ஜிகினா

This entry is part [part not set] of 33 in the series 20071220_Issue

ஹமீது ஜாஃபர்



மும்பை அந்தேரியிலுள்ள எங்கள் வாடிக்கையாளர் அலுவலகத்தில் வேலையை முடித்துக்கொண்டு லிஃப்ட்டுக்கு காத்திராமல் விறுவிறுவென்று படி இறங்கினேன். நான் எந்த வேகத்தில் இறங்கினேனோ அதே வேகத்தில் எதிரில் வந்த ஒருவன் என்னை இடித்துக்கொண்டு மேலே ஏறினான். இடி பலமாக இருந்ததால் கோபத்தில் “எருமை மாடு, மனுசன் எதிர்லே வர்றதுகூடத் தெரியாமல் பண்டி மாதிரி இடிச்சிக்கிட்டுப் போறானே! கண் என்ன பொரடியிலயா இருக்கு?’ என்று அவனுக்கு தமிழ் தெரியாது என்ற தைரியத்தில், தமிழில் திட்டிக்கொண்டே அவனைப் பார்க்காமல் இறங்கினேன்.

‘சாரி சார், போகிற அவசரத்திலே தவறுதலாக நடந்துடுச்சு, மன்னிச்சுடுங்க!’ என்று தமிழ் வார்த்தைக் கேட்டதும் எனக்கு தூக்கிவாரிப்போட்டது. இறங்கிய நான் அதிர்ச்சி அடைந்தவனாகத் திரும்பிப்பார்த்தேன். பார்த்தமுகமாகத் தெரிந்தது. சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டாக, ‘நீங்க….ஆனந்த்….!?’ என்றதும், ஆமாம் நான் ஆனந்தன், நீங்க ஜாஃபர்தானே என்றார். அடுத்த வினாடி நாங்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக்கொண்டோம். எங்கள் உள்ளத்தில் ஒருவித நெகிழ்வு ஏற்பட்டு கண்களில் நீர் சுரக்கத்தொடங்கியது. பிடிப்பை விலக்கி இருவரும் ஒருவர் தோளை ஒருவர் பிடித்தவாறு முகத்தை ஏறிட்டுப் பார்த்தபோது எங்கள் கண்களில் பொல பொலவென்று ஆனந்தக் கண்ணீர் வடிந்துக்கொண்டிருந்தது. ஆம், இருக்காதா என்ன? உயிர் நண்பர்கள் இருபத்தைந்தாண்டுகளுக்குபின் சந்தித்தால் எப்படி இருக்கும்?

‘ஏம்பா எப்படி இருக்கே?’ என்றான் ஆனந்தன். ‘ஏம்பாவா? “ஏண்டா” ன்னு சொல்றா மடையா!’ என்றேன் நான். ஆம், நாங்கள் இருவருமே பால்ய நண்பர்கள். ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்து; ஒரே தட்டில் சாப்பிட்டு; ஒரே பாயில் தூங்கி; ஒரே குளத்தில் மணிக்கணக்கில் நீச்சலடித்து; ஒரே மாதிரி உடை அணிந்து; ஒன்றாக அரட்டை அடித்து; ஒன்றாக மாங்காய் திருடி உடையவன் வீட்டுக்கு பங்கு கொடுத்தது; ஓணான் வாயில் சுருட்டை வைத்து ரயில் தண்டவாளத்தில் வைத்தது; நீலாதாட்சி அம்மன் கோவிலில் ஷேக் சின்ன மௌலானாவின் நாதஸ்வர கச்சேரிக் கேட்டது இப்படி ஒன்றுக்குள் ஒன்றாக அல்லவா இருந்தோம். எங்களுக்குள் இந்து முஸ்லிம் என்ற எந்த பாகுபாடும் கிடையாது. என் வீட்டில் ஒரு நாள் அவன் சாப்பிட்டான் என்றால் மறு நாள் அவன் வீட்டில் நான் சாப்பிட்டாக வேண்டும். இவன் இரண்டு நாள் வரவில்லை என்றால் என் வீட்டில் எங்கே ஆனந்தன் என்று கேட்பார்கள். அவன் வீட்டுக்கு நான் போகவில்லை என்றால் அங்கேயும் அதே நிலைதான். தீபாவளியும் ரம்ஜானும்; பொங்கலும் பக்ரீத்தும் ஒரே மாதிரி, அந்த அளவுக்கு குடும்ப அளவில் அன்னியோன்னியமாக இருந்தோம்.

கல்வி முடிந்ததும் நான் துபைக்கு வந்துவிட்டேன், நான் வந்த கொஞ்ச நாளில் அவர்கள் கிராமத்திலுள்ள வீட்டை விற்றுவிட்டு சென்னையில் குடியேறிவிட்டார்கள். அதன் பிறகு எங்களுக்குள் இருந்த நெருக்கம் நீண்ட இடைவெளியாகிவிட்டது. வருட விடுமுறையில் இந்தியா போகும்போதெல்லாம் சந்திக்கவேண்டும் என்று நினைப்பேன், முடியாமலே போய்விட்டது. இருபத்தைந்தாண்டுகளுக்குப் பிறகு எதிர்பாராதவிதமாக மும்பையில் அவனை சந்தித்தபோது மகிழ்ச்சியின் உச்சிக்குப்போனவனாக ஆனந்தா.., ‘இப்பொ எங்கே இருக்கே? என்ன செய்றே?’ என்றேன். ‘நீ எங்கே இருக்கே? அதெ மொதல்லெ சொல்லு.’ என்றான்.

‘சொல்றேன். ஆனா அதுக்கு முந்தி நீ எதோ அவசரமாகப் போய்கொண்டிருந்தாய், போய் மொதல்லெ உன் வேலையை முடி, நான் இங்கே காத்திருக்கேன்’ என்றேன்.

‘உன்னைவிட வேலை எனக்கு முக்கியமல்ல, நாளைக்குக்கூட செஞ்சுக்கலாம். வா என்கூட என் ஆபீஸ் போய்ட்டு அப்புறம் ஃப்ளாட்டுக்குப் போகலாம். அதுக்குமுந்தி ஒனக்கு எதாவது வேலை இருந்தா சொல்லு அதெ மொதல்லெ முடிச்சுட்டு ஆபீஸ் போலாம்.’

‘இல்லை, இன்னைக்குள்ள வேலை எல்லாம் முடிஞ்சிடுச்சு, இனி நாளைக்குத்தான். அப்படியே இருந்தாலும் அதெ நாளைக்குத்தான் செய்வேன். உன்னைப் பார்த்த சந்தோஷத்துலே வேறே எதும் எனக்கு முக்கியமில்லே. இன்னைக்குப் பூராவும் ஒன்னோட இருக்கனும், ஒன்னா சாப்பிடனும்.’

‘ஷ்யூர், அதுலே எந்த சந்தேகமுமில்லே, இன்னைக்கு என்கூட தங்குறே!’

‘அப்பொ உன் குடும்பம்…?’

‘அதெல்லாம் கார்லெ போகும்போது பேசிக்கிட்டுப் போகலாம்’ என்று சொல்லியவாறு என்னை அவன் காரில் அழைத்துக்கொண்டு போனான். கார் எங்கெங்கேயோ சுற்றி சிறிது நேரத்தில் அவன் ஆபீஸை அடைந்தோம். அவன் தன் பிஸினஸ்ஸையும் தங்கியிருக்கும் இடத்தையும் பற்றி சொல்லிக்கொண்டு வந்தான்.

அவன் ஆபீஸ், விசாலமாக இருந்தது. கம்ப்யூட்டர் சகிதம் பெரிய டேபிள், இரண்டுமூனு டெலிபோன், இண்டர்காம், இத்தியாதி இத்தியாதி. அவன் பார்வையில் படும்படி மேஜையின்மீது இரண்டு பெண்களின் போட்டாவும் கூடவே இருந்தது. பார்வையாளர் வந்தால் அமர்ந்து பேச குஷன் சோஃபாக்கள் தனியே இருந்தன.

அவன் ஆபீஸை ஒருமுறை நோட்டமிட்டவாறு கேட்டேன், ‘ஏண்டா அந்த போட்டாவுலே இருக்கிறது யாரு?’

‘அதுலே இந்த போட்டா என் மனைவி, அது மேனேஜிங் டைரக்டர். வா புறப்புடுவோம் அவ வர்றதுக்கு முந்தி. வந்துட்டா வேலை கொடுக்க ஆரம்பிச்சுடுவா, அப்புறம் எல்லாம் கொலாப்ஸாயிடும்.’ என்றவாறே என்னை இழுத்துக்கொண்டு தன் இல்லம் நோக்கிப் புறப்பட்டுவிட்டான்.

‘சரி இந்த பிஸினஸை எப்பொ ஆரம்பிச்சே? நான் முதல் தடவை துபையிலேந்து வந்தபிறகு உன்னை விசாரிச்சேன், நீ குவைத் போயிட்டதாக அல்லவா சொன்னாங்க!’

‘அது ஒரு பெரிய கதை, வீட்டுக்குப்போய் பேசிக்கொள்ளலாம். சரி ஒனக்கு எத்தனை புள்ளைங்க? உன் உம்மா, வாப்பா, தங்கச்சிங்க எல்லாம் எப்படி இருக்காங்க, நீ துபையிலே என்ன செஞ்சிக்கிட்டு இருக்கே?’

‘எனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். இரண்டும் படிச்சிக்கிட்டு இருக்காங்க, உம்மாவும் வாப்பாவும் நல்லபடியா இருக்காங்க, தங்கச்சிங்க எல்லாம் கல்யாணம் ஆயி அதுஅதும் லைஃப்லே செட்டில் ஆயிடுச்சு. நான் டிரேடிங் கம்பெனியிலே மேனேஜரா இருக்கேன். ஆமா, ஜாஃபர் நாநா, ஜாஃபர் நாநான்டு மூக்கிலே சளிவடிய சுத்திக்கிட்டு வருமே உன் கடைசி தங்கச்சி சுமித்திரா, அவ எங்கே இருக்கா? ஒனக்கு கொழந்தைங்க இருக்கா?’

‘அவ கல்யாணம் ஆகி இப்பொ ஃபிரான்ஸ்லெ ஜோ…ரா இருக்கா.’

‘அப்புறம் உன் குடும்பம், அம்மா அப்பா?’

‘எல்லோரும் நல்லபடியா இருக்காங்க சென்னையிலே, எனக்கு இரண்டு பையன் ஒரு பொண்ணு. மூத்தவனுக்கு படிப்பு முடியுற நிலையிலே இருக்கு, சின்னவனுக்கு இன்னும் இரண்டு வருசம் பாக்கி இருக்கு, பொண்ணை கல்யாணம் பண்ணிக்கொடுத்துட்டேன். இப்பொ அவ கனடாவுலெ இருக்கா. மனைவி சென்னையிலே இருக்கா, நான் இங்கே இருக்கேன்.’

அவனுடைய ஃப்ளாட்டை அடைவதற்குமுன் இங்கே லன்ச்சை முடித்துக்கொண்டு போகலாம் என்று ஒரு ஸ்டார் ஓட்டலில் தன் காரை நிறுத்தினான். எனக்கு எந்த இடம் என்று புரியவில்லை. நாங்கள் உள்ளே போய் பகல் உணவை முடித்துக்கொண்டு அவன் இருப்பிடத்திற்கு சென்றோம். அடுக்கு மாடி கட்டிடங்கள் நிறைந்த நியு பாம்பேயில் 18 மாடி கட்டிடத்தில் 12 வது மாடியில், இரண்டு பெரிய பெட் ரூம், ஒரு விசாலமான ஹால், ஒரு சிறிய மெய்டு ரூம். இவை அனைத்தும் AC செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டு ஸ்டார் ஹோட்டலைவிட நேர்த்தியாக இருந்தது. பார்ப்பதற்கு ஒரு சிறிய அரண்மனைபோல் காட்சி அளித்தது அவனுடைய ஃப்ளாட்.

ஹாலில் நான்கைந்து பேர் உட்காரும் அளவுக்கு வசதியான சோஃபா நடுவில் கண்ணாடியால் ஆன டீபாய், வெளி உலகத்தை துண்டிக்க உயர் ரக கர்டன், ஒரு மூலையில் 46″ ப்ளாஸ்மா TV, கூடவே Receiver, Home theater என்று Digital System இத்யாதி இத்யாதி; மறு மூலையில் ஜப்பானிய indoor செடிகளின் அணிவகுப்பு; ஹாலின் ஒரு பக்க சுவற்றின் மத்தியில் M.F.ஹுசைனின் கைவண்ணத்தில் ஒரு பெண் மெல்லிய வெள்ளை நிற மஸ்லின் துணியால் தன்னை மூட முயற்சித்துக்கொண்டிருக்கிறாள். இன்னொரு பக்கம் பல தலைப்புகளில் புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்ட shelf, அதற்கு மேலே அவன் கம்பெனி MD தங்க நிறத்திலான நான்கு சட்டத்துக்குள் ஓவியமாக சிரித்துக்கொண்டிருந்தாள். மின் விளக்குகள் தெரியாவன்னம் ஜிப்ஸம் போர்டினால் அலங்கரிக்கப்பட்ட ceiling, அங்கே செங்கால் நாரைகள் சில பறந்துகொண்டிருந்தன.

வரவேற்பறை இப்படி என்றால் பெட்ரூம் வேறு விதமாக இருந்தது. கிங் சைஸ் பெட் அறையின் நடுபாகத்தை அடைத்துக்கொண்டிருந்தது. நேர் எதிரே இரண்டு அன்னப் பறவைகள் தாமரைத் தடாகத்தில் தங்கள் கழுத்தை ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு சுண்டுகளை உராய்த்துக்கொண்டிருந்தன. தடாகத்தின் மூன்று பக்கங்களிலும் புல் வெளி, இடையிடையே தும்பைப்பூ போன்று பல நிறங்களில் அழகிய பூக்கள் மலர்ந்திருந்தன. சுவரில் வரையப்பட்ட அந்த ஓவியம் இயற்கையாக இருப்பதுபோல் அமைந்திருந்தது. அந்த ஓவியத்தைமட்டும் பார்ப்பதற்கென்று பிரத்தியேக லைட், படுத்துக்கொண்டே ஓவியத்தைப் பார்க்கலாம் ; பெட்டிற்கு பக்கத்தில் பிரிண்டர் சகிதமாக கம்ப்யூட்டர், மற்றும் டெலிபோன் அமைக்கப்பட்டிருந்தது.

‘ஏண்டா? இவ்வளவு அழகான ஃப்ளாட்டில் நீ மட்டும் தனியாவா இருக்கே? ஏன் உன் குடும்பத்தை இங்கே வச்சுக்கொண்டால் என்ன கேடு வந்துச்சு?’ என்று கேட்டேன்.

‘வச்சுக்கிலாம். ஆனல் பெரிய சுனாமி வந்துடும். அப்புறம் எதுவுமே இல்லாம போய்டும், அது சரி…, நான் தனியாக இருக்கேன்னு யார் சொன்னது?’ என்று என்னை மடக்கினான்.

‘அப்படியானா இன்னொரு பொண்டாட்டியா?’

‘இல்லை; ஆமா, அந்தமாதிரித்தான்..!’

‘என்னடா இல்லை, ஆமா? எதெ மறைக்கிறே?’

‘அது ஒரு கதை, சொல்றேன் கேள்!’ என்று தொடங்கினான்.

‘நீ துபை போனபிறகு உன்னிடமிருந்து விசா வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நீ வசமா ஓரிடத்தில் மாட்டிக்கிட்டே, என் மவனை மாட்டிவிட்டுட்டானுவ என்று உன் வாப்பா கண்ணீர் மல்க சொன்னதும் நான் வேறு வழியில் துபை வருவதற்காக முயற்சி செய்தேன். அப்போதுதான் குவைத்துக்கு ஒரு சான்ஸ் கெடச்சுது. ஒன்னை மாதிரி நானும் அங்கே போய் மாட்டிக்கிட்டேன். கோடை காலம், படிச்சப் படிப்புக்குரிய வேலை கெடைக்காம கடைசியா ஒரு ஷிப் ரிப்பேரிங் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். சம்பளம் கட்டை, ஓவர் டைம் செஞ்சு மேனேஜ் பண்ணிக்கிட்டு இருந்தேன். அப்பத்தான் எங்க குடும்பம் சென்னையில் செட்டிலானது. இந்த கம்பெனியெ விட்டுட்டு வேறெ கம்பெனிக்குப் போக முடியாத சூழ்நிலை, கஷ்டத்தைப் பாக்காம மூனு வருஷம் பல்லெ கடிச்சிக்கிட்டு வண்டியெ ஓட்டினேன். ஊருக்கு லீவுலெ புறப்படுற சமயத்துலே செய்லிங் சான்ஸ் கெடச்சுது. கப்பல் போகும்போதே வேலை செய்துக்கொண்டு போகனும். கப்பல் பிரேஸிலுக்கு போவுது, அதனாலெ லீவை கேன்ஸல் பண்ணிட்டு ஜாபை ஒத்துக்கிட்டேன்.’

‘அப்படி என்னடா வேலை?’

‘கப்பல்லெ இருந்த மூனு ஜெனரேட்டர்லெ ஒரு ஜெனரேட்டருடைய கிரேங்க் ஷாஃப்ட் டேமேஜ் ஆயிடுச்சு, அதெ எடுத்துட்டு புது ஷாஃப்டை பொருத்தனும். கிரேன்க் ஷாஃப்ட்டுன்னா என்னன்னு தெரியுதா?’

‘தெரியும்டா மேலே சொல்லு.’

‘மூனு வருஷத்துலே கப்பல்லெ எல்லாமே அத்துபடி ஆயிடுச்சு, தவிர இதுலெ நான் எக்ஸ்பர்ட், அதனாலெ என்னை அனுப்பினாங்க.’

‘நீ மட்டும்தான் போனியா?’

‘ஆமாம், நான் மட்டும்தான் போனேன். ஜெனெரேட்டர் under waranty அதனாலெ அந்த கம்பெனியிலிருந்து ஒரு எஞ்ஜினியர் வந்திருந்தான், அவன் இங்லாந்துகாரன்.’

‘நீங்க இரண்டுபேர்மட்டும்தானா? அப்டீன்னா ஜெனரேட்டர் சின்னதா?’

‘இல்லை 600 கிலோ வாட், பெரிசு. எஞ்ஜின் ரூம் பணியாளர்கள் உதவிக்கு இருந்தார்கள். இதுலே என்ன விஷேசம்னா ஆபிஸர்கள் இங்லாந்துகாரர்கள் 2nd officer ஐ தவிர. அவர் மட்டும் இந்தியா, சிப்பந்திகள் மேற்கு ஆப்ரிக்கா. இந்தியன் என சொல்வதற்கு 2nd ஆபிஸரும் நானும்தான்.’

‘சகண்டு ஆபிஸர் எந்தவூர், தமிழ் நாடா?’

‘இல்லை, பாம்பே ஃபார்ஸி பாவாஜி. அவர் மட்டும் ஃபேமிலியோடு இருந்தார்.’

‘கப்பல்லெ ஏறின கையோடு வந்த எஞ்ஜினியரும் நானும் ஜெனரேட்டரை இன்ஸ்பெக்சன் பண்ணிட்டு வேலையை ஆரம்பிச்சிட்டோம். காலையிலே எட்டு மணிக்கி வேலையை ஆரம்பிச்சா சாயந்தரம் அஞ்சு மணிக்கு நிறுத்திடுவோம். மதியம் ஒரு மணி நேரம் லன்ச் பிரேக். அதுக்கு பிறகு குளிச்சிட்டு டின்னரை முடிச்சிட்டு ஒரு எட்டு எட்டரைக்கு ஆபிஸர்ஸ் கிளப்புக்குப் போனா பதினொன்னு பண்ணண்டு மணிக்குத்தான் என் கேபினுக்கு வருவேன்.’

‘கிளப்புக்குப் போய் என்ன செய்வே? தண்ணி அடிப்பியா?’

‘நடுக்கடல்லெ பொழுது போக்கிறதுக்கு என்ன இருக்கு? ராத்திரி ஆனா எல்லா ஆபிஸர்களும் வருவாங்க. சிலர் தண்ணி அடிப்பாங்க, சிலர் சீட்டு வெளையாடுவாங்க, சிலர் விடியோ பாத்துக்கிட்டு இருப்பாங்க. நான் போன புதுசுலே இரண்டு நாள் பேக்கெ பேக்கென்னு முளிச்சேன் என்ன செய்றதுன்னு தெரியாம, பீரை வாங்கிக்கிட்டு விடியோ பார்ப்பேன் இல்லேன்னா சீட்டு வெளையாடுறதைப் பார்ப்பேன்.’

‘அது ஒரு புதுமாதிரியான கேம், ரம்மி எனக்கு தெரியும். இது டோட்டலா வேறு மாதிரி, ஆனா இதுக்கு மினிமம் நாலுபேர் வேனும். சகண்டு ஆபிஸர் பொண்டாட்டி அவ பெயரு “ஜிகினா” நல்லா விளையாடினா! அவ ஆடுறதையே பாத்திக்கிட்டு இருந்தேன்.

‘பொம்பளையாச்சே அதான் பாத்திக்கிட்டிருந்திருப்பே!’

‘சும்மா இருடா, சொல்றதெ கேளு.’

‘ஸ்கூல்லெ படிக்கிற காலத்துலே எத்தனை வெடைங்களெ தொரத்துனோம்!’

‘இரண்டு நாள்ளே என்கூட பழக்கமாயிட்டா. வேறே இந்தியன் யாரும் கிடையாது, புருஷனை விட்டா நான்தான். எனவே என்கூட இந்தியில் பேசுவா. ஒரு நாள் நீ விளையாடுறியான்னு கேட்டா, எனக்கு இந்த கேம் தெரியாதுன்னு சொன்னேன். நான் சொல்லித்தாறேன் உட்காரு என்று அவளருகில் என்னை உட்காரவச்சு சொல்லிக்கொடுத்தா. இரண்டு கேம் பார்த்தபிறகு மூனாவது கேம்லேந்து நானும் வெளையாட ஆரம்பிச்சேன். முதல் நாள் தோத்துக்கிட்டே வந்தேன். நான் என்ன மிஸ்டேக் பண்றேன் என்பதை சொல்லிகொடுத்தாள்.’

‘அடுத்தடுத்த நாள் கேம்லெ நான் விண் பண்ண ஆரம்பிச்சிட்டேன். சொல்லிக்கொடுத்த அவளையே மடக்கினேன், நான் ஆடுற விதத்தைப் பார்த்துட்டு ஆச்சரியப்பட்டவளா “Ananth, you are great”ன்னு பாராட்ட ஆரம்பிச்சிட்டா.’

‘இண்ட்ரஸ்டிங், ம்… அப்புறம்!’

‘அப்புறம் என்ன, நாங்க இரண்டுபேரும் பார்டனர்ஷிப்லே எல்லாரையும் விண் பண்ணிக்கிட்டிருந்தோம். விளையாடும்போது எனக்கு பக்கத்திலே உட்காந்திருப்பா; ரொம்ப நெருக்கமா இருப்பா, அவ ஒடம்பு கொதிக்கிறது என்னாலே ஒனர்ற அளவுக்கு நெருக்கமா இருந்தா, எனக்கு என்னமோ போல இருக்கும். நான் நகர்ந்தாகூட அவ நெருங்கி வந்துடுவா.’

‘அவ புருஷன் ஒன்னும் கண்டுக்கிலையா?’

‘அது கப்பல்டா, எல்லோரும் ஒரு ஃபேமிலி மாதிரி, யாரும் பெரிசா எடுத்துக்கமாட்டாங்க.

இப்படி தினமும் விளையாடினோம். ராத்திரி ஒரு மணிவரைக்கூட விளையாடிக்கிட்டிருப்போம். நான் பண்ணண்டு, பண்ணண்டரை வரை இருந்திட்டுப் போய்விடுவேன். அவ எப்போ போவான்னு தெரியாது. அவளுக்கு எந்த வேலையும் கிடையாது அதனாலெ ரெண்டு மணி மூனு மணிக்கூட ஆகலாம். ஆனால் அவ புருஷன் ஒவ்வொரு நாளும் தான் டூட்டிக்குப் போகும்போது அவள்ட்டே சொல்லிட்டுதான் போவான். அவனுக்கு டூட்டி 12 to 4. சாதாரணமாக சகெண்ட் ஆபீஸருக்கு இந்த டைமிங்லெதான் டூட்டி இருக்கும். ஒரு நாளைக்கு இரண்டு டூட்டி. மத்தியானம் 12 to 4 அப்புறம் நடு இரவு 12 to 4.’

‘இப்படித்தான் கப்பல்லெ டூட்டி இருக்குமா?’

‘மோஸ்ட்லி இப்படித்தான் ஸ்பிளிட் டூட்டியாக இருக்கும். டைம் வேனும்னா மாறும்.’

‘அப்பொ தினமும் சீட்டுதான் வெளையாடினாயா?’

‘வேறே கேம் இருக்கு, டேபிள் டென்னிஸ் இருந்துச்சு. தேர்டு இன்ஜினியர் பெயர் ஜான், பிரிட்டிஷ்காரன் இருந்தான் அவன் விளையாடுவான். ஒன்னுரண்டு நாள் அவன்கூட விளையாடினேன், மத்தபடி இவகூடத்தான். சீட்டு விளையாட ஆள் சேராத நாள்ளே நாங்க ரண்டுபேரும் ஸ்விம்மிங் பூல் சைடு போய் பேசிக்கிட்டு இருப்போம்.’

‘சரக்கு கப்பல்லெ ஸ்விம்மிங் பூல்லாம் இருக்குமா?’

‘ஸ்விம்மிங் பூல்னா பெரிசா நெனைச்சிடாதே ஒரு தொட்டி அவ்வளவுதான். ரண்டுபக்கமும் “சன் பாத்” செய்றதுக்கு ஈஸி சேர் இருக்கும். பிரிட்டிஷ் காரனுக்குத்தான் எங்கே போனாலும் சுகம் வேணுமே!’

‘எங்க கப்பல் மத்தியதரைக் கடலை அடைந்துவிட்டது. அன்று நாங்க ஸ்விம்மிங் பூல் பக்கம் போய் பேசிக்கிட்டு இருந்தோம். நல்ல கிளைமேட்; வானம் தெளிவா இருந்துச்சு; நிலா வெளிச்சம்கூட லேசாதான் இருந்தது; சிலு சிலுன்னு காத்து வீசிக்கிட்டிந்துச்சு; கொஞ்ச நேரத்திலே குளிர ஆரம்பிச்சிடுச்சு.

குளிருது, வா கேபினுக்குப் போய் பேசிக்கிட்டு இருக்கலாம் என்று என்னை அவ கேபினுக்கு அழைச்சிக்கிட்டு போய்ட்டா. அப்பொ டைம் பண்ணண்டரை இருக்கும். அவ புருஷன் டூட்டிக்குப் போய்ட்டான். அங்கிருந்த சோஃபாவில் நான் அமர்ந்தேன். என்ன சாப்பிடுறே? குளிருக்கு சூடா ஹார்லிக்ஸ் தாரேன் என்றாள். நான், வேண்டாம் டீ மட்டும் கொடுங்கள் என்றேன். இரண்டு நொடியில் ஒரு டீயுடன் என்னருகில் அமர்ந்தாள். உங்களுக்கு… என்று இழுத்தபோது. எனக்கு வேண்டாம் என்றாள்.

நான் டீ குடிப்பதையே பார்த்துக்கொண்டிருந்தாள். என்ன அப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவள் உன் அழகை ரசிக்கிறேன் என்றாள். நான் பாதிதான் குடித்திருப்பேன் என் கையிலிருந்த டீயை வாங்கி பாக்கியை அவள் மடக், மடக் என்று குடித்துவிட்டாள். நான் திகைத்துப் போய் அவளையே பார்த்தேன்.

என் திகைப்பு அடங்கவில்லை சரேலென்று என்னை தன் பக்கம் இழுத்து மடியில் கிடத்தி மாறி மாறி முத்தமிட ஆரம்பித்துவிட்டாள். நான் அதர்ச்சியில் திமிறினேன், பலம் கொண்டமட்டும் என்னை அமுக்கிப் பிடித்துக்கொண்டாள். உங்கள் புருஷன் வந்துவிடப்போகிறார் என்றேன். ‘உஷ்…’ சத்தமா பேசாதே, அவன் இப்போது வரமாட்டான் காலை 4 மணிக்குத்தான் வருவான், கப்பலின் முழு பொறுப்பும் அவன் கையில் இருக்கிறது. மெடிட்டரேனியன், பிஸி டிராஃபிக் உள்ள கடல் ஆகவே மிகவும் ஜாக்கிரதையாக கப்பலை ஓட்டவேண்டும் எனவே எந்த காரணம் கொண்டும் வரவே மாட்டான் என்று அடித்து சொன்னாள். வெறிகொண்ட மட்டும் என்னை முத்தமிட்ட அவள் சற்று தளர்த்தியபோது நான் மெதுவாக எழுந்து நழுவப்பார்த்தேன். ஓடப்பார்க்காதே என்று சொல்லியவாறு என் கையை இருக்கமாகப் பிடித்துக்கொண்டு பெட்ரூமுக்கு இழுத்துக்கொண்டுபோய் ஒரே தள்ளாக என்னை பெட்டில் கிடத்திவிட்டாள். எனக்கோ பயத்தில் அந்த குளிரிலும் வியர்வை பொலப் பொல என்று கொட்ட ஆரம்பிச்சிடுச்சு.

பயந்து சாகாதே, நிச்சயமாக அவன் வரமாட்டான். கொஞ்ச நேரம் உலகை மறந்து இருக்கலாம் என்று சொல்லிக்கொண்டே என்னை எழுந்திருக்கவிடாமல் என்மீது அமர்ந்தவாறு சமாதானம் செய்துக்கொண்டே தன் உடையை கழட்ட ஆரம்பித்தவள் வினாடியில் முழுமையாகிவிட்டாள்.

நான் அவளுடன் பழக ஆரம்பித்ததிலிருந்து தூரமாகவும் பக்கத்திலும் அமர்ந்து அவள் அழகை ரசித்திருக்கிறேன். நல்ல அழகு, எளிமையான தோற்றம். முழங்காலைத் தொடுமளவுக்கு நீண்ட கூந்தல், அதை இருபக்கமும் சடைபின்னி நடுவில் முடியோடு இனைத்து அள்ளிமுடியாமல் தொங்கவிட்டிருப்பாள்; அவளது எடுப்பான பிட்டங்களை மறைத்தும் மறைக்காமலும் இருக்கும் பரந்துகிடக்கும் கூந்தல் ; அகலமான பெரிய நெற்றி; வில்லை வலைத்ததுபோல புருவங்கள், அந்த புருவங்களின் அழகை கூட்டுவதுபோல் காந்தர்வக் கண்கள்; வட்டமான சிவந்த முகம்; இரட்டை நாடி; சிரிக்கும்போது கன்னத்தில் விழும் லேசானக் குழி அவள் அழகை மேலும் அதிகப்படுத்தியது; கொஞ்ச…ம் கட்டையான உடம்பும் என்றாலும் கொடி இடையாள் அல்ல; சுருக்கமாக சொன்னால் நார்மல் பாடி. சுடிதாரில் வரும்போது முன்னழகைவிட பின்னழகை ரசித்துக்கொண்டே இருக்கலாம் என தோன்றும். மொத்தத்தில் தேவதைப் போல் காட்சி அளிப்பாள். குரல்கூட இனிமையாக இருக்கும், முதிர்ந்த அறிவாளிமாதிரி ஆழமான கருத்துடன் பேசுவாள், விகாரமான ஒரு வார்த்தைகூட அவள் வாயிலிருந்து வராது. அத்தகையவள் அப்படி நின்றபோது என்னால் நம்பமுடியாமல் சற்று நேரம் வெறித்துப் பார்த்தேன்.

என்ன அப்படிப் பார்க்கிறாய்? என்றாள். உன் அழகை ரசிக்கிறேன், இல்லை இல்லை அதை பருகுகிறேன் என்றேன் தொண்டையிலிருந்த எச்சிலை விழுங்கிக்கொண்டே…’

‘அப்பொ தாங்கள் சாஞ்சிட்டீங்க?’

‘ஆமாடா, என்னால் அதுக்குமேல் தாங்கமுடியலெ!’

‘ம்… மேலே சொல்லு!’

‘அவளை அந்த நிலையில் பார்த்தபோது எப்பொவோ படிச்ச கலைஞர் அவர்களின் கவிதை ஒன்னு ஞாபகத்துக்கு வந்துடுச்சு. “சித்திரை மாதம் மேகமில்லாத் தெளிவான வானம் பால் நிலவு, அந்த நிலவைவிட ஒளிமிகுந்த தன் காதலியின் முகத்தைப் பார்த்து கண் கூசியவாறு சற்று பார்வையை கீழே இறக்கினானாம் நாயகன். அங்கு இரண்டு மலைகளைக் கண்டானாம், அம் மலைகளைக் கடந்து வந்தபோது ஒரு பெரிய சமவெளி இருப்பதைப் பார்த்தானாம், சமவெளிதானே என்று அலட்சியமாக நடந்து வந்தபோது அங்கு ஒரு பள்ளத்தாக்கு இருப்பது தெரியாமல் அதில் விழுந்தவன் மீண்டும் எழுந்திருக்கவே இல்லை” என்று வருணித்திருந்தார்.’

‘இது கலைஞரின் பள்ளிக்கூடக் காலத்தில் அவரின் தமிழாசிரியர் சொன்னதாக ஒரு முறை குறிப்பிட்டிருந்தார். இது குமுதத்தில் படிச்ச ஞாபகம். அதுமாதிரி தாங்களும் விழுந்திட்டீங்க!’

‘அவளை தலைமுதல் கால் வரைப் பாத்துட்டு மறுபடியும் மேலிருந்து கீழே இறங்கினேன்.கடுப்பாயி, பாத்தது போதும்னு அப்படியே என்மேலே சாஞ்சுட்டா, அந்த இரண்டு மார்பகங்களின் அழுத்தம் நம்ம தேவாரம் வாத்தியார் வளர்த்த மொசக்குட்டி மேலே விழுந்த மாதிரி சாஃப்டா இருந்துச்சு. நான் என்னையே இழந்துக்கொண்டிருந்தேன். மௌன கீதம் பாடினோம்.

சும்மா சொல்லக்கூடாது கவிஞர் கண்ணதாசனை, அவருக்கு பல்லாயிரம் வாழ்த்துக்கள். “புதிய வானம், புதிய பூமி..” என்ற வரிகள் ரீங்காரமிட்டன.’ கீதம் அடங்கியபோது மணி இரண்டு. நான் என் கேபினுக்கு வந்து படுத்தேன், தூக்கம் வரலே, காட்சிகள் ஓடிக்கிட்டிருந்தன. எப்போ தூங்கினேன்னு தெரியாது. காலை ஆறு மணிக்கு அலாரம் அடிச்சபோது அவசர அவசரமா எல்லா வேலைகளையும் முடிச்சுக்கிட்டு எஞ்ஜின் ரூமுக்கு ஓடினேன்.

அன்றைய தினம் என்னாலெ ஒழுங்கா வேலை செய்ய முடியலெ. அசதி ஒரு பக்கம், மௌன கீதத்தின் ராகம் இன்னொரு பக்கம், எப்போது மணியாகும் என்று காத்திக்கிட்டிருந்தேன். அஞ்சுமணியாச்சோ இல்லையோ ஓடிப்போய் குளிச்சிட்டு ஆறுமணிக்கு டின்னரை முடித்துக்கொண்டு பெட்டில் சாஞ்சுட்டேன். யாரோ கதவைத் தட்டும் சத்தத்தைக் கேட்டு எழுந்து திறந்து பார்த்தபோது “சுக்கானி” (கப்பலின் ஸ்டேரிங் பிடிப்பவன்) நின்னுக்கிட்டிருந்தான். என்ன என்று கேட்டதற்கு உன்னை 2nd ஆபிஸர் கூப்பிடுகிறார் என்றான். அப்போது மணி பதினொன்று.

என் வயித்துலே புளியை கரைக்க ஆரம்பிச்சிடுச்சு. ராத்தி நடந்தது புருசனுக்கு தெரிஞ்சுப்போச்சோ என்ன எழவோ தெரியலையே என்று பயந்துக்கிட்டே அவன் கேபினுக்குப் போனேன். “ஹலோ ஆனந்த், நீ ஏன் கிளப்புக்கு வரலே? என் ஒய்ஃப் ரிப்போர்ட் பண்ண ஆரம்பிச்சுட்டா. இந்த பார் ஆனந்த், நீ இங்கே இருக்கிறவரைக்கும் எங்களுக்கு கம்பெனி கொடு. இண்டியன் என சொல்லிக்கொள்ள உன்னை விட்டால் யாருமில்லை, ப்ளீஸ் என்றார். எனக்கு பால் வார்த்த மாதிரி இருந்துச்சு. பக்கத்தில் ஒன்னும் தெரியாதுபோலிருந்த பாப்பா, ஆமா ஆனந்த் அவர் டூட்டிக்குப் போய்ட்டார்னா கிளிக்கூடு மாதிரி இருக்கிற இந்த கேபின்லெ நான் தனியா அடைஞ்சு கிடக்கிறேன். ரொம்ப போர் அடிக்கிது, நீங்க கொஞ்ச நேரம் ஸ்பேர் பண்ணினீங்கன்னா எனக்கு டைம் பாஸாகும், “ப்ளீ…ஸ்” என்று அந்த ப்ளீஸை அழுத்தி சொன்னாள்.’

‘பச்சை கொடி காண்பிச்சாச்சு! அடப்பாவியளா, அப்புறம்?’

‘அப்புறம் என்ன? தினமும் ஆலாபனை, தனி ஆவர்த்தனம், என்று தொடங்கி ஜுகல் பந்தியில் முடியும், பெரும்பாலும் என் கேபின்லெதான் நாட்டியக்கச்சேரி நடக்கும்.’

‘அப்பொ தூங்கவே மாட்டியா?’

‘ஷெடியூலை மாத்திட்டேன்ல, ஆறு மணிக்கு டின்னரை முடிச்சுட்டு பத்து பத்தரை வரை தூங்குவேன், அதுக்குமேல் கிளப்புக்குப் போவேன், பண்ணண்டரைக்குமேல் பள்ளாங்குழியாட்டம். இப்படி பத்து நாள்வரை ஓடினுச்சு. குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே என் வேலைகளை முடித்து ஜெனரேட்டரை ஓடவிட்டுவிட்டோம். ஆகவே ‘ரியோ டி ஜெனரியோ’ வரும்வரை அவள் கேபினுக்குப் போய் அரட்டை அடிச்சிக்கிட்டு இருந்தேன். அவங்களோட கல்யாண ஆல்பம் எல்லாம் காண்பிச்சா. கப்பலை எப்படி ஓட்டனும் ரஃப் சீயிலெ எப்படி ஓட்டனும் ராத்திரியிலே எப்படி வாட்ச் பண்ணனும், சீ கரண்ட் எந்தெந்த சீசன்லெ எங்கெங்கே இருக்கும், பெர்மூடா ட்ரையாங்கிள் பக்கம் எப்படி போவது என்றெலாம் பாவாஜி சொன்னாரு. சுருக்கமா சொன்னா அவரு என்னை அவங்க ஃபேமிலி மெம்பரா நெனைச்சிக்கிட்டாரு.’

‘ஏண்டா இவ்வளவும் நடந்த பிறகு எப்படி நீ கில்டி கான்ஷியஸ் இல்லாமலா இருந்தே?’ அவளுக்குத்தான் வெக்கமில்லை இப்படி புருஷனைப் பக்கத்திலெ வச்சுக்கிட்டு இன்னொருத்தன்கூட விளையாடுறோமே என்று?’

‘நா என்ன செய்றது? சும்மா கிடந்த என்னை ஊதி கெடுத்திட்டா. குற்ற உணர்வு உறுத்தத்தான் செஞ்சுது. நான் கேட்டேன் இப்படி துரோகம் செய்றியே, இது அடுக்குமா?ன்னு. அதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா?’

‘என்ன சொன்னா?’

‘அவ கேபின்லெ பவர் கொறச்சலாம், டியூப் லைட் லேட்டா ஸ்டார்ட் ஆவுதாம். உன் கேபின்லெ ஃபுல் பவர் இருக்குதுன்னுட்டா.’

‘தொலஞ்சது போ. சரி, எப்போ குவைத் திரும்பினே?’

‘சரியா புறப்பட்டதிலிருந்து இருபது நாள் “ரியோ டி ஜெனரியோ” துறைமுகம் வந்து சேர்ந்தோம். அங்கு இரண்டு நாள் தங்கிவிட்டு குவைத் வந்து சேர்ந்தேன். கப்பலை விட்டு இறங்கும் நாளன்று கப்பல் சிப்பந்திகள் அனைவருமே என்னையும் வந்திருந்த இங்லீஷ்காரனையும் தடபுடலாக வழியனுப்பிவைத்தனர். ஜிகினா கண்களில் கண்ணீர் தேங்கி நின்றன. அவளைப் பார்த்து எனக்கும் கண்களோடு மனமும் கனத்தது. மீறிக்கொண்டு கண்களிலிருந்து நீர் சொட்டத்தொடங்கிற்று. அதைப் பார்த்த chief engineer, don’t be exited என்று என் முதுகில் தட்டிக்கொடுத்தார். எனக்கல்லவா தெரியும் நான் ஏன் கலங்கினேன் என்று.’

‘இதுதான் சாக்குன்னு அவளோட தொடர்பு வச்சிருந்தியா? இல்லை விட்டு தொலைச்சிட்டியா? ஏன்னா சந்தேகமா இருக்கு இந்த பூனையும் பால் குடிக்குமான்னு!’

‘நான் புறப்படும்போது அட்ரஸ், போன் நம்பர்லாம் கொடுத்து ஆறு மாசம் கழிச்சு காண்டாக்ட் பண்ண சொல்லி சொன்னா. துர்திருஷ்டவசமா அவ அட்ரஸ் எழுதி வச்சிருந்த டைரியை தொலச்சிட்டேன், அதனாலெ தொடர்பே கொள்ளமுடியலெ, அதுவும் எனக்கு நல்லதா பட்டுது. காரணம் அந்த டிரிப் முடிஞ்சபிறகு லீவில் ஊருக்குப் போய் அத்தை பெண் ராதிகாவை கல்யாணம் பண்ணிட்டு வந்தேன்.’

‘விட்டு தொலைச்சிட்டேன்கிறே, இப்பொ அவகூட குடுத்தனம் நடத்துறே, மறுபடியும் பிரேஸில் டிரிப்பா?’

‘இரண்டு வருஷம் வரை எந்த தொடர்பும் கிடையாது, சுத்தமா மறந்துட்டுத்தான் இருந்தேன், ஒரு நாள் வேலையா ஷிப்புக்குப் போயிருந்தப்ப சீஃப் ஆபிஸரை பார்க்கவேண்டியிருந்தது. சீஃப் ஆபிஸர் யாருன்னா அதே பாவாஜி, ப்ரமோஷன் ஆயிட்டாரு. என்னை கண்டதும் ஹலோ ஆனந்த் நீ இன்னும் இங்கேதான் இருக்கியா? நல்லா இருக்கியா? அப்படி இப்படின்னு குசலம் விசாரிக்க ஆரம்பிச்சுட்டார். தான் இந்த கப்பலில் டூட்டியில் சேர்ந்தபிறகு இரண்டு மூன்று தடவை குவைத் வந்ததாகவும் என்னைப் பார்க்கமுடியவில்லை என்றும் சொன்னார். நான் அவரையும் அவர் குடும்பத்தைப் பற்றியும் ஃபார்மாலிட்டிக்காக விசாரிச்சிக்கிட்டிருந்தேன் அப்ப வந்துச்சு தொல்லை. உன் லாங்குவேஜில் சொன்னால் “முஸீபத்”.

‘என்ன முஸீபத்?’

‘அந்த சமயம் பாத்து அவ புருஷனுக்கு போன் பண்ணுவாளா?’

‘பண்ணினா என்ன?’

‘பண்ணியதில் தப்பில்லெ, அவன் மட்டும் பேசிட்டு வச்சிருந்தா இதெல்லாம் வந்திருக்காது, நான் பக்கத்தில் இருக்கேன்னுட்டு சொல்லிபுட்டான். அதனாலெ அவள்ட்டெ பேசவேண்டிய நிர்பந்தம் ஆயிடுச்சு!’

‘ஜஸ்ட் நல்லா இருக்கீங்களான்னு கேட்டுட்டு கட்பண்ணிட வேண்டியதுதானே? நீ எதாச்சும் நோண்டிருப்பே?’

‘அவ என்னை பேசவிட்டாதானெ, அவளே வளவளன்னு பேச ஆரம்பிச்சுட்டா. அவ என்ன சொன்னான்னா, “நீ எப்பொ இந்தியா வர்ரே? நான் ஒரு பிஸினஸ் ஆரம்பிச்சிட்டேன்., குவைத்தை வுட்டுட்டு இங்கெ வந்துடு, ஒனக்கு அங்கெ கிடைக்கிற சம்பளத்தங்காட்டிலும் ஜாஸ்தியா தாரேன்” அப்டின்னு பேசிட்டு தன் புருசனிடம் சொல்லி என்னிடத்தில் கன்வின்ஸ் பண்ண சொல்லிட்டா. அந்த ஆள் என்னன்னா, தன்னுடைய பொண்டாட்டியின் பிஸினஸை சொல்லிட்டு நீ ஏன் இந்த வெயில்லெ இருந்து கஷ்டப்படுறே, அங்கெ போய் ஏஸி ரூம்லெ இரியேன் அப்டி இப்டின்னு சொல்லி என் மனசுலே ஜில்லாப்பை உண்டாக்கிட்டான்.

நானும் சரின்னுட்டு வந்துட்டேன். அப்புறம் யோசனைப் பண்ணிப்பாத்தேன். ஊருக்குப் போகும்போது பாம்பேயில் இறங்கி அவளை பாத்துட்டுப் போவோம். நல்லதா பட்டுச்சுன்னா இறங்குவோம், இல்லேன்னா குவைத்துக்கே வந்துடுவோம்னு முடிவுலே வருஷ லீவுலே பாம்பே போனேன்.

டயத்தை வேஸ்டாக்கக்கூடாதுன்னு அவளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிச்சிருந்தேன். அவளும் கரக்டா ஏர் போர்ட் வந்து என்னைக் கூட்டிக்கிட்டுப்போய் ஹோட்டலில் தங்கவச்சா, பிறகு தன் பிஸினஸைப் பத்தி சொன்னாள், ஆபீஸை காட்டினாள், ஊருக்குப் போய்ட்டு ஒரு மாசத்துலெ வந்துடுன்னுட்டா.’

‘எந்த ஆபீஸை?’

‘ஏய் கிண்டாதே! ஆபீஸ்னு சொன்னா புரிஞ்சுக்கனும்.’

‘அப்புறம் நீ குவைத் போகலையா?’

‘இரண்டு மாசம் கழிச்சு இங்கே வந்து சேர்ந்தேன். பிஸினஸ் எனக்குப் புடிச்சிருந்தது. அதுக்கிடையில் குவைத்திலிருந்து என் வீட்டுக்குப் போன் வர ஆரம்பிச்சிடுச்சு என்னை வர சொல்லி. நான் மேலும் இரண்டு மாசம் கழிச்சு குவைத் போய் என் விசாவை கேன்ஸல் பண்ணிட்டு எனக்கு வரவேண்டிய காசை பெற்றுகொண்டு இங்கே வந்துட்டேன், அன்னையிலேந்து இன்னைவரை இங்கேதான் ஜாகை. இப்போ வாரம் ஒருமுறை சனி ஞாயிறு லீவில் ஊருக்குப் போய்ட்டு வந்துக்கிட்டு இருக்கேன்.’

‘இப்பொ அவ தங்களுக்கு சின்னவூடு?’

‘இல்லெ, அவளுக்கு நான்தான் சின்னவூடு. அதாவது அவளுக்கு நான் புருஷன், எனக்கு ராதிகா பொண்டாட்டி.’

‘என்னவோடா, நீ செய்றது நல்லாயில்லே! ஒனக்குத் தெரியும்ல “அரசன் செய்யும் தவறு அகிலம் செய்யும் தவறுக்கு ஒப்பானது” என்று, நீ குடும்பத்துலே மூத்தவன் ஜாக்கிரதை.’

‘நல்லா இருக்கோ நல்லா இல்லையோ? இப்பொ வண்டி ஓடிக்கிட்டிருக்கு, என்னாலெ மாற முடியாது. ஓடறவரை ஓடட்டும்னு வுட்டுட்டேன்.’

அப்போது யாரோ கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே வந்தார். நான் ஏறிட்டுப் பார்த்தபோது அந்த போட்டாவில் இருந்த அவனுடைய எம் டி. போட்டாவைவிட அழகாகவே இருந்தாள், கட்டு குளையாத உடம்பு, பார்க்க லட்சணமாக மொழுகி விட்டார்போல் இருந்தாள்.

என்னை அவளுக்கு அறிமுகம் படுத்திவைத்தான். நாங்கள் எந்த அளவுக்கு நண்பர்களாக இருக்கிறோம் என்பதையும் பால்ய காலத்து நிகழ்வுகளையும் அவளுக்கு சொன்னான்.

இத்தகைய நண்பன் இருக்கிறான் என்று ஒரு சந்தர்ப்பத்திலும் சொல்லவே இல்லையே என்று ஆனந்தன்மீது கோபப் பட்டாள். இப்போது என்ன செய்கிறீர்கள் என்று என்னிடம் கேட்டாள். நான் மும்பை வந்த விசயத்தை சொன்னேன். எல்லாவற்றையும் கவனமாக கேட்டுவிட்டு இனி நாங்கள் உங்களுக்கு வேண்டிய அனைத்து சாமான்களையும் சப்ளை செய்கிறோம், நீங்கள் வாங்கும் விலையைவிட குறைவாகவும் அதேநேரம் தரமான சாமான்களாகவும் தருகிறோம் என்றாள்.

ஆரம்பத்தில் அப்படித்தான் சொல்வீர்கள் அப்புறம் விலையை கொஞ்சங்கொஞ்சமாக ஏற்றுவீர்கள் என்று சொன்னேன்.

இது சாதாரணமாக நடக்கும் விஷயம்தான், ஆனால் நீங்கள் ஆனந்தின் நண்பர் உங்களிடம் அப்படி நடக்க மாட்டோம், நீங்கள் எங்களை நம்பலாம் என்று சொல்லிவிட்டு அவர் போகிறவரைக்கும் இங்கேயே தங்கட்டும் என்று ஆனந்தனிடம் சொல்லிவிட்டு நீங்கள் எங்களின் “கெஸ்ட்,” இன்று இரவு என்னுடன் உணவு உண்ணவேண்டும் என்றவாறு எங்களை தன் காரில் அழைத்துக்கொண்டு நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்குப் போனாள்.

பேசிக்கொண்டே உணவை சுவைத்துக்கொண்டிருந்தேன். ஜிகினாவின் லாவகமானப் பேச்சு, வார்த்தைகளின் ஆழம், அதில் காணும் உறுதி இவை எல்லாம் எனக்கு பிடித்திருந்தது.

என் ஆப்த நண்பன் ஆனந்தை இருபத்தைந்தாண்டுகளுக்குப் பின் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். குவைத்தில் சொல்லனா துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருந்தவனை இங்கே அழைத்துவந்து நல்ல முன்னேற்றத்தை அடைய பெரிதும் உதவியதற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், அவனை பார்க்கும்போது எனக்கு பெருமையாக இருக்கிறது. உண்மையிலேயே நீங்கள் போற்றத்தகுந்தவர் என்று அவள் தலையில் கொஞ்சம் ஐஸ் வைத்துவிட்டு, மன்னிக்கவும் உங்கள் குடும்பத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று பேச்சை ஆரம்பித்தேன்.

‘என் கணவர் Mr.நவ்ரோஜி மிகவும் நல்லவர். (ஆமா எதையும் கண்டுக்காம இருந்தா நல்லவர்தான் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்) அவர் என்னைவிட கப்பலையும் கடலையும் வெகுவாக நேசிக்கிறார். பெரும்பாலும் அவர் வெளிநாடுகளில்தான் இருப்பார். இப்போதுகூட ஜப்பானில் இருக்கிறார்.’

‘இன்னும் கப்பலில்தான் பயணம் செய்கிறாரா?’

‘இல்லை, இப்போது சர்வேயராக இண்டர்நேஷனல் கம்பெனி ஒன்றில் வேலை செய்கிறார்.’

‘நீங்கள் அவர்கூட போவதில்லையா?’

‘எனக்கு கடல்வாழ்க்கை பிடிக்கவில்லை. கல்யாணம் ஆன புதுதில் ஒரே ஒரு முறை பயணம் செய்தேன். அப்போதுதான் Mr.ஆனந்தை குவைத்தில் பார்த்தேன். அவரிடம் இருக்கும் அசாத்திய திறமையை அப்போதே கண்டுகொண்டேன். நான் இங்கே கம்பெனி ஆரம்பித்தபோது முதல் வேலையாக அவரை இங்கே இழுத்துக்கொண்டேன். என்னுடைய கம்பெனி இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு அவரின் பங்கு பெருமளவு இருக்கிறது.’

‘உங்களுடைய குழந்தைகளைப் பற்றி சொல்லவில்லையே?’ என்று கேட்டபோது அவள் முகம் லேசாக மாறியது. அதை கவனித்த நான், ‘எதுவும் தப்பாக கேட்டிருந்தால் மன்னிக்கவும்.’

‘இல்லை, இல்லை, அப்படி ஒன்றுமில்லை. எனக்கு குழந்தைகள் இல்லை. அந்த பாக்கியம் இல்லாமல் போய்விட்டது. நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஸ்போர்ட்ஸில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தேன். இண்டர்காலேஜ் டோர்னமெண்ட் நடக்கும்போது வயிற்றில் லேசாக அடிபட்டுவிட்டது. நான் சற்று அலட்சியமாக இருந்துவிட்டேன். அது பெரிய பிரச்சினையை உருவாக்கிவிட்டது. கர்ப்பப்பையை பாதித்து குழந்தை பெறும் பாக்கியம் இல்லாமலாக்கிவிட்டது.’

‘ஏன் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொள்ளவில்லையா?’

‘என் கல்யாணத்துக்குப் பிறகு டாக்டர்களிடம் போனேன், மிகவும் காலதாமதாகிவிட்டது என்று சொன்னார்கள். என்னுடைய அலட்சியபோக்கிற்கு கிடைத்த தண்டனை என்று ஏற்றுக்கொண்டுவிட்டேன். எனக்கு பிள்ளைகள் இல்லாவிட்டால் என்ன ஆனந்தின் பிள்ளைகளும் என் பிள்ளைகள்தான்.’

அவளுடைய அந்த உறுதி “Acceptance of inevitable is the first step of conquering happiness” என்று என் ஆசிரியர் சொன்ன வார்த்தையை நினைவுபடுத்தியது.

அடுத்த இரண்டு மூன்று நாட்கள் என்கூடவே இருந்து எல்லாவேலைகளையும் ஆனந்தன் முடித்துக்கொடுத்தான். அது எனக்கு பெரிய உதவியாக இருந்தது. இனி அடிக்கடி மும்பை வரவேண்டிய அவசியம் இருக்காது என்ற மகிழ்ச்சியில் துபைக்கு புறப்பட தயாரானேன். ஜிகினாவும் ஆனந்தும் ஏர்போர்ட்டுக்கு வந்து வழியனுப்பி வைத்தனர். நீண்ட நாட்கள் நட்பின் பிரிவு எங்கள் கண்களை குளமாக்கின, ஜிகினா கலங்கமில்லா புன்முறுவலுடன் கையை ஆட்டினாள்.

ஆனந்தன் என்றும் ஆனந்தமாக இருக்கவேண்டும் என்று என் உள்ளம் வாழ்த்திக்கொண்டிருந்தபோது எமிரேட்ஸ் விமானம் உற்ற்…என்று பெருத்த உறுமலோடு வானத்தை நோக்கி கிளம்பியது.


Email: maricar@eim.ae

Series Navigation

ஹமீது ஜாஃபர்

ஹமீது ஜாஃபர்