தைவான் நாடோடிக் கதைகள் (2)

This entry is part [part not set] of 36 in the series 20071129_Issue

தமிழில் – மதுமிதா



>>>
2. கலங்கிய ஏரியின் கதை

தைவானின் நீண்ட நதியை உங்களுக்குத்தெரியுமா? ம்ஹ¤ம்? சரி விடை சூவோ ஷ¥ க்சீ. இந்நதி நேங் கா வோ ஷான் லிருந்து அடர்ந்த காடு நோக்கிச் செல்கிறது. சூவோ ஷ¥ க்சீ நதி, அரிசி, சுவையான தர்ப்பூசணி ஆகியவை உற்பத்தி செய்ய காரணமாயிருக்கும் வண்டல்மண்ணைக் கொண்டுவரும்.

பூர்வகதைப்படி சூவோ ஷ¥ க்சீ நதியின் பெயர், க்யுங் ஷ¤யி க்சி (தூய நதி நீர்) என இருந்தது. இப்போது அந்தக் கதையைப் பார்ப்போம்.

வெகுநாட்களுக்கு முன்பு க்யுங் ஷ¤யி க்சி நதி மிகத் தெளிவாய் ஓடிக்கொண்டிருந்தது. நதிக்கருகில் நேங் கா வோ ஷான் எனும் பெரிய மலையொன்று இருந்தது.

நதிக்கு மறுகரையில் சூ வொ யா எனும் மனிதன் சிறுகுடிசையில் தனியாக வசித்து வந்தான். விவசாயம் செய்து வாழ்ந்து வந்தான். ஒருநாள் சூ வொ யா வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது அருகிலுள்ள புதருக்குள் பனிச்சிறுத்தை ஒன்று குதிப்பதைப் பார்த்தான். பனிச்சிறுத்தை ஒரு சிறு முயலைப் பிடித்திருந்தது. அது அந்தப் புதருக்குள் முயலைச் சுவைத்து உண்பதற்காகச் சென்றிருக்கிறது. சூ வொ யா மெதுவாக அதன் பின்னே சென்று மண்வெட்டியால் சிறுத்தையைத் தாக்கினான். வலியினால் துடித்த சிறுத்தை முயலைத் தவறவிட்டது; காற்றின் வேகத்தில் ஓடிவிட்டது.

முயல் மிக அதிகமாகக் காயமடைந்திருந்தது. முயலின் ஒருகால் உடைந்துவிட்டது. அதன் அழகிய பனித்தோல் இரத்தத்தில் ஊறிக்கிடந்தது.
சூ வொ யா மூலிகைப் புல்லைத்தேடி எடுத்து பற்களால் மென்று துண்டுதுண்டாக்கி பூசும் மருந்தாக்கினான். சூ வொ யா அதனை முயலின் காயத்தில் பூசி தனது உடையைக் கிழித்து முயலின் உடலோடு பாண்டேஜாகச் சேர்த்துக் கட்டினான். முதலுதவி செய்துவிட்டு கவனமாக அந்த முயலை வீட்டுக்கு எடுத்து வந்தான். உடம்பு குணமாகும் வரை அதை தன்னுடனேயே வைத்திருக்க அவன் முடிவு செய்தான்.

கொஞ்ச நாட்களுக்குள்ளேயே முயல் பூரண குணமடைந்தது. சூ வொ யா வைத் தனது பெரிய உருண்டையான கண்களால் உற்றுப் பார்த்து முயல்
தலையசைத்து நன்றி தெரிவித்தது. உயிர் காத்தவனுக்கு நன்றி தெரிவித்ததும் காட்டிற்குள் ஓடிவிட்டது.

ஒரு சுட்டெரிக்கும் பகல்பொழுதில், சூ வொ யா தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். வெக்கையும், எரிக்கும் சூரியனும் அதிகம் வியர்க்க வைத்தது. அவனுக்கு தாகம் அதிகரித்தது. புருவங்களிடையே வழிந்த வியர்வையைத் துடைக்க வேலையை நிறுத்தினான். வெயிலிலிருந்து தப்பிக்க நேங் கா வோ ஷான் மலை, க்யுங் ஷ¤யி க்சி நதியைச் சுற்றிலும் பார்த்தான்; புல்லும், பைன் மரமும் மட்டுமே அங்கே இருந்தன.

சூ வொ யா பெருமூச்சுவிட்டான், “இனிய சாறுள்ள புளிப்புப் பழங்கள் இருந்தால் என் தாகமும், களைப்பு தீருமே” என நினைத்தான்.

அவன் எண்ணம் நிற்பதற்குள் ஒரு குரல் கேட்டது,” நான் உனக்கு கருநீல பாசிமணி ஒன்றைத் தருகிறேன். மண்ணில் அதைப் புதைத்து அதன் மேல் நில்; உடனே உன் பார்வையில் பிரம்பு நிறைந்த மலையின் பள்ளத்தாக்கும், புளிப்பும், இனியதுமான பழங்களும் தெரியும்” என்றது அக்குரல்.

வெண்ணிற உடையணிந்த தேவதை காற்றில் மிதந்து வந்தாள். மெதுவாய் நடந்து சூ வொ யாக்கு அருகில் வந்து கருநீல பாசிமணியைக் கொடுத்துவிட்டு மறைந்தாள்.

சூ வொ யா சந்தேகத்துடன் அந்தக் கருநீல பாசிமணியை எடுத்து அந்தக் குரல் கூறியபடி நிலத்தில் புதைத்தான். சிறிது நேரத்துக்குள் முளை வெளிப்பட்டது மண்ணிலிருந்து. தொடர்ந்து வளர்ந்து கண்மூடித் திறப்பதற்குள் பிரம்பு, காடுகளையும், நேங் கா வோ ஷான் மலையையும் நிறைத்தது.
சூ வொ யா வியந்துபோனான், பிரம்புகளில் கனிந்த கனிகளைப் பார்த்து. மரத்தில் ஏறி கருநீல (ஆசை) கனிகள் இருப்பதைப் பார்த்தான். நிறைய பழங்களைப் பறித்து உண்டு தாகம் தணித்துக் கொண்டான்.

சூ வொ யா மரத்திலிருந்து இறங்கும்போது அவனுடைய சட்டை பிரம்பில் மாட்டிக்கொண்டது. டர்ர்ரென்று பெரிய ஓட்டையாய்க் கிழிந்துவிட்டது. சூ வொ யா ஒரு கயிறு கொண்டு கிழிசலைக் கட்டி மறைத்துக் கொண்டான். “உனக்குத் தெரியாதா? நான் தனியாளென்று. யார் என்னுடைய சட்டையைத் தைத்துத் தருவார்கள்?” என்று கூறினான்.

சூ வொ யா வீட்டுக்கு வந்தவுடன் புகைபோக்கியில் புகை வருவதைக் கண்டான். வியந்து உள்ளே ஓடினான். ” நீ… நீ… நீயா. நீதானே கருநீல பாசி மணியைக் கொடுத்த பெண்?” என அந்த தேவதையிடம் சூ வொ யா கேட்டான்.

அப்பெண் திரும்பி அழகிய பெரிய விழிகளை இமைத்து, “ஆமாம். சில நாட்களுக்கு முன்பு நீ என் உயிரைக் காப்பாற்றினாய். என் நன்றியைத் தெரிவிக்கவே நான் அந்த கருநீல பாசிமணியைக் கொடுத்தேன். நீ பிரம்பிடம் யாருமில்லையென வருத்தப்பட்டதால் இங்கே உனக்கான வேலைகளைச் செய்ய வந்தேன்” என்றாள்.

அன்றிலிருந்து அந்த வெண்ணிறப் பெண்மணியும் சூ வொ யாவும் இணைந்து மகிழ்ச்சியாய் வாழ்ந்து வந்தனர். அன்றிலிருந்து இருவரும் நிலத்தில் ஒன்றாய் வேலை செய்தனர். ஆசைக் கனிகளைச் சேர்ந்தே பறித்தனர்.

ஒருநாள் சூ வொ யா ஆசைக் கனிகளைப் பறித்துக் கொண்டிருந்தபோது மறுபடியும் சட்டை கிழிந்துவிட்டது. அப்பெண் சட்டையைத் தைக்க
வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டாள்.

சூ வொ யா வேலை முடித்து வீட்டுக்குத் திரும்பியபோது அங்கே அப்பெண்ணைக் காணவில்லை. மிகவும் கவலைப்பட்டு அவள் பெயரைச் சொல்லி அழைத்தபடி அவளைத் தேடினான்.

நடுங்கும் குரலொன்று வெகு தொலைவிலிருந்து கேட்டது. “கருநீலக் கனி… தூய ஏரி…,” அப்பெண்னின் குரல் மந்திரம் போல் உச்சரித்தது,” …இரக்கமற்ற கெட்ட மனிதர்கள்…” அப்பெண் அழுதுகொண்டிருந்தாள்.

அந்தக் குரல் அழுகுரலுடன் கலந்த ஒலியாய் இருந்தது. அக்குரல் நேங் கா வோ ஷான் மலைப்பகுதியிலிருந்து கேட்டது.

“அய்யோ! அவளை யாரோ கெட்ட மனிதர்கள் கடத்திச் சென்றுவிட்டார்களோ”

நேங் கா வோ ஷான் மலையை நோக்கி அந்தப் பெண்ணைக் காப்பாற்றும் எண்ணத்தில் சூ வொ யா ஓடினான். க்யுங் ஷ¤யி க்சி நதிக்கரைக்கு வந்தான். தண்ணீர் வரத்து அதிகரித்தது. நீரோட்டம் அதிகமானதால் அவனால் நதியைக் கடக்க இயலவில்லை.

திடீரென இரு பெரிய பிரம்பு கனிமரம் உடைந்து விழுந்தன. அவை மலையையும் நதியையும் இயற்கையாக அமைந்த பாலம்போல் இணைத்தது.
பிரம்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நேங் கா வோ ஷான் நோக்கி ஏறினான். பயமாகவும் ரொம்பக் கஷ்டமாகவும் இருந்தது. இருந்தாலும் அவன் மனம் தளரவில்லை. கடின முயற்சிக்குப் பிறகு மலையை அடைந்தான்.

புல்வெளியையும் காட்டையும் கடந்து சூ வொ யா ஓடினான். அவனுடைய கால்களில் இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. ஆனாலும் அவன் அப்பெண்ணைத் தேடி ஓடுவதை நிறுத்தவேயில்லை.

வெண்தாடி முதியவர் ஒருவர், அவன் முன் தோன்றி, “இளைஞனே! உனக்கானவள் இங்கிருந்து கொஞ்ச தூரத்தில் இருக்கும் பாறைவீட்டிலிருக்கிறாள். கோடரியும், மூங்கில் கூடையும் எடுத்துச் செல். உனக்கு உபயோகப்படும்.” என்று கூறி மறைந்தார்.

சூ வொ யா அந்த வீட்டை நோக்கி முதுகில் கூடையுடனும், கையில் கோடரியுடனும் ஓடினான்.

அதே நேரம், ஒரு கும்பலாய்க் கெட்ட பையன்கள், பெரிய கத்திகள் வைத்துக்கொண்டு சூ வொ யாவை துரத்தினர்.

சூ வொ யா பைன் மரக்காட்டில் ஓடி ஒளிந்து கொண்டான்.

அந்தக் கெட்ட பையன்கள் பாறையின் உச்சிக்கு வந்ததும் பிரம்பைப் பார்த்து, “இவன் வேகமாய் ஓடுகிறான். தப்பிப்பதற்காக இப்படி இறங்கியிருப்பான்.”என்றனர்.

ஒவ்வொருவராகக் கீழே இறங்க ஆரம்பித்தனர். சூ வொ யா வேகமாய்க் குதித்து பிரம்பை வெட்ட ஆரம்பித்தான். பிரம்புகள் வெட்டப்பட வெட்டப்பட அந்தக் கெட்ட பையன்கள் நதியில் ஒவ்வொருவராக விழ ஆரம்பித்தனர்.

அவர்கள் நதியில் தத்தளித்து நதியை கலக்கிவிட்டனர்.

இந்நிகழ்ச்சிக்குப்பிறகு க்யுங் ஷ¤யி க்சி நதி தெளிவாக இல்லை. நீர் அழுக்காகவும், கலங்கலாகவும் இருந்தது. மக்கள் இந் நதியை க்யுங் ஷ¤யி க்சி (தெளிந்த நதி) க்கு பதிலாக சூவோ ஷ¥ க்சீ (கலங்கிய நதி) என அழைக்க ஆரம்பித்தனர்.

நேங் கா வோ ஷான் மலைக்கருகில் ஓடும் நதியின் பகுதியை ட்யூஅன் டெங் வான் (ஒடிந்த பிரம்புப் பிளவு) என அழைத்தனர்.

சூ வொ யாவும் அப்பெண்மணியும் அதன் பிறகு பிரியவே இல்லை. அவர்கள் நேங் கா வோ ஷான் மலையில் மகிழ்ச்சியாக நிறைவான வாழ்க்கை வாழ்ந்தனர்.


madhuramitha@gmail.com

Series Navigation

மதுமிதா

மதுமிதா