எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்: 8 காட்சி: 2 பாகம்: 2)

This entry is part of 31 in the series 20070524_Issue

சி. ஜெயபாரதன், கனடா


என் செவிகள் கேளா, ஆண்டனி இச்சைகளை
ஏற்றுக் கொள்வேன் எகிப்தரசி வேண்டுகோள்
அவமானப் பட்ட ஆண்டனியை விரட்ட வேண்டும்
அன்றி அவனைக் கொன்றிட வேண்டும்
அப்படிச் செய்தால் மன்னிப் பளிப்பேன்!
அதுவே என்பதில் அவரிருவ ருக்கும். (அக்டேவியஸ் அம்பாசிடரிடம் கூறியது)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

வாக்குத் திறமை காட்டும் தருண மிதுதான்!
கிளியோ பாத்ராவைக் கவர்ந்து பிரித்திடு அவனை!
பெருத்த அதிர்ஷ்டம் மாதர் உறுதி கலைத்திடும்!
விருப்புடன் முயன்றிடு! தந்திரம் கைக்கொள்!
நமது சட்ட மூலம் பதில் அளிப்போம். ……
காண்பாய் நீயே! தனது தவறுக்குள்
ஆண்டனி குப்புற வீழ்வதை!
அவரது மோகம் அவர் நடத்தையில் காணும்! …. (அக்டேவியஸ்)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

கனிவுத் தூதனே! அக்டே வியஸிடம் சொல்லிடு
வெற்றிக் கையை முத்தமிடு கிறேன்!
பொற் கிரீடமதை அவர் பாதத்தில் வைப்பேன்!
மண்டி யிடுவேன்! உரைத்திடு அவரிடம்,
முழு மூச்சாய் அவர் கட்டளை முழக்கும்,
முடிவுக் காலம் எகிப்தில் நெருங்கு தென்று! (கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ்: ரோமின் மூன்றாம் தளபதி
எனோபர்பாஸ்: ஆண்டனியின் ஆலோசகன், பாதுகாவலன்
கானிடியஸ்: ஆண்டனியின் போர்த் தளபதி
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
•பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன், இளைய பாம்ப்பி)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

கிளியோபாத்ரா
அங்கம்:8 காட்சி:2 பாகம்:2

ரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீண்டு மனைவியை மறந்து கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்து மயங்கிக் கிடக்கிறான். ஆண்டனியைத் தண்டிக்க அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் ஆக்டியக் கடற் பகுதியில் போரிட்டு வெற்றி அடைகிறான். தோற்றுப் போன ஆண்டனிக்கு ஆக்டேவியஸ் தூதரை அனுப்பி நிபந்தனைகளில் கையொப்பமிடச் சொல்கிறான்.

++++++++++++++++++

கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 2 பாகம்: 2

நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ராவின் அரண்மனை, பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, சார்மியான், ஈராஸ், ஆண்டனி, போர்த் தளபதி எனோபர்பஸ், அக்டேவியஸின் அம்பாசிடர், தூதுவன் திடயாஸ்.

காட்சி அமைப்பு: கிளியோபாத்ரா ஆண்டனியின் போர்த் தளபதியுடன் வாதாடுகிறாள். ஆக்டியப் போரில் வெற்றி பெற்ற அக்டேவியஸ் நிபந்தனைகளை நிறைவேற்ற தனது அம்பாசிடரை எகிப்துக்கு அனுப்புகிறான். அந்த நிபந்தனைகள் ஆண்டனி, கிளியோபாத்ரா இருவரையும் பெருமளவில் பாதிக்கின்றன.

ஆண்டனி: [கோபத்துடன்] திடயாஸ், மடையா ! உன்னைச் சவுக்கால் அடிக்க வேண்டும்! உன் வாயைக் கிழிக்க வேண்டும். அந்தச் சிறுவன் அக்டேவியஸ் ஆத்திரத்தில் கொட்டிய வார்த்தைகளை என்னிடம் முதலில் சொல்லாமல், எப்படி நீ மகாராணியிடம் கூறலாம் ? என்னை அவமதித்து எகிப்த் ராணியையும் எப்படி நீ அவமதிக்கலாம்? யாரங்கே ? இழுத்துச் செல்லுங்கள் இவனை, சவுக்கால் அடித்து இரத்தம் சொட்டுச் சொட்டாய் ஒழுக வேண்டும் !

[எனோபர்பஸ் வாயில் முணுமுணுத்துக் கொண்டு தூதுவனை இழுத்துச் செல்கிறான்.]

எனோபர்பஸ்: [திரும்பி ஆண்டனியைப் பார்த்து மௌனமாக] பல்போன கிழட்டுச் சிங்கத்துக்குப் பணி செய்வதை விட பல் முளைக்கும் சிங்கக் குட்டிக்கு வேலை செய்யலாம்.

ஆண்டனி: சவுக்கால் அடியுங்கள், ஆனால் சாகக் கூடாது அவன் ! அது கொலை ஆகும், வேண்டாம். சவுக்கடியை அவன் ஆத்மா அணு அணுவாய்ச் சுவைக்க வேண்டும். தான் சொல்லியது தவறு தவறு என்று சிந்தும் செங்குருதித் துளிகள் அனைத்தும் அலற வேண்டும்! சவுக்கடி விழட்டும், மின்னல் அடிப்பது போல்! இடியாய் வெடிக்கட்டும் அவன் விடும் அழுகுரல்.

திடயாஸ்: (திரும்பிப் பார்த்து) தளபதியாரே! நான் தூதுவன்! … என்ன பதில் சொல்ல வேண்டும் அக்டேவியசுக்கு?

ஆண்டனி: சவுக்கடி வாங்கிய பின் திரும்பி வா! அக்டேவியசுக்குப் பதில் தருகிறேன். [திடயாஸ் இழுத்துச் செல்லப் படுகிறான்] [கிளியோபாத்ராவைப் பார்த்து] கண்ணே கிளியோபாத்ரா, நீ ஒரு நவரத்தினக் கல்! மாதருள் மாணிக்கம்! மங்கையர்க்கரசி! நான் திரும்பி வருவதற்குள் உன்னைக் காயப்படுத்தி விட்டானே அந்த உலுத்தன் !

கிளியோபாத்ரா: [புன்முறுவல் பூத்து, ஆண்டனியை நெருங்கி] உங்களை அவமதித்தவன் என்னை அவமதிதவனே! நீங்கள் நிறுத்தாவிட்டால் அவனது தலையைச் சீவி இருப்பேன். பிழைத்துக் கொண்டான்.

ஆண்டனி: [கோபத்துடன்] ஆனால் கிளியோபாத்ரா! உன் மனம் அலைமோதுதே ஏன் ? என்னை நீ வெளியே தள்ள வேண்டும் என்று அக்டேவியஸ் ஆணையிட்ட போது, அதை நிறைவேற்ற இசைபவள் போல் ஏன் பாசாங்கு செய்தாய் ? அது உண்மையா? அல்லது நடிப்பா? வெளியே முறுவல் பூக்கும் நீ உள்மனதில் கள்ளமுடன் உள்ளாய்! ஆக்டியப் போர் முடிவதற்குள் என்னைத் தனியே விட்டுவிட்டு ஏனிங்கு ஓடிவந்தாய்?

கிளியோபாத்ரா: [கவலையுடன்] என்மீது சந்தேகப் படாதீர். நீங்கள் யுத்த களத்தில் மாண்டு விட்டதாக புரளியைக் கிளப்பி விட்டார்கள்? என்னைப் பயம் பற்றிக் கொண்டது! அதனால்தான் ஓடிவந்தேன்.
நீங்கள் போன பின் என்னைக் காப்பவர் யார்? அக்டேவியசின் மூர்க்கக் கரங்களில் சிக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. சீஸர் மாண்டதும் என்கதி அப்படித்தான் ஆனது. அலெக்ஸாண்டிரியாவுக்கு ஓடி வந்து விட்டேன், நினைவிருக்கிறதா?

ஆண்டனி: [கேலியாக] சீஸர் செத்தபின் ஆண்டனி! ஆண்டனி செத்தபின் அக்டேவியஸைப் பிடித்துக் கொள்ளலாம் என்று தானே ஓடிவந்தாய்?

கிளியோபாத்ரா: [அருவருப்பாக] என்ன கீழ்த்தரமாகப் பேசுகிறீர்? போர்களத்தில் காணாமல் போன் உங்களைத் தேடி எகிப்த் ராணி சென்றால் என்ன ஆகியிருக்கும் தெரியாதா? நானும் அக்டேவியஸின் சிறைக் கைதியாய் அடைக்கப்பட்டு இப்போது உங்கள் முன் நிற்க மாட்டேன்.. தனிப்பட்டுப் போன நான் வேறென்ன செய்வேன் ? இங்கு எனக்குப் பாதுகாப்பு உள்ளது. நடுக்கடலில் என்ன இருக்கிறது ?

[அப்போது சவுக்கடி வாங்கித் தொய்ந்து வரும் திடயாஸை இழுத்து வருகிறார்கள்]

திடயாஸ்: [ஆண்டனி காலில் விழுந்து] தளபதி, அறிவு வந்தது எனக்கு ! உங்கள் பாதங்களை என் குருதி கழுவுகிறது. நான் சாவதற்குள் சீக்கிரம் உங்கள் பதிலை அக்டேவியசுக்குக் கொண்டு செல்ல வேண்டும். எகிப்திலே என்னுடல் புதைக்கப் படக் கூடாது.

ஆண்டனி: அந்தப் பொடியன் அக்டேவியஸிடம் இந்தச் செய்தியைக் கொடு! என் கோபத்தைக் கிளறினார் என்று சொல்! கிளியோபாத்ராவின் மனத்தைக் கீறினார் என்று சொல்! எகிப்தை விட்டு நான் நீங்க மாட்டேன் என்று சொல்! கிளியோபாத்ரா என்னை மணந்து கொண்டாள் என்று சொல். ஆயினும் அவன் அருமைத் தங்கை அக்டேவியாவை விலக்கிட வில்லை என்று சொல்! போ நான் சொன்னதை எல்லாம் விடாமல் சொல்!

கிளியோபாத்ரா: [ஆங்காரமாக] ஆண்டனி என் கணவர் என்று அக்டேவியஸிடம் சொல்! அவரது குழந்தை என் வயிற்றில் வளர்ந்து வருகிற தென்று சொல்! ரோமாபுரியில் அவருக்கு இடமில்லை என்றால்
எகிப்தில் அவர் நிரந்தரமாக என்னுடன் வாழ்வார் என்று சொல். நீ போகலாம் இப்போது.

[திடயாஸ் வணக்கம் செய்து போகிறான்]

ஆண்டனி: (கிளியோபாத்ரா நெருங்கி அணைத்துக் கொண்டு) அக்டேவியஸ்! ரோமை நீயே ஆட்சி செய், ஆனால் எங்களை வாழ விடு! நாங்கள் மகிழ்ச்சியோடு இங்கே வாழ்கிறோம். …… கிளியோபாரா, உன்னை நான் சந்தேகப்பட்டதற்கு என்னை மன்னித்து விடு. தோற்றுப் போன என்மனம் திசை தெரியாமல் அலைகிறது. யாரையும் என்னால் நம்ப முடிய வில்லை.

கிளியோபாத்ரா: (ஆண்டனியை நெருங்கி) என்னருமை ஆண்டனி! என்னை நம்புங்கள். எனக்கு நீங்கள்தான் துணை. என் மனதில் உங்களைத் தவிர வேறு யாருமில்லை! உங்களுக்குப் பிறகு இனி என்னுள்ளத்தில் வேறு யாரும் நுழைய முடியாது. … ஓ, இன்று எனது பிறந்த நாள்! கோலாகலப் பிறந்தநாள் கொண்டாட்டம் உள்ளது! மன்னர்களுக்கு விருந்தும் கன்னியர்கள் ஆட்டமும் உள்ளது. எனது பிறந்தநாள் பரிசு நீங்கள்! நான் அதற்கு பிரதி உபகாரம் அளிக்க வேண்டும்.

[இருவரும் போகிறார்கள்]

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (May 23, 2007)]

Series Navigation