மாத்தா-ஹரி – அத்தியாயம் 25

This entry is part [part not set] of 37 in the series 20070830_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா



ஹரிணியின் ·போர்டு ‘கியா’, சாலை விதிகளை மதித்துக் கடந்த ஐந்து நிமிடங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. மனிதர்கள் நடக்க யோசிக்கிற காலம், அல்லது நடை என்பது உடற்பயிற்சியில் ஒன்றாகக் கருதப்பட்டுக் காலஅட்டவணையின் தயவினை நம்பிக்கொண்டிருக்கிற காலம். அதன் விளைவாக மக்கள் வாகனங்களாக ஊர்ந்துகொண்டிருக்கிறார்கள். வளர்ச்சியென்ற பேரிலே சிதைமாற்றத்திற்கு உட்படும் உலகம். மனிதன் தன்னைச் சுற்றியுள்ள தனிமங்களை மாற்றமென்ற பேரிலே கட்டுடைத்துக்கொண்டிருக்க, கட்டுடைக்கப்படும் தனிமங்களுள் இவனும் ஒருவன் என்பது உணரப்படாமலேயே உடைந்துகொண்டிருக்கிறான். ‘இருக்கிறான் இல்லை’, ‘இல்லை இருக்கிறான்’, பலநேரங்களில் ‘இல்லை இல்லையாகவும்’, சில நேரங்களில் ‘இருக்கிறான் இருக்கிறான்’, ஆகவும் இருக்கிறான். படைப்புச் சமுதாயமல்ல – உற்பத்திச்சமுதாயம். உனக்கு வேண்டியதை நான் கொடுக்கிறேன், நீ சட்டைப்பையில் இருப்பதை எடு, என்பதான வியாபாரம், ‘உனக்கு வேண்டியதை’ மீண்டும் பொய். கத்தியைக் காட்டி, சட்டைப்பையில் இருப்பதை எடு என்பதைத்தான் வியாபாரி அவனது மொழியிற் சொல்கிறான். பொருளீட்டுங்காலம்போய் பொருள் குவிக்குங்காலம், வண்டி வண்டியாய், அம்பாரம் அம்பாரமாய்க் குவிக்கவேண்டும். இவன் உட்பட. இவனுக்கானதை இவன் தீர்மானிப்பதில்லை. இவனது கசப்பு, இவனது தித்திப்பு, இவனது குமட்டல், இவனது கோபம், இவனது போகம், இவனுக்குப் பிடித்தது, இவனுக்குப் பிடியாதது, சோறு, ரொட்டி, சப்பாத்தி, பேண்ட், சட்டை, தாடி வைப்பது அல்லது எடுப்பது, இதைப் பார் அதைப் பார்க்காதேஅங்கே மூத்திரம் போகலாம், போகக்கூடாது….. தனிமனிதன் தீர்மானிப்பதில்லை, சமூகம் தீர்மானிக்கிறது. ஹரிணி ஓட்டும் ‘கியா’ காரை அவள் தீர்மானித்து வாங்கியதல்ல. இவள் பார்த்த விளம்பரம், படித்த செய்தித்தாள், கேட்ட ரேடியோ தீர்மானித்தது. ஆக இங்கே நீ உனக்காகவோ, நான் எனக்காகவோ வாழ்வதில்லை, ஆனாலும் நாம் நமக்காக வாழ்வதாக நம்புகிறோம். அத்தனைபேரும் ஏமாளிகள்தான். பவானிமட்டுமல்ல, தேவசகாயம் நீகூடத்தான். காரிலிருந்து இறங்கி, போகிற வருகிற மனிதர்களிடத்தில் சொல்லிவைக்கலாமா? நம்புவார்களா? சிரிப்பார்கள்.

சிவப்பு விளக்கு விழுந்தது, நடைபாதையை வேகமாகக் கடப்பவர்கள், நிதானத்துடன் கடப்பவர்கள், கால்களைக் கவனித்தாள், முகங்களைக் கவனித்தாள், கர்ப்பப் பெண்மணியின் பெரிய வயிறு, உள்ளே என்னவெல்லாம் நடக்கும் புதிய உயிரின் வரவை எதிர்க்கின்றவகையில் அவளது உடலுறுப்புகள் நடந்துகொள்ளாலாம், இதயம், நுரையீரல் முதலானவைகள் முன்னிலும் கூடுதலாகச் செயற்படலாம், உடல் மொழியை வாசிக்க முடியுமாமே? ஆனால் பலமுறை வாசிக்க முனைந்து, தோல்விகண்டதுதான் பலன் – ஊமை வாசிப்பு. சொற்கள் பிசறிக்கொள்வதுண்டு. வாக்கியங்கள் ஒன்றையொன்றுப் பின்னிக்கொள்வதுண்டு. மீண்டும் பச்சைவிளக்கினை எதிர்பார்த்து 1..2..3..வாகனங்கள் உருமிகின்றன…இவளும் உருமினாள். மனம் குழம்பிக்கிடந்தது. தேவசகாயம் மறந்துபோன பெயர். பவானி என்ற இவள் நிழல் மரத்தை வெட்டிய கோடரிக்குச்சொந்தக்காரன். அரக்கன். தகப்பனில்லை.

– ஹரிணி இதுசரியில்லை. உனக்கு அதைப்பற்றிய குற்ற உணர்வுகூடவா இல்லை? – அரவிந்தன் இவளைப் பார்த்து புறப்படுவதற்கு முன் கடைசியாய்க் கேட்டது.

– தேவசகாயம், ஒர் அபாயம்- நெருப்பு – ஒதுங்கித்தான் ஆகணும். குற்றமே நடைபெறவில்லை என்கிறபோது குற்ற உணர்வு எங்கிருந்து முளைக்கும்? செய்யவேண்டியதைச் செய்யாமல் விட்டேனா அல்லது செய்யக்கூடாததைச் செய்தேனா? இவன் எந்த அடிப்படையில் குற்றவாளி என்கிறான். அவனுக்குத் தேவசகாயம் என்ற மனிதனைச் சிறைக்குச் சென்று பார்க்காதது குற்றமென்றால், எனக்கு அம்மனிதனைப் பார்ப்பது குற்றம்? ஒரு குற்றத்திலிருந்து தப்பிக்க இன்னொரு குற்றம். எதைக்கூடாது, எதை விலக்க வேண்டுமென்று முகத்தைத் திருப்பிக்கொள்கிறோமோ, அதைத்தான் ருசித்துச் சாப்பிடு என்கிறான். மீண்டும் எதிராளி எனது சுதந்திரத்தில் குறுக்கிடுகிறான். தேவசகாயம் என்றபொருள் எனக்கு வேண்டுமா வேண்டாமா, ஆகுமா ஆகாதா என்பதை மீண்டும் சந்தை தீர்மானிக்கிறது. மனத்தைக் காயப்படுத்தவென்றே கத்தியெடுத்துக்கொண்டு அலையும் உலகம்.

– ஹரிணி கோபமா? தப்பா ஏதாச்சும் சொல்லியிருந்தா என்னை மன்னிக்கணும்.

– அரவிந்தன், போதும். மறுபடியும் ஞாபகபடுத்தாத. நான் ரொம்பக் குழம்பிப் போயிருக்கிறேன். ஒரு பெரிய தலைவருடையப் பேச்சைக் கேட்கணுமென்று வந்திருக்கிறேன், அதைக் கெடுத்திடாதே. அங்கே ஒரு அறிவிப்புப் பலகைத் தெரியுதுபார் என்ன பேரு படி.

– அல்லே துய் ப்றந்த்தான்.(Allee du printemps )

– ஓகே. சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறோம். எதிரே தெரிவது பொருட் காட்சிச்சாலைக்கான கட்டிடமும் அதைச் சார்ந்த நிலங்களும். இறங்கிக்க, காரை இப்படியே, ஓரமாக நிறுத்திட்டுவந்திடறேன்.

காரை ஓரமாகப் பார்த்து நிறுத்திவிட்டு, பூட்டிக்கொண்டாள். இருவருமாகச் சாலைஓரமாக நடந்தார்கள். பெரியதொரு கண்ணாடிக்கப்பல் நதியில் நங்கூரமிட்டிருப்பதுபோல ஐரோப்பிய பாராளுமன்றம், அல்லது அகழியுடன் கூடிய கண்ணாடி கோட்டை என்றும் சொல்லலாம், பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்க்கிறபோது, பின்னது கூடுதலாகவே பொருந்துகிறது. ஐரோப்பிய நாடுகளின் செல்வச் செருக்கும், ஞானச் செருக்கும் சேர்ந்தே வெளிப்பட்டிருந்தது. காவலர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், மூன்றடுக்கு பாதுகாப்பு வளையங்கள் எனக் கடந்து உள்ளே நுழைய ஆழ்கிணற்றில் இருப்பதைப்போல உணர்வினைத்தரும் வட்டவடிவமான விசாலமானதொரு பெரிய முற்றம். இவர்கள் செல்லவேண்டியது லூயிஸ் வைஸ் வாசலென்று சொல்லப்பட்டது. உள்ளூர் இந்தியர்கள் சிலர் காத்திருந்தனர்.

குர்த்தா பைஜாமாவென்று வந்திருந்த அல்சாஸ்- இந்தியர் சங்கத்தின் தலைவரைப் பார்த்தாள். அவரிடம் கைகுலுக்கிக்கொண்டு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள். தனக்கு மற்றொரு அனுமதி அட்டை வேண்டுமென்று கேட்டாள். அரவிந்தனுடைய அடையாள அட்டையைக் கேட்டார், வாங்கிக் கொடுத்தாள். பத்து நிமிடம் ஆகுமென்றார். காத்திருந்தார்கள். கூடியிருந்தவர்களில் ஒரு சிலரை அவ்வப்போது ஏற்கனவே சந்தித்திருக்கிறாள். ‘ஹலோ’க்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன, கைகள் குலுக்கப்பட்டன. கொஞ்சம் கூடுதலாக அறிமுகமானவர்களாக இருந்தால் கட்டியனைத்து ஐரோப்பிய முறைப்படி முத்தமிட்டுத் தொடர்ந்து இரண்டொரு வார்த்தைகள். ஒருவர் ஓடிவந்தார், அரவிந்தனுக்கான அடையாள அட்டை வந்து சேர்ந்தது- காத்திருந்தார்கள். பார்வையாளர்கள் ஒருவர்பின் ஒருவராக உள்ளே வரலாமென்றார்கள். கையில் வைத்திருந்த அனுமதி அட்டைகள் பாதுகாப்பு ஊழியர்களுடைய பட்டியலோடு ஒப்பிடப்பட்டது, மற்றுமொரு பாதுகாப்பு வளையம், மின்னணு பரிசோதனை முடித்து அரைக்கோள வடிவிலிருந்த பாராளுமன்றத்துக்குள் நுழைந்து இருக்கையைத்தேடி அமர்ந்தபொழுது காலை பதினொன்று இருபத்தைந்து.

இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு திரு அப்துல்கலாம் என்று அறிவிக்கப்படுகிறது. வருகைதந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களும், பார்வையாளர்களும் எழுந்து நின்றனர். பாராளுமன்றத் தலைவர், செயலாளர் புடை சூழ, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதிநிதியாக காலெடுத்து வைக்கிறார். வரவேற்புரைக்குப் பின்னர் சிறப்புரை நிகழ்த்திய இந்திய ஜனாதிபதி:

“ஐரோப்பிய பாராளுமன்றத்தின் ஐம்பதாவது ஆண்டுவிழாவில், அதன் உறுப்பினர்களோடு இருக்க முடிந்தமையில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களோடு இருக்கையில் எம்மாதிரியான சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்வதென்றும் யோசித்தேன். கோடிக்கணக்கான மக்கள், மொழிகள், பண்பாடுகள், மதங்கள் என பன்முகப்படுத்தப்பட்ட தலைமையை ஏற்படுத்தித் தந்த அனுபவம் இந்தியாவிற்கு உண்டு. அவ்வனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள எனக்குப் பெரிதும் விருப்பம்.” என்று ஆரம்பித்து ஐரோப்பிய நாகரீகம் அதன் பல்வேறு சிந்தனைகளை வர்ணித்துப் பேசியவர், அண்டை நாடுகளுக்கிடையே இருந்த பகையுணர்வை மறந்து அமைதிக்கு வழிவகுக்கும் இன்றைய ஐரோப்பிய ஒன்றியத்தைப் பாராட்டிப் பேசுகிறார். ஐரோப்பிய பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னால், எவ்வாறு இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தனித்தன்மைகள், பரஸ்பர பங்களிப்புகளுடன் இருக்கநேரிடுகிறது என்பதான யோசனையில் ஆழ்ந்ததாகவும், இரு தரப்பிலுமே பொதுவான வரலாற்றையும், பாரம்பரியத்தையும் பகிர்ந்துகொள்வதற்கான சாத்தியங்கள் உண்டென்றும், தத்தமது மொழி, பண்பாடு, புராதன நம்பிக்கைகள், சிந்தனைகள், மக்கள் இயக்கங்கள் என பலவும் துவண்டுபோகாமல் காலத்தை எதிர்கொள்ள அறிந்திருப்பதால், அவற்றைக் கல்வி மற்றும் வாணிகப் பரிவர்த்தனைக்கு உட்படுத்தமுடியும் என்றார்.

– அரவிந்தன் நாம புறப்படுவதற்கு முன்னாலத்தான் மதத்தைப் பத்தி விவாதிச்சோம், நம்ம ஜனாதிபதி அற்புதமா ஒரு விஷயம் சொன்னார். மதமும் அறிவியலும் விரோதிகளல்ல, விரும்பினா அவங்க சேர்ந்து செயல்படமுடியுங்கிறதுக்கு அவரது குருவே நல்ல உதாரணமென்பதுபோல விளக்கினார்.

அரவிந்தனும், ஹரிணியும், பாராளுமன்ற மண்டபத்தைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தார்கள். ஜானாதிபதி உரை நிகழ்த்திமுடித்தபிறகு, ஹரிணி அதன் பிரம்மிப்பிலிருந்து ஒருசில நிமிடங்கள் மீளமுடியாமலிருந்தாள். வந்திருந்த பலருக்கும் அதுதான் நிலைமை என்பதை, அவர்கள் எழுந்து நின்று வெகுநேரம் கைத்தட்டி ஆரவாரித்ததால் உணர முடிந்தது.

– எப்படி? – அப்துல் கலாம் ஆங்கிலத்தில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையை ஒலிவாங்கியில் அலைவரிசை எண்ணை மாற்றி, அரவிந்தன் பிரெஞ்சுமொழியிற் கேட்டிருந்தான். எனினும் வரும்போதிருந்த ஹரிணியாக அவளில்லை, என்பதாற் கிடைத்த மகிழ்ச்சி, கைநழுவிப் போய்விடக்கூடாதில்லையா.

– 1960ல இந்திய விண்வெளிமையத்திற்கு உரிய இடம்தேடி பேராசிரியர் விக்ரம் சாராபாயும், அவரது சீடரான அப்துல் கலாமும் மற்றவர்களும், நாட்டின் பலபாகங்களிலும் அலைந்திருக்கிறார்கள். இறுதியில் கேரளாவிலுள்ள தும்பா அவர்களது எதிர்பார்ப்பிற்கு ஏற்றதாக இருந்திருக்கிறது. உரிய இடத்தைத் தேடி கண்டுபிடிப்பதற்குச் செலவிட்ட முயற்சியைக் காட்டிலும், அந்த இடத்தைப் பெறுவதற்கு அதிகமாகச் சிரமப் பட்டிருக்கிறார்கள். கேரள அரசின் உதவியை நாடினார்கள். அரசாங்கம் பரிசீலனை செய்தபோது, ஆயிரக்கணக்கான கிறிஸ்துவமீனவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டிய சிக்கலிருப்பது புரிந்தது, முக்கியமாக அங்கே இருந்த தேவாலயம். உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு அவர்களை வெளியேற்றினால் தங்கள் ஓட்டுவங்கியை இழந்து விடுவோம் என்ற கவலை, இதற்கிடையில் பிரச்சினையை பெரிதாக்குவதெற்கென்றே காத்திருந்த மதவாதிகள் வேறு. விக்ரம் சாராபாய் யோசித்தார், இந்திய விண்வெளி மையத்திற்கு அந்த இடத்தை எப்படியாவது பெற்றே தீருவதென்று தீர்மானமாக இருந்தார். சட்டென்று அவருக்கு ஒரு யோசனை பிறந்தது. தேவாலயத்தின் பங்குத்தந்தையான மறைத்திரு பீட்டர் பெர்னார் பெரைரா(Rev. Peter Bernard Pereira)வைச் சென்று சந்தித்திருக்கிறார், உடன் அப்துல் கலாமும் சென்றிருக்கிறார். பங்குத் தந்தை, விக்ரம் சாராபாயிடம்,” என்ன விக்ரம், கடைசியில் என் பிள்ளைகள் இல்லத்தையும், எனது இல்லத்தையும், கடவுள் இல்லத்தையும் சேர்த்தே அல்லவா கேட்கிறீர்கள்? எப்படி முடியும்? எனச் செல்லமாக கடிந்துகொண்டாராம். பிறகு அவரை ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தேவாலயத்திற்கு வரச் சொல்லியிருக்கிறார். பங்குத்தந்தை கேட்டுக்கொண்டபடி, விக்ரம் சாராபாயும் அவரது குழுவினரும், ஞாயிற்றுக்கிழமை போனபோது பிரார்த்தனை நடந்துகொண்டிருந்திருக்கிறது. தந்தை பெரைரா பைபிளிலிருந்து சில பகுதிகளைப் படித்துக்கொண்டிருந்தவர் முடித்துவிட்டு, விக்ரம் சாராபாயை பக்கத்தில் அழைத்திருக்கிறார். இவர் அவர் அருகில் போய் நின்றவுடன், கணீரென்ற குரலில், ” பிள்ளைகளே இதோ ஒருவரை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன். பெயர் விக்ரம் சாராபாய், இவர் ஒரு விஞ்ஞானி. விஞ்ஞானத்தின் பலனைத்தான் நாம் அனைவரும் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம், இந்தத் தேவாலயம் உட்பட. இங்கேயுள்ள விளக்குகள் மின்சாரத்தால் எரிகின்றன, நான் உங்களிடம் உரையாடுவது தொழில்நுட்பத்தின் விந்தையில் உருவான ஒலிபெருக்கியின் உதவியால். நோயாளிகளுக்கு உரிய சிகிச்சையை மருத்துவர்கள் தரமுடிகிறதென்றால் அதற்கும் அறிவியலே காரணம், பங்குத் தந்தையாகிய நான் என்ன செய்கிறேன்? உங்கள் நன்மைக்காகவும், உங்கள் சுபிட்ஷத்திற்காகவும், அமைதி வேண்டியும் பிரார்த்திக்கிறேன், நமது விக்ரம் சாராபாயும் அதைத்தான் செய்கிறார். அவர் நமக்கு மேலும் நல்லதைசெய்யவேண்டுமென்று நினைக்கிறார், ஒரு மாபெரும் அறிவியல் அர்பணிப்பிற்காக நமது இல்லங்களைக் கேட்கிறார், அதற்கு அரசாங்கத்தின்மூலம் உரிய மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுமென உறுதி அளிக்கிறார். இப்போது சொல்லுங்கள் நமது இல்லங்களைக் கொடுக்கலாமா? கூட்டத்தினரிடையே முழு அமைதி, எழுந்து நின்றவர்கள் ‘ஆமென்’ என்கிறார்கள். இன்றைக்கு அந்த இடத்தில் விக்ரம் சாராபாயுடைய கனவுகளை மட்டுமல்ல, இந்தியாவின் விண்வெளிக்கனவுகளையும் நிறைவேற்றி வருகிறது.

– அவர் பேசினதை அப்படியே வரி பிசகாமற் சொல்லுவேண்ணு நான் நினைக்கலை.

– இதிலே இன்னொரு நீதியும் இருக்கு, இங்கே மதமும் சரி விஞ்ஞானமும் சரி இரண்டுமே மக்களுக்கு நன்மைங்கிற குறிக்கோளில் இணைஞ்சிருக்கின்றன. மக்களுக்கு நன்மை செய்வதுதான் இவர்கள் நோக்கமென்றால், மதமும் விஞ்ஞானமும் மாத்திரமுமல்ல, மதமும் மதமுங்கூட இணைந்து பணியாற்றமுடியும்.

– யாதும் ஊரே; யாவரும் கேளீர்னு தமிழ் வரியொன்றைப் பற்றிச் சொன்னப்போ நான் சந்தோஷப்பட்டேன்.

– புறநானூறுல வரப் பாட்டாம், அந்தப்பின்னணியிலேயிருந்து தான வந்தவனென்று பெருமையோடு குறிப்பிட்டார்.

– உண்மைதான் இப்படியொருவரை இந்திய ஜனாதிபதியா பார்க்கிறது இதுதான் முதன் முறை.

– ஏதோ தவறி வந்துட்டார். நம்ம ஊரு அரசியல்வாதிகளுக்கு இப்படிப்பட்டவங்களைப் பிடிக்காது. அரசியலையும் சினிமாவையும் கனவு காண்பவனிடம், அர்த்தமுள்ள கனவைக் காணச்சொன்னா கோபம் வருமா வராதா, நா¨ளைக்கு இவர்கள் பொழைப்பிலே மண்விழுந்திடுமே என்று பயம்.

– உனக்கேன் இந்தியா பற்றிய கவலை, இங்கே மட்டும் என்ன வாழுது.

– மணி ஒன்றரை ஆகுது, எங்கேயாவது ரெஸ்டாரெண்டுக்குப் போகலாமா? .

(தொடரும்)


Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா