தனியறை: 1

This entry is part [part not set] of 32 in the series 20070426_Issue

புதிய மாதவி



இந்த மனுசனுக்கு வர வர புத்திக் கெட்டுப்போச்சு.. இல்லாட்டா இப்படி நான் வாங்க, நேரமாகுது, கிளம்புங்க சீக்கிரம்னு பலவிதமாக சொன்னப்பிறகும் சோபாவை விட்டு எழுந்திருக்காமா டி.வி.யும் ரிமோட்டுமா உட்காந்திருக்குமா? அதுகளும் புதுசா கல்யாணம் ஆனதுகள், இந்த ஒன் ரூம் கிட்சன் ஃப்ளாட்டில் டி.வி. பாக்கறேன்னுட்டு இப்படி ராத்திரி 11 மணிவரைக்கும் சோபாவை விட்டு
எழுந்திருக்காம இருந்தா அந்தப் பொண்ணுதான் என்ன நினச்சுப்பா? ஏன் தான் வர வர இந்த மனுசனுக்கு எதுவுமே சட்டுனு புரியமாட்டேங்குதோ, சோபாவில் உட்கார்ந்திருக்கும் சண்முகத்தைப் பார்த்து தவமணி முறைத்துக் கொண்டிருந்தாள்.

டி.வி.யில் கிரிக்கெட் ஒன் டே மேட்ச் டே அன் நைட் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. ராகுல் கடைசிப் பையன். அவன் விருப்பப்படி பஞ்சாபிக்காரியை லவ் பண்ணி திருமணம் செய்து கொண்டான். அந்த திருமணத்திற்கு வந்து பெற்றோர்களாக கலந்து கொண்டதன் மூலமே தங்கள் குடும்ப மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற கடைசி நிலைமையில் தான் சண்முகமும் தவமணியும் திருமணத்தில் வந்து கலந்து கொண்டார்கள். ராகுலுக்கு ஏற்ற மாதிரி நல்ல 6 அடி உயரம், நீண்ட மூக்கு, திடகாத்திரமான
உடல்வாகு, தோள்பட்டை வரை சீராக வெட்டி விடப்பட்டிருக்கும் தலைமுடி என்று எல்லா வகையிலும் அந்தப் பெண் ராகுலுக்கு பொருத்தமாகவே இருந்தாள். இருந்தாலும் அவளைக் கண்டாலே பிடிக்கவில்லை தவமணிக்கு.

பெரியவர்கள் சிறியவர்கள் என்று மதிப்பு மரியாதை எல்லாம் அவளிடமில்லை. மாமனாருக்கு எதிரில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பாள். சில சமயங்களில் மாமனாருக்கும் ராகுலுக்கும் நடுவில் வந்து இருவரையும் இடித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பாள். இதெல்லாம் கூட பரவாயில்லை, இரவு 8 மணிக்குப் பின் ஒரு டூ ஃபீஸ் நைட்டியை மாட்டிக் கொண்டு
வந்து நிற்கும் போது அவளை நிமிர்ந்து பார்க்க தவமணியால் முடியாது. மெல்லிய காட்டனில் பூப்போட்ட டூ ஃபீஸ் நைட்டி, பல நேரங்களில் மேல் சட்டையில் கழுத்துப் பகுதி முன்பக்கமாக கீழிறங்கி ரொம்பவே இறுக்கம் தளர்த்து துள்ளும்.

டி.வி.யில் மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கும் போது நல்லவேளை அவள் அந்த மாதிரி டூ ஃபீஸில் இருக்கவில்லை. ஆனால் கை இல்லாத ஸ்லீவ்லஸ் நைட்டியில் இருந்தாள். அவள் கைகள் கூட ரொம்பவே கவர்ச்சியாக இருப்பதாக தோன்றியது தவமணிக்கு. மாமனார் சோபாவில், அவருக்கு மிக அருகில் ராகுல். ராகுலின் முழங்கால்களில் தலையை வைத்து சாய்ந்து கொண்டு தரையில் கால்நீட்டி அவள்..

ஊரில் தன் மற்ற இரண்டு மருமக்களையும் நினைத்துப் பார்த்தாள். இரண்டு பேருமே நல்ல வசதியான வீட்டுப் பெண்கள்தான். படித்து வேலைக்குப் போகிறவர்கள்தான். இப்படி எல்லாம் அவர்கள் மாமனார்,மாமியார் முன்னிலையில் நடந்து கொள்வதில்லை. வளுக்குத்தான் தெரியாது என்றே வைத்துக் கொண்டாலும் இந்தப் பயல் ராகுலுக்கு என்ன தெரியாது.. சேர்ரதுகள் கூட சேர்ந்தா இப்படித்தான்..

அவர்கள் இருக்கும் வீட்டில் தூங்குவதற்கு வசதிப்படாது என்பதால் பக்கத்து பில்டிங்கில் இருக்கும் அவர்களின் இரண்டாவது மருமகளின் அக்கா வீட்டில் போய் இருவரும் இரவு படுப்பதற்கு ஏற்பாடு செய்து கொண்டார்கள். ராகுலுக்குத் திருமணமாகி ஒரு வாரத்திற்கு மேலாகிறது. சீசன் டைம் என்பதால் டிக்கெட் கிடைக்காமல் இங்கே இன்னும் ஒரு வாரம் இருக்க வேண்டி வந்துவிட்டது.

முதல் மகனுக்குத் திருமணம் ஆனவுடன் மாடி அறைய அவனுக்கும் அவன் மனைவிக்கும் கொடுத்துவிட்டார்கள், அதன் பின் இன்றுவரை மாடி ஏறி அந்த ரூமைக்கூட தவமணி பார்த்ததில்லை. அடுத்தவனுக்குத் திருமணம் ஆனவுடன் முன்பக்கமிருக்கும் ரூமை கொஞ்சம் மாற்றி அமைத்து அவனுக்கும் அவன் மனைவிக்கும் கொடுத்துவிட்டு பின்பக்கமாக அடுக்களைப் பக்கத்திலிருக்கும் சின்ன ரூமில் தவமணியும் சண்முகமும் இருக்க ஆரம்பித்தார்கள். புதுசா கல்யாணம் ஆனதுகள் அப்படி
இப்படி இருக்குங்கள், இதில் நமக்கும் டிக்கெட் கிடைக்காமல் மாட்டிக் கொண்டோமே என்று தவமணி தான் புலம்பிக் கொண்டிருந்தாள்., சண்முகம் நல்ல ஜாலியாக டி,வி. பார்த்துக் கொண்டு மருமகளிடம் பஞ்சாபி வார்த்தைகளைக் கேட்டு கேட்டு பேசிக்கொண்டு இருந்தார்.

பொறுத்து பொறுத்து பார்த்து விட்டு தவமணி ‘அவுங்க இரண்டு பேரும் படுத்துக்க வேண்டாமா? என்று வெளிப்படையாகவே கேட்டுவிட்டு புடவையை உதறிக்கொண்டு எழுந்திருந்தாள். சண்முகத்திற்கு இந்தியாவின் பேட்டிங்கைப் பார்க்காமல் எழுந்து போகவே மனசில்லை. அம்மாவின் அதட்டலுக்கு பயந்து பாதியிலேயே விளையாட்டிலிருந்து எழுந்துச் செல்லும் சின்னப்பையன் மாதிரி
அவர் எழுந்திருக்கவும் ராகுலின் முழங்காலில் த்லைவைத்துப் படுத்திருந்த அவள் தலையைத் திருப்பி ராகுலைப் பார்த்து மவுனத்தில் எதோ சொன்னாள்.

ராகுலும் ‘ ஏம்மா அப்பாவை விரட்டுத. இருந்து பார்க்கட்டுமே, அங்கே போனா அவுங்க வீட்டிலே டி.வி. ராத்திரியில் பார்க்க முடியாது..
இப்ப என்ன ஆச்சும்மா.. பேசாமா நீங்க இரண்டு பேருமே எங்க கூட இந்த ரூமிலேயே தூங்குங்களேன். ஊருக்குப் போற வரைக்கும் இங்கியே ரும்மா.. எதுக்கு அடுத்தவங்களுக்குத் தொந்தரவு.. எனக்கும் அவளுக்கும் இதிலெல்லாம் ஒன்னும் தொந்தரவில்லைம்மா.. ‘ என்றான்.

‘யெஸ் மம்மி,, நீங்க ரண்டு பேரும் இப்படி படுக்கறதுக்கு அடுத்த வீட்டுக்குப் போரது தான் எனக்கும் ராகுலுக்கும் ஒரு மாதிரி இருக்கு..ப்ளீஸ்.. ஸ்டே வித் அஸ்.. அப்புறமா போரடிக்கற வரை நானும் ராகுலும் தானேம்மா இந்த வீட்டில் தனியா இருந்து ஆகனும்’ அந்தப் பெண் பாதி தமிழும் பாதி ஆங்கிலம் இந்தி கலந்தும் தவமணியிடம் பேச பேச தவமணிக்கு வாயடைத்துப் போய்விட்டது.

திருமணமாகி பதினைந்து, பத்து வருடங்கள் ஆனபின்னும் ஏதாவது குடும்ப விசயங்களைப் பேசிக்கொண்டிருந்தால் வந்து எட்டிப் பார்த்து கண்ணாலெயே சாடை சொல்லிவிட்டுப் போகும் மருமக்கள் இருவரையுமே பார்த்து பார்த்து பழகிப்போன தவமணிக்கு இந்த ஒற்றை அறையில் திருமணமாகி ஒரு வாரத்திற்குள் தங்களுடன் சேர்ந்து கூட்டுக்குள் இருக்கும் குஞ்சுப் பறவைகளாய் வானத்தை எட்டிப் பார்க்கும் இந்தப் பிஞ்சுகளை அதிசயமாகப்பார்த்தாள்..

அதிகாலையில் வழக்கம்போல காலை 5 மணிக்கெல்லாம் கண்முழிப்பு வந்துவிட்டது. தன் தலைமாட்டில் பக்கம் பக்கமாய் படுத்து நல்ல தூக்கத்திலிருக்கும் ராகுலையும் தன் புதுமருமகளையும் பார்க்க பார்க்க அவளுக்கு தாங்க முடியாத சந்தோஷமாக இருந்தது. மருமகளின் டூ ஃபீஸ் நைட்டியோ ஸ்லீவ்லஸ் நைட்டியோ அவள் கண்களை முன்பு போல் உறுத்துவதில்லை. ஒரு வாரமும் ஒரு நிமிடமாக ஓடிப் போய்விட்டது. எப்போது ஊருக்குப் போகலாம என்று காத்திருந்த தவமணிக்குத் தான் அந்த ஒற்றை அறையிலிருந்த ஒரு வாரம் சீக்கிரமாக ஓடிப்போன மாதிரி இருந்தது. அவரவர்களுக்கான தனியறைகளை நோக்கிய அவர்களின் பயணம் தொடர்ந்தது..


puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை