பள்ளிக்கூடம்

This entry is part [part not set] of 41 in the series 20071115_Issue

எம்.ரிஷான் ஷெரீப்


காற்று இழுத்துவிட்ட காதோர முடியை ஒதுக்கிக் கொண்டாள்.
‘பள்ளிக்கூடத்திற்கு ஓடியே போய்விடலாமா ? ‘ ஒரு கணம் சிந்தித்தாள். வேண்டாம் , தன் வயதொத்த சிறுமிகளெல்லாம்
இரட்டை ஜடையோடு மெதுவாக நடை போடுகையில் தான் மட்டும் ஓடுவது நன்றாக இருக்காது எனத் தனக்குத்தானே தீர்மானித்துக்கொண்டாள்.
கொஞ்சம் வேகமாக நடை போட்டாள்.காலையில் அப்பா வீடு வந்த சத்தத்திற்குத்தான் விழித்துக் கொண்டாள்.அவசரமாகக் கொல்லைப்புறம் போய் வாய் கொப்பளித்து,முகம் கழுவி, கண்ணாடியை ஒரு கணம் எட்டிப்பார்த்து வெளியே வந்தவள்தான். பசித்தது. கொஞ்சம் தண்ணீராவது குடித்து விட்டு வந்திருக்கலாம்.
பண்ணையார் வீட்டுச்சிறுமி புது ஆடையோடு ‘பளிச்’சென்று பள்ளிக்குச் செல்வது தெரிந்தது. இவளுக்கும் அப்படிப் போக ஆசைதான். அப்பா ஒழுங்காக இருந்திருந்தால் தான் இப்படி அல்லாட வேண்டி வந்திருக்குமா? ஒரு கணம் கண்கள் சொல்லாமலேயே கலங்கியது.ச்சீ… என்ன இது? மற்ற சிறுமிகள் பார்த்தால் சிரிப்பார்கள்.
பள்ளி ஆரம்பித்திருக்குமா? மணியடித்திருப்பார்களா? இப்போது நேரம் என்ன? மணியடித்த பிறகு சென்றால் கேட் வாசலிலேயே நிற்க வேண்டி வரும். முதலாம் வகுப்பு மாணவிகளின் அறையிலிருந்து பார்த்தால் கேட் வாசல் மிக நன்றாகத் தெரியும். இவள் கேட் வாசலில் நிற்பதைப் பார்த்தால் இவள் வயதொத்த அந்த வகுப்புச் சிறுமிகளெல்லாம் கை காட்டிச் சிரிப்பார்கள்.
தெருமுனையைத் தாண்டியதும் பள்ளிக்கூடம் தெரிந்தது. நல்ல வேளை. இன்னும் மணியடித்திருக்கவில்லை. வாசலில் சிறுமிகளெல்லாம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். கேட்டருகே வந்தவள் கண்கள் அங்குமிங்கும் யாரையோ தேடின. தேடிய கண்கள் ஒரு இடத்தில் நிலைத்தன.அங்கே ஓடினாள்.
” அம்மா,அப்பா ராத்திரி எங்கேயோ குடிச்சுட்டு விழுந்து கிடந்தாராம். உடம்பெல்லாம் ரத்தம். யாரோ நாலு பேர் ஊட்டுக்கு கூட்டி வந்திருக்காங்க.உடனே உன்ன கூட்டிட்டு வரச் சொன்னாங்க.வாம்மா போகலாம் ”
கேட்ட அவள் அம்மாவுக்கு கையும் ஓடவில்லை.காலும் ஓடவில்லை. பெருக்கிக் கொண்டிருந்த முற்றத்தின் ஓரத்திலேயே விளக்குமாறைப் போட்டாள்.வந்து கொண்டிருந்த தலைமை ஆசிரியையிடம் அவருக்குச் சுகமில்லை , அவசரமாய்ப் போவதாகச் சொல்லி விட்டு அவள் கையைப் பிடித்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக நடக்கத் தொடங்கினாள்.
வந்து கொண்டிருந்த சிறுமிகள் எல்லாம் அவளைப் பார்த்து வாய் பொத்தி மௌனமாகச் சிரிப்பதாக அவளுக்குத் தோன்றியது.


msmrishan@yahoo.com

Series Navigation

எம்.ரிஷான் ஷெரீப்

எம்.ரிஷான் ஷெரீப்