• Home »
  • கதைகள் »
  • எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 3 பாகம்: 1-2)

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 3 பாகம்: 1-2)

This entry is part of 32 in the series 20070531_Issue

சி. ஜெயபாரதன், கனடா


ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்
(அக்டேவியஸ், ஆண்டனி ஒப்பந்தப் போர்கள் )

(ரோமானிய வீரர்களைப் பார்த்து)
பரிவு காட்டுவீர் எனக்கு இந்த இரவில் !
உங்கள் கடமை நிழலான என்னை
இனிக் காணா திருப்பது !
வேறொரு தலைவருக் குழைக்கச் செல்வீர் !
உங்களைப் பார்த்தால் என்னிட மிருந்து
விடை பெறும் நபராய்த் தெரியு தெனக்கு.
விரட்ட வில்லை இன்றுநான் உங்களை !
மரணம் வரும்வரை கடமையை விட்டுப்
பிரிந்து செல்லேன், பரிவு காட்டுவீர்,
உத்தமப் படை வீரரே!
இரண்டு மணி நேரம் மட்டும்
இன்றைய இரவில் உடனிருப்பீர்
வேறெதுவும் வேண்டேன். (ஆண்டனி)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

ஈதோ இங்குள நான்தான் ஆண்டனி !
மூர்க்கனே,
எனது இந்த தோற்றதை
இனிக் காட்ட இயலாது ஆயினும் !
போர்கள் புரிந்தது நான் எகிப்துக் காக !
எகிப்த் ராணிக்காக ! அவள்
இதயம் கவர்ந்தாய் எண்ணினேன், !
ஏனெனில் அவள்
என்னுளத்தைப் பிடித்துக் கொண்டவள் !
என்னுடைய தாயினும்
அவள் நெஞ்சமதை இழந்தோன்,
அத்துடன் ஆயிரம் ஆயிரம்
நெஞ்சங்களும் இழந்து போயின !
அழாதே கனிவு ஈராஸ் !
நமது முடிவுகளை நாமே முடித்திட
நாமெல்லாம் விடப் பட்டிருக்கிறோம் ! (ஆண்டனி)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

Fig. 1
Defeated Antony walking alone

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ்: ரோமின் மூன்றாம் தளபதி
எனோபர்பாஸ்: ஆண்டனியின் ஆலோசகன், பாதுகாவலன்
கானிடியஸ்: ஆண்டனியின் போர்த் தளபதி
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
·பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன், இளைய பாம்ப்பி)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

கிளியோபாத்ரா
அங்கம்:8 காட்சி:3

ரோமா புரியின் நிலைமை: ·பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி ·புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீண்டு மனைவியை மறந்து கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்து மயங்கிக் கிடக்கிறான். ஆண்டனியைத் தண்டிக்க அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் ஆக்டியக் கடற் பகுதியில் போரிட்டு வெற்றி அடைகிறான். தோற்றுப் போன ஆண்டனி ஆக்டேவியஸ் தூதரை விட்டு அனுப்பிய நிபந்தனைகளில் கையொப்பமிடுகிறான். ஆயினும் இருவருக்குள்ளும் நிரந்தரப் பகை உண்டாகி, ஆண்டனி எகிப்தில் அடைபட்டுப் போகிறான். அவனைக் கைது செய்ய அக்டேவியஸ் எகிப்துக்குத் துரத்திச் செல்கிறான்.

++++++++++++++++++
Fig. 2
Angry Cleopatra

கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 3 பாகம் -1

நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவுக்கு அருகில் உள்ள ஓரிடத்தில் அக்டேவியஸின் ரோமானியக் கூடாரங்கள், பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: ரோம் தளப்தி அக்டேவியஸ், அக்கிரிப்பா, மேஸனெஸ், ரோமானியக் காவலர், படைகள்.

காட்சி அமைப்பு: அக்டேவியஸ் தன் கூடாரத்தில் நின்று கொண்டு கடிதம் ஒன்றை வாசிக்கிறான்.

அக்டேவியஸ்: [கோபத்துடன்] மகா பெரிய ஆண்டனி என்னைச் சின்னப் பையா என்று விளித்திருக்கிறார் ! என்ன திமிர் அவருக்கு! சீஸருக்குப் பிறகு ரோமாபுரிக்கு நான்தான் சீஸரின் வாரிசு! துரோகிகள், காஸியஸ், புரூட்டஸ் ஆகியோரைத் தோற்கடித்த தீரன் நான்! ஆண்டனி திட்டமிட்டாலும் முன்னின்று போரிட்டுச் சதிகாரரைச் சரணடைய வைத்தவன் நான். வேசி கிளியோபாத்ரா மடிமேல் தலைவைத்துக் கொண்டு, ஆண்டனி என்னைப் பொடியன் என்று கேலி செய்கிறார். எனது தூதனைச் சவுக்கால் அடித்திருக்கிறார் ஒற்றைக்கு ஒற்றை எனச் சவால் விட்டு எனைச் சண்டைக்கு அழைக்கிறார். வயதான மூர்க்கன் ஆண்டனி அறியட்டும். பலவழிகள் உள்ளன நான் சாவதற்கு! போயும், போயும் அவர் கையில் நான் ஏன் சாக வேண்டும்? எல்லாரும் சிரிக்க வேண்டும் அவரது சவாலைப் பார்த்து!
Fig. 3
Disappointed Cleopatra

மேஸனெஸ்: சிந்திக்க வேண்டும் அக்டேவியஸ்! மகா பெரிய ஆண்டனி அப்படி ஆத்திரமாக உங்களைக் கடிந்தால் அவரை விரட்டி வேட்டையாடுவோம். மூச்சு விட முடியாதபடி அவரை நசுக்க வேண்டும். கோபப்பட வேண்டாம் நீங்கள்! ஆண்டனியைப் பிடித்து உங்கள் காலில் விழ வைக்கிறோம்.

அக்டேவியஸ்: படை வீரர் அனைவருக்கும் தெரியட்டும். நாளை நமது இறுதிப் போர்! நாமெல்லாம் வல்லமையோடு போரிட வேண்டும். நமது படைக்குழுவில் ஆண்டனியிடம் பணிசெய்த வீரர் உள்ளார், நினைவில் இருக்கட்டும். நீங்கள் அவரைப் பின்னால் தள்ளிவிட்டு, ஆண்டனியை முற்றுகை செய்வீர்! உயிரோடு ஆண்டனியைப் பிடித்துக் கொண்டு வாருங்கள்! அக்கிரிப்பா! முதலில் அனைத்து வீரருக்கும் பெரு விருத்து அளித்திடு! வயிறு புடைக்க உண்ணட்டும்! பட்டினிப் படைத் தட்டி விழுந்திடும் என்பது பழமொழி! நடக்கட்டும் நல்விருந்து! நாமும் கலந்து கொள்வோம்.

[எல்லாரும் போகிறார்கள்]

+++++++++++++++++++

கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 3 பாகம் -2

நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ராவின் அரண்மனை, பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, ஆண்டனி, சார்மியான், ஈராஸ், அலெக்ஸாஸ், போர்த் தளபதி எனோபர்பஸ்,

காட்சி அமைப்பு: தோற்றுப் போன ஆண்டனிக்கும், ரோமாபுரியின் தளபதிக்கு அக்டேவியசுக்கும் பகைமை அதிகரித்து அவரிடையே மறுபடியும் போர் மூளும் பிரச்சனைகள் எழுகின்றன. ஆண்டனி, எனோபர்பஸ் இருவரும் அக்டேவியஸை எதிர்த்து மீண்டும் தளப்போருக்குப் போகத் தயாராகிறார்கள்.

ஆண்டனி: எனோபர்பஸ், என்ன சொன்னாய் ? அக்டேவியஸ் என்னுடன் ஏன் போரிட வரமாட்டான்?

எனோபர்பஸ்: அவரினி உங்களுடன் போரிட மாட்டார்.

ஆண்டனி: ஏன் போரிடப் போவதில்லை?

எனோபர்பஸ்: அக்டேவியஸ் உங்களை விடத் தன்னிடம் இருபது மடங்கு படைப்பலம் உள்ளதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறார். உங்களிடம் உள்ள ஒவ்வொரு ரோமானிய வீரனுக்கும் அவரிடம் இருபது போர் வீரர் இருக்கிறாராம்.

ஆண்டனி: திடீரென நாம் தாக்க வேண்டும். நாளைக்கே நாம் போருக்கு போவோம். கடற் போராயினும் சரி, தளப் போராயினும் சரி, நான் தயார். அல்லாவிடில் நான் உயிர்வாழ்ந்து என் குருதியிலே குளித்துச் செத்து விடுவேன். எகிப்து ரோமானியருக்கும், இத்தாலிய ரோமானியருக்கும் நடக்கும் போரில் நீ என்னுடன் சேர்ந்து போரிடுவாயா? இறுதிவரை சேர்ந்து போர் புரிவாயா?

எனோபர்பஸ்: நிச்சயம் சேர்ந்து போரிடுவேன். ஏனப்படிக் கேட்கிறீர்? உமக்காகப் போரிட்டு என்னுயிரை இழக்கத் தயார். ஆனால் முடிவில் மடிபவர் அனைவரும் ரோமானியர்! ரோமானியரே ரோமானியரைக் கொல்லும் ரோமானிப் போர்! எந்த ரோமானியன் யார் பக்கம் சேர்வதென்று எங்களிடையே குழப்பம் உண்டாகி விட்டது, ஆண்டனி! நானே குழம்பிக் போயுள்ளேன்.

[அப்போது காயப்பட்டு நொண்டிக் கொண்டு நான்கு படைவீரர் நுழைகிறார்)
Fig. 4
The Collapsed Antony

ஆண்டனி: [எழுந்து வரவேற்று கைகுலுக்கக் கையை நீட்டி] கொடுங்கள் உமது கரங்களை. உத்தரவுக்குப் பணிந்து மெய்வருத்திப் போரிட்ட நீவீர் யாவரும் உத்தமர். செம்மையாகப் போரிட்டீர். புகழ் பெற்றீர். ஆனால் நீங்கள் தோற்றது என்னால். தவறு என்மீதுதான். கடற்போர் வேண்டமென என்னைத் தடுத்த போர் ஆலோசகரை எல்லாம் புறக்கணித்தேன். உன்னத வீரர் நீவீர்! உமக்குத் தலை வணங்குகிறேன்! உம்மைப் போல் ஓராயிரம் வீரர் இருந்தால் போதும்.

கிளியோபாத்ரா: (எனோபர்பசுடன் மெதுவாகப் பேசி) ஈதென்ன பேசுகிறார் ஆண்டனி? எனக்கொன்றும் புரிய வில்லையே. படைவீரருடன் என்ன பரிவாகப் பேசுகிறார்?

எனோபர்பஸ்: [மெதுவாக] இது பழைய சாதுரியம் ! மன வேதனையில் கொட்டும் சோக வரிகள்! உண்மையான ஆண்டனி மாதிரி அவர் பேசவில்லை.

ஆண்டனி: [சோகக் கண்ணீருடன்] சேனை வீரர்களே ! நீவீர் உண்மையாய்ப் போரிட்ட வீரர்கள்! தீரர்கள்! உத்தமர்கள்! ஆனால் நீங்கிச் செல்வீர் என்னை விட்டு! என் ஆதிக்கம் முடிவடைந்தது! வேறொரு தளபதிக்கு வேலை செய்யப் போவீர்! உங்கள் கண் என்னை நோக்கினாலும், உங்கள் கால்கள் உங்களை வாசலுக்குத் திருப்புகின்றன! நீங்கிச் செல்வீர் என்னை விட்டு! மரணம் வரும்வரை என் வாள் உயிருடன் என் கரத்தில் நிற்கும். என்னைக் காப்பதினி உங்கள் பொறுப்பில்லை! நீங்கிச் செல்வீர்! நான் என்னைக் காப்பாற்றிக் கொள்கிறேன்.

எனோபர்பஸ்: [வெறுப்புடன்] போதும், போதும் ஆண்டனி! போர் வீரர் விழிகளில் கண்ணீர் விழுவதைப் பாருங்கள்! ஆடவரைப் பெண்களாய் மாற்றிக் கோழைகளாய் அழவிடாதீர்!

ஆண்டனி: என் கண்ணில் நீர் வடிந்தால், அவர் கண்ணிலும் நீர் வழியும்! ஆண்டனி அழவில்லை! தோற்காத ஆண்மை வீரன் ஆண்டனி அன்றே செத்து விட்டான்! பிழைத்திருக்கும் இந்த ஆண்டனி அவனுடைய நிழல். கோழை ரோமன்! ஆன்மா பறந்துபோய் வெற்றுக் கூடாக உலவி வரும் நான் உண்மையாக ஆண்டனி அல்லன். நீங்கிச் செல்வீர் என்னை விட்டு!
Fig. 5
Cleopatra in her Ship


கிளியோபாத்ரா: [கோபமாக] அப்படிச் சொல்லாதீர் ஆண்டனி! ரோமானியச் சேனை நமக்குத் தேவை. தோற்றுக் கீழே விழுவது தவறாகாது. ஆனால் விழுந்து கிடப்பவர் எழுந்து நிற்காதுதான் தவறு. எழுந்து நில் ஆண்டனி! நிமிர்ந்து செல் ஆண்டனி! போரிட்டு வெல் ஆண்டனி! இன்னும் சூரியன் அத்தமிக்க வில்லை! நானிருக்கிறேன் உமக்கு! எகிப்த் படை உள்ளது உங்கள் உதவிக்கு.

ஆண்டனி: கிளியோபாத்ரா! போதும் உன் உதவி! ஆனால் போதாது உன் உதவி! உன்னுரைகள் உறுதி அளித்த அந்த ஆண்டனி உன்முன் னில்லை ! அவன் ஆக்டியம் கடற்போரில் என்றோ மூழ்கி விட்டான். மீண்டும் எழ முடியாத ஆழத்தில் அடங்கி விட்டான்! உன் காதல் மூச்சு அவனை உயிர்ப்பித்து எழுப்பாது! உங்கள் பிரமிட் கோபுரத்தில் எனக்கு ஓரிடம் ஒதுக்கு! மன்னனில்லாத ரோமானியனை பிரமிட் கோபுரம் ஏற்றுக் கொள்ளுமா?

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (May 30, 2007)]

Series Navigation