மாத்தா-ஹரி – அத்தியாயம் 15

This entry is part [part not set] of 34 in the series 20070621_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா



– கிருஷ்ணா நீ சொல்லு, நான் யார்? மாத்தாஹரியா? பவானியா?

– எனக்கும் அந்தச் சந்தேகம் கொஞ்ச நாளா உண்டு. பெரும்பாலும் மாத்தாஹரி மாதிரித்தான் நீயும் நடந்துகொள்கிறாய். எத்தனை பேrர்ல வேண்டுமானாலும் இருந்துட்டுபோ, எனக்கு நீ பவானிதான். முதன் முதல்ல உன்னை எங்கே பார்த்திருப்பேன்? நிச்சயமா நம் இருவருக்கும் பொதுவான ஒரு உறவினர் வீட்டில் வைத்தென்று சத்தியம் செய்யமுடியும். அது என்ன விசேடமென்று ஞாபகமில்லை, யார் வீட்டு நிகழ்ச்சிண்ணும் சொல்ல முடியாது, ஆனா உன்னை ஞாபகப்படுத்த முடியுது: ஜிமிக்கி, ரெட்டை ஜடை, நாடாவின் இறுக்கத்துடன் அரக்குவண்ணப்பட்டில் ஒரு பாவாடை, பொருத்தமாக ஒரு மேற்சட்டை, அத்திப்பழநிறம். உன்னோடு வேறு சில பிள்ளைகளும் இருந்தார்கள். அக்கூட்டத்தில் நீமாத்திரம் எங்கிருந்து பார்த்தாலும் தெரிகிற கோபுர கலசம்மாதிரி பளிச்சென்று இருக்கிறாய். பாட்டியொருத்தி திடீரென்று விளையாட்டாக உன்னை ‘மரப்பாச்சிண்ணு’ அழைக்கிறாள், நீ நின்று, கண்களை அகல மலர்த்திக்கொண்டு, புன்முறுவல் செய்கிறாய். அதற்குப்பிறகு, நீ வளர்ந்திருக்கையில், கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்களை நிரப்புவதற்கென்று உங்கள் வீட்டிற்கு வந்தபோது பார்த்தது. காலைநேர பரபரப்புடன் உங்கள் வீடு, உன்னுடைய அப்பா வாசற்கதவைத் திறக்கிறார், முழங்காலுக்கு மேலே பாதிவயிற்றில் வேட்டி, டால்கம் மாவில் அபிஷேகம் செய்த உடம்பு, நாசியில் நிரம்பிய தெளிவற்ற அந்த மணத்தை முழுவதுமாக உணருமுன்பே, “எங்கே வந்தாய்?”என்று கேள்வி. ‘கல்லூரியிற் சேருவதற்கான விண்ணப்பத்தை நிரப்பணும், அப்பா உங்களைப் பார்த்துவிட்டு வரச்சொன்னார்’, என்கிறேன். அவரிடம் பவானியைப் பார்க்கத்தான் வந்தேன் என்று சொல்லத் தயக்கம். அந்த நேரம் நடை வாசல் கதவு ‘கிர்ரென’ ஒலி எழுப்புகிறது, பாதி திறந்திருந்த கதவில் என் கண்களை நிறைத்துக்கொண்டு, மௌனச் சித்திரம்போல அமைதியாய் அழகாய் உன் முகம், அதிகாலை உதயம் உன் மீது நடத்தபடுகிறதோ என்று வியப்பு, இருள் பிரியாத நடைவாசலி¢ல் சட்டென்று ஒளிபாய்ச்சபட்டதுபோல உணர்ந்தேன். எதையும் மறக்கலை, அதற்கப்புறம் ஒரிருமுறை கவிதைகள் சம்பந்தமா உரையாடி இருப்போம், பிறகு 1987ல இந்தியா வந்தபோது உங்கள் வீட்டிற்கு வந்தேன். அப்பவெல்லாம் உனக்கும் தேவசகாயத்துக்கும் திருமணம் நடக்கவில்லை இல்லையா?

-இல்லை 1988ல தான் எங்களுக்குக் கல்யாணம் நடந்தது. வழக்குரைஞர் தொழிலில் எனக்கேற்பட்ட அனுபவங்கள் காரணமா ஆரம்பத்துல அவனைக் கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் எனக்குச் சுத்தமாக இல்லை. பிடிகொடுக்காமல்தான் இருந்தேன். என்னமோ நடந்துட்டது. விதிமேல பழியைப்போட எனக்கு விருப்பமில்லை. என்ன நடந்தது என்பதைச் சொல்றேன். அதற்கு முன்னாலே ஒரு கேள்வி என்னை உங்களால மறக்க முடியலைண்ணு சொன்னீங்க இல்லையா? எதனாலேன்னு சொல்ல முடியுமா?.

– என்ன? வழக்கம்போல விவாதத்துல இறங்கியாச்சா?

– ஆமாம். ஒருவேளை நான் அழாகாக இல்லாதிருந்தால் இத்தனையும் உங்களுக்கு ஞாபகத்திற்கு வந்திருக்குமா? தவிர ஆண்களுக்குள்ள வசதி இதையெல்லாம் தைரியமாகச் சொல்லிக்கொண்டு திரியலாம். ஒரு சில ஆண்களுக்கு சும்மாவாச்சும் நாலு பெண்களோடு தன்னை சம்பந்தப்படுத்தி சொல்லிக்கொள்ளணும். படைப்பாளி ஆணாக இருந்தால் தொண்ணூறு வயதிலும், இருபதுவயது காதலியைப் பற்றி சிலாகித்து எழுதலாம், மாறாக ஓர் அறுபதுவயதுப் பெண்படைப்பாளி தனது பால்யவயது காதலனைப் பற்றி எழுதினால் என்ன நடக்கும்?சகப் பெண்களே பரிகசிப்பார்கள். ருடோல்பிற்கும், தேவசகாயத்திற்கும் வாழ்க்கைப்பட்ட எங்களுக்கும் அதுதான் நடந்தது. தீட்டிய கத்தியாக இருந்தாலென்ன, தோட்டாக்கள் அடைத்த துப்பாக்கியாக இருந்தாலென்ன நோக்கமொன்றுதான். பெண்களின் மரணம் முக்கியம், அவளை பூவோட பொட்டோட அனுப்பிவைக்க அத்தனை ஆர்வம். அதைத்தான் நிறைவேற்றிக்கொண்டார்கள். உங்களைப் போன்றவர்களின் தந்திரம் வேறு. எங்களை ஆதரிப்பதாகச்சொல்லிக்கொண்டு வக்கிரங்களை வேறுவகையில் தணித்துக்கொள்கிறீர்கள். சீர்திருத்தங்களை எழுத்திலும் பேச்சிலும் வலியுறுத்திவிட்டு, நிஜங்களுக்கு வெளியில் இருப்பவர்கள்.

– பிரான்சுலே ஆண்களைப்போலவே எழுத்தில் துணிச்சல் காட்டின பெண்கள் உண்டு; மார்கரெத் துராஸ், பிராசுவாஸ் சகன், அப்படி எழுதி இருக்கிறார்கள். அவர்களெல்லாம் உனது சமகாலத்தைச் சார்ந்த பெண்கள்தானே.

– அவர்களுக்கு என்ன நடந்தது, எப்படியான விமர்சனத்திற்கு உள்ளானார்கள் என்பதும் தெரியும். அவற்றை வாசிக்கும் ஆண்கள் அப்பெண்களின் எழுத்திலுள்ள நேர்மைக்காக வாசிப்பதில்லை, அடுத்தவர் ரகசியங்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம்காரணமாக வாசிப்பவர்கள். நல்லவேளை அவர்களுக்கு கணவன் என்கிற மேல் அதிகாரிகளில்லை. இருந்திருந்தால் அவர்களுக்கும் மாத்தாஹரி அல்லது பாவனிக்கு நேர்ந்தது மாதிரியான அனுபவங்கள், முடிவுகள் கிடைத்திருக்கும். பிறரைப் பற்றிப் பேசுவது இருக்கட்டும், கிருஷ்ணா நீங்கள் சொல்லுங்கள், கற்பனைக்குக்கூட உங்கள் மனைவியால் தான் சந்தித்த ஆண்களைப்பற்றி சொல்லவோ எழுதவோ முடியுமா, அதற்கான புரிதலோ, மனப்பக்குவமோ உங்களுக்கு உண்டா?

– …..

– நீங்கள் எதுவும் சொல்லவேண்டாம். அப்படியே சொன்னாலும் நான் நம்பமாடேன். எல்லாச் சீர்திருத்தமும் அடுத்தவருக்குத்தான் என்கிற நினைப்பு ஆண்களுக்கு இங்கே அதிகமாகவே உண்டென்று எனக்குத் தெரியும். ‘வீடுகளால் ஆன இனம்’ என்ற மாலதி மைத்ரியின் கவிதையை வாசித்திருக்கிறீர்களா? வாசித்திருந்தாலும் பரவாயில்லை, இன்னொருமுறை கேளுங்கள்

” ஊரின் அனைத்து வீடுகளும் நடப்பட்ட பெண்களென இருக்கின்றன
சாளரங்கள் கண்களாகவும் வாசல் யோனியாகவும்
யாரோ ஒரு ஆணிற்காக ஆயுள் முழுவதும் காத்துக்கிடக்கின்றன
வயதுக்கேற்றபடி தம் உறவுகளுக்காக
கொலைகாரன் திருடன் குடிகாரன் துரோகி மோசடிக்காரன் ஏமாற்றுபவன்
விபச்சாரகன் கொடுங்கோலன் காமவெறியன் சாதிவெறியன்
மதவெறியன் இனவெறியன் இவர்கள் யாரையும் வீடு கைவிட்டுவிடுவதில்லை
அவரவருக்கான வீடு எப்போதும் இருக்கிறது
உடம்பு தொட்டிலாகவும் மார்பாகவும் இருந்து
உயிரும் உணவும் அளித்து அரவணைத்துப் பாதுகாக்கப்படும் ஆண்பந்தங்கள்
ஆண்கள் வீட்டைப் புணவர்தன்மூலம்
பூமியை வளர்க்கிறார்கள், பெண்களையல்ல
காலத்தை ஆளும் பெண்கள் வீடாவதில்லை”

எனக்கும் மாத்தா ஹரிக்கும் எதிர்பாராமல் நேர்ந்த மரணங்கள் கூட ஒரு வகையில் இந்தவகை வீடுகளிலிருந்து கிடைத்த விடுதலையாக இருக்கலாம். நாங்கள் காலத்தைக் கோலோச்ச முடிவதற்கும் கவிஞர் சொல்வதுபோல அதுவே காரணம். நம்ம பெண்களைக் கேட்டுப்பாருங்க, ஒருத்தனுக்கு இரண்டுபேருண்ணு முந்தானை விரிக்கிற பெண்களையும் சேர்த்துத்தான் சொல்றேன், “தாலிகட்டிக்கிட்ட பாவத்துக்கு பொறுத்துக்கிட்டு வாழ்ந்தேன் அல்லது வாழ்கிறேன்”, என்றுதான் அத்தனை பேரும் சேர்ந்தாற்போல சொல்வார்கள். அப்படிப் பொறுத்துகிட்டா அவள் பத்தினி, என்ன பெரிய பிரான்சு? ஏற்ற தாழ்வுகள் எல்லா நாடுகளிலும் இருக்கிறது. ‘சிமோன் தெ பொவார்'(1) ‘பெண்ணெனும் இரண்டாம் இனம்'(The Second Sex) எழுதி ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. பிரெஞ்சு சமுதாயத்தில் பெண்கள் இன்றைக்கும் இரண்டாம் குடிகளே.

“பெண் என்பவள் ஆண்சார்ந்தவள் அல்லது ஆணின் அடிமை என்று கூறலாம். ஆணுக்கும் பெண்ணுக்கும் உலகில் சம உரிமை இல்லை என்பதுதான் உண்மை. அவளுடைய நிலமையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறபோதிலும், இன்றைக்கும் அவள் பல விடயங்களில் வாய்ப்புகளின்றி முடங்கிக்கிடக்கிறாள். உலகில் எந்தவொரு நாட்டிலும் ஆணையும் பெண்ணையும் சமமாய் பாவிக்கிற சட்டங்களில்லை, சொல்லப்போனால், அவை பெரும்பாலும் பெண்களுக்குப் பாதகத்தை இழைக்கும் தன்மையன. தொன்றுதொட்டுச் சமுதாயத்தில் நிலவிவரும் மனப்பாங்குகள், தெளிவாகப் பெண்களின் உரிமையை வரையறுக்க உதவுவதில்லை, விளைவு அவை ஏட்டளவில் பிரசுரிக்கப்படுவதோடு சரி.(2)”

என்பது இன்றுவரை நிலவி வரும் உண்மை. இந்தியாவில் மட்டும் என்ன வாழ்கிறதாம், அரசியற் சட்டம், அனைவரும் சமம் என்று சொல்கிறது. உண்மையில் அப்படியா நடக்கிறது. அநேக சட்டங்கள் நடைமுறை வாழ்க்கையோடு இசைவற்றவை. நிறைய ஓட்டைகள். குடும்ப வன்முறைகளை எடுத்துக்கொள்வோம், 1983வரை குடும்பவன்முறை சட்டங்கள் என்று பிரத்தியேகமாக எதுவுமில்லையில், இருந்தபோதிலும் இந்திய தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின்(3) கீழ்: கொலை, தற்கொலைக்குத் தூண்டுதல், துன்புறுத்துதல், சிறைவைத்தல் ஆகிய குற்றங்களின்கீழ் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது. பெரும்பாலான மணவாழ்க்கைக் குற்றங்கள்(4) மூடிய கதவுகளுக்குப் பின்னே நடப்பவை, ஆனால் இந்திய தண்டனைத்தொகுப்புச் சட்டம் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றத்தை நிரூபித்தாகவேண்டும் என்கிறது. அதற்காகப் பாதிக்கப்படுகிற பெண்கள் சாட்சிகளையாத் தேடிக்கொண்டிருக்க முடியும். 1983ம் ஆண்டும் 1986ம் ஆண்டும் சட்டத்தில் நிறைய திருத்தங்கள், இருந்தும் பெண்களுக்குப் பெரிதாக எதுவும் நடந்திடவில்லை. பலவீனமானவர்களை அடிமைபடுத்த வேண்டுமென்பது என்பது மனதுடைய விருப்பமென்று நினைக்கிறேன். ஓர் அடிமையிடம், பத்து அடிமைகளைக் கொடுத்து, இவர்களை வேலைவாங்கவேண்டும் என்று சொல்லிப்பாருங்கள், அடுத்த நொடி, அந்த அடிமை எஜமானன் ஆகிவிடுவான். இதுதான் யதார்த்தம்..

– அப்போ எதனாலே பெண் விடுதலைங்கிற பேர்ல இத்தனைக்கூச்சல், அமைதியாக இருக்கலாமே?

– குட்டுப்படும்போது நிமிர்ந்துபார்ப்பது, அடுத்தக் குட்டிலிருந்து தப்பிப்பதற்காக. வேறென்ன? நான் ஒருத்திமட்டும் பேசிக்கொண்டிருக்கிறேனே என்று நினைத்தேன். நல்லவே¨ளை வாய் திறந்தீர்கள். எனது பேச்சு எரிச்சலூட்டுகிறதா?

– இல்லை. கல்லூரிக் உணவு விடுதியில், இப்படித்தான் ஒரு முறை பேச ஆரம்பித்து நிறுத்தவேயில்லை, அன்றைக்கு பெண்ணியத்தைப் பற்றி ஒரு பெரிய சொற்பொழிவே நிகழ்த்தியிருந்தாய், வெகு நாட்களுக்குப் பிறகு உனது பேச்சில் மறுபடியும் அந்த ஆவேசத்தைப் பார்க்கிறேன்

– கிருஷ்ணா.. என்ன இது? தனியாக நின்றுகொண்டு புலம்பறீங்க.

– வா பவானி, இத்தனை நேரம் உன்னோடுதான் பேசிக்கொண்டிருந்தேன். வாழ்க்கை முழுதும் இரண்டு உரையாடல்களைத் தொடர்ந்து நடத்துகிறோம். இரண்டாவது உரையாடல், பொய்கலவாதது, அந்தரங்கமானது, அவதாரங்கள் பலவாகவும் ஆத்மா ஒன்றாகவும் இருக்கச் சாத்தியங்கள் கொண்டது. நாமே நமக்கென்று நடத்தும் உரையாடல், இங்கே பரஸ்பர புரிதல்களில் சிக்கல்கள் இருப்பதில்லை, மறுப்புகள் இடம்பெறுவதில்லை. மழையின்போது ஒரு குடையின்கீழ் ஆணும் பெண்ணும் நடப்பதுபோல, நனையவும் கூடும், நனையாமல் இருக்கவும் கூடும். மனமும் உடலும் சிலிர்த்துக்கொள்ளும் அவ்வனுபவம் முக்கியம். சூன்யவெளியும், நிலாக்கால இரவும், மெல்லென வீசும் காற்றும் துணைக்கருவிகளாக இருக்குமென்றால் உரையாடல் நீளும். எனது எதிர்பார்ப்புப் பொய்த்துவிட்டது. சட்டென்று குறுக்கிட்டுவிட்டாய். வந்ததும் நல்லதாய்ப் போயிற்று. புறப்படலாமா, இப்போதே புறப்பபட்டால்தான் விடிவதற்குள் போய்ச்சேரமுடியும்.

– எங்கு?

– நமது மண்ணுக்கு. நீ மேற்கிலிருந்துவருகிறாய், நாம் கிழக்குதிசைக்காய்ப் பயணிக்கவேண்டும். அந்த மண்ணுக்கு உன்னையும் என்னையும் நன்றாகத் தெரியும், துணைக்கு யாருமில்லையே என்று நினைத்தேன், தனித்த பயணியாக எத்தனை நாட்களுக்கு? இங்கே காட்சிகள் செல்லரித்துவிட்டன, சொற்கள் மௌனித்துவிட்டன, சப்தம் பாழ்பட்டுவிட்டது. இறந்தகாலத்தின் எதிரொலி, எனது இதயச்சவ்வை கிழிக்குமுன் புறப்படாகவேண்டும். காடு கரம்பை என்றாலும் அது நமக்கான வெளி., திண்ணையென்றாலும், இருக்கவே இருக்கிறது வேப்பமரக்காற்று.

பவானி இம்முறை வாய் திறக்கவில்லை, நான் பேச மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். நிலவொளியை மறைத்த மேகம், அவள் முகத்தில் வழிந்தது, அவள் கண்கள் தளும்பி இருந்தன. நிச்சயமற்ற உடல். அவளுக்குப் பின்புலத்தில் மின்விளக்கு கம்பங்கள், ஒளியில், பிர்ச், மிமோசா மரங்களின் கலப்பில் கல்லறை, முட்புதர்களும், கருவேல மரங்களும் படர்ந்த மயானத்தின் சுகம் அதிலுண்டா? நிதானமாக இது குறித்து அவளிடம் பேசவேண்டும்…

(தொடரும்)


1. Simone de Beauvoir பெண்ணியல்வாதி, இவர் எழுதிய ‘the Second Sex’ பெண்களுக்கான விவிலிய நூல் என்று புகழப்படுகிறது.
2. The Second sex – முன்னுரையிலிருந்து
3. The Indian Penal Code
4. Marital abuse and violence

nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா