அதனால் என்ன…

This entry is part [part not set] of 34 in the series 20070816_Issue

குரல்செல்வன்


மார்ச் மாதத்தின் மூன்றாம் வெள்ளிக் கிழமை. தினத்திற்கும் முன்னதாகவே சூரன் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தான். அவன்தான் டென்னிஸ் பயிற்சிக்கு இனிமேல் போக வேண்டியதில்லையே. உடை மாற்றிக் கொள்ள மாடியில் இருக்கும் தன் அறைக்குள் சென்றான். க்ளாசட்டைத் திறந்தபோது ஒரு பக்கத்தில் வரிசையாக தொங்கிக் கொண்டிருந்த அவனுடைய டென்னிஸ் சட்டைகள் கண்ணில் பட்டன. வௌ;வேறு டோர்னமென்ட்டுகளில் அவர்களாகக் கொடுத்தது, சிலவற்றில் நன்றாக விளையாடி சம்பாதித்தது, கடைசியில் அவன் தன் பள்ளிக்கூடத்திற்காக ஆடும் போது அணியும் ஊதா நிறச் சட்டை. நேற்று அந்த சட்டையை அவன் அம்மா துவைத்து உலர்த்தி இருக்க வேண்டும். அவனுக்கு இனி அது தேவையில்லை. ஒன்பது வயதில் முதல் தடவையாக சேபல் ஹில் கன்ட்ரி க்ளப்பில் விளையாடியதை நினைவு படுத்திக் கொண்டான். அதில் கிடைத்த சட்டை எப்படி இருந்தது என்பது கூட மறந்து விட்டது. அவன் அம்மா அதைப் பத்திரப் படுத்தி வைத்திருப்பாள். ஊதா சட்டையையும் எடுத்து வைக்கச் சொல்ல வேண்டும். ஜூனியர் டென்னிஸின் கடைசி அடையாளம். முடிவு வேறு விதமாக இருந்திருக்கலாம். முன் இரண்டு ஆண்டுகளிலும் அவன் படிக்கும் உயர் நிலைப் பள்ளியின் அணி டென்னஸ்ஸி மாநில சாம்பியன்ஷிப்பை இறுதிப் போட்டியில் இழந்திருந்தது. இந்த ஆண்டிலோ அல்லது அடுத்த ஆண்டிலோ அதை வென்றுவிட வாய்ப்புகள் கூடுதலாக இருந்தன. வெற்றி பெற்ற கையோடு அவன் விலகி இருக்கலாம்.
ஆனால் ஊதா நிறச் சட்டை முடிவை மாற்றி விட்டது. அதற்கும் அவனுக்கும் இனி எந்த வித பந்தமும் கிடையாது. நேற்றோடு போய் விட்டது. க்ரீன் ஹில்ஸ் அகடெமியில் அவர்களுக்கு எதிராக விளையாடிய மாட்ச்சுகள் முடிந்த பிறகு அவனுடைய கோச் இனி மேல் உனக்குப் பள்ளியின் அணியில் இடமில்லை என்று ஒதுக்கிய பிறகு தளர்ந்த நடையில் கோர்ட்டுகளுக்கு அருகில் இருக்கும் மரத்தடிக்கு வந்தான். வேலையிலிருந்து வந்திருந்த அவன் தந்தை சாமியும், க்ரீன் ஹில்ஸ் அகடெமிக்கு விளையாடிய அவன் நண்பன் மார்க்; ஆன்டர்சன்னும் ஆதரவு கலந்த கவலையோடு அவனை எதிர் கொண்டார்கள்.
“என்னுடைய கடைசி ஜூனியர் மாட்ச்சை நான் விளையாடி விட்டேன்.” சூரனின் குரலில் வருத்தமும், உறுதியும் சம அளவில் கலந்திருந்தன.
மார்க், “சூரன்! என்னுடைய பலவீனம் என்ன என்று உன்னுடைய கோச் கேட்ட போது நீ அதைச் சொல்லி இருக்கலாம். அப்போதும் உன் மேல் இருக்கும் என் மதிப்பு குறைந்திருக்காது” என்றான்.
“உண்மைதான் மார்க்! ஆனால் அவர் கேட்ட போது நம்முடைய நீண்ட கால நட்பை விட்டுக் கொடுக்க மனம் இடம் தரவில்லை. அவ்வளவுதான்.”
சூரனுக்குத் தன் தந்தையின் குணம் தெரியும். ஒரு சின்ன சம்பவத்திற்காக என் பையனைப் பள்ளிக்கூட அணியிலிருந்து தள்ளியது நியாயமில்லை என்று கோச்சிடம் சண்டை போடும் அப்பாக்கள் அம்மாக்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்; அப்படி செய்யமாட்டார் என்பது நிச்சயம்.
“உனக்குப் பதினேழு வயதுதானே ஆகிறது. உன் பள்ளிக்கு ஆடாவிட்டால் போகிறது. யூ எஸ் டி ஏ டோர்னமென்ட்டில் விளையாடலாமே. டென்னஸி க்வாலிiஃபயரில் நாம் இருவரும் டபில்ஸ் கூட ஆடலாம்” என்று மார்க் சமாதானப் படுத்தினான்.
சூரன் மனம் மாறத் தயாராக இல்லை. “நான் ஜூன் மாதம் விளையாடுவேன் என்பது நிச்சமில்லை. அப்போது விஞ்ஞானப் போட்டிகளுக்குப் போக வேண்டியிருக்கலாம். என்னுடைய டென்னிஸ் ஆட்டம் எனக்கே திருப்தியாக இல்லை. நீ என்னை விடச் சிறந்த வேறொரு பையனுடன் சேர்ந்து டபில்ஸ் விளையாட வேண்டும். ஊரில் இருந்தால் நான் வந்து பார்ப்பேன்.”
அதைக் கேட்டு மார்க்குக்கு அழுகை வரும் போல் இருந்தது. மௌனமாக நின்ற சூரனின் கண் முன் ஆறு ஆண்டுகள் விரிந்தன – இருவரும் சேர்ந்து விளையாடிய இருபதுக்கும் மேற்பட்ட டோர்னமென்ட்கள், ஒருவன் நன்றாக ஆடாத போது மற்றவன் அவனுக்கும் சேர்த்துத் திறமையாக விளையாடி ஈடு செய்தது, வெற்றியைச் சமமாகப் பங்கு போட்டுக் கொண்டது, தோல்வி கண்ட போது தவறு யாருடையது என்று சண்டை போடாதது, எதிராளிகளின் சரியாக விழுந்த பந்துகளை அவுட் என்று சொல்லி ஏமாற்றாத நேர்மை…
மன வருத்தத்திலிருந்து அவர்கள் இருவரையும் விடுவிக்க அவன் தந்தை சாமி, “நாங்கள் கிளம்ப வேண்டும். சூரனின் அம்மாவை வேலையிலிருந்து நாங்கள் அழைத்துப் போக வேண்டும். மார்க்! உன் அம்மாவும் உனக்காகக் காரில் காத்துக் கொண்டிருக்கிறாள்” என்றார். அதன் படி அவர் முன்னால் வீட்டிற்குச் செல்ல சூரன் தன் அம்மா சரவணப்ரியாவை அழைத்துச் சென்றான். நினைவுகளின் பளுவைத் தள்ளி வைத்து விட்டு ஊர்திகளின் நெரிசலில் கவனம் வைத்துக் காரோட்டினான்.
அன்று காலையில் எழுந்த போது உடலும் மனமும் கனத்தன. சீரியல் சாப்பிடும் போது “இன்று வீட்டிலே தங்கி ஓய்வு எடுத்துக் கொள்கிறாயா?” என்று அவன் அப்பா கேட்ட போது “வீட்டில்; அடைந்து கிடந்தால் அதையே நினைத்துக் கொண்டிருப்பேன்” என்று தலையைக் கூட நிமிர்த்தாமல் பதில் சொன்னான். மறு வாரம் ஸ்ப்ரிங் ப்ரேக். அதனால் பள்ளிக்கூடப் பாடங்கள் அவன் மூளைக்குத் தொந்தரவு தராமல் மெல்ல ஊர்ந்தன. காலை அறிவிப்புகளில் டென்னிஸ் செய்தியும் இருந்தது. ‘நேற்று க்ரின் ஹில்ஸ் அகடெமியிடம் நம்முடைய டென்னிஸ் அணி தோற்று விட்டது. எல்லா மாட்ச்சுகளுமே சமமாக இருந்தன என்று கோச் தெரிவிக்கிறார். சூ..ர்..சூரன் நேதன் மட்டும் அவனுடைய மாட்ச்சை 6-4, 6-4 என்று ஜெயித்தான்.’ உதவி ப்ரின்ஸ்பால் இனி அவன் பெயரைக் கஷ்டப் பட்டு உச்சரிக்க வேண்டியதில்லை. செய்தித் தாளின் விளையாட்டுகள் பகுதியில் உயர் நிலைப் பள்ளிகளின் டென்னிஸ் முடிவுகளில் இனிமேல் அவன் பெயர் இடம் பெறாது.
பைஜாமாவும் சட்டையும் அணிந்த பிறகு கதவைச் சாத்திக் கொண்டு கம்ப்யூட்டரின் முன் உட்கார்ந்தான். நண்பர்களுடன் உரையாடல், புதிதாக வந்த, இனி வரவிருக்கும் திரைப் படங்கள் பற்றிய விமர்சனங்கள், உருண்டு விழும் செங்கல்கள் – எதிலும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் மனம் படியவில்லை. ஐந்து மணிக்கு மேல் அவன் அப்பாவும், அம்மாவும் வேலையிலிருந்து திரும்பினார்கள். கதவைத் திறக்காமலே அவர்களுக்கு ஹாய் சொன்னான். அவர்கள் சமைக்கும் போது அவன் நிலைமையைப் புரிந்து கொண்டு மெல்லப் பேசியது போல் இருந்தது. ஏழு மணிக்குக் கீழே இறங்கி வந்தான். சாப்பிடும் போது டிவியைப் பார்த்து ஒரு சில வார்த்தைகள், அவ்வளவுதான். அப்பாவைப் பார்க்கும் போதுதான் சிறிது கவலைப் பட்ட மாதிரி தெரிந்தது. வேலை சம்பத்தப்பட்ட எந்த பிரச்சனையையும் வீட்டிற்கு அவர் கொண்டு வருவதில்லை. அதனால் அவனுக்கு அது வியப்பை அளித்தது. சாப்பிட்ட பின் மறுபடியும் கம்ப்யூட்டர். விளையாடி அலுத்துப் போய் ஆங்கிலப் பாடத்திற்காக ஒரு கட்டுரை எழுதத் தொடங்கினான். முதலில் மூளை இயங்க மறுத்தது. பிறகு ஒரு மணி நேரம் சென்றது கூடத் தெரியவில்லை. கதவு தட்டும் ஒலி.
“உள்ளே வரலாம்.”
அறைக்குள் அவன் தந்தை நுழைந்தார். சூரன் கால்களையும் கைகளையும் கைவிரல்;களையும் நீட்டி மடக்கி இளைப்பாறினான்.
“கம்ப்யூட்டரில் இன்னும் எவ்வளவு நேரம் உனக்கு வேலை இருக்கிறது?”
“அரை மணி. உனக்குத் தேவையானால் நான் எழுதுவதை அப்புறம் தொடர்வேன்.”
“வேண்டாம். உன் வேலை முடிந்த பின் எனக்கு ஒரு உதவி செய்.”
“என்ன செய்ய வேண்டும்?”
“எங்கள் குழுவில் இருக்கும் டாம் மெக்ஹில்லை உனக்கு நினைவிருக்கிறதா?”
“இந்த ஊருக்கு வந்த புதிதில் அவர்கள் வீட்டில் சாப்பிடப் போனோம். அவனுக்கு நான்கு பிள்ளைகள், இரண்டிலிருந்து ஆறு வயதிற்குள். சரியா?”
“அவனேதான். ஒரு சிறப்புப் பேராசிரியர் வேலை காலி இருப்பதால் நேர் காணலுக்காக யூனிவெர்சிடி ஆஃப் சியாட்டில் சென்றிருக்கிறான். இருவரும் ஒத்துப் போவார்கள் போல் தெரிகிறது. அவர்கள் டாமிடம் உன் ஆராய்ச்சிக்குத் தேவையானால் ஒரு கெமிஸ்ட்டை உதவியாக வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார்களாம். அதனால் அவன் சியாட்டிலுக்கு வந்து பார்க்கும்படி என்னை அழைத்திருக்கிறான்.”
சூரன் பதில் சொல்லாமல் தன் தந்தையின் கவலைக்கு அதுதான் காரணமாக இருக்குமோ என்று நினைத்தான்.
“இங்கிருந்து சியாட்டில் போய் வர எந்த ஏர் லைன் சௌகர்யமாக இருக்கிறது என்று பார்த்துச் சொல்கிறாயா?”
“நோ பிராப்ளம்.”
அவர்; கதவைச் சாத்திக் கொண்டு வெளியேறிய பின் சூரன் தன் வேலையைத் தொடர்ந்தான். எப்போதும் அவன் தந்தை சாமி எல்லோருக்கும் முன்னால் எழுந்து விடுவார். அவர் கவனிக்க வேண்டுமென்றால் அவன் ஒரு சீட்டு எழுதி மாடி நடை வழியின் கைப்பிடியில் ஒட்டி வைப்பது வழக்கம். அதன் படி அன்றைய இரவு ஒட்டிய சீட்டில் ‘சியாட்டிலுக்கு சௌத்வெஸ்டில் மட்டும் தினமும் ஒரு நேரடி ஃப்லைட் இருக்கிறது. இங்கிருந்து காலை எட்டு மணிக்கும் அங்கிருந்து காலை பத்தரை மணிக்கும் விமானம் கிளம்பும்’ என்று எழுதி இருந்தது.

சாமி ஒரு கட்டிடத்தைச் சுற்றி சுற்றி வருகிறான். பல பேர் குடியிருக்கிறார்கள். எங்கே போவது என்று தெரியவில்லை. திகைத்து நிற்கிறான். ஒரு ஜன்னல் வழியே நான்கு பையன்கள் எட்டிப் பார்க்கிறார்கள்.
திடீரென்று எங்கிருந்தோ சாமியின் அப்பா வருகிறார். “எங்கே போகப் போற?” என்று அவனைக் கேட்கிறார்.
“தெரியலியே.”
“சரி, என் பின்னாடியே வா.”
மரங்கள் அடர்ந்து நிலம் சரிவாக இறங்குகிறது. அங்கிருந்து நகர்வதற்கு முன் ஒரு கணம் திரும்பிப் பார்க்கிறான். அழகு காட்டுவதை அந்த நான்கு பையன்களும் அப்போதுதான் நிறுத்தி விட்டு அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
“வேலை யெல்லம் எப்படி இருக்கு?”
“இது வரைக்கும் பரவாயில்லை. இன்னிக்குத்தான் எதுவும் நிச்சயமில்லாதது மாதிரி இருக்கு.”
அப்பா கிடு கிடு என்று கீழே இறங்கிப் போகிறார். சாமியால் அப்பாவின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. மெதுவாகக் காலை ஊன்றி இறங்குகிறான். கீழே தார் போடாத ஒரு சாலை. நடப்பவர்களும் சைக்கிளில் போவோருமாக கும்பலாக இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் அப்பா எங்கே போனார் என்று தெரியவில்லை. இரண்டு பக்கமும் பார்க்கிறான். வலது புறத்தில் பார்க்கும் போது சற்று தூரத்தில் அப்பாவின் கழுத்தும், பின் தலையின் இராணுவக் கிறாப்பும் தெரிகின்றன. வேகமாகச் சென்று சாமி அவரைப் பிடித்து விடுகிறான். ஆனால் பக்கத்தில் சென்று பார்க்கும் போதுதான் அது அப்பா இல்லை என்று தெரிகிறது. முதுகில் பையைச் சுமந்தபடி செல்லும் ஒரு பள்ளிக் கூடப் பையன். பஸ் வரும் சத்தம் கேட்டு அதன் வழியிலிருந்து விலகி ஓரமாக ஒதுங்க…
காலை செய்தித்தாளை வினியோகிக்கும் காரின் ஓசை கேட்டு சாமி விழித்துக் கொண்டான். கடிகாரம் 6:50 காட்டியது. ஏழாகப் போகிறதா? எதை எதையோ யோசித்ததில் இரவில் வெகு நேரம் தூக்கம் வரவில்லை. அதனால் தலை இலேசாக வலித்தது. உடல் நகர மறுத்தது. அதன் விருப்பத்திற்கு இணங்கி கொஞ்ச நேரம் படுத்திருந்தான். குழப்பம் நீங்கிச் சிந்தனையில் சிறிது தெளிவு பிறந்த பிறகு மெதுவாக எழுந்து பல் துலக்;கி அறையை விட்டு வெளியே வந்தான். சூரன் படுக்கும் அறையின் கதவு திறந்திருந்தது. சனிக் கிழமை என்றால் பத்து மணிக்கு முன் எழுந்திருக்க மாட்டானே. இன்று அதிசயம்தான். கைப்பிடியில் ஒட்டி இருந்த சீட்டை எடுத்துப் படித்து, அதைக் கிழித்துக் கசக்கிக் குப்பையில் போட்டு விட்டுக் கீழே இறங்கி வந்தான். சரவணப்ரியா காபி தயாரித்துக் கொண்டிருந்தாள். அதன் வாசனையே அவன் தலைவலியை மட்டுப் படுத்தியது. சாப்பாட்டு மேஜையில் சூரன் உட்கார்ந்தி;ருந்தான்.
“டாட்! உன் உடம்புக்கு ஒன்றுமில்லையே.”
“நான்தான் உன்னிடம் அதைக் கேட்க வேண்டும். பள்ளி நாட்களில் உன்னை எழுப்புவதற்குள் நாங்கள் படும் பாடு.”
“நேற்று களைப்பாக இருந்ததால் ஒன்பது மணிக்கே தூங்கி விட்டேன். புத்துணர்ச்சியோடு இருக்கிறது. நாம் பந்தடிக்கப் போகலாமா?”
இன்னும் ஒரு வாரத்திற்கு சூரன் டென்னிஸ் ராக்கெட்டைத் தொடவே மாட்டான், நானாகக் கட்டாயப் படுத்தினால்தான் விளையாட வருவான் என்று நினைத்திருந்த சாமிக்கு அவன் சொன்னதைக் கேட்டு நிம்மதியாக இருந்தது. அதிகாலையிலேயே எழுந்த அம்மாவும், பிள்ளையும் வியாழன் மாலை நடந்தது பற்றி ஆறாமர பேசி இருக்க வேண்டும். முன் எப்போதோ உயிரியல் படித்த அனுபவத்தில் எந்த பிரச்சனையையும் டிசக்ட் செய்து அதன் நிஜப் பரிமாணத்திற்கு அதைக் கொண்டு வர சரவணப்ரியாவால் முடியும்.
“காபி குடித்த பிறகு” என்றான் சாமி.
“வெளியே குளிராக இருக்கும் போலத் தெரியுது. இரண்டு பேரும் ஜாக் சூட் போட்டுகிட்டு போவணும்” என்றாள் சரவணப்ரியா. அவள் சொன்ன படி உடை அணிந்து ராக்கெட்டுகளும், பந்துகளும், தண்ணீர் பாட்டிலும் எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.
வீட்டிற்கு அருகில் இருக்கும் இரண்டு டென்னிஸ் கோர்ட்டுகளில் ஒன்று சூரியனின் வெளிச்சத்தில் முழுகிக் கிடந்தது. அதன் நடுவில் வலைக்குப் பக்கத்தில் நின்று மெதுவாகப் பந்தடித்தார்கள். பிறகு பின் கோட்டிலிருந்து சற்று வேகமாக அடிக்கத் தொடங்கினார்கள். அடுத்த படியாக சூரனுக்கு வால்லி செய்யவும், தலைக்கு மேல் அடிக்கும் படியும் சாமி பந்துகளைப் போட்டான். இதெல்லாம் பதினைந்து நிமிடங்கள் நீடிக்கும். ஒவ்வொரு முறை அவர்கள் விளையாடும் போதும் வழக்கமாகச் செய்வதுதான். ஆனால் இன்று ஏன் அது வித்தியாசமாகத் தெரிகிறது?
அடுத்து சூரன் செர்வ் செய்ய வேண்டும். அதற்கு ஆயத்தமாகப் பின் கோட்டை ஒட்டி நின்று பல முறை பந்தை வலது கையால் மேலே எறிந்து பிடித்தான். பந்து செல்லும் பாதையும், அதன் உயரமும் இடது கையில் பிடித்த தன் ராக்கெட்டின் வீச்சிற்கு ஒத்து வருகிறதா என்று சரி பார்த்துக் கொண்டான். சென்ற முறை இங்கு வந்த போது நடந்தது சாமிக்கு ஞாபகம் வந்தது.
“டோர்னமென்ட்டில் விளையாடுவதற்கும், பள்ளிக்கூட மாட்ச்சிற்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. பொதுவாக டியூஸ் வந்த பிறகு குறைந்தது இரண்டு பாய்ன்ட்டுகளாவது ஆட வேண்டும். அதனால் ஒரு தவறு செய்தால் அடுத்த பாய்ன்ட்டில் நன்றாக விளையாடி சமாளித்து விடலாம். இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீ உன் பள்ளிக்காக விளையாடப் போகிறாய். அதில் ஒவ்வொரு கேமிலும் ஆளுக்கு மூன்று பாய்ன்ட் எடுத்தால் ஏழாவது பாய்ன்ட்டை வெல்பவனுக்குத்தான் அந்த கேம். இரண்டாம் வாய்ப்பு கிடையாது. ஒரு மாட்ச்சில் எவ்வளவு ஏழாவது பாய்ன்ட்களை ஜெயிக்கிறாய் என்பதைப் பொறுத்துதான் அதன் முடிவு அமையும். நீ செர்வ் செய்தால் முதல் செர்வின் வேகத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு ஃபால்ட் வராமல் போட வேண்டும். இரண்டாவது செர்வைத் தவிர்ப்பது நல்லது. அவனுடைய செர்வாக இருந்தால் அவன் எந்தப் பக்கம் தடுமாறுகிறான் என்று கவனித்துக் கொண்டு அந்தப் பக்கத்தில் நின்று பந்தை ஏற்றுக் கொள். அதைத் திருப்பி அனுப்பும் போது படு வேகமாக அடிக்கத் தேவையில்லை. அப்படிச் செய்தால் தவறுகள் நேரலாம். அதற்காக இப்போது பயிற்சி செய்யப் போகிறோம். நீ முதலில்.”
அது சென்ற தடவை. சூரனுடன் ஆடும் போது இனி இப்படி எல்லாம் அறிவுரை சொல்வதற்கு அவசியம் இல்லை. திடீரென்று திரும்பப் பெற முடியாத ஒன்றை இழந்து விட்டது போல் வருத்தம் நிரம்பியது. சூரன் சர்வ் செய்யும் பந்துகளைத் திருப்பி அடிப்பதற்காக எதிர்ப் புறத்தில் நின்றிருந்த சாமி; நடுவில் வந்து ராக்கெட்டை வலையில் சார்த்திவிட்டு அங்கிருக்கும் பெஞ்ச்சில் உட்கார்ந்து கொண்டான். தண்ணீர் குடிக்க அவன் வருகிறான் என்று எண்ணிய சூரன், “எனக்குக் கூட தண்ணீர் வேண்டும்” என்று சொல்லிக் கொண்டே வந்தான். அருகில் வந்த போதுதான் சாமியின் கண்களின் ஈரத்தைக் கவனித்தான். அது எதற்காக என்று அவனுக்குப் புரியவில்லை.
“ஆர் யூ க்ரையிங்? டாட்!”
“கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.”
“ஏன்?”
“எப்படி விளக்குவது என்று தெரிய வில்லை. நீயும் ஒரு நாள் தந்தையாகும் போது உனக்குப் புரியும்.”
சாமி தொடரட்டும் என்று சூரன் காத்திருந்தான்.
“டென்னிஸ் கோர்ட்டில்; உனக்கு நான் எவ்வளவோ அறிவுரை கொடுத்திருக்கிறேன். ஐந்து வயதில் முதன் முதலில் ராக்கெட்டை எப்படி பிடித்துக் கொண்டு வீசி பந்தை அடிப்பது என்பதிலிருந்து சென்ற வாரம் ஏழாவது பாய்ன்ட்டை எப்படி விளையாடுவது என்பது வரை. இனி அப்படி செய்ய முடியாது, செய்வதில் அர்த்தமும் இல்லை என்று உணரும் போது வாழ்க்கையில் ஒரு அத்தியாயம் முடிந்து விட்டது போல் இருக்கிறது.”
சூரன் மௌனமாக எங்கோ பார்த்தான். முந்தாம் நாள் சம்பவம் தன் வாழ்க்கையில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியது போல் தன் தந்தையையும் பெருமளவு பாதித்திருக்கிறது என்பதை அவன் உணர்ந்த போது, இது வரை தன் சுய நலத்தால் அதைக் கவனிக்கத் தவறியதை எண்ணி வெட்கப் பட்டான்.
சூரன் சாமியை ஏறிட்டுப் பாராமலே சொன்னான். “நான் சிறியவனாக இருந்தபோது தினம் தூங்குவதற்கு முன் படுக்கையில் படுத்த படி எனக்கு நீ புத்தகம் படிப்பாய்.”
“கோ டாக் கோ!. டென் ஆப்பில்ஸ் அப் ஆன் டாப். யாராக வளர உனக்கு ஆசை.”
“அந்த புத்தகங்களின் பெயர்களை நான் மறந்தாலும் உனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான்கு வயதானபோது எனக்கே படிக்கத் தெரிந்த பிறகு அந்த வழக்கத்தை நாம் விட்டு விட்டோம். அப்போது நீ வருத்தப் பட்டாயா?”
“இல்லை. உனக்கு சைக்கிள் ஓட்டவும், ஃப்ரிஸ்பி எறியவும் சொல்லிக் கொடுத்தேன்.”
“பதினைந்து வயதான போது கற்றுக்குட்டி லைசன்ஸ் வாங்கிக் கொண்டேன். அடுத்த ஓராண்டில் எப்போது நான் காரோட்டினாலும் நீ பக்கத்தில் உட்கார்ந்திருந்தாய். திருப்பத்தில் மெதுவாகப் போ, ஸ்டாப் என்றால் கார்; நகராமல் நிற்க வேண்டும், இரண்டு கைகளாலும் ஸ்டியரிங்கைப் பிடித்துக் கொள், லேன் மாறும் போது கழுத்தை நன்றாகத் திருப்பிப் பார் – இப்படி சொல்லிக் கொண்டே வந்தாய். பதினாறாம் பிறந்த நாளின் போது டிரைவிங் டெஸ்ட்டிற்குப் போனோம். அது முடிந்து எனக்கு முழு லைசன்ஸ் கிடைத்த பிறகு இனி நான் இல்லாமலே நீ தனியாக ஓட்டலாம் என்று சொன்னாய். அப்போது நீ வருத்தப் பட்டதாக எனக்கு நினைவில்லை.”
“அப்போது முதல் முறையாக கெமிஸ்ட்ரி ஒலிம்பிக்கில் போட்டி போட உனக்குப் பயிற்சி அளிக்க ஆரம்பித்தேன்.”
சாமி யோசித்தான். “ஒன்று போனால் இன்னொன்று இருந்திருக்கிறது, இது வரையில். ஆனால் பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமாக புத்திமதி சொல்வதற்கு டென்னிஸ் போல வேறு எதுவும் இருந்ததில்லை. அடுத்த ஜூன் வரைக்கும் நீ விளையாடுவாய் என்று என்னைத் தயார் செய்து வைத்திருந்தேன். எதிர் பாராமல் முந்தாம் நாள் திடீரென முடிந்து விட்டதால் கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறது.”
“அப்படி முடித்ததற்கு என்னை மன்னிக்க வேண்டும்.”
“இல்லை! இல்லை! உன் நண்பனுக்கு நீ விட்டுக் கொடுக்காதது சரிதான். அதற்காக நான் உண்மையிலேயே பெருமைப் படுகிறேன். இளமையில் அமையும் நட்பை விட உயர்ந்தது இந்த உலகில் எதுவுமில்லை.” அவன் மேலும் தொடர்ந்தான். “அறிவுரை கொடுப்பது தந்தையின் வேலைக்குத் தேவையான தகுதி மட்டுமல்ல. அதன் பெரும் பகுதியே அதுதான். அறிவுரை கொடுக்க முடியாவிட்டால் என் வேலையை நான் சரியாகச் செய்கிறேனா என்று சந்தேகம் வந்து விடுகிறது. என்னால் ஒரு பயனும் இல்லை என்று தோன்றிவிடுகிறது.”
நின்று கொண்டிருந்த சூரன் சாமியின் தோளின் மேல் கை வைத்து, “டாட்! கவலைப் படாதே! டென்னிஸ் போனால் போகட்டும். நீ எப்போது வேண்டுமானாலும் எனக்கு அறிவுரை கொடுக்கலாம்” என்று சொன்னான்.
“தாங்க்ஸ். நேற்று செய்தது போல் பத்து மணிக்கு முன் தூங்கப் போனால் நீ காலையில் சரியான நேரத்திற்கு எழுந்திருக்கலாம்.”
சூரன் ஒரு குறும்புப் புன்னகையுடன், “நீ அறிவுரை கொடுக்கலாம். ஆனால் நான் அதை ஏற்றுக் கொள்வேன் என்று எந்த விதமான உத்திரவாதமும் கிடையாது” என்றான்.
சாமி எழுந்தான். மறுபடியும் விளையாட இருவரும் ராக்கெட்டை எடுத்துக் கொண்டார்கள். “டாட்! இதற்குத்தான் கவலைப் பட்டாயா? உன் வேலையில்தான் ஏதோ சரியில்லை என்றும் அதற்காக நீ சியாட்டில் போக வேண்டுமோ என்றும் நினைத்தேன்.”
“நீ நினைத்ததில் சிறிதளவு சரி. இங்கே என் வேலையில் திடீரென ஒரு நிச்சயமற்ற நிலை உருவாகி இருக்கிறது.”
“அப்படி என்றால் சியாட்டிலுக்கு எப்போது போகப் போகிறாய்?”
“சியாட்டில் போக வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன். இங்கேயே இருந்து நிலைமையைச் சமாளிக்க முயற்சி செய்வேன்.”
“ஏன்?”
“டாம் மெக்ஹில்லை நம்பி எந்த முயற்சியிலும் இறங்க வேண்டாம் என்று என் அப்பா சொன்னார். அவர் புத்திமதியை இந்த வயதில் கூட நான் மதித்து நடக்கிறேன், பார்!” என்று சாமி இன்னொரு அறிவுரையைச் சாமர்த்தியமாகப் புகுத்தினான்.
“தாத்தாவா சொன்னார்?” என்று நம்ப முடியாமல் சூரன் கேட்டான். “அவர்தான் இப்போது உயிருடன் இல்லையே!”
“அதனால் என்ன?”


venkataraman.amarnath@vanderbilt.edu

Series Navigation

குரல்செல்வன்

குரல்செல்வன்