தன் வினை

This entry is part [part not set] of 37 in the series 20071025_Issue

எஸ்ஸார்சி


இப்படியும் செய்வார்களா என்ன. இந்த மருத்துவமனைக்கு இன்று வந்த யாரோ என் கால் செருப்பு ஒன்றையும் தன் கால் செருப்பு ஒன்றையும் மாட்டிக்கொண்டு ஜம்பமாய் போய்விட்டார்கள். வேண்டுமென்று செய்திருக்க முடியாது அவர்களுக்கும் இதில் என்ன ராஜ சுகம் வந்துவிடப்போகிறது. இம்சை. இம்சைதான்.
நண்பன் ஒருவனுக்கு காலில் அடிபட்டு இருக்கிறது செய்தி சொன்னார்கள்.. இரு சக்கர வாகனத்திற்கு குறுக்கே நாய் புகுந்து அவனும் தார் ரோட்டில் கீழே விழுந்து இழுத்துக்கொண்டு போய் ஏக அமர்க்களம். .. நல்லகாலம். தலையில் அடிபடவில்லை. தப்பித்துக்கொண்டான். போன் வழி வந்த இந்தச் செய்தி. சரிதான் உறுதியாகிவிட்டது.
யாரென்றே தெரியாத அந்த யாரோதான் எனக்கு த்தகவல்சொன்னார்கள்.
அந்தக்காலங்களில் எல்லாம் நாய்களை அப்படியும் இப்படியும் குறுக்கே கம்பி கட்டிய முனிசிபாலிடி வண்டியில் பிடித்துக்கொண்டு போய் எங்கோ ஒரு பாழுங்கிணற்றில் பொறுப்பாய்க் கவிழ்த்துக் கொட்டி விஷம் ஊற்றி மண்ணால் மூடிஅழித்து ஜீவ சமாதி செய்து விடுவார்கள். நாய்களின் அந்த இறுதிப்பயணத்தைப் பயணத்தைப்பார்த்தும் சகிக்க முடியாத அந்த ஔலத்தை எத்தனையோ தடவைக்கேட்டும் கண்கள் கலங்கியதுண்டு. மனிதர்களை இப்படி அழைத்துக்கொண்டு போனால்.
எங்கேனும் போய்தான் இருப்பார்கள். யூதர்கள் வரலாற்றில் பட்ட அவத்தை இது. இப்போது அப்படிஎல்லாம் இல்லை. நாயும் நாகப்பாம்பும் நம் போன்றவை. அவை அத்தனையும் அபூர்வ உயிர்கள். நமக்கென்ன வாழும் உரிமை இங்கே உண்டோ. அவை அவைகளுக்கும் தான்.
இந்த பூமித்தாய் அவைகளையும் ஆசை யோடே பெற்றெடுத்தாள். எதோ ஏதோ சொல்கிறார்கள். இந்தப்படிக்கு எல்லாம் விசாலக் கண் கொண்டு பார்க்காமல் இருந்ததால்தான் திருவள்ளுவர் பார்த்து ச்சொன்ன அந்த மயிர்நீப்பின் வாழாக் கவரி மான், யானையும் சிங்கமும் ப்பங்கு வைத்து பிறந்தது போல் தோன்றும் யாளி, சுத்தப் பாலைமட்டுமே பிரித்து அருந்தும் நுட்பம் கற்ற தமயந்தியின் சொல் கேட்ட அன்னம், மனிதர்களை சுவாஹா செய்யும் ஜம்போ டைனோசர் எல்லாம் பூமியைக்காலி செய்து கொண்டு போய் விட்டனவாம்.
ஏ.கே நாற்பத்தேழு ரக நவீனத் துப்பாக்கிகள் இந்தப்புறம் ஒன்றும் அந்தப்புறம் ஒன்றும் வைத்துக்கொண்டு யாரேனும் வயிற்றுப்பசிக்கு க்காவலாய் நிற்க நடுவில் சிங்கம் போல் நடப்பவர்கள் செய்வதுதான் எல்லோருக்கும் ஆன பொது முடிவு.
இந்த யோசனை எல்லாம் யார் வந்து இப்போது என்னைக் கேட்டார்கள். அடிபட்ட அந்த நண்பனைப்பார்த்தாயிற்று. இடது காலில் முட்டிக்குக்கீழே எலும்பு முறிந்து மாவு கட்டு போட்டிருந்தார்கள். நாளைக்கு க்காலையில்தான்
அறுவை சிகிச்சை. முட்டிக்குக்கீழே துருவே பிடிக்காத திருகு ஆணி மூன்று இப்படியும் அப்படியும் போட வேன்டுமாம். எலும்புகளைப்பிணைத்துத்தான். அவன் கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தான். முகம் இன்னும் அவனுக்கு அழகுதான். அங்கே சுற்றி நிற்பவர்களுக்கு அவன் அழகு எவ்வளவோ தேவலை.
செருப்பு விட்டுச்சென்ற திரு இடத்தையே முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்படிப்பார்க்க ஒன்றும் ஆகிவிடாது. சம்பந்தா சம்பந்தம் இல்லாத இரண்டு உருப்படிகள். யாருக்கு என்ன பிரயோசனம். ‘என் மீதுதானா குற்றம் சொல்லுங்கள்’ அவை
வசனம் பேசின.
‘ ஆசுபத்திரிக்கு வர்ர கழுதைவுளுக்கு கொஞ்சமாவது அறிவு வேணாம். சுதி மதி இல்லாத படிக்கு கால்ல எதையாவது மாட்டிக்கிட்டு போய்விடறதா’
‘ ஏன் என்ன ஆயிடுச்சி’’ ரிசப்ஷனில் இருந்த நர்சின் சிறு வினா.
‘ செருப்ப மாத்தி மாட்டிகுனு போய்விட்டாங்க. நான் இப்ப என்ன செய்றது. பொருத்தம்
இல்லாத இரண்டு செருப்பு இதோ அனாமத்தா கெடக்குது’ பதில் சொன்னேன்.
‘ சுத்திலும் பாருங்க இங்க பக்கத்துல எங்கனா இருப்பாங்க. அவங்களுக்கும் தெரியாம செருப்ப மாத்தி போட்டுகிட்டு
போய் இருக்கலாம்ல’
மருத்துவ மனைக்கு வந்திருந்த அனைவரின் கால்களையும் நோட்டம் விட்டேன். பாத பூசைகள் தொடர்ந்தன. காரியம்தான் ஆகவில்லை.
‘என்ன பாக்குறீங்க’
‘ செறுப்பு மாறிப்போச்சி அதான் பாக்குறேன்’
வழிந்துகொண்டே பதில் சொன்னேன். ஒரு நல்ல சமாச்சாரம் பெண்களின் கால்களை ப்பார்க்க வேண்டியபடி கதி எனக்கு ஆகிவிடவில்லை. சுற்றும் முற்றும் மருத்துவ மனையில் பாக்கி இருந்த ஆண்களில் யாரும் என் செருப்பைமாட்டிக்கொண்டு நிற்கவில்லை. போதாத காலம் தான். அலுவலக வேலை அப்படியே
கிடக்கிறது. போய் சொச்சத்தை ப்பார்க்கவேண்டும். இரு சக்கர வாகனம் ஏதும் எடுத்து வந்திருந்தால் ஔசை படாமல் வெறுங்காலோடு போய் விடலாம். வேட்டி கட்டி வந்தவர்கள் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் எல்லாம் மகா ராஜாக்கள். எது வேன்டுமானாலும் எப்போது வேண்டுமாலும் செய்துகொள்:ளலாம்
பெஞ்சுக்கீழே கேட்பாரற்றுக்கிடக்கும் அந்த செருப்புக்களை என் கால்களில் மாட்டிப்பார்த்தேன். அசிங்கமாக இருந்தது. யாராவது பார்த்துவிட்டால் மானம் போய்விடும். தன்மானம். எங்கிருந்தோ வந்து தன் சொச்ச இருப்பைக்காட்டி இளித்தது. செருப்பை மாற்றி மாட்டிக்கொண்டு போன அந்த பேர்வழி ஒரு வழியாய் தன் தப்பை க்கண்டுபிடித்து மருத்துவமனைக்கு ஒரே ஔட்டமாய் ஔடிவந்து தேடினால் அப்போது என்ன செய்வது. ஆக இவை இங்கேயே கிடப்பது சரி . முடிவு எடுத்துக் கால்களில் செருப்பில்லாமல் வீதிக்கு வந்து நடக்க ஆரம்பித்தேன்.
யாரேனும் பார்த்துவிட்டால் என்ன செய்ய ஆக பவ்யமாய் ஜானுவாச நடை நடந்து நான் தங்கி இருந்த மாத வாடகைக்கு ரூம் தரும்’ எல்லாம் தரும் ‘அந்த லாட்ஜ் நோக்கி விரைவாகச் சென்று கொண்டு இருந்தேன். போகும் வழியில்தான் என்னுடைய அலுவலகம் இருந்தது. என்றாலும் என்ன அந்தப்பக்கமே நான் திரும்பாமல் சாமர்த்தியமாய் நடந்தேன்.. நல்ல வெயில் காய்ந்தது. கால்கள் தரையின் உஷ்ணத்தை மண்டைக்குத்தெரிவித்தன.
செருப்பில்லாமல் நடந்த பாதங்கள் தரையின் மீது அப்பப்போது கெஞ்சிக்கொண்டே நடந்தன.
இந்த நேரம் பார்த்து யார் கண்ணில் படக்கூடாது என்று நினைத்து போய்க்கொண்டு இருந்தேனோ
அவர் தான் எதிரில் வந்து கொண்டிருந்தார். என் மேல் அதிகாரி. எப்போதும் ஏதோ சிந்தனையில்
போய்க்கொண்டுதான் இருப்பார். ஆனால் இன்று அப்படித்தெரியவில்லையே.
‘ எங்க இந்த நேரத்துல இந்தப்பக்கம்’
அதிகாரியின் குரல்தான். இனி எங்கே தப்பிப்பது.
‘ ட்ரயில் பேலன்சு சரியா டேலி ஆகல்ல. தலவலி. ஒரு மாதிரியா இருந்துச்சி சார். அதான் ஒரு டேப்லட் வாங்கி போட்டுக்கலாம்னு கொஞ்சம் வெளியில் வந்தேன்.’
‘ என்ன வேணும் உமக்கு எல்லா டேப்லட்டும் எங்கிட்ட இருக்கு வாரும்.
‘ இல்ல சார். தோ வந்துடுவேன்’ சமாளித்தேன்.
‘ ஆடிட் அப்ஜெக்ஷன் ஒண்ணு ரொம்ப நாளா கெடக்குல்ல எப்ப முடிக்கிகிறது’ அவர் விஷயத்துக்கு வந்தார்.
‘ சாயந்திரம் அதை கண்டிப்பா முடிச்சுடுவேன் சார்,
‘ இதான் எப்பவும் சொல்றீரு’
‘ தோ ஒரு மாத்திரை போட்டுட்டு வந்துடறேன் போங்க சார்’ சாலையில் ஒருபுறம் என்னை நிறுத்தி அவர்தான் எனக்கு ஆபிசர் என்பதை அவர் காட்ட நானும் ஆமாம் சார் என்று அவருக்குப் பணிந்துபதில் தந்த பிறகு
ஜன்ம சாபல்யம் வேறென்ன இந்த மனிதப்பிறவிக்கு வேண்டிக்கிடக்கிறது. அந்த அதிகாரி போய் விட்டார். நம் செருப்பும் காலும் பார்ப்பதா அவருக்கு வேலை. எம கிங்குரர்கள் கணக்காகவேதான் எப்போதும் இந்த ஆடிட் ஜாம்பவான்கள். ஆரோகண அவரோகணம் அத்துப்படியானவர்கள். சென்ட்ரல் சிபிஐ க்கு இணையாய்ச்சொல்லவேண்டும் இவர்களை. எனக்கு வாய்த்த அந்த அதிகாரியின் மீது தப்பு இல்லை. அவர்தான் என்ன செய்வார். நல்லபடியாய் பென்சன் வாங்கிகொண்டு ரிடையர் ஆகப்போக வேண்டுமே. அரசு அதிகாரிக்கு என்று மிச்சமிருக்கும் ஒரே ஒரு கவுரவம். அந்த ப்பென்சனும் ஊத்திக்கொள்ளாமல் ஒருவன் பெற்றாக வேண்டும்.
கடத்தெருவில் செருப்புக்கடைகள் வரிசையாய் கண்களில் தென்பட்டன. சட்டைப்பையில் பத்து ரூபாயுக்கு மேல் இல்லை. அப்படியே இருந்தாலும் வருகிறது ஆபத்து. எத்தனை இம்சைகள். அலுவலகம் என்றால் லேசுப்பட்டதுவா என்ன. எத்தனையோ பிடுங்கல்கள். பேண்ட்டின் கள்ள பாக்கெட்டுகளில் ரூபாயை வைத்துகொண்டு செல்லலாம்தான். ஆனால் அப்படிப் பணத்தை ஒளித்து வைத்துக்கொண்டு கேட்பவர்க்கு என்னிடம் பணம் ஏது இல்லையே என்றெல்லாம் அடித்துச் சொல்ல சொல்ல வீரம் இல்லை. இனியா வரப்போகிறது. இந்த ஜன்மம் இவ்வளவுதான் மனம் ஒரு பாட்டம் சொல்லிநிறுத்தியது..
‘ என்ன சார் கால்ல செருப்புகூடம் இல்லாம நடந்து போறீங்க’
வீதியில் செல்லும் இந்தப்பகுதியின் தபால்காரர்தான் கேட்டு வைத்தார்.
என் மீதுதான் தப்பு . பொங்கல் தீபாவளி நெருங்கும் சமயம் இப்படித்தான் சிலர் இருப்பார்கள்.
அன்பளிப்பு அது இது என்று ஏதேனும் கொடுத்தாக வேண்டும். இனாம் வாங்கிய கைகள். எப்படி நிறுத்தும் சம்பளம் எத்தனை உயர்ந்தால்தான் என்ன.
‘ கவனுக்குணும் கவனிச்சிடறென்’
‘ ஆகட்டும் சார். கிணற்றுத்தண்ணிய அந்த வெள்ளமா கொண்டுபோய்விடும்’
தபால்காரர் நியாயம் சொல்லிக்கொண்டுபோனார்.
லாட்ஜ் வந்தாயிர்று. லாட்ஜின் மானேஜர் வாயிலில் நின்று கொண்டிருந்தார். எல்லா லாட்ஜ்
மானேஜர்களுக்கும் உள் மூலம் இருக்குமோ என்னவோ. முகம் அப்படிச் சொல்கிறதே..
‘ என்ன இந்நேரத்துக்கு வர்ரீங்க ஏதும் வேற செய்தியா’
‘ ஒரு ஆபிசு தபாலு. முக்கியமானது வச்சிட்டு போயிட்டேன்’
‘ என்ன செய்யவீக பெறகு வயிசும் ஆவுதுல்ல’
நல்ல காலம் அவர் என் அம்மணக் கால்களைப்பார்க்கவில்லை. அறையின்கதவைத்திறந்துகொண்டு உள்நுழைந்தேன்.
பணம் எடுத்துக்கொண்டுபோய் புதியதாய் ஒரு ஜதை செருப்பு இ¢ப்போதே வாங்க வேண்டும்.
‘ இது என்னடா விபரீதம், என் அறைஉள்ளும் இரண்டு செருப்புக்கள். இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தா
சம்பந்தம் இல்லாமல்.. போச்சி போச்சி. ஆகா. நான் தான் தூக்கி எறியாது வைத்துவிட்டிருந்த என் பழைய செருப்பு ஒன்றையும் புதுசெருப்பு
ஒன்றையும் கால்களில் மாட்டிக்கொண்டு இன்று காலையிலேயே அலுவலகம் சென்று விட்டேன்.
மருத்துவமனையில் கிடக்கும் இரண்டு உருப்படிகளும் எனதுதான். எனக்கு என்னையே
பார்க்க வெட்கமாய் இருந்தது.
கீழே கிடக்கும் அவைகளை பேப்பரில் சுருட்டிக்கொண்டு
மருத்துவமனைக்கு நடந்தேன். குனிந்த தலை நிமிராமல்தான். மருத்துவ மனையில்
அதே பெஞ்சின் கீழ் அந்த செருப்புக்கள் இன்னும் அனாதைகளாய்க் கிடந்தன. கொண்டு வந்த செருப்பில்
புதியதையும் கீழே இருப்பதில் அதன் ஜோடியையும் இப்போது என் கால்களில் மாட்டிக்கொண்டு
எனக்கு நிகர் யாரென்று சுற்றும் முற்றும் நோட்டம் விட்டேன்.
ரிசப்ஷனில் இருந்து கேள்வி மீண்டும் வேகமாக வந்தது.
‘ என்ன சாரு ஆளு ஆப்டுதா’
‘ செருப்பு மாத்தி போட்டுகிட்டுப்போன கழுதை தா அந்த மருந்து கடையில நிக்குது. போய் இந்த
பழம் செருப்பை அதுகிட்ட குடுக்குணும்.
‘யாரு அது இந்த கேபுலத்தை செய்த கூறுகெட்ட ஆளு’
‘ வயிசான பெரியவரு ஊரு பேரு ஆரு கண்டா . கண்ணு புரியாம இப்பிடி ஆயிப்போச்சின்றாறு
அப்புறம் என்னா செய்யிறது சொல்லுங்க’
நான் பழைய செருப்பு ஜோடியை மீண்டும் பேப்பரில் சுருட்டிக்கொண்டு வீதியில் நடந்தேன். பொட்டலத்தை அதே வீதியின் ஒரு ஔரத்தில் வீசி எறிந்து விட்டு என் அலுவலகம் நோக்கி நடந்தேன் .அல்ப ஆசைகள் மனிதனை எங்கே விடுதலை செய்கின்றன.
‘ இத அண்ணக்கே செஞ்சி இருக்கணும்’ ஒரு முறை என் மனசுக்குள் சொல்லி க்கொண்டேன்.


essarci@yahoo.com

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி