நீரால் அமையும்

This entry is part [part not set] of 32 in the series 20071004_Issue

எஸ். ஷங்கரநாராயணன்



>>>
அம்மன்கோவிலில் அருகே, யானையாய்க் கட்டிக் கிடந்தது தேர். நல்லா நாலாள் உயரத்துத் தேர். வருடம் ஒருமுறை அதை சுத்தம் செய்து, மராமத்து பார்த்து, தேர் இழுப்பார்கள். தைப்பூச திருவிழாக் காலங்கள் உற்சாகமானவை. ராஜேஸ்வரி திருவிழா பார்க்க வீட்டோடு வந்திருக்கிறாள். கோவிலடியும், அந்தத் தேர் வளாகமும், திடலும் எல்லாமே திருவிழாச் சமயங்களில் எப்படி ஜோராய்க் கனவுச்சாயல் கொண்டு விடுகின்றன. திடல் பரபரத்துவிடுகிறது. பொறிகடலை, ஷர்பத் கடைகள். மனுசத்தலையும், பாம்புஉடலுமான நாககன்னிகை. அதைப் பார்க்க அழைக்கிற வித்தியாசமான ‘ர்ரூம்’ அதிர்வு ஒலி. ஊரில் பத்துக்கு ஆறுபேர் மொட்டையடித்து, தலையில் சந்தனம் பூசித் திரிகிறார்கள்… காலத்தை அனுசரித்து, இப்போது திடீர் புகைப்படக் கடைகள். கொடக், என்ன பேர் இது? படம் எடுக்கிற சத்தமா! – அதில் விஜய், விக்ரம், சூர்யா பிளைவுட்-உருவங்கள். கூடநின்று படம் எடுத்துக் கொள்ளலாம். கம்பியூட்டரில் ராசி பலன். என்றாலும் ஒருபக்கம், லேகிய விற்பனை. பீமபுஷ்டி அல்வா. ஜோதிகா வளையல். கையில் வாச் கட்டினாப்போல ஜவ்வு மிட்டாய். ட்ர்ரிங் என்று மணியோசையுடன் சுத்தும் ராட்டினம்… இதெல்லாம் இல்லாத திருவிழாவா!

ஆ, வேங்கடபதி. ஆள் சூரன்லா! – பக்கத்து¡ர், நாலு திசையிலும் அவனை எல்லாருக்கும் தெரிந்திருந்தது. திருவிழாப் போட்டிகளில் அவனுக்கு ரசிகர் கூட்டமே உண்டு. லாரியாபீசில் மூட்டை து¡க்கும் வேங்கடபதி. அரசியல்கூட்டம் போட்டால், கூட்டம் துவங்குமுன், ஏழை வயிறு எரியுது, எரியவில்லை அடுப்பு – என்றெல்லாம் கட்சிப்பாடல் பாடும் வேங்கடபதி. வெறும்பல்லால் ஒரு லாரி பாரத்தை இழுத்துக் காட்டிய வேங்கடபதி.

அந்த ஊரில் சீசனுக்குத் தக்கபடி வாழைத்தாரோ, பருத்தியோ, சீசனை உதறிவிட்டுச் சொன்னால், சுண்ணாம்புக் கல்லோ, ஆத்துமணலோ லோடு போய்க்கொண்டே யிருந்தது. சுருளிமலை, பெரியதாவணி, கலங்கல்குளம், தேவிபட்டினம் வழியே கிளம்பும் காட்டாறு, ராஜபாட்டையாய், அம்மன்கோவில் தாண்டி சந்தைச்சாவடி, நொய்யல் வரை நீளப் போகிறது. நல்ல அகலப்பாதை. நடுநடுவே புல்லும் புதருமாய்ச் சிறுமேடுகள் வழுக்கை மண்டையில் சிறு பிசிறு முடிகள் போல. திடீரென்று ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். சுருளிமலையின் இடுப்பிலிருந்து நீர்க்குழந்தை கோபித்துக்கொண்டு இறங்கி ஓடிவந்தாப்போல… ”பிடி… பிடீய்,” என்று மலையால் பின்னால் ஓடிவர முடியுமா!

மேற்கே மலைமேலே மூட்டம் பார்த்தாலே, யாரும் ஆத்துப்பாதையில் இறங்க மாட்டார்கள். அங்கே கொட்டும் மழைக்கு கால் அவர், அரை அவரில் காட்டாற்றில் வெள்ளம் முட்டிப் புறப்பட்டு விடும்… சந்தைச்சாவடியிலிருந்து ரஸ்தாவழி சுத்து. பஸ்சுக்குத் துட்டுச் செலவு. சனியன் நேரங்காலமே கிடையாது. வந்தால் உன் அதிர்ஷ்டம். யோசியாமல் ஆத்துமணலில் இறங்கி, நிழலாகவே ஊர்வந்து சேரலாம். அலுப்பாயெல்லாம் இராது. ஒர்ருவா, வேர்க்கடலைப் பொட்டலத்தைப் பிரித்து, ஒண்ணொண்ணா வாயில் எறிந்தபடி, ஆனந்த நடைதான் உத்தமம். சைக்கிளில் மணல்வெட்டித் தள்ளிவிட்ரும். சனியன் உருட்டக்கூட இயலாது.

ராஜேஸ்வரிக்குப் பார்த்த மாப்பிள்ளை டெய்லர் – அம்மன்கோவில் ராமசுப்பு. தனியன். அம்மா செத்து, புல் முளைத்து விட்டது… கோவிலடி தொட்டாப்போலத் துவங்கும் சந்நிதித்தெருவில் கடை கடையில் அமர்ந்தபடி கோவில், திடல், தேர், திடலில் அவிழ்ந்து கிடக்கும் வண்டிகள், மாப்பிள்ளைக்கல் சகலமும் தெரியும். கோவில் எதிர்மண்டபத்தில் ஆடுபுலியாட்டம், தாயக்கட்டம் எப்போதும் யாராவது விளையாடிக் கொண்டிருப்பார்கள்… கடையைப் பலகைபலகையாய் எடுத்துத் திறந்து-மூட வேண்டும்.. ரஜினி பீடி குடிப்பதுபோல வண்ணக்கலரில் – புத்தம்புதிய காபி – ‘ராமசுப்பு ஜென்ட்ஸ் ஸ்பெஷல் லிஸ்ட்’. ஓவியனுக்கு வரையத் தெரிந்த ஒரே ஓவியம். சலு¡ன்கடையில் கார்த்திக் வரையச் சொன்னால், கழுத்தில் மப்ளருடன், ரஜினிசாயலில் வரைந்து கொடுத்தான். வாயில் பீடிக்குபதில் பீடா.

சூர்யாவுடன் நின்றபடி ராமசுப்பு எடுத்துக்கொண்ட படம் பார்த்தாள் ராஜேஸ்வரி. படத்தில் அங்கங்கே சிவப்பு தீற்றியிருந்தது. ராமசுப்பு மாத்திரம் கருப்பாய் இருந்தான். நறுக்கிய கோட்டு மீசை. வத்தலான தேகம். கருவாடு போலிருந்தான்… தையல் மிஷினோடு படம் எடுத்துக் கொண்டிருக்கலாம்.

அம்மன்கோவிலடி மாப்பிள்ளை, என்றுதான் முதல் யோசனை. உடம்பில் பித்தளைநகை – வாடகை – கனக்கக் கல்யாணம். தாலிகட்டிய ஜோருக்கு டெய்லருக்கு முகம் பொங்கியாச்சு… இத்தனை அழகாய் ஒரு பெண்டாட்டியை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. நமக்குக் கல்யாணமே ஆவாதோன்னு ஒரு இதுவில் இருந்தான்! – டிரங்குப்பெட்டி ஒண்ணு. உள்ளே அடர் வண்ணத்தில் சில புடவைகள், ஜம்பர்கள். புருசனுக்கு ஜம்பர் தைக்கத் தெரியாது, என நினைத்துக் கொண்டாள். ஒரு பவானி ஜமுக்காளம். பாய், தலையணை. பெரிய அண்டாவில் கொஞ்சம் அரிசி, புளி, வத்தல் என்று ஜாமான்கள் தந்தனுப்பினார் ஐயா. தனியே வண்டியில் மெய்ன் ரஸ்தா வழி அது வர, அவர்களுக்கு உட்கார இடம்ஒதுக்கித் தந்தார்கள். பெத்தவர்கள் வண்டியில் வரட்டும்… ”ஆத்துவழி நடந்தே போவமே…” என்றாள். தொண்டையில் கோலிகுண்டாட்டம் எலும்பு துருத்திய மாப்பிள்ளை. தாலிகட்டும்போது இருமினான். பெண்டாட்டியுடன் பேசவே அவனுக்கு வாயெல்லாம் பல். பெரிய சிவப்பு ஜவ்வு ஈறுகள். புளியம்பழம் பல்லில் மாட்டினா மாதிரி.

”என் போட்டோப்படத்தைப் பார்த்துத்தானே சம்மதிச்சே?” மணல்வெளியில் ஒருபக்கமாய்ச் சாய்ந்தபடி நடந்து வந்தான். மாப்பிள்ளைக்கிறுக்கு அது!

”படத்துல உங்ககூட நின்னுட்டிருந்தாரே அதாரு?”

”அதா, சூர்யா. நடிகர்!”

”அவர்தான் மாப்பிள்ளைன்னு நினைச்சிட்டேன்…”

அவனுக்கு என்ன பதில்சொல்ல தெரியவில்லை.

”அவரு உங்க பிரெண்டா?” அவன்முகம் வாடியதைப் பார்த்து என்னவோ போலாகி விட்டது. ”அவரைவிட நீங்க நல்லாயிருக்கீங்க” என்றாள்.

”நில்லு…’ என்று அவளை வழிமறித்துக் கத்தினான் ராமசுப்பு திடீரென்று. பாம்பு ஒன்று. என்ன பாம்பு தெரியவில்லை. மணலில் திளைத்து விளையாடிக் கொண்டிருந்தது. நடைச்சத்தம் கேட்டு பரபரத்து, விலுக்கென்று திரும்பியது.

புதர் வழியே வெளிச்சம் துட்டுத் துட்டாய்ச் சிதறியிருந்தது. நிழல்கள் காற்றுக்குத் தரையில் ஆடின.

”பயப்படண்டாம்” என்று குரல் கேட்டது. வேங்கடபதி! – பின்னால் வந்து கொண்டிருந்தான் போலும். ஐயோ அவர்கள் பேசிக்கொண்டு வந்ததையெல்லாம் கேட்டிருப்பானோ? அவள் வெட்கப்பட்டாள். அவளைத் தாண்டியபோது, அவளிடமிருந்து மஞ்சளும் பவுடருமான ஒரு வாசனை, புதுப்பெண் வாசனை, அவனைத் தீண்டியது. நீ…ளமான தொங்கட்டான். விறுவிறுவென்று பாம்பை நோக்கிப் போனான். உஸ்ஸென அது பால்ப்பொங்கலாய் எழுந்தது. விநாடிநேரத்தில் வேங்கடபதி பாம்பைக் கழுத்தில் பற்றியிருந்தான். என்ன நடந்தது? பாம்பே உணர முடியாத வேகம்… விர்ரென்று ஒரு சுற்றுச் சுற்றி வேலியோரம் வீசினான். விழுந்து, திகைத்து, விறுவிறுவென்று மறைந்தது.

”என்னா புது மாப்ளை? பொண்ணை இப்பிடித்தான் முத முதலா நடத்திக் கூட்டி வாரதா?” பதில்கூட எதிர்பார்க்காமல் முன்னால் போய்விட்டான். அவன் திரும்பிப் பார்ப்பான் என நினைத்தாள். என்ன வேகம்! அவள் வேங்கடபதியை அறிந்திருந்தாள்.

ஒரு வளையம் நிறைய முறுக்கு – பத்து ஐம்பது முறுக்கு இருக்கும். ”எலேய் இதில் ஒரு இருபது முறுக்கையும் தின்னுறணும். எப்பிடிங்கே? வலதுகையால முறுக்கை எடுத்து வாயில போடணும். இடதுகை ஆள்காட்டி விரல் இருக்கில்ல, அதை ஆட்டிக்கிட்டே, ஆட்டத்தை நிறுத்தாமல் திங்கணும். முடியுமாடே, எவனாவது பந்தயத்துக்குத் தயாரா?”

கூட்டமே நின்று வேடிக்கை பார்க்கும். கண்நிறைய எதிர்பார்ப்பும் சிரிப்பும். ரெண்டு முறுக்கு, மூணு முறுக்குக்கு மேல் திங்க முடியாமல், விரல் ஆட்டுவதை நிறுத்தியதால், அவ்ட் ஆகி விடுவார்கள்! கூட்டமே கலீரென்று சிரிக்கும். ”எலேய் வேங்கடபதி, நீ வரல்லியா ஆட்டத்துக்கு?” என்று உசுப்பி விடுவார்கள்.

”எத்தினி முறுக்கு திங்கணும்?”

”இருபது.”

”இன்னிக்கு வவுறு சரியில்லப்பா…” என்று பிகு பண்ணிக் கொள்வான். பிறகு இருபத்தியிரண்டு முறுக்கு தின்று காட்டுவான். ராஜேஸ்வரி தன்னை மறந்து கைதட்டினாள். வயிறு சரியாயிருந்தா பூராத்தையுமே தின்னுருவாப்டியம்மோவ்!

தனியே அவள் முயன்று பார்த்தாள், முறுக்கைக் கடித்தபடி விரலையும் நிறுத்தாமல் ஆட்ட, ஒரு முறுக்கே முடியவில்லை! சிரிப்பாய் இருந்தது.

கோவிலடி வளாகத்தில் மாப்பிள்ளைக்கல் என்று உருட்டைக்கல் கிடக்கும். அதை வேங்கடபதியின் அப்பாவுக்குப் பிறகு, து¡க்க முடிந்த ஒரே ஆள், வேங்கடபதிதான்…

”உங்களால து¡க்க முடியுமா?” என்று ராமசுப்புவிடம் கேட்டாள் ராஜேஸ்வரி.

”என்னால உன்னியே து¡க்க முடியாது!” என்று ராமசுப்பு சிரித்தான்.

”பயந்திட்டியா?”

”நீங்க இருக்கீகளே? என்ன பயம்?” என்றாள்.

”சரி” என்று கிட்டேவந்து அவள் தோளைத் தொட்டான் சிரிப்புடன்.

”ஆத்தி, யாராச்சும் வரப்போறாக…’ என்றாள் வெட்கத்துடன்.

”இங்க ஆரு வருவாக. பாம்புதான் வரும்…”

லாரியாபிஸ் தாண்டி, முள்ளை வெட்டி, இழுத்து வந்துகொண்டிருந்தாள். சாக்குச் சிப்பம் ஒன்றில் படுத்தபடி வேங்கடபதி பாடிக்கொண்டிருந்தான். டியெம்மெஸ் குரலில், எம்ஜியார் பாட்டு. தொட்டால் பூ மலரும்… அவளை கவனித்து, பாட்டை நிறுத்தி எழுந்துகொண்டான். அவளும் நின்றிருந்தாள். நல்லாத்தான் பாடுறான். அன்னிக்கு ஓடையில – பேச வெட்கமாய் இருந்தது. ஆம்பளையாள், அவனே பேசினால், பேச்சுக் கொடுக்கலாம்… என்ன பேச நாமளா, என்று திகைப்பாய் இருந்தது.

வேட்டியை டவுசருக்குக் கீழே இழுத்துவிட்டுக் கொண்டான். நீ…ளமான தொங்கட்டான். அழகாய்த்தான் இருந்தாள்.

அன்றிரவு ஏனோ திரும்பத் திரும்ப அந்தப் பாட்டு வந்தது. தொடாமல் நான் மலர்ந்தேன். அவளது உற்சாகம் அவளுக்கே ஆச்சர்யம். எங்களூர் வந்திருக்கிறான். கபடிப்போட்டி, ராவாட்டத்தில் டியூப்லைட் வயர் உயரம் துள்ளும் வேங்கடபதி. மோட்டார்கிணற்றுக்குக் குளிக்கப்போனால், தோப்புப்பக்கம் கரலாக்கட்டை சுத்துகிறான். ஒரு அந்தர்பல்டி அடித்து, அப்படியே திரும்ப மணலில் நிற்கிறான். உடம்பெங்கும் எண்ணெய்ப் பளபளப்பாய் வியர்வை…. அம்மன்கோவில் தேர்!

நாவலு¡ர் வாய்க்கால் திருப்பத்தில், விறகு ஒடித்துத் திரும்புகையில், வசம்மாய்க் காலில் ஒரு முள். ஊ… என்று கத்திவிட்டாள். ”என்னாச்சி என்னாச்சி?” என்று ஓடிவந்தவன் வேங்கடபதி. அங்கே ஏன் வரவேண்டும்? சட்டென அவளை அமர்த்தி, காலைப்பற்றி, முள்ளைப் பிடுங்கியெறிந்தான். வெற்றிலை போடுவான் போல. காலை ஊன முடியுமா தெரியவில்லை. உள்ளங்கையால் சூடுபறக்க விறுவிறுவென்று தேய்த்தான். முள்ளொடிக்கும் பொம்பளைக்கு எதுக்கு, உடம்பு முகம் கழுத்து அக்குள்னு, இம்புட்டு பவுடர்?… தேய்த்த சூடு மூளைவரை ஏறியது. நீ…ளத் தொங்காட்டானை ராத்திரிகூட மாத்த மாட்டாளா?

தானறியாமல் அவன் தோளைப் பற்றியிருந்தாள். கண் மூடியிருந்தாள். ”உன் பேரென்ன?” என்றான். வெற்றிலை மணத்தது கிட்டத்தில். என்ன பவுடர் இது? – குட்டிகுரா. முள்ளுக்கட்டு தள்ளிக் கிடந்தது. கட்டு இறுக்கம் தளர்ந்திருந்தது. ”இது தப்பு”, என்றான் எல்லாம் முடிந்தபின். ”எது?” என்று அப்பாவிபோலக் கேட்கிறவளைப் பார்த்துச் சிரித்தான்.

”ஊருக்குத் தெரிஞ்சா?”

”தெரியவேணாம்.”

”உனக்கு ஆனாலும் தைரியம் சாஸ்தி ராஜேஸ்வரி.”

”உங்கள விடவா?” என்றாள். ”கவ்னர் புகையிலையா இது?” என்று த்து¡, என்று துப்பியபடி கேட்டாள்.

ராமசுப்பு வரும்வரை அவள் கதவுசாத்திக் கனவுகள் கண்டாள். வஜ்ரதேகம். கையை மடித்தபோது நரம்புகள் பச்சைப் பாம்புகளாய்க் கிளைவிரித்தன. அவன் காட்டும் வேகம்… நம்பவே முடியவில்லை. மனசின் கணக்குகள் வேறுதான்.

”பொழுதன்னிக்கும் மிஷின்லியே கெடக்கேனா? காலே மரத்து வெரச்சுப் போச்சுடி…” என்றான் ராமசுப்பு. ”கைகால் பிடிச்சு விடறியா?”

”காதுல ஏது தொங்கட்டான் புதுசா இருக்கு?”

”வாங்கினேன்…” என்றாள்.

கடைகண்ணிக்குப் போவதென்றாலும் லாரியாபிஸ் வழியே போகிறதாக வழக்கமாச்சு. கோலிசோடாவை கட்டைவிரலால் உள்ளே அழுத்தி உடைத்துக் குடிக்கிற வேங்கடபதி. அவனைப் பார்க்கவே அவளுக்கு திசுவெங்கும் திகுதிகுத்தது. எனக்கு என்னவோ ஆகிவிட்டது. தலைக்குள் பேன்பூச்சியாய் அரிப்பு. விடாத அரிப்பு.

சிறுமழைக்கும் தும்மியபடியே உள்ளே வரும் ராமசுப்பு.

”படுங்க பேசாத…” என்று போர்த்தி விட்டாள்.

”நான் து¡ங்கறேன். உனக்குதான் என்மேல எவ்வளவு அன்பு ராஜேஸ்வரி…” என ராமசுப்பு அந்தக் கைக்கு முத்தம் கொடுத்தான். ”ஏது வளைய, புதுசா?”

”வாங்கினேன்” என்றாள். அவன் து¡ங்கிப் போனான்.

”இந்தா தீப்பெட்டி. இதுல ஒரு குச்சி விடாம பத்தவெச்சிக் காட்டணும். முடியுமா?” என்றான் வேங்கடபதி அவள் மடியில் படுத்தபடி.

”உங்களால முடியுமா?”

”நேத்து பந்தயத்துல செயிச்சிக் காட்டினேன்…” என்றவன், சட்டைக்காலரில் ஒரு இழுவு இழுவி ஒரு குச்சியைப் பற்றவைத்தான்.

”ஆத்தி, என்னியவே சூடாக்குதீயளே?” என்று ஒரு புகையிலை முத்தங் கொடுத்தாள்.

கிளம்ப மனசில்லாமல் கிளம்பியபோது, ஆடாதோடை இலை பிடுங்கிப் போனாள். ”அவியளுக்கு சளிக்குக் கஷாயம் போடலாம்…”

தீபாவளி சீஸனுக்கு மழை முட்டிவந்தது. சட்டுச் சட்டென்று பொழுது இருட்டுக் கொடுத்தது. ராமசுப்பு வேலை மும்முரத்தில் இருந்தான். எல்லாம் ஆம்பளையாள் உடைகள். சீட்டித் துணிகள். நறுக்கி நறுக்கிக் குப்பைகள் குவிந்தன. காஜா எடுக்க அவன் ராஜேஸ்வரியைக் கூப்பிட்டான். அவசரம், பட்டன் வாங்க, கடைகண்ணி என்று அவன் வெளியே கிளம்பினால், கடையில் பதில்சொல்ல என்று அவளை வைத்துவிட்டுப் போனான். பாதிநாள் மழையில் நனைந்தபடி இருமிக்கொண்டே வந்தான். படுக்க, ஓய்வெடுக்க முடியாத வேலை. ”இதா சீஸன்… கைல வாங்கின துணிமட்டுக்குக் குடுக்க வேணாமா?” என்றவன், மனசாரச் சிரித்தான். ”நீ வந்த ராசி. நல்ல பிக்அப்!” என்கிறான்.

அநேகமாக தினசரி மழை பெய்தபடியிருந்தது. ”எப்போது போனாலும் ராத்திரி அதெல்லாம் வந்திருவேன். கவலைப்படாதே” என்றுவிட்டுப் போனான் ராமசுப்பு. டவுண்வரை போய் நு¡ல்கண்டும், புதுமோஸ்தர் பட்டன்களும் வாங்க அடிக்கடி போய்வர வேலை இருந்தபடியிருந்தது.

லாரியாபிஸ் காலியாய்க் கிடந்தது. சரக்குவண்டி ரத்தாகி, தினசரி லோடு என்று அமையவில்லை. அடிக்கிற மழைக்கு சாக்கை விரித்துப் படுத்துக் கிடந்தான் வேங்கடபதி. சரியான மழை. சுளீர் சுளீர் என மின்னல்கள் வானத்தைக் கிழித்தன. சாப்பிடக் கொள்ள போய்வரவே சிரமமாகி விட்டது. மதியத்துக்கே இத்தனை இருட்டும் மூட்டமும்… மேற்கே மலைப்பக்கம் நல்ல மழை என்கிறார்கள்… என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, ”எய்யா?” என்று யாரோ பதறி ஓடிவரும் சத்தம்.

”ஆரு?” ஊற்றி முழக்கிக் கொண்டிருந்தது மழை. ”என்ன ராஜேஸ்வரி?” என்று வெளியே வந்து அவளைப் பார்த்தான். மழையில் நடுங்கி நின்றிருந்தாள். ”அவுக இன்னும் வரல்ல…”

”வருவாரு. வருவாரு…” என்றான் கையமர்த்தி.

அவள் அழுதாள். ”இல்லய்யா. அவுக எப்பவுமே ஆத்துப்பாதை வழியாத்தான் வருவாக….”

”ம்”

”ஆத்துல வெள்ளம் ஓடுது!”

”ஓ” என்றவன் பரபரப்பாய்த் தெருவில் இறங்கினான். ”நீ வீட்டுக்குப் போ. அவனை நான் பாத்துக்கறேன்…” என்று ஓடினான்.

பத்து எம்பதடி அகல ஆறு- காட்டாற்று வெள்ளம் நுரைத்துச் சுழித்து ஓடிக்கொண்டிருந்தது. புதுத் தண்ணீர். சிவந்து கோபமாய் ஓடிக்கொண்டிருந்தது. நீர்மட்டம் விறுவிறுவென்று ஏறியபடி வந்தது. இதுதான் பாலாற்றில் சங்கடம். எப்ப வெள்ளம் வரும், எத்தனை வேகம் வரும், யாருக்கும் யூகிக்கவே முடியாது. பொழுது இருட்ட ஆரம்பித்து விட்டது. அவன் விறுவிறுவென்று ஆற்றில் இறங்கினான். இடுப்பளவு ஆழம். வெள்ளத்துக்கு எதிர்த்து நடக்கத் திணறலாய் இருந்தது. டார்ச் கீர்ச் எடுத்து வந்திருக்கலாம்… நேரமில்லை. ராஜேஸ்வரியின் அழுத முகம். தலையை உதறிக் கொண்டான். மழை பிய்த்து உதறிக் கொண்டிருந்தது.

”ராமசுப்பூ?” என்று இருட்டைப் பார்க்கக் கத்தினான். ஊய் ஊய்யென்று காற்று கிளம்பியிருந்தது. இருட்டு கவிந்து சகலத்தையும் மூடிக்கொள்ளும் போலிருந்தது. எப்ப ஊரைவிட்டுக் கிளம்பினானோ? மாட்டிக் கொண்டிருப்பானோ, அல்லது ஊரிலேயே தங்கி விட்டானோ? நான் வெட்டியாய் அலைகிறேனோ?… ராஜேஸ்வரியின் அழுத முகம் சகிக்கவில்லை…

”ராமசுப்பூ? ராமசுப்பூ?” என்று குரல் கொடுத்துக்கொண்டே போனான். எங்கிருந்தோ நாயொன்று நீந்தியபடி அவனைத் தாண்டிப் போனது. நாய் நதியோட்டத்தோடேயே போய் வசம்பார்த்து ஒதுங்கிக் கொண்டுவிடும்…

நல்ல இழுவை வெள்ளம். வெள்ளம் அதிகரித்தாற் போலிருந்தது. காலடியில் மண் பறித்தபடி இரைச்சலாய் ஓடிக்கொண்டிருந்தது வெள்ளம். மூச்சிறைத்தது அவனுக்கு. தலையை முங்கிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மழை மட்டுப்பட்டால் பரவாயில்லை. மழை ஆனால் குறைகிறாப்போல இல்லை… நல்ல வீதியகல ஆறு. எந்தப்பக்கம் மாட்டி ஒதுங்கித் தத்தளிக்கிறானோ. இந்த இருட்டில் கண்டுபிடிக்கக் கூட முடியுமா தெரியவில்லை. ஆற்றின் சத்தம் ஹோவென்ற பேரிரைச்சல். பள்ளிக்கூடம் விட்ட குழந்தைகளாட்டம் கும்மாளமிட்டது ஆறு… ”ராமசுப்பூ?” என்று கத்தினான்.

ஹ்ரும், என்று எங்கிருந்தோ முனகல் கேட்டது. ”சுப்பூ?” என்று கத்தினான். ”ம்” என்றது குரல். ”பயப்படாதே சுப்பு. வந்திட்டேன்…” – ”ஹ்ரும்” – முனகல் திசையில் விறுவிறுவென்று போனான். நினைத்த வேகத்தில் போக முடியவில்லை. அது அவன்தானா, வேற யாராவதா தெரியாது… வெள்ளம் இப்போது தோளுக்கு வந்திருந்தது. என்ன சுழிப்பு. என்ன நுரை. கொஞ்சம் அசந்தாலும் ஆளை உருட்டி இழுத்துப் போய்விடும். நடை என்ன. தாக்குபிடிச்சு நிற்கவே திணறியது. கடும் இருட்டு. குப்பையும் செத்தையுமாய் மிதந்தன. மண்வாசனை. சிவப்புத் தண்ணீர்… காபி, டீ போல ஒரு நிறம்.

”ஹ்ரும்…”

புதரில் செருகிக் கிடந்தான் ராமசுப்பு. அரைமயக்கம். ”வந்திட்டேன் சுப்பு…” என்று அவன் இடுப்பைத் தொட்டான். இடுப்புக்குக் கீழே தண்ணீர் இழுத்துக் கொண்டிருந்தது அவனை. அந்தப் பக்கம் ஏதோ மேடு. கையில் எந்த மரத்தின் கிளையையோ பற்றிக் கொண்டிருந்தான். ரொம்ப பயந்திருந்தான்….

”என்னைப் பிடிச்சிக்க ராமசுப்பு. நான் இருக்கேன்…”

ராமசுப்பு அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டான். ”பயப்படாதே ராமசுப்பு.” திரும்பும் வழி அத்தனை சிரமமாய் இராது. ஆற்றின் போக்கோடு போவதுதான். காலை மாத்திரம் ஜாக்கிரதையாய் ஊனி, ராமசுப்புவைத் தோளில் அழுத்திக் கொண்டு, விர்ரென்று போனான். நதியோட்டத்தோடேயே, ஆனால் மேட்டுப்பக்கம் பார்த்து பார்த்து, ஊனி, வேகத்தைத் தளர்த்திப் போனான்… திடுதிப்பென்று தரை சீராக இல்லாமல் பள்ளமாய்க் கிடக்கும். துழாவி எட்டுவைத்துப் போகவேண்டி வந்தது. அசந்து மறந்தால் ஆளை விழுத்தாட்டி இழுத்து உருட்டிரும்.

நதியோட்டத்தில் திரும்பும் து¡ரம் யோசனையாய் இல்லை. ஆனால் எதிர்த்துப் போக எவ்வளவு சிரமப்பட வேண்டியதாகி விட்டது… ராமசுப்பு தோளில்… குழந்தைபோல!

படித்துறைப் பக்கம் ஜனங்கள் காத்திருந்தார்கள். அவனைப் பார்த்ததும் கயிறு வீசிப் போட்டார்கள். அவன் பிடித்துக் கொண்டதும் அப்படியே இழுத்தார்கள்.

ராமசுப்புவின் வயிற்றை அமுக்கி மயக்கம் தளர்த்தினான். ”ஒண்ணுமில்ல. பயந்திருக்காரு…” என்றான்.

வீட்டில் கொண்டுபோய்ப் படுக்கவைத்தபோதும் மழை முணுமுணுத்துக் கொண்டிருந்தது. மணி பத்து. காலை அரக்கப் பரக்கத் தேய்த்து சூடுபடுத்தினான். மெல்ல தெளிவு வந்ததும், ராமசுப்பு கையெடுத்துக் கும்பிட்டான்.

பதில் சொல்லாமல் வேங்கடபதி எழுந்து லாரியாபிஸ் வந்தான். ஈரத்துணிகளைப் பிழிந்து துவட்டிக் கொண்டான். என்ன மழை, என்று நினைத்துக் கொண்டான். ராமசுப்பு கையெடுத்துக் கும்பிட்டதை நினைத்துக் கொண்டான். பயந்து விட்டான், என்றிருந்தது.

காலையில் வெள்ளம் மட்டுப் பட்டிருந்தது. வெள்ளம் பார்க்க ஊரே திரண்டிருந்தது. அவனருகில் வந்து நின்றாள் ராஜேஸ்வரி…

”எப்பிடி இருக்காரு?”

”து¡ங்கறாரு…” என்றாள்.

”போ. அவரைப் பாத்துக்க பத்திரமா. ரெண்டுபேரும் நல்லாருங்க” என்றான் வேங்கடபதி.


storysankar@gmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்