பனி விழும் இரவு

This entry is part [part not set] of 37 in the series 20071011_Issue

நிலா


இன்றைக்கு ப்ளாக் ஃப்ரயர்ஸ் ரயில்வே ஸ்டேஷனில் கூட்டம் நெக்கித் தள்ளியது. எல்லாம் இந்த ஸ்நோவினால் வந்த வினை! லண்டனில் ஆறு அங்குலம் ஸ்நோ என்றால் நம்பவா முடிகிறது? அதுவும் பிப்ரவரியில்? ஹும்! க்ளோபல் வார்மிங் கண்முன்னால் தெரிகிறது! மூன்று நாளாய் இது நடக்கும் என்று சொல்லிக் கொண்டுதானிருந்தார்கள். ஆனால் காலையில் அலுவலகம் வந்திருந்தபோது லேசாய்த்தான் தரையில் பனி படர்ந்திருந்தது. இடைப்பட்ட நேரத்தில்தான் இப்படி கொட்டி இருக்கிறது. அலுவலகத்தில் ட்ரெயினிங் என்று ஒரு அறைக்குள் மாட்டிக் கொண்ட ரோகிணியை மாலையில் வெளியேறும்போது அடர்ந்த பனி வரவேற்றது. அதற்குள் கார் ட்ராஃபிக்கிலும் மனித நடமாட்டத்திலும் மாட்டி சகதிப் பூச்சு கண்டிருந்தது.

அரை அங்குலம் ஸ்நோ என்றாலே இந்த ஊர் ரயில் எல்லாம் தடவும்… ஆறு அங்குலமென்றால்! மணி இங்கேயே ஆறரை ஆகிவிட்டது. முந்தைய இரு ரயில்களும் ரத்தாகிவிட்டன. அடுத்தது எப்போது வரும் என்று சொல்லமுடியாதென்கிறார்கள்… நிற்க இடமில்லாமல் ஜன சமுத்திரம். கசகசவென்றிருந்தது.

ரோகிணிக்குக் கூட்டம் என்றாலே அலர்ஜி. அதனால்தான் லண்டனை விட்டு ஒதுக்குப் புறமாய் வசிக்கிறது அவள் குடும்பம். ஆனால் வேலைக்கு சென்ட்ரல் லண்டனுக்கு வந்தாகத்தானே வேண்டும்! ஒன்றேகால் மணி நேரப் பயணம் வீட்டிலிருந்து தினமும். ரயிலில் உட்கார இடம் கிடைக்குமாதலால் படிப்பதற்கெனப் பிரத்யேகமாய் நேரம் கிடைக்கிற திருப்தி உண்டு. ஆனால் ரயில் போக்குவரத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் இப்படித்தான் மாட்டிக் கொள்ள நேரிடுகிறது. இங்கிருந்து வெளியேறுவதற்கு வேறு வழிகள் ரொம்பக் குறைவு.

ரோகிணி கணவன் மோகனை மொபைலில் அழைத்தாள். சத்தமாய்ப் பேச வேண்டி இருந்தது.

“கூட்டம் பின்னுதுப்பா… நிறைய ட்ரெயின் கேன்சலாயிருச்சி. அடுத்தது எப்ப வரும்னு தெரியலைங்கறாங்க” குரலில் ஏமாற்றமும் எரிச்சலும் பிணைந்திருந்தன.

“என்ன செய்யறதுன்னு தெரியலையே… காரெடுத்துக்கிட்டு அவ்வளவு தூரம் வரமுடியாது. ட்ராஃபிக் ரொம்ப மோசமா இருக்குன்னு சொல்றாங்களே!” யோசனையாய்ச் சொன்னான்.

பெருமூச்சொன்றைப் பதிலாகத் தந்துவிட்டு, “குட்டீஸ் என்ன செய்யுதுப்பா?”

“அதுங்களுக்கென்ன, ஒரே குஷி. ஸ்நோல விளையாண்டுக்கிட்டிருக்குதுங்க”

“சளி, கிளி பிடிக்கப் போகுதுப்பா… உள்ள கூப்பிடுங்க”

“எப்பவாவதுதானே இப்படி ஸ்நோ பெய்யுது. விளையாடட்டுமேம்மா”

“உங்களுக்கென்ன… சொல்லிருவீங்க… அதுங்களுக்கு உடம்பு சரியில்லைன்னா நானில்ல மாரடிக்கணும்?” நெஞ்சுக்குள் அடக்கி வைத்திருந்த எரிச்சல் சடக்கென வெடித்தது

மோகனுக்குத் தெரியும். பேசாமலிருந்தான்.

“சரி, நான் எப்படியாவது வந்து சேர்றேன். உங்கம்மாவை இன்னைக்கு சமைக்கச் சொல்லிருங்க. நான் வர்ற வரைக்கும் வெயிட் பண்ண வேண்டாம். பிள்ளைகளுக்குப் பசிக்கும்”

“சரி”

“சரி வைக்கிறேன்”

இணைப்பைத் துண்டித்தாள்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் ரயில் வரப்போவதாக போர்டு சொன்னது சற்றே நிம்மதியாக இருந்தாலும் இந்தக் கூட்டத்தில் தன்னால் ஏறமுடியுமா என்ற சந்தேகம் எழவே செய்தது. அதே போல் ரயில் வந்து நின்றபோது பெட்டியின் நுழைவு வாசலுக்கும் தனக்குமிடையே இருந்த ஜனசமுத்திரத்தைப் பார்த்ததுமே இது சரிப்படாது என பின் வாங்கினாள்

பாதி தூரம் போகிற ரயில் வந்தால் அதிலாவது முதலில் போய்விடலாம் என்ற எண்ணத்தில், அருகில் நின்ற ரயில்வே அலுவலகரிடம், “ஈஸ்ட் க்ராய்டனுக்கு அடுத்த ட்ரெயின் எப்பொழுது?” என விசாரித்தாள்

அவர் நின்று கொண்டிருந்த ரயிலைக் காட்டி, “இது போகும். சீக்கிரம் ஏறுங்கள்” என்றார்.

“இந்தக் கூட்டத்தில் என்னால் ஏற முடியாது” என்றதும் சிரித்துக் கொண்டே, “அப்படியானால் இன்று நீங்கள் வீடு சென்று சேர்ந்த மாதிரிதான்” என்றார்

ரோகிணிக்குக் கோபமாய் வந்தது ‘போக்குவரத்தை ஒழுங்காய் நடத்தத் துப்பில்லை! பேச்சு வேறு’

ப்ளாட்ஃபார்மில் கூட்டம் சற்று குறைந்திருந்தது. ஆனாலும் அடுத்த ரயில் வருவதற்குள் திரும்பவும் நிரம்பிவிடும்… எப்போது வீடு போய்ச் சேருவது என்ற கவலை எழுந்தது.

சென்ற ரயில் பெட்டியின் நுழைவாயில் இருந்த இடத்தில் போய் நின்று கொண்டாள். பசித்தது. கடையில் ஏதாவது வாங்கிவரலாமென்றால் இந்த இடம் போய்விடும். படிக்கலாம் என புத்தகத்தை எடுத்தாள். பக்கத்தில் கீச்சுக் குரலில் பெரிதாய்ச் சிரித்து அரட்டை அடித்துக் கொண்டிருந்த இளம் பெண்கள் கவனத்தைச் சிதறடித்தார்கள். ‘அடுத்தவர்கள் மேல் கொஞ்சம் அக்கறை இருக்கலாம்’ நிமிர்ந்து அவர்களை சுட்டுவிடுவது போல ஒரு பார்வை பார்வை பார்த்தாள். அது அவர்களை பாதித்தால்தானே! இடது பக்கத்தில் ஒரு வயதானவரின் சிகரெட் புகை வேறு நாசிக்குள் புகுந்து இம்சித்துக் கொண்டிருந்தது. டிஷ்யூவை எடுத்து மூக்கை மூடிக் கொண்டாள். ஒரு கையில் புத்தகத்தைப் பிடித்துக் கொண்டு படிப்பது ஏதுவாகவில்லை என்று மூடி பைக்குள் வைத்தாள்.

‘வெறுமனே எத்தனை நேரம் நிற்பது! இந்த சனியன் பிடித்த ஸ்நோ இப்படி கழுத்தறுக்குமோ? க்ளோபல் வார்மிங்கை இத்தனை தூரம் வளரவிட்ட மனிதர்கள் மேல் கோபமாக வந்தது. யார் யாரையோ சொல்லி என்ன பயன்? இப்படி தினமும் வேலைக்கு வந்து அல்லல் படவேண்டியிருக்கிறதே! பெற்றோர் கோடீஸ்வரர்களாக இருந்திருக்கலாம் அல்லது கோடீஸ்வர மாப்பிள்ளைக்காவது கல்யாணம் செய்து கொடுத்திருக்கலாம்! அல்லது மாமியாரின் குத்தலுக்கு பயந்து நான் அடுத்தடுத்து இரண்டு பெறாமலாவது இருந்திருக்கலாம். செலவு குறைவாக இருக்கிற ஏதாவது ஒரு நாட்டில் செட்டில் ஆகி இருந்திருந்தால் ஒற்றைச் சம்பளத்தில் குடும்பம் நடத்தியிருக்கலாம்! கால் வேறு வலித்துத் தொலைக்கிறது… சனியன் பிடித்த ஸ்நோ… ‘ எண்ணச் சக்கரம் சுழன்று மீண்டும் அதே இடத்தில் வந்து நின்றது.

அடுத்து வந்த ரயிலின் நுழைவாயில் எங்கோ தள்ளிப் போய் நிற்க அதனையும் விட வேண்டியதாகிற்று. என்னவானாலும் ஆகட்டும் என்று கடைசி ஆளாக மூன்றாவது ரயிலில் தொற்றிக் கொண்டு மூட சிரமப்பட்ட கதவில் முகத்தை வைத்துக் கொண்டு நின்ற போது தன் மேல் சுயபச்சாதாபமும் மற்ற அனைவரின் மேலும் சொல்லவொணா கோபமும் ஏற்பட்டிருந்தன. ‘கொஞ்சம் தள்ளி நிற்கக் கூடாதா? இப்படி மேலே சாய்கிறானே தடியன்! இவர்களுக்கெல்லாம் ஆண் பெண்ணென்ற வித்தியாசமே கிடையாது’

ஹேவர்ட்ஸ் ஹீத் ஸ்டேஷன் வந்து சேர்ந்த போது மணி ஒன்பது. குளிர் மிரட்டியது. 5 நிமிட நடை. ‘மோகனைக் காரில் வந்து பிக்கப் பண்ணச் சொல்லியிருக்கலாம். அவருக்காய்த் தெரியவேண்டும்!’

காலடியில் பனி மெத்துமெத்தென்றிருந்தது. லண்டன் போலல்லாமல் இங்கு பனி நிறம் மாறாமல் வெளேரென்று ஊரையே போர்த்திக் கொண்டிருந்தது. பார்க்க அழகாகத்தானிருக்கிறது. ஆனால் இதனால் எத்தனை கஷ்டம்! ஆர்வம் தாங்காமல் சாலையோரச் செடியின் மேலிருந்த பனியைக் கையிலெடுத்து உதிர்த்துக் கொண்டே நடந்தாள்.

அநேகமாக அனைத்து வீடுகளிலும் பனி மனிதன் செய்திருந்தார்கள். ஒவ்வொரு வீட்டிலும் வித்தியாசமான ஜோடனைகள். ஒன்றில் காரட் மூக்கு, அடுத்ததில் குரங்கு குல்லாய், மூன்றாவதில் பெரிய பட்டன் வைத்த ஓவர் கோட் – ஒவ்வொன்றையும் ரசித்துக் கொண்டே நடந்தாள்.
‘குட்டீஸ் இதையெல்லாம் பார்த்திருக்குமா? நல்லா எஞ்சாய் பண்ணுங்களே!’

200 அடி தூரத்தில் வீடு தெரிந்தது. வாசலில் நின்ற பனிமனிதனைப் புன்னகையோடு பார்த்தாள். வீட்டுக்குள்ளிருந்து குல்லா, ஓவர் கோட் சகிதம் ஷாலினி எதையோ எடுத்து வந்து ஸ்நோ மேனை ஜோடிக்க ஆரம்பித்தது. பின்னாலேயே சின்ன வாண்டு ஷர்மிலியும் மோகனும் மாமியாரும்.

ஷர்மிலிதான் ரோகிணியை முதலில் பார்த்து ஓடி வந்தது. “அம்மா… அம்மா… ஸ்நோ… நெறைய ஸ்நோ… ஜாலி… ஜாலி”

ரோகிணி புன்னகையோடு, “நிறைய நேரம் பனியில் வெளையாடினியா? சளி பிடிக்கும் குட்டி” என்றாள் இதமாய்

“அம்மா, எனக்கு ஏஞ்சல் செய்யத் தெரியும். பாருங்க”

சடக்கென முன் தோட்டத்து பனி மேட்டில் படுத்து, இரு கைகளையும் மேலும் கீழும் பனியில் ஆட்டி ஏஞ்சலின் இறக்கை வரைந்தது. குதித்தெழுந்து, “பாத்தீங்களா… ஏஞ்சல் அழகா இருக்கில்ல?” என்றவளைத் தூக்கி இறுக்க அணைத்து, “நீயே ஒரு ஏஞ்சல்தானேடி, செல்லம்” என்று கன்னத்தில் முத்தமிட்டாள் ரோகிணி

“என்னப்பா… பாவமா இருக்க… போய் குளிச்சிட்டு வா” என்றான் மோகன் கரிசனத்தோடு

“நான் சமைச்சிட்டேம்மா…. உனக்குப் பிடிக்குமேன்னு கத்தரிக்காய் புளிக் குழம்பு வச்சி அப்பளம் வறுத்திருக்கேன்” என்றார் மாமியார்

தலையை ஆட்டிவிட்டு பாத்ரூமுக்குள் புகுந்தாள். வெதுவெதுப்பான ஷவரின் அடியில் நின்றபோது அந்நாளின் அலுப்பு கரைந்தோடியது போலிருந்தது.

டைனிங் டேபிளில் சூடான உணவு சுகமாய் உள்ளே போனது.

“நான் இப்பத்தாம்மா பனியைப் பாக்கிறேன். ரொம்ப அழகா இருக்கில்ல? பொட்டு அழுக்கு கூட தெரியாம ஊரையே வெள்ளையடிச்ச மாதிரி… ஏதோ சொர்க்கத்தில இருக்கிற மாதிரி இருக்கு ” என்றார் மாமியார் சாப்பிடும்போது

“குளிரலையா அத்தை, உங்களுக்கு?”

“இதப் பார்க்கறப்போ குளிர் கஷ்டமா தெரியலைம்மா”

“அம்மா, நீங்க ஸ்நோ விழும்போது பாத்திருக்கணும் தெரியுமா… ஸோ லவ்லி. வானத்திலிருந்து வெள்ளை வெள்ளையா பூ விழுற மாதிரி இருந்தது… நீங்க மிஸ் பண்ணிட்டீங்க” ஷாலினி

“ஆமா ரோகிணி, எப்பவும் இல்லாம இந்தத் தடவை பெரிய பெரிய ஃப்ளேக்ஸ். காரே ஓட்ட முடியலை. நீ பார்திருந்தா ரொம்ப எஞ்சாய் பண்ணியிருப்பே”, மோகன்

இவர்களுக்கெல்லாம் இந்தப் பனி சுகமாக இருந்திருக்கிறது என்பதை நினைத்த போது சற்று பொறாமையாக இருந்தது.

சாப்பிட்டானதும் பிள்ளைகள் கார்ட்டூன் பார்க்க ஆரம்பிக்க, மோகன் கம்ப்யூட்டரில் அமர, “படுக்கப் போகலை?” என்றாள் அனைவரையும் பார்த்து

“வெள்ளிக் கிழமைதானேம்மா… கொஞ்ச நேரம் டிவிதான் பார்க்கட்டுமேம்மா” பேத்திகளுக்கு மாமியாரின் ரெகமண்டேஷன்

ரோகிணி படுக்கையறைக்கு வந்தாள். இன்னும் கால் வலித்தது. படுத்தால் நன்றாக இருக்கும் போலிருந்தது. ஜன்னலின் வெளியே பார்த்தாள். எட்டி எட்டி இருந்த வீடுகளுக்கிடையே இருந்த மரங்களிலும் செடிகளிலும் பனி கொத்துக் கொத்தாய்க் காத்திருந்தது, பூத்திருந்தது. மெல்லிய முறுவல் எட்டிப் பார்த்தது. வானத்தை நிமிர்ந்து பார்த்தாள். மேகமூட்டமாய் இருந்தது. மேகத்திரையை பிடிவாதமாய் விலக்கி எட்டிப் பார்த்த நிலவொளியில் வெண்பனி இன்னும் அதிகமாய் ஜ்வலித்தது.

நாற்காலியை எடுத்து ஜன்னலருகில் போட்டு அமர்ந்தாள்.

பனிரெண்டு மணிக்கு படுக்க வந்த மோகன், அவளை ஆச்சர்யமாய்ப் பார்த்து, “இன்னும் தூங்கலையாப்பா?” என்றான்.

“ம்… ஸ்நோ விழும்னு வெயிட் பண்றேன்” என்றாள் ரோகிணி

நன்றி: யுகமாயினி

ஆசிரியர் குறிப்பு:

(
தமிழகத்தில் பிறந்து இங்கிலாந்தில் வசிக்கும் நிலா ஒரு முதுகலைப் பொறியியல் பட்டதாரி. மென்பொருள் தரக்கட்டுப்பாட்டு ஆலோசகராக முழுநேரம் பணியாற்றிக் கொண்டே தமிழின்பாலுள்ள ஆர்வம் காரணமாக நிலாச்சாரல் (nilacharal.com) இணைய இதழை கடந்த ஆறுவருடங்களுக்கும் மேலாக நடத்தி வருகிறார். நிலாச்சாரலின் ஆசிரியராக மட்டுமல்லாது, நிலா புக்ஸ் மூலம் வெளிவந்துள்ள மின்னூல்களுக்கு பதிப்பாசிரியராகவும் தன் பங்களிப்பைச் செய்திருக்கிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட யுகமாயினி மாத இதழின் ஆசிரியர் குழுவிலும் நிலா இடம் பெற்றிருக்கிறார். சுமார் 60 சிறுகதைகளும், குழந்தைகளுக்கான கதைகள் சிலவும், இரு நாவல்களும் பல கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். இவை பல்வேறு இணைய இதழ்களிலும் விகடன், கல்கி, குமுதம் போன்ற வெகுஜனப் பத்திரிகைகளிலும் பிரசுரம் கண்டுள்ளன.
கருவறைக் கடன் என்ற சிறுகதைத் தொகுப்பு ஜனவரியில் வெளியானது. மத நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்ட நிறப்பிரிகை என்ற குறும்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இந்தக் குறும்படம் ஐரோப்பிய குறும்பட விழாவில் நற்சான்றிதழ் பெற்றது. பூஞ்சிட்டு என்ற சிறுவர் அச்சு இதழ் நடத்திய, தொலைக்காட்சிக்கு நிகழ்ச்சிகள் தயாரித்த அனுபவங்களும் இவருக்கு உண்டு.)


nila@nilacharal.com

Series Navigation

நிலா

நிலா