கால நதிக்கரையில்……(நாவல்)-13

This entry is part [part not set] of 35 in the series 20070705_Issue

வே.சபாநாயகம்



ஊர் மக்களிடம் மட்டுமின்றி கோவில் நிலங்களைக் குத்தகைக்குப் பயிரிடுபவர்களிடமும் நிர்வாக அதிகாரிக்கு உரசல் ஏற்பட்டது. குத்தகையை உயர்த்தியதால் சிலரும், நிலத்தை அதிகம் கையூட்டு தருபவருக்கு மாற்றியதால் சிலரும் அதிருப்தியுற்றார்கள். மூன்று கோவில் நிலக் குத்தகை வந்தும் கோவில்களில் நித்ய பூஜை முதலிய நடைமுறைகளில் தவக்கம் ஏற்பட்டது. சிப்பந்திகளுக்கு ஒழுங்காக ஊதியம் தரப்படவில்லை. அதனால் அவர்களது வெறுப்பும் சேர்ந்து கொண்டது. கோவிலுக்கு பக்தர்கள் வருவது அறவே நின்று போனது. இதெல்லாம் சேர்ந்து புகார் மனுக்களாகஅறநிலையத்துறை ஆணையருக்குப் போயின. தீவிரமாக எதிர்த்த இளைஞர்கள் இதில் அதிகமும் அக்கறை எடுத்து விசாரணைக்குக் கொண்டு வந்தனர்.

விசாரணையில் நிர்வாக அலுவலரின் ஊழல்களும், ஒழுங்கீனங்களும் வெளிச்சத்துக்கு வந்தன. இளைஞர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளையும், பக்தர்களையும் திரட்டி விசாரணையில் சாட்சி சொல்ல வைத்தார்கள். திடீரென்று சோதனைக்கு வந்ததாலும் விசாரணைக்கு வந்தவர் உயர் அதிகாரி என்பதாலும் நிர்வாக அதிகாரியால் வந்தவரைச் சரிக்கட்ட முடியவில்லை. வந்தநேரம் உச்சிகால பூஜைநேரம் என்பதால் உப்புமா அய்யனின் நைவேத்ய மோசடியும் கையும் களவுமாய்ப் பிடித்துக் காட்ட முடிந்தது. கணக்குகளிலும் கையிருப்புச் சோதனைகளிலும் மிக அதிகமான கையாடல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அதே இடத்தில் நிர்வாக அதிகாரியும் உப்புமா அய்யனும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். நிர்வாக அதிகாரிக்கு உடந்தையாய் இருந்த தர்மகர்த்தாக்கள் நீக்கப்பட்டு, அப்பாவும் ஊர்ப் பெரியவர்களும் சிபாரிசு செய்த நேர்மையான இளைஞர்கள் தர்மகர்த்தாக்களாக நியமிக்கப்பட்டார் கள். பழையபடியே கோயில்களின் நடைமுறைக்கும் பக்தர்களின் தரிசனத்துக்கும் ஏற்பாடு செய்துவிட்டு அதிகாரி போனார்.

பின்னர் கையாடல் குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு நிர்வாக அதிகாரிக்கு சிறைத் தண்டனையும் கிடைத்தது. பின்னாளில் அவர் தொழுநோயால் பாதிக்கப்பட்டு கை கால் விரல்களில் நீர் ஒழுகி மிகவும் துன்பப் பட்டார் என்று கேள்வி. ‘கோவில் சொத்துக் குல நாசம்’ என்பது நிரூபணமாகிவிட்டது என்று பெரியவர்கள் பேசிக்கொண்டதும் நினைவுக்கு வந்தது.

வெகுநேரம் கோயில் மண்டபத்திலேயே உட்கார்ந்து விட்டதை உணர்ந்து எழுந்து தன் பைகளுடன் சிதம்பரம் வெளியே வந்தார்.

எதிரே இருந்த கருட கம்பத்தைக் கடந்து எதிர்ப்பட்ட தெருவின் முனைக்கு வந்தார். அந்தத் தெருவில் பிராமணக்குடி ஏதும் இல்லாதிருந்தும் எப்போதோ இருந்த நினைவாக ‘பாப்பாரத் தெரு’ என்று அது அழைக்கப் பட்டது. இந்தத் தெருவில் இருந்த அவரது பால்ய சினேகிதங்கள் நினைவுக்கு வர இடது பக்க முதல் வீட்டின் முன்னே சற்றே நின்றார்.

அது சற்றே உயரமான வீடு. தெருமட்டத்திலிருந்து மிகவும் மேட்டில் இருந்த கல்வீடு. தெற்குப்பார்த்த வீடு. பெருமாள் கோயிலை நோக்கி இருந்த மேற்குச் சுவர் ஒரு சினிமாத் திரையளவு அகலமானது. அந்தக் காலத்தில் பக்கத்து நகரத்தில்
நடக்கும் சினிமாக்களை அந்தச் சுவற்றில் ஒட்டி இருக்கும் சினிமாப் போஸ்டர்களைப் பார்த்துதான் தெரிந்து கொள்வார்கள். ஊர் நடப்புகளின் செய்திப்பலகையும் அதுதான். நல்ல செய்திகள் அங்கே வராது. ஊரில் இருப்பவர்களின் கள்ள உறவுகள் கொச்சையாக ‘இந்துநேசன்’ பாணியில் அங்கு அம்பலத்துக்கு வரும். ‘சிவப்பு நாடா’ பாணியில் – பொது நலனுக்கு எதிராக நடக்கும் விஷயங்கள் தெரிவிக்கப்பட்டு எச்சர்¢க்கைகள் விடப்படும். இரவில் எழுதப்படுவதால் யார் எழுதினார்கள் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். கோவில் நிர்வாக அதிகாரியின் ஊழல்கள், லீலைகள் இங்குதான் விலாவாரியாக பிரகடனப் படுத்தப்பட்டன. வீட்டுக் காரர் சாது மனிதர். யார் என்று கண்டு பிடித்து மறுப்புத் தெரிவிக்கவோ தடுக்கவோ திறமற்ற ஏழை மனிதர். இப்போது அந்தச் சுவர் முழுதும் பல்வேறு கட்சிகளின் நிகழ்ச்சிகள், சாதனைகள் காட்டும் வண்ணப் போஸ்டர்களால் மறைந்திருக்கிறது. ஒருவகையில் அவற்றால், சிதிலமடைந்துள்ள சுவருக்குப் பாதுகாப்பு என்று கூடச் சொல்லலாம்.

வீடு இடிந்த நிலையில் தெருப்பகுதி மட்டும் விழாமல் விசாலமான அந்தத் திண்ணகளுடன் இருந்தது. வீட்டுக்காரர் அப்போதே 70 வயதுக்குமேல் ஆனவர். ஒரே பையன் இருந்தான். அவன் சிதம்பரம் வயதுதான் – அவன் இருக்க வேண்டுமே!
அவன் வீட்டைச் சரி செய்ய முடியாமல் வேறு இடத்தில் இருக்கிறானோ என்று சிந்தனை ஒடியது. படியேறி தூசியும் புழுதியும் நிறைந்திருந்த திண்ணையைப் பையில் இருந்த செய்தித் தாளால் தட்டிச் சுத்தம் செய்து அந்தத் தாளையே விரித்துத் திண்ணைமீது பைகளை வைத்து விட்டு உட்கார்ந்தார். கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு பையில் கையோடு கொண்டு வந்திருந்த சிற்றுண்டிப் பொட்டலத்தையும், தண்ணீர் பாட்டிலையும் எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தார். பார்வை வீட்டின் எதிரே போயிற்று. அங்கே இருந்த – பூச்சு உதிர்ந்து செங்கல் பகுதிகள் மட்டும் தெரிந்த கலசமில்லாத மொட்டைக் கர்ப்பக்கிரகத்துடன் கூடிய அந்த இடிந்த முருகன் கோவிலை நினைவு படுத்தித் தேடிப் பார்த்தார். அந்த இடத்தில் உயரமான வீடு ஒன்று தெரிந்தது. சாப்பிட்டுவிட்டுப் பார்க்கலாம் என்று சாப்பிடத் தொடங்கினார். சாப்பிட்டுக் கையலம்பியதும் எழுந்து எதிரே போனார்.

கோவிலை மறைத்து வீடு கட்டப் பட்டிருந்தது. கோவிலின் முன்புறமான சாலைக்கு வந்து பார்த்தார். அங்குமொரு வீடு கோவிலின் முன்னாலேயே கட்டப் பட்டிருந்தது. கோவிலை மட்டும் ஏனோ இடிக்கக் காணோம். இது எப்படி? கோவில் புழக்கத்தில் இல்லாமலே இருக்கட்டும் – இப்படிக் கோவிலையும் மறைத்துக் வசப்படுத்திக் கொள்வதை யாருமே ஆட்சேபிக்கவில்லையா? பொதுநலத்துக்காகப் போராடும் இளைஞர்கள் இதைக் கண்டு கொள்ளாதது ஏன்? அரசியலா? அடடா!அரசியல்தான் எப்படிக் கிராமங்களையும் விட்டு வைக்காமல் இப்படி மனசாட்சியற்றவர்களாய் மனிதர்களை மாற்றி விடுகிறது? மனம் சுருங்க மீண்டும் வந்து திண்ணையில் உட்கார்ந்தார்.

சிதம்பரத்துக்கு வினவு தெரிந்த நாளாகவே அந்தக் கோவில் இடிந்த நிலை யில் தான் இருந்தது. அங்கிருந்த மூலவிக்கிரகமான மயில்வாகனத்துடன் இருக்கும் முருகன் சிலையும், பெரிய சிவலிங்கமும் சிவன்கோவிலில் தான் வெகுநாட்களாக வைக்கப் பட்டிருந்தன. அப்பா காலத்திலேயே இடிந்த கோவிலைச் சீர்படுத்தி மீண்டும் மூலவரையும் லிங்கத்தையும் கொண்டுவந்து நிறுவி கும்பாபிஷேகம் செய்விக்க பலதடவை முயன்று நிறைவேறாது போயிருந்தது.

சிவன் கோவிலில் முருகனுக்கும் சேர்த்தே நித்ய பூஜைகள் நடந்து வந்தன. முருகனுக்கு உகந்த நாட்களில் விசேஷ அலங்காரமும் சிறப்பு வழிபாடும் நடந்து வந்தன. அதில் அதிகமும் அக்கறை எடுத்துக் கொண்டு, பழைய இடத்தில் இருந்திருந்தால் இப்படி நடக்குமா என்கிறபடி சிறப்பான வழிபாட்டுக்குக் காரணமாயிருந்தவர் ஒரு அற்புதமான மனிதர். அவர் அப்போதைய சிவன்கோவில் குருக்கள்.

சிதம்பரம் சிறுவனாக இருந்தபோதே அவர் அக்கோவிலின் குருக்களாக இருந்தவர். முறையாக ஆகமங்கள் கற்று, மிக வைதீகமாகப் பூஜைக்கு வந்தவர். வேதவித்து; ஞானவான். செம்பு நிறம். அழகான தோற்றம் இல்லைதான். பெரிய
உரித்த தேங்காய் போன்ற மழித்த முன் மண்டை. பின்னால் சின்னதாக முடி அதிகமில்லாத உச்சிக் குடுமி. மிகவும் அகன்ற நெற்ற்¢யில் பளீரென்ற முப்பட்டையான விபூதிப் பூச்சு. கைகளிலும் மார்பிலும் அதே மாதிரி திருநீற்றுப் பட்டைகள். நடு நெற்றியில் கனமான சந்தனப் பொட்டு. கழுத்தில் தங்கத்தில் கொப்புகள் பொருத்திய உருத்திராட்சம் கோர்த்த தங்கச் சங்கிலி. பார்த்தாலே ஒரு தேஜஸ் கண்களைக் கூசச் செய்யும். அவரையும் தரிசிப்பதற்காகவே கோவிலுக்கு வந்தவர்கள் உண்டு. அவரால் அதிகம் ஈர்க்கப்பட்டவர்களில் இளைஞர்களே அதிகம்.

அவர் நைஷ்டிகப் பிரம்மச்சாரி. தினமும் தியானம், யோகாசனம், தண்டால், பஸ்கி, என்று பயிற்சி செய்து உடலைக் கல்லாக ஆக்கி வைத்திருந்தார். இதுதான் இளைஞர்களை அவர்பால் ஈர்த்தது. ஊரில் சோம்பித் திரிந்த, சீட்டாடிப் பொழுதைக் கழித்த இளஞர்களை எல்லாம் திரட்டி தான் செய்த உடற்பயிற்சிகளை, தியானத்தை, யோகாசனங்களைக் கற்பித்து ஒரு ஆரோக்கியமான இளைஞர் பட்டாளமாக ஆக்கி வைத்திருந்தார். அதுவே ஊர்ப் பெரியவர்களுக்கு அவர்மீது மிகுந்த மரியாதையையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருந்தது.

அவர் கோவில் பூஜைகளையும் முறையாக நடத்தி பக்தர்களை தினமும் தரிசனத்துக்கு வரச் செய்தார். நல்ல கலைத்திறனும் மிக்கவர் என்பது அவர் விசேஷ நாட்களில் சுவாமிக்குச் செய்யும் மனங்கவரும் அலங்காரங்கள் காட்டின.
அப்படிப்பட்ட அலங்காரங்களை முருகனுக்குச் செய்வதில் அவருக்கு மிகவும் ஆர்வம். அப்படி அவர் ஒரு முறை முருகனுக்குச் செய்த சந்தனக்காப்பு அலங்காரம் இன்னும் கூட சிதம்பரத்துக்குக் கண்ணில் நிற்கிறது. வழக்கத்துக்கு மாறாக அப்போது முருகனை வேடனாக அலங்காரம் செய்திருந்தார். வேடனைப் போலவே தலையில் கட்டும் சிறகு பொருத்திய முடியும், காதுகளில் வளையமும், கையில் வில்லும், இடுப்பில் மான்தோல் ஆடையுமாக கண்கொள்ளாக் காட்சியாக அது இருந்தது. அன்றைய நைவேத்தியமும் விசேஷமானது. வேடன் ஒப்பனைக்கேற்றபடி தேனும் தினைமாவும் வைத்துப் படைத்துப் பக்தர்களுக்கும் வழங்கினார். காதால் கேள்விப் பட்டதன்றி தேனையும் தினைமாவையும் கண்டிராதவர்கள் – குறிப்பாய் சிறுவர்களுக்கு அது மறக்க முடியாததாக இருந்தது. முருகன் பழைய இடிந்த கோவிலில் இருந்தால் இவ்வளவு அலங்காரமும் கொண்டாட்டமும் ஏது? கடவுளுக்கும் கூட அதிர்ஷ்டம் தேவை போலிருக்கிறது. உப்புமா நைவேத்தியம் பெறும் பெருமாளையும், தேனும் தினைமாவும் பெறும் முருகனையும் மனதுக்குள் எண்ணிப்பார்த்து அவற்றின் முரணை அசைபோட்டார்.

‘ஏங்க! திண்ணையிலே ஆருங்க?” என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டு நனவுலகிற்குத் திரும்பினார். தெருவில் வீட்டை ஒட்டி ஒரு வயதான பெண்மணி இடுப்பில் தண்ணீர்க் குடத்துடன் நின்று கொண்டிருந்தாள்.

“என்ன?” என்பதுபோல இவர் அவளை நிமிர்ந்து பார்த்தார்.

“வெளியூருங்களா?” என்று அவள் கண் அகல விசாரித்தாள்.

‘ஆ…..ஆமாம்……” என்றார் தயங்கியபடி. “இந்த வீட்லே அப்புன்னு ஒருத்தர்….” என்று இழுத்தார்.

“அவுரு அடுத்த ஊடு! இது இடிஞ்சு போச்சுன்னு பக்கத்துலே சின்னதாக் கட்டிக்கிடு அங்கப் போய்ட்டோம். வாங்க, நான் அவுரு சம்சாரம்தான்” என்று அழைத்தாள்.

சிதம்பரத்துக்கு இப்போதுதான் சொந்த மண்ணுக்கு வந்திருக்கிற உணர்வு ஏற்பட்டது. அப்பாடா! கடையில் தன்னை நினைவுகூர ஓர் உறவு! மகிழ்ச்சியோடு தன் பால்ய சினேகிதனைப் பார்க்க தன் பைகளை எடுத்துக்கொண்டு படி இறங்கினார். அவள் முன்னே நடந்து பக்கத்தில் இருந்த ஒரு சின்ன ஓட்டு வீட்டினுள் நுழைந்தாள். சிதம்பரம் பின் தொடர்ந்தார்.

(தொடரும்)

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்