பெண்கள்

This entry is part [part not set] of 36 in the series 20070809_Issue

தாஜ்


என்.வி. சார், இந்த சிறுகதை ரொம்ப பழையதா?

சிறுகதையல்லமா, நாவல்! எழுதி பத்து வருஷத்திற்கு மேலாச்சு.

நிறையப் பக்கங்களை காணவில்லையே?

கிழிச்சுட்டேன். பிடிக்கலை.

இதை மட்டும் பாக்கி வைத்துவிட்டீர்கள்?

இந்தப் பகுதியை கிழிக்க மனசு வரலை. வைச்சுகிட்டேன். அதற்குப் பல காரணங்கள்!

ஒகே… ஓகே…! நீங்க கவிதையெல்லாம் எழுதிறீங்கல?

ம்…..

தொகுப்பு ஏதேனும் இருக்கிறதா? பார்க்கலாமா….?

உன் பெயர் என்ன சொன்னே…?

குழலி…

இதோ பார் குழலி… நீங்க என் எழுத்துக்களை ஆய்வு செய்ய வந்திருக்கிங்க, அச்சில் வந்த எழுத்துக்கள் போக அச்சில் வராத எழுத்துக்கள் என்று எழுதிய இந்த பேப்பர் கட்டையும் உங்க பார்வைக்கு எடுத்து வச்சிருக்கேன். என் கவிதைகளை பார்த்திங்க ன்னா சொல்லாம போய்டுவிங்க. கொஞ்ச வயசு பொண்ணா வேற இருக்கிங்க… அதைப் படிச்சி முடியை பிச்சிகிட்டீங்கன்னு வச்சிகிங்க அப்புறம் பார்க்க நல்லா இருக்க மாட்டிங்க! யாருக்கும் புரியலைங்கிறதுதான் என் கவிதைகளின் டோட்டல் ரிசல்ட்.

ரொம்ப ஹாஸ்யமா பேசுறீங்க சார்! சும்மா… அதையும் படிச்சி வைக்கிறது நல்லதுன்னு….

நல்லதுதான்… ஒப்புக்கிறேன். அதைப் படிக்கிறப்போ… குறைந்த பட்சம் சில கவிதைகளுக்காவது அர்த்தம் கேட்பிங்க…?

சம் டைம்.

ஒரு கவிதைக்கு, சம்பந்தப்பட்ட கவிஞனை அர்த்தம் சொல்ல வைக்கிறதைவிட; அவனுக்கு வேறு கொடுமை இருக்க முடியாது. உங்க ஆய்வை எனது நாவல், சிறுகதைத் தொகுப்புகளோடு நிறுத்திக்க முயற்சிப் பண்ணுறதுதான்.. நம்ம இரண்டு பேர்களு
க்குமே சேஃப்!

எஸ்… நீங்கள் சொல்றது சரி….

பாத்ரூமுக்குள் போய் கதவைத் தாழிட்டவள், தனது ஒவ்வொரு ஆடைகளாக கழற்றிச் சுவற்றுக் கொக்கியில் மாட்டினாள். குளிப் பதற்கு முன் பக்கச் சுவற்றில் பதித்துள்ள நிலைக்கண்ணாடியில் தனது உடம்பை அவள் பார்ப்பதுண்டு. இன்றைக்கு நின்று நிதானித்து கைகளால் குழல் கூந்தலைக் கலைத்து விட்டு ரசித்தாள். உடம்பை நீவி மஸாஜ் செய்தபடி அங்குல அங்குலமாக அளந்தாள். முகம் ஓ.கே., ரேகை நெளியும் நெற்றி, கூரிய மூக்கு, திருத்தப்பட்ட புருவம், அலைபாயும் கண்கள், அதில் தொற்றித் தெறிக்கும் மின்னல், இதழில் விரியும் புன்னகை, உள்ளே முகம் காட்டும் முத்துக்கள்… அவள் சிரித்துக் கொண்டே… இன்னும் கீழே வந்தாள். பச்சை நரம்பு காட்டும் கழுத்து, சுரத்தேறிய புஜம், நீள கைகள், மார்பின் திரட்சிகள், அதை வருடும் மென்மை விரல்கள், வற்றிய வயிறு, மையம் காட்டும் சுண்டுவிரல் பதியும் குழி மச்சம், இரண்டு பிருஷ்டங்களது திமிசின் மினு ப்பு, ரோமப் புற்களின் அலசலில் மறையும் பீடம்…. அத்தனையும் அச்சு மாறாமல் நேற்றைக்குப் பார்த்த மாதிரியேதான் இருக்கி றது. சரியாகச் சொன்னால் இன்னும் வனப்பின் எழில் கூடித்தான் தெரிகிறது. நான் இழந்து நிற்பதாக அம்மா எதை குத்திக் காட் டிக் கொண்டே இருக்கிறாள்? நேற்று வசந்தன் வீட்டுக்கு வந்தான். நான் ஹலோ கூட சொல்லவில்லை. அம்மாவிடம் வத்தி வைத்திருப்பான், வைக்கட்டுமே. அவனை என் தலையில்கட்ட இந்த அம்மா ஏன் இப்படி நிற்கிறாள்! அவன் எம்.எஸ்.சி. மேக் ஸாம்.. புண்ணாக்கு! நான்.. ஐஸ்… ஐஸ்வரியா… அப்ஸரஸ்… ஐஸ்வரியா!

வசந்தன் என் முதல் காதலன் என்பதை எப்பவும் நான் மறுப்பவள் இல்லை. பழகினேன்.. பிடிக்கவில்லை. நான் ரித்திக்ரோஷனை
பார்க்கனும் என்றால், அவன் விஜயகாந்தை பார்க்க வா என்கிறான். உலகத்தில் இப்படி ஒரு கொடுமையை யாராவது கேள்விப் பட்டதுண்டா? அந்த நிமிஷமே அவனை எதிரே நிற்க வைத்து, கையெடுத்துக் கும்பிட்டேன். ‘ஏன்’ என்றான். ‘போய் வா’ என்று விட்டேன். விமலராஜோடு ரித்திக்ரோஷ்னைப் பார்க்கப் போனால், அவன் பல்லிளித்தபடி இஷா தியோலை பார்த்துக் கொண்டிரு க்கிறான். அய்யா சாமி உனக்கும் ஒரு கும்பிடு என்றுவிட்டேன். பிறகு…மகேஷ், கணேஷ், காஜா, அருள் பாண்டி, தமிழ்ச் செல் வன் என்று எல்லோருக்கும் வழியனுப்பும் படலம் நடத்தி.. ஏக ‘டயர்ட்’ ஆன நாளில், என் கண்டெடுப்புதான் சுப்புடு! எங்க அலுவலகத்தில் அனைவராலும் அறியப்படும் ‘பேட்பாய்’! இப்போ அவன்தான் என் பெஸ்ட் ஃபிரண்ட். நடவென்றால் ஓடுகி றான்… நில் என்றால் படுத்துவிடுகிறான். ரொம்பவும் பிடித்திருக்கு. செல்லப் பிராணி வளர்க்காத குறையும் இன்றைக்கு இல்லை! அவனுக்கு நான் இன்னும் சுகந்திரம் கொடுக்கவில்லை!

என்.வி.சார்! இதான் அந்த கிழிபட்ட நாவலின் ஆரம்பமா? என்ன இப்படி செக்ஸியா… எழுதியிருக்கிங்க?

எங்கே… ஓ… இதுவா….!! நான் எழுதினதுதான். ஒரு வாரப்பத்திரிகையின் தீபாவளி மலருக்குக்காக எழுதியது. எழுதும்போதே தெரிந்தது இந்த மாதிரியெல்லாம் நம்மால் எழுதிட முடியாதுன்னு! கிழிச்சுட்டேன். இந்த பக்கம் மட்டும் எப்படியோ தப்பி…… ஸாரிம்மா !

பரவாயில்லை… இத்தனை கிளாமரா நீங்க எழுதி நான் படிச்சதில்லை என்கிற ‘ஷாக்’ மட்டும்தான்…

மறுபடியும் ஸாரி… ரொம்ப அதிர்ச்சியா ஆக்கிட்டேன் இல்லே… இப்படித்தான் பத்திரிகைகாரர்கள் எழுதி கேட்கிறார்கள். வாசகர் களில் பெரும்பாலோர் இந்த மாதிரியான கதைகளைத்தான் படிக்க விரும்புறதா அவர்கள் சொல்றாங்க!

இட்ஸ் ஓகே.. இந்த கதைக்கு என்ன பெயர் வைத்திருந்திங்க…

அது முடிஞ்சி போன விஷயமில்லையோ?

இல்லெ… ஒரு க்யூரியாஸிட்டி…

‘நவீன பதுமைகள்’

நைஸ் நேம்…

அதைக் கடாசிட்டு, மற்றதைப் படி.

இங்கே நான் நிம்மதியா இருக்கேன். இந்த குணசீலம் உன் பார்வையில் பட்டதோ இல்லையோ எனக்குத் தெரியாது. அடிப்படை யில் இது அழகான கிராமம். ஊரைச் சுற்றி பச்சைப் பசுமைகளின் ஆதிக்கம் அதிகம். இங்கு இன்னும் வெட்டப்படாத, வளர்ந்து
கிளைப் பரப்பி நிற்கும் தடித்த மரங்கள் நூற்றாண்டு காலப் பழமை கொண்டது. ஆங்காங்கே தென்படும் இந்த மரங்கள் தங்கள்
கரங்களால் ஊரையே நிழலில் வைத்திருக்கிறது. யோசிக்கிறபோது இந்த கிராமத்தின் இன்றைய வசீகரம், நாலைந்து தலைமுறை க்கு முன் இன்னும் ரம்மியமாக இருந்திருக்க வேண்டும்.

நான் இங்கே மன நோயாளியாக வந்து சேர்ந்தபோது, பிற மனநோயாளிகளேடு கழித்த முதல் மூன்று நாட்கள் மிகவும் வித்தியாச மானது. அவர்களது கூக்குரல் பல நேரம் அச்சத்தைத் தரும். அவர்களின் சேட்டைகளுக்குப் பஞ்சமே இல்லை. தனக்குத்தானே விவாதம் நடத்துவது, உடலை அஷ்டகோணத்தில் வளைப்பது, விடியற்காலை நேரங்களில் மிகவும் தேர்ந்த மனிதர்கள் மாதிரி பேசுவது. இப்படி எல்லாமே இங்கு எனக்கு புதிய அனுபவமாகவே இருந்தது.

அவன்தான் என்னை இங்கே கொண்டுவந்து, இந்த அமைப்பின் நிர்வாகியிடம் ஒப்படைத்தான். நான் யாரை அவன் என்கிறேன்
என்பதை அறிவாய் என்று நினைக்கிறேன். இங்கே நிர்வாகி ஒருவன் என்னை இழுத்துப் போய் கோவில் புறத் திண்ணை ஒன்றில் அமரசெய்து காலில் விலங்கிட்டான். நான் பிரமை கொண்டவள் மாதிரி புதிய இடத்தையும், பிற மனநேயாளிகளையும் வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.

மூன்றாம் நாள் காலை இரண்டு சாமியார்கள் வந்தார்கள். எல்லா மனநேயாகளுக்கும் துளசி தீர்த்தத்தை அவர்களது தலைகளில்
தெளித்துக் கொண்டே என்னிடமும் வந்தார்கள். நான் தலையைக் குனிந்துக் கொண்டேன். ‘பெண்ணே’ என்றழைக்க நிமிர்ந்து பார் த்தேன். அவர்கள் என் கண்களை உற்றுப் பார்த்துவிட்டு பணியாளை உரத்த குரலில் அழைத்தார்கள். வயதான பெரியவர் ஒருவர் ஓடிவந்தார். ‘யார் இந்தப்பெண்ணுக்கு விலங்கிட்டது?’என்று பெரிய சாமியார் கேட்கவும், ஓடிவந்தவர் மிரண்டு போனார். ‘முதலில் அந்தப்பெண்ணின் விலங்களை கழட்டு’ -சாமியார் உத்தரவுபோட, என் விலங்குகள் கழட்டப்பட்டன. ‘பெண்ணே எங்களுடன் வா’ என்று அழைத்துக் கொண்டு கோவில் மண்டபத்துக்குப் போனார்கள்.

உன் பெயர் என்ன..?

மேகலா…

எத்தனை நாளாகிறது இங்கே வந்து?

மூன்று நாட்களாகிறது.

யார் உன்னை வஞ்சித்தது?

என் கணவர்..!

ஏன் அவனை காட்டிக் கொடுக்கவில்லை?”

எனக்கு அவரிடமிருந்து ஏதோ ஒரு வகையில் விடுதலை தேவையாக இருந்தது, அதனால்தான்…. சாமி.

சாமியார் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார். கோவில் நிர்வாகிகள் இரண்டுபேர் ஓடிவந்து சாமியாருக்கு வணக்கம் கூறி,
ஒதுங்கி நின்றார்கள்.

‘பிரமை பிடித்திருப்பவர்களுக்கும், பிடிக்காதவர்களுக்கும் வித்தியாசப்படுத்திப் பார்க்கத் தெரியாதா உங்களுக்கு?’ என்று பெரிய சாமி குரல் உயர்த்தவும் நிர்வாகிகள் இருவரும் மிரண்டுவிட்டனர். ‘மூன்று நாட்கள் இந்தப் பெண் பட்ட வேதனை இவளது கணவனை மட்டுமல்ல உங்களையும் சும்மா விடாது!’ என்று அவர்களிடம் சொல்லும் முகமாக வேதனைப்பட்டார். பின்னர் என் பக்கம் திரும்பி, ‘தவறு நடந்துவிட்டது.. உன் கணவன் கோவிலுக்கு நிறைய நன்கொடை தந்திருப்பான், அதைவைத்து… இவர்கள் ஏமாந்திருக்கக் கூடும். பெண்ணே நீ இன்றே ஊர் திரும்பலாம்’ என்றார்.

கைகளைக் குவித்தபடி, ‘சாமி… நான் ஊர் போக விரும்பவில்லை. நீங்கள் அனுமதித்தால் இங்கேயே தங்கிவிடுகிறேன். அவர் என்னை இங்கே கொண்டுவந்து தள்ளினார் என்றாலும்… இந்த மண் எனக்கு இஷ்டமானது. என் தாய் இந்த மண்ணில்தான் இற ந்து போனாள். இந்த வளாகத்தில் என்னை பணி செய்ய அனுமதித்தால் மன நிறைவோடு இந்த மனநோயாளிகளுக்கு சேவை செய்யச் சித்தமாக இருக்கிறேன். என் தாயின் ஆன்மா இங்கேதான் எங்கோ இருக்கிறது. என் காலமும் இங்கேயே கழியட்டும்..’ என்றேன். என்னைப் பார்த்து சிரித்தவராக, ‘இந்தப் பெண்ணிற்கு தங்க எல்லா வசதிகளையும் செய்து கொடுங்கள்’ என்று உத்த ரவு பிறப்பித்தார்! என்னையும் ஆசீர்வதித்தார்.

என்.வி.சார் இதனுடைய தொடர்ச்சி…. காணோமே..?

நீ எதைப்படித்துக் கொண்டிருக்கிறாய்? தனிப்பக்கங்களாக கிடப்பதை எல்லாம் விடு. தொடர்ச்சியிருக்க வாய்ப்பில்லை. கொஞ்சம் பக்கங்களை ‘பன்ஞ்’ செய்து வைத்திருக்கிறேன், அதை மட்டும் படிக்க எடுத்துக் கொள்… போதும்.

சாரி… சார்..

அன்பு அனுவுக்கு…

இந்தக் கடிதம் உனக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியையும், இன்னொரு பக்கம் சஞ்சலத்தையும் தரலாம். எல்லாவற்றையும் சுவீகரிக்கும்
மனம் உன்னுடையது. நான் அறிவேன். என்னை நீ தேடியிருக்கக் கூடும். நான்தான் ஒளிந்துக்கொண்டு விட்டேன்… இல்லையா? தேடித்தேடி என் இருப்பை அறிந்திருக்கவும் கூடும். இந்தக் கடிதம் என்னைக் குறித்த இன்னுமோர் கூடுதல் சாட்சி.

உன்னிடத்தில் நான் சொல்லிக் கொள்ளாமல் வந்துவிட்டதும், இப்படி இங்கேயே தங்கிவிட்டதும் உனக்கு வியப்பைத் தந்திருக்கும். இவள் ஒரு கடிதமேனும் எழுதுவதற்கு என்ன? என்று நீ அதிகமும் வெகுண்டிருப்பாய். ஆனால் அந்தக் கோபம் நிச்சயம் நீடித் திருக்க வாய்ப்பில்லை. என்னைப் புரிந்து கொண்டவர்களில் நீயும் ஒருத்தி. உன்னால் என் மீது ஓர் எல்லையைத் தாண்டி கோபப் பட முடியாது. முட்டாள், பைத்தியக்காரி என்று திட்டியிருப்பாய். வாஸ்தவம்தான். நான் அப்படி என்றுதான் முக்தி அடைந்திருக் கிறேன். அப்படி இல்லையென்றால் இப்படி இந்த விடுதலைக் காற்றை சுவாசிப்பது என்பதுதான் ஏது?

இந்தக் கடிதம் கண்டவுடன் நீ புறப்பட்டு வர முயல்வாய். தெரியும். என் இந்த இருப்பு கடல்தாண்டிய சங்கதியல்ல! கைக்கெட்டும் தூரத்தில்தானே இருக்கிறேன். இந்தக் கடிதம் கிடைக்கும் பட்சம் நீ மனக் கிலேசத்திற்கு ஆளாகக் கூடும். இதை எழுதி முடித்த பிறகு தபாலில் சேர்ப்பேனா… எனக்குத் தெரியவில்லை. கேரளாவில் இருந்து வெளிவரும் ஆங்கில இதழான ‘தி வீக் எண்ட்’ல் நீ எழுதிய கட்டுரைத் தொடரான ‘The Third face of Tamil Ladies’ வாசிக்கக் கிடைத்தது. அதை வாசிக்கத் தொடங்கிய நாளிலிரு ந்து,உனக்கு எழுதணும் என்றுதான் மனசு கிடந்து அரற்றியது. எழுதிக்கொண்டிருக்கிறேன்.

இப்படி ஒரு கட்டுரையை இதற்கு முன் உன்னிடத்தில் நான் வாசித்ததே இல்லை! இந்தக் கட்டுரைக்காக நீ கொண்டிருக்கிற முயற்சி, முன் எப்பவும் நீ முயலாதது! வார்த்தைக்கு வார்த்தை மிளிர்ந்த அதன் பரிணமிப்பு கண்டு பிரமித்துதான் போனேன்! வாசி வாசிக்க வாசிக்க, அதை நானே எழுதியது மாதிரி சந்தோஷம்! சத்தியத்தில் இப்படி ஒரு கட்டுரை நான் எழுதனும் எனில் இன்னொரு பிறவி எடுக்க வேண்டும்.

‘தி வீக் எண்ட்’ இதழில், உன் கட்டுரை வந்த ஆறு வாரமும் முதல் வாசகியாய் என்னை நினைத்து அதைப் படித்தேன். அதனூ டான செய்திகளில் சிந்தனை வயப்பட்டவளாய் அதை அசைபோடுவதிலேயே நேரங்களைச் செலவழித்தேன். கட்டுரை தந்த அதி ர்வுகள் கொஞ்சமல்ல!

உன் கட்டுரையை வாசித்ததில் எனக்குச் சில இழப்புகள் ஏற்பட்டது. அதை இங்கே சொல்லலாம். உன்னத பயணத்திற்கென்று…
நாள், கிழமை, நேரம் எல்லாமும் குறித்து மிகச் சரியாக திட்டமிட்டிருந்தேன். இந்தப் பயணத்திற்கான ஆயத்த தினத்தில்தான்
‘தி வீக் எண்ட்’ல் உன் கட்டுரை எதிர்பட்டது. பயணமும் தடைப்பட்டது. கட்டுரையின் ஆறுவார வாசிப்புக்குப் பிறகு பயணம்
குறித்த நினைவு எழவில்லை. மாறாய், எனது மூன்றாவதுமுகத்தை எப்படியேனும் கண்டெடுத்துவிட வேண்டும் என்கிற எண்ணமே விஞ்சி நின்றது. என் பயணம் தடைப்பட்டதை இழப்பென்று சொன்னேன். நிச்சயம்… இழப்புதானா? காலம்தான் சொல்லனும்.

தீர மழை கொட்டி ஓய்ந்த ஒரு மாலைப் பொழுதில், இளஞ்சூட்டில் வெண்ணீர் வைத்துக் குளித்தேன். எனக்குப் பிடித்த வண்ணத் தில் பிரத்யேகமாக வாங்கி வைத்திருந்த ஆடையை அணிந்துக் கொண்டேன். கருமேகங்களால், மீண்டும் பொழுது இருளத் துவங் கியது. வெளியே, வீட்டை ஒட்டிய தோட்டம், இலேசான வெளிச்சப் பொழுதில் பார்க்க ரம்மியமாக இருந்தது. மழையால் கழுவி விடப்பட்ட மண்தரை மினுத்தது. தோட்டத்தில் இறங்கி கொஞ்ச தூரம் காலார நடந்தேன். வானத்தின் தூர மின்னல் கீற்றுகள் பரவ சப்படுத்தியது. வேலியில் அப்பொழுதுதான் பூத்த வெள்ளைப் பூக்கள்… அச்சு அச்சாய் தலையசைத்தது. கண் கொட்டாமல் பார்த் தேன். பூக்களே… வெள்ளைப் பூக்களே நாளைக்கு நீங்கள் எல்லாம் எப்படி இருப்பீர்கள்?

வீட்டைப் பூட்டிக்கொண்டு பக்கத்து டவுனுக்கு போகப் புறப்பட்டேன். பஸ்பிடிக்க ரோட்டிற்கு வந்தபோது, மின்சாரம் தடைப் பட் டிருந்தது. இரு புறமும் ஏழெட்டுக் கடைகள். மண்ணெண்னை விளக்கில் அந்தச் சின்ன கடைகளின் முகங்கள் வித்தியாசமாகத்
தெரிந்தது. பக்கத்து டவுனுக்குப் போய் சேர்ந்தபோது அங்கே மின்சாரம் இருந்தது. மழைக்காலங்களில் கடைகளில் ஒரு சேர மின்விளக்குகள் எரிகிறபோது பார்க்க மஹா கிளர்ச்சி! ரசித்துக் கொண்டே நான் தேர்வு செய்து வைத்திருக்கும் ரெஸ்டாரெண்ட்க் குள் போய், பிடித்ததை ஆர்டர் செய்தேன். ஊறவைத்து அரைத்த தானியங்களிலான அடை இங்கு ரொம்பப்பிடிக்கும். கூடுதலாக மிளகை உடைத்துப் போட்டிருப்பார்கள். வாசனை வித்தியாசமாக இருக்கும். காஃபியும் கூட இங்கு நன்றாக இருக்கும். பில்டர் காஃபி. சிக்கரி கலக்காதது என்கிறார்கள். வாஸ்தவமாக இருக்க வாய்ப்பில்லை. அத்தனையும் ருசித்துச் சாப்பிட்டேன்.

ரெஸ்டாரெண்டை விட்டு வெளியே வந்தபோது, வாயிலில் கையேந்தியபடி ஓர் வயதான அம்மா! பர்ஸைத் திறந்து புதிய நூறு ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்துவிட்டு அந்த அம்மாவையே பார்த்தேன். மிரட்சியும் மகிழ்ச்சியுமாய் இரண்டு கைகளையும் வானை நோக்கி உயர்த்தி கும்பிட்டு ‘நீ நூறு வயசு வாழணும்’ என் திரும்பத் திரும்ப வாழ்த்தினாள். சிரித்தேன். வெகு நாட்களாக மறந்து போயிருந்த சிரிப்பு அது.

வீட்டிற்குப் போய் இஷ்டமான எழுத்தாளர்களின் எழுத்துகளை நடு நிசி வரைக்கும் படித்துவிட்டு, தூங்கப் போய்விட வேண்டும்
என்பது அட்டவணைப்படியான அந்த இரவின் அடுத்த நிகழ்வு. மாலையிலிருந்து தடங்கலே இல்லாமல் ஒவ்வொன்றாய் ‘டிக்’ செய்து கொண்டே வருவது பிடித்திருந்தது. சரியாக அடிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு எழ மனம் சந்தோஷத்தில் தழைத்தது. தூங்கப்போவதற்கு முன்னால் ஒரு முழு வெள்ளைத்தாளில் மறக்காமல் நாலே நாலுவரி எழுத வேண் டும். ‘என் பயணத்தை நான்தான் தேர்வு செய்தேன். இது யாருடைய நிர்பந்தமும் அல்ல. மகிழ்ச்சியான மன நிலையில்தான் இதை எழுதுகிறேன். புறப்படுகிறேன். நன்றி!’ மிக துல்லியமாய் அந்த நான்கு வரிகளும் மனதில் வந்து மோதி, ‘சரியா?’ என்றது. மனதி ற்குள் படித்துப் பார்த்தேன். விசேஷமாகவே இருந்தது.

அடுத்த வீதியில் உள்ள ஒரு புத்தகக் கடைக்குப்போய் கண்ணோட்டமிட்டபடி மேய்ந்தேன். சின்ன அளவில் ஏதேனும் நல்ல புத் தகம் போதும். பிரியமான எழுத்தாளரின் சமீபகால வெளியீடு ஏதேனும் கிட்டினால்…. பாக்கியம். உள்ளே வட்டம் அடித்து விட்டு உதட்டைப் பிதுக்கியபடி வாசல் அருகில் வந்தபோது, முகப்பில் தொங்கியது அந்த வாரத்து ‘தி வீக் எண்ட்!’ அட்டையில் நீ! உன் கட்டுரை உள்ளே தொடங்கியிருப்பதற்கான குறிப்பும், உன் சிரித்த முகமும்! சந்தோசத்திற்கு அளவே இல்லை. உன்னை அப்படியே உருவி மார்போடு அணைத்துக் கொண்டேன்.

தூங்கப்போவதற்கு முன் வழக்கமாக சாப்பிடும் தூக்க மாத்திரைகள் வீட்டில் இருக்கிறதா? அல்லது வாங்க வேண்டுமா? என்னை நான் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டேன். அந்தப் பாட்டிலில் முக்கால் அளவுக்கு மாத்திரைகள் இருப்பதான நினைவை உறுதி செய்துக் கொண்டேன். எல்லாம் சின்னச் சின்ன மாத்திரைகள். தினமும் ஒரு மாத்திரை. நன்றாகத் தூக்கம் வரும். முக்கால் பாட் டில் மாத்திரைகளையும் ஒரு உள்ளங்கையில் தேக்கிவிடலாம். துவர்ப்போ கசப்போ தெரியாத ஸ்வீட் மாத்திரைகள். உட்கொள்ள விரும்பும் வாசம் வேறு! இன்றைக்கு ஒன்று என்பதற்கு பதிலாக எல்லாம். இன்னும் நன்றாகத் தூக்கம் வரும். நீண்ட நெடியத் தூக்கம்! இந்தப் பிரபஞ்சம் உள்ளளவும் நீளும் நெடிய தூக்கம்! ஆனால்…. நடந்ததோ வேறு!

அன்று இரவு தூங்கப் போவதற்கு முன் திட்டமிட்டிருந்த என் பயணத்திற்கு பெரிதாக எதுவும் காரணமில்லை, போதும் என்கிற
எண்ணம்தான். என்ன ஆனது இப்போ… இரவு வெகு நேரமாகியும் உன் கட்டுரையையே திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டும்,
நீ உயிர் தப்பிய நிமிடங்களை நினைத்து நினைத்து அதிர்ந்துக் கொண்டும், உணர்ச்சிமயமான உன் ஆங்கில நடையில் கிறங்கிக் கொண்டும்… வழக்கமான தூக்கமும் கெட்டதுதான் மிச்சம். அட்டவணைப்படி என் பயணம் இரண்டாம் கட்டத்தை அடைந்திருக்க வேண்டும். எப்பவும் மாதிரி தூங்கியிருந்தால் கூட மூன்றாம் ஜாமம் ஆகியிருக்கும். இப்பொழுது என் நினைவெல்லாம் உனது
அடுத்தவார கட்டுரையைப் பற்றித்தான். எப்பொழுது வரும் அந்த அடுத்த வாரம்?

டவுனில் இருந்து பஸ் பிடித்து இருப்பிடம் திரும்பிய சில நிமிடங்களுக்கெல்லாம்… என் புனித இரவு கலையத் துவங்கி விட்டது. நான் விரும்பிப் படிக்க நினைத்த எழுத்து உன்னுடையதாக அமைந்து விட்டதில்தான்… எத்தனை மகிழ்ச்சி! எனது பயணத் தைக் கேள்விப்பட்ட மாதிரி, திடுமென நீ, இப்பொழுது என் வட்டத்திற்குள் வந்து, இப்படி என் கையில் கட்டுரையாக அமர்ந்திருப்பது நான் எதிர்பாராத ஒன்று! ‘தி வீக் எண்ட்’ இதழைப் பிரித்து உனது ‘Third face of Tamil Ladies’ கட்டுரையை வாசிக்க ஆரம்பித் தேன்.

தமிழீழத்தில் நடந்தேறிக்கொண்டிருக்கும் ராணுவ அத்துமீறல்களையும், அதன் அரசியல் பின்னணியையும் விவரித்துவிட்டு, தமிழீ ழத்து மக்களின் கனவுகள் சரியா? தவறா? என்பதை காலம்தான் கூறும் என்கிற உனது அபிப்ராயத்தையும் எழுதி இருக்கிறாய். தமிழ்ப் போராளிகளில் ஓர் அங்கமான பெண் போராளிகளின் போர் முனை மோதல்களை, அவர்களது வெற்றிகளை, உயிர்த்தி யாகங்களை, வல்லிய மனோதிடத்தை போற்றும் முகமாக அறிமுகக் குறிப்புகளைத் தந்துவிட்டு, அவர்களின் விசேசமான மூன் றாவது முகத்தை ஆய்வு செய்வதுதான் உன் கட்டுரையின் நோக்கம் என்றும், ‘உலகப் பெண்கள்’ என்கிற நோக்கிலும், ‘பெண்ணி யத்தை போற்றும்’ பாங்கிலும் இப்படி பல சவாலான பேட்டிகளை எடுத்துத் தொகுத்து வழங்கிவரும் பத்திரிக்கையாளியான என்னிடம் ‘உலக மகளிர் அமைப்புகள்’ பலவும் கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்பணியை மேற்கொண்டேன் என்றிருக்கிறாய்! சத்தியத்தில் மிகப் பெரிய பணிதான் இது.

இந்தக் கட்டுரைக்காக, கடந்த ஒரு வருட காலமும் ஆயத்தப் பணிகள் செய்ய வேண்டியிருந்ததையும், இந்தப் பயணம் சென்று திரும்பும்வரை பிற யாரிடமும் அது குறித்து சொல்லாது; உற்றத் தோழியிடம் கூட இந்த செய்தியை பகிர்ந்து கொள்ள முடியாது போனது, மன உளைச்சல் என்று அத்தனையையும் அந்த அறிமுகக் குறிப்பில் தெளிவு படுத்தியிருக்கிறாய். நீ சுட்டி இருக்கும் அந்த ‘உற்ற தோழி’ அநேகமாக நானாக இருக்கலாம். என் யூகம் சரியாக இருக்கும் பட்சம்.., என்னை அதிகத்திற்கு விசேஷப் படுத்தி இருக்கிறாய்!

கட்டுரையின் மணிச் சித்திரத் தாழைத் திறக்கிறாய். இந்தியாவை விட்டு யாழ் தீபகற்பத்திற்கு எங்கிருந்து எந்த வழியாகப் புறப் பட்டாய் என்பதைக் கூறாமல், ஓர் அமாவாசை இருளில், நான்கு இஞ்ஜின்கள் பூட்டப்பட்ட ‘ஃபைபர்’ படகில் கடலைக் கிழித்துக் கொண்டு சென்றதையும், தமிழீழத்தை நெருங்கும் தறுவாயில் போராளிகளின் படகுகள் சில உன்னை பாதுகாப்பாக எதிர்கொண்டு அழைத்துச் சென்றதையும் திகில்கூடிய யதார்த்தத்தில் எழுதியிருக்கிறாய். தூரத்தே ராணுவ உளவுப் பிரிவைச் சேர்ந்த ஒரு பெரிய படகில் இருந்து ‘செல்’கள் எங்களை நோக்கி பாய்ந்து வந்தபடி கடலில் விழுந்து கொண்டே இருந்தது என் நீ எழுதிக் கொண்டே போகும்போது நான் இங்கே மூச்சற்றுப் போனேன்.

போராளிப் பெண் ஒருத்தி சக்திமிக்க குண்டுகளுடன் கடலில் குதித்தவுடன், ஏதோ விபரீதம் நடக்கப் போவதாக நீ பதட்டப் பட்டுக் கொண்டிருக்கையில் அந்தப் பெரிய ராணுவப்படகு, பயங்கரமான வெடிச் சப்தத்துடன் விண்ணுக்குத் தாவி நெருப்புக் கோள மாய் கடல் பரப்பில் விழுவதைக் கண்டு, நீ உறைந்துபோனதாக எழுதியிருக்கிறாய். நீ ரொம்பவும் தைரியசாலி. தெரியுமெனக்கு. அதனால்தான் உறைந்ததோடு நிறுத்திக் கொண்டாய்! உன்னிடத்தில் நானாக இருக்கும் பட்சம்… அந்த அதிர்ச்சியில் இரண்டு தரம் இறந்திருப்பேன். கட்டுரை தொடரும்…… என்று போட்டுவிட்டார்கள். தமிழ்ப் பெண்களின் மூன்றாவது முகத்தைக் காண முயன்ற உன் கட்டுரையில் வெளிப்பட்டிருக்கும் உன்னுடைய மூன்றாவது முகமும் சாதாரணது அல்ல!

படித்த வரை ரொம்ப அற்புதமா போய்க்கிட்டு இருக்கு…. சார்…

நன்றி… மா..

மீதத்தை நாளைக்கு வந்து படிச்சு, குறிப்பெடுத்துக்கிறேனே…

வெரி குட்! எனக்கும் கூட கொஞ்சம் வேலை இருக்கு….

படிச்சதுலே, பக்கங்கள் ஒண்ணு ரெண்டு மாறியிருக்கிறதா… தோணுது.

இருக்கும்! பரவாயில்லை! எல்லாமும் என் எழுத்துகள்தானே…. அடிப்படையில் வாசகர்கள் எழுத்தை படிக்கிறவங்கதானே!

இந்த கதைக்கு என்ன பெயர்?

என்ன பெயர் வைக்கலாம் என்று நீயே சொல்.

‘தமிழ்ப் பெண்களின் மூன்றாவது முகம்!’ என்கிற பெயரையே வைத்துவிடலாமே சார்.

வைக்கலாம்… அதற்கு அனுவின் பர்மிஷன் வேண்டுமே…

ஓ…. சம்திங் ரைட்… இதை எழுதி எத்தனை வருஷம் ஆச்சுன்னு சொன்னீங்க?

பத்து வருஷம்.

இப்போ 2007, பத்து வருஷம் போச்சுன்னா.. 1997.., ‘பெண்கள் 1997’

என்னவோ மாதிரி இருக்கே…

‘பெண்கள்!’

ம்… ‘பெண்கள்!’…. வெரி குட்!

என்.வி.சார்…, ஒரு ரிக்கொஸ்ட்…. ‘நவீன பதுமைகள்’ வேறு காப்பி ஏதேனும் இருந்தா தேடிப் பாருங்களேன்.

நம்புங்க… குழலி… நோ மோர்.

****************
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

தாஜ்

தாஜ்

பெண்கள்

This entry is part [part not set] of 46 in the series 20040129_Issue

பவளமணி பிரகாசம்


என் உள்ளம் கவர்ந்திடல்
எளிதென்றோ நீயும்
மனக்கோட்டை கட்டுகிறாய் ?
என் மனமெனும் கோட்டையோ
கல் போன்றது, கதவு திறவாது,
சுற்றிலும் ஆழமாய் ஓர் அகழி
அதில் நீந்தும் கொடிய முதலை
மந்திரம் தந்திரம் நீ செய்தாலும்
வீர தீர சாகசம் பல புரிந்தாலும்
கொஞ்சிக் கெஞ்சி நின்றாலும்
வஞ்சியின் கோட்டைக்குள் வந்திட
நெஞ்சம் நெகிழ்ந்திட வேணுமே-
என்றே அன்று நங்கையர் உறுதியாய்
இருந்தபோதே வென்ற வீரர்தாம்
விரைந்தே சென்றனர் வேறிடம் நோக்கி.
அந்தோ! இன்றோ தூண்டில் மீன்கள்
ஆயினர் பெண்கள் எனும் பேதைகள்
விரட்டி வேட்டையாட தேவையின்றி
விரித்த வலையில் வீழும் மான்கள்
வசதிகள் மீதே கவனம்
அலையாய் எழும் சலனம்
பாதை மாறிய பாவைகள்
பாழும் கிணற்றில் பூவைகள்
தேகம் தாண்டிய தேவைகள்
இல்லா இவை பாலைகள்
எங்கே கற்பக சோலைகள் ?
——————————————————————————
pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்

பெண்கள்….

This entry is part [part not set] of 8 in the series 20000716_Issue

Y.S.உமா, பிரேமா பாஸ்கோ,பிஷாரா, கிரிஜா வேணுகோபால், ஓவியா


கலாச்சாரம் – சில கருத்துக்கள் – சில எதிர்வினைகள்

பெண்கள் வேகமாய் மாறி வருகிறார்கள். பெண் விடுதலை என்கிற முகமூடிகலைப் போட்டுக்கொண்டு இன்னும் ரொம்பநாளைக்கு ஆண்கள் கோலோச்சமுடியாது. வள்ளுவனிலிருந்து லோக்கல் கவிஞர்கள் வரை பெண்கள் கேள்விகளை எழுப்புகிறார்கள். முகமூடிகள் கிழிபடுகின்றன. இளங்கோவடிகளுக்கு மூச்சு திணறுகிறது. நவீன சமூகம் இவர்களின் – கல்லறைக்குப் பூப்போடவும் தயாராக இல்லை என்பதில் நம்பிக்கையும் – மகிழ்ச்சியும் உண்டாகிறது. பெண்களின் மனம் ஒரு இயக்கமாய் வளர்ந்திருக்கிறது. பாட்டிகளைப் போல பேத்திகளால் தங்கள் சிறைகளைப் புதுப்பித்துக் கொண்டு வாழ முடியவில்லை. காலம் எல்லா குப்பைகளையும் தீவிரமாக அள்ளிச் சாப்பிடத் தொடங்கியிருக்கிறது.

பெண்கள் தங்கள் ஆளுமைகளைப் பற்றி யோசிக்கிறார்கள். புராதன மனம் – நவீன மனத்தோடு போட்டி போடமுடியாமல் சு.சமுத்திரங்களின் பேட்டிகளிலும் அப்துல்ரகுமானின் கூடுகள் துறக்கும் பறவைகள் கவிதைகளிலும் ஆதீனங்களின் ஆசிரமங்களிலும் பெரும்பாலான தமிழ் சினிமாக்களிலும் முட்டிக் கொண்டு சாகிறது.

இங்கே இனி எழுதுகிறவனென்ன – சுவாசிக்கிறவன் கூட பெண்கள் பற்றி பிரக்ஞையற்றிருந்தால் கண்டுகொள்ளப்படுவான். எவ்வளவு காலம் கடந்திருக்கிறது. இந்தக் கேவலம் – எவன் பொண்ணுக்கான எதிரியென்றே புலப்படாத பிரமை. T.Vயில் பெண்ணுரிமை பேசுகிறவனே இங்கே பெண் நிலை வாதி என்கிற அவலம்! பாரதியின் புகைப்படத்துக்கும் பின்னால் ஒளிந்து கொண்டு பெண்களின் கழுத்தை நெரிக்கிற அவலம். இனி இவற்றுக்கான சாத்தியங்கள் குறைவென்றே தோன்றுகிறது. பிரமை தொலைகிறது. பெண்களின் கண்கள் பழந்தூசிகளை வென்று கூர்மைக்கு வந்திருக்கிறது. உயிரசைவு கயிறுகளை வெல்கிறது.

பெண்களின் குரல்கள் மிகத்தெளிவாகவும், தீவிரமாகவும் ஒலிக்கிறது. நீங்கள் இதுவரை செய்தது போல சீதைகளையும் கண்ணகிகளையும் காட்டி இவர்களை ஏமாற்ற முடியாது. இவர்களது கேள்விகள் உங்கள் தீர்ந்து போன சப்பைக்கட்டு பதில்களை உள்ளடக்கியவையல்லை. உங்கள் புராணங்களுக்கு வயிறு வலிக்கிறது. கலாச்சாரம் தொடை நடுங்குகிறது. இவர்களின் குரல்களில் நவீன மனிதன் தன் புருவத்தை உயர்த்தி பார்க்கத் தொடங்கியிருக்கிறான். வாழ்க்கை – நவீன வாழ்க்கை நோக்கிப் பயணப்பட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பேக்குகள் அழுகின்றன. பிரேதங்கள் ஓலமிடுகின்றன. பிரேதங்களை நாம் காலத்துக்குள் கொண்டு போக முடியாது. பழைய புராதன காலத்து மனிதனைப் போட்டுக்கொண்டு போகவேண்டியதுதான்.

Y.S உமா

II BSc, Maths
பெண்கள் கிரிஸ்தவ கல்லூரி
நாகர் கோவில்
20, இந்து

எங்க Village எடுத்துக்கிட்டாங்கன்னா, நான் தான் கீழ்த்தரமா அலையற பொண்ணு அப்படான்னு சொல்லலாம். மத்த பொண்ணுங்களுக்கு அந்த ரிமை இல்லை. வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. விதவைகல் கூட வெளியே வரக்கூடாது. அந்த மாதிரி Villages இருக்கு. Religion-ம் ஒரு காரணமா இருக்கு. பிள்ளைமாரு, தேவரு எல்லாம் பொண்ணுங்களை ரொம்பவே ஒடுக்குறாங்க. இப்ப Women ‘s College-ல நாங்க ஆடறோம், பாடறோம். இதையே Society-லன்னா அந்த பொண்ணைப்பாரு, இத்தன ஆம்பளைங்களுக்கு முன்னால ஆடரான்னுவாங்க. இதுவே பொண்ணுங்களுக்கு ஒரு Inferiority Complexஐ உருவாக்குது.

Last Generation வரைக்குமொரு பொண்ணுக்கு ஒருத்தற Reject பண்ற Freedom-தை Society குடுக்கல. கிண்டல் பண்ணுவாங்க. ஆனா இந்த Generation-க்கு அந்த தைரியம் இருக்கு. எனக்கு அப்படியொரு நிலை வந்துன்னா தொங்கிட்டெல்லாம் போகமாட்டேன். போடா நீ போன்னுவேன். என் கையில Job இருக்கு என்னால முடியும்னு சொல்லுவேன். நான் Educated ஆகியிருக்கேன். பின்னால Jobக்கு போவேன். அதனால எனாஅலா சொல்ல முடியும். ஆனா Village -ல இதிலயும் Problem தான். அங்க allow பண்ணமாட்டாங்க. அங்க கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.

பொண்ணுங்க நிமிர்ந்து நிக்கணும். நம்மால முடியும். நாம் ஏன் அடங்கணும். நாங்க dominate பண்ணணும்னு கேக்கல. equal-ஆ இருப்போம். இப்ப எங்க வீட்டில அப்பா சொல்வதைத்தான் அம்மா செய்யணும். இத்தனைக்கும் அம்மாவும் வேலை பார்க்கறாங்க. இப்படி இருந்திருக்கு நம்ம generation. இந்த சமூகம் அவங்களை அப்படி வளர்த்திருக்கு. இனி வர generation அப்படியிருக்காது. நான் அப்படி இருக்க மாட்டேன். என் அக்கா எதுத்து நிப்பா. என் Friends பழைய மாதிரியா இல்லை. எதுத்து நிப்போம். ஊருடன் ஒத்து வாழ்னு எவனோ ஒருத்தன் சொல்லிட்டுப் போயிட்டான். இனி அப்படி முடியாது. ரெண்டு பேரும் equal-ஆ இருப்போம். நீ domindate பண்ணணும் நான் dominate பண்ணனும்னு இல்லை. பொண்ணுங்களுக்கு second marriage பண்ணிக்கிற மாதிரியான ஒரு நிலை உருவாகணும்.

குடிச்சிட்டு வந்து அடிச்சான்னா இவளும் திரும்பி அடிக்கணும். நானா இருந்தாலும் திருப்பிஅடிப்பேன். இப்படியடிச்சாத்தான் பொண்ண அடிக்கறத்துக்கும் நாளடைவில் பயப்படுவான். குடிச்சா அவன் பாட்டுக்கு வந்து படுத்துக்கணும். அத விட்டு அடிக்கிறது. இவன் யாரு அடிக்கறத்துக்கு ? விட்டுக் கொடுத்து போறதுன்னா இதெல்லாம் சரிப்படாது. பொண்ணு இந்த மாதிரி problemsஐ எதுத்து நிக்கணும். நீ அடிச்சா நானும் அடிப்பேன். நீ திட்டினா நானும் திட்டுவேன். விட்டு கொடுத்து போயிருக்கோம்ல. இனி நீ விட்டுக்குடுத்துப் போ. நீ ஒத்து வரலைன்னா நானும் ஒத்து வரமாட்டேன்.

Gents-ட்ட egoism நிறைய இருக்கு. நான் சொல்றது ரைட்டு. நான் சொல்றது நீ கேக்கணும். கேக்கலைன்னா நீ வீட்டவிட்டு வெளியே போ. இந்த மாதிரியா நிறைய வீடுகள்ல சொல்றாங்க. இந்த egoism ஆண்கள்கிட்ட இருந்து போகணும்னாக்கா பொண்ணுங்க எதிர்த்து நிக்கணும். வேற வழியே கிடையாது.

ஆண்கள் பொறுத்தவரைக்கும் மன தைரியமெல்லாம் குறைவு. அவுங்களால ஒரு stageக்கு மேல பெண் இல்லாம வாழ முடியாது. என்னால எழுதித் தரமுடியும். இது பொண்ணுங்களோட plus point. 15 வயசிலேயே பொண்ணு widow ஆன நாட்டில நம்மளும் இருந்திட்டிருக்கோம். ஆனா ஆணால் முடியாது. இந்த தைரியத்தை பெண்கள் பயன்படுத்தலாம். நம்மளால தனிச்சு வாழ முடியும். society பேசறதப் பற்றி அக்கறை எடுக்க வேண்டாம். society-ஐ எதிர்த்து நிக்கணும்.நீ நாலு பேரை பற்றிப் பேசாதே. பேசறவங்களை கண்டுக்கவும் செய்யாதேன்னா problem ரொம்பக் குறையும்.

பாரதியார் கவிதைகளை அன்னாளிலிருந்து இன்னாள் வர வாசிச்சிருக்கேன். ஏன்ன அவர் ஒருத்தர்தான் பொண்ணுங்களுக்காக சரியா பேசியிருக்கார். திருவள்ளுவரையே நான் accept பண்ணிக்க மாட்டேன். பாரதியார் கவிதைகள் இன்றைய இந்தியப் பெண்களுக்கும் ஒத்துப் போகும்… ஆனா திருவள்ளுவரை என்னால் accept பண்ணிக்க முடியாது. ‘தெய்வந்தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை ‘

அவரோட குரலைத்தான் இன்னிக்கி வரைக்கும் எதிரொலிச்சிட்டுருக்காங்க லோக்கல் கவிஞர்கள். சிலப்பதிகாரத்தில் என்ன பெரிசா சொல்லியிருக்கு ? இது இன்னிக்கி தேவையா! இதுதான் பொண்ணுங்க மனசில inferioty complex-ஐ உருவாக்குது. கண்ணகி கற்புதான் அவளுக்கு ஞாபகம் வருது. education syllabus ஐயே புது மாதிரியா மாத்தணும். திருக்குறள் உலகப் பொதுமறைன்னா பொண்ணுங்களைப் பொறுத்தவரை அது பொதுமறையே கிடையாது.

(அடுத்தவாரம் பிரேமா போஸ்கோ, பிஷாரா, கிரிஜாவேணுகோபால் மற்றும் ஓவியாவின் பேட்டிகள்)

Series Navigation

Y.S.உமா, பிரேமா பாஸ்கோ,பிஷாரா, கிரிஜா வேணுகோபால், ஓவியா

Y.S.உமா, பிரேமா பாஸ்கோ,பிஷாரா, கிரிஜா வேணுகோபால், ஓவியா