எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:8 காட்சி:2)
சி. ஜெயபாரதன், கனடா
ஆண்டனியின் சொத்துக்குரிய அதிபதி!
அவர் வந்தனம் தெரிவிக்கிறார் உமக்கு!
எகிப்தில் வாழ விருப்பமாம்! இல்லை யெனின்,
பூமிக்கும் வானுக்கும் இடையே மூச்சு விட்டு
ஏதென்ஸில் தனித்திருக்க வேண்டுகிறார்.
கிளியோ பாத்ரா அடிபணிவாள் உம் ஆணைக்கு! (அக்டேவியஸின் அம்பாசிடர்)
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
என் செவிகள் கேளா, ஆண்டனியின் இச்சைகளை!
ஏற்றுக் கொள்வேன் எகிப்த் ராணி வேண்டுகோள்!
அவமானப் பட்ட ஆண்டனியை விரட்டு வாளா?
அன்றி அவனைக் கொன்றிடு வாளா?
அப்படிச் செய்தால் மன்னிப் பளிப்பேன்!
அதுவே எனது பதில் அவரிருவ ருக்கும். (அக்டேவியஸ் அம்பாசிடரிடம் கூறியது)
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
வாக்குத் திறமையைக் காட்டு, தருண மிதுதான்!
கிளியோ பாத்ராவைக் கவர்ந்து பிரித்திடு அவனை!
பெருத்த அதிர்ஷ்டம் மாதர் உறுதியைக் கலைத்திடும்!
விருப்புடன் முயன்றிடு! தந்திரம் கைக்கொள்!
நமது சட்டம் மூலம் பதில் அளிப்போம். ……
காண்பாய் நீயே! தனது தவறுக்குள்
ஆண்டனி குப்புற வீழ்வதை!
அவரது மோகம் அவர் நடத்தையில் தெரியும்! …. (அக்டேவியஸ்)
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
கனிவுத் தூதனே! மகா அக்டேவியஸிடம் சொல், அவர்
வெற்றிக் கையை முத்தமிடு கிறேன்!
பொற் கிரீடத்தை அவர் பாதத்தில் வைப்பேன்!
மண்டி யிடுகிறேன்! உரைத்திடு அவரிடம்,
முழு மூச்சாய் அவர் கட்டளை முழக்கும்,
முடிவுக் காலம் எகிப்தில் நெருங்கு தென்று!
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்
நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்
ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ்: ரோமின் மூன்றாம் தளபதி
எனோபர்பாஸ்: ஆண்டனியின் ஆலோசகன், பாதுகாவலன்
கானிடியஸ்: ஆண்டனியின் போர்த் தளபதி
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
•பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன், இளைய பாம்ப்பி)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)
கிளியோபாத்ரா
அங்கம்:8 காட்சி:2
ரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீண்டு மனைவியை மறந்து கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்து மயங்கிக் கிடக்கிறான். ஆண்டனியைத் தண்டிக்க அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் ஆக்டியக் கடற் பகுதியில் தாக்க வருகிறான்.
++++++++++++++++++
கிளியோபாத்ரா
அங்கம்:8 காட்சி:2
நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ராவின் அரண்மனை, பகல் வேளை.
நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, சார்மியான், ஈராஸ், ஆண்டனி, போர்த் தளபதி எனோபர்பஸ், அக்டேவியஸின் அம்பாசிடர், தூதுவன் திடயாஸ்.
காட்சி அமைப்பு: கிளியோபாத்ரா ஆண்டனியின் போர்த் தளபதியுடன் வாதாடுகிறாள். ஆக்டியப் போரில் வெற்றி பெற்ற அக்டேவியஸ் நிபந்தனைகளை நிறைவேற்ற தனது அம்பாசிடரை எகிப்துக்கு அனுப்புகிறான். அந்த நிபந்தனைகள் ஆண்டனி, கிளியோபாத்ரா இருவரையும் பெருமளவில் பாதிக்கின்றன.
கிளியோபாத்ரா: (மன வருத்தமுடன்) இப்போது என்ன செய்வது எனோபர்பஸ் ? எனது முப்பது கப்பல்கள் மூழ்கிப் போயின! மூவாயிரம் எகிப்தியர் செத்துக் கடலில் மூழ்கினார்! இதுவரை எகிப்த் இப்படித் தோற்றுப் போனதில்லை! என்ன செய்வது? இத்தோல்விக்கு யார் காரணம் நாங்களா அல்லது ஆண்டனியா?
எனோபர்பஸ்: மகாராணி! தோற்றுப் போனதற்கு நீங்கள் காரணமில்லை! ரோமானியருடன் ரோமானிர் போரிட்டால் தோற்பதும் ரோமானியர், வெற்றி பெறுவதும் ரோமானியர்! அக்டேவியஸ் வெற்றி பெற்ற ரோமானியர்! ஆண்டனி தோற்றப் போன ரோமானியர்! ஆண்டனிதான் தோல்விக்குக் காரணம்! வேறெவரும் இல்லை. கடற்போர் வேண்டா மென்று தடுத்தும் ஆண்டனி கேட்கவில்லை. தரைப் போருக்கு அக்டேவியஸை அழைப்போம் என்று கூறிய ஆலோசனையைக் கேட்கவில்லை, ஆண்டனி. அவர் செய்த தவறுகளால் அவரே அவமானப் பட்டார். … ஈதோ, வருகிறார் ஆண்டனி, அக்டேவியஸின் அம்பாசிடருடன்!
[அப்போது அக்டேவியஸ் அனுப்பிய அம்பாசிடருடன், ஆண்டனி வருகிறார்]
ஆண்டனி: அதுதான் அக்டேவியஸின் முடிவான பதிலா?
அம்பாசிடர்: ஆமாம் பிரபு! அவரது அழுத்தமான பதில் அதுதான்!
ஆண்டனி: எகிப்த் மகாராணி நமது மதிப்புக்குரியர், அவரை விட்டுவிட வேண்டும். நமது வீட்டுச் சண்டைக்குள் கிளியோபாத்ராவை இழுத்து வர வேண்டாம்! போர் எனக்கும் அக்டேவியசுக்கும்தான்!
அம்பாசிடர்: போருக்கு மூலமாக இருப்பது எகிப்த் மகாராணி என்பது அக்டேவியஸ் எண்ணம்! அது அக்டேவியஸ் பிரபுவின் முடிவு, நான் வெறும் தூதுவன்! துங்களுக்கு ஆலோசனை சொல்லும் அமைச்சன் அல்லன்!
ஆண்டனி: [கோபமாக] சிறுவன் அக்டேவியஸின் செவியில் விழும்படிச் செய்! அவரது ஆணையை நிறைவேற்றுவேன் என்று சொல்! அவரது நிபந்தனைப் பத்திரத்தைக் காட்டு! ஆனால் இனிப் போரிட்டால் வாளுக்கு வாள் தனிப்போர் என்று சொல்! கடற் போரல்ல! கப்பல் போர் அல்ல! தரைப் போரல்ல! என் வாளுக்கும், அவர் வாளுக்கு மட்டுமே சண்டை! அதற்கு அக்டேவியஸ் உடன்பாடா என்று கேட்டுவா!
கிளியோபாத்ரா: என்னினிய ஆண்டனி! தனித்தனி வாட்போர் எதற்கினி ? அக்டேவியஸ் ரோமாபுரியின் வெற்றித் தளபதி! நாமறிவோம் அதை. சிறுவன் என்று சொல்லாதீர்! ஏகாதிபதியாக மாறிய புதிய சீஸர் அவர்! அவருக்குத் தலை வணங்குவது உங்கள் கடமை! எங்கள் கடமை! நிபந்தனைகளைக் கேட்போம்.
(அப்போது அக்டேவியஸின் அடுத்த தூதுவன் திடயாஸ் வருகிறான். ஆண்டனிக்கும், கிளியோபாத்ராவுக்கும் வணக்கம் செய்கிறான்)
கிளியோபாத்ரா: தூதனே! முதலில் நீ யாரென்று சொல்? எதற்காக வந்திருக்கிறாய் என்று சொல்!
திடயாஸ்: வணக்கம் மகாராணி, என் பெயர் திடயாஸ். என்னை அனுப்பியர் ரோமாபுரித் தளபதி மகா அக்டேவியஸ்.
கிளியோபாத்ரா: மகா அக்டேவியஸ் ஒரு கடவுள்! அலெக்ஸாண்டர் போல் பேரதிபதி அவர். ஆண்டனியை வென்றிருக்கிறார். எனினும் எனது மதிப்பு தணியாமல் உள்ளது. ஆனால் அவர் ஆணைக்குக் கீழ்ப்படுவோம்! சொல், அவர் உன்னை அனுப்பியதன் காரணம் என்ன?
திடயாஸ்: அக்டேவியஸை நீங்கள் பூரிக்கச் செய்ய வேண்டும். இரண்டு நிபந்தனைகள்! அவைதான் அவர் வேண்டுபவை!
கிளியோபாத்ரா: அவரை எப்படி மகிழச் செய்ய வேண்டும் சொல் ?
திடயாஸ்: மகாராணி! அது அக்டேவியஸின் பெரிய நிபந்தனை! ஆண்டனி உங்களுக்கு வெகுமதியாக அளித்த நாடுகளை அக்டேவியஸின் அதிகாரி வசம் ஒப்புவிக்க வேண்டும்! அதன் பின் எகிப்த் படை அந்நாடுகளை விட்டு நீங்க வேண்டும்.
கிளியோபாத்ரா: [ஆங்காரமாக] ஒப்புக்கொள்ள மாட்டேன். வெகுமதி நாடுகள் என்னைச் சேர்ந்தவை! தோற்றது கிளியோபாத்ராவா இல்லை ? ஆண்டனி. அந்த நிபந்தனைக்கு நான் உடன்பட மாட்டேன்.
திடயாஸ்: மன்னிக்க வேண்டும் மகாராணி ! தோற்றது ஆண்டனி என்பதை ஒப்புக் கொள்கிறீர். ஆகவே அவர் வென்ற நாடுகள் உங்களைச் சேரா! அவை அனைத்தும் அக்டேவியஸைச் சேர வேண்டும். ஈதோ இந்த உரிமைப் பத்திரத்தில் ஆண்டனியும், நீங்களும் கையெழுத்திட வேண்டும். (பத்திரத்தை நீட்டுகிறான்)
கிளியோபாத்ரா: [கவலையுடன்] ஆண்டனி! சொல்லுங்கள் அது நியாமாகுமா? அது போர் நெறியா? நீங்கள் அளித்த நாடுகளை நானிழக்க வேண்டுமா?
ஆண்டனி: (தலைகுனிந்து) ஆமாம் கிளியோபாத்ரா! அந்த நாடுகளை நானும் இழந்து விட்டேன். நீயும் இழந்து விட்டாய். திடயாஸ் கொண்டு வந்திருக்கும் உரிமைப் பத்திரத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்துவிடு.
கிளியோபாத்ரா: [மிடுக்குடன்] ஈராஸ்! எடுத்துவா மையும் எழுத்துத் தோகையும். திடயாஸ்! பத்திரத்தை எடுத்துக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் போய்விடு! இனிமேல் நீ இங்கு நிற்கக் கூடாது!
திடயாஸ்: போய் விடுகிறேன், மகாராணி! ஆனால் இன்னுமோர் சிறிய நிபந்தனை!
கிளியோபாத்ரா: [வெறுப்புடன்] சிறிய நிபந்தனையா? சொல்லித் தொலை!
திடயாஸ்: அக்டேவியஸ் பூரிப்படைவார் அதை நீங்கள் நிறைவேற்றினால்! மகாராணி! அவமானப்பட்ட ஆண்டனியை நீங்கள் வெளியேற்ற வேண்டுமாம்! உங்கள் அரண்மனையில் அவர் தங்கக் கூடாது! எகிப்தை விட்டு நீங்க வேண்டும் ஆண்டனி நிரந்தரமாக! அவரது சிறிய நிபந்தனை அதுதான்!
கிளியோபாத்ரா: [மிடுக்குடன்] கனிவு பொங்கும் தூதனே! மகா அக்டேவியஸிடம் சொல்! வெற்றி மகுடம் சூடிய அவரது வீரக் கரங்களை முத்தமிடுகிறேன், மண்டியிட்டு மரியாதை செலுத்துவேன்! என் பொன் மகுடத்தை அவரது பாதங்களில் சமர்ப்பணம் செய்கிறேன். அறிவு கெட்ட தூதனே! அவரது கடுமையான கட்டளைகள் எகிப்தின் முடிவுக் காலச் சங்கை காதிலே ஊதுகின்றன! எகிப்த் நாட்டின் சொந்தம் வேறு! என் உடற் பந்தம் வேறு! என் மகுடம் வேறு. என் மனம் வேறு! என் சொத்து வேறு! என் ஆத்மா வேறு! என் உள்ளம் வேறு! என் உயிர் வேறு! ஆனால் நான் வேறில்லை, ஆண்டனி வேறில்லை! என் உள்ளத்தின் உள்ளே ஆணிவேர் ஆனவர் ஆண்டனி! எப்படி அந்த ஆணி வேரை என்னால் பிடுங்கி எறிய முடியும்? என் ஆத்மாவின் சிதைவல்லவா அது! கனிவாகப் பேசி கள்வனாய் வந்த தூதுவனே! நில்லாதே! ஓடிப் போ, என் வாளால் துண்டாகும் முன்பு! [வாளை உருவி தூதனை விரட்டுகிறாள்]
(தொடரும்)
*********************
Based on The Plays:
1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]
2. William Shakespeare’s Julius Caesar [Play-2]
3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]
4. Britannica Concise Encyclopedia [2003]
5. Encyclopedia Britannica [1978 & 1981]
6. Life of Antony By: Plutarch
7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.
8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia
9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]
10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]
11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (May 16, 2007)]
- வெள்ளித்திரை
- அறிவிப்பு
- திருக்குர்ஆனை முதன் முதலில் தமிழில் தந்த சூபிஞானி பீர்முகமது வலியுல்லா
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 10
- இலை போட்டாச்சு ! 29 – காய்கறி குருமா – முதல் வகை
- காதல் நாற்பது (21) மீண்டும் மீண்டும் சொல் நேசிப்பதாய் !
- அன்புடன் இயல்கவிதைப் போட்டி முடிவு – பரிசுக்குரிய கவிதைகள்
- பக்தன்
- வழக்கமான நாட்களும்…வந்துபோகும் கவிதைகளும்
- டைனோசார் வம்சம்.
- ஜனநாயகம்
- மூன்று பந்துகளும் ஒரு பலூனும்…
- இரண்டு வார விடுமுறை
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:8 காட்சி:2)
- மொழிபெயர்ப்பும் நிகழ்நிலையில் நாம் கடக்க வேண்டிய தடைச்சுவர்களும்
- “கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி” –
- அயலகத் தமிழர் வாழ்வும் இலக்கியமும் – பன்னாட்டுக் கருத்தரங்கம்
- தொடர்நாவல்: அமெரிக்கா – II அத்தியாயம் பத்து: வழி தவறிய பாலவனத்து ஒட்டகங்கள்!
- தலை அசைந்தாடும் மஞ்சள் பெருவெளி – நானும் எனது படைப்புலகமும்
- பெட்ரோலியம்: நிலமகளின் குருதி!
- இதய கீதம்
- பாகவத மேளா
- இந்தியாவை முன்னேறிய நாடாக்கும் விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம் -6
- சுப்ரமணியம் ரமேஷ், எம்.கே. குமார் – நூல் அறிமுகம்
- தமிழரைத் தேடி – 4
- அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள்
- வெளிநாடுவாழ் மயிலாடுதுறை பெருமக்களுக்கு ஒரு வேண்டுகோள்
- அன்புடன் கவிதைப் போட்டி முடிவு – நடுவர் மாலன் உரை
- தோப்பில் முகம்மது மீரான்
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 18
- கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கு பாராட்டுவிழா
- திலகபாமாவின் கண்ணாடிப் பாதரட்சைகள் கவிதை நூல் – விமர்சன அரங்கு
- கடிதம்
- சுப்பிரமணியன் ரமேஷ் மற்றும் எம்.கே. குமாரின் புத்தகங்கள் வெளியீடு