மாத்தா-ஹரி – அத்தியாயம் 13

This entry is part [part not set] of 32 in the series 20070607_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


நான் நிறைமாத கர்ப்பிணி, மகள் ‘நோனா'(Nonah) பிறக்க இருந்த நேரம். மே மாதத்தில் நாங்கள் குடியிருந்த தைம்பெங்(1) பகுதியில் அவ்வளவாக மழை இருப்பதில்லை. இரவு பகலென்று தொடர்ந்து பெய்த மழை அன்றையதினம் ஓய்ந்திருந்தது. வானத்தில் அவ்வப்போது கூடிப் பயமுறுத்தினாலும், கலைந்துசென்ற மேகங்களைப்பார்க்க, மழை இனியில்லை என்று நினைத்தேன். தீடிரென்று வெளிப்பட்ட சூரியன், எங்கள் இருப்பிடங்களுக்கு எதிர் வரிசையில் நின்றிருந்த தென்னங்கீற்றுகளை, பொன்னிறத்துக்கு மாற்றி இருந்தான், உண்ணிகள்போல ஒட்டிக்கிடந்த முற்றிய தேங்காய்களும் அந்த ரஸவாதத்திற்கு உட்பட்டுத் தங்கக்கட்டிகளாகக் குலைகளில் ஜொலிக்கின்றன. தலைமயிரைப் பிரித்துவிட்டதுபோல சடைசடையாய் விழுதுகள் மண்ணிற் புரள நிற்கும் ஆலமரங்கள், அவற்றுக்குக்கிடையே காற்றடிக்கிறபோதெல்லாம் சீழ்க்கை எழுப்பும் வளர்ந்த மூங்கிற் புதர்கள், மண்டிக்கிடக்கும் புற்கள், முட்புதர்கள். கவர்ச்சிகரமாய் வளைந்து நிற்கும் பனை மரங்கள், மண்ணில் விழுந்து சிதறிக் கேட்பாரற்று கிடக்கும் பனம்பழங்கள், மொய்க்கும் கொசுக்கள், ஆண்பனைகளில் ராட்சத விரல்கள்போல வெளிப்பட்டு பயமுறுத்தும் பனம்பூக்கள், தென்னை ஓலைகளின் சலசலப்பு. பொதுவாகவே அங்கு வீசும் காற்றில் வறட்டுத் தன்மையுண்டு, வியர்வை நாளங்கள் முடுக்கிவிடப்பட, கையோடிருக்கும் துவாலையால் துடைத்தபடி இருக்கவேண்டும். காற்று இதமாக வீசவே, வெளித்தாழ்வாரத்தில் ஒரு சாய்வு நாற்காலியைப் போட்டுக்கொண்டு அமர்கிறேன். வெகுதூரத்தில், மேகக்கூட்டங்களோடு கலந்து அமைதியாய் நிற்கும் எரிமலைகள். தீடீரென்று, அடிவயிற்றில் வலி. காரணத்தைப் புரிந்துகொண்டு, வேலைக்காரி தசீமாவை அழைத்தேன். இருவருமாய் மருத்துவமனைக்க்குப் புறப்பட்டுச் சென்றோம். செய்திகேட்டு தமாதமாகவென்றாலும், மருத்துவமனைக்கு எங்களைத் தேடி ருடோல்ப் வந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. மகளுக்கு ‘நோனா’ என்று மலாய் மொழியில் ஒரு பெயரை இருவரும் சேர்ந்தே தேர்வு செய்தோம். ராணுவ உடையிலிருந்த ருடோல்ப் மீண்டும் கம்பீரமாய்த் தெரிகிறார், ஹாலந்து முதற்சந்திப்பில் கண்டதைப் போலவே முகத்தில் அத்தனை பிரகாசம்: எல்லாம் நிறைந்தவராக, எல்லாம் தெரிந்தவராக, எல்லாமே அவராக.. எனது முகத்தருகே அவரது முகம், முகவாயைத் தீண்டியபடி. ‘மார்க்கரீத், சொல் உனக்கு என்ன வேண்டும், என எழுப்பிய வினாவுக்கு என்னிடத்தில் பதிலில்லை, நான் அவரது கண்களைப் பார்த்தபடி இருக்கிறேன். இனி அன்புள்ள அப்பாவுக்கென ஆரம்பித்து எழுதும் கடிதங்களில், ருடோல்ப் பெருமைகளை நிறைய எழுதவேண்டும், என் தேர்வு பொய்யில்லை என்ற பெருமிதத்தை அப்பாவிடம் பகிர்ந்து கொள்ளவேண்டும், எனது ஆசிரியைப் பயிற்சி பள்ளித்தோழி-மரிவான் ஷ¥ன்பெக், என்னை மறந்துடாதடி, என்கிறாள். என்ன செய்வது வாழ்க்கையில் உண்மை என்று ஒன்றிருக்கிறதே, ருடோல்புக்கும் எனக்குமான சந்திப்பும், எனது இந்தோனேசிய பயணமும், எங்கே தொடங்கியது, அதற்குப் பின் நேர்ந்தவைக்கும் யார் அல்லது எது காரணம்? வாழ்க்கை அழகானது எனக் கண்ட கனவுகள் எங்கே போயின? அது பல புதிர்களை உள்ளடக்கியது என்பதுபுரியவந்ததாலா? எதிர்பாராத சம்பவங்களை எதற்காகவோ நிகழ்த்தி, தனது மகத்துவத்தைக் கூட்டிக்கொள்வதில் வாழ்க்கைக்கு ஏன் இத்தனை ஆர்வம்? ஓட்டுமொத்தமும் கற்பனையென புரிந்துகொள்ள இரண்டொரு தினங்கள் பிடித்தது.. மகளைப் பார்த்தாவது அவர் திருந்துவார் என்று நினைத்தேன், இல்லை, குடித்தார், மீண்டும் குடித்தார். வேலைக்காரி தசீமாவோடு அவர் அடித்த கூத்துகளை என்னவென்று சொல்ல? வேறொருத்தியைச் வேலைக்கு அமர்த்தினாலும், அது தொடருமென்று எனக்குத் தெரியும். உள்ளூர் மக்களின் வறுமை அவரது தப்பான காரியங்களை ஊக்கபடுத்திற்று.அப்பெண்களின் பெற்றோர்கள் அதற்குத் தயாராகவே இருந்தார்கள், ஒரு சில நாட்களில் வேறு சிலபெண்களும் வந்துபோக ஆரம்பித்தார்கள். அறையில் குழந்தை நோனாவுடன் கட்டிலில் படுத்திருக்க அத்தனை அசிங்கங்களையும் கூச்சமின்றி செய்வார், சில நேரங்களில் அப்பெண்களின் கதறலைக் கேட்டுப் பதறி ஓடியிருக்கிறேன்.

அன்றைய தினம் புதன்கிழமை என்பதால் நாங்கள் குடியிருக்கும் பகுதியில், கூடுகிற சந்தைக்குச் சென்றேன். காய்கறிகளை வாங்கிக்கொண்டு வீட்டிற்குத் திரும்பியவள், கதவைத் திறக்கிறேன், திடீரென்று யாரோ வீறிட்டு அலறுவதைப்போல இருக்கிறது. முதலில் அது குழந்தை ஹரிணியாக இருக்குமோவென்ற சந்தேகம். அவளது அறைக்குச் சென்றுபார்க்க அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தாள். ஓரளவு வளர்ந்த சிறுமியின் குரல்போலிருக்க, மனதில் ஏதோ உதித்தது, அதை உறுதிபடுத்திக்கொள்ள, வேகமாய் எங்கள் அறைக்குச் சென்று கதவைத் தள்ளினேன். உறைந்துபோனேன்.

– தேவா இங்கென்ன நடக்கிறது?

– பார்க்கறீயே தெரியலை

– இது அசிங்கம், இத்தனை நாளாக மத்தவங்க சொன்னப்ப நான் நம்பலை, பொய் சொல்கிறார்களோ என்று நினைத்தேன்.

– உனக்கு யாரு என்ன சொன்னாங்க? ஷர்மிளாவா.. எங்கே பார்த்தாய் அவளை? இல்லை, ஒருவேளை இப்பவெல்லாம் நான் இல்லாத சமயமாகப் பார்த்து வீட்டுக்கு வருகிறாளா?

– ஏன் வீணாய் அவர்களை வம்புக்கு இழுக்கறீர்கள். வீட்டிற்குள் நுழையக்கூடாது என முகத்திலடித்தாற்போல நீங்கள் சொன்னதை அத்தனை சுலபமாக அவர்களால் மறக்க முடியுமா என்ன? அவர்களுக்கும் உணர்வு இருக்கிறது, மறுபடியும் இங்குவர தலை எழுத்தா என்ன?

– பின்னே யாரு, என்ன சொன்னார்கள்? பத்மா கிட்டே பேசினாயா?

– அவளா? எங்கே கிடைக்கிறாள். தொலைபேசி எண்ணைக்கூட மாற்றிவிட்டாளென்று சந்தேகம், சில நாட்களாகத் தொடர்புக் கிடைக்கமாட்டேன் என்கிறது. அவள் மட்டும் கையில் கிடைத்தாள் கடித்துக் குதறிவிடுவேன். ம்… உங்களைப் பற்றிச் சொல்ல யாரும் எங்கிருந்தும் வரவேண்டாம். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களே போதும். ஏய் எழுந்திருடி, முளைத்து மூணு இலைவிடலை, அதற்குள்ள உனக்கு ஆம்பிளை கேட்குதோ.

தமிழில் நான் பேசியபோதும் அவள் புரிந்துகொண்டாள். இதுவரை அமைதியாய் இருந்தவள், பதட்டமடைந்தவள்போல திடீரென்று கட்டிலிலிருந்து இறங்கிவந்தாள், மேலாடையின்றி இருக்கிறாள் என்பதைப் புரிந்துகொள்ள சில நொடிகள் பிடித்தன. மழையில் நனைந்த புறாபோல, அவளுக்கு உடல் வெடவெடக்கிறது, முதன் முதன்முறையாக நிர்வாணமாகப் பெண்ணொருத்தியை பார்க்கக் கண்கள் கூசுகிறது. அதிர்ச்சியில் என்னபேசுவதென்று தெரியாமல் ஊமையாக நிற்கிறேன். அதை புரிந்துகொண்டவள்போல சடாரென்று என்னை இறுக அணைத்துக்கொண்டு முத்தமிடுகிறாள், மலத்தை மிதித்ததுபோல ஓர் அருவருப்பு, அவள் வாயிலிருந்து மதுவின் மணம், எனக்குக் குமட்டுகிறது, அவளை உதறுகிறேன்.

– மதாம் இன்றைக்கு மட்டும் அனுமதிக்கணும், கொஞ்ச நேரத்துலே போயிடுவேன். இல்லைண்ணா, உங்க மிஸியேக்கிட்டச் சொல்லி வாங்கிக்கொடுங்க, நாளைக்கு அதற்கான பணத்தைக் கொடுத்திடுவேன். இங்கே பாருங்க, இது நல்ல வாட்ச், இருநூறு பிராங்க்குமேலே பெறும், உங்க மிஸியே அதை வேண்டாம் என்கிறார்.

– திருடின வாட்சா?

– இல்லை மதாம், எங்க அண்ணனுடையது..

– அவன் கொடுத்தானா?

தலையைக் குனிந்துகொண்டாள், கணத்தில் அவள் முகம் மாறிப்போனது. என்னை மறந்தவளாக அவனிடத்தில் ஓடினாள்.

– மிசியே மிசியே.. சில் வூ ப்ளே(தயவு செய்யுங்கள்)

– கொடுக்கிறேன், நான் சொன்னபடி செய்..-அவன்

அப்பெண் தயங்குகிறாள், என்னைப் பார்க்கிறாள்…குழந்தை ஹரிணி வீறிட்டு அழும் சத்தம், ச்சீ என்று கதவை அடைத்துவிட்டு வெளியில்வந்தேன், தேவசகாயத்தின் சிரிப்பும் இடைக்கிடை இளம்பெண்ணின் அழுகுரலும் வெகுநேரம் தொடர்ந்தது

செப்டம்பர் மாதம், ஹாலந்து நாட்டில் இளவரசி வில்லென்மின்(Wilhelmine) பட்டத்திற்கு வந்ததைக் கொண்டாடும் வகையில், இசை நாட்டிய நிகழ்ச்சி ஒன்றை, இளம் ராணுவ அதிகாரிகள் இருவர் ஏற்பாடு செய்திருந்தார்கள். எனக்கு அதில் முக்கிய பாத்திரமென்றார்கள். சந்தோஷமென்றாலும், ருடோல்ப் சம்மதிக்கவேண்டுமேயென நினைத்தேன். நான் நினைத்ததற்கு மாறாக அவர் அனுமதித்தார். தன்னை வேவு பார்ப்பவளை இப்படியான நிகழ்ச்சியில் பங்கெடுக்கவைப்பதன் மூலம் கொஞ்சநேரம் தான் நிம்மதியாக இருக்கமுடியுமென நினைத்திருக்கலாம்.. இசை நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது. ருடோல்ப் இருக்க பலரும் என்னுடன் நடனமாட விரும்பியதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவருக்கில்லை. அவர் மனதில் தேவையற்ற சந்தேகங்கள். அவரது நடவடிக்கைகளுக்காக நான் பழிவாங்குகிறேனோ என்று நினைத்தார்:

– போதும் புறப்படு

– எங்கே?

– எங்கே போகணும், வீட்டுக்குத்தான்.

– இன்னும் நிகழ்ச்சி முடியலையே, வந்திருப்பவர்கள் என்ன நினைப்பாங்க..

– இங்கே நான் என்ன நினைப்பேன் என்பதுதான் முக்கியம். ஏற்கனவே உன்னிடத்தில் கிளிப்பிள்ளைக்குச் சொல்வதுபோல பலமுறை சொல்லி இருக்கிறேன், எவனாச்சும் பல்லை இளித்துக்கொண்டு கிட்டேவந்தால், ஒதுங்கிப் போகணுமென்று.

– நான் இல்லைண்ணு சொல்லலை, ஆனா ஒரு நிகழ்ச்சிக்குண்ணு வந்திட்டு, ஒருத்தர்கிட்டேயும் பேசக்கூடாதுண்ணா எப்படி, நான ஒவ்வொருத்தனா தேடிப்போய் பேசினேன். அவர்கள் நிகழ்ச்சிக்கு நம்மை அழைத்தபோது, இப்படியெல்லாம் நடக்குமென்று தெரிந்தே, எனக்கு இதில் சம்மதமில்லை, நிகழ்ச்சிக்கு வரமாட்டேன் என்றேன். நீங்கள் அவர்கள் எதிரில், இருவரும் போவதுதான் அழகு என்றீர்கள். உங்கள் உடம்பு முழுக்க விஷம். மற்றவர்கள் எதிரில் ஒரு பேச்சு, நாம் இருவரும் தனியாய் இருக்கையில் ஒரு பேச்சு. பிறவி நடிகன் எனச் சொல்கிறவனெல்லாம் தாளம் போடணும்…ம்

– என்னமோ முணுமுணுத்த மாதிரி கேட்டது

– சத்தமாதான் பேசறேன், எனக்கென்ன பயம்?

– உனக்குப் பயமும் மாத்திரமில்லை, உனக்கு வெட்கம், மானம் சூடு, சுரணை, எதுவுமில்லை. கொழுப்பெடுத்தவ, நீ கவிதை அது இதுண்ணு எழுதறபோதே யோசிச்சிருக்கணும்.

– கவிதை எழுதற ஆண்பிள்ளைக்கெல்லாம் உடம்பில் கொழுப்பே இல்லையென்று சொல்லிடாதீங்க. நீங்க சொல்ற சூடு, சுரணைக்கெல்லாம் கொழுப்பு அவசியம் தேவை. அப்படி இருந்திருந்தா என்னுடைய கவிதையை உங்களுடையதுண்ணு சொல்லி வார இதழொன்றுக்கு அனுப்பி இருக்கமாட்டீங்க..

தேவா கையை ஓங்கினான், சாலையில் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

– உனது கையில் குழந்தை இருக்கிறது என்றுபார்க்கிறேன், இல்லையெனில், வீதியில் இருக்கிறோம் மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்றெல்லாம் யோசிக்கமாட்டேன்.

– பரவாயில்லையே, தேவா படிப்படியாக உங்கள் குணத்தில் முன்னேற்றம் தெரிகிறதே, வீதிவரைக்கும் வந்திருக்கிறீர்கள். பாராட்டுகள், எனச் சொல்லிவிட்டு குழந்தையுடன், காரை நோக்கிச்சென்றேன். என்னை அவன் அடிக்கக் கையை ஓங்கத் தொங்கியது அதுதான் முதல் முறை.

எங்களுக்குள்ளான விரிசல்களின் எண்ணிக்கைகூடிக்கொண்டு சென்றது. நாங்கள் பொருத்தமான தம்பதி அல்லவென்பதும், தெளிவாயிற்று . ருடோல்புடைய சிறுமையும்; நேர்மையற்ற தன்மையும்; மிருகக் குணமும்; ஆணாதிக்க மனோபாவமும், சுதந்திரம்; பெண்ணியம் என்றிருந்த எனது குணங்களுக்கு நேர்மாறாக இருந்தன. சுற்றிலும் நிறைந்திருந்த காட்டின் நிசப்தம், எனது அறைக்குள்ளும் எட்டிப்பார்க்கிறது. திறந்திருக்கும் சாளரத்தின் ஊடாகப் படபடத்தபடி அலையும் பட்டாம் பூச்சிகள்…ம்.. ஆயுட்காலம் குறுகியதென்றாலும், பொறாமைகொள்ளவைக்கும் வண்ணமயமான வாழ்க்கை…தனிமைக்குப் பழகுகிறேன், ஆனந்தமாக இருக்கிறது, ஒருவித யோகநிலை, அதை செயல்படுத்துவதற்கென சில வழிமுறைகள் வைத்திருந்தேன்: முழங்கால்களை மார்புபட முடக்கி, முன் கைகளால் அவற்றை இறுகப் பிடித்து, தலையை வளைத்து, முகத்தைப் புதைத்து; எனக்குள்ளேயே அடைக்கலம் தேடி; எனக்குள்ளேயே கரைந்து; என்னுள் நிகழும் ஊமை அதிர்வுகளை அலட்சியம் செய்து; ஜாவாபிரதேசத்து எரிமைலகளைப்போல அமைதி காக்கவும்; மரவட்டைபோல சுருண்டு கிடக்கவும் கற்றிருந்தேன். ஆழ் துயிலில் விழுந்த உயிர்போல, அசையாமல் பல்லிகளின் நடமாட்டத்தை அண்ணாந்து பார்த்தபடி இருப்பேன். வந்துபோகும் தேனீக்களை எண்ணுவேன். சில நேரங்களில் எனக்கே என்னை பிடிக்காமற்போயிற்று. அப்படியான நாளொன்றில் ‘தசீமா’, இராமாயண நாட்டிய நாடகம்பற்றி, ஒரு முறை கூறினாள். இரவுபகலாக தீவிர பயிற்சியெடுத்துக்கொண்டு, உள்ளூர் பெண்கள் புனிதச் சடங்காக அதை மேடை ஏற்றுவதை மிக ஆர்வத்துடன் விவரித்தாள். சென்றுபார்த்தேன். அக்கலை வடிவம் ஆச்சரியத்தை அளித்தது. வெறும் தாகத்தையும் தகுதி இன்மையையும் வெளிபடுத்துவது மாத்திரம் அதன் நோக்கமல்ல என்பதை புரிந்துகொண்டேன். வேட்கை என்பது மதங்களுக்கான அடிப்படைத்தேவை மட்டுமல்ல, மனித உயிர்களின் அடிப்படை தேவைகூட என்பதையும் அப்போது அறிந்தேன்- மார்க்கரீத் மாத்தாஹரியாக மறுபிறவி கண்டதும், முத்திரைகள் பிடிக்க எனதுவிரல்கள் பழகவும் அன்றுதான் ஆரம்பம்.

(தொடரும்)
————————————————————————————————————————————–
1. Toempeng – இந்தோசீனாவில் ஜாவாவைச் சேர்ந்த சிறியதொரு நகரம்.

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா