அப்பாவின் தாங்க்ஸ்கிவ்விங் – ஒரு பெரிய சிறுகதை

This entry is part [part not set] of 45 in the series 20071227_Issue

சுப்புடு


அப்பா சற்றே சதைப் போட்டிருந்தார். ப்ரீத்ஸின் சாப்பாடும், பேத்திகளுடனான விளையாட்டும் அவரை மீண்டும் பழைய நிலைக்கு திருப்பியிருந்தன.

மூன்று மாதங்களுக்கு முன் சியாட்டல் விமான நிலையத்தில் அப்பாவை பார்த்த போது, ரொம்பவும் மெலிந்து போயிருந்தார். இன்னும் வயதாகியிருந்தது. தலை முடி நிறைய நரைத்திருந்தது. அம்மாவுக்கு பின் அப்பா தனிமையானது என்னமோ உண்மை தான். ஆனாலும் பூஜை புனஸ்காரம், அயோத்தியா மண்டபம், மார்கழி மாத இசைக் கச்சேரிகள் என்று தன்னை பிசியாக வைத்துக் கொண்டிருப்பதாக சொன்னாலும், தனிமையின் வலி அவரிடம் தெரிந்தது. நான் காரை எழாவது மாடியின் ஒரு மூலையில் பார்க் செய்துவிட்டு, ஸ்ரீயை தூக்கிக் கொண்டு போவதற்குள், விமானம் வந்திருந்தது. அப்பா கன்வேயர் பெல்டில் பெட்டியை தேடிக் கொண்டிருந்த போது, “தா..த்..தா” என்று ஸ்ரீ லேசாக கத்த, திரும்பி பார்த்து, ஹலோ டா என்று ஸ்ரீயை பார்த்துச் சிரித்தார். டக்கென்று கைகொடுத்தேன். கையைத் தட்டி விட்டு என்னைக் கட்டிக் கொண்டார். பக்கத்தில் பார்த்த போது அப்பாவிடம் இரண்டு நாள் பயணக் களைப்பும் தாடியும் தெரிந்தது. எதோ டீலில் பிடித்து கொஞ்சம் சீப்பாக டிக்கெட் வாங்கியிருந்தேன். இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் ஹாங்காங் வழியாக ஜப்பான் வந்து லாஸ் எஞ்சல்சில் ப்ளைட் மாறி சியாட்டல் வந்திருந்தார்.

“இது தான் இந்த டீவியோட ரிமோட்டா ?” என்று அப்பா கேட்க, பழைய நினைவிலிருந்து மீண்டு வந்தேன்.

“ம்..ஆமாமா, அதுதான். அந்த ரெட் பட்டனை அழுத்துப்பா, ஆஃப் ஆயிடும்” என்றேன். மீண்டும் சியாட்டல் டைம்ஸ் படிக்க ஆரம்பித்திருந்தார். அவர் படித்து முடிக்கும் முன், எங்களை பற்றிய ஒரு சின்ன ப்ளாஷ்பேக்.

மைக்ரோசாப்டில் எஸ்.குயூ.எல் டேட்டாபேஸ் விற்பண்ணன் நான், கோப்ஸ்/கோபி என்கிற கோபி சேஷகோபாலன். அமெரிக்கா வந்து ஐந்து வருடங்களாகின்றன. நான்கு வருடங்களாக மைக்ரோசாப்டில் வேலை செய்கிறேன். மனைவி ப்ரீதி என்கிற ப்ரீத்ஸ். மற்றோர் பெயர் தெரியாத நிறுவனத்தில் பணிபுரியும் ஆரக்கிள் புலி. இருவரும் இங்கு வந்து செய்த உருப்படியான விஷயம் எங்களின் இரண்டாவது மகள், ஸ்ரீ. முதல் பெண் காயத்ரி, பெங்களூரில், மழை கொட்டிய ஒரு நள்ளிரவில் பிறந்தாள். காரை ரோட்டில் பார்க் செய்யப் போனவன் திரும்பி வருவதற்குள் சிசேரியன் செய்திருந்தார்கள். போன வருடம் தான் பிரபலமான ஓல்ட் ரெட்மண்ட் ரோடில் வீடு வாங்கியிருந்தேன். 520தாயிரம் டாலர்கள். முப்பது வருட லோன் தான் என்றாலும், மைரோசாப்டில் கொட்டித் தான் கொடுக்கிறார்கள் என்றாலும், லோன் வாங்கிய சில நாட்களுக்கு தூக்கம் வரவில்லை.

என்னை பற்றியே சொல்லிக் கொண்டிருக்கிறேன், செல்பிஷ் இடியட். அப்பா சேஷகோபாலன். உயரமாக ஒல்லியாக கண்ணாடி அணிந்திருக்கும் ஒரு கவர்மெண்ட் சர்வண்ட் தோற்றம். “சேஷு இருந்தாத்தான் கல்யாணமே கலை கட்டும்…கூப்பிடுறா அவனை” என்று பாக்கியம் மன்னிப் பாட்டி சொல்லும் அளவுக்கு, அப்பாவுக்கு செல்வாக்கு. ரொம்பவும் அப்பிராணி ஆனாலும் சுவாரசியமானவர். எங்கோ கும்பகோணத்தில் பிறந்து, படித்து, அம்மாவை கடலூரில் திருமணித்து, தேனாம்பேட் ஏஜிஎஸ் ஆபிஸில் கணக்கெழுதி வாலண்டரி ரிடையர்மெண்ட் வாங்கிய எங்கள் டாட். டாட் என்றவுடன் நினைவுக்கு வருகிறான் தம்பி. ஸ்டான்போர்டில் பெலோஷிப்பில் பி.ஹெச்.டி படித்து, கல்யாணமே வேண்டாம் என்று தற்போது யுரோப்பில் டூர் அடித்துக் கொண்டு, ஆண்டஸ் மலையை ஹைக் செய்கிறேன் என்று போன வருடம் காலை உடைத்ததுக் கொண்ட அன்பு பிரதர், சந்திரஷேகர்(சந்திரசேகர் என்றால் கோபம் வரும்). 250தாயிரம் டாலர்கள் ஹெட்ச் பண்ட்டில் இன்வெஸ்ட் செய்திருக்கிறான். என்னை விட கெட்டிக்காரன்.

அம்மா பூரணி, ஹவுஸ்வொய்ப். ஆபீஸ் போய் கொண்டிருந்த அப்பாவை, “ஆமா..நீங்க ஆபிஸ் போகலைன்னு யாரழுதா. பசங்க ரெண்டும் கை நிறைய சம்பாதிக்குதுங்க, வேலையை விட்டுட்டு என்னோட பிரதோஷத்துக்கு வாங்க” என்று அப்பாவை நச்சரித்து ரிடையர்மெண்ட் வாங்க வைத்தவள். அப்பா வேலையை விட வைத்து இரண்டு வாரத்தில், ஏன் என்ன என்று தெரியாமல் அம்மா உயிரை விட்டாள். அப்போது இந்தியா சென்ற போது பார்த்த அப்பாவை மீண்டும் இப்போது தான் பார்க்கிறோம்.

அமெரிக்காவுக்கு வந்த இந்த மாதங்களில், அப்பா ரொம்பவும் மாறிவிடவில்லை. காலையில் எழுந்து, குளுரிலும் குளித்தார். சகஸ்ரநாமம் சொன்னார். மங்கி தொப்பியை போட்டுக் கொண்டு வாக்கிங் போனார். சி.என். என் பார்த்தார். நானும் ப்ரீதியும் ஆபிஸுக்கு போனபோது, ஸ்ரீயுடன் விளையாடினார். சாயங்காலம் சியாட்டல் டைம்ஸ் படித்ததார். இதோ இன்னும் படித்துக் கொண்டிருக்கிறார்.

“ப்பா…புக் ஸ்டோர் போகணும்னு சொன்னீங்களே…வரீங்களா போலாம்”

“நாழி ஆச்சே, பரவாயில்லயா ? குளிருதா வெளியே” பத்திரிக்கையை மூடி வைத்துக் கொண்டே கேட்டார்.

“அதெல்லாம் பரவாயில்லை. கார்ல தான போறோம். ஆமா எதுக்குப்பா புக் ஸ்டோர். கேட்ட புக்கு எல்லாம் ப்ரீயா லைப்ரரில கிடைக்கும்”

“இல்லடா இங்கயும் புக்கு கடை எப்படி இருக்குனு பார்க்க வேண்ட்டாமா. அதான்”, என்றார். மங்கி தொப்பியும் கழுத்து வர மூடிய லெதர் கோட்டும் போட்டுக் கொண்ட்டார்.

அப்பா ஜீன்ஸ் அணிந்தது லாஸ் வேகாஸில் தான். நயாகரா பார்க்க போக வேண்டும் என்றார். “அங்க ஒண்ணும் பெரிசா இல்லை, வெறும் தண்ணி விழறது. உங்களோட எல்.டி.சீ போட்டு குத்தாலம் டூர் போனமே அதே மாதிரி தான் இங்கயும்” என்று மனதை மாற்றி நான் தான் லாஸ் வேகாஸ் கூட்டிக் கொண்டு போனேன். சியாட்டலிலிருந்து நயாகரா செல்ல ஆளுக்கு 500 டாலராவது ஆகும். இதற்கு மேல் கார் ரெண்டல், ஹோட்டல், சாப்பாடு என்று ஒரு மூவாயிரமாவது பச்சா வரும். லாஸ் வேகாஸ் இதோ அருகில் இருக்கிறது. தடுக்கி விழுந்தால் எஸ் எப் ஓ. அங்கிருந்து பத்து தப்படி வைத்தால் லாஸ் வேகாஸ் சொர்க்கம். லாஸ் வேகாஸை அப்பா ரொம்பவும் விரும்பவில்லை என்று தோன்றியது. ப்ளாக் ஜாக் கற்றுக் கொடுத்தேன். கொஞ்சம் விளையாடினார். ஸ்லாட் மெஷினில் கொஞ்ச நேரம் தட்டினார். ரூமுக்கு போய் படுத்துக் கொண்டார். குழந்தைகளுடன் சர்க்கஸ் சர்க்கஸில் விளையாடினார். பயப்படாமல் 108வது மாடியின் மேல் ஜயண்ட்வீலில் சுற்றினார்.

பார்னஸ் அண்டு நோபில் புத்தகக் கடையில், ஆர்வமாய் உலா வந்தவர் காயத்திரி கேட்டாள் என்று ஆறேழு புத்தகங்களை விலை பார்க்காமல் வாங்கினார். தனக்காக ரிச்சர்ட் டாகின்ஸின் தி காட் டெல்யூஷன் வாங்கினார். பில் போடும் போடு உச்சுக் கொட்டின என்னைப் பார்த்து, “டேய் நான் சம்பாதிச்ச பணம் டா, நிறைய இருக்கு கவலைப்படாத.” “ஹவ் மச் டிட் யூ சே ஸார்” என்று தனது ஐசிஐசியின் இண்டர்நேஷனல் கிரெடிட் கார்டில் கட்டினார்.

எனக்கு ஆத்திரமாக வந்தது. யாராவது இந்த புத்தகத்தை எல்லாம் பணம் கொடுத்து வாங்குவார்களா ? என்ன பணத் திமிர் இந்த வயசில். அதுவும் சொந்த பையன் கிட்ட என்று மனதுக்குள் கடிந்து கொண்டேன். அவர் கண்டு கொண்டதாக தெரியவில்லை. காரில் திரும்பும் போது இருவரும் பேசிக் கொள்ளவில்லை.

நாளை தாங்க்ஸ்கிவ்ங் என்பதால் ஐ-90யில் ஏகப்பட்ட ட்ராபிக். ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தோம். அடுத்த நாள் காலை எழுந்து சியாட்டல் டைம்ஸில் வரும் ப்ளாக் ப்ரைடே தள்ளுபடி விற்பனையை பார்த்துக் கொண்டிருதேன்.

“என்ன அதிசயமா பேப்பர் படிக்கற. ஸ்டாக் மார்கெட் மட்டும் தான் படிப்ப” என்று சொல்லிக் கொண்டே வந்தார்.

“ஒண்ணுமில்லை. நான் சென்னேல்ல ப்ளாக் ப்ரைடே. அந்த அட்வெடைஸ்மெண்ட் பார்த்துட்டு இருக்கேன். எப்பேர்ப்பட்ட மில்லியனர் கூட அன்னிக்கு தான் எலக்ட்ரானிக்ஸ் வாங்குவான். Thats the way the system works here. It’s damn cheap tomorrow” என்றேன்.

“நீ என்ன வாங்கப் போற ?”

” ப்ரீதி ஒரு கேக் மேக்கர் கேக்கறா. எனக்கு ஒரு hdtv வேணும். ரெண்டுதுக்கும் டீல் இருக்கு. அதான் பார்த்துட்டு இருக்கேன். நாளைக்கு காலங்கார்த்தால போனா வாங்கிடலாம்”

“ஓ..அப்படியா”

“நீங்க வரீங்களா ?”

“ஷ்யர்”

“ப்ரீதி…அப்பா என்கூட பெஸ்ட் பைக்கு வராராம். நாளைக்கு கார்த்தால, we are getting started early.” என்று சொல்லிவிட்டு குளிக்க போனேன்.

வெள்ளிக்கிழமை காலை நாலு மணிக்கு கிளம்பினோம். Best Buyயில் ஏக கூட்டம். பார்க்கிங் செய்ய இடமில்லாமல் அரை மைல் தள்ளி பார்க் செய்து நடந்தோம். இன்னும் கடை திறந்தபாடில்லை. வெளியே கூட்டம் முண்டியத்தது. லைனில் இருந்த சிலர், சின்ன டெண்ட் போட்டு படுத்திருந்தார்கள். அப்பா இதையெல்லாம் ரசித்துக் கொண்டே வந்தார். சரியாக ஐந்து மணிக்கு நடை திறந்தார்கள். அத்தனை கூட்டமும் உள்ளே ஓடியது.

அப்பா பின்னே மெல்ல வர, கூட்டத்துடன் கூட்டமாக நானும் உள்ளே ஓடினேன். ஆளாளுக்கு கையில் கிடைத்தை எடுத்துக் கொண்டார்கள். வலது பக்க மூலையில் இருந்த டீவி செக் ஷனுக்கு சென்றேன். அதற்குள் நான் தேடிய மாடல் டீவி காணாமல் போயிருந்தது. ஒரு நான்கைந்து தான் ஸ்டாக் இருந்திருக்கும், யாரோ வாங்கிப் போய் விட்டார்கள். ப்ரீதி கேக் மேக்கர் கேட்டது அப்போதுதான் ஞாபகம் வந்தது. டக்கென்று கன்ஸூமர் அப்ளயன்ஸ் பக்கம் போனேன். அங்கும் ஒன்றையும் காணவில்லை. எதோ அரசியல்வாதியின் மரணத்திற்கு பின் கடையை சூறையாடியது போலிருந்தது. ஆங்காங்கே மெமரி பென் ட்ரைவ் வாங்க கூட்டம் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.

மொபைலில் ப்ரீதியிடம் விஷயத்தை சொன்னேன். “உங்களுக்கு டீவி மேல தான் கண்ணு. you could have first gone for this” என்றாள். அப்பா கண்ணாடி அணிந்து கூட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். போகலாம் என்று சைகை காட்டியவுடன், வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

திரும்பி காருக்கு நடக்கும் போது, ” என்னடா உம்முனு வர…உன் டீவி கிடைக்கலயா” என்றார்.

“இல்லப்பா.. ஸ்டாக் காலி” என்றேன். ஒரு கையால் காரை ஓட்டிக் கொண்டு, மொபைல்போனில் எங்கு டீவி ஸ்டாக் இருக்கிறது என்று பார்த்துக் கொண்டே வந்தேன்.

வீட்டிற்கு வந்தவுடன் இண்டெர்நெட்டில் ஒரு இரண்டு மணி நேரம் துழாவினேன். கிடைத்தபாடில்லை. இனிமே அடுத்த வருஷம் தான் டீவி என்று சொல்லிக்கொண்டேன்.

சனிக்கிழமை வந்தவுடன் தான் உரைத்தது, இன்று அப்பா ஊருக்கு கிளம்புகிறார். க்ராண்ட்பா ஊருக்கு போகிறார் என்றவுடன் பெரியவள் அழுது அழுது டெம்பரேச்சர் வந்து விட்டது. அப்பா பெட்டி எல்லாம் ஒழுங்கா ரெடி செய்து வைத்திருந்தார். பேத்திகளுடன் சற்று விளையாடிவிட்டு, டிபன் சாப்பிட்டு, விபூதி இட்டுக் கொண்டு ஊருக்கு செல்ல கிளம்பினார். குழந்தைக்கு ஜுரம் குறையாததால், ப்ரீதியையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு நாங்கள் இருவர் மட்டும் கிளம்பினோம். அப்பா குழந்தைகள் இருவரையும் உச்சி முகர்ந்து கிளம்பினார்.

காரில் ஏர்போர்ட் செல்லும் போது ஐ-5வில் பயங்கர கூட்டம். தாங்க்ஸ்கிவ்விங் வீக்கெண்ட், ஆதலால், எல்லாரும் ஊருக்கு திரும்பிச் செல்ல, ஹைவேயில் இடமில்லை. மழை வேறு கொட்டித் தள்ளியது. ஈரமான அந்த மாலையில் ட்ராபிக் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்பாவுக்காக சீடியில் எம்.எஸ்ஸின் ‘ஹரி தும் ஹரோ’ மீரா பஜன் பாடிக் கொண்டிருந்தது.

“ஆமா ஏண்டா அந்த டீவி கிடைக்கலயா” என்று என்னைப் பார்த்து மெல்ல திரும்பி கேட்டார் அப்பா.

“இல்லப்பா. ஸ்டாக் தீர்ந்து போச்சுன்னு சொன்னேனே”

” ஏன் வேற டீவி வாங்கலாமே. அதில என்ன ஸ்பெஷல் ?”

“இல்ல அதில தான் டிஸ்கவுண்ட் டீல் எல்லாம் இருக்கு. ஆயிரம் ரூவா டீவி, எட்டுநூறு ரூபாய்க்கு கிடைக்கும்”

“அதுக்காக, அடுத்த வருஷம் வர வெயிட் பண்ணப்போறியா என்ன ?”

“ஏன் அதனால என்ன. சும்மா ஏன் காசை வேஸ்ட் பண்ணணும்”

“சொல்றேனு கோவிச்சுக்காத, ப்ரீதிக்கு அந்த கேக் மேக்கர் வாங்கிக் கொடுத்தா என்ன. அவ தான் டீல் இல்லனாலும் பரவாயில்ல கோபி, வாங்கிக் கொடுங்கன்னு கேட்டாள்ல”

“அவ கேப்பா. அதெல்லாம் வேஸ்டுப் பா. உங்களுக்கு புரியாது. இந்த ஊருல பாதி வேஸ்டா செலவு தான்”

“கோபி, நீ எவ்ளோ சம்பாதிக்கற. ஒரு எழாயிரம் டாலர் இருக்குமா மாசம். ப்ரீதி எவ்ளோ சம்பாதிக்கறா. இதையெல்லாம் வெச்சுட்டு என்ன பண்ணப் போற, சொல்லு. ஒண்ணு புரிஞ்சுக்கோ, உன் கையில இல்லாதது உன் பணமில்லை. பாங்குல போட்டு வைக்கிறது எல்லாம் உன் பணமில்லை. ஷ்யூரிட்டியில்லை. அப்படி இருக்கிற பணத்துக்கு அர்த்தமில்லை”

“…அதில்ல பா. எதுக்கு வேஸ்ட் பண்ணனும்னு தான்…”

ட்ராபிக் கொஞ்சம் மூவ் செய்ய ஆரம்பித்தது. இதே ஸ்பீடில் போனா இன்னும் பத்து நிமிடங்களில் ஏர்போர்ட்டை அடைந்து விடலாம்.

“life is fleeting. ரொம்ப டெம்பரரி. இந்த சில டிகேட்ஸுக்காக தான் இவ்ளோ கஷ்டமும். அதனால் இருக்கிற போது எஞ்சாய் பண்ணுடா. நீ எதோ மாசத்துக்கு மூவாயிரம் இந்திய ரூபாய்ல சம்பாதிச்சா யோசிக்கலாம். அமெரிக்கால இருக்க, டாலர்ல சம்பாதிக்கற, ஏன் யோசிக்கற. இந்த ஊர்காரன பாரு, சம்பாதிக்கரான் செலவு செய்யறான். அந்த அளவுக்கு இருக்க சொல்லல, ஒரு இருநூறு டாலருக்காக ஒரு வருஷம் புது டீவிக்கு வெயிட் பண்ணாலாம்னு இருக்க. அதுக்காக ஏற்கனவே ஒரு நாலு மணி நேரம் வேஸ்ட் பண்ணிட்ட. you are working below you wage, my son. இந்த டீவி டீலை தேடின நாலு மணி நேரத்தில, நீ வேலை செஞ்சிருந்தா எவ்ளோ சம்பாதிச்சிருப்ப ? சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லு.”

” என்ன டாக்ஸ் எல்லாம் போக நூத்தி எண்பது டாலர் வந்திருக்கும்”

” so, புரியுதா நான் சொல்ல வரது. அப்படியே நீ இங்க வாங்கி வாங்கி போண்டியாயிட்டனு வச்சுக்க, மெட்ராஸ் வா. எதாவது ஐடி கம்பெனில வேலை கிடைக்காதா. நமக்குனு ஆர்ய கவுடா ரோடில வீடு இருக்கு. ஏற்கனெவே ஒரு கோடி கொடுத்து அபார்ட்மெண்ட் கட்ட ஆளுங்க வெயிட் பண்ணறாங்க. போய் பாத்தா தான் தெரியும், வீடு இருக்கா இல்ல கேக்காம அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸ் கட்டிண்ட்டாங்களான்னு. ஞாபகம் இருக்கா, அம்மாவுக்கு திடீருனு உடம்பு வந்த போது, நான் மியாட்ல இருந்து ஹெலிகாப்டர்ல பாம்பேக்கு உங்கம்மாவை airlift பண்ண ரெடியாயிருந்தேன், கூட வர டாக்டர் இல்லனு அனுப்பமுடியல. அந்த ஆர்ய கவுடா வீட்டால என்ன பிரயோஜனம், my wife was long gone” என்று சொல்லும் போது குரல் விம்மிற்று.

விமான நிலையம் வந்து விட, பார்க்கிங்கில் வண்டியை விட்டு, பெட்டிகளை ட்ராலியில் வைத்து தள்ளிக் கொண்டு வந்தேன். திடீரென்று அப்பா இப்படி பேசியது எனக்கு ஷாக்காயிருந்தது. இரண்டு பேரும் பேசாமல் நடந்து கொண்டிருந்தோம். தன் கேட்டுக்கு வந்தவுடன், பர்சில் இருந்த பாஸ்போர்ட்டை சரி பார்த்துக் கொண்டார்.

“சரிடா கோபி. நான் கிளம்பறேன்.” என்றார். டக்கென்று கட்டிக் கொண்டேன்.

” கவலைப் படாத. போய் போன் பண்ணறேன். பசங்கள பாத்துக்கோ”.

“சரிப்பா. ஓகே” என்றேன். அவர் செக்-இன் செய்ய காரிடாரில் நடந்து போய் கண்ணிலிருந்து மறைந்து போனார்.

காரை எடுத்துக் கொண்டு வீடு திரும்பும் போது, அழுகை பொத்துக் கொண்டு வந்தது. கரெக்டாகத் தான் சொன்னார். பணம் என்ன பணம். தன் குழந்தை கேட்ட புத்தகம் வாங்கித் தர முடியாமல். மனைவி கேட்கும் வீட்டுச் சாமான் வாங்கித் தர முடியாமல். working below your wage, my son. என்ன ஒரு சரியான வார்த்தை. திடீரென்று, திரும்பவும் அப்பாவை பார்ப்போமா என்று பயம் வந்தது. அவர் கையசைத்து விட்டு நடந்து போனது ஞாபகம் வந்தது. இனிமேல் இவரை இந்தியா போனால் தான் ரத்தமும் சதையுமாய் சந்திக்க முடியும், அதுவர யாஹூ சாட்டில் தான் பார்க்க முடியும். வயது வேறு ஆகி விட்டது. கண்டிப்பாய் நயாகரா கூட்டிக் கொண்டு போயிருக்க வேண்டும். கேட்ட புத்தகத்தை வாங்கிக் கொடுத்திருக்க வேண்டும். டேரக்ட் ப்ளைட்டில் அனுப்பியிருக்க வேண்டும். சே !!

மழை நின்றிருந்தது. ட்ராபிக் சற்று குறைய, அரை மணிக்குப் பின் வீட்டருகே வந்து விட்டேன். கண்ணில் பட்ட வால் மார்ட்டின் உள்ளே நழைந்தேன். டீவி செக் ஷனில் நான் தேடிய டீவி 250டாலர் மலிவாய், எழுநூற்றி ஐம்பதுக்கு டீலில் கிடைத்தது. வாங்கினேன். அடுத்ததாக கேக் மேக்கர் டீலில் கிடைக்கிறதா என்று தேடிப் பார்க்க வேண்டும்.


subbudu@kirukkal.com

Series Navigation

சுப்புடு

சுப்புடு