மாத்தா ஹரி – அத்தியாயம் 28

This entry is part [part not set] of 39 in the series 20070920_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


உரையாடலுக்கிடையில் ஹரிணியின் கைத் தொலைபேசி ஒலித்தது. மறுமுனையில் மதாம் க்ரோ.

– போன்ழூர் மதாம். எப்படி இருக்கீங்க? சொல்லுங்க.

– …

– என்னை அவசரமா பார்க்கணுமா? என்ன விஷயம்?

– ….

– இல்லை, ஒரு இந்திய நண்பரோட இங்கே ரெஸ்டாரெண்ட்டில் சாப்பிடறோம். அநேகமா இரண்டு மணிக்கெல்லாம் வீட்டுக்குத் திரும்பிடுவேன்.. வாங்க வாங்க பிரச்சினை இல்லை.

– யாரு? – அரவிந்தன்.

– மதாம் குரோ.

– என்னவாம்?

– என்னை அவசரமா பார்க்கணுமாம்.

– எதற்கு?

– தெரியலையே.

– ஜாக்கிரதை, சித்தேமுன்னேதான் அந்தப் பொம்பிளையைப் பத்தி என்னென்னவோ சொன்ன.

– அவ வந்தால் வரட்டும், நான் பார்த்துக்கிறேன். நீ இருப்பாய் இல்லையா?

– இல்லை நான் ஷர்மிளா வீட்டிற்குப் போகிறேன். நாளை மாலை வேண்டுமானால் வறேன்.

– ஒன்று செய்யேன், நாளைக்கு எனக்கு டெலிபோன் பண்ணு. நான் வீட்டில் இருக்கிறேனா அல்லது வேலையிலே இருக்கிறேனாஎன்று சொல்றேன். அநேகமாக வீட்டிலேதான் இருப்பேன். வேலைக்குப் போற மூடில் இல்லை.

இருவரும் சாப்பிட்டு முடிக்கட்டுமெனக் காத்திருந்ததுபோல இறுதியாக காப்பியும், ஆப்பிள் கேக்கும் வந்து சேர்ந்தது. ஹரிணி பால் கலவாத காப்பியை எடுத்து உறிஞ்ச, அரவிந்தன் ஆப்பிள் கேக்கை தின்று முடித்தான். பரிமாறிய பெண்மணியைக் கூப்பிட்டு பில்லைக் கொண்டுவரச் சொன்னார்கள். அடுந்த ஐந்து நிமிடத்திற்குப் பிறகு பில் வந்து சேர்ந்தது. அதற்குரிய பணத்தை வைத்துவிட்டு, இருவரும் புறப்பட, பெண்பணியாள் இருவரது ஜாக்கெட்டையும் கொண்டுவந்து கொடுத்தாள். அணிந்துகொண்டு, கோரஸாக போய்வருகிறோமெனச் சொல்லிக் கொண்டு புறப்பட்டார்கள்.

கார் நிறுத்தத்தை அடைந்ததும் அரவிந்தன்- ” நான் டிராம் பிடித்து போய்விடுகிறேன், எதற்காக வீண் சிரமம். என்றான். ஹரிணியிடம் மறுபேச்சில்லை. ஊமைபோல தலையாட்டினாள். அரவிந்தன் அவளை அணைத்துக்கொண்டு, இருகன்னத்திலும் முத்தமிட்டுவிட்டு போய்வருகிறேன், நாளைச் சந்திப்போம் எனப் புறப்பட்டுச் சென்றான். சிறிது தூரம் நடந்ததும் திரும்பினான். உதடுகள் விலகப் புன்னகைத்தான். முன் நெற்றியில் விழுந்த கேசத்தை ஒதுக்க நினைத்து, வலது கரத்தை உயர்த்தி நுனிவிரல்களால் நெற்றியைத் தொட்டவள், தொடர்ந்து செயல்படமுடியாமல், ஒரு வித மயக்கத்துக்கு ஆட்பட்டவளாக நிற்கிறாள். அவன் தன்னிடம் வரமாட்டானா என்ற நினைப்பு, தானேகூட அவன் பின்னே ஓடலாமா, தடுத்து நிறுத்தலாமா? இல்லை. அவன் போகவில்லை. நிற்கிறான். ஒரு சில நொடிகள் இவளையே பார்க்கிறான். இரு மனங்களும் ஒன்றையொன்றுப் பிணைந்துகொண்டிருக்க, உடல்கள் தாமதித்து ஓடிவந்தன. இருவரும் முத்தமிட ஆரம்பித்து விநாடிகள், நிமிடங்களாயின. அவன் தலையை இருகைகளிலும் பிடித்து விலக்க முயற்சித்து தோற்றாள். அவன் மீண்டும் வேண்டியிருந்தது, அவனுடைய முகம் மார்பில் அழுந்த…அக்கணம் முடிவற்று… குக்கூவென்று கூவியபடி, இன்பம் நிற்காத தொடருந்துபோல, திசுக்களைக் கடந்து செல்கிறது, மீண்டும் மீண்டும் இவளை விலக்கி..ம்..இல்லை இல்லை.. இவளோடு பயணிக்கிறது. வெயில், கருவாலி மரங்கள், நிறுத்தியிருந்த வாகனங்கள், நடந்து சென்றவர்களெனப் பலரும் இவர்களைச் சாடையாகப் பார்ப்பதுபோல பிரமை. இளைஞன் விலக நினைத்தான், இளமை இயலாதென்கிறது. மீண்டும் கைத்தொலைபேசி. இந்த முறை அரவிந்தனுடையது. எடுத்தான். மதாம் ஷர்மிளா.

“….”

ஹரிணியோடு இருக்கிறேனென்று சொல்லலாமா என்று நினைத்தான். பிறகு இப்போதைக்கு வேண்டாமே என்று நினைத்தவன்போல சின்னதாய் பொய்சொல்ல தீர்மானித்தவனாக

– ஷர்மிளா, இங்கே தெரிஞ்ச சினேகிதனோடுதான் பேசிக்கொண்டிருக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்துலே வீட்டுக்கு வந்திடுவேன்.

“—-”

– காலையிலே, எனக்காகக் காத்திருக்க வேண்டாமென்று சொல்லிட்டுதானெ புறப்பட்டேன். நான் இங்கே ரெஸ்ட்டாரெண்ட்லே சாப்பிட்டு முடிச்சுட்டேன். அரைமணி நேரத்துலே வந்திடறேன்.

தொடர்பைத் துண்டித்துக்கொண்டான். “ஹரிணி அப்போ நான் புறப்படறேன். நாளைக்குச் சந்திப்போம்”. என்றுவிட்டு மெல்ல விலகி, இந்த முறை திரும்பிப் பார்க்காமல் நடந்தான். இவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. கோபத்துடன் காரில் ஏறி அமர்ந்தாள்.

ஹரிணி தனது இருப்பிடமிருந்த வில்சன் அவென்யூவை அடைந்தபோது மணி மூன்றிர்க்கு ஒரு சில நிமிடங்கள் கூடுதலாக
இருந்தது. காரை, நிறுத்தத்தில் விட்டுவிட்டு நுழைவாயிலுக்கு வந்தபோது, மதாம் குரோ வந்திருந்தார். வணக்கம் தெரிவித்துக்கொண்டார்கள், ஒருவர் மாற்றிஒருவர் முத்தமிட்டுக்கொண்டார்கள்..

– வந்து அதிக நேரமிருக்குமோ? ஹரிணி கேட்டாள்.

– இல்லை, ஐந்து நிமிடமிருக்கலாம்.

நுழைவாயில் கேட்டினைத் திறந்து, “நீங்கள் போங்கள்”, என்று முதமில் மதாம் குரோவிற்கு வழிவிட்டாள். அவளும், “நன்றி” என்று சொல்லிவிட்டு, ஹரிணி பின்தொடர உள்ளே வந்தாள். அவளிடம், “கொஞ்சம் பொறுங்கள்”, என்ற ஹரிணி, அவள் பெயரிலிருந்த அஞ்சல் பெட்டியைத் திறந்து இரண்டு நாட்களாக சேர்ந்திருந்த கடிதங்களை கையில் எடுத்துக்கொண்டாள். “லிப்ட் எடுக்கலாமா?” என்று கேட்டாள். மதாம் குரோ “எடுக்கலாம்” என்று சொல்ல, இருவருமாக லிப்டில் நான்காவது மாடியை அடைந்தார்கள். நடைக்கூடத்தில், ஹரிணியின் பக்கத்து அப்பார்ட்மெண்டில் இருக்கும் வயதான கிழவி, குப்பைப் பையுடன் எதிர்ப்பட்டாள்.. ” அப்பார்ட்மெண்ட்ல எத்தனைபேரு இருக்காங்க காலையிலேயிருந்து ஒரே கூச்சல். நான் சம்பந்தப்பட்டவங்களுக்கு எழுதுவேன்.” சத்தமிட்டாள். “தாராளமா எழுதிப்போடு, உனக்கு எழுத தெரியுமா? தெரியலைன்னா என்னைக் கூப்பிடு நான் எழுதித்தறேன்”, எனப் பதிலுக்கு ஹரிணி சத்தமிட, கிழவி முனகிக்கொண்டே நடந்து மறைந்தாள். ஹரிணியின் அப்பார்ட்மெண்டை நெருங்க, உள்ளேயிருந்து கதம்பக் குரல்கள். மதாவ் க்ரோ, ஹரிணி கதவைத் திறக்கட்டுமென விலகி நின்றாள். கதவைத் திறந்ததும் முதல் வேலையாக ஹரிணி ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சி பெட்டியை அணைத்தாள். எப்படி தொலைக்காட்சி பெட்டியைக் காலையில் நிறுத்தாமல் புறப்பட்டோம் என்பது ஆச்சரியமாக இருந்தது. மதாம் க்ரோ பக்கத்தில் நிற்பது உறுத்த, திரும்பியவள், ” உட்காருங்கள்” என்றாள். தொடர்ந்து, “ஏதாவது குடிக்கக் கொண்டு வரட்டுமா?” என்று கேட்டாள்.

– நன்றி, தேவையில்லை., என்ற க்ரோ, சோ·பாவில் சாய்ந்து, அமர்ந்தாள்;

– களைத்திருப்பதுபோல தெரிகிறது.- ஹரிணி

– வயதாகிறதில்லையா?

ஹரிணி, மதாம் க்ரோவுக்கு எதிரிலிருந்த, சோ·பாவில் அமர்ந்துகொண்டாள். வெளியில் போய்விட்டு வந்த அலுப்பில் தான் அணிந்திருந்த மேல்சட்டையை அவிழ்க்க நினைத்தாள். மதாம் க்ரோவை நினைக்க அச்சம். அந்த எண்ணத்தைத் தவிர்த்தாள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இருவருக்கும் பொதுவான ஒரு விஷயத்தைப் பற்றிப்பேசுவதற்கான தொடக்கம் வேண்டும். அதை யார் ஆரம்பித்துவைப்பதென்கிற குழப்பம். மதாம் க்ரோவுக்கு என்ன வயதிருக்கும், ஐம்பது இருக்கலாமா? ஆனால் உடலைப் பார்த்தால் ஐந்து வருடம் குறைத்துக் கூறலாம் போலிருக்கிறது. தலையில் தென்பட்ட ஓரிரு நரைகள் கூட, அவளது வயதைக்கூட்டுவதற்குப் பதிலாக அழகைக் கூட்டியிருந்தது. அடர்த்தியும் நீளமுமாக இருந்தமுடியை, தோளுக்குமேலே கழுத்துக்கு இணையாக குதிரைவாலாகத் தொங்கவிட்டிருந்தாள். அவளது வெளிர்பச்சைக் கண்கள், கலவரப்பட்டிருந்ததின் காரணமாகச் சிவந்திருந்தன, கண்ணிரைப்பகளைச் சுற்றிலும், இளமைத் தோற்றத்திற்கு முரணாக, கலைத்துப் போட்டதுபோல சுருக்கங்கள். மேலே தொளதொளவென்று ஒரு பெரிய காட்டன் சட்டை, கீழே இடுப்பையும், சற்று கூடுதலாகத் தொடையையும் இறுக்கிக்கொண்டு வெளுத்த ஜீன்ஸ்.

– உங்களைப் பார்க்கணுமென்றுதான் நினைத்தேன், நேரம் கிடைக்கவில்லை. ரொம்ப நன்றி. ஹரிணி சூழலைப் புரிந்துகொண்டு, க்ரோவின் கேள்வியை ஓரளவுக்கு உணர்ந்து பேசியதுபோல இருந்தது.

– பொய் சொல்ற. பரவாயில்லை. ஆனால் கடைசியா ரொம்ப நன்றிண்ணு சொன்னது எதற்காக?

– உண்மையில் உங்களைச் சந்திச்சதுலே எனக்குச் சந்தோஷம்.

– சரி வெயில் குறைஞ்சிருக்கிறமாதிரி இருக்குது. வெளியில் பால்கணியில் உட்கார்ந்துபேசலாமா?

ஹரிணியின் பதிலுக்குக் காத்திராதவள்போல, அவள் கையைப் படித்துக்கொண்டு எழுந்தாள். பால்கணியை வரவேற்பறையிலிருந்து பிரித்திருந்த கண்ணாடிக்கதவினைத் தள்ளிக்கொண்டு இருவருமாக, பால்கணிக்குள் கால்வைத்தார்கள். வெயிற்கால உபயோகத்திற்கென ஒரு மேசையும் இரு நாற்காலிகளும் அங்கிருந்தன. மீண்டும் இருவரும் எதிரெதிராக அமர்ந்தார்கள். ஒரிரு விநாடிகள் அமைதியாகக் கழிந்தன.

– என்ன எடுக்கறீங்க மதாம், ஏதாவது குடிக்கக் கொண்டுவரட்டுமா?- குடிபானங்கள் தங்கள் உரையாடலை சகஜ நிலைக்குக் கொண்டுவருமென ஹரிணி எதிர்பார்த்தாள்.

– குளிர்பானமாக இருந்தால் நல்லது. ஆனால் ஒரு வேண்டுகோள் என்னை இனி மதாம் என்று கூப்பிடக்கூடாது, க்ரோ என்றுதான் கூப்பிடணும்.

– ஓ.கே க்ரோ. ஐஸ் டீ இருக்கிறது கொண்டுவரட்டுமா?

– ம்.

ஒரிரு விநாடிகளில், லிப்டன் ஐஸ் டீ டின்கள் இரண்டு வந்தன.

– ஹரிணி, நான் சொல்வதைக் ஒழுங்காக் கேட்க்கணும். உங்கம்மா பவானிமேலே உனக்கிருக்கிற அன்பைப் புரிஞ்சுக்கிறேன். நானும் உங்க அம்மாவை அப்படித்தான் நேசித்தேன். நல்ல பெண்மணி. எதிர்பாராதவிதமா அவங்க வாழ்க்கையிலே என்னென்னவோ நடந்துட்டது. அது உனக்கும் நேர்ந்திடக்கூடாது என்கிற பயம் எனக்கிருக்கு. உங்க அம்மாவை நான் எப்படி நேசித்தேனோ அப்படித்தான் உன்னையும் நேசிக்கிறேன். உன்னையும் அந்தக் கூட்டத்திடமிருந்து காப்பாற்றியாகவேண்டும்.

– எந்தக்கூட்டத்திடமிருந்து?

– மாத்தாஹரிங்கிற சமயக்குழுவிடமிருந்து?

– நீங்களும் மாத்தாஹரி உபாசகர்தானே?

– ஆமாம். நாங்க மாத்தாஹரியை நேசிக்கிறோம். ஆனால் நாங்க அவளுடைய ரசிகர்கள். அவளுக்கு இழைக்கபட்ட அநீதியைக் கண்டு கொதித்து எழுந்தவர்கள். தவிர அதை மாத்தாஹரிக்கு எதிரான தண்டனையா நாங்க நினைக்கவில்லை. அபலையொருத்திக்கு இழைக்கபட்ட தண்டனையாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். அவளுடைய வழக்கினை பிரெஞ்சு நீதிமன்றம் மறுவிசாரனை செய்யவேண்டும், அவள் குற்றமற்றவள் என்ற தீர்ப்பளிக்கவேண்டுமென்றுதான் எங்கள் எதிர்பார்ப்பு. உலகில் ஆண்களால் ஏமாற்றப்படும் பெண்களும், அநியாயமாய் உயிரிழக்கும் பெண்களும் எங்கள் அனுதாபத்திற்குரியவர்கள். அப்படித்தான் பவானியும் எனது அனுதாபத்தைச் சம்பாதித்துக்கொண்டாள். தவிர தேவசகாயம் இழைத்த கொடுமைகளும், அவளைப் பலரும் மாத்தா ஹரியென்று அழைத்ததும், அவள் மீதான பரிவினை அதிகரிக்கக் காரணமென்று சொல்லவேண்டும். ஆனால் எங்கள் மாத்தாஹரி விசுவாசிகள் அமைப்பில் உறுப்பினர்களாக, மாத்தாஹரி சமயக்குழுவைச் சார்ந்தவர்களும் கலந்திருக்கிறார்கள். பவானிக்க நேர்ந்த விபத்தேகூட..

– விபத்தில்லை கொலை என்று சொல்லுங்கள்.

– அரசு ஆவணங்கள் விபத்தென்றுதான் குறிப்பிடுகின்றன.

– அரசு ஆவணத்தில் எதுவேண்டுமானாலும் இருக்கட்டும், உங்கள் உள்ளுணர்வு, கொலையாக இருக்கலாம் என்று நம்புகிறது. அப்படித்தானே?

– ம். இருக்கலாம். அதனால் தான் நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். நீ தெரிந்துகொண்டு என்ன செய்யபோகிறாய்.

– இல்லை க்ரோ. என்னால அப்படி இருக்கமுடியாது. இப்போது தேவசகாயத்தையும் ஜெயிலில் சென்று பார்க்கலாமென்று தோணுது.

மதாம் கொஞ்சம் இடைவெளிவிடவேண்டுமெனக் காத்திருந்ததுபோல, மேசையிலிருந்த லிப்டன் டீ யை உடைத்து குடித்துவிட்டுத் திரும்ப வைத்தாள். பின்னர்:

– எதற்காக தேவசகாயத்தைத் திடீரென்று சந்திக்க நினைக்கிறாய்?

– சந்தித்தாலென்ன? சற்றுமுன்புவரை அவர்மீது எனக்கிருந்த வெறுப்பு காரணமின்றி சட்டென்று குறைந்திருப்பதைப்போல உணருகிறேன். பவானியின் இறப்பில் அவர் பங்கென்ன என்பது தெரிஞ்சாகணும்?

– உன்னை அநாதையாக்கிவிட்டு ஓடிப்போனவன். நீ எங்கே இருக்கிறாய்? எப்படி இருக்கிறாய் என்ற அக்கரையின்றி இருக்கிறவன். உன் அம்மாவுக்கு இழைத்த பயங்கரத்திற்கு அவன் திசையில் தலைவைப்பதுகூட அநியாயம்.

– க்ரோ! நீங்கள் சொல்கிற இந்தக் காரணங்களுக்காகவே நான் பார்க்கவேண்டுமென்று நினைக்கிறேன்.

– அப்படிப் பார்க்கிறபோது, தவறாம மாத்தா ஹரியோட மண்டையோட்டை எங்கே வைத்திருக்கிறானென்று கேள்.

(தொடரும்)

nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா