மாத்தா ஹரி – அத்தியாயம் 40

This entry is part [part not set] of 42 in the series 20071213_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


ஒருவருக்கு மூவராக காரில் அமர்ந்திருந்தும், பெண்களுக்கிடையில் பேச்சென்று ஏதுமில்லை. அமைதியாக இருந்தனர், அல்லது எங்கே தொடங்குவது என்ன பேசுவதென்கிற குழப்பம். முன் கண்ணாடியில் விழுந்த மழைத்துளிகளைத் துடைக்க வைப்பர் இருக்கின்றன, ஹரிணியின் மனதில் விழுகிற துயர்துளிகளை துடைப்பது எப்படி? வெளியே குடைக்குள் தலைகொடுத்து, கொடுக்காமல், மழைகோட்டணிந்து, அணியாமல் நனைந்து, நனையாமல், நினைப்பை எங்கோ ஒரு புள்ளியில் வைத்து, அஜீவனாக தங்களை முன் நகர்த்தும் வல்லமைபெற்ற நவீன மனிதர்களில் இவளும் ஒருத்தி, இவள் புள்ளியைத் தீர்மானிக்க முடியாதவளாக இருந்தாள். பவானி அம்மாவுக்குப் பிடித்த மழைபோல எதிர்பாராத காலங்களில் சோவென்று பெய்கிறது, விரும்பி நனைகிறாள், முழுவதுமாக நனையுமுன்னே சுளீரென்று வெயில், உலர்த்தப்படுவது வீசும் காற்றாலென நினைத்ததுபோக சூராவளி, இவளையும் அல்லவா வேருடன் சாய்த்துவிட்டது.

அரவிந்தன் அட்லாஸ் இல்லை, ஆணழகனில்லை, தமிழ் நாவல்களில் படித்த மன்மதனில்லை, சிரிலாகக்கூட இல்லை, என்ன இருந்தாலும் நான் ஆம்பிளைடி என்கிற அபத்தமான சினிமா ஹீரோவுமல்ல. ஆனால் முகம், தலை, கண்கள், கன்னம், நாசி, முகவாய், கழுத்து, மார்பு, வயிறு, கால்கள் பாதம் அனைத்திலும் தேவைக்கேற்ப அளவாய் இருந்தான்: அசைவில், நடக்கையில், சாப்பிடுவதில், தண்ணீர் குடிப்பதில், மது அருந்துவதில், பார்வையில், பழகுவதில் கண்களைக் கூசச் செய்யாத அழகிருந்தது, எல்லோரையும் ஈர்க்கும் ரகம், இவளை வசீகரித்திருந்தான் என்பது முக்கியம்; காதற்கடிதங்கள் எழுதியதில்லை, காதலிக்கத் தெரிந்தவனில்லை, நீ ரொம்ப அழகு, சிரிப்புக்கு மில்லியன் கணக்கில் யூரோ கொடுக்கலாம், டாலர்கொடுக்கலாம், என்ற பொய்களில்லை, முகமனில்லை; தலைமுடியை பரத்திப்போடு, இறுக்கி ஒற்றைச் சரமாகத் தொங்க விடாதே, வகிடெடுத்து சீவு, தொளதொளவென்ற சட்டை வேண்டாம், டீஷர்ட் போடு ம் சொன்னவனல்ல.

நடந்ததனைத்தையும் கனவின் எச்சங்களாக அவள் உணர்ந்தாள். நினைவு தெரிந்து அவள் அழுததில்லை. அப்படி அழுவதால் பலன்களேதுமில்லை என்பது இளவயது முதலே பெற்றிருக்கும் ஞானம். ஆறுதல் சொல்வதற்குச் சொந்தங்களில்லை என்கிறபோது அழுதென்ன ஆகப்போகிறது. அநாதைகள் கொடுக்கலாம் வாங்கக்கூடாது, அடிவாங்கலாம் அடிக்கக்கூடாது, சிரிக்கலாம், அழக்கூடாது அப்படித்தான் வாழ்ந்துவந்தாள். என்னவெல்லாம் அவனைப்பற்றி தெரியும் அவளுக்கு, ‘ஏதோ திருட்டுலே சம்பந்தப்பட்டிருந்ததாகவும், போலீஸ் வாகனம் அவனைத் துரத்தி வந்ததாகவும் காலையில் அரபு நாட்டவன் சொன்னதில் உண்மை இருக்குமா? இவளது எல்லைக்குள் பிரவேசிப்பர்கள் மாத்திரம் தப்பானவர்களாகவே இருக்கவேண்டுமென்பது விதியா? அவன் முகத்தில் தப்புகளில்லை. மனிதர்களின் முகங்களை பார்த்தே அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்று தீர்மானிக்க அவளுக்கு முடியாதா என்ன? ஒருவேளை அப்படியும் இருக்குமோ- இருக்கட்டுமே, ‘எனக்கு அவன் கசப்பானவனல்ல, என்னோடு, எனக்காக இருந்த கணங்களில் அவன் நல்லவனாக இருந்திருக்கிறான். எனக்கே எனக்கென்று படைக்கப்பட்ட ஹீரோ. மூட்டை மூட்டையா கனவுகள் சுமந்தேண்டா: ரெண்டுபேருலே ஒருத்தர் இடம்பெயர்வது, அதற்கேற்ற வகையில் வேலை தேடிக்கொள்வது, நண்பர்கள் துணையுடன் முதலில் நகரசபையில் பதிவுத் திருமணம், பிறகு ஜூலையில் இந்தியாவிற்குச் சென்று பிரெஞ்சு நண்பர்களுக்காக, அக்னியில் நெய்வார்த்து, வேதங்கள் ஒலிக்க, கெட்டிமேளம் கொட்ட, நாயனம் இசைக்க, விருந்தினர் இறைச்சல்களுக்கு மத்தியில் அட்சதையைத் தலையில்வாங்கிக் தாலிக்கட்டிக்கொள்வது, ஹனிமூனுக்கு பவானி அம்மாவுக்குப் பிடித்த புதுச்சேரியும், அதன் சுற்றுவட்டாரமும்- எங்கேபோனாலென்ன சந்தோஷம் முக்கியம்… ராஸ்கல் எப்படிடா உன்னாலே, இத்தனை சீக்கிரம் கரைந்துபோகமுடிந்தது

– ஹரிணி..! காரின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த மதாம் ஷர்மிளா அழைத்தாள்.

-ம்

– சேதி கிடைச்சதும் எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை. உனக்கு சேதி சொல்லலாமென்று பார்த்தா எங்கிட்ட உன்னுடைய பீரோ நியுமெரோ(1) இல்லை. உடனே புறப்பட்டு வந்துட்டேன். அநியாயமாக கொன்னுட்டாங்க.

– என்ன சொல்றீங்க?

– நான் என்ன சொல்றது. சம்பவத்தைப் பார்த்தவங்க எல்லோருமே ஒருத்தரைப்போல அப்படித்தான் சொல்றாங்களாம். அராபியர் கடையொன்றில் ரொட்டி வாங்கிக்கொண்டு பத்து மணிக்குமேலே திரும்பி வந்திருக்கிறான். வேறு யாரையோ துரத்திவந்த போலீஸ¤க்கு இவன் கிடைச்சிருக்கான். என்ன செய்யறது நாம பிழைக்கவந்தவங்க, நமக்கான நீதிகள் வேறதான். இருபத்தைந்து வருட வாழ்க்கையிலே இந்த நாட்டுலே நிறைய பார்த்துட்டேன்.

– வீடு வந்திட்டுது, நீங்க இரண்டுபேரும் இறங்கிக்குங்க காரை கராழில்(2) விட்டுட்டு வந்திடறேன்- முதன் முறையாக பத்மாவின் குரல்.

12Bis என்றெழுதப்பட்டிருந்த வீட்டெதிரே கார் நின்றது. ஹரிணியும், ஷர்மிளாவும் இறங்கிக் கொண்டனர். குளிர் காற்று சட்டென்று முகத்தைத் தொட்டுக் கடந்தது. தூறல் நின்றிருந்தது. மேகங்கள் கலைந்திருந்தன. நவம்பர்காலத்து இலைபழுத்த மரங்கள் சூரிய ஒளியில் மின்சாரம் பாய்ச்சியதுபோல பிரகாசிக்கின்றன. வெறும் மார்பு மாதிரி நீண்டுக் கிடந்த வீதி, மௌனத்தில் வெந்துகொண்டிருக்கும் வீடுகள். புதிதாய் உருவாக்கியிருந்த குடியிருப்பென்று பார்த்தமாத்திரத்தில் புரிந்தது. வீடுகள் ஒன்றுபோலவே இருந்தன. சூரியனின் கதிர்கள் சரிந்து அந்த வீட்டினைக் குறிவைத்ததுபோல விழுந்திருந்தன. செயற்கையாய் திணிக்கப்பட்ட அழகு, அமைதி, முன்புறம் ஈட்டிபோன்ற கம்பிகள் போடப்பட்ட பாதுகாப்புகொண்ட காம்பவுண்டு சுவர், கருப்பு வண்ணத்தில் இரும்புக்கதவு. வெள்ளையும் காவியும் கலந்த நிறத்தில் வீட்டின் முகப்பு. ஓடுகள் வேய்ந்த கூரை, அதில் இயற்கை வெளிச்சத்திற்கென்று கண்ணாடியிட்ட மேற்கூரைக்கு இசைவான வண்ணத்தில் பாதுகாப்புடனான திறப்பு, ஹரிணிக்குப் பிடித்த வகையில் வீடிருந்தபோதிலும் அதை உள்வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சொந்தக்காரர்களை பாராட்டும் மனநிலையில் அவளில்லை.

கராழில் காரைவிட்டுவிட்டு வந்த பத்மா, முன் கேட்டினைத் திறந்து இவர்களை உள்ளே அழைத்துச் சென்றாள், கேட்டினையும் பிரதான வீட்டையும் இணத்திருந்த நடைபாதை இருமருங்கிலும் பராமரிக்கப்பட்ட பூஞ்செடிகள், குளிர்காலமென்பதால் முடங்கிக் கிடந்தன. சில வேருடன் பறிக்கப்பட்டு காய்ந்திருந்தன. பத்மா வாசற் கதவைத் திறக்கட்டுமென காத்திருந்ததுபோல பூனையொன்று ஓடிவந்து அவள் கால்களைச் சுற்றியது, அதன் குறுநாக்கு முன்னும் பின்னுமாக வாய்திறந்து முனகுகிறது. பத்மா குனிந்து பூனையைக் கைகளில் எடுத்துக் கொண்டு மார்பில் அணைத்துக்கொண்டால். ஷர்மிளாவிடம் சாவியைக் கொடுத்து திறவென்றாள். வரவேற்பறைக்கு உள்ளே சென்றதும் பத்மா பூனையை மேசையில் விட்டாள். எஜமானியின் மனதைப் புரிந்துகொண்டதுபோல பதவிசாகக் காத்திருந்தது. அதற்கான பாத்திரத்தை எடுத்து முன்னே வைத்து, பூனைப்படம் போட்ட பாக்கெட்டைத் திறந்து கொட்டினாள், அது நன்றியுடன் வாலாட்டியது. தன்னுடைய பெரிய மேலங்கியை கழட்டியவள், மற்றவர்களும் கழட்டிக்கொடுக்க உரிய இடத்தில் மாட்டிவிட்டு வந்தாள்.

– உட்காருங்க.. மதியத்திற்கு லைட்டா ஏதாச்சும் சாண்ட்விச் தயாரித்துக்கொள்ளலாம், இரவுக்கு ஏதாச்சும் சமைத்துக்கொள்ளலாம் –

– எனக்குப் பசியில்லைடி பத்மா. ஹரிணி பிள்ளைதான் காலையின் எத்தனை மணிக்கு எழுந்ததோ, வழியில் என்ன சாப்பிட்டுதோ.

– இல்லைங்க.. எனக்கும் இப்போதைக்கு எந்தத் தேவையுமில்லை.

மூன்று பேரும் சோபாவில் அமர்ந்தனர்.

– அரவிந்தன் உங்களை என்றைக்குப் பார்த்தான்.

– மூன்று நாட்களுக்கு முன்ன, அதற்கும் முதல் நாள் இரவு எட்டு மணிவாக்கில் டெலிபோன் வந்தது. ஷர்மிளாவின் பேரைச்சொல்லி அவளோட ஒன்றுவிட்ட சகோதரனென்றான். நெம்பரைக்கூட ஷர்மிளா கொடுத்ததாகத்தான் சொன்னான். பிறகு உன்னைப் பற்றி பேசினான், முதன் முதலில் உன்னை இரயிலில் பார்த்தது, சிநேகிதர்களானது, இறந்துபோன உன் அம்மாவைப் பற்றிய கவலைகளில் நீ மூழ்கியிருப்பது, அது குறித்த விபரங்களைச் சேகரிப்பது என்றெல்லாம், கோடிட்டுக்காட்டிவிட்டு, மறு நாள் என்னைச் சந்திக்கணுமென்றான், அதற்கென்ன வீட்டுக்கு வாயேன் என்றேன், மறுநாள் காலை பத்துமணிக்கு வந்திருந்தான்.

– அன்றைக்கு நான் கொல்மார்லே இருந்தேன். அவனும் வந்திருக்கவேண்டியது. அவசரமா பாரீஸ் போகவேண்டியிருக்கிறதென்று சொல்லிட்டான். இப்படியொரு முடிவுக்காகவே வந்திருக்கான் போலிருக்கிறது. என்னாலே இன்னமும் அதை முழுசா நம்ப முடியலை. சொல்லுங்க போலீஸ் வாதிடறமாதிரி, செய்திகள் பரப்பரமாதிரி தப்பானவனா?

– உனக்குத் தெரிஞ்ச அளவிற்குக்கூட எனக்கு அவனைப் பத்தி சரியா தெரியாதுண்ணு வச்சுக்கோ. எனக்கு ஷர்மிளா வேண்டியவ, அவள் தம்பியைப்பத்தி வந்ததிலிருந்து நிறைய பேசிட்டா, அதிலே தப்புகள் எதுவுமில்லை. சவ அடக்கத்துக்கு வந்திருந்த அவன் பிரண்டுகள் கூட நல்ல மாதிரியாதான் அவனைச் சொல்றாங்க. ஆனால் நடந்ததை நேரில் பார்த்தவங்க ஆளாளுக்கு ஒன்றைச் சொல்றாங்க. அவனது டூ வீலரில் வேண்டுமென்றே போலீஸ்வாகனம் மோதியதென சொல்றவங்க சிலபேரென்றால், இல்லை இல்லை அது எதிர்பாராவிதமா நடந்த விபத்தென்று சொல்றவங்க சிலபேரு. இதுலே யார் சொல்றதை நம்பச் சொல்ற, மாதாவுக்குத்தான் வெளிச்சம். முதல் கட்ட அரசு விசாரணை மோதிய காரை ஓட்டிய போலீஸ்காரர்கள்மீது குற்றமில்லைண்ணு சொல்லுது, இது நாங்க எதிர்பார்த்ததுதான். அநியாயமா இப்படி பலிகொடுத்துட்டமேண்ணு நினைச்சு அழற நேரத்துலே அவனைத் திருடனென்று சொல்றாங்க. அக்கம் பக்கத்திலே இருக்கிறவங்க எல்லோருமே அவனை நல்லவன் என்றுதான் வாதிடறாங்க, தானுண்டு தன் வேலையுண்டுண்ணுதான் இருந்திருக்கான். தேவா சொல்றமாதிரி, இங்கே இனத் துவேஷம் நிறைய இருக்கு, புள்ளி விவரங்கள் அதைத்தான் சொல்லுது, இந்தச் சம்பவமும் அதற்கு உதாரணம்.

– தேவசகாயத்தைக் கிட்டத்திலே பார்த்தீங்களா?

– உன்னோட தகப்பன்மா. ஏதோ அந்நியன்மாதிரி நினைச்சு பேசற.

– நான் அப்படி நினைக்கலைங்க. அம்மாவை பண்ணின கொடுமைக்கு அந்த ஆளுக்குக் கிடைத்த தண்டனைகள் போதாதென்பது என் கட்சி. ஒரு கொலைகாரனுக்கு, போதைப்பொருளைக் கடத்தின குற்றத்தின்பேருல தண்டனை கொடுத்திருக்காங்க, அதுபோதாது. இந்த நேரத்துலே எதற்காக வீண்விவகாரமெல்லாம். நீங்க எப்ப அந்த ஆளைப் பார்த்தீங்க?

– போனபிப்ரவரி மாசத்திலே ஸ்ட்ராஸ்பூர்க் வந்திருந்தேன்,ரெண்டு நாள் ஷர்மிளா வீட்டிலேதான் தங்கினேன்.

– என்னது மதாம் ஷர்மிளா வீட்டில் தங்கினீங்களா? அவங்க வீட்டுக்கு அதற்கப்புறம் நான் போயிருந்தேனே, சொல்லவே இல்லையே.

– தேவசகாயத்தைப் பார்க்கணும்னு தோன்றினா ஸ்ட்ராஸ்பூர் வருவது வழக்கந்தான். அப்படி வருகிறபோதெல்லாம் எனக்குச் சொந்தமென்று சொல்லிக்க அந்த ஊருல ஷர்மிளாவைவிட்டா வேற யாருமில்லை, என்பதாலே அவள் வீட்டுலேதான் தங்குவேன். தேவாவை நான் பார்க்க வருவதை என்னுடைய சம்மதமில்லாமல் எதற்காகச் சொல்லணுமென்று அவள் நினைச்சிருக்கலாம்.

– ஆமாம். பத்மா சொல்றது உண்மை, அதற்காகத்தான் அதைப்பற்றி உன்னிடம் பேசலை, நான் கூட இந்த தடவை பத்மாவோடு தேவசகாயத்தைப் போய்ப் பார்த்தேன். அவன் பாவானியை நினைச்சு ரொம்ப வருந்தினான். உங்கம்மா தற்கொலை செய்துகொள்வதகுமுன்னே அவங்களுக்குள்ளே எந்தப் பிரச்சினைகளுமில்லை என்றான்.

– பத்மா ஆண்ட்டி உங்களுக்கு அம்மாவையும் தெரியும், தேவசகாயத்தையும் தெரியும். கடைசிகாலத்துலே பவானி அம்மாவுக்கும் அவருக்கும் பிரச்சினைகளில்லைங்கிற அவரது வார்த்தையை எந்த அளவிற்கு நம்பறதுண்ணு தெரிய¨லை. அம்மா கல்யாணத்திற்கு முன்னே நீங்களெல்லாம் நெருக்கமா இருந்திருக்கீங்க. பிரான்சுக்கு வந்தபிறகு உங்க சிநேகிதம் எப்படி? அம்மாவை இறப்பதற்கு முன்னே பார்த்தீங்களா? சிறையிலிருக்கிற தேவசகாயம் சொல்றது உண்மைண்னா, அம்மாவுடையது தற்கொலை இல்லைண்ணு தோணுது.

– நீ நினைக்கிறது உண்மையாகக் கூட இருக்கலாம், என்ன இருந்தாலும் அந்நியர்கள் சம்பந்தப்பட்டது என்பதாலே போலீஸ் பவானியின் கேஸில் அலட்சியமா நடந்திருக்கலாம். ஆனா அந்தக்குற்றத்தை தேவசகாயம் செஞ்சிருக்கமாட்டாண்ணு உறுதியா சொல்ல முடியும்.

– ஏன்?

– முதலில் சொன்ன அதேகாரணந்தான். அந்நியர்கள் தண்டிக்கிறதிலே இவர்களுக்கு ஆர்வம் அதிகம். அதனாலே தேவசகாயத்துக்கெதிராக ஆதாரம் மட்டும் கிடைத்திருந்தால் அவனைச் சும்மா விட்டிருக்கமாட்டார்கள். அதுவும்தவிர வெகு நாளைக்கப்புறம் உங்கம்மா இறப்பதற்கு சில நாட்களிருக்கையில் சென்று பார்த்தேன். அவளுக்குச் சில சந்தேகங்களிருந்தன அதை நிவர்த்திசெய்துகொள்ள என்னை வரச் சொல்லியிருந்தாள்.

– என்ன சந்தேகம்? இப்படிக் கேட்கிறேனேன்று கோபம்வேண்டாம் ஆண்ட்டி. உங்களுக்கும் தேவசகாயத்திற்கும் சம்பந்தமிருக்குமென்று அம்மா நம்பினாளா?

-இதில் கோபப்பட என்னை இருக்குது. ஷர்மிளாவை கேளு, சொல்லுவா. அப்படியொரு எண்ணம் பவானி மனதில் இருந்ததினால்தானே, கொஞ்சகாலம் நான் ஸ்ட்ராஸ்பூர் பக்கம் தலைகாட்டாமலிருந்தேன். இது வேறு ஒரு பெண்மணிமீதான சந்தேகம்.

– யார் அவள்?

– மதாம் க்ரோ..!

(தொடரும்)


nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா