தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் இருபத்திநான்கு: அனிஸ்மானின் ஆலோசனை!

This entry is part [part not set] of 29 in the series 20070823_Issue

வ.ந.கிரிதரன்



“வாருங்கள் என் அன்புக்குரிய நண்பர்களே! காலை வணக்கங்கள்! இன்று நான் உங்களை சந்திக்க விரும்பியதற்கொரு முக்கியமான காரணமுண்டு. அதற்குமுன்னர் உங்களது வாழ்க்கையைப் பற்றிச் சிறிது அறிய விரும்புகின்றேன். வாழ்க்கை எப்படியிருக்கிறது? என்னால் ஏதாவது உடனடியாகச் செய்ய வேண்டியதேதாவதிருக்கிறதா?” இவ்விதமாக இளங்கோவையும் அருள்ராசாவையும் வரவேற்றார் சட்டத்தரணி அனிஸ்மான்.

இதற்கு இளங்கோவையே பதிலளிக்குமாறு பார்வையால் உணர்த்தினான் அருள்ராசா. அதனைப் புரிந்து கொண்ட இளங்கோ சிறிது விபரமாகக் கூறத்தொடங்கினான்: “நற்காலை வந்தனங்கள் உங்களுக்கும் உரித்தாகட்டும் அனிஸ்மான் அவர்களே! உங்களது பரிவான விசாரணைக்கு எமது நன்றி. நீங்கள் உடனடியாக அழைத்ததால்தான் தற்போது வந்துள்ளோம். இருந்தாலும் சிறிது காலமாகவே உங்களைச் சந்திக்க வேண்டுமென்று எண்ணியிருந்தோம். அதற்குள் நீங்களே அழைத்து விட்டீர்கள் பழம் பழுவிப் பாலில் விழுந்தது மாதிரி”

‘மேலே கூறுங்கள்’ என்பது போன்றதொரு பாவனையில் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார் அனிஸ்மான். இளங்கோவே மேலே தொடர்ந்தான்: “தற்போது எங்கள் முன்னாலுள்ள முக்கியமான பிரச்சினையே ‘சமூகக் காப்புறுதி இலக்க அட்டை’ போன்ற சட்டரீதியான ஆவணங்களைப் பெறுவதுதான். ‘ச.கா.இ’ அட்டை இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாதுள்ளது. எங்களிடமிருந்த கடவுச் சீட்டையும் குடிவரவுத் திணைக்களத்தினர் பாஸ்டனிலேயே பறித்து வைத்துள்ளனர். இந்நிலையில் ‘ச.கா.இ.’ அட்டையில்லாமல் சட்டரீதியாகவொரு வேலைகூடச் செய்ய முடியாமலுள்ளது. வங்கியொன்றில் கணக்கொன்றும் ஆரம்பிக்க முடியாமலுள்ளது. நீங்கள்தான் இந்த விடயத்தில் எப்படியாவது உதவ வேண்டும். ஒழுங்காக வேலையொன்றும் செய்ய முடியாமல் அன்றாட வாழ்க்கையையே கொண்டு நடத்த முடியாமலுள்ளது”

இளங்கோ இவ்விதம கூறவும் அவன் கூறுவதையே மிகவும் அவதானமாகச் செவிமடுத்துக் கொண்டிருந்த சட்டத்தரணி அனிஸ்மான “உங்கள் நிலை எனக்கு நன்றாகவே புரிகிறது. நிச்சயமாக என்னால் முடிந்த அளவுக்கு முயன்று பார்க்கிறேன் மேலும் நீங்கள் மட்டும் யாராவது ஒருவரது வர்த்தக நிறுவனத்திலிருந்து உங்களுக்கு வேலையிருப்பதாக ஒரு கடிதமொன்றினை எடுத்துத் தந்தால் அதனையும், உங்களது இன்றைய நிலையினையும் வைத்து குடிவரவுத் திணைக்களத்திடம் உங்களுக்கு வேலை செய்வதற்குரிய அனுமதிப் பத்திரம் கோரி விண்ணப்பிக்கலாம்.”

சட்டத்தரணி அனிஸ்மான் இவ்விதம் கூறவே அவர்களது உரையாடலின் நடுவே புகுந்த அருள்ராசா “எபபடியாவது நீங்கள் கூறியது போன்றதொரு கடிதத்தினை எடுத்துத் தருகின்றோம். தந்தால் எங்களுக்குச் சமூகக் காப்புறுதி இலக்க அட்டை கிடைக்குமென்பது என்ன நிச்சயம்?” என்று கேட்கவும் அனிஸ்மான் அதற்குப் பதிலாக “எதுவுமே நூற்றுக்கு நூறு நிச்சயமில்லை. ஆனால் முயன்று பார்ப்பதில் தவறொன்றுமில்லையே. அவ்விதமானதொரு ‘வேலை வழங்கல்’ கடிதமொன்றிருந்தால் அது உங்களுக்கு மிகவும் சார்பாக அமையும்” என்று விடையிறுத்தார்.

அதற்கு இளங்கோவும், அருள்ராசாவும் “நீங்கள் கூறுவதும் சரிதான். எப்படியாவது அவ்விதமானதொரு ‘வேலை வழங்கல்’ கடிதமொன்றினை எடுத்துத் தருகின்றோம்.” என்று கூறினார்கள். அதன்பின் அவர்களது உரையாடல் அகதிக் கோரிக்கைக்கான விண்ணப்பம் பற்றித் திரும்பியது. அவர்களது அகதிக் கோரிக்கைக்கான விண்ணப்பத்திற்கான விசாரணைக்கான திகதி அறிவித்துக் கடிதம் வரும். அதற்கு முன்னர் அவர் இன்னுமொருமுறை அவர்களிருவரையும் சந்தித்து அவர்களது அகதிக் கோரிக்கைக்கான முழு விபரங்களையும் பெற்றுக் கொள்வார். இவ்விதம் தெரிவித்த அனிஸ்மான தற்போது அவர்களது முக்கிய பிரச்சினை வேலை செய்வதற்குரிய சமூகக் காப்புறுதி இலக்க அட்டை பெறுவதுதான் என்றார். அவரைப் பொறுத்தவரையிலும் அது முக்கியமான விடயம். அவர்களிருவரும் வேலை செய்தால் மட்டுமே அவர்களால் அவருக்கு வழங்கவேண்டிய கட்டணத்தைச் செலுத்த முடியும். இவ்விதமாகப் பல்வேறு விடயங்களைப் பற்றி அவருடன் கலந்துரையாடியபின் அனிஸ்மான் அன்று அவர்களை அழைத்ததற்கான விடயத்திற்கு வந்தார்.

சட்டத்தரணி அனிஸ்மான்: ” இது உங்களுக்கு இங்கேற்பட்ட நிலையுடன் தொடர்புள்ளது..”

இளங்கோ, அருள்ராசா (ஒரே குரலில்): “புரியவில்லையே திரு. அனிஸ்மான். சற்று விபரமாகவே கூறுங்களேன்.”

அனிஸ்மான்: “உங்களைப் பொறுத்தவரையில் நீங்கள் இந்த நாட்டிற்குச் சட்டவிரோதமாக வந்தவர்களல்லர். கனடாவிலுள்ள மான்ரியால் நகருக்குச் செல்வதுதான் உங்களது நோக்கமாகவிருந்தது.”

இளங்கோ, அருள்ராசா (இருவரும் மீண்டும் ஒருமித்த குரலில்): “ஆம்! ஆம்! நீங்கள் சொல்லுவது சரிதான்”

அதன்பின் இளங்கோ தொடர்ந்தான்: “அப்படித்தான் நாங்கள் பயணித்துக் கொண்டிருந்தோம். அதுதான் எங்களது நோக்கமாகவுமிருந்தது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையவேண்டுமென்று எப்பொழுதுமே நாங்கள் நினைத்திருக்கவில்லை. எங்களது போதாத காலம் எங்களை மான்ரியால் நகருக்கு ஏற்றிச் செல்ல வேண்டிய டெல்டா விமான நிறுவனம் மறுத்து விட்டதுதான். அதனால்தான் எங்களுக்கிந்த நிலை ஏற்பட்டது. அதுதான் காரணம். நீங்கள் சொல்வது சரிதான்.”

இப்பொழுது இளங்கோவை இடைமறித்த அனிஸ்மான் கூறினார்: “உண்மைதான். இந்த நாட்டிற்குச் சட்டவிரோதமாக வரவேண்டுமென்று எந்தவித எண்ணமுமில்லாமல் வந்த உங்களுக்கு இந்த நிலையேற்பட்டது வருத்ததிற்குரியது. அதற்காக இந்த நாட்டுக் குடிமகனென்ற வகையில் நான் வெட்மடைகின்றேன். அதுதான் என் மனதினைப் போட்டு வருத்திக் கொண்டிருந்தது. அதற்காகத்தான் இந்த விடயத்தில் உங்களுக்கு நீதி கேட்டு என்னால் முடிந்த ஏதாவது உதவிகளைச் செய்ய முடியலாமாவென்று யோசித்துப் பார்த்தேன். உதவலாமென்று பட்டது. அதற்காகத்தான் உங்களுடன் சிறிது கலந்தாலோசிக்க விரும்புகின்றேன்.”

இளங்கோ: “உங்களது பெருந்தன்மைக்கு மிகவும் நன்றி. நாங்கள் உண்மையில் பெருமைப் படுகின்றோம் உங்களது உயர்ந்த உள்ளத்தையெண்ணி. எந்தவகையில் இந்த விடயத்தில் உதவலாமென்று நீங்கள் நினைக்கின்றீர்கள்”

அனிஸ்மான்: “உண்மையில் மனித உரிமைகள் விடயத்தில் உங்களுக்குத் தீங்கு இழைக்கப்பட்டிருபப்தாகக் கருதுகின்றேன். உங்களைப் பொறுத்தவரையில் உங்களுக்கு எட்டு மணி நேரம் இந்த மண்ணில் தங்கியிருக்க சட்டரீதியான அனுமதியிருந்தது. உங்களது கடவுச் சீட்டுகளில் அதற்கான முத்திரை கூட இடப்பட்டிருந்தது. ஆனால் உங்களது துரதிருட்டம் உங்களை மான்ரியால் ஏற்றிச் செல்ல வேண்டிய விமான நிறுவனம் மறுத்து விட்டதுதான். அதனால் உங்களைத் திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டபோது அதனைத் தவிர்ப்பதற்காக இங்கு அரசியல் அடைக்கலம் கோரி விண்ணப்பித்தீர்கள். சட்டரீதியாக இந்த மண்ணில் இருக்கும்போதுதான் அவ்விதம் விண்ணப்பித்தீர்கள். இந்த நாட்டினுள் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட நிலையில்தான் நீங்கள் அந்த விண்ணப்பத்தினைச் சமர்ப்பித்திருந்தீர்கள். ஆனால் உங்களுக்கு தங்கியிருக்க அனுமதியளிக்கப்பட்ட அந்த எட்டு மணி நேரம் கடந்ததும் நீங்கள் அந்த சட்டரீதியான நிலையினை இழந்தீர்கள். அந்த நிலையில் உங்களுக்குப் பிணையில் வெளியில் வருவ்தற்குரியதொரு வாய்ப்பிருந்தது. அதனை உங்களுக்கு வழங்குவதற்குப் பதில் உங்களை இந்த நாட்டினுள் அனுமதிக்கப்படாத சட்டவிரோதக் குடிகளாகத் தவறாகக் கருதிய குடிவரவுத் திணைக்களம் உங்களைத் தடுப்புமுகாமில் போட்டு அடைத்தது. நீங்கள் அவ்விதம் தடுப்பு முகாமில் தங்கியிருந்த காலகட்டமானது உங்களுக்குரிய மனித உரிமைகள் மறுதலிக்கப்பட்ட காலகட்டமாகும். அதற்காக உங்களுக்கேற்பட்ட பாதிப்புகளுக்காக இந்த அரசிடமிருந்து நட்ட ஈட்டினைப் பெறுவதற்குரிய உரிமை உங்களுக்கிருப்பதாகவே நான் கருதுகின்றேன். நீங்கள் விரும்பினால் இந்த விடயத்தில் உங்கள் சார்பில் அதற்கான வழக்கினை முன்னெடுத்து வாதாட நான் தயாராகவிருக்கிறேன். அதற்குரிய ஊதியத்தினை வழக்கு வெற்றிபெறும் பட்சத்தில் கிடைக்கும் நட்ட ஈட்டுத் தொகையிலிருந்து நான் பெற்றுக் கொள்ளச் சித்தமாகவிருக்கின்றேன். நீங்கள் இதற்கென்ன சொல்லுகிறீர்கள்?”

இவ்விதம் ச்ட்டத்தரணி அனிஸ்மான் கூறவும் ஒருகணம் இருவரும் என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் திண்டாடிப் போனார்கள். சட்டத்தரணி அனிஸ்மானே தொடர்ந்தார்: “நீங்களிருவரும் உங்களுக்கிடையில் தாராளமாகவே கலந்தாலோசித்து முடிவினைக் கூறுங்கள். மேலும் இவ்விதம் அரசுக்கெதிராக வழக்குத் தொடுப்பதனால் ஒருவேளை உங்களது அகதிக் கோரிக்கை விடய்த்தில் அவர்கள் ஓரளவுக்கு விட்டுக் கொடுத்து வழக்கினைத் தீர்ப்பதற்கும் வாய்ப்புகளுள்ளன”.

இதற்குப் பின்னர் அவர்களிருவரையும் தமக்குள் கலந்துரையாட விட்டுவிட்டு சட்டத்தரணி அனிஸ்மான் வேறு காரியமாக வெளியே சென்றார். நண்பர்களிருவரும் தமக்குள் இது விடயமாகக் கலந்துரையாடினர்.

இளங்கோ: “என்ன அருள் இவன் சொல்லுறதைப் பத்தி உன்னுடைய யோசனையென்ன? காத்தியை இந்த விசயத்திலை நம்பலாமென்று நினைக்கிறியா?”

அருள்ராசா: “இவன் சொல்லுறதிலையும் நியாயமிருக்குதானே. எங்கட நிலையிலை இதிலை வென்றால் லொத்தர் விழுந்தமாதிரித்தானே.. சும்மா வாறதை ஏன் விடுவான். வந்தவரைக்கும் லாபம்தானே… எனக்கென்றால் அவன் சொல்லுறபடியே செய்து பார்க்கலாமென்றுதான் படுகிது. சில நேரம் அவன் சொல்லுற மாதிரி எங்கட அகதிக் கோரிக்கை வழக்குக்கும் இது ‘பார்கயின்’ பண்ன உதவலாம். எனக்கு ஓகே.”

இவ்விதமாக நண்பர்களிருவரும் கலந்துரையாடி இறுதியில் சட்டத்தரணி அனிஸ்மானின் ஆலோசனைக்குச் சம்மதிப்பதாக முடிவு செய்தார்கள். சிறிது நேரத்தில் மீண்டும் திரும்பிய அனிஸ்மான் ” என் அன்புக்குரிய நண்பர்களே! இந்த விடயத்தில் என்ன முடிவினையெடுத்துள்ளீர்கள்?” என்றார். அதற்கு அருள்ராசா “நாங்கள் நன்கு ஆலோசித்துப் பார்த்தோம். நீங்கள் கூறுவது சரியாகவே படுகிறது. சம்மதிக்கிறோம்.” என்றான். அதைக்கேட்ட சட்டத்தரணி அனிஸ்மானின் முகமெல்லாம் உடனடியாகவே பல்லாக மலர்ந்தது. அந்த முகமலர்ச்சியுடன் “நல்ல முடிவாக எடுத்திருக்கிறீர்கள். நாளைக்கு மீண்டும் வாருங்கள். உரிய பத்திரங்களைத் தயாரித்து வைக்கிறேன். கையெழுத்துப் போட வேண்டியிருக்கும்.” என்றும் கூறினார்.

[தொடரும்]

ngiri2704@rogers.com

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்

தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் இருபத்திமூன்று: சட்டத்தரணி அனிஸ்மனின் அலுவலக்த்தை நோக்கி!

This entry is part [part not set] of 34 in the series 20070816_Issue

வ.ந.கிரிதரன்


அத்தியாயம் இருபத்திமூன்று: சட்டத்தரணி அனிஸ்மனின் அலுவலக்த்தை நோக்கி!

கார்லோவிற்காக மாலை நேரங்களில் விளம்பரங்களை விநியோகிக்கும் வேலையும் புதியதொரு அனுபவத்தை அவர்களுக்குத் தந்தது. நான்காவது தெரு மேற்கும், ஆறாவது அவென்யுவும் சந்திக்குமிடத்தில் இளங்கோ பிரசுரங்களை விநியோகிக்கத் தொடங்கினான். அருள்ராசா கிறிஸ்தோபர் வீதி, ஏழாவது அவென்யு மற்றும் நான்காவது தெரு மேற்கும் சந்திக்குமிடத்தில் அவற்றை விநியோகிக்கத் தொடங்கினான். அவர்களைப் பொறுத்தவரையில் அவ்விதமாக விளம்பரங்களை விநியோகிப்பது பெரிதும் சிரமமானதாகவிருக்கவில்லை. ஆரம்பத்திலிருந்த கூச்சமெல்லாம் ஒரு சில நிமிடங்களிலேயே மறைந்து விட்டன. ‘ஒன்றுக்கு இரண்டு. ஒன்று வாங்கினால் இன்னுமொன்று இலவசம். (Two for one!)’ இதுதான் கார்லோவின் மலிவு விற்பனை விளம்ப்ர வாசகங்கள். ஒன்றுக்கு இரண்டு என்று கூவிக் கூவி விளம்பரங்களை விநியோகிப்பதும் சிறிது இலகுவாகவிருந்தது. ஒன்றுக்கு இரண்டு என்றதும் நடைபாதையால் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் ஒருகணம் நின்று அதுபற்றி விசாரித்தார்கள். அதன்பின் விளம்பரங்களையும் வாங்கிக் கொண்டார்கள். ஆளுக்கு ஆயிரம் விளம்பரங்களையாவது விநியோகிக்க வேண்டும். அவ்விதம் ஆயிரம் விளம்பரங்களை ஒருவர் விநியோகித்தால் அவற்றை வாங்கிய ஆயிரம் பேரில் குறைந்தது நூறு பேர்களாவது கார்லோவின் கடைக்கு விஜயம் செய்வார்கள். அவர்களில் குறைந்தது பத்துப் பதினைந்து பேராவது ஏதாவது வாங்கிச செல்வார்கள். இவ்விதமாக விளம்பரங்களை விநியோகிக்கும்போது பெரும்பாலும் நடைபாதைவாசிகள் நின்று விசாரித்து வாங்கிச் சென்றதால் வேலை மிகவும் இலகுவானதாகப் பட்டது. அதேசமய்ம பல்வேறு வயதினராக, நிறத்தினராக, மொழியினராக, மதத்தினராக, நாட்டினராக நடைபாதைவாசிகளிருந்தார்கள். பலர் அவர்களுடன் சிறிது நேரமாவது நின்று நிதானித்து சிறியதொரு சம்பாசணையினை நிகழ்த்தினார்கள். ஒரு சிலர் அவர்களது பூர்வாசிரமத்தைப் பற்றி விசாரித்தார்கள். இன்னும் சிலர் அவர்களது தாய்நாடு பற்றிய தங்களது பூகோளவியல் சம்பந்தமான தமது அறிவினை வெளிப்படுத்தும் வகையில் கேள்விகளைத் தொடுத்தார்கள். அல்லது பகிர்ந்து கொண்டார்கள்.

இளங்கோவைப் பொறுத்தவறையில் அவ்விதமாக விளம்பரங்களை விநியோகிக்கையில் மேலும் சிலரின் நட்பினைச் சம்பாதித்துக் கொண்டான். அவர்களிலொருத்தி ‘ஹரே கிருஷ்ணா! ஹரே ராமா’ அமைப்பினச் சேர்ந்த இங்கிரிட். இங்கிரிட் சேலை உடுத்தித் தொலைவிலிருந்து பார்க்கையில் ஓரிந்தியப் பெண்ணாகவே காட்சி தந்தாள். ஆரம்பத்தில் அவளுடனான சந்திப்பு பின்வருமாறு அமைந்திருந்தது.

இளங்கோவை முதன்முதலாக அவ்விடத்தில் விளம்பரங்களுடன் கண்டதும் அந்நடைபாதையிலிருந்து ‘ஹரே கிருஷ்ணா! ஹரே ! ராமா!’ அமைப்பினரின் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த இங்கிரிட் தானே வலியவந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

“ஹாய்! என்பெயர் இங்கிரிட். ஹரே கிருஷ்ணா! ஹரே ராமா! அமைப்புக்காகத் தொண்டராக பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். நீ யாருக்காக வேலை செய்கின்றாய். அது என்ன? எவற்றை நீ விநியோகித்துக் கொண்டிருக்கிறாய்?”

அதற்கு அவன் “கார்லோவின் ஆடைக்கடைக்காக விளம்பரங்கள் விநியோகிக்கின்றோம். தற்போது அங்கு ஒன்றுக்கு இரண்டு என்று மலிவு விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரும்பினால் நீங்களும் ஒருமுறை சென்று பாருங்களேன்.” என்று கூறிவிட்டு அவளுக்கும் இரண்டு மேலதிக விளம்பரங்களை கொடுத்தான். அதைச் சிறிது நேரம் வாசித்துவிட்டு அவள் ‘பிரயோசனமான மலிவு விற்பனைதான். வேலை முடிந்து செல்லும்போது ஒருமுறை சென்று பார்க்க வேண்டியதுதான்.” என்று பதிலுரைத்தாள். அத்துடன் அவள் அவனின் அமெரிக்க வாழ்க்கை அனுபவங்களையும் அனுதாபத்துடன் கேட்டுத் தெரிந்து கொண்டாள். அவனதும், அவனது நண்பனினதும் நிலையையெண்ணின் அனுதாபம் கொண்ட இங்கிரிட் அவர்களுக்குப் பலனளிக்கக் கூடியதோர் ஆலோசனையினையும் வழங்கினாள். அது வருமாறு: “எங்களது ஆலயத்திற்கு வந்தால் உங்களுக்கு நல்ல உணவு கிடைக்கும். அவ்வப்போது வரப்பாருங்கள். உணவுக்கு உணவு. இந்த நகர அலைச்சலிலிருந்து கொஞ்சநேரமாவது நிம்மதியான ஓய்வு”. அத்துடன் ஒருநாள் அவர்களிருவரையும் ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ஆலயத்துக்கும் அழைத்தும் சென்றாள்.

இவ்விதமாகக் காலம் ஓடிக்கொண்டிருந்த சமயம் திடீரென ஒருநாள் அவர்களது நியுயார்க் சட்டத்தரணி அனிஸ்மானிடமிருந்து அழைப்பொன்று வந்தது. அனிஸ்மானின் சட்ட அலுவலகம் மான்ஹட்டனில் அமைந்ததிருந்த ‘அந்நாள்’ புகழ் எம்பயர் ஸ்டேட் கட்டடத்தில், முப்பத்துநான்காவது மாடியில் அமைந்திருந்தது. விரைவில் தன்னை வந்து சந்திக்கும்படி தனது செய்தியினைப் பதிவு செய்திருந்தான். அத்துடன் அவர்களது அகதிக்கோரிக்கை பற்றிய வழக்குகள் மற்றும் வேலை செய்வதற்கான தற்காலிக வேலை அனுமதிப் பத்திரத்துக்கு விண்ணப்பிப்பது சம்பந்தமான விடயங்கள் பற்றியெல்லாம் க்லந்துரையாடத்தான் விரும்புவதாக அந்தச் செய்தியில் அவன் மேலும் தெரிவித்திருந்தான்.

இவ்விதமானதொரு காலகட்டத்தில் ஒருநாள் இளங்கோவும் அருள்ராசாவும் அவர்களது வழக்கறிஞரான அனஸ்மானைச் சந்திப்பதற்காகச் சென்றார்கள். உலகப் புகழ்பெற்ற ‘எம்பயர் ஸ்டேட் பில்டிங்’கில் காலடி வைத்தபொழுது அருள்ராசா கூறினான்:” ஒரு பத்து வருசத்துக்கு முந்தி இதைப்போலை இந்தக் கட்டடத்திலை காலடி வைக்கிறதைப் போலை கனவு கண்டிருப்பியா அல்லது நினைச்சுத் தானிருந்திருப்பியா?”

அருள்ராசாவின் கேள்விக்கு இயலுமானவரையில் நியாயமாக, உண்மையாகப் பதிலளிக்க விரும்பிய இளங்கோ “நீ சொல்லுறது ஒருவிதத்திலலை சரிதான். கனவிலை கூட இப்பிடி கண்டிருக்கவில்லைதான்”

இவ்விதமாகக் கதைத்தபடி சென்று கொண்டிருந்த நண்பர்களின் உரையாடல் இறுதியில் சட்டத்தரணி அனிஸ்மானுடனான சந்திப்பு பற்றியே மீண்டும் மீண்டும் வந்து வந்து நின்றது. அனிஸ்மானின் நினைவுடன் இளங்கோ அருள்ராசாவுக்குப் பின்வருமாறு ஞாபகபப்டுத்தினான்: “எதுக்காக அனிஸ்மான் இப்படித் திடீரென்ற விரைவாக அழைத்திருக்கிறானோ தெரியவில்லை. எதுக்கும் இந்த முறை கட்டாயம் அவனிட்டை வேலைக்கான அனுமதிப்பத்திரம் பெறுவது பற்றியும், அகதிக் கோரிக்கை பற்றிய வழக்கு பற்றிய விபரங்கள்பற்றியும் நிறையக் கலந்து ஆலோசிக்க வேண்டும். ஆனால் இவன் ஏன் இருந்தாற்போலை திடீரென்று கூப்பிட்டிருக்கிறானோ? எனக்கென்றால் ஆச்சரியமாகததானிருக்குது.”

அருள்ராசா சிரித்தபடியே “இளங்கோ! இன்னும் கொஞ்ச நேரத்திலை அவனைச் சந்திக்கப் போகிறோம். அவனிடமே கேட்டுத் தெரிஞ்சு கொள்ளுறதுதானே! அதுக்குள்ளை என்ன அவசரம்?” என்றான்.

அருள்ராசா இவ்விதம் சிறிது சிரிப்புடன் கூறவும் இளங்கோவுக்குச் சிறிது வெட்கமாகவிருந்தது. அந்த வெட்கத்தை இயலுமானவரையில் மறைததவனாக “இந்த நியூயோர்க் குடிவரவுத் திணைக்களத்தில் ஒரு விடயத்தை எதிர்பார்ப்பதென்பது கல்லிலை நார் உரிப்பது மாதிரி. பார்ப்பம் இந்தக் கல்லிலை நாரி உரிப்பதிலை அனிஸ்மன் எந்த அளவுக்குத் திறமைசாலியென்று.”

இதற்கு அருள்ராசா ” சும்மா சொல்லக் கூடாது. இந்த யூதர்கள் வலு கெட்டிக்காரங்கள். கார்ல் மாகர்க்சைப் பார்! ஐன்ஸ்டனைப் பார்! சிக்மண்ட் பிராய்ட்டைப் பார். இன்றைய நோம் சாம்ஸ்கியைப் பார். இப்பிடி எந்தத் துறையிலும் பிரகாசிக்கிறது அவங்கதான். பிசின்சிலை இறங்கி நல்லாக் காசைச் சேமித்து வைக்கிறதும் அவங்கள்தான். இந்தத் தனியுடமையை ஒழிச்சுப் பொதுவுடமையைப் பரப்ப வேண்டுமென்ற புரட்சித் தத்துவததை உலகுக்குப் போதித்ததும் அவங்கள்தான். ஆச்சரியமாயில்லை?”. இளங்கோ அதுவரையில் அவ்விதமானதொரு கோணத்தில் சிந்தித்துப் பார்த்ததில்லை. அருள்ராசா கூறியதும்தான் அவ்விதம் ஒப்பிட்டுச் சிந்தித்துப் பார்த்தான். ஆச்சரியமாகத்தானிருந்தது. இவ்விதமாக உரையாடியபடி நண்பர்களிருவரும் அவர்களது நியுயார்க் சட்டத்தரணியான அனிஸ்மானின் அலுவலகமிருந்த நோக்கி நடையைக் கட்டினர்.

[தொடரும்]

ngiri2704@rogers.com

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்

தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் இருபத்தியிரண்டு: சுதந்திரதேவிக்கொரு விண்ணப்பம்!

This entry is part [part not set] of 36 in the series 20070809_Issue

வ.ந.கிரிதரன்



இளங்கோ அருள்ராசாவிடம் ஹரிபாபுவுடனான வேலை முடிவுக்கு வந்த விடயத்தைக் கூறியபோது அவன் கொஞ்சமும் ஆச்சரியப்படவில்லை. “இதை நான் எப்பவோ எதிர்பார்த்திருந்தேன். ஆனால் இவ்வளவு நாளைக்காவது வேலையும் தந்து சம்பளமும் தந்தானே. அதுக்காக அவனைப் பாராட்ட வேண்டியதுதான். அவனுக்கு நன்றியாக இருக்க வேண்டியதுதான்” என்றவன் கார்லோவிடம் பிரசுரங்கள விநியோகிக்கும் வேலை கிடைத்தது பற்றிக் குறிப்பிட்டதும் “ஒரு விதத்திலை இதுவும் நல்லதுக்குத்தான்” என்றான்.

“அருள் எந்த விதத்திலை இது நல்லதென்று நீ நினைக்கிறாய்?”

“கார்லோவிடம் வேலை பின்னேரங்களிலை ஒரு சில மணித்தியாலங்கள்தானே. அப்ப நாள் முழுக்க எங்களுக்கும் நிறைய நேரமிருக்கும் வேறேதாவது நல்ல வேலை தேட. இல்லையா? அதோடை ‘இமிகிரேசன்’ அலுவலைப் பார்க்கலாம் இல்லையா…”

அருள்ராசா கூறியதும் சரியாகத்தான் பட்டது. “ஒரு விதத்திலை நீ சொல்லுறதும் சரியாய்த்தானிருக்கு… எல்லாமே நல்லதுக்குத்தான். பகல் முழுக்க வேறேதாவது வேலையைத் தேடிப்பார்க்க வேண்டியதுதான். சும்மா நேரம் இருக்குதென்று விஸ்கியை அடித்துப் போட்டுப் பகல் முழுக்கப் படுத்துப் படுத்துக் கிடக்கிறதில்லை. இந்த விசயத்திலை உன்னை நல்லக் கட்டுப்பாட்டிலை வைத்திருக்க வேண்டும் கண்டியோ?”

“நீ சொல்லுறதும் சரிதான். இப்பிடியே காலத்தை வீணக்கிக் கொண்டிருக்க முடியாது. எப்படியாவது நிரந்தரமானதொரு வேலையைக் கண்டு பிடிக்க வேண்டியதுதான்..”

“இல்லாவிட்டால்… கொஞ்சமும் காசு கீசு சேர்க்க முடியாது… இப்பப் பார்.. ஒவ்வொரு நாளும் இந்த வாழ்க்கையைக் கொண்டோடிறதிலையே முடிஞ்சு போகுது. ஒரு பொழுதுபோக்கு அது இதென்று ஒன்றுமில்லை. எப்பவாவது இருந்திருந்திட்டு அடிக்கிற தண்ணிப் ‘பார்ட்டி’யோடை எல்லாமே சரி…”

“என்ன செய்யிறதடா இளங்கோ… எல்லாம் இந்த இமிகிரேசக்காரங்களாலை வந்த கரைச்சல்தானே… அவங்கள் மட்டும் இந்நேரத்துக்கு ‘சோசல் இன்சுரன்ஸ் கார்ட்’டைத் த்ந்திருந்தாங்களென்றால் இந்த வேலைப் பிரச்சினை இந்நேரம் போயிருக்கும். ம்.. எல்லாம் காலம்..”

அருள்ராசா கூறுவதும் இளங்கோவுக்குச் சரியான கூற்றாகத்தான் பட்டது. அன்றிரவு எல்லோரும் தூக்கத்தில் சாய்ந்த பின்னும் இளங்கோவுக்குத் தூக்கமே வரவில்லை. வழக்கமாக இவ்விதமான சமயங்களில் செய்வதுபோல் தனது குறிப்பேட்டையும், பாரதியார் கவிதைகளையும் எடுத்துக் கொண்டு அறையில் தூக்கத்திலாழ்ந்திருப்பவர்களின் தூக்கத்தினைக் கலைப்பதற்கு விரும்பாமல் உணவறைக்கு வந்தான். சிறிது நேரம் பாரதியாரின் கவிதைகளைப் படிப்பதிலீடுபட்டான். அவனைப் பொறுத்தவரையில் வாழ்க்கை சலிப்பும், விரக்தியுமாகச் சாய்ந்திருக்கும் சமயங்களிலெல்லாம் அவனுக்குத் துணையாக இருப்பவை நூல்களே. முக்கியமாகப் பாரதியாரின் கவிதைகளைப் படிக்கும்போது அவனது சோர்ந்து, துவண்டிருக்கும் மனதானது உற்சாகம் பெற்றுத் துள்ளிக் குதிக்கவாரம்பித்துவிடும்.
பாரதியாரின் கவிதைகளைப் படிக்கப் படிக்க மனது இலேசாகிக் கொண்டே வந்தது. உள்ளத்தில் உறுதி கலந்த உற்சாக உணர்வுகள் சிறகடிக்கவாரம்பித்தன. அதன்பின் தனது குறிப்பேட்டினை எடுத்து எழுதவாரம்பித்தான். குறிப்பேடு பல வழிகளில் அவனுக்குதவி புரிந்து கொண்டிருந்தது. மனதிலுள்ள பாரங்களை இறக்கி வைப்பதற்குரிய சுமைதாங்கியாக, வாழ்க்கையைத் திட்டமிடுவதற்குரியதொரு சாதனமாக, அந்தரங்க உணர்வுகளைப் பகிர்ந்துகொளவதற்குரியதொரு துணையாகப் பல்வகைகளில் உதவிக்கொண்டிருந்தது.
குறிப்பேட்டினைப் பிரித்தவன் முதலில் ஏற்கனவே எழுதப்பட்டிருந்த குறிப்புகளைச் சிறிது நேரம் வாசித்தான். அதன்பின் எழுதவாரம்பித்தான்:

‘நாட்டை விட்டு வெளியேறி இன்றுடன் ஆறுமாதங்கள் கழிந்து விட்டன. முதல் மூன்று மாதங்கள் தடுப்பு முகாமில். அடுத்த மூன்று மாதங்கள் வெளியில் காற்றிலாடும் சருகாக. ஒவ்வொரு நாளையும் கழிப்பதற்கான போராட்டத்திலேயே வாழ்க்கை கழிந்து கொண்டிருக்கிறது. இரவு வானை, மதியை, சுடரை, வீசும் தென்றலை, புள்ளை, அந்தியின் அடிவானத்து வர்ணவிளையாட்டை.. இவற்றையெல்லாம் மனம்விட்டு இரசிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு இருப்புப் பிரச்சினையே பெரியதொரு பிரச்சினை. இதற்கு விரைவில் முடிவொன்றினைக் கட்ட வேண்டும். இப்படியே வாழ்வினைச் செல்ல விடக்கூடாது. போனது போகட்டும். இனி அடுத்த ஆறு மாதத்திற்குள் என் வாழ்க்கை உறுதியானதொரு அடித்தளத்தில் கட்டப்பட வேண்டும். அதற்கான உறுதியை இப்பொழுதே இந்தக் கணமே எடுத்துக் கொள்கின்றேன். என் அருமைக் குறிப்பேடே! நீ தான் இதற்குச் சாட்சி!

வீட்டாருக்கு இங்கு நான் படுகிற கஷ்ட்டங்கள் தெரியாது. சொன்னாலும் புரியப் போவதில்லை. ஒரு நேரச் சாப்பாடிற்காக என் மண்ணில் ஒவ்வொரு நாளையும் குடும்பம், குட்டிகளுடன் கழிக்கும் குடியானவர்களின் அன்றாட நிலைமையை இந்தக் கணத்தில் என்னால் மனப்பூர்வமாக உணர முடிகிறது. எந்தவித நம்பிக்கைகளுமின்றி அன்றாடம் வாழ்வே போராட்டமாக வாழும் மக்களுடன் ஒப்பொடும்பொழுது என்நிலை ஒரு பொருட்டேயல்ல. ஆனால் இவற்றையெல்லாம் விட்டார் உணரும் நிலையில் இருப்பார்களென்று நினைக்க முடியாது. அவர்களைப் பொறுத்தவரையில் மகன் உலகின் குபேரபுரியில் வாழ்கிறான். ‘பொடியன் அமெரிக்காவிலை’ என்று சொல்லும்போதே அவர்களது வாயெல்லாம் பூரிப்பால் மலர்ந்து விடும். ஆனால் ‘பொடியன் இங்கு படுகிற பாட்டை’ நேரில் வந்து பார்த்தால் மட்டும்தான் அவர்களால் ஓரளவுக்காவது உணர்ந்து கொள்ள முடியும்.’ இவ்விதம் சிறிது நேரம் குறிப்பேட்டில் எழுதினான். அதன் பின் இளங்கோவின் கவனம் அடுத்த ஆறு மாதங்களைப் பற்றிய எதிர்காலத் திட்டங்களில் ஆழ்ந்து போனது. அவற்றைப் பற்றி எழுதும்போது மேலும் மேலும் உள்ளம் நம்பிக்கையால், உற்சாகத்தால் துள்ளிக் குதிக்கத் தொடங்கியது.

‘சரியாக இன்னும் ஆறு மாதத்திற்குள் இந்த மண்ணில் மிகவும் உறுதியாகக் காலூன்ற வேண்டும். அதற்கு இயலுமானவரையில் குடிவரவு அதிகாரிகளுடன் மீண்டும் மீண்டும் கதைத்துப் பார்க்க வேண்டும். இந்த ஆறு மாதங்களுக்குள் எதுவுமே சரிவராவிட்டால் தொடர்ந்தும் இங்கிருப்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியாது. எந்த விதச் சட்டரீதியான அடையாளத்துக்குரிய ஆவணங்களுமில்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது. ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கக் கூட முடியாது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருத்தரின் துணையை நாட வேண்டும். இதற்கொரு முடிவை எவ்வளவு விரைவில் கட்ட வேண்டுமோ அவ்வளவு விரைவில் கட்ட வேண்டும். இந்த விசயத்தில கடமையைச் செய்வேன். பலனை எதிர்பார்க்காமல். ஆனால் செயலுக்குரிய பலனெதுவுமில்லாதிருக்கும் பட்சத்தில் தொடர்ந்தும் செயலாற்றிக் கொண்டிருப்பதில் அர்த்தமெதுவுமிருப்பதாகத் தெரியவில்லை. ஆறு மாதங்களுக்கு மேல் பலனை எதிர்பார்க்க வேண்டியதுதான். அதுவரையில் எந்தவிதப் பயனையும் எதிர்பார்க்காமல் முடிந்தவரையில் முயல வேண்டியதுதான். அதன் பிறகும் எந்தவிதப் பயனும் விளையாவிட்டால் இந்த மண்ணில் நான் ஒருபோதுமே இருக்கப் போவதில்லை.

விறகுவெட்டி, தெருவிளக்கில் படித்த ஆபிரகாம் லிங்கனுக்குச் சாத்தியமான அமெரிக்கக் கனவு எனக்குச் சாத்தியமாகவேண்டுமென்றால் முதலில் எனக்கும் அவர்களுக்கிருந்ததைப் போல் இந்த மண்ணில் காலூன்றுவதற்குரியதோரிடம் , அது தற்காலிகமாகவேனுமிருக்க வேண்டும். அதனை இந்த அரசு செய்து தர வேண்டும். அடுத்த ஆறு மாதங்களிலாவது அதனை இந்த அரசு செய்து தருமா?

நியூயார்க்கின் துறைமுகத்தில் நின்றபடி தனது குடிமக்களை, வந்தேறு குடிகளை, அடக்கு ஒடுக்கு முறைகளுக்குள்ளாகி ஓடோடிவரும் அகதிகளை வரவேற்கும் சுதந்திரதேவி ஏன் சிலையாக நிற்கிறாளென்று இப்பொழுதுதான் தெரிகிறது? சுதேசிகளுக்கொரு சட்டம். விதேசிகளுக்கொரு சட்டம். சுதேசிகளுக்குள்ளும் வர்ண அடிப்படையில் நிலவுகின்ற இன்னுமொரு சட்டம். அபயக் குரலெழுப்பி ஓடிவரும் அகதிகளுக்கு நீரிலொரு சட்டம்; நிலத்திலொரு சட்டம். ஓடிவரும் அகதிகளுக்குச் சுதந்திரவொளி காட்டி இருகரம் நீட்டி ஆதரிக்க வேண்டிய உன்னால் அது முடியாமல் போனதினால் ஒருவேளை சிலையாகிப் போனாயோ

சுதந்திரதேவியே! இந்த உலகுக்கெல்லாம் நீ விடுதலையினையும், அது பற்றிய ஞானத்தினையும் போதிப்பதாகக் கூறுகின்றார்களே! ஆனால். என் விடயத்தை எடுத்துப் பார். இங்குள்ள தடுப்பு முகாம்களுக்குள் அன்றாடம் கனவுகளுடனும், கற்பனைகளுடனும், ஏக்கங்களுடனும் வளைய வரும் இந்தப் பூவுலகின் பலவேறு திக்குகளிலிருந்தும் வந்து வாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் மறுக்கப்பட்ட அகதிகளை எண்ணிப் பார்! உலகுக்கெல்லாம் சுதந்திரத்தைப் போதிக்குமுன் மண்ணில் அடைக்கலம் நாடி வந்தவர்களுக்கேனிந்த நிலை?
என்னைப் பொறுத்தவரையில் இந்த மணணை நோக்கிக் களவாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ வந்தவனல்லன். முறையான ஆவணங்களுடன் இன்னொரு நாட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தவனை இங்கிருந்து கொண்டு செல்ல வேண்டிய விமானம் கொண்டு செல்ல மறுத்து விட்ட நிலையினால் இந்த மண்ணில் நிர்க்கதிக்குள்ளாகிப் போனவன். சட்டரீதியாக இந்நாட்டினுள் நுழைந்தவனைச் சட்டவிரோதமாக நுழைந்தவனென்ற பிரிவில் வைத்துத் தடுப்பு முகாமில் அடைத்து வைத்ததும் நீ சுதந்திரத்தைப் போதிக்குமிந்த மண்ணில்தானே நிகழ்ந்தது. சுதந்திரதேவியே!’

இவ்விதம் சிறிதுநேரம் மனப்பாரங்களையெல்லாம் தனது உற்ற துணையான அந்தக் குறிப்பேட்டில் கொட்டித் தீர்த்தான் இளங்கோ. இவ்விதம் சுமைகளை இறக்கிய மனதில் சிறிது உறுதியும், உற்சாகமும் குமிழியிட்டன். இறுதியாக இவ்விதம் எழுதினான்: – சுதந்திரதேவியே! உன் மண்ணில் நீ போதிக்கும் சுதந்திரம் என்னைப் போன்றவ்ர்களுக்கு மறுக்கப்பட்டபோதும் நான் உன்னைப் போற்றுகின்றேன். நீ போதிக்கும் சுதந்திரத்தின் அருமையினை உணர்ந்தவன் நான். அதனால் உன்னைப் போற்றுகின்றேன். இரவிலும், பகலிலும், மழையிலும், வெயிலிலும் தனியாக் உயர்ந்து நின்று விடுதலையினை உலகுக்கெல்லாம் போதிக்கின்றாயே! அந்தத் தியாகத்தை நான் மதிக்கின்றேன். ‘எத்தனை இடர் வரினும் தளர்ந்து விடாதே! விடுதலைக்காகப் போராடு! உலக விடுதலைக்காகப் போராடு!’ என்று நீ இயம்புவதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. சுதந்திரதேவியே நீ வாழி! –

இவ்விதம் உணர்வுச் சுமைகளைக் குறிப்பேட்டிலிறக்கியதும் உள்ளத்தில்தானெத்தனை மகிழ்ச்சி! அந்த மகிழ்ச்சியுடன் பாரதியாரின் கவிதை நூலினை மீண்டும் பிரித்தான் இளங்கோ.

‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!
இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்துநின்ற போதினும்,
அச்சமில்லை , யச்சமில்லை, அச்சமென்ப தில்லையே.
துச்சமாக வெண்ணிநம்மைத் தூறுசெய்த போதினும்,
அச்சமில்லை , யச்சமில்லை, அச்சமென்ப தில்லையே.
பிச்சைவாங்கி யுண்ணும்வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும்,
அச்சமில்லை , யச்சமில்லை, அச்சமென்ப தில்லையே.
இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்,
அச்சமில்லை , யச்சமில்லை, அச்சமென்ப தில்லையே…….
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை , யச்சமில்லை, அச்சமென்ப தில்லையே.’

அதன்பின்னர் நண்பர்கள் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த அறையினுள் மெதுவாக வந்தவன் தன் படுக்கையில் சாய்ந்தான். சாய்ந்தவனை விரைவிலேயே நித்திராதேவி வந்து அரவணைத்துக் கொண்டாள். அவளது அரவணைப்புக்குள் தஞ்சமாவதற்கு முன்னர் அவன் பின்வருமாறு உறுதியாக் நினைத்துக் கொண்டான்: ‘இன்னும் ஆறு மாதங்கள் மட்டும்தான். அதன்பிறகு சரிவராவிட்டால் அடுத்த பயணத்தைத் தொடங்க வேண்டியதுதான்.’ இவ்விதமாக எதிர்காலம் பற்றியதொரு தெளிவான சிந்தனையால் இளகிக் கிடந்தவனை நித்திராதேவி மிகவும் இலகுவாகவே அணைத்துக் கொண்டாள்..

[தொடரும்]

ngiri2704@rogers.com

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்

தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் பதினான்கு: ‘வேடிக்கையான குடிவரவுத் திணைக்கள அதிகாரி!’

This entry is part [part not set] of 29 in the series 20070614_Issue

வ.ந.கிரிதரன்



வரவேற்புக் கூடத்தில் அமர்ந்திருந்த பெண் அதிகாரியிடம் முதலில் இளங்கோதான் தங்களை அறிமுகம் செய்தான்:

“இனிய காலை உங்களுக்கு உரித்தாகட்டும்”

அதற்கு அந்தப் பெண் அதிகாரி “உங்களுக்கும் எனது காலை வந்தனங்கள். இன்று நீங்கள் என்ன விடயமாக இங்கு வந்திருக்கின்றீர்கள்?” என்று வரவேற்றபடியே எதிர்வினாவொன்றினையும் தொடுத்தாள்.

“எனது பெயர் இளங்கோ. இவனது பெயர் அருள்ராசா. நாங்கள் இருவரும் இங்கு அரசியல் அடைக்கலம் கோரி விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரிகள்” என்று கூறிய இளங்கோ அவளுக்கு அமெரிக்கக் குடிவரவு திணைக்களத்தினால் கொடுக்கப்பட்டிருந்த விண்ணப்பத்தின் புகைப்படப் பிரதியினை எடுத்துக் கொடுத்தான்.

அதனை வாங்கிச் சிறிது நேரம் பார்த்த அந்தப் பெண் அதிகாரி பின்னர் இவ்விதம் கூறினாள்:

“இது நீங்கள் விண்ணப்பித்த விண்ணப்பப் பத்திரத்தின் பிரதி. இதனை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. அவர்களிடமிருந்து இது சம்பந்தமாக உங்களுக்குப் பதிலொன்று வரும். அதன் பின்னர் வாருங்கள்..”

“மேடம், அது சம்பந்தமாகத்தான் இங்குள்ள அதிகாரியொருவருடன் பேச விரும்புகின்றோம். இதற்கான பதில் எப்பொழுது வருமோ தெரியாது. இந்த நிலையில் ‘சமூகக் காப்புறுதி இலக்க’ அட்டைக்குக் கூட விண்ணப்பிக்க முடியாதுள்ளது. எங்களுடன் வந்துள்ள வேறு மாகாணங்களில் வசிக்கும் எல்லோருக்கும் ‘சமூகக் காப்புறுதி இலக்க அட்டைகள்’ வழங்கப்பட்டுவிட்டன. அதில்லாமல் எங்களால் எந்தவித வேலையும் செய்யமுடியாமலுள்ளது. அதுதான் அதுபற்றி இங்குள்ள அதிகாரியொருவருடன் கதைக்க விரும்புகின்றோம். இதற்கு உதவினால் நன்றியுள்ளவர்களாகவிருப்போம்.”

இவ்விதம் இளங்கோ மிகவும் பணிவாகக் கூறியது அந்தப் பெண் அதிகாரியின் இதயத்தைத் தொட்டுவிட்டது. அதன் பிரதிபலிப்பு குரலில் சிறிது தெரிய அவள் “உங்கள் நிலை எனக்குப் புரிகிறது. என்னைப் பொறுத்தவரையில் உங்கள் கோரிக்கைக்கான பதில் வராமல் இங்குள்ளவர்களால் என்ன செய்ய முடியுமோ? எதற்கும் உங்கள் ஆசையை நான் தடுக்க விரும்பவில்லை. முயற்சி செய்து பாருங்கள். உங்களை அழைக்கும்வரையில் அங்குள்ள ஆசனங்களில் சென்று அழைப்பு வரும்வரையில் காத்திருங்கள்” என்றாள்.

இளங்கோவுக்கு அவளது பரிவான குரல் சிறிது ஆறுதலைத் தந்தது. அந்த மகிழ்ச்சி அடுத்து அவன் தொடுத்த வினாவிலும் பிரதிபலித்தது.

“மேடம், இன்னுமொரு சிறு கேள்வி. நாங்களிருவருமே ஒரே சமயத்தில் ஒன்றாக அகதிக் கோரிக்கைக்கு விண்ணப்பித்தவர்கள். நாங்களிருவருமே ஒரே சமயத்தில் அதிகாரியொருவரைச் சந்திக்க முடியுமா? அல்லது தனித்தனியாகத்தான் சந்திக்க வேண்டுமா?”

“ஒரே நேரத்தில் சந்திப்பது முடியாத காரியம். தனித்தனியாகத்தான் சந்திக்க வேண்டும். குறைந்தது ஒன்றிரண்டு மணித்தியாலங்களாவது காத்திருக்க வேண்டி வரலாம்.”

இவ்விதம் அந்தப் பெண் அதிகாரி கூறவும் அவளுக்கு மீண்டுமொருமுறை நன்றியினைத் தெரிவித்துக்கொண்டு கூடத்திலிருந்த நாற்காலிகளில் காத்திருக்கும் ஏனையவர்களுடன் வந்தமர்ந்து கொண்டார்கள் இளங்கோவும் அருள்ராசாவும்.

“அருள், எனக்கென்றால் சரிவருமென்று தெரியவில்லை. எதுக்கும் முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லைதானே. முயற்சி செய்து பார்ப்போம். குடியா முழுகி விடப்போகுது.”

“என்னடா இளங்கோ. ‘பொசிட்டிவ்வா திங்க்’ பண்ணுற நீயே இப்பிடி தளர்ந்து விடலாமா? சரிவருமென்று எண்ணிக்கொண்டே இறங்கினால் எல்லாம் வெற்றிதான். இறங்குவம். காலை விடுவம். நல்லதே நடக்குமென்று நம்புவோம்”

“ஓம் அருள். நீ சொல்லுறதும் சரிதான். எவ்வளவுதான் ‘பொசிட்டிவ்’வாக இருந்தாலும் சில சமயங்களில் மனசு சலிச்சு விடத்தான் செய்கிறது.”

“அதுக்குமொரு காரணமில்லாமலில்லை.”

“என்ன காரணம்..”

“எப்பொழுதுமே எங்கட, மனுசரின்ற , குணவியல்புகள் ஒரே மாதிரி இருக்காதாம். ஏறி இறங்கிக் கொண்டுதானிருக்குமாம். நிலவு பிறை நிலவாகி, முழுநிலவாகி, அமாவாசையில் மறைந்து மீண்டும் வளரத் தொடங்கிறதே. அது மாதிரித்தான் எங்கள் குணவியல்புகளும். சில நேரம் எந்தவிதக் காரணமுமில்லாமல் ஒரு பிரச்சினையுமில்லாத நேரத்தில் மனசு சலிச்சுச் சோர்ந்து கிடக்கும். இன்னொரு சமயம் தலைக்கு மேலை பிரச்சினைகள் கூடுகட்டியிருக்கைக்கே மனசு கிடந்து உற்சாகமும், ஆனந்தமும் பொங்கக் கூத்தடிக்கும்.”

இளங்கோவுக்கு அருளின் விளக்கம் ஆச்சரியத்தை அளித்தது.

” அருள், நீ கூறுவது சரிதான். இவ்வளவு விசயம் தெரிந்து வைத்திருக்கிறாயே.. ஆச்சரியம்தான். உளவியல் மருத்துவராகப் போயிருக்க வேண்டும். ‘மிஸ்’ பண்ணியிட்டாய்.”

இவ்விதமாக அவர்களிருவரும் அளவளவியபடியிருந்த வேளையில் அவனது பெயரை உள்ளிருந்து வந்த வெள்ளையின அதிகாரியொருவன் அழைத்தான்.

“யாரது.. இளங்கோ”

“நான்தான்” என்றவாறெழுந்த இளங்கோ அருள்ராசா பக்கம் திரும்பியபடி “எங்கேயும் போயிடாதே. நான் வரும்வரைக்கும் இங்கைதான் நில்” என்றவன் அந்த அதிகாரியைப் பின்தொடர்ந்து உள்ளே சென்றான். தன் காரியாலய அறைக்கு அவனை அழைத்துச் சென்ற அந்த அதிகாரி அருகிலிருந்த ஆசனத்திலமரும்படி சைகை காட்டினான்.

“என் பெயர் ‘டிம் லாங்கின்’. சரி, இன்றைக்கு எதற்காக இங்கு விஜயம் செய்திருக்கிறாய்?”

அவனுக்குப் பதில் சொல்வதற்கு முன்னர் இளங்கோ தன்னிடமிருந்த ஆவணங்களை, இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான பத்திரிகைச் செய்திகளின் போட்டோப் பிரதிகளை, அண்மைய யூலைக் கலவரத்தைப் பற்றி வெளிவந்த தகவல்கள், புகைப்படங்களை எடுத்துக் காட்டினான். அதிலொன்று நிர்வாணமாக்கப்பட்ட தமிழனொருவனைச் சுற்றி, அந்த அப்பாவியைக் கொல்வதற்கு முன்னதாக குடித்துக் கும்மாளமடித்துக் கொண்டிருந்த காடையர் கும்பலின் படம். அதனைப் பார்த்ததும் அந்த அதிகாரி முகம் சுளித்தான். “காட்டுமிராண்டிகள். காட்டுமிராண்டிகள்” என்று தனக்குள்ளேயும் சிறிது கூறிக் கொண்டான்.

அந்த அதிகாரியும் சிறிது மடங்கக் கூடிய ஆசாமியாக அவனுக்குப் பட்டது.

“சேர், இலங்கைத் தமிழர்கள் இனரீதியில் பாதிக்கப்பட்டவர்கள். அந்தப் புகைப்படப்பிரதியில் கொல்லப்படுவதற்காகக் காத்திருக்குமந்த அப்பாவியுமொரு தமிழன்தான். நானுமொரு ஈழத்தமிழன்தான்…”

இவ்விதம் அந்த அதிகாரிக்குத் தன் நிலையினை விபரிக்க முற்படுகையில் இளங்கோவுக்கு அந்தக் கணத்தில் அந்தப் புகைப்படப்பிரதியிலுள்ள அந்த அப்பாவித் தமிழனின் நிலை மிகவும் தெளிவாக, அனுபவரீதியாகப் புரிந்தது. நெஞ்சுணர்ந்தது. இரத்தம் சொட்டுமுடலுடன், நிர்வாணக் கோலத்தில், கூனிக்குறுகியபடி, வெறிபிடித்தாடும் மிருகங்களுக்கு மத்தியிலிருந்தபோது அவன் என்ன நினைத்திருப்பானோ? ஊரிலெங்கோ காத்து நிற்கும் அவனது மனைவியை அல்லது ‘எப்போ அப்பா வருவாரோ’வென்று இன்பக் கனவுகளுடன் காத்து நிற்குமொரு இளங்குருத்தை அல்லது நோகும் நெஞ்சுடன் துஞ்சாதெங்கோ விழித்திருக்கும் காதலியை , முதுமையில் அவனுதவியை நாடி நிற்குமந்ததாயை, சகோதரனை, சகோதரியையெல்லாம் நினைத்திருப்பானோ? அவனது அந்தக் கூனிக் குறுகிய தோற்றம் ஈழத்தமிழர்களின் துயரத்தினொரு குறியீடாக விளங்கியதுபோல் பட்டது.

“சேர், வேலை செய்யாமல் இங்கு வாழ்க்கையைக் கொண்டு நடத்துவது மிகவும் சிரமமாகவுள்ளது. வேலை எடுக்க வேண்டுமென்றால் ‘சமூகக் காப்புறுதி இலக்கத்தைக் ‘ கேட்கிறார்கள்..”

அதனைக் கேட்டதும் அந்த அதிகாரி சிறிது சிரித்தான். அத்துடன் ” நியுயார்க்கிலிருக்கிறாய். நியுயார்க் உயர்ந்த கட்டடங்களுக்கு மட்டும் புகழ்பெற்றதொன்றில்லை. இன்னுமொன்றிற்கும் அது புகழ் மிக்கது. தெரியுமா?” என்றதும்

இளங்கோ “தெரியும். கேளிக்கையான இரவு வாழ்க்கைக்கும் புகழ் பெற்றதுதான்” என்று பதிலிறுத்துச் சிரித்தான். அதற்கு ‘டிம் லாங்கின்’ தன் பருத்த தொந்தியசையச் சிரித்தான்: “மிக விரைவிலேயே நீ நல்லாத்தான் நியூயார்க்கைப் புரிந்து வைத்திருக்கிறாய். ஏதாவது அனுபவங்களுண்டா?” என்றும் கண்களைச் சிமிட்டினான்; அத்துடன் “அதுவல்ல சரியான பதில்” என்றும் ‘பொடி’ வைத்துப் பேசினான்.

“எனககுத் தெரியவில்லையே” என்று பதிலுக்கு இளங்கோ தலையைச் சொரிந்தான்.

டிம் லாங்கினே தொடர்ந்தான்: “சரி சிறியதொரு துப்பு தருகிறேன். கண்டு பிடிக்கிறாயா பார்க்கிறேன். உன் இன்றைய இருப்பிலேயே பதிலும் அடங்கியுள்ளது. அதாவது என் கேள்விக்குரிய சரியான பதில் உன் இன்றைய இருப்பிலுள்ளது. எங்கே பதிலை இப்பொழுது கூறு பார்க்கலாம்?”

இளங்கோவுக்கு அந்த வெள்ளையினத்து அதிகாரியின் போக்கு சிறிது வியப்பினைத் தந்தது. மிகவும் வேடிக்கையாகப் பேசுகிறான். வழக்கமான அதிகாரிகளுக்குரிய கண்டிப்பு, கர்வமெதுவுமில்லாமல் மிலவும் இயல்பாக, நட்புணர்வுடன், குதூகலமிக்க சிறுவனொருவனின் ஆனந்த உணர்வுகுடன் அவன் பேசுகிறான். அவனது கேள்விக்கு பதிலிறுக்க முடியாமல் இளங்கோ வெற்றிகரமாகப் பின்வாங்கினான்.

டிம் லாங்கினே தொடர்ந்தான்: “நியூயார்க் மில்லியன் கணக்கில் வசிக்கும் சட்டவிரோதக் குடிகளுக்கும் பெயர் போனதென்பதை எவ்விதம் நீ மறக்கலாம்? நீயே அவர்களிலொருவன்தானே. இவர்களெல்லாருமே இங்கு எந்தவிதச் சட்டரீதியான ஆவணங்கலுமில்லாமல்தான் வேலை செய்கிறார்கள். அவர்களைப் போல் உன்னாலும் வேலை செய்ய முடியும். போய்ச் செய். உன்னுடைய கோப்புக்குக்குரிய சரியான மறுமொழி வாஷிங்டனிலுள்ள இராஜாங்க திணைக்களத்திலிருந்துதான் வரவேண்டும். அதன்பிறகுதான் எங்களால் எதுவும் செய்ய முடியும். இருந்தாலும் உன் நிலை பற்றிய என் பரிந்துரையினை அனுப்பி வைக்கிறேன். விரைவிலேயே உனக்கு அவர்களிடமிருந்து பதில் வருமென்று எதிர்பார்க்கிறேன். அதுவரையில் நியூயார்க் உன்னையும் வாழவைக்குமென்று நிச்சயமாக நம்புகிறேன்.”

“அது சரி.. களவாக வேலை செய்து கொண்டிருக்கும்போது உங்களது அதிகாரிகள் யாராவது என்னைப் பிடித்து விட்டால்..” என்று இளங்கோ இழுத்தான். அதற்கு டிம் லாங்கின் “நீ தற்போது வைத்திருக்கிற ஆவணங்களைக் காட்டு. அவர்கள் புரிந்து கொள்வார்கள். நீ சட்டவிரோதமாகவிருந்தாலும் ச்ட்டரீதியாகத்தான் பதிவு செய்து இருக்கிறாய். எனவே அவர்கள் புரிந்து கொள்வார்கள். வெருட்டினால் பசி பொறுக்கவில்லை. அதுதான் வேலை செய்கிறேன். வேண்டுமானால் தடுப்பு முகாமிலேயே கொண்டு சேர்த்து விடுங்கள் என்று சொல். ஆலை விடு என்று ஓட்டம் பிடித்து விடுவார்கள். ஒன்றுக்கும் பயப்படாதே. அமெரிக்கா நிச்சயம் உன்னை வாழ வைக்கும்” என்று பதிலுரைத்து, வாழ்த்தி வழியனுப்பி வைத்தான். அவனுக்கு நன்றி கூறி விட்டு வெளியில் வந்த இளங்கோவின் சிந்தையில் அந்த அமெரிக்கக் குடிவரவுத் திணைக்கள அதிகாரியின் பருத்த தொந்தியும், வேடிக்கையான பேச்சும், நியூயார்க்கில் சட்டவிரோதமாக வேலை செய்து வாழ்வதெப்படி, அகப்பட்டால் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளிடமிருந்து தப்புவதெப்படியென்று டிம் லாங்கின் தந்த ஆலோசனைகளும் அவனைப் புதிர் நிறைந்ததொரு மனிதனாகப் புலப்படுத்தின; சிரிப்பும் கூடவே வந்தது.

[தொடரும்]

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்

தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் பதின்மூன்று: வேலை வேண்டும்!

This entry is part [part not set] of 32 in the series 20070607_Issue

வ.ந.கிரிதரன்


இன்னுமொரு பொழுது பூத்தது வழக்கம் போல் இருப்பியற் பிரச்சினைகளுடன். அருள்ராசாவும், இளங்கோவும் அன்றையப் பொழுதினை எப்படி ஆரம்பிப்பது, கழிப்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர். இளங்கோ இவ்விதம் உரையாடலினை ஆரம்பித்தான்:

“அருள், எப்ப்டியாவது இன்னுமொரு வேலையைக் கெதியிலை எடுக்க வேணும். உன்னுடைய ‘பிளான்’ என்ன?”

“நானும் எனக்கேற்ற வேலையொன்றைத் தேடிக் கோண்டுதானிருக்கிறன. கிடைக்க மாட்டேனென்கிறதே. எங்கை போனாலும் ‘சோசல் இன்சுரன்ஸ் கார்ட்’டை அல்லவா கேட்கிறான்கள். எனக்கென்னென்றால் ‘இமிகிரேஷன் ஓபிசு’க்குப் போய் அதை எடுக்கிற வழியை முதலிலை பார்த்தால் நல்லதென்று படுகுது. நீ என்ன சொல்லுறாய்?”

“அருள். நீ சொல்லுறதும் நல்ல ‘ஐடியா’தான். இன்றைக்கு முதலிலை அங்கு போய் விசாரித்து விட்டுப் பிறகு அங்கிருந்தே வேலை தேடும் படலத்தைத் தொடங்குவோம்..”

“அதுவும் நல்ல ‘ஐடியா’தான். அப்பிடியே செய்வம். அதுக்கொரு முடிவைக் கண்டு விட்டு, அது சரிப்படாதென்றால் நானும் உன்னைப் போல எந்த வேலையை என்றாலும் செய்ய என்னைத் தயார் படுத்த வேண்டும்.”

“அது சரி. உனக்கு இமிகிரேசன் ஓபிஸ் எங்கையிருக்கிறதென்று தெரியுமே?’

“26 ‘பெடரல் பிளாசா’வில்தானொருக்கு. பிரச்சினையென்னவென்றால்…”

“என்ன பிரச்சினை..?

” ‘சோசல் இன்சுரன்ஸ் காட்’டை எடுக்க வேண்டுமென்றால் அதற்கு வேறு சில அடையாள அட்டைகள் தேவை. முதலிலை எங்களுக்கு இன்னும் சட்டரீதியாக வேலை செய்கிறதுக்குரிய பத்திரங்களெதுவுமில்லை. ‘பாஸ்போர்ட்’ கூட கையிலை இல்லை..”

“‘பாஸ்போர்ட்’ ஏனில்லை. ‘இமிகிரேசனி’டம்தானே குடுத்திருக்கிறம்தானே. அதை அவங்கள் சரிபிழை பார்க்கலாம்தானே”

“அடுத்தது… கோஷ் சொன்னவன்…”

“என்ன சொன்னவன்?”

“பாஸ்போர்ட் அதோடை வேலை தருபவடரிடமிருந்து வேலையை உறுதி செய்தொரு கடிதமும், மற்றது வேலை செய்வதற்குரிய அனுமதிப் பத்திரமும் தேவையாம். அவை இருந்தால்தான் ‘சோசல் இன்சுரன்ஸ் கார்ட்’ எடுக்கலாமாம்.”

“அடக் கோதாரி. இதுக்கு எங்கை போறது. சாணேற முழம் சறுக்கும் போலைக் கிடக்கே..”

“வேறை என்ன செய்யிறது. சும்மா இருக்கிறதை விட முயற்சி செய்யுறது நல்லதுதானே..”

“இது சரி வராட்டி என்ன செய்யிறதாம்…”

“இது சரிவராட்டி ஏதாவது சமூகசேவை செய்யும் அமைப்பொன்றிடமிருந்து சட்டரீதியான சேவையைப் பெற ‘டிரை’ பண்ணலாம். அபப்டிப் பட்ட பல அமைப்புகள் இங்கை இருக்காம்”

“எதுக்கும் முதலிலை இமிகிரேசன் ஓபிஸுக்குப் போய் அங்கையிருக்கிற ஒரு ஓபிசரைக் கண்டு கதைப்போம். எங்களிடமிருக்கிற நாட்டிலை சட்டவிரோதமாகத் தங்கியிருக்கிற ‘இமிகிரேசன் டொக்குமன்றைக்’ காட்டி கதைப்போம். தற்போதைக்கு அது ஒன்றதுதான் எங்களிடமிருக்கிற ஒரேயொரு ‘டொக்குமென்ற்’. முதலிலை அதை வைத்து ஆரம்பிப்பிப்போம்”

“நீ சொல்லுறதும் சரிதான். ‘ட்ரை’ பண்ணாமல் என்ன நடக்குமென்று முதலிலையே முடிவெடுக்க முடியாது. கேட்காமல் எதுவுமே கிடைக்காதுதானே”

“அதுதான் ஒரு கிறித்தவ பாட்டுக் கூட இருக்குதே..”

“எந்த பாட்டை நீ சொல்லுறாய்?”

“கேளுங்கள் கிடைக்கப்படும். தட்டுங்கள் திறக்கப்படும். கேளுங்கள் கிடைக்குமென்றார் இயேசு கேளுங்கள் கிடைக்குமென்றார்”

“சரி கேட்டுப் பார்ப்பம் இமிகிரேசன் ஓபிசரிடம். கிடைத்தால் நல்லது. கிடைக்காவிட்டாலும் எதையாவது செய்து பிழைத்துக் கொள்ள வேண்டியதுதான்.”

“அருள்! நீ ‘மைக்கல் கிரிக்டனின்’ ஜுராசிக் பார்க் நாவல் படிச்சனியா?”

“ஸ்டீபன் ஸ்பில்பேர்க்கின் படமாய் வந்து சக்கை போடு போட்டதே அந்த ஜுராசிக் பார்க்கைத்தானே சொல்லுறாய்?”

“அதே ஜுராசிக் பார்க்கைத்தான் சொல்லுறன். உயிரினம் எப்படியும் தப்புறதுக்கு வழியைக் கண்டு பிடித்துவிடுமென்பதை அற்புதமாகச் சொல்லும் கதை. இயற்கையுடன் விளையாடக் கூடாதென்பதையும் இன்னுமொரு கோணத்தில் சொல்லும் கதை. விஞ்ஞான தொழில்நுட்பத்தின் மாற்றுப் பக்கத்தை, விபரீத விளைவுகளை அறிவுறுத்தும் கதை. எதனையும் வியாபாரமாக்கி, விறபனைப் பொருளாக்கி இலாபம் பண்ணத் துடிக்கும் இன்றைய மேற்குலக சமுதாயத்தின் ஆசைக்கு விழுந்த பலத்த அடியினைச் சொல்லும் கதை. இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்..”

“அது சரி. அதுக்கும் எங்கட நிலைக்குமென்ன சம்பந்தம். எதுக்காக அதை இங்கை சொல்ல வாறாய் இளங்கோ”

“எதுக்குச் சொல்ல வாறனென்றால்…. ‘சோசல் இன்சுரன்ஸ் கார்ட்’ கிடைக்குதோ இல்லையோ நாங்கள் தொடர்ந்தும் வாழத்தான் போறம். இங்கை இருக்கிற வரைக்கும் முடிந்த வரைக்கும் முயற்சி செய்யத்தான் போறம். அந்தக் கார்ட் கிடைத்தால் வாழ்க்கை இலகுவாகக் கழியும். நல்லதொரு வேலை எடுத்து முன்னேறலாம். இல்லையென்றால் எந்த தொட்டாட்டு வேலையையென்றாலும் செய்து இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியதுதான்”

இவ்விதமாக அவர்களுக்கிடையில் உரையாடல் தொடர்ந்தது. எவ்விதமாவது குடிவரவுத் திணைக்கள அதிகாரியொருவரிடம் தங்களது நிலையினை விளக்கிச் சமூகக் காப்புறுதி அட்டையினைப் பெறுவதற்கு இயலுமானவரையில் முயற்சி செய்ய வேண்டும். அவருக்கு இலங்கைத் தீவின் இன்றைய அரசியல் நிகழ்வுகளை, நிலைமைகளை, அண்மைக்காலத்து நிகழ்வுகளை குறிப்பாகக் கறுப்பு யூலை 83 நிகழ்வுகளை, தொடர்ச்சியாகத் தமிழ் மக்கள் மேல கட்டவித்து விடப்படும் அரச பயங்கரவாத நடவடிக்கைகளை, இவறையெல்லாம் விரிவாக ஆதாரங்களுடன் அவருக்கு விபரிக்க வேண்டும். ஈழத் தமிழர்கள் சம்பந்தமாக மேற்கு நாட்டு வெகுசன ஊடகங்களில் வெளிவந்த செய்திக் குறிப்புகளின் போட்டோப் பிரதிகளை அறுக் சேர்த்து வைத்திருந்தது நல்லதாகப் போய் விட்டது. அவற்றை ஆதாரங்களாகக் காட்ட முடியும். இவ்விதமாக நண்பர்களிருவரும் உரையாடி முன்னெடுக்க வேண்டிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகளைப் பற்றி அலசி ஆராய்ந்து அவை பற்றித் தீர்க்கமான முடிவினையெடுத்தார்கள். அதன் பின் அவர்கள் ஏற்கனவே தீர்மானித்படி ‘பெடரல் பிளாசா’விலுள்ள குடிவரவுத் திணைக்களத்துக்குச் செல்ல முடிவு செய்து அன்றைய பயணத்தை அவ்விதமே ஆரம்பித்தார்கள்.

[தொடரும்]

ngiri2704@rogers.com

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்

தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் பதினொன்று: இளங்கோ இலங்கா ஆன காதை!

This entry is part [part not set] of 31 in the series 20070524_Issue

வ.ந.கிரிதரன்


அந்தக் கடலுணவுக்குப் பெயர்பெற்ற உணவகம் நியூஜேர்சி மாநிலத்தின் ‘நிவார்க்’ என்னும் நகரில் பிரதான கடைத்தெருக்கண்மையில் அமைந்திருந்தது. இளங்கோ அவ்விடத்தை அடைந்தபொழுது அப்பொழுது காலை நேரம் பத்தைத் தாண்டி விட்டிருந்தது. முன்னரே முகவன் பீற்றர் ஏற்பாடு செய்திருந்ததன்படி தலைமைச் சமையற்காரன் நெப்போலியன் அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தான். முதல் வேலையாக உணவகத்திற்குக் கூட்டிச் சென்றவன் அங்கிருந்த உதவிச் சமையற்காரன் ‘மார்க்’கை அறிமுகம் செய்து வைத்தான். நெப்போலியன் உருவத்தில் உண்மையான நெப்போலியனுக்கு எதிர்மாறான தோற்றத்திலிருந்தான். ஆறடிக்கும் சற்று அதிகமான உயரத்தில், அடர்த்தியான நரைத்த மீசையுடன் ஒரு காலத்தில் ‘ஹாலிவூட்டி’னைக் கலக்கிய ‘சார்ஸ் புரோன்சன்’ போன்ற தோற்றத்திலிருந்தான். அவனுக்கு எதிர்மாறாக இளைஞனாக அகன்ற, சிரிப்புடன் கூடிய வட்ட முகத்துடன் காணப்பட்டான் மார்க். பணிப்பெண்கள் சிலர் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

மார்க்கைப் பார்த்து நெப்போலியன் பின்வருமாறு இளங்கோவை அறிமுகம் செய்து வைத்தான்: “மார்க். உன் தலையிடி இன்றுடன் தொலைந்தது. இனிமேல் இவன்தான் உனக்கு உற்ற உதவியாளனாகவிருப்பான். இன்றைக்கே வேலையினை ஆரம்பிக்கின்றான். இவனுக்குரிய அன்றாட வேலைபற்றிய அனைத்துத் தகவல்களையும் தெளிவாக விளக்கி விடு. இவனுடைய பெயர் என் வாயில் நுழைவதற்குக் கஷ்ட்டமானது. உன் பெயர் என்ன என்பதை இவனுக்குக் கூறு?”

“இளங்கோ” என்றான் இளங்கோ.

“இலங்கா..” என்று இழுத்து ஒருமுறை உச்சரித்துப் பார்த்தான் மார்க்.

“இலங்கா இல்லை. இளங்கோ” என்றான் இளங்கோ.

மீண்டும் மார்க்கும், நெப்போலியனும் ஒருமுறை “இலங்கா” என்றிழுத்தார்கள

“அதுவும் ஒருவிதத்தில் சரிதான். ஏனென்றால் நான் இலங்கையைச் சேர்ந்தவன். இலங்காவென்பதும் ஒருவிதத்தில் பொருத்தமாயிருக்கிறது” என்று இலேசாகச் சிரித்தான் இளங்கோ.

அச்சமயம் அவ்விடத்துக்குப் பணிப்பெண்ணொருத்தி ஓடி வந்தாள். “எமிலி” என்று அவளை அழைத்த நெப்போலியன் இளங்கோவிடம் “இலங்கா, இவள்தான் பணிப்பெண் எமிலி. மிகவும் நல்லவள். கலகலப்பானவள். இவளுக்கும் உன் உதவி மிகவும் தேவைப்படும். இவளைப் போல் இன்னும் சிலர் வேலை செய்கின்றார்கள். மேலும் சிலர் மாலையில் தான் வருவார்கள்” என்றான்.

எமிலியும் பதிலுக்கு அவனைப் பார்த்து சிநேகிதமான பார்வையொன்றினை வீசி ‘ஹாய்’ என்று கூறி விட்டுத் தன் பணியில் மூழ்கி விட்டாள்.

நெப்போலியன் மார்க்கிடம் “மார்க். இலங்காவுக்கு வேலை பற்றிய எல்லா விடயங்களையும் விளக்கி விடு. வேலையை அவன் இப்பொழுதே ஆரம்பிக்கலாம்” இவ்விதம் கூறியவன் இளங்கோவிடம் ‘இலங்கா, என் அறைக்கு வா. உன்னிடம் இன்னும் சில விடயங்களைப் பற்றிப் பேச வேண்டும்” என்றான்.

அவனைத் தொடர்ந்து இளங்கோவும் அவனது காரியாலய அறைக்குச் சென்றான்.

அருகிலிருந்த இருக்கையினைக் காட்டியவன் ‘இருக்கலாம்’ என்பதற்குரிய சைகையினைக் காட்டினான். இளங்கோ அமர்ந்ததும் இவ்விதம் கூறினான்: “இங்கு எல்லோரும் உனக்கு ஒத்துழைப்பார்கள். நீ மட்டும் உன் வேலையினை ஒழுங்காகச் செய்தால் போதுமானது. மூன்று நேரமும் இங்கு உன் சாப்பாட்டினை முடித்துக் கொள்ளலாம். இன்றிரவு வேலை முடிந்ததும் உன்னை உன்னிருப்பிடத்தில் கொண்டு சென்று விடுவேன். நாளை முதல் அங்கிருந்து நீ வேலைக்கு வரவேண்டும் நடந்தே வந்து விடலாம். அவ்வளவு தொலைவில்லை. எனக்குத் தெரிந்த வயது முதிர்ந்த தம்பதியின் வீடுதான். மாடியில் அறைகளை வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். உன்னைப் போல் வேறு சிலரும் அங்கு தங்கியிருக்கிறார்கள். நல்லவர்கள்”

இளங்கோ மெளனமாகவிருந்ததைப் பார்த்து நெப்போலியன் “இலங்கா! உனக்கு ஏதாவது கேள்விகள் இவ்விடயத்திலிருந்தால் இப்பொழுதே கேட்டு விடு” என்றான்.

அதற்கு இளங்கோ “வேலை நேரம், மற்றும் அதற்குரிய ஊதியம் பற்றியெதுவும் கூறவில்லையே.. ” என்றிழுத்தான்.

அதற்குரிய நெப்போலியனின் பதில் இவ்விதமாக அமைந்திருந்தது: “காலை 10 மணியிலிருந்து மாலை 10 மணிவரைதான் உனது வேலைநேரம். அதற்குள் உனக்குரிய வேலைகளையெல்லாம் முடித்து விட வேண்டும். அவ்விதம் முடிக்காவிட்டால் எவ்வளவு நேரம் சென்றாலும் முடித்து விட்டுத்தான் செல்ல வேண்டும். ஆனால் மேலிடத்தால் எனக்கிடப்பட்ட கட்டளையின்படி உனக்கு காலை பத்து மணியிலிருந்து இரவு பத்து மணிவரையில்தான் ஊதியம் வழங்குவார்கள். ஊதியமாக மணித்தியாலத்திற்கு முன்று டாலர்கள் வழங்கப்படும். அதே சமயம் உனக்கு உணவு மற்றும் இருப்பிடம் எல்லாம் இலவசமாகக் கிடைப்பதையும் நீ எண்ணிப் பார்க்க வேண்டும். உனக்கு இவ்விடயத்தில் மேலதிகமாக ஏதாவது கேள்விகலிருந்தால் என்னிடம் அவ்வப்போது கேட்டுக் கொள்ளலாம். இப்பொழுது நான் உன்னை மார்க்கிடம் ஒப்படைக்கப் போகின்றேன். அவன் உனக்கு உனது வேலை சம்பந்தமான எல்லா விடயங்களையும் விளக்குவான்.”

அதன்பிறகு நெப்போலியன் இளங்கோவை உதவிச் சமையற்காரன் மார்க்கிடம் கொண்டு சென்று ஒப்படைத்தான். அத்துடன் ” மார்க் இலங்காவை உன்னிடம் ஒப்படைக்கின்றேன். நீ முன்பே கூறியதுபோல் எல்லாவற்றையும் விளக்கிவிடு” என்று மேலும் கூறிவிட்டகன்றான்.

மார்க் இளங்கோவிடம் “இலங்கா, ஏதாவது சாப்பிட விரும்பினால் சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்” என்றவன் முட்டையும் வதக்கிய உப்பிடப்பட்ட பன்றியிறைச்சியும் கூடிய வெண்ணெயிடப்பட்ட வாட்டிய பாண் துண்டுகளைக் கொண்டு வந்து வைத்தான். அத்துடன் குடிப்பதற்கு ஆரஞ்சுப் பழச்சாறும் கொண்டு வந்தான். அத்துடன் தனக்குக் குடிப்பதற்குத் தேநீர் கொண்டு வந்தான். சிறிது நேரம் இளங்கோ உண்பதைப் பார்த்துக் கொண்டிருந்தவன் இளங்கோவுக்குரிய நாளாந்தப் பணிகளை விபரிக்கத் தொடங்கினான்:

“இலங்கா, உன்னுடைய முக்கியமான வேலைகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். முதலாவது முக்கியமான வேலை பணிப்பெண்கள் அவ்வப்போது கொண்டு வரும் கோப்பைகளை அதற்குரிய கோப்பை கழுவும் இயந்திரத்தில் உடனடியாகக் கழுவி வைப்பது. அப்பொழுது கோப்பைகளில் பாவிக்காமல் வரும் வெண்ணெய்க் கட்டிகள், பழக்கூழ் (‘ஜாம்’) போன்றவற்றை எறியக் கூடாது. அவற்றை இன்னுமொரு கோப்பையில் சேகரிக்க வேண்டும். அத்துடன் சில சமயங்களில் திரும்ப வரும் பெரு இறால்களின் (‘லாப்ஸ்டர்’) கோதுகளையும் சேகரிக்க வேண்டும்.
அது முதலாவது முக்கியமான பணி. அதில் நீ தாமதித்தால் பணிப்பெண்கள் திணறிப் போவார்கள். எனவே ஒவ்வொரு முறை அவர்கள் கோப்பைகளைக் கொண்டு வந்ததுமே இயலுமானவரையில் உடனடியாகக் கழுவி வைத்து விட வேண்டும். இரண்டாவது முக்கியமான பணி எனக்கு நீ ஒத்துழைப்பதுதான். ஒவ்வொரு முறையும் மீன்கள், இறைச்சி வகைகள் போன்றவற்றைப் பொறித்து விட்டுக் கறிச்சட்டிகளை அதோ அந்தத் தொட்டிகளில் போட்டு விடுவேன். நீ கோப்பை கழுவும் சமயங்களில் அவ்வப்போது அந்தத் தொட்டியையும் கவனித்துக் கொள்ள வேண்டும். ஓரளவு நிறைந்ததுமே அவற்றைக் கழுவி வைத்தால் உனக்கும் வேலை இலகுவாகிவிடும். எனக்கும் பெரிய உதவியாகவிருக்கும். அடுத்த முக்கியமான பணியாக அவ்வப்போது அசுத்தமாகி விடும் சமையலறைத் தரையினைச் சுத்தம் செய்வது. சமையலறை மட்டுமல்ல, உணவகத்தின் தரையையும் கேட்கப்படும் பட்சத்தில் துப்புரவாக்கி விட வேண்டும். இறுதியாக இரவு உணவகம் மூடியதும், உணவகம் முழுவதையும் கூட்டித் துப்புரவாக்கி விட வேண்டும். குப்பைகளைக் கட்டி வெளொயில் எடுத்துச் சென்று வைத்து விட வேண்டும். இவ்வளவும்தான் உனது பிரதான நாளாந்தக் கடமைகள். வேலை சிறிது சிரமமானதுதான். ஆனால் அதனை இலகுவாக்குவது உனது கைகளில்தானுள்ளது”

மார்க்கின் விபரிப்பு இளங்கோவுக்குப் பிரமிப்பினைத் தந்தது. அவனது அதுவரையிலான வாழ்நாளில் அவன் உடல் உழைப்பினை வாழ்வுக்காகவென்று மேற்கொண்டதில்லை. இதுதான் முதலாவது தடவை அவ்விதம் மேற்கொள்ளப் போகின்றான். சிறு வயதிலிருந்தே அடிக்கடி வருத்தம் வந்து விடும் மெலிந்த உடல்வாகு அவனுடையது. உடல் பலகீனமாகிவிடும் சமயங்களிலெல்லாம் ஒருவிதமான மூட்டுவலியால் உபாதைப்படத் தொடங்கிவிடுவான். ஊரிலிருந்த காலகட்டத்தில் அவனது அம்மா தேங்காய் உரிப்பதற்குக் கூட அவனை அனுமதிக்க மாட்டாள். அவ்விதம் பொத்திப் பொத்தி அவனை வளர்த்திருந்தாள்.

அவனது மெளனத்தைக் கண்ட மார்க் கேட்டான்: “என்ன இலங்கா! பயந்து விட்டாயா? இதற்கு முன்பே உனக்கு இது போன்ற ஏதாவது அனுபவமிருக்கிறதா?”

இல்லையென்று கூறினால் ஒரேயடியாகக் அனுப்பி விட்டாலும் விடுவார்கள். எத்தனையோ நாட்கள் காத்திருந்து , ‘ஓடு மீன் ஓடி, உறு மீண் வருமளவும் வாடிக் காத்து நின்ற கொக்காக’ நின்று பெற்ற வேலையல்லவா. அவ்வளவு இலகுவில் நழுவ விட்டு விடலாமா? எனவே இளங்கோ பின்வருமாறு பதிலிறுத்தான்:

“பயமா! எனக்கா! இந்த வேலைக்கா! எனக்குப் இந்த வேலை பழைய ஞாபகங்களை நினைவூட்டி விட்டன” என்றான்.

“பழைய ஞாபகங்களா..!” என்று வியந்தான் மார்க்.

“முன்பு ஒருமுறை உன்னவர்களினொருவனின் கப்பலில் இது போன்ற வேலையினைச் செய்திருக்கின்றேன். ஏன் இலங்கையில் இருந்த காலகட்டத்தில் கூட என்னூர் சுபாஸ் கபேயில் இது போன்ற வேலைகளைச் செய்திருக்கின்றேன் (வாழ்க சுபாஸ் கபே என்று மனது வாழ்த்தியது). அந்த நாள் ஞாபகங்கள் வந்து விட்டன” என்றான்.

மார்க் சிரித்தபடியே “நீ சொல்வது சரிதான். பழசு எப்பொழுதுமே பொன்தான்” என்றவன் தனக்குள் ‘ஆள் பார்வைக்குத்தான் மெலிந்து, ஒல்லியாகவிருக்கின்றான். உண்மையில் இந்த விடயத்தில் பழமும் தின்று கொட்டையையும் போட்டவனாகவிருக்க வேண்டும். முகவன் பீற்றர் சரியானவனைத்தான் தேர்தெடுத்து அனுப்பியிருக்கின்றான். இவ்வளவு காலமும் கறிச்சட்டிக் கழுவ, கோப்பை கழுவவென்று இரண்டு பேரை வைத்துச் சிரமப்பட்டது போதும். அபபடியிருந்தே அந்தக் கள்ளன்களிருவரும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்டான்கள். நல்ல வேளை இவனுக்கு அந்த விடயம் தெரியாது. தெரிந்திருந்தால் உண்மையில் பயந்திருப்பான். இவனெப்படி இந்த இரண்டு வேலையையும் செய்கிறானென்று பார்ப்போம்’ என்றெண்ணிக் கொண்டான்.

இவை எதுபற்றியும் தெரியாத ‘இலங்கா’வென்கின்ற இளங்கோ பணிக்குரிய மேலங்கிகளை அணிந்து கோண்டு தன் பணியினை ஆரம்பித்தான்.

[தொடரும்]

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்