மாத்தா ஹரி -அத்தியாயம் – 30

This entry is part [part not set] of 32 in the series 20071004_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா



– பவானி பவானி…எழுந்திரேன்

– என்னப்பா?

– எழுந்திரடா!

– மணி என்ன?

– அதிகாலை மூன்றாகுது

– நான் ஐந்து மணிக்கு எழுந்தால் போதும்பா.. உங்களுக்குத் தெரியாதா. இத்தனை காலையிலே எழுந்து என்ன செய்யப்போறேன்.

– இல்லை இது வேற.

– அதிகாலை மழை அனுபவத்தைப் பற்றி உன்னிடத்தில் சொல்லியிருந்தேனே!

– ம்..

– அதற்கான சந்தர்ப்பம் வந்திருக்கிறது, தெருவிலிருந்துவிட்டுத்தான் வருகிறேன். நிலவில்லை, நட்சத்திரகளில்லை. பகலுக்கேயுரிய மனிதரெழுப்பும் கடுமையான சத்தங்களில்லை. உலகம் தியானத்தில் இருக்கிறது. வானத்தையும் மேகங்களையும் பார்க்க உப்பளம் மாதிரி இருக்கிறது. காற்றின் உந்துதலற்ற அந்த மேகங்கள் எந்த நேரமும் கரைந்து போகலாம். ஒரு பெரிய கச்சேரிக்குண்டான அத்தனை ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. பெரிய வித்வம் சபையேறப்போகிறது. ஹோவென்று அருவிமாதிரிக்கொட்டி, உலகத்தின் அத்தனை அழுக்கையும் அலம்பப்போகிறது. உடலையும் மனதையும் சேர்ந்தாற்போல நனைத்துக்கொள்ளலாம். ரசிகர்களில்லாமல் நாற்காலிகள் வெறிச்சோடி கிடக்கின்றன. நேரத்திற்குப் புறப்பட்டு போனோமென்றால் முன் வரிசையில் அமர்ந்து கைத்தட்டி ரசிக்கலாம்.

– என்னைத் தூங்கவிடுங்கப்பா. காலையிலே எழுந்ததும் முதல் வேலையா, உங்க சந்தோஷத்தை பகிர்ந்துகொள்கிறேனே..

– அந்த சந்தோஷத்தை கேட்டுப் பகிர்ந்துகொள்ளமுடியாதடா. உள்ளத்து வழி உடலுக்குக் கொண்டுபோகிற இன்பங்கள் ஒரு ரகம், உடல் வழி உள்ளத்துக்குக் கொண்டுபோற இன்பங்கள் இன்னொரு ரகம். மழை பின்னது. உணர்ந்துதான் பார்க்கவேண்டும். தன்னை எஜமானனாக உருவகித்துக்கொண்டு, புலன்களை அடிமைகளாக நடத்தும் அறிவோடுதானே, பகலெல்லாம் வாழ்கிறோம். அறிவு நமது உள்ளத்தையும் விட்டுவைப்பதில்லை, ஆதிக்கம் செலுத்துகிறது. புலன்கள் உணர்வை குறைத்து மதிப்பிடுபவர்கள் மூடர்கள். உலகில் நடக்கும் அத்தனை அநியாயங்களுக்கும் அறிவுணர்வுதான் காரணம். புலனுணர்வோடு வாழ்கிற பறவைகள், மிருகங்களிடத்தில் வறுமை இருக்கிறதா, திருட்டு இருக்கிறதா, இனப்பாகுபாடு, சாதியில் உயர்வு தாழ்வு, கொலை, கொள்ளை, திட்டமிடல், யுத்தம் இப்படி ஏதாவதொன்றைச் சொல்லமுடியுமா? பலமுறை நான் சொல்லியிருக்கிறேன்: புலன் உணர்ச்சிகள் நம்மை வாழவைப்பவை, அது நம்மிடத்தில் வீரியத்துடனிருப்பது இரவு நேரங்களில்தான், அதைச் சந்தோஷப்படுத்துவது மிகவும் முக்கியம். எழுந்திரு!

– எழுந்திருக்கிறேன். முதலில் விளக்கைப்போடுங்கப்பா!

– வேண்டாம்மா. இரவு இரவாகவே இருக்கட்டும், அதையேன் காயப் படுத்தணும். இப்படி வா!

– என்னப்பா உங்கள் கை சில்லென்று இருக்கிறது.

– வெளியிலிருந்துவிட்டு வந்தேனில்லையா? அதுதான் காரணம். கொஞ்சம் பொறு! கதவைத்திறக்கிறேன். கவனமாய் நடந்துவா. நீ இப்போதுதானே விழித்தாய். இருட்டிற்கு உன் கண்கள் பழகிக்கொள்ள சில நொடிகள் ஆகும். என்ன குளிருதா?

– ஆமாம்பா..

– என்னைப்பார் நான் வெற்றுடம்புடன் இருக்கிறேன், அரையின் ஒரு நாலுமுழ மல்வேட்டி, அவ்வளவுதான். உண்மையில் எனக்கு நிர்வாணமாய், இரவில் நடந்துபோகவேண்டுமென்று ஆசை. பைத்தியக்காரன் என்பார்கள். பிறகு பைத்தியக்காரன் மகள், பைத்தியக்காரன் மனைவி என்றெல்லாம் அது தொடரும். அதற்கு நான் காரணமாக இருக்கக் கூடாதில்லையா? கொஞ்சம் தூரம் நடந்தால் உனக்கு குளிர்விட்டுப்போகும். கிழக்கே பார்! சாம்பல் வண்ண அடிவானத்தில் கவ்விக்கிடைப்பது அத்தனையும் மழைமேகம். பனிக்குடம் உடைந்திருக்கிறது. எந்த நேரமும் நீர்சிசு மண்ணில் விழக்கூடும். தட்டான்களைப் பார்! எத்தனை ஆனந்தமாக ஆட்டம்போடுகின்றன; தூரத்தில் கீசு கீசு என்று மைனாக்கள் சந்தோஷமாக ஆரவாரம் செய்வது கேட்கிறதில்லையா?

– ம்..

அப்பா சொன்னதுபோல பவானியின் கண்கள் இருட்டுக்குப் பழகிக் கொண்டிருந்தன. அறை, கூடம், நடை, தெருக்கதவென்று அப்பாவும் பெண்ணுமாய் கடந்து வந்தார்கள். மனித சத்தமின்றி தெரு இருக்கிறது. உடலைத்தொட்ட முதல் மழையில், உடல் அதிர்ந்து மீள்கிறது. பிறகு ஒன்று, இரண்டு, நான்கு, பத்து, ஆயிரம் துளிகள் தொடர்ந்து உடலில் பட்டுத் தெறிக்க, இவள் கரைகிறாள். ஒளி மண்டிய இடங்களில் மழைத்துளிகள் கண்ணாடிக்கம்பிகளாகக் காற்றில் சரிந்து விழுகின்றன. மின்சாரவிளக்கினைச் சுற்றி தட்டாம் பூச்சிகள் படபடத்தபடி இருக்கின்றன. இருளோடு கலந்த தார்ச்சாலையின் மணம். ஆடை நனைந்து, கவசம்போல உடலைப் பிடித்துக்கொண்டது. அப்பாவின் கரம்பற்றியபடி காற்றில் மிதக்கிறாள். அப்பாவுக்குப் பலமுறை பறந்த அனுபவம். குளத்துநீரின் அலைபோல சீராக முன்னேறுகிறார். மேலிருந்து பார்க்க, குடிசை, கோபுரம், வயல்கள், மரங்களென கலந்த அழகிய நிலபரப்பாய் விரிந்து கிடக்கும் பூமி. அவ்வப்போது மின்னலொளியில், அவை உயிர்ப்பதும், பின்னர் அமைதிகாப்பதுமாக இருக்கின்றன. ஒரு துளி நாசியில், ஒரு துளி இமைமீது, ஒரு துளி கைவிரல்களுக்கிடையில் என விழுந்து மழைநீர் கிச்சுகிச்சுமூட்டுகிறது. நாக்கை நீட்டி, ஒரிரு துளிகளை உள்வாங்கிக்கொள்கிறாள், உடல் விம்மித் தணிகிறது. சட்டென்றே மழை வேகம்பிடிக்கிறது, சடசடவென்று பெய்து உக்கிர தாண்டவமாடுகிறது. கணத்தில் உடலைக் குளிர்வித்த மழை தணலாகச் சுடுகிறது. இது வேறுமழை, இது வேறு துளி, முகத்தைக் குறிவத்து வீசப்பட்ட திராவகம்: உடல் வெந்து, தோல் கழன்று…திடுக்கிட்டு எழுந்தாள். எதிரே தேவசகாயம்.”ஈரத்திற்கேங்கினால் எமனுக்கழைப்பா?/இன்பத்தை நாடினால் துன்பத்தின் அழைப்பா?” ந. பிச்சைமூர்த்தியின் கவிதை வரிகள் மனத்திலோடின.

– என்ன மாத்தா, தூக்கத்தைக் கலைச்சுட்டேனா? மன்னிக்கணும்.

பவானிக்கு எழுந்திருக்க மனமில்லை. கண்ணிரப்பைகள் இரண்டும், புருவத்தைத் தொட்டுச் சகஜ நிலைக்குத் திரும்பின ஒரிரு வினாடிகள், அவளுடைய கண்மணியில் தேவசகாயம் உட்கார்ந்திருப்பான். அவள் உடல் கூசியது, அருவருப்புடன் அவன் பிம்பத்தைக் கலைக்க நினைத்தவள்போல கண்களைக் கசக்கினாள். விடிவிளக்கின் சாம்பல் ஒளியில் இரவின் எச்சம்போல நிற்கிறான். அவனினும் பார்க்க அவன் நிழல் நீண்டு உயர்ந்து, இவள் ஆசையை நிறைவேற்றுவதுபோல உட்கூரை விளிம்பில் கழுத்துடைந்து நிற்கிறது. பெரிய சிவந்த கண்கள், உப்பிய கன்னங்கள், அடர்த்தியான புருவம், ஆசனவாய்போல ஒரு வாய். பவானி சிறுமியாய் இருந்தபோது பாட்டி அறிமுகப்படுத்திவைத்த முனீஸ்வரனும் இப்படித்தான் இருந்தான். அந்த முனீஸ்வரனுக்கு அடிக்கடி கோழி, சாராயம் வேண்டும். படையல் போடுகிற பூசாரிக்கு சுருட்டு அவசியமென்றால் சுருட்டும் வேண்டும். இந்த முனீஸ்வரனுக்கு எல்லாமே பவானி. தனது உடலைக் குறுக்கிக்கொண்டு, முதுகை வளைத்து பவ்யமாய் கைகூப்பியபடி கபட சாமியார்போல நிற்கிறான்.

– இன்றைக்குப் புதன்கிழமை கிஷ்ணபட்சம். அஷ்டமிதிதி, சித்திரை நட்சத்திரம் கும்பலக்கினத்தில் சுக்கிரன் ஓரையில் உங்களுக்கு விசேஷ பூஜை செய்யணுமென்று உத்தேசம்.

– தேவா ·ப்ளீஸ் என்னை விட்டுடு, எனக்கு முடியலை. நேற்று பதினோரு மணியாச்சு வேலை முடிய. கைகாலெல்லாம் வெலவெலவென்று இருக்கிறது.

– என்னவேலை. உதடுகள், நாக்கு, கைகள், மார்பு, தொடைகள், இடுப்புக்கீழேயென்று ஆணும்பெண்ணும் அன்யோன்யமாய் செய்வார்களே அந்த வேலையா?

– தேவா உனக்கு ஏன் புத்தி இப்படியெல்லாம் போகுது?

– எப்படி?

– முதலில் அந்தக் குளோதோட பழகறதை நிறுத்தாதவரைக்கும் நம்ம குடும்பத்துக்கு விமோசனமில்லை

– நீ அந்த ஆப்ரிக்கனை கண்டா பல்லை இளிக்கிறதை முதலில் நிறுத்தணும்.

– சத்தம் போடாதீங்க, அடுத்த அறையிலே குழந்தை தூங்கறா. உங்களுக்கு எவன் நல்லவன் எவன் கெட்டவன் என்கிற தெளிவுகூட இல்லை. நேற்று உங்க குளோது என்னைத் தேடி எங்க ஆபீஸ்வரைக்கும் வந்துட்டான் தெரியுமா?

– அதானாலென்ன? நான்தான் அவரிடத்தில் வேலையை முடிக்க நேரமாகும், முடிந்தால் உன்னை காரில் வீட்டில் கொண்டுவந்து விடமுடியுமாண்ணு கேட்டிருந்தேன்.

– இனி அந்த ஆள்கிட்ட எந்த உதவியும் கேட்கவேண்டாம்.

– ஏன்?

– அவன் பார்வையே சரியில்லை.

– எப்படி சொல்ற?

– அதையெல்லாம் விளக்கமா சொல்லிகொண்டிருக்க முடியாது.

– ஏன் உன்னை அங்கே இங்கே தொட்டானா?

– ஏன் அதெல்லாம்கூட செய்யணுமா என்ன?

அவள் வாக்கியத்தை முடிக்கவில்லை. பளீரென்று கன்னத்தில் விழுந்தது. தனது பலத்தை முழுவதுமாக பிரயோகித்து அறைந்திருந்தான். இடது காதிலிருந்த வளையம் உடைந்து தெறித்திருந்தது. கட்டிலிலிருந்து சரிந்து விழுந்தாள். வலதுகாதையும் கன்னத்தையும் சேர்த்தாற்போல கைகளில் தாங்கினாள். மண்டைக்குள் ‘ஙொய்’ங்கென்று இரைச்சல். பவானியின் கண்கள் கலங்கியிருந்தன, உதட்டைக் கடித்தபடி தலை குனிந்தபடி இருந்தாள். அவளையே பார்த்தபடி நின்றான். நின்றவன் சட்டென்று பக்கத்தில் உட்கார்ந்தான்.

– குளோதை நீ தப்பா புரிஞ்சு வச்சிருக்கிற மாத்தா. உங்கமேலே அவருக்குள்ள பக்தியை, என்னைத் தவற வேறொருத்தருக்குப் புரியாது.- முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டு முனகினான்.

– அந்த ஆள் உங்களைப் பைத்தியமாக்கிவச்சிருக்கான். நீங்க திருந்தவே போறதில்லை. ஒரு நாளைக்கு சொல்லவேண்டிய இடத்துலே சொல்லிட்டு, என்பாட்டுக்கு புறப்பட்டு போய்க்கொண்டே இருப்பேன்.

– அப்போ எது உன்னை தடுக்குது?

– என்ன செய்வது, நம்மை நம்பி ஒரு குழந்தை இருக்குதே. அடுத்து நீங்களும் திருந்துவீங்கங்கிற நம்பிக்கைதான்.

– குளோது இனிமே உன்னைப் பார்க்க வரக்கூடாதென்று சொல்லிடட்டுமா?- குரல் பரிவுடன் ஒலித்தது.

– நடக்க முடியாததைச் சொல்றீங்க

– இல்லை சொல்லிடறேன், என்றவன், எந்த கன்னம்? எந்த கன்னம்? என்றான்.

– எதற்கு?

சட்டென்று அவளது கையை எடுத்துவிட்டு, அறைந்த இடத்தில் முத்தமிட்டான்.

– மாத்தா? நீங்க எனக்கு கிடைச்ச வரம், என்றான்.

– தேவா, நான் பவானிங்கிறதே மறந்துபோச்சா. உங்கப் பொண்டாட்டீங்க.

– அப்படீண்ணா, என் வேண்டுதலை நிறைவேற்றியாகணும்

– இப்ப என்ன செய்யணும்.

– இன்றைக்கு நண்பர்களெல்லாம் வீட்டுக்கு வர்ராங்க. உங்களுக்கு பூஜை வச்சிருக்கோம்.

– அதற்கு?

– அதற்கு முன்னே ஸ்னானம் செய்யணும்

– என்ன அது ஸ்னானம்? குளிக்கணும் அவ்வளவுதானே? நீங்க முன்னாலே நடங்க. நான் வறேன்.

இருவரும் குளியலறைக்கு வந்து சேர்ந்தார்கள். நீங்கள் வெளியில்போங்கள் குளித்துவிட்டுவருகிறேன்.

– இல்லை நான் உடனிருக்கணும் எல்லாம் முறைப்படி நடக்கணும். சொன்னவன் சட்டென்று அவள் சேலையை உறிந்தான். உடலுக்குச் சொந்தக்காரனென்றாலும் இப்படியொரு காட்டுமிராண்டித்தனத்தை எதிர்பார்க்கவில்லை.

– ‘ அய்யோ! இதென்ன கூத்து. ப்ளீஸ்! வேண்டாம்! என்னை விட்டுடுங்க.. கூச்சமா இருக்கிறது தேவா. இரண்டு கைகளையும் மார்பின் குறுக்கே வைத்தவள், தரையில் உட்கார்ந்துகொண்டாள்.

சிரித்தபடி இரவிக்கை, உள்ளாடையென ஒவ்வொன்றாக உருவினான். அவள் கெஞ்சிக்கொண்டிருந்தாள். கால்களைப் பின்னிக்கொண்டு, மார்பை மறைத்திருந்த கைகளை எடுத்து கும்பிட்டாள். அவன் கால்களில் விழுந்தாள். குனிந்து குண்டுகட்டாக அவளைத் தூக்கினான். குளிக்கிற தொட்டியில் உட்காரவைத்தான். இப்போது அவள் வாய் மட்டும் அசைந்தது, குரல் அடங்கிப் போனது. அவளது தலையில் எண்ணெய்வைத்தான். சீயக்காய் பாக்கெட்டைப் பிரித்துக் கொட்டித் தண்ணீர் ஊற்றினான். சந்தனம், விபூதி, தேன், பஞ்சாமிர்தமென தொடர்ந்தது. ஒவ்வொருமுறையும் குவளை குவளையாக அவள் தலையில் கொட்டிய தண்ணீரில் பன்னீர், வெட்டிவேரோடு, அரைகிலோ மிளகாய்த்தூளையும் கலந்திருந்தான்.

(தொடரும்)

nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா