையும் மறந்திருந்தாள். மீண்டும் வண்டியளவு துக்கம் உள்ளே மண்டிய பொழுது அது.
வந்து அம்மா கதவைத் திறக்க, பேசாமல் படுத்து விட்டாள். பயமாய் இருந்தது. பேசக் கூட என்ன இருந்தது? அம்மா து¡க்கக் கலக்கத்தில் இருந்திருக்கலாம். அவளை கவனிக்கவில்லை போலத்தான் இருந்தது. அப்பா அவளைத் தேடி வெளியிறங்கிப் போயிருக்கலாம். தானாக வருவார். இவள் வந்து சேர்ந்துவிட்டதைப் பார்த்துவிட்டு தனக்குத்தானேவோ, உள்ளே படுத்திருக்கும் அம்மாவோடேவோ எதும் முணுமுணுப்பாய்ப் பேசிவிட்டுப் படுத்துக் கொள்வார். அவளாக வீடு திரும்பினால் திரும்ப அந்த ராத்திரி கிளம்ப மாட்டாள், என்கிற நிம்மதி அவருக்கு…
காலையில் எல்லாம் மறந்திருந்தது அவளுக்கு. ஒரு குருவி உத்திரத்தில் இருந்து ட்வீட் ட்வீட் என்று இரைச்சலிட்டதில் புன்னகையுடன் கமலா எழுந்து கொண்டாள்.
ஆனால் யாரும் கிட்ட வந்தாலே பதறியது இப்போது. அப்பா வந்தால்கூட. அம்மா வந்தால் கூட. என்னாயிற்று என்று அம்மாவே குழம்பினாள். ஓட்டமும் சாட்டமுமான அவசர அவசரமான வெளியேறல், அது இல்லை. என்னவோ உள் யோசனை. நிதானம். அம்மாவுக்கு அதை விளங்கிக் கொள்ளத் தெரியவில்லை. ஒருவேளை சரியாகி வருகிறதோ? சந்தோஷமாய் இருந்தது, அப்படியான நினைப்பில்.
வெளியே வானம். ரெண்டு கை விரித்தாப் போல பெத்தம் பெரிய வானம். கீழே நிலா வெளிச்சத்தில் உலகம் மந்திரம் போட்டாப் போல அழகாகி விடுகிறது. படித்துறையில் கால் நனைய உட்கார்ந்திருப்பாள். மெல்ல சத்தமில்லாமல் மேலேறி வரும் மீன்கள் விஷ்க்கென அவளைப் பார்த்துப் பதுங்கும். பயப்படும் மீன்கள். அவளுக்கும் பயம் வரும்… மாந்தோப்புப் பக்கம் போவதைத் தானறியாமல் தவிர்த்திருந்தாள். மனம் இலேசாகி மிதக்கிறாப் போலிருக்கும். திடுதிப்பென்று ஒரு தென்னங் குறும்பை அறுந்து விழும் சத்தம். அவளுக்குத் து¡க்கிவாரிப் போட்டது…
அசாத்தியச் சோர்வாய் உணர்ந்தாள். அபாரமாய்ப் பசியெடுத்தது. சட்டுச் சட்டென்று வீட்டுக்கு வந்து நின்றாள். அம்மாவுக்கு என்ன என்று புரியாவிட்டாலும் அவளிடம் மாற்றங்கள் இருந்ததை கவனித்து விட்டாள். என்னடீ? – என்றாள் முகத்துக்கு நேராக. அவள் அம்மாவைப் பார்த்தாள். பதில் சொல்லத் தெரியவில்லை. மகா அவசரம் போல வாய்க்கும் மேலான உணவை அடைத்துக் கொண்டாள்.
பொதுவாகவே அவள் சரியாக வீட்டுவிலக்கு என்று ஆகிறதில்லைதான். ஆனால் இப்படி மூணு மாதங்கள் என்று தள்ளிப் போகாது. அந்நாட்களில் அவளைக் கட்டிப் போட்டு விடுவாள் அம்மா. உர்ர் என்று கண் சிவக்க எல்லாரையும் பார்ப்பாள் கமலா. சாப்பிட வைத்த தட்டை எத்துவாள். வெளியே இருந்தது அவள் உலகம். அவளையாவது கட்டிப் போடுவதாவது… ஒருமுறை சாதம் ஊட்டிவிட வந்த அம்மா கையைக் கடித்திருக்கிறாள்.
மூணு மாதத்துக்கு மேலும் ஆயிற்று என்பதில் அம்மா குழம்பினாள். சோர்ந்து சோர்ந்து சுருண்டு படுத்துக் கொள்ளும் கமலா. அவள் கவலைப் பட்டாள். அப்போது கூட விபரீதமாய் மனசில் திகைப்புத் தட்டவில்லை. ஆனால் இதையும் மீறி அந்தச் சோர்விலும் கமலாவிடம் ஒரு பூப்பூத்த மெருகு வந்திருந்தது. உடம்பில் சிறு பளபளப்பு. நீர்ப்பாக எடுப்பு அது. வெளியே ஓடுகிற அந்த ஆவேசம் அடங்கிப் போனாப் போலிருந்தது. உள் வட்டம் அவளிடம் ஆழப் பட்டிருந்தது. என்ன யோசிக்கிறாள் தெரியாது. உட்கார்த்தி வைத்துத் தலையை வாரிவிட்டால், கட்டுப் படுகிறாள்…
அப்பாதான் அந்த சந்தேகம் கேட்டது. ”அடப் பாவி மனுசா, நல்லா சந்தேகப் பட்டியே…” என்றாள் அம்மா அதிர்ச்சியுடன். டாக்டரிடம் உடனே கூட்டிப் போய்க் காட்ட அவசரமாய் இருந்தது. கமலா வர மறுத்தாள். டாக்டர்தான் அந்த யோசனை சொன்னது… ”யூரின் கலெக்ட் பண்ணிட்டு வாங்க. பாத்திறலாம்.”
வெளியே காத்திருந்தார்கள் அப்பாவும் அம்மாவும். டாக்டர் இல்லை என்று சொல்லுங்கள். கடவுளே இல்லை என்று ஆகட்டும்….
”ஆமாம்” என்றார் டாக்டர். திக்குமுக்காடிப் போனார்கள். ”கலைச்சிறலாம் டாக்டர். இவளையே வெச்சிக்க முடியல… தயவு செஞ்சி…. உங்களுக்குப் புண்ணியமாப் போகட்டும்…” என்று கையெடுத்துக் கும்பிட்டாள் அம்மா.
டாக்டரிடம் போவதை எப்படி கமலா அறிந்து கொண்டாள்? அதுதான் ஆச்சரியம். டாக்டர் வீட்டு வாசல்வரை வந்தவள், சட்டென்று எதோ விபரீதம் என்று உணர்ந்து கொண்டாள். அம்மா அவளை வற்புறுத்தி உள்ளே வரக் கையைப் பிடித்து இழுத்தாள். கமலா அவள் கையைக் கடித்து விட்டு ஓடினாள்.


இடுப்பு நடுவே கசிவு அதிகரித்தாற் போலிருந்தது. வாய் எச்சில் போல நிற்காமல் ஒழுக ஆரம்பித்திருந்தது. கமலாவுக்குக் கால் நடுங்க ஆரம்பித்தது. நடக்க நடக்க பூமியே பேயாட்டம் ஆடியது. கையில் எதையாவது பிடித்துக் கொள்ளத் தேடினாள். தெருத் தாண்டி வயல்ப் பக்கம் வந்திருந்தாள். அந்த சோளக்காட்டு பொம்மை அவளது சிநேகிதன். காற்றுக்குத் தலையைக் கையை ஆட்டுகிறாப் போல இருக்கும் பொம்மை. சட்டென்று இருந்த பதட்டத்தில் அவளுக்கு அதன் ஞாபகம் வந்திருக்க வேண்டும். பொம்மை எதாவது உதவி செய்யுமா என்று யோசித்தாளா தெரியாது…
முன்னால் முன்னால் என்று காற்று தள்ளிப் போனாப் போலிருந்தது. காய்ந்த சருகாட்டம் தன்னை உணர்ந்தாள். கால் பிசுபிசுப்பு அதிகரித்தது. சட்டுச் சட்டென்று மின்னும் வலி. வலிப் பிரளயம். அப்போது கோளமே ஒரு பெருஞ்சுழற்சி கண்டாப் போல. ஆஆஆ ஊஊஊ என்றெல்லாம் கத்த வேண்டும், தெரிகிறது. வார்த்தை வரவில்லை. ஊம் ஊம் என்று பெருமூச்சுகளை வெளியிட்டாள். ஆனால் ஆச்சரியம், அந்த பயம்… இப்போது இல்லை. எதோ நடக்கப் போகிறது, என எதிர்பார்த்துக் காத்திருக்கிறது மனசு. எல்லாம் சரியாகி விடும், என்று எப்படியோ மனசில் ஒரு அடிநாத அமைதி. பெண்ணின் சூட்சுமம் கண்திறந்த கணம் அது. வயிற்றில் குழந்தை என்பதோ, அது வெளிவர பிரயத்தனம் மேற்கொள்கிறது என்பதோ அவளுக்குப் புரிந்ததா புரியவில்லையா, சொல்ல முடியவில்லை.
நிற்க மாத்திரம் நினைக்கவே யில்லை. எப்படியாவது எங்காவது படுக்கிற வசதி செய்து கொள்ள தன்னைப் போல ஆவேசப் பட்டிருந்தாள். ஊரின் எல்லைகளைக் கடந்திருந்தாள். ஓரிடத்தில் நிற்பதுதான் அதிக வலியை உணர்த்தியதாகத் தோன்றியிருக்க வேண்டும். நடப்பது சிரமம்தான். நிற்பதற்கு நடை தேவலை. அவள் தன்யோசனையிலேயே இல்லை. அதிதப் பிரக்ஞை அவளை இயக்கிக் கொண்டிருந்தது.
நெடிதுயர்ந்த வாத மரம் ஒன்று. இலைமூடிய வானத்தில் இடைத் துணுக்கில் எட்டிப் பார்க்கும் நிலா. அவளது ஆத்ம சிநேகிதமான நிலா. அப்படியே மல்லாக்கக் கிடந்தாள். மூச்சிறைப்பு அதிகமானது. வலி அதன் உச்சத்தில். மூளையைக் கொத்தியது வலி. ஹா ஹாவென்று பெருமூச்சுக்கள். புடவை மேலேறிக் கொண்டிருந்தது. இடுப்பு எலும்பு விரிய ஆரம்பித்திருந்தது. பெரும் ரத்தக் கூழ்… குழந்தை தலைநீட்டி வெளியேற ஆரம்பித்திருந்தது.
பெரும் மயக்கமாய் இருந்தது. ஒரு அழுகைச் சத்தம். அது கேட்டாப் போலிருந்தது. முதுகு நிமிர்த்தி எழ முடியவில்லை. குழந்தையை யாராவது து¡க்கிக் காட்டுவார்களா? சட்டென்று மங்கலாய் அம்மாவின் முகம். அது அம்மாதான். பின்னாலேயே வந்தாளா? அம்மா… என்று துடித்தன உதடுகள். கிட்ட வரும் அம்மா. குனியும் அம்மா… குழந்தையிடம் சத்தமே இல்லை. அம்மா குழந்தையைக் காட்டுவாளா? நிமிரும் அம்மா. குழந்தையைக் காட்டு அம்மா. தாண்டிப் போகும் அம்மா. அம்மா? அவள் திகைத்தாள். அவள் கையில்… குழந்தையைக் காட்டு அம்மா. பெரும் மயக்கமாய் இருந்தது. அம்மா து¡ர விலகி…
நில்லு அம்மா… வார்த்தை வாய்க்குள் திகைத்தது. அம்மா அவளை விட்டுவிட்டுப் போகிறாள். குழந்தையை மட்டும் பிரித்து… நடுக்கி ஆளையே கிழே சரித்தது சோர்வு. தள்ளாடி எழுந்து நின்றாள். சட்டென்று எதோ புரிபட்டாப் போலிருந்தது. ஊஊஊஊ என்று பெரிய ஊளை. அம்மா பதறித் திரும்புமுன், கையில் எடுத்திருந்த பெருங் கட்டையால் அம்மாவை ஒரே அறை.
குபீரென்று தரையெங்கும் தெளித்தது ரத்தம்.


storysankar@gmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்